மரபிசையும் காவிரியும்

ஐந்து வயது அருண்மொழி தாய், தந்தை, தம்பியுடன்

என்னுடைய பிறந்த ஊர் திருவாரூர். மரபிசைமீது எனக்கு ஈடுபாடு வந்ததற்கு அதுவே ஒரு காரணமாக இருக்கலாம். அப்போது தஞ்சை மாவட்டம் என்பது திருவாரூர், நாகப்பட்டினம், சிதம்பரம் என்று இன்றைய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. என் அம்மாவின் சொந்த ஊர் திருவாரூரிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ள புள்ளமங்கலம் என்ற சிறிய கிராமம். வடபாதிமங்கலத்துக்கு அருகில். ஆரூர், சங்கீத மும்மூர்த்திகள் வாழ்ந்த, நடந்த, தியானித்த ஊர்.  தியாகையர், முத்துஸ்வாமி தீக்‌ஷிதர், சியாமா சாஸ்திரிகள். நாம் மடிக்கணினி வாங்கினால் அதன் அடிப்படை அமைப்பிலேயே சில மென்பொருள் செயலிகள் வந்துவிடுவது போல அங்கு பிறந்தனாலேயே சாஸ்திரீய இசை நம் துரியத்தில் அமைந்துவிடும் என்று எனக்குத் தோன்றும். இத்தனைக்கும் எங்கள் குடும்பம் இசைப் பாரம்பரியம் உள்ள குடும்பம் இல்லை. விவசாயப் பின்னணி கொண்டது.

நிலபுலன்களை இழந்து எங்கள் தாத்தா ரங்கூனுக்கு கணக்கெழுத சென்றார். அங்கு  சொல்லிக்கொள்கிற மாதிரி சம்பாத்தியம் இல்லை. திரும்பி வந்து ஊரிலேயே கணக்கெழுதினார். கணக்கப்பிள்ளை குடும்பம் என்றே நாங்கள் அறியப்பட்டோம். சொற்ப வருமானம். ஏழு பெண் குழந்தைகள். பாட்டியிடம் இருந்த மூன்று பசுக்களும், சிக்கன குணமும் மட்டுமே ஒன்பது ஜீவன்களை காத்தன. மூத்த பெண்ணான என் அம்மா 22 வயதில் ஆசிரியை ஆனார். அந்த ஊரில் அரசு வேலைக்கு சென்ற முதல் பெண் என் அம்மா.  இரண்டு  தங்கைகளை மணமுடித்து கொடுத்துவிட்டே 29 வயதில் [1969] மணம் செய்து கொண்டார். அக்காலத்தில் அது ஒரு அரிய நிகழ்வு.

காலாண்டு, அரையாண்டு, மே மாத விடுமுறையில் நானும், அம்மாவும், தம்பியும் பாட்டி வீடு சென்று விடுவோம். அப்பா அவர் சொந்த ஊரான திருவோணம் சென்று விடுவார். திருவோணம், புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டி வருவதால் அது மேலத் தஞ்சை. அம்மா மாதிரி கீழத்தஞ்சைகாரர்களுக்கு அவர்கள் மேல் ஒரு இளக்காரம். ஒப்பிட அது கொஞ்சம் வறண்ட பகுதி. டெல்டா பகுதி என்பதால் வரும் ஒரு மிதப்பு இங்கு எல்லோரிடமும் உண்டு.

பாட்டி வீடு செல்லும்போது வடபாதிமங்கலத்திலிருந்து பஸ் வசதி இல்லையென்பதால் வண்டியில்தான் செல்வோம். கூண்டு வண்டி வாடகைக்கு அமர்த்தி அதில் செல்வோம். பாட்டிவீட்டின் உற்சாகமனநிலை எனக்கு அப்போதே தொடங்கிவிடும். நான் பின்பக்கமாக கால்போட்டு கம்பியை பிடித்துக்கொண்டு பார்த்தபடியே வருவேன். காட்சிகள் பின்னோக்கி செல்வதில் ஆழ்ந்து விடுவேன். அம்மாவும் இங்கு வந்தால் என்னை அதட்டுவது குறைந்துவிடும்.

வண்டியில் போகும்போது புள்ளமங்கலத்தின் முதல் வாசனையாக நான் உணர்வது  வைக்கோல் மணம் தான். எங்கும் வைக்கோல்போர்கள், நன்கு உலர்ந்தவை, சற்றே காய்ந்தவை, புதிதானவை. புதிய வைக்கோல் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும். வண்டியில் கூட வைக்கோல் பரத்தி ஜமுக்காளம் விரித்திருப்பார்கள். போகும் வழியெங்கும் மூங்கில் புதர்கள் அடர்ந்திருக்கும். பாதேர் பாஞ்சாலியில் அப்புவும், துர்காவும் ஓடும் மூங்கில் அடர்ந்த பாதையை  பார்க்கும்போதெல்லாம்  புள்ளமங்கலத்தை ஏக்கத்துடன் நினைத்துக் கொள்வேன். கூண்டு வண்டியின் இனிய சகட ஒலியும், காளையின் கழுத்துமணி ஓசையும், அந்த அழகிய காலை ஒளியில்  இடையிடையே  வரும் அல்லிக் குளங்களும், தாமரைக் குளங்களும் என் மனதில் என்றும் அழியாத சித்திரங்கள்.  மறுபுறம் வெண்ணாற்றின் கிளையாக காவிரி எங்களுடன் உடன்வருவாள்.

உடன்வரும் ஆற்றில் இலைகள் , பூக்கள் விழுந்து தண்ணீர் அங்கங்கே சிலிர்த்துக் கொண்டு ஓடும். அதில் ஆழ்ந்து கனவில் இருப்பது போல் இருப்பேன். திரும்பிய இடமெல்லாம் நீராக, காவிரி எங்கும் நிறைந்தவளாக, சிறிய ஒடைகளில், வயலின் சதுரப் பரப்புகளில், வீடுகளின் கிணறுகளெங்கும் பத்தடி ஆழத்தில், அடி பம்புகளில் பொழியும் தண்ணீராக, நிறைந்த குளங்களாக எங்கும் வியாபித்திருந்தாள்.

பாட்டிவீட்டின் வாசனையாக நான் உணர்வது மாட்டுக்கொட்டிலில் நிறைந்திருக்கும்  பசும்புல்லின் மணம், கொல்லைப்பக்கம்  வைக்கோல் போரின் மணம், கழுநீர் தொட்டியில் நிறைந்திருக்கும் கழுநீரின் மணம். பின்மதியங்களில்  பருத்திக்கொட்டை, பிண்ணாக்கை ஊறவைத்து என் சித்தி தனி ஆட்டுக்கல்லில் அரைப்பாள், அதனுடைய மணம். பாட்டியிடம் வரும் வெற்றிலை வாசனை, பாட்டியின் கைகளை முகரும்போது வரும் கறந்த பாலின் வாசனை, சித்தி அணைத்துக் கொள்ளும்போது வரும் விறகுப் புகை மணம். எனது இளமைக் காலம்  இத்தனை மணங்களால் சூழப்பட்டிருந்தது.      

தி. ஜானகிராமனைப்  படிக்கும்போது,  என்னைப் போலவே ,காவிரியின் மேல்  பித்து அவருக்கும் உண்டு என்று அறிந்தேன்.  தி.ஜா. வுக்கு காவிரி என்றாலே சங்கீதம். சங்கீதத்தையும், காவிரியையும் அவரிலிருந்து பிரிக்கமுடியாது.  இரண்டுமே அவருக்கு ஒன்றுதான். காவிரி இங்கு நெல்வயல்களாக விரிகிறாள், பயறு, உளுந்து இட்ட வயல்களில் வெடித்து சிரிக்கிறாள்..கரும்பு தோட்டங்களில் இனிக்கிறாள், பசுக்களிலும் கன்றுகளிலும் பொலிகிறாள். எங்கும் நிறைந்த பராசக்திதான் அவள்.              

புள்ளமங்கலம் நான்கைந்து தெருக்களையும், சுமார் நூறு வீடுகளையும் உள்ளடக்கியது. அங்கு சென்றால் எனக்கு பரிபூரண சுதந்திரம். எல்லா வீடுகளிலும் புகுந்து புறப்படுவேன். எல்லோரையும் அத்தை, மாமா என்று சொந்தம் கொண்டாடலாம்.

ஊரின் வடக்கு பகுதியில்  பொது அறுத்தடிப்பு களத்தை  ஒட்டி  விரிந்த வயல்வெளி. வரப்புகள் வழியே அதன் குறுக்காக நடந்து சென்றால் ஊட்டியாணி வந்து விடும். அப்படியே திருவாரூர் செல்லலாம். தேரோட்டத்துக்கு நடந்தே செல்வோம். தெற்கு எல்லையில் வெண்ணாற்றின் ஒரு கிளை பிரிந்து கால்வாய் ஓடும். அதுவே எங்கள் ஊரின் ஆறு. அதைக்கடந்தால் மணக்கரை என்ற சிறிய ஊர். கிழக்கு பக்கம் பாலக்குறிச்சி,  மேற்கில் திட்டச்சேரி.  மூன்று பெரிய குளங்கள்.  ஒரு பெருமாள் கோவில் உண்டு. அதை ஒட்டி ஆறு, ஆறு வீடுகள் எதிரெதிராய் அமைந்த சிறிய அக்ரஹாரம்.

குளம், ஆறு, கடை எதற்குப் போக வேண்டும் என்றாலும் அக்ரஹாரத்தை கடந்து செல்லவேண்டும். கடக்கையில் முணுமுணுப்பாக, உரக்க, கற்றுக்கொள்ளும் குழந்தைகளின் சேர்ந்திசையாக, தனிப்பட்ட அக்காக்களின் பாடலாக கர்னாடக கீர்த்தனைகள் ஒலிக்கும். ஒரு வீட்டில் மட்டும் கிராமஃப்போன் ரெக்கார்டு பிளேயர் உண்டு. அது குஞ்சிதபாதம் ஐயர் வீடு. அக்காலத்தில் ரேடியோ என்பதே பணக்கார சொகுசு. கிராமஃப்போன் பிளேயர் நினைத்தே பார்க்க முடியாத ஆடம்பரம்.       

எட்டு வயதில் தம்பி லெனின் கண்ணனுடன்

ஏழெட்டு வயது என்பது குழந்தைகளின் புலன்களில் கூர்மை குடிகொள்ளும் பருவம். கண்ணும், காதும் விரியத் திறந்திருக்கும் . எது வந்து விழுந்தாலும் பிளாட்டிங் பேப்பர் மையை ஈர்த்துக் கொள்வது போல் கிரகிக்கும் வயது. 1977 ஒரு அபூர்வமான வருடம். அரசியலில் புயலாக மொரார்ஜியும், இசையில் இளையராஜாவும் களம் புகுந்த வருடம். கடலை மடிக்கும் பொட்டலம், ரோட்டில் கிடக்கும் துண்டு பேப்பர், மளிகை மடித்த காகிதம், நடேச மாமாவின் டீக்கடையில் வரும் பத்திரிகை என எதையும் நான் விடுவதில்லை. அறிவு, தகவல், தெரிந்து கொள்ளும் முனைப்பு என ஊசிமுனையில் கூர் கொள்ளும் போதமாக என் மனம் இருந்த காலங்கள் அவை.

புள்ளமங்கலத்தை ஒப்பிட நான் டவுனிலிருந்து வந்த பெண் என்பதால் என்னைச் சுற்றியும் சில பெரிசுகள் அமர்ந்து நாட்டு நடப்பை கேட்டுக் கொண்டிருப்பார்கள். அப்பாவிடமிருந்து  பெற்ற உபரித் தகவல்களை வைத்து ஜயப்ரகாஷ் நாராயணனின் சிறைவாசத்தையும், இந்திராவின் எமர்ஜென்சி கொடுமைகளையும், மொரார்ஜியின் குரு பக்தியையும்,  புத்தெழுச்சி பெற்ற ஜனதா இயக்கத்தையும் கதை போல சொல்லிக் கொண்டிருப்பேன்.  புதிய அலையின் பெயர்கள் எல்லாவற்றிலும் ஜ, ஜி, ஜெ பயின்று வருகிறது. என்னை ஈர்த்த விஷயமே இதுதான். ஸ்டைலாக சொல்லலாம். இந்திரா காந்தி பெயரே பழைய பஞ்சாங்கம் .

எமெர்ஜென்சி, இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தையும் துயிலில் இருந்து எழுப்பியது. காலம் காலமாக ஒன்றும் நிகழாத ஒரு சூழலில் ஒரு சிறிய விழிப்பு நிலை. இரண்டே வருடங்கள். எல்லாம் கொட்டி கவிழ்க்கப்பட்டது.  எல்லாம் முடிவுக்கு வந்தது ஜகஜீவன் ராம், சரண்சிங் என்ற இரு கோமாளிகளால் . இன்றும் காந்திக்குப் பிறகு,  என் மனம் கவர்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவர் மொரார்ஜி தேசாய். மற்றொருவர் ராமகிருஷ்ண ஹெக்டே. ஆனால் ஜயப்ப்ரகாஷ் நாராயணனின் சிறைவாசத்தின் தீவிரத்தை நான் உணர மேலும் நாற்பது வருடங்கள் ஆக வேண்டியிருந்தது. தேவசகாயம் என்ற ஐஏஎஸ் அதிகாரி எழுதிய ஜெபியின் சிறைவாசம் என்ற புத்தகமே அக்காலகட்டத்தின் தீவிரத்தை எனக்கு உணர்த்தியது.

இளையராஜாவின் இசை அப்போது நிகழ்த்திய மாயம் அன்னக்கிளி ஒன்னத் தேடுது முதல் ஹம்மிங்கை ஜானகி பாடும்போது அது மானிடக் குரலே இல்லை, ஏதோ தேவலோக அசரீரி என்றே நினைப்பேன். அதுபோல் என்னை மயக்கிய இன்னொரு ஹம்மிங் இல்லை. இதை என்னால் இப்போதும் தர்க்கபூர்வமாக விளக்க முடியவில்லை . அப்புறம் அந்த டியூன்களில் உள்ள புதுமை, ஆண்குரலும், பெண்குரலும் மாறி மாறி ஒன்றின் மேல் ஒன்று ஓவர்லேப் ஆவது எனக்கு இனிய திகைப்பை த்தந்தது. அதுவரை ப்ரிலுயூட், இண்டெர்லுயூட் இசைகோர்ப்புகளில் உள்ள காதடைக்கும் ஓசை மாறி, கிடாரின், பியானோவின்  இனிய ஒலிகளின் அடிநாதத்தில்  நுட்பம், துல்லியம், அழகு எல்லாமாகச் சேர்ந்து ஒரு புதிய காற்று சுழன்றடித்தது.  அது நம் இல்லத்தையும், மனத்தையும் நிறைத்து ஒரு இறுக்கத்தை போக்கியது போல உணர்ந்தேன். 1976-1985 இளையராஜாவின்  பொற்காலம்  .

ஏழிலிருந்து  பதினைந்து வயது வரை நாம் கேட்கும் இசையே நம் ரசனையின் அடிப்படையை தீர்மானிக்கிறது . அதுவே வயதானபின் வரும் நாஸ்டொல்ஜியா எனும் இளமைக் கால ஏக்கமாகவும் பரிணமிக்கிறது. அந்த வயதில் மட்டுமே மனம் இடையில் ஊடாடாமல் புலன்களாகவே நாம் இருக்கிறோம். புலன்களின் முழு விழிப்பு நிலை. எனவே காதுகளில் விழும் இசை நேரடியாக நம் நனவிலியை அடைகிறது. காலையில் செல்வி அக்கா வீட்டில் சிலோன் ரேடியோவில் ஏழு மணிக்கு தொடங்கும் பாட்டு பத்து மணிக்கு முடிந்து சிற்றுண்டி நினைவு வர வீட்டுக்கு வருவேன்.” ஸ்டேஷன் ஊத்தி மூடினதும் தான் பசி வந்துச்சாக்கும்” என செல்லமாய் கடிந்து கொள்வாள் சித்தி.

திரும்பவும் ஒரு மணிக்கு நடேச மாமாவின் டீக்கடை. வீடும் கடையும் இணைந்திருக்கும். விற்பனை முடிந்து காலாட்டி படுத்தபடியே  திருச்சி ஸ்டேஷனை கேட்டுக் கொண்டிருப்பார். நைந்த காலை பேப்பரை படித்தபடி அதை கேட்டுக் கொண்டிருப்பேன். பெரும்பாலும் 1.05 க்கு அரங்கிசையில் கர்னாடக வாய் பாட்டு ஒலிக்கும். அதை கேட்டபடி சிலரும் அமர்ந்திருப்பர். ஒரே சமயம் என்னால் இரண்டையும் ரசிக்க முடிந்தது. காரணம் அக்ரஹாரத்தில் நான் கேட்ட கீர்த்தனைகள் அதில் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

பிறகு எனக்கு மிகப்பிடித்த ஆளுமை அந்த முதல் வீட்டில் இருந்தார்.  குஞ்சிதபாதம் ஐயர். குஞ்சிதையர் என்றே அனைவரும் அறிவோம்.  கோவிலின் நிர்வாகமும் அவர்தான். கம்பீர ஆளுமை. நிலபுலன்கள் உண்டு. குத்தகைக்கு விட்டிருந்தார். கிராமபோன் அவர் வீட்டில் தான் உண்டு. பெரிய இசை ரசிகர். நன்றாகப் பாடவும் செய்வார். அவர் வீட்டில் ஐயரும், மாமியும், காது கேட்காத ஒரு பாட்டியும் மட்டுமே. குழந்தைகள் இல்லை. அவர் நல்ல உயரம், மாநிறம், கச்சிதமான உடல்வாகு. குடுமி வைத்திருப்பார். நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து வயது இருக்கும். மாமி கொஞ்சம் குள்ளம், சிவப்பு, வட்டமுகம். சிரிக்கும் போது பளீர் மூக்குத்தியும் சேர்ந்து சிரிப்பதுபோல் இருக்கும்.

என் பாட்டியின் பால் வாடிக்கையாளர்களில் குஞ்சிதையரும் ஒருவர். அவர் வீட்டுக்கு காலையிலும், மாலையிலும் பால் கொண்டு கொடுப்பதை நான் விரும்பி செய்வேன். இரு பக்கமும் உயர்ந்த திண்ணைகள் கொண்ட,  தாழ்ந்த ஓட்டுக்கூரை கொண்ட வீடு. நடுக் கூடம், பிறகு நடுவே அங்கணம் , அங்கிருந்து பார்த்தால் தெரியும் சிறிய, சிறிய அறைகள், பிறகு ஒரு ஆளோடி, சமையலறை, கொல்லைப் பக்கம் சாய்ப்பு, விறகு அடுக்கும் இடம், கிணறு, துவைகல்,  மலர்ச் செடிகள், முருங்கை, வாழை, நாரத்தை மரங்கள் கொண்ட சிறிய தோட்டம். கூடத்தில் ஊஞ்சல். அடுக்களை வரை செல்லும் பூரண சுதந்திரம் எனக்கு உண்டு.

காலையில் கையில் தம்புராவுடன் அங்கணத்திற்கு பக்கவாட்டில் ஒரு மனையில் அமர்ந்தபடி பாடிக்கொண்டிருப்பார் ஐயர். நான் வசதியாக ஊஞ்சலில் அமர்ந்து,  அந்த சூழலின் இசைவையும், அமைதியையும் குலைக்காமல் கேட்டுக் கொண்டிருப்பேன். தாழ்ந்த ஸ்தாயியில், கனத்த குரலுடன் அவர் ஆரம்பிக்கும் அந்த கணங்களில் காதுகளே என் இருப்பாக நான் உணர்வேன். பாடி முடித்ததும் ஒரு கனிந்த புன்னகையுடன் பார்ப்பார். மாமி காபியுடன் வருவாள். காபி அருந்தும்போது முழு பிரக்ஞையும் அவருக்கு அதில்தான் இருக்கும். பிறகு பத்திரிக்கை படிப்பார். ஆங்கிலமும், தமிழும் இரு பத்திரிக்கைகளும் அவர் வீட்டில் வாங்குவார்.  சில நேரங்களில் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்.

 ”என்னடி, என்னையே பாத்துண்டிருக்காய் ?”

 “சும்மா .”

“பாட்டு புரியறதா நோக்கு?”

“இல்ல. ஆனா பிடிச்சிருக்கு.”

”கேக்கறயா அம்பு , சரோஜா பொண்ணா? கொக்கா? டாண்டாண்ணு அடிக்கறா பாரு.”

அம்புஜம் மாமி புன்முறுவலிலும், பார்வையிலுமாக பதில் சொல்லி விடுவாள். அவர்களுக்குள் இருந்த அந்த அன்யோன்யம்,பாட்டுடன் என்னை ஈர்த்த இன்னொரு விஷயம் என்று படுகிறது. குழந்தைகள் மகிழ்ச்சியான குடும்ப சூழலை விரும்புகிறார்கள். சில சமயம் ரொம்ப ஜாலி மூடில் ஐயர்  இருப்பார்.

”என்ன கட்டிண்டுரயாடி” என்பார்.

இந்த கேள்வியை எதிர்கொள்ளாத பெண் குழந்தையோ, ஆண் குழந்தையோ எந்த கிராமத்திலும் அந்தக் காலத்தில் இருக்க முடியாது. சில குழந்தைகள் நாணிக் கோணும். அவர்கள் மேலும் கலாய்க்கப் படுவார்கள். நாணிக் கோணுதல் என் இயல்பிலேயே இல்லை என்பதால் துணிந்து அடிப்பேன்.

”நீங்க குடுமிய வெட்டிட்டா கல்யாணம் பண்ணிப்பேன்.”

“கேட்டயா அம்பு, . குடுமிய வெட்டிண்டா போச்சு.”

பின் சேர்ந்து ஒரு சிரிப்பு.  சில சமயம் ஐயர் வம்புக்கிழுப்பார்.

”என்னடி, கண்ண விரிய வெச்சு பாத்துண்டிருக்காய் ? முண்டக் கண்ணி “

என்றபடியே விழிகளை உருட்டி பழிப்பு காட்டுவார்.

நான் “ அப்டி கூப்டா எனக்கு பிடிக்காது. அருணான்னு கூப்பிடுங்க” என்பேன்.

”எப்டி கூப்டா”?

“நீங்க இப்ப கூப்ட மாதிரி”

“ஓ முண்டக்கண்ணியா ? அது ரொம்ப அழகான பேருடி. முண்டகம்னா தாமரை,  தாமரை மாதிரி கண்ணையுடையவள்னு சீதையை கம்பன் சொல்றான் தெரியுமோ?”

முண்டகமும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

“எனக்கு பிடிக்கல” என்பேன் பிடிவாதமாக.

“சரி. கூப்பிடலை” சமாதானத்துக்கு வருவார்.

பதினைந்து வயதில்

ஆனால் இந்த சண்டை நிறைய நாள் எங்களுக்குள் ஓடிக்கொண்டுதான் இருந்தது. அவர்கள் வீடே வேறு மணத்துடன் இருக்கும். காலையில் ஃபில்டெர் காஃபியின் மணம், சமையலின் வாசனை, கொல்லைப் பக்கம் துளசி, முல்லைப் பூவின் மணம், திண்ணையில் பாட்டியின் பன்னீர் சீவலின் மணம், அடுக்களையில் முறுக்கு போன்ற பலகாரங்களின் மணம், நெய்யின் மணம் என வீடே மணங்களால் நிறைந்திருக்கும். விடை பெற்று வீட்டுக்கு வரும்போது என் கையில் மாமி தந்த முறுக்கோ, சீடையோ இருக்கும்.  குழந்தையில்லாத தம்பதிகள் இருவிதமாக ஆகி விடுகிறார்கள். குழந்தைகளை காணும்போது தங்களை இறுக்கமாக ஆக்கி கொண்டு விடுபவர்கள். பேரன்னையும், பெருந் தந்தையுமாகி அனைத்து குழந்தைகளிடமும் பொலிந்து நிற்பவர்கள்.

ஐயருக்கு பூஜை முடிந்து காலை பதினொரு மணிக்கு ஆற்றில் இரண்டாவது  குளியல் உண்டு. என் குளியல் நேரத்தை அதற்கேற்ப மாற்றிக் கொண்டு ஆற்றுக்குச் செல்வேன். குளிக்கும் போது அந்த அபூர்வமான அடிக்குரலில் பாடுவார், அதை கேட்க.  குழந்தைகள் ஆண், பெண் படித்துறைகள் இரண்டிலும் குளிக்கலாம். நான் குறுக்கும், மறுக்கும் சென்று திளைத்துக்கொண்டிருப்பேன் . என் பாட்டி என்னுடன் குளிக்க வரும்போது ஆற்றில் இறங்கியவுடன்” தாயே, மஹமாயி ”என்று தொட்டு கும்பிட்டுவிட்டுதான்  இறங்குவார்கள்.

”பாட்டி, ஏன் ஆத்தப் போயி கும்புடறீங்க?” என்பேன்.

”அது தான் நமக்கு சோறு போடற தெய்வம்டா”

”ஐயர் மட்டும் சூரியனக் கும்புடுறார் பாட்டி”,

“இல்ல , கவனிச்சு பாரு, ரெண்டையும் கும்புடுவார்”  என்பார் பாட்டி.

சித்தி துணி துவைத்து முடிந்ததும் .என்னை அதட்டுவாள். போதும், கரையேறு என.  காவிரி இல்லையெனில் டெல்டாவும் இல்லை, சங்கீதமும் இல்லை. கவின் கலைகளை அருள்பவள், அந்தர்வாஹினி,  அத்தனை மக்களுக்கும் அன்னையெனக் கனிந்து அமுது புரப்பவள்.

மாலைநேரம் பால் கொண்டு செல்கையில் கிராமஃப்போன் ஒடிக் கொண்டிருக்கும் . ஐயர் கேட்டபடி ஊஞ்சலிலோ,  ஈஸிசேரிலோ இருப்பார். சாஸ்திரீய சங்கீதம் தான். அவர் அப்போது முற்றிலும் வேறொருவராக, எங்கோ என இருப்பார். கண்கள் மூடியிருக்கும்.

என் ஞாபகத்தில்  புதைந்திருந்த குஞ்சிதையரின் அந்தக் குரலை பதினேழு வருடங்கள் கழிந்து 1994 ல் முதல்முறையாக மஹாராஜபுரம் சந்தானம் கேட்கும்போது இனிய ஏக்கமாக உணர்ந்தேன். தொண்டை இறுகி, கண்ணிமைகள் பனித்தன. ஒரு பெரிய அலைபோல் அக்குரல் என்னை அறைந்தது. பின்னர் எம். டி. ராமநாதன் கேட்கும்போது இன்னும் அணுக்கமாக அவரை உணர்ந்தேன். குஞ்சிதையர் இறக்கவேயில்லை. குரல்கள் வழியாக, நம் மரபிசையின் வழியாக என்னுள் வாழ்கிறார்.

கல்லூரியில் சேர்ந்ததும் நான் பாட்டிவீடு போவது அரிதாகிப் போனது. ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை குஞ்சிதையர் வீட்டுக்கு போய்க் கொண்டுதான் இருந்தேன். 2007 ஆம் வருடம் அவர் இறந்ததை போகிற போக்கில் என் சித்தி சொல்லி அறிந்தேன். ஒரு சிறு திடுக்கிடல் மட்டுமே அப்போது வந்தது. பின்னர் அதை மறந்தும் போனேன். காலம் ஒரு மாபெரும் வடிகட்டி போல ,நம் நினைவு அடுக்குகளில் எது தங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதாக எனக்குத் தோன்றும். அவர் கைவீசி நடப்பது, கனிந்த புன்முறுவலுடன் தலையசைப்பது, தியானத்திலிருப்பது போல் பாட்டு கேட்பது, என பார்த்து பார்த்து நான் சேகரித்த ஒரு நூறு கணங்களின் தொகுப்புதான் அவர் எனத் தோன்றும். .

வெகுநாட்களுக்குப் பிறகு 2015 வாக்கில் அம்மாவை தஞ்சை மருத்துவமனையில் அனுமதித்து, அப்பாவை உடன்நிறுத்திவிட்டு , நான் மட்டும் திருவாரூருக்கும்[வீட்டுக்கும்] , தஞ்சைக்குமாக அலைந்து கொண்டிருந்தேன். அப்போது கூடவே ஒரு புறம் காலை ஒளியில் சுடரும் வெள்ளியென காவிரி உடன்வந்தாள். அம்மாவின் உடல்நிலை பற்றிய சஞ்சலங்கள் விலகி ஆறுதல் அடைந்தேன். உடனே குஞ்சிதையர் நினைவும் வந்தது .என் மனதில் இசையும், காவிரியும், அவரும் சேர்ந்தே எழுகின்றனர். பாபுவுக்கு ரங்கண்ணா போல. கண்களில் நீர்த் திரையிட மறைத்துக் கொண்டு வெளியே பார்த்தேன்.

68 thoughts on “மரபிசையும் காவிரியும்

 1. உங்கள் நினைவுத்தொகுப்பு ப்ரமாதம். என் உடன் பிறந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். என் 1960களின் மன்னை பள்ளிநாட்களை அசைபோடவைத்தது.

  Like

 2. படிக்க படிக்க ஆனந்தம். . உங்கள் நினைவலைகள். உங்கள் இளம் வயது பொறாமை கொள்ள வைக்கிறது. . எதையெல்லாம் இன்றைய குழந்தைகள் இழந்திருக்கிறார்கள்!

  Like

 3. தஞ்சை மாவட்டத்தில் பிறந்து என்னுடன் பணிபுரிந்த அனைத்து நண்பர்களுக்கும் தங்கள் ஊர் பற்றிய பெருமிதம் உண்டு.சங்கீதம் குறித்து அதிகமாக பேசுவதில்லை.நதிக்கரை நாகரிகம் என சும்மாவா சொன்னார்கள்! நனவிடை தோயவைக்கும் விவரிப்பு.தொடரட்டும் உங்கள் எழுத்து

  Like

 4. அக்கா மிக அருமை.தயக்கத்தை விட்டு விடுதலை உணர்வுடன் எழுதுங்கள். இறைவன் அருள் என்றும் உண்டு.

  Like

  1. உங்கள் பதிவு உங்களுடன் சேர்ந்து பயணித்த உணர்வை ஏற்படுத்தியது

   Like

 5. உங்களின் இயல்பான எளிமையான சரளமான அதேசமயம் சுவாரசியமான எழுத்து நடை சிறந்த வாசிப்பனுவத்தை தந்தது. வாழ்த்துக்கள்.

  Like

 6. அன்பின் திருமதி ஜெமோ

  வணக்கம்.

  >ஒரு ஆளோடி< இந்த ஒரு சொல் போதுமே வேர்-ஊர், வட்டார ஞாபகத்தைக் கிளறிவிட. உங்களது விவரிப்புகளில் கமலாலயம் என்றாவது ஒரு நாள் வரலாம். 48 வருடம் முன் பொடியனாய் இந்நீர்நிலையின் முன் அசந்து போய் நின்றது, கண்ணுற்ற, ஒளிபெருக்காய் மிதந்த அன்றிரவு தெப்பம், சில வருடம் கழித்து அங்கு மூழ்கி இறந்து போன எங்களூர் அண்ணன் ஜீவன் குமார்; வடபாதிமங்கல ஆலைக்குப் போகும் கரும்புகளில் இரண்டை இழுக்கும் அக்காலத்து விருப்பக்குற்றம், என கடந்தகால நினைவுகளை கிளறுதலுக்கு காரணமான பதிவுக்கு, பதிவுகள் தூண்டும் நினைவுகளுக்கு, நன்றி. உங்கள் வலைப்பூ நன்கு வளர வாழ்த்துகள்.

  ஒரு சிறு திருத்தம்- சிதம்பரம் என்றும் நம் பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்ததில்லை. இருந்திருந்திருக்க வேண்டும். கொள்ளிடம் பாலம் பாதி =
  ஆனைக்காரன் சத்திரம் வடக்கில், தெற்கே கோடியக்கரை என ஒரு காலத்தில் எல்லைகள்.

  Like

 7. வைக்கோல் மனமும் வெற்றிலை, புகை மனமும் நினைவின் ஆழத்தில் புதைந்து புதைபடிமமாக மாறியிருந்த நினைவுகளைக் கிளறி மீண்டும் மனங்களை முகரச் செய்ததற்கு நன்றி
  மொரார்ஜி தேசாய், ராமகிருஷ்ண ஹெக்டே, ஜெயபிரகாஸ் நாராயணன் இன்றைய தலைமுறையினர் மறந்து விட்ட ஆளுமைகள் நினைவிலிருத்தியிருப்பதற்கு பாராட்டுகள்.முன்னாள் பிரதமர் சந்திரசேகரும் இவர்களுடன் சேர்த்து கொண்டாடப்பட வேண்டியவர்தான்
  இளையராஜா மற்றும் எமர்ஜென்சி பற்றிய குறிப்புகளும் தங்களின் பொதுவெளி சார்ந்த பார்வைகளை கொண்டுள்ளன- அருமையான விஷயம்தான்

  Like

 8. அன்பின் அருணா

  உங்களின் தனி எழுத்துப் பக்கம் எனக்கு மிகுந்த மகிழ்வளித்தது. முன்பு நீங்கள் அவ்வப்போது எழுதியவற்றையும் சில உரைகள் காணொளிகளையும் வாசித்திருக்கிறேன் பார்த்திருக்கிறேன் . நீங்கள் இப்படி எழுத தொடங்க வேண்டும் என நான் காத்திருந்தேன். அழகிய நடை சரளமாக தடையில்லாமல் எங்களையும் கையை பிடித்து மாட்டு வண்டியில் உங்களுடன் ஏற்றிக் கொண்டு செல்கிறது. புகைப்படங்கள் எல்லாம் கொள்ளை அழகு.
  உங்கள் முகத்தில் கால்பாகம் இருக்கும் அந்த கண்களிரண்டும் உங்கள் அப்பாவிடமிருந்து வந்தவையா?

  அம்மா அப்பா தம்பி இருவரையும் விட உங்கள் கண்கள் அகன்றவை.. அப்பாவுடையது கொஞ்சம் பெரியது என்பதால் அவரிடம் இருந்து வந்திருக்கலாம் என எண்ணினேன். அத்தனை அகல கண்களைக் கொண்டு உலகையே அள்ளி விழுங்குவது போலவே புகைப்படங்களில் இருக்கிறீர்கள். அந்த குடும்ப புகைப்படம் அழகு. அப்பா அம்மா இருவரும் அமர்ந்திருக்கும் இரும்பு சேரை இருபுறமும் பிடித்துக்கொண்டு ஸ்டைலாக ஒரு போஸ்.
  நெத்திசுட்டி அலங்காரத்துடன் தம்பியுடன் இருக்கும் இன்னொன்றும் அழகுதான்.
  அப்போதெல்லாம் இப்படி அலங்காரங்கள் செய்து பள்ளிக்கே அனுப்புவார்கள். நான் தராபுரம் கான்வென்ட்டில் 5 ல் படிக்கையில் ஒரு முழுப் பரீட்சை நாளில் வாழை மட்டையில் பூக்கள் தைத்து ஜடை அலங்காரம் செய்து அனுப்பிய கொடுமையை இந்த புகைப்படத்தை பார்க்கையில் நினைத்துக்கொண்டேன் .

  நல்லவேளையாக அன்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை என்று முன்பெல்லாம் நினைப்பேன் உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் ’அடடா, எடுத்து இருந்திருக்கலாமே என்று தோன்றியது.

  15 வயது புகைப்படத்தில் புன்னகையிலோ அல்லது எப்படியோ பழைய கருப்பு வெள்ளை கே ஆர் விஜயாவை நினைவு படுத்துகிறீர்கள்.

  காவிரியும் இசையும் உங்களுடனே இருந்ததை எளிய மொழியில் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே போவதை வாசிக்கையில் , நானும் உங்களுடன் அய்யர் வீட்டுக்கு பால் கொண்டு போகையிலும் அக்ரஹாரத்தை கடக்கையிலும் ரேடியோ கேட்கையிலும் மற்றவர்களுக்கு செய்திகளை சொல்லும்போதும் உடனிருந்தேன். ’’கட்டிண்டுடறயாடி’’ க்கு அசராத, நாணிக்கோணாத சிறுமி அருணாவின் பதில் வாசித்த அனைவரையும் புன்னகைக்க வைத்திருக்கும்

  .காவிரி குறித்து எழுதியவை எல்லாம் வெகு சிறப்பு.
  வைக்கோல் வாசனையும் ,சகடை ஒலியும் காளை கழுத்துமணியோசையும், அல்லிக்குளங்களுமாய் உடன்வர ஒரு சிறுமி மாட்டுவண்டியில் கம்பியை பிடித்துக்கொண்டு கால்களை தொங்க போட்டுக்கொண்டு பயணிப்பது ஒரு திரைப்படத்தின் துவக்க காட்சியைப் போலிருந்தது.அந்த அய்யர் குடும்பமும் அவர்களோடு உங்களுக்கிருந்த தொடர்பும் நட்பும் அன்பும் அற்புதமாயிருந்தது வாசிக்க.
  எனக்கும் இருந்தது இன்னும் இருக்கிறது அதுபோல ஒரு நட்பு, நாங்கள் சிறு வயதில் இருக்கையில் பொள்ளாச்சியில் வாடகை வீட்டில் இருந்தோம் இரண்டு வீடுகள் ஒரே காம்பவுண்டில். அருகிலிருந்தவர்கள் ராமு மாமா கமலா அத்தை.
  அத்தையின் கீழ்உதடுகளின் ஓரம் ஒரு சின்ன கட்டி போல் துருத்திக்கொண்டு இருப்பது அத்தனை அழகாக கவர்ச்சியாக இருக்கும். மிக அந்நியோன்யமான தம்பதியினர். காதல் திருமணம் அவர்களுடையது.

  ராமுவை மறக்க சொல்லி வீட்டார் கட்டாயப்படுத்தி ஒரு கோவிலில் வைத்து கற்பூரம் அணைத்து ’’ராமு இனி எனக்கு அண்ணன்’’ என 3 தரம் சொல்லச்சொல்லி , அத்தையும் அப்படியே சத்தியம் செய்து கொடுத்துவிட்டு, மறுநாளே மாமாவுடன் ஓடிபோய் கல்யாணம் செய்துகொண்டார்கள்.

  டைனிங் டேபிளில் இணைக்கப்பட்டிருக்கும் காபிக்கொட்டை அரைக்கும் சிறு இயந்திரத்தில் அத்தை தினம் வறுத்தரைத்த காபிப்பொடியில் தயாரிக்கும் காபியும், தயிர்சாதத்தில் கனிந்த மம்ப்ழங்களை பிசைந்து தருதுமாய் வாசனையாய் நினைவிலிருக்கிறது

  . 10ல் படிக்கையில் பள்ளியிலிருந்து எதற்காகவோ ஊர்வலமாக, சாலையில் எங்களை அழைத்து சென்றார்கள். வழியில் LIC அலுவலக வாசல் டீக்கடையில் ராமு மாமாவை பார்த்ததும் ’’மாமா’’வென கத்திக்கொண்டே, ஊர்வல வரிசையிலிருந்து விலகி நான் சாலையை குறுக்கில் கடந்துவிட்டேன். பள்ளி திரும்பி உள்ளங்கையில் பழுக்க ஸ்கேலில் அடி வாங்கி மாலை வரை மைதானத்தில் முட்டியும் போட்டேன்.
  அவர்களெல்லாம் அருகில் வசிப்பவர்கள் மற்றும், நெருங்கிய உறவென்று நான் நம்பினேன். இப்போது டெல்லியில் இருக்கும் மாமாஅத்தையுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன்.
  பல சிறு வயது நினைவுகளை மீண்டும் எண்ணி பார்க்க வைத்துவிட்டது உங்கள் பதிவு.

  கால வடிகட்டியில் உங்க மனதில் இந்த அருமணிகள் எல்லாம் தேங்கி இருந்ததால் தான் எங்களாலும் அவற்றை வாசிக்க முடிந்திருக்கிறது. இறுதிப்பத்தியில் என்னையும் கண் நிறைய வைத்துவிட்டீர்கள்.
  அருணா,ஏன் கொஞ்சம் இசை, கொஞ்சம் இலக்கியம்? நிறையத்தான் எழுதுங்களேன்

  அன்பும் வாழ்த்துக்களும்
  லோகமாதேவி

  Liked by 1 person

 9. அருமை! மிக அருமை!! 1960-70 களில் இலங்கையிலிருந்து ஒவ்வொரு வருட கோடை விடுமுறைக்கும் எங்கள் ஐயாவின் வின் சொந்த ஊரான வலங்கைமான் போய் வந்த நீங்காத நினைவுகளை மனதில் மீட்டியது உங்கள் “கொஞ்சம் இசை, கொஞ்சம் இலக்கியம்” . காவேரி (குடமுருட்டி) ஆற்றில் நீந்திக் கும்மாளம் அடித்ததும் , வயல் வரப்புகளில் விளையாடி மகிழ்ந்ததும், நாள் முழுதும் நாதஸ்வர , சங்கீத இசை கேட்டு மகிழ்ந்ததும், மாமாக்கள், சித்தப்பாக்கள் , பெரியப்பாக்களின் விருந்தோம்பலும், கதை நேரங்களும், மாரியம்மன் கோவில் திருவிழாக்களும் 50 ஆண்டுகள் கடந்தும் மறக்க முடியாதவை. வற்றாத காவேரி பாய்ந்த தஞ்சைக் கிராம வாழ்க்கையையும் , சங்கீதத்தையும், இலக்கியத்தையும் சுவாசித்தவர்களுக்கு கிடைத்த அற்புதமான அனுபவம் இது!

  Like

 10. மிக அருமை !!! எனக்கு சிறு வயது ஞாபகங்கள் வந்துவிட்டது. வார்த்தையில் விவரிக்க முடியாத அனுபவம் . மிக்க நன்றி !!

  Like

 11. உள்ளிருக்கும் எத்தனையோ நினைவுகளை கிளர்த்தி விட்டது. உங்கள் எழுத்து. அனைத்தும் இனிமை!
  நேசங்கள்.

  Like

 12. வாழ்க்கையின் சில ஆண்டுகளைத் தஞ்சை மாவட்டத்தில் செலவிடுவதே பெரிய பாக்கியம். நீங்கள் அங்கேயே பிறந்து வளர்ந்தது அளவற்ற பாக்கியம். நானும் சில ஆண்டுகள் தஞ்சையில் வாழ்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் புதிய சுவைகளை உணர வைத்த அனுபவங்கள் அங்குதான் கிடைத்தன. நீங்கள் எழுதியவற்றில் பெரும்பகுதியை என்னாலும் நினைவில் மீட்டிப் பார்க்கமுடிந்தது. நீடாமங்கலத்துக்கு அருகிலுள்ள புலவர்நத்தம் என்னும் கிராமம், என் அந்தியந்த சிநேகிதன் அசோகனின் ஊர். டிப்பிக்கல் தஞ்சாவூர் கிராமம். கொடுத்து வைத்திருந்தது எனக்கு அங்கெல்லாம் சென்று அந்த வாழ்க்கையைக் காண. பசிய வயல்களினூடே செல்லும் பேருந்தில், முதல் மரியாதை, கீதாஞ்சலி, மெல்லத் திறந்தது கதவு-படப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே செல்வது ரம்மியமான அனுபவம். பொங்கல் இவ்வளவு பெரிய பண்டிகை என்பதைத் தஞ்சை மாவட்டம் வந்துதான் பார்த்தேன். நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள். நன்றி.

  Like

 13. கட்டுரைகள் மிக அழகு ….காரணம் மனத்தின் ஆழத்தில் இருந்து பேசுவது போன்ற வெளிப்படைத்தன்மையும், சின்னச்சின்ன சம்பவங்களையும் நுணுக்கமாக எழுதும் அளவுக்கு உங்களுக்கு உள்ள நினைவாற்றலும் தான்.

  ஒரே ஒரு உறுத்தல் ….சுயவிவரத்தில் முதல் பத்தி இறுதியில் ‘’பின்னணி’’ தவறாக உள்ளது

  வாழ்த்துக்கள் பல .

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s