அன்னையின் பாடல் – கிஷோரி அமோன்கர்: கடிதங்கள்

வடிவமைத்தவர்: குமார் சண்முகம், இனியா ஃபுட் புராடெக்ட்ஸ்

அன்புள்ள அருண்மொழிநங்கை Ma’am,

இன்று காலை உங்கள் “அன்னையின் பாடல்” கட்டுரையை வாசித்தேன். தலைப்பை கண்ட உடனே “ஆகா!!! ஆகா!!! ஆகா!!! ஒளி வந்துவிட்டது” என்றுதான் தோன்றியது. “மா” கிஷோரி ஜீயை பற்றி நீங்கள் எழுதியது எனக்கு அத்தனை ஆனந்தம். 13 வயது முதல் என்னோடு இருக்கும் இணையமும், Youtubeஉம் எனக்கு செய்து வைத்த உருப்படியான அறிமுகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். Youtube எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் “மா”வும், பாம்பே ஜெயஸ்ரீ அம்மாவும், Schubertஉம் தான். ஏதோ ஒரு இரவில் பாம்பே ஜெயஸ்ரீ அம்மாவின் இசையை கேட்டுக்கொண்டே பாதி தூக்கத்தில் கிடந்தபொழுது, Youtube algorithm என்ன நினைத்ததோ தெரியவில்லை “மா”வின் “சஹேலா ரே”வை அடுத்து தொடங்கிவிட்டது. இணைய algorithmகள் அனைத்தும் நம்மை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்டவை என்று எனக்கு தெரியும். ஆனால் அன்று அந்த algorithm அடைந்த மகத்தான வெற்றியைப்போன்ற மற்றொன்றை நான் கண்டதே இல்லை. பாதி தூக்கத்தில் இருந்து எழுந்த நான் மீண்டும் இணையத்தைவிட்டு வெளியே வந்தது 3 மணிக்குதான். தொடர்ந்து பூப், ராகேஸ்ரீ என்று சென்றுகொண்டே இருந்தேன். “மா”வை உருப்படியாக ரசிப்பதற்காக ஹிந்துஸ்தானி இசையின் அடிப்படைகளை மட்டும் கற்றுக்கொண்டேன். ஏதோ ஒரு இரவில் வானத்தைப் பார்த்து அமைதியாக அமர்ந்தால் இவர்கள் மூவரின் இசையைதான் மனம் தேடும். “மா”வின் நேர்காணல்களின் வழியே அவர்களின் ஆளுமையை அறிந்தேன். எத்தனை மகத்தான ஆளுமை. அந்த வித்யா கர்வமும், கம்பீரமும் அத்தனை அழகு. ஒரு கண்டிப்பான தாய் என்ற வரிகளை உங்கள் கட்டுரையில் கண்டவுடன் நெகிழ்ந்துபோனேன். எத்தனை உண்மையான வரி அது. “மா”வின் ஆளுமையை அத்தனை அழகாக அத்தனை உண்மையாக காட்டுகிறது. நன்றி Ma’am.

ஒரு கட்டுரையை அல்லது படைப்பை வாசித்தவுடன் அதனோடு தொடர்புபடுத்தக்கூடிய ஒரு சினிமா நினைவுக்கு வருவதை நான் ஒரு பாவச் செயலாகத்தான் கருதுகிறேன். பெரும்பாலும் அப்படி ஒப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதவே கூடாது என்று நம்புகிறேன். ஆனால் இந்த முறை என்னால் அதை தவிர்க்க இயலவில்லை. சமீபத்தில் சைதன்ய தம்ஹானேவின் “The Disciple” என்ற மராத்தி படத்தை பார்த்தேன். வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதும், சர்வதேச விமர்சகர் சங்கத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் பெற்ற படம். ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும், இன்றைய cosmopolitan நுகர்வு கலாச்சாரத்தில் ஒரு கலைஞனின் போராட்டங்களையும் பற்றிய படம் அது. “அடிப்படையில் எல்லா கலைகளுக்கும் ஒரே வரையறைதான் போலும்.  சமுத்திரத்தின் ஆழம்போல எல்லா கலை கட்டுமானங்களும் பிணைந்துள்ளன,  மேலே அலைகளையே வேறுபாடென நாம் காண்கிறோம்.” என்ற வரிகளை வாசித்தவுடன் எனக்கு மோகமுள்ளும், “The Disciple”உம் தான் நினைவுக்கு வந்தன. மோகமுள்ளின் “ரங்கண்ணாவும்”, “The Disciple”இன் “மாய்” கதாபாத்திரமும் எனக்கு கிட்டத்தட்ட “மா”வாகத்தான் நினைவில் பதிந்திருக்கிறார்கள். உங்களுக்கு எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் “The Disciple” பாருங்கள். வெறும் குரலாக மட்டுமே வரும் “மாய்”யில் நிச்சயம் “மா” நிறைந்திருப்பார். மகத்தான கலைஞர்களை/ஆளுமைகளை வார்க்கும் அச்சு வகைகளில் கடவுள் மொத்தமாக இரண்டு மூன்று வகைதான் வைத்திருக்கிறார்போலும் என்று நான் நினைப்பதுண்டு. அந்த அச்சுகளில் கடவுளுக்கு பிரியமான ஒரு முதல்தர அச்சு இருக்குமென்றால், அதில் வார்க்கப்பட்டவர் “மா”. அவர்கள் காலம்தோறும் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். பெயரும், உருவமும், ஊரும், கலையும், மாறிவிடுகிறது. ஆனால் அடிப்படையில் இருப்பது ஒரே அச்சில் வார்த்த ஆளுமைதான். அவர்களுக்கு மரணிப்பதே இல்லை. Ma’am இந்த கட்டுரைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்

***

அன்புள்ள அருண்மொழி அவர்களுக்கு,

நலம். ‘கொஞ்சம் இசை கொஞ்சம் இலக்கியம்’ என்று நீங்கள் உங்கள் தளத்தில் பிரகடனப்படுத்தியதுமே, எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை (இசை),  எளிதில் புரியக்குதுடிய மொழியில் சுவாரஸ்யமாக எழுதவிருக்கிறீர்கள் என்று உற்சாகம் அடைந்தேன். இரண்டாவது கட்டுரையே , ஆழமான ஒன்றாக, இசை பற்றிய குறிப்புகளை சொன்னாலும் அந்நியப்பட்டுவிடாமல் வாசிக்கும்படி அமைந்ததில்  மிக்க மகிழ்ச்சி. 
என்னால், இசை கேட்காமல் ஒரு நாளும் இருக்கமுடியாது. அது பெரும்பாலும் சினிமாப்பாடல்கள் ஒட்டிய இசையே என்றாலும், அது இல்லாமல் ஒரு நாளையும் கடந்தது இல்லை.  பிடிக்கிறது , பிடிக்கவில்லை என்ற இரண்டு நிலைப்பாடுகள்தான். எனக்குப் பிடித்த பாடலை யாராவது  நுணுக்கங்களுடன் விமர்சித்து எழுதியிருந்தால் ஆழ்ந்து வாசித்து கற்றுக்கொள்ள முயற்சிப்பேன். உதாரணத்திற்கு, ராஜன் சோமசுந்தரம் , சங்கப் பாடல்களுக்கு இசையமைத்தபொழுது, ஒவ்வொரு பாடலையும் தினமும் கேட்பேன். அது எப்படி சிறப்பு என்று , வேணு தயாநிதி சொல்வனத்தில் எழுதிய கட்டுரை மூலம் எனது புரிதல் இரண்டு மடங்காகியது. 
இன்றைய உங்கள் கட்டுரையின் மூலம், பெயர் அளவில் தெரிந்த கிஷாரி அமோன்காரியை, இன்னும் கொஞ்சம் ஆழமாக அறிந்துகொண்டேன்.  எனக்கு நீங்கள் தில்லானா என்றாலும், ஹம்சத்வனி தரானா என்றாலும் ஒன்றுதான்.   இதைக் கேட்டுக் கேட்டு  நானும் இனம் காணும் ஒரு நாள் வரும் அல்லவா ?

கிஷோரிஅமோன்கார் , இசையை எப்படி வரையறுக்கிறார் என்று நீங்கள் உங்கள் நடையில் சொல்வது இலகுவாக வந்து மனதில் பதிகிறது. இப்படிபட்ட கட்டுரைதானே இசையில் பாமரனான எனக்குத் தேவை.

ஆண்கள் சமுதாயம் மட்டும் பண்டிட் பட்டம் பெறுவதை கண்டு கோபப்படும் கலைஞனாக அவர் கோபப்படும் ஆளுமை பிடித்திருக்கிறது. அவர் யாரோ அதுவாக பாடுகிறார், வாழ்கிறார். வாசகனுக்கு அவரை  சரியாக அடையாளப்படுத்தியிருக்கிறீர்கள்.

நான் வட மாநிலத்தில் சிலகாலம் குப்பை கொட்டியவன் என்ற வகையில், ஹிந்தியை , சிலர் பேசும்பொழுது , அவர்கள் பேசினால், எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று கேட்பேன். பாடலாகட்டும், பேச்சாகட்டும், நான் ரசித்து கேட்கும் மொழிகளில் ஹிந்தியும் உண்டு.  ‘சஹலே ரே மில் ஆல் காயின்’  கேட்டதும் எனக்குப் பிடித்திருக்கிறது வகையில் சேர்ந்துவிட்டது. இதில் நீங்கள் தமிழ் மொழிபெயர்ப்பும் கொடுத்திருப்பதால், புரிதல் அதிகமாகி, உளம் மயங்கும் நிலையை இரட்டிப்பாக்காகிறது. 

ஒரு முறை வாசிப்பிற்கு அப்புறம் இந்தக் கடிதம் எழுதுகிறேன். மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும் கட்டுரை.

அன்புடன்,

வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்.

***

அன்பான அக்கா,

இந்தக் கட்டுரையில் பல தருணங்கள் எனக்கு சிலிர்ப்பான அனுபவத்தைக் கொடுத்தன. ‘வெளிச்சம் என்னை மிகவும் அமைதியிழக்கச் செய்கிறது.  இருளில்  அமர்ந்தே பாட விரும்புகிறேன்’ எனும் வரியிலிருந்தே கட்டுரைக்குள் முழுமையாக நுழைந்து விட்டேன். குரலின் வழி நீங்கள் அவரை கண்டிப்பான அன்னை என கண்டுக்கொள்கிறீர்கள். நான்  இச்சொல்லின் வழி அவரது கலை மனத்தை அறிந்துகொண்டேன். ஓர் எழுத்தாளனுக்கும் ஓவியனுக்கும் என்ன நிகழுமோ அதுதான் அவருக்கும் நிகழ்கிறது இல்லையா? அசல் கலைஞர்கள் அனைவருமே தனக்குள் இடுக்கும்  ஒளிபொருந்திய இறைமையை அடைய இருளில் அமர வேண்டும் இல்லையா? புற வெளிச்சத்தை பிரதானமாக கருதும் கலைஞன் அந்த divinity ஐ தவற விடுகிறான் இல்லையா?

என் நண்பர் ஒருமுறை முகநூலில் இளையராஜாவோடு இன்னொரு பிக் பாஸ் பிரபலத்தை ஒப்பிட்டு ‘ராஜா நிருபர்களிடம் அவமரியாதையாக பேசுகிறார். பிக் பாஸ் பிரபலம் கனிவாக நடக்கிறார்’ என்றார். நான் ராஜா அப்படித்தான் நடந்துகொள்வார். காரணம் அவர் மேதை. அவர் மேதமை இந்த இழிவான சூழல்மீது பத்திரிகை தீனிக்காக அலைபவர்கள் மீது எரிச்சல் அடையவே வைக்கும். ராஜாவுக்கு எந்த பத்திரிகையாளனும் அவசியமில்லை. காரணம் அவர் தன் இசையில் தான் யாரென அறிவார். அதைத்தாண்டிய தான் என யாரென்றும் இன்னும் ஆழமாக அறிவார். இது எனக்கெப்படி தெரியும். அவரிடம் பேசாவிட்டாலும் எல்லா கலைஞர்களுக்கும் தெரியும். பிக் பாஸ் பிரபலத்தின் அடிப்படையான நோக்கமே புகழ் அடைவதுதான். அவர் ஊடகத்தை கனிவாக எதிர்க்கொள்வதில் ஆச்சரியம் இல்லை’ என்றேன். உண்மையில் கிஷோரியின் கோபம் அத்தகையது. அது புரிந்துகொள்ள கூடியது. அதுவே அவர்களை கர்வமாக்குகிறது. அவர்கள் கர்வம் அடைவது தனக்குள் கண்ட அந்த கடவுளினால்தான். உன் எளிய உலகியல் பசிக்கு என்னிடம் வராதே என்பதைதான். கிஷோரி வரியில் சொல்வதென்றால் குழந்தையை ஏந்திய கருணை மிக்க எளிய தந்தையாக மட்டுமே போரில் வெல்லும் மாபெரும் அரசனை எளிமைப்படுத்தி எதிர்க்கொள்வதைப் போன்றது.

கட்டுரையில் அவர் அன்னை பயணத்தைப் பற்றி சொன்ன இடம் எல்லா கலைஞர்களுக்குமானது. ஜெயகாந்தன் இதையே தன்னிடம் இளமையில் ஒரு எழுத்தாளன் மேடை பேச்சுக்காக திரிவதைப் பற்றி சொன்னதாக மூத்த எழுத்தாளர் ஒருமுறை கூறினார். அந்த ஒரு சொல்தான் அவருக்கு இருளுக்குள் தன்னைத்தேடி கண்டடையும் ஆசானாக இருந்திருக்கும்.

இந்த கட்டுரையின் சிறப்பு என்ன தெரியுமா அக்கா? ஒரு மகத்தான கலைஞனை மிஞ்சி, உங்களை நீங்கள் எங்குமே வெளிபடுத்தாமல் கட்டுரையை கட்டமைத்ததுதான். பெரிய ஆளுமைகளை மிகச்சரியான எல்லையில் நின்று காட்டுவதுதானே அவ்வாளுமைகளுக்குச் செய்யும் மரியாதை. கட்டுரையை வாசித்து முடித்தபிறகு உங்கள் சொற்கள் வழியே அவரை அறிந்துகொள்வதும் மனதில் அவர் குறித்த சித்திரம் ஒன்று உருவாகி வருவதுமே இக்கட்டுரையின் வெற்றி.

ம.நவின்

மலேசியா

***

வாசித்தேன். அருமையான கட்டுரை 😃 உங்கள் இசையனுபவ்மும் கிஷோரி அமோன்காரின் கலையாளுமை உங்கள் வார்த்தைகளின் வழியே வெளிப்பட்ட விதமும் மிகச்சிறப்பாக இருந்தது. அவர்களுடைய இசையில் ஒரு தள்ளி நிற்கும் removedness இருக்கும் அது எனக்கு மிகவும் பிடிக்கும். பாவத்தின் ஆழத்துக்கே போகும்போதும் அதை பார்வைபார்க்கும் இன்னொருவர் அங்கே இருப்பதுபோல் தோன்றும்…
கிஷோரி அம்மாவின் அந்த இண்டர்வியூவை உங்கள் கட்டுரை வழியே சென்று பார்த்தேன். பிரமாதமான காணொலி. அவர் ஆளுமையை பார்ப்பதற்கென்றே பார்க்கலாம் எனத் தோன்றியது…

சுசித்ரா.

***

இப்போதான் வாசித்தேன் அருணா , ஆழமான கட்டுரை 👌 இசையில் ஆரம்பித்து பின் அதன் மூலம் கிஷோரியின ஆளுமையை அடைந்த விதம் சிறப்பாக வந்திருக்கிறது .

அதே போல இசை குறித்த உங்கள் அவதானிப்புகளும் ஒரு தேர்ந்த ரசிகரின் அவதானிப்புகளாகவே வெளிப்பட்டிருக்கிறது .

இதை வாசிப்பது கிஷோரியை உங்கள் காதுகளால் கேட்பது போன்ற உணர்வை அளித்தது .எழுதும்
விஷயத்தை உங்களுடையதாக்கிக்கொள்கிறீர்கள். நீங்கள் எழுதியதை நினைக்காமல் இனி கிஷோரியை கேட்க முடியாது 😊

சிட்னி கார்த்திக்

***

மேடம்,

ஒரு கூடை முடைவதை பார்க்கும் போதோ அல்லது நாற்காலி பின்னுவதை பார்க்கும் போதோ அது ஒரு இசை வடிவாகத் தான் எனக்கு தோன்றும். விஸ்தரித்து ஒரு பூரணமாக்காப்பட்ட வடிவம். சில சமயம் பறவைக் கூட்டைக் கண்டால் கூட அப்படி தோன்றும். ஒரு நோக்கில் இயந்திர வார்புக்கும் கை நேர்திக்கும் இடையே உள்ள வடிவம் அது.

“அன்னையின் பாடல்” கட்டுரையும், கிஷோரி அமோன்கரின் இப்பாடல்களும் அதே அனுபவத்தை தந்தன, இயந்திர வார்புக்கும் கை நேர்திக்கும் இடையே உள்ள வடிவம். இவரை இப்போது தான் கேள்வியுறுகிறேன். ஆம், ஒரு அன்னைக்கும் கன்னிக்கும் ஆன பாவம். பாவம் என்றால் வாத்திய இசையின் பாவக் குறைவும் குரலிசையின் பாவக் கட்டுப்பாடும் ஒருங்கே கொண்டது.

இசை பற்றி எழுதுவது என்பது அடிப்படையில் சவாலானது, வடிவற்றதை வடிக்க முயல்வது. ஆண்டாளையும் அவ்வையையும் குறித்து கச்சிதமாக இலக்கை அடைந்துவிட்டது இக்கட்டுரை. கிஷோரி அமோன்கரின் தன் வரலாறும் அவர் நிமிர்வும் அப்பாடல்களில் ஒலிப்பது போலவே உள்ளது, இம்மயக்கத்தை ஏற்படுத்தியதாலேயே இது ஒரு சிறந்த கட்டுரை என்பேன்.

கிருஷ்ணன்

ஈரோடு.

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s