மரபிசையும் காவிரியும் – கடிதங்கள்

அன்புள்ள அருண்மொழி,

இதுவரை உங்களுடைய புத்தக அறிமுகங்கள், விமர்சனக் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அவை எல்லாமே கொஞ்சம் விலகி, இம்பர்சனலான மொழி கொண்டுள்ளவை அல்லவா? ஆகவே உங்களை அவை மறைத்துவிட்டன. ஆனால் இந்தக்கட்டுரையில் வெளிப்படும் உங்கள் பார்வை மிகவும் தனித்துவமாக பெர்சனலாக உள்ளது. நீங்களும் உங்கள் எழுத்தும் வெவ்வேறல்ல என்பதுபோல். அத்தனை அணுக்கமாக.

படிக்கப்படிக்க உங்கள் காட்சிவிவரிப்பு முழுவதுமாகவே ஆட்கொண்டது. அத்தனை நுண்மையான விவரிப்பு. அற்புதமான ஸ்டைல். சிறுகச்சிறுக அடுக்கி அடுக்கி ஒரு நிலத்தின், காலத்தின், பண்பாட்டின் பெரிய, நுண்மையான சித்திரத்தை ஒரு கட்டுரையின் அளவில் அளிக்கமுடிகிறது உங்களால். அதனூடே வரும் உங்கள் அவதானிப்புகள். பார்வைகள். உண்மையில் இதன் மொழி ஒரு அனுபவக்கட்டுரை என்பதைத்தாண்டி என்னில் ஒரு நாவலின் மினியேச்சர் வடிவமாகவே உருகொண்டுள்ளது. நீங்கள் இத்தனை நாள் எப்படி நாவல் எழுதாமல் போனீர்கள் என்று வியப்பாக இருக்கிறது எனக்கு. நீங்கள் ஒரு நாவலாவது கண்டிப்பாக எழுத வேண்டும் என்று கோருகிறேன்.

உண்மையாகவே, நிலத்தை, நீரை, அதில் வாழும் மனிதர்களை, மொத்தமான ஒரு வலைப்பின்னலாக, ஈகோசிஸ்டமாக, விவரணைகளிலிருந்து எழுந்துவரும் அனுபவத்தை, இந்திய மொழிகளில் கன்னட வங்காள நாவல்களிலேயே அதிகம் வாசித்திருக்கிறேன். அந்தப் பெரிய நாவல்களில் நிலமும் நீரும் கூட ஒரு பாத்திரம் போல் வரும் அல்லவா. மண்ணும் மனிதரும் நாவலில் வரும் கடல் மாதிரி. நீலகண்டப் பறவையைத்தேடியின் சோனாலிபாலி நதி மாதிரி. அதெல்லாம் பெரியதொரு பைத்தியம், அப்பாடிப்பட்ட நிலம் நீர் வர்ணனைகளை கதைப்போக்கில் படிப்பதென்பது. நிலமே பெரிய பித்து. நிலத்தில் காலத்தை ஏற்றுவதென்பது அதைவிடப்பெரிய பித்து. நிலத்தையும் நீரையும் போல காலத்துக்குச் சான்றாக இன்னொன்று இல்லை. அவை மாறினாலும் சாரத்தில் மாற்றம் கொள்ளாமலேயே இருப்பதால் ஒருவித மயக்கத்தை அளிக்கின்றன என்று நினைக்கிறேன்.

தமிழ் நாவல்களில், இத்தனை நிலம் நீர் சார்ந்த பிரக்ஞை உடைய தமிழ் மொழியில், ஏன் இந்த சாத்தியம் அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்று யோசித்திருக்கிறேன். குறிப்பாக காவிரி சார்ந்து எழுதிய எழுத்தாளர்களை வாசிக்கும்போது. திஜா காவிரியை எழுதுகிறார், ஆனால் நீங்கள் சொல்வதுபோல் அவருக்கு காவிரி சங்கீதம். அல்லது அவருக்குள்ளே ஓடும் ஓர் ஒழுக்கு. அந்தரங்கமானது. புறத்தில் சாட்சியாக நிற்கும் பிரவாகம் அல்ல. அர்த்தங்கள் மாறிக்கொண்டே இருக்கும், ஆனால் அர்த்தம் மாறாமலும் இருக்கும் மாயவசீகரம் பொருந்திய தெய்வப்பொருள் அல்ல.

ஆனால் நீங்கள் இதில் நிலத்தின் நீரின் இந்த மாய ரூபத்தை நீங்கள் தொட்டுவிட்டீர்கள். அந்த விரிவுக்கான சாத்தியம் கண்டிப்பாக இதில் நான் காண்கிறேன்.

ஒரு சிறுமியின் பார்வை வழியாக, ஒரு வரலாற்றுக் காலகட்டத்தின் மாற்றம், இரண்டு பண்பாடுகளின் முயக்கம், இசையின் மாறுபாடுகள், இவைகள் வழியாக பயணிக்கும்போது பின்னால் இன்னொன்றாக காவிரி அங்கேயே இருக்கிறது. இன்று வரை இருக்கிறது. அந்த ஆழம் வந்துவிடுகிறது.

அதற்குக் காரணம் உங்கள் பார்வை தொட்டுப் பின்னும் கணங்கள் தான் என்று நினைக்கிறேன்.

இந்தக்கட்டுரையின் மையமாக இருந்தது காவிரியும் இசையும் அல்ல, அவை இரண்டும் கூடிய நீங்களும், உங்கள் அகமும், என்று தான் நான் பார்த்தேன். ஒரு பக்கம் உங்கள் குடும்பப்பின்னணி (பாட்டி, அம்மாவின் கதைகளோடு தொடங்கியதே ஒரு நாவலுக்கான மனநிலையை உண்டுபண்ணியது. இருவருமே புத்தகத்தின் பக்கங்களிலிருந்து எழுந்து வந்த பாத்திரங்களாகத் தோன்றினார்கள்). பிறகு அந்தக் காலக்கட்டத்தின் வரலாற்று நகர்வுகள். பிறகு புள்ளமங்கலம், காவிரி. பிறகு அந்தச்சிறுமி, அவளுடைய பிரத்யேகமான ஆளுமை. பிறகு  குஞ்சிதய்யர், இசை.  இவையெல்லாமே அந்த சிறுமியின் அகத்தில் என்னவாக ஆகிறது என்று தொட்டுத்தொட்டு உள்ளத்தில் விரிவாக்கும்போது பெரிய கதைக்கான சாத்தியம் உருவாகிறது.

நீங்கள் உயிர்ப்புடன் காட்சிகளைச் சொல்கிறீர்கள். மணங்களாக. பாட்டிவீடு – புல்லும், மாடும் தொழுவமும் புகையும் ஒருபக்கம். ஐயரின் வீடு, காபிக்கொட்டையும் பூவும் நெய்யுமாக மறுபக்கம். இரண்டு கலாச்சாரங்கள் வந்துவிட்டது. சூரியனையும் நதியையும் தொழுபவர்கள். அந்தச்சிறுமி வண்டியில் பின்பக்கமாக அமர்ந்து காட்சிகள் பின்னால் செல்வதைப்பார்க்கையிலேயே காலகதி தீர்மானமாகிறது. பாத்திரவார்ப்பும்.

அந்தச் சிறுமியின் உயிர்ப்பான குணச்சித்திரமே புனைவின் சாயலை கொண்டுவந்துவிடுகிறது.  மொரார்ஜி தேசாயை தன்னுடைய ஆதர்சம் என்று சொல்பவள், இசை புரியாது, ஆனால் பிடிக்கும், என்று பளிச்சென்று சொல்பவள், குடுமியை வெட்டினால் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று குறும்புடன் சொல்பவள். அந்தச்சிறுமியின் வளர்ந்த வடிவம் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறாள் – பதேர் பாஞ்சாலியில் வரும் நிலத்தை ஏக்கத்தோடு நினைக்கும்போது, மகராஜபுரத்தையும் எம் டி ராமனாதனையும் கேட்கும்போதும். ஒரு வினோத கனத்தை உணர்த்தின அக்கணங்கள்.

அப்புறம் சிறுவர்-சிறுமிகள் பிரமாதமான பார்வைக்கோணமுடைய பாத்திரங்கள். சிறுமி என்கையில் அந்த உயிர்ப்பே ஒரு பார்வைக்கோணமாகிறது. ஆழமான, அழுத்தமான, வண்ணமயமான அனுபவங்களாக பதிவுகள் அமைகின்றன. ஒரு நேர்நிலையான எழுச்சியோடு. அது இங்கே நிகழ்ந்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக இதில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், உங்கள் பிரத்யேகக்குரலாக என்று எனக்கு ஒலித்த அம்சம், இதன் வழியாக இயல்பாக வெளிப்படும் அவதானிப்புகள். வரிகள். காவிரியை சொல்கையில் உங்கள் மனம் இயல்பாகக் கவித்துவமாகப் பொங்குகியதே, அதுபோன்ற இடங்கள். பிறகு, “ஏழெட்டு வயது என்பது குழந்தைகளின் புலன்களில் கூர்மை குடிகொள்ளும் பருவம்.” எத்தனை சத்தியமான வார்த்தை. “அந்த வயதிலேயே மனம் இடையில் ஊடாடாமல் புலன்களாக இருக்கிறோம்.” இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் அந்த பழைய சுயத்தை நினைவு படுத்திப்படுத்தி அந்த பரிசுத்தமான புலன் மட்டும் திறந்த நிலைக்கு மனம் அழிந்து போகமாட்டோமா என்ற ஏக்கமும் வெறியும் உள்ளது. அந்த வரியைச்சொல்லும்போது பின்னால் வரும் விவரிப்புகள் மேலும் ஆழம் கொள்கின்றன. பிறகு குஞ்சிதய்யர், அவர் மனைவியின் குழந்தையின்மை பற்றிச்சொல்கையில் வரும் அவதானிப்பு. ‘சிலர் குழந்தைகளைக்கண்டாலே விலகிக்கொள்கிறார்கள். சிலர் அனைத்துக் குழந்தைகளிடமும் பொலிந்து நிற்பவர்கள்’ என்று. எங்கேயோ காவிரியின் சித்திரத்தோடு அந்த நேர்நிலையும் பொருந்திப்போகிறது. அதே போல் அந்த இறுதி வரி. ‘காலம் ஒரு மாபெரும் வடிக்கட்டிப்போல் நம் நினைவில் எது தங்கவேண்டும் என்று தீர்மானிக்கிறதாக தோன்றும்’. இவற்றின் வழியே வெளிப்படும் ஒரு தனிப்பட்ட பார்வைக்கோணம் எனக்கு மிகவும் அணுக்கமானதாக இருந்தது.

நீங்கள் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சுசித்ரா

***

அன்புள்ள அருண்மொழிநங்கை அவர்களுக்கு,

வணக்கம். 

தங்கள் தளம் கண்டேன். ‘’மரபிசையும் காவிரியும்’’ வாசித்தேன். 

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உணர்வை உண்டாக்குவதைப் போல எழுத்தாளனின் எழுத்துக்கும் பிரத்யேகமான தனித்தன்மை இருக்கிறது. உங்கள் முதல் கட்டுரையே உங்கள் தனித்துவம் என்ன என்பதைக் காட்டியுள்ளது. 

’’என்னுடைய பிறந்த ஊர்’’ என கம்பீரமாக ஆரம்பிக்கிறீர்கள். அது ஒரு விதமான அறிவிப்பு.

பிரகடனம் என்றும் சொல்லலாம். ’’என்னுடைய’’ என ஆரம்பிப்பதே  உங்கள் பிரக்ஞை எவ்விதமானது என்று உணரச் செய்து விடுகிறது. உங்கள் எழுத்து வாசகனிடம் முதலெண்ணமாக உங்கள் பிரக்ஞை மிக நுட்பமானது என்பதை ஏற்படுத்துகிறது. 

திருவாரூர் உங்களுக்குப் பிறந்த ஊர் – அது மட்டுமல்ல உங்கள் பிரக்ஞைக்கு – சங்கீத மும்மூர்த்திகள் ‘’வாழ்ந்து நடந்து தியானித்த’’ ஊர். உங்கள் உணர்வு ஆரூரை அவ்வாறே உணர்கிறது. அது ஒரு மகத்தான உணர்வு அல்லவா? அதனை வெளிப்படுத்துவது ஒரு மகத்தான தருணம் அல்லவா?

அதன் பின்னர் உங்கள் குடும்பம் குறித்து பிரதேசம் குறித்து கூறும் போது ‘’வரலாற்றுப் பொருள்முதல்வாத’’ பார்வையுடன் விளக்குகிறீர்கள். சமூகத்தை சமூக இயங்குமுறையை நீங்கள் காணும் கோணத்தை தரவுகளாக இல்லாமல் அவதானமாக முன்வைக்கிறீர்கள். அது வாசிக்க மிக சுவாரசியமாக இருந்தது. 

சிறுமியாக காவிரி உங்கள் நினைவுகளில் வைக்கோல் வாசனையாக , மூங்கில் புதர்களாக, அல்லிக் குளங்களாக , வெண் ஆறாக பதிந்திருப்பதை வாசித்த போது  பலருடைய மனதில் நினைவில் இருக்கும் காவிரி வற்றாமல் அனுதினமும் ஓடிக் கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது. 

‘’உங்களைப் போலவே காவிரியின் மீது பெரும் பித்து கொண்ட ஒருவராக’’ தி. ஜானகிராமனை அவர் எழுத்தின் மூலம் ஒரு வாசகியாக சந்திக்க நேர்ந்ததைக் குறிப்பிடும் பகுதி சுவாரசியமானது. தி. ஜா உங்கள் எண்ணத்தை அறிந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்!

புள்ளமங்கலம் குறித்த சித்தரிப்புகள் மிகச் சிறப்பாக இருந்தன. சிறார் பருவத்திலேயே, உங்களுக்கு இந்த மனப்பதிவுகள் உருவாகி உள்ளன. ஒரு எழுத்தாளனின் எழுத்தில் காட்சியாக அந்த ஊர் அனாதி காலமாக தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கும் என்று பட்டது. 
ஒரு ஏழு வயது சிறுமி தன் சிறு கிராமத்தில் இந்திரா தர்பாரின் சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் காட்சி நம் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை எவ்விதம் புரிந்து கொண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக இருக்கிறது. 

சிலான் ரேடியோ, அதில் ஒலிக்கும் இளையராஜா பாடல்கள் குறித்து கூறும் போது உங்கள் வார்த்தைகள் பரவச நிலை கொண்டுள்ளன. திரைப்பாடல்கள் மூலம் இசை ரசிகையாகி குஞ்சிதத்தையரிடம் ‘’ புரியல; ஆனா புடிச்சிருக்கு’’ எனக் கூறுகிறீர்கள். குஞ்சிதத்தையர் மாமி தம்பதிகள் உங்களைத் தங்கள் குழந்தை போல எண்ணியதை விளக்கும் பகுதிகள் உணர்ச்சிகரமாக இருந்தன. 

காலை உங்கள் கட்டுரையை ஒருமுறை வாசித்தேன். சில நிமிடங்களுக்குப் பின், மீண்டும் ஒருமுறை வாசித்தேன். உங்களுக்கு எழுத வேண்டும் என்று தோன்றியது. 

உங்கள் எழுத்துக்களைக் கண்டு அன்னை காவிரி மிகவும் மகிழ்ந்திருப்பாள். 

வணக்கம். 

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

***

திருமதி அருண்மொழிக்கு, 

நீங்கள் எழுதிய கட்டுரை மிக நன்றாக வந்துள்ளது. நீங்கள் புது வலைதளம் தொடங்கியதற்கும் மிக்க மகிழ்ச்சி. 

உங்கள் கணவரின் எழுத்துக்கள் வழி உங்கள் ஆளுமை எங்களுக்கெல்லாம்  கொஞ்சம் பரிச்சயம் தான். ஆனாலும் அது முழுமையாக உங்கள் எழுத்துக்கள் வழியே துலங்கி வரும் என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மிகச்சிறந்த முன்னெடுப்பு.

மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

கல்பனா ஜெயகாந்த்

***

Dear Arunmozhi,

I have come across this blog through JeyMo’s write-up. I am an ardent fan and admirer of JeyMo, and have been reading him a lot for the last few years (Haven’t started ‘Venn Murasu’ yet )  However, I have never written a mail to him. After going through your blog, I thought I would write to you immediately.

You have a great flow in writing and your descriptive style is lovely and similar to JeyMo’s style. I could totally visualize Kunchithaiyer through your writing.

This write-up does not look like it has come from someone who has started writing now. I am sure you would be a great writer soon & after all, you are our Aasan’s wife 🙂 Looking forward to great things from you. Best wishes.

Regards,
Radhakrishnan (Radha)
from Ernakulam

***

மேடம்,

இவ்வளவு மணங்களை நான் நுகர்ந்திருக்கிறேன் என்பதையே இப்போது தான் அறிகிறேன். “காவிரியும் மரபிசையும்” எனது மறைந்துபோன புலன் அனுபவக் காண்படங்களை மீட்டுத் தந்தது. பருத்தி அரைக்கும் மணத்தை நான் ஒரே ஒரு முறை தான் கேட்டுள்ளேன், 35 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் புதிதாக ஒரு ஆட்டுக் கல் கொத்தி வாங்கியபோது அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர பருத்தியை அரைத்த பாலுடன் வந்தது அது. பின் அதை மறந்து விட்டேன், ஆனால் அது அப்படியே ஒரு மங்கிய அச்சாக என்னுள் பதிந்துள்ளதை இப்போது உணர்கிறேன். இக்கட்டுரை அதை சற்று விபூதியிட்டு துடைத்து கழுவி என் முன் கொண்டளித்தது. வெற்றிலை காரல் மணமும், புடவையில் இன்னொரு படலமாக சூழ்திருக்கும் விறகுப் புகை நெடியும் இப்போதும் நான் உணர்கிறேன். பாட்டுக் குரலும் இவ்வாறே, நாம் அடையாளம் பதிக்காமலேயே உள் சென்றுவிடும் பின் யார் பாடிய பாட்டு என எண்ணும் பொழுது கிட்டத்தட்ட எண் எழுதப்பட்டு ஒரு கோப்பில் தொகுக்கப்பட்டது போல கையில் கிடைக்கும். மணமும் இசையும் ஒரே ஞாபக வடிவத்தை தான் பகிர்ந்து கொண்டுள்ளன. போலவே மனிதக் குரலும் மணமும்.

வைக்கோல் மணத்தை நான் பெரிய அளவில் ஏற்றதில்லை, ஆனாலும் அப்படியே உள்ளே ஒரு ஆவி நிலையில் உள்ளதை அறிகிறேன். இது போன்ற புலன் அனுபவங்களுக்கு கால நீள அகலம் தேவையில்லை அது நம்மை பார்த்து சற்று சிரித்திருந்தால் போதுமானது தான் போல.

நிலக் காட்சியின் புற அடையாளங்கள், நிலக் குறிப்புகள் திசை தொலைவு தெளிவுற கூறப் பட்டிருக்க வேண்டும் என நினைப்பவன் நான். அப்போது தான் அங்கு நாம் காலூன்றிச் சென்று உலாவ முடியும். இக்கட்டுரையில் வரும் புள்ளமங்கலம் கிராமத்தில் இது வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது.

இக்கட்டுரை முடிந்தபின் என்னுள் குறைந்த அளவே நிகழ்ந்த பிறந்த ஊர் அனுபவ நினைவுகள் மட்டுமே விஸ்தாரமாக மீட்கப் பட்டிருப்பதை எண்ணிப் பார்க்கிறேன், சற்று அதிர்ச்சி தான். ஆகவே இது சற்று மயங்கச் செய்யும் எழுத்து எனக் கூறலாம்.

ஒரு மாட்டு வண்டியின் பின் வட்டத்தில் தெரியும் காட்சியை மென்று கொண்டு செல்லும் சிறுமியின் கண் கொண்டே இக்கட்டுரையை வாசித்தேன் என்பதை இறுதியில் எண்ணும் போது இது நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருப்பதைக் காண்கிறேன், அதை ஒரு வீணைத் தந்தி மீட்டும் எளிய இசைக் கோவை போல கேட்கிறேன்.

கிருஷ்ணன்,
ஈரோடு.

***

One thought on “மரபிசையும் காவிரியும் – கடிதங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s