அன்னையின் பாடல் – கிஷோரி அமோன்கர்

கிஷோரி அமோன்கர்

தனிமையும், மனக்கொந்தளிப்பும், மிகுந்த ஓரிரவில்தான்  கிஷோரி அமோன்கரை நான் கேட்க நேர்ந்தது.  முதலில் ஒரு அறிமுகத்துக்காக எட்டு நிமிடம் ஓடக்கூடிய ஹம்சத்வனி தரானா [ நமது தில்லானா போல்].   தன் குரலால் என்னை வசப்படுத்தினார். அடுத்து ஆஜ் சஜானா,  பின்னர் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய பூப் ராகத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு கச்சேரி. பூப் [அ]  பூபாளி ராகம்  நமது மோஹனத்திற்கு  நிகர் என்று யூகித்துக் கொண்டேன். ஹிந்துஸ்தானியை குறித்து  சிறிதும் அறிமுகமே இல்லாமல்  கிஷோரிஜியை பற்றிக் கொண்டு அக்கடலில் குதித்தேன். அவ்விரவில், தன் குரலால்  என்னை குழந்தை போல் ஏந்தினார். தன் ஆலாபனையின் கமஹங்களால் என்னை முக்கி திணறடித்தார். சில சமயம் நடுக்கடலில் தூக்கி எறிந்தார். ஆனாலும் எனக்கு ஓர் அற்புத பயணம் தான் அது.

என்ன ஒரு குரல்,  ஹிந்துஸ்தானி கலைஞர்கள், தங்கள் குரலை எந்த எல்லைக்கும் கொண்டு செல்ல சாதகம் செய்வார்கள் என்று [மோகமுள்] படித்திருக்கிறேன். அந்த உச்சம்  என்பது அவர்களுக்கு ஒரு வரையறை அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். பெண் குரலில், இத்தனை இலகுவாக  அவர் அடையும் ஸ்வரங்களின் மொழியைக் கேட்டு  திகைத்தேன் .  பிறகு தேடித் தேடி பிஹாக், ராகேஸ்ரீ, யமன்,  நந்து,  மத்யமாவத் சாரங், பீம்பிளாசி, தேவ்கிரி பிலாவல், ஜீவன்புரி, சுத்த நத்  என விடாமல் தொடர்ந்து வந்த நாட்களில் கேட்டேன்.  திளைத்தேன் என்று சொல்லலாம்.  இரவில் ,இருளில்,  கிஷோரியின் குரலும் நானும் மட்டுமே. அந்த அனுபவத்தை எப்படி வரையறை செய்வது?  விளக்குவது?  ஒரு பேரிருப்பாக,  ஒரு சாந்நித்தியமாக , ஒரு தழுவலாக, ஒரு வருடலாக  , மனதோடு உரையாடும் மூச்சொலியாக, வந்து என்னை ஆற்றுப்படுத்தினார்.

என்னை ஹரித்வாரின் ஆளரவமற்ற படிக்கட்டுகளில் அமர்ந்து கங்கையை பார்ப்பவளாக , அதன்  நீரலைகளை, சுழிப்புகளை, ஆவேசமான பெருக்கை, அமைதியான  ஒழுக்கை காண்பவளாக ஆக்கினார்.  காற்றில் மிதக்கும் ஒற்றை சிறகு ,  வானில்  வட்டமிட்டு  கீழிறங்கும் பருந்து, அலையில் மிதக்கும் தனித்த தோணி, விழுதாய் இறங்கும் சர்க்கரை பாகு என்னென்ன சித்திரங்கள் என் மனதில்.  என் தர்க்கமனம் என்னை முழுதாய் கைவிடும் தருணம்.

அந்தக் குரலில் ஒரு அன்னையின் ஆறுதலையும், பரிவையும் கண்ட  அதே சமயம்  உரிமை மிகுந்த ஒரு கண்டிப்பான தொனியும் இருப்பதாகப் பட்டது.  உடனே எனக்கு அவருடைய  ஆளுமையை அறிய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. முடிவில் நான் அறிந்த அவர் கண்டிப்பு மிகுந்த அன்னையே தான். நான் அவரை தேடி அறிந்த அந்த பயணம் மிக  சுவாரஸ்யமானது.

கிஷோரிஜி எப்படி இசையை வரையறுக்கிறார்? இசைக்குறிப்புகளின்[ ஸ்வரங்களின்] மொழியே  இசையென்கிறார். தனது கலையைப் பற்றிய நுண்ணிய அவதானிப்பும், தெளிவான பார்வையும் அவரிடமிருக்கிறது.  ஒரு கலைஞன், தன் கலையை பற்றி அவனுக்கே உரிய ஒரு வரையறை வைத்திருக்க வேண்டும். அப்படி உள்ளவர்கள் மட்டுமே அக்கலையில்  அடுத்தகட்ட  பாய்ச்சலை நிகழ்த்துகிறார்கள்.   கிஷோரியின் காலத்தில் அவர் ஜெய்ப்பூர் கரானா வழி வந்தவர். கரானா என்பது ஒரு ஸ்கூல்  ஆஃப் மியூசிக் [நமது பாணி போன்றது} என்கிறார்கள்.   குவாலியர் கரானா, பட்டியாலா கரானா, ஆக்ரா கரானா என ஒரு பத்துக்கும் மேற்பட்ட பிரிவினைகள்.  அவை தெளிவான சட்டகங்களுக்குள் அடைபட்டவை.

கிஷோரி, ஜெய்ப்பூர் கரானாவின் இலக்கணத்தையும் மீறுகிறார். ”எனக்கு  இசையை  ஒரு குறிப்பிட்ட சட்டகத்துக்குள் அடைத்து,  முறையான வரையறை செய்து,  இலக்கணம் என்ற அடிப்படை கட்டுமானத்துக்குள்  வைப்பது உவப்பில்லை .  இசையே முதன்மையானது.  கரானா என்பதெல்லாம் மனிதரை  ஜாதி அடிப்படையில் பிரிப்பது போன்றவை. இசையின் மொழியே உணர்ச்சிதான், பாவம் தான். மிக அடிப்படையான இலக்கணம் மட்டும் போதும் “என்கிறார்.

எனக்கு இது ஆச்சரியமாகவும், புதுமையாகவும் இருந்தது.  நம் வித்வான்கள் பலர் செம்பை, செம்மங்குடி, அரியக்குடி போன்றவர்கள் நம் கர்னாடக இசையில் , குரலில் ஒரு போதும் பாவத்தை காட்டக்கூடாது.  அந்த ராக இலக்கணம் வழியாக ரசிகனை அந்த உணர்வை அடைய வைப்பதுதான் மேன்மையான இசை என்பார்கள்.

நுட்பங்களிலேயே  கலை உள்ளது என்கிறார் [art  is in subtle details] கிஷோரி.  எவ்வளவு  நெருக்கமாக அது இலக்கியத்துக்கும் பொருந்தும். அடிப்படையில் எல்லா கலைகளுக்கும் ஒரே வரையறைதான் போலும்.  சமுத்திரத்தின் ஆழம்போல எல்லா கலை கட்டுமானங்களும் பிணைந்துள்ளன,  மேலே அலைகளையே வேறுபாடென நாம் காண்கிறோம்.

”மொகலாயர்களின் இசை வந்த பின்புதான், இந்த ராக கட்டுமானங்களின் இறுக்கமும், அளவுகோல்களும் வந்தன . ராகம் என்பது அளவைகளில் இல்லை, அது  ஸ்வரங்கள் எனும்   நுண்குறிப்புகளிலேயே [classical notes] உள்ளது. ஒவ்வொரு ராகமும் அதற்குரிய உணர்ச்சி கட்டுமானத்தையே என்னிடம் கோருகின்றன” என்கிறார்.  உ-ம்  பிகாக்.   அந்த ராகம் பாடுகையில் எனக்கு மிதமிஞ்சிய அமைதியும், பொறுமையும் தேவைப் படுகிறது என்கிறார்.

”அதைப் பாடுவதற்கு முன் நான்  என் உலகில்,  என்னுள்  மூழ்கி இருக்கவே விரும்புகிறேன். எனது தம்புராவை முறுக்கி, குழல்களை சீரமைக்கும்போது அந்த மனநிலை மெல்ல என்னை அணுகுகிறது. மெல்ல ராகம் என்னை தன்னுள் இழுக்கிறது. என்னை மறந்து நான் பாடுகிறேன். பாடும்போது நானும் ராகமும் மட்டுமே  இருப்பதாக  நான் உணர்கிறேன் . எதிரே எனக்கு யாரும் தெரிவதில்லை. அதன் வழியே நான் கடவுளை [divinity] தரிசிக்கிறேன்.  மேடையின் வெளிச்சம் என்னை மிகவும் அமைதியிழக்கச் செய்கிறது.  இருளில்  அமர்ந்தே பாட விரும்புகிறேன்” என்கிறார்.

அவர் ஆளுமைத் திறன்  கொண்ட , நுண்ணுணர்வு மிகுந்த பெண் . எனவே ஆண் பாடகர்களுக்கும், பெண் பாடகர்களுக்கும் சமூகம் தரக்கூடிய  அங்கீகார வேறுபாடு அவரை அலைக்கழிக்கிறது. ஆண்களுக்கு’ பண்டிட் ’என்ற பட்டமும், பெண்களுக்கு அன்பின் மிகுதியால்  தரப்படும் ”மா” அல்லது “தாய்” என்ற அடைமொழியும் அவரை கடைசிவரை போராட வைக்கிறது.  ஒருமுறை கண்ணியமின்றி சல சல வென்று சப்தம் செய்து கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு பாட மறுத்து  திரும்பிச் செல்கிறார்.  

தனக்கான உரிய கௌரவமும், அங்கீகாரமும் வேண்டும் என்பதில் மிகுந்த பிடிவாதத்துடன் இருக்கிறார். இக்குணம் அவரை எரிச்சல் மிகுந்தவராகவும், சிடுசிடுப்பானவராகவும் சிலசமயம் தோன்ற வைக்கிறது. தன்னை பேட்டி காணும், இசை நுட்பங்கள் அறிந்த பேட்டியாளரிடம் நட்பாக, புன்னகையுடன் பேசும் அவர் , அவரை மேடைக்குப் பின்னால்  அவர் பாடுவதற்கு  சிறிது முன் சந்திக்க வரும்  , முகமன் கூறும் ரசிகர்களை விருப்பமின்றி எதிர்கொள்கிறார்.  

சில நேர்காணல்களில் அவர் தடாலடியாக பேசுவதுபோல் தோன்றும். “கிஷோரிஜி, Fusion music பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கையில் Fusion utter confusion என்று பலமாக மறுதலிக்கிறார். தன் கலையைப்  பற்றிய தெளிவான பார்வை, அதன் பலம் என்ன, எவ்வளவு தூரம் இம்ப்ரொவைஸ் செய்வது என்பது குறித்த பிரக்ஞை,  இசைக்கலையின் நுட்பங்கள்,  இசையின் வரலாறு,  அதன் பாரம்பரியம் எல்லாவற்றையும் கொண்ட தன் துறையின் ஆகப்பெரிய ஒரு ஜீனியஸ் அவர். மராத்தியில் தன் பார்வையை முன்வைத்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

எந்நிலையிலும்    கலைஞன் என்பவன் மந்தையிலிருந்து பிரிந்த ஒற்றை ஆடுதான். அவனுக்கு முன்னால், முன்னரே பேணப்பட்ட வசதியான வழித்தடம் இருப்பதில்லை. தானே தன் வழித்தடத்தை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு. சமூகத்தின் அத்தனை புற அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் அந்த ஒற்றை ஆடுதான், சமூகத்திற்கான கூட்டு கலைமனத்தின் அடுத்த படிநிலைக்கான வாசலையும் திறக்கிறது. கலைஞன் நமக்கு கையளிக்கும் கலையின் புதிய சாத்தியத்திற்கு நிகராக ,சமூகம் மறுபக்க தராசில் வைக்கக் கூடிய எந்த அம்சமும் இல்லை. இப்பக்கம் நம் தட்டு தாழ்வதேயில்லை.

தன் கலையை பற்றிய மிதமிஞ்சிய கர்வத்துடன் , பணம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல என்கிறார். லண்டனில் செய்த ஒரு கச்சேரி மட்டுமே நீங்கள் வெளிநாட்டில் செய்தது,  பிறகு ஏன் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் இங்கு வந்து கேட்கட்டுமே  என்று அவர் புன்னகையுடன் கூறும்போது நான் பரவசமடைகிறேன். கலைஞன் இப்படியல்லவா இருக்க வேண்டும்.

ஹிந்துஸ்தானி பாடுமுறை என்பது  துருபத், கயல், தும்ரி,பஜன் என்ற வகைமைகளைக் கொண்டதாகத்  தெரிகிறது. துருபத் என்பது கொஞ்சம் மரபான பாணி. அதிகமும் வரிகளும் , கவித்துவமும் கொண்ட கிருதிகள். நீண்ட நேரம் பாடுவார்கள். கயல்[khayal]  என்பது  தூய கலை வடிவம்.  அது நீண்ட  ஆலாபனை [ ஹிந்தியில் ஆலாப்]  முடிவில் இரண்டு , மூன்று வரிகளுடன் முடிவடையும். கயலில் மட்டுமே, கலைஞன் தன் கற்பனையின் அதிக சாத்தியங்களை அடைய முடியும் என்று சொல்லப்படுகிறது. ஒரு மணிநேரம் பாடக்கூடிய கச்சேரியில் கடைசி 5 அல்லது 10 நிமிடங்கள் சோட்டா கயல் என்று சில வரிகளை துரித கதியில் பாடுவார்கள்.  தும்ரி ,பஜன் என்பது முழுக்க , முழுக்க மெல்லிசை வடிவம்.  பஜன், தும்ரி இரண்டும் வெகுஜன மக்களும் ரசிக்கும் கலை வடிவம்.

பொதுவாக கிஷோரியின் காலத்தில், பெண்கள் தும்ரி, பஜன் போன்றவற்றை பாடுவதற்கு  எதிர்நோக்கப்பட்ட காலத்தில், இவர் தன் வெளிப்பாட்டு வடிவமாக கயலை தேர்வு செய்தார். அதில் தன் கற்பனையை விரிவாக நிகழ்த்தினார்.

எனக்கு இசையில் இரண்டு பாவங்களே தென்படுகின்றன. ஒன்று கன்னி பாவம், மற்றது  ஆதி அன்னை பாவம். கன்னி பாவத்தில் பொதுவாக தாபம், காத்திருத்தல், எண்ணி எண்ணி ஆற்றியிருக்கும் நாயகி பாவம் வெளிப்படும் . அவையே தும்ரியாகவும், பஜனாகவும்  வெளிப்படும்.  மற்ற அன்னை பாவ கீர்த்தனைகளில்  அவர் தர்பாரி கானடா, பீம்பிளாசி, ஜீவன்புரி, ராகேஷ்ரீ  போன்ற ராகங்களை அதிஅற்புதமாக கையாளுகிறார். அன்னை பாவமே அவருக்கு உகந்ததாக இருக்கிறது.  நடனத்தில் இதையே லாஸ்யத்திற்கும், தாண்டவத்திற்கும் இடையே  உள்ள வேறுபாடாகக் காணலாம். கவிதையில் இது ஆண்டாளும்{கன்னி, காதலி], ஔவையும்[அனைத்தும் கடந்த அன்னை].   ஏங்கி நிற்கும் கன்னியல்ல,  உலகு புரக்கும் அன்னை.

கிஷோரியுடைய  தாயார்  அவருக்கு மிகப் பெரிய ஆதர்சம். தன் அன்னையைப் பற்றி மிகுந்த அன்புடனும், பெருமையுடனும் நினைவு கூர்கிறார். அன்னை மோகுபாய் குர்தீர்கர் ஒரு ஹிந்துஸ்தானி பாடகி.  அவர் வாழ்க்கை  ஒரு உதாரண வாழ்க்கை.  கிஷோரியின் தந்தை 1939 ல் கிஷோரியின் ஏழாவது வயதில் இறந்து விட மூன்று  குழந்தைகளுடன் தனித்து விடப்படுகிறார் அவர் அன்னை. கையில் பணமில்லை. வறுமை. மும்பையில் பத்தடிக்கு பத்தடி வீட்டில் மிகக்  கடின வாழ்க்கை.  அந்நிலையிலும் தினமும் 10 மணி நேரம் விடாமல்  சாதகம் செய்கிறார் அவர்  அன்னை. கச்சேரிகளுக்கு செல்கிறார்.

1940 களில் தன்னுடைய பதின் பருவத்தில் அன்னையுடன் தம்புரா வாசிக்க உடன் செல்கிறார் கிஷோரி. அந்தக் காலம் இசைத் துறையில் ஆண்கள் கோலோச்சிய நேரம்.  குறைந்த சன்மானமே பெண்களுக்கு வழங்கப்படுகிறது.  இழிவு படுத்தல்கள், புறக்கணிப்பு என பல துன்பங்கள்.

கச்சேரியில் வரும் குறைந்த வருமானம் மூலம்  மூன்று  குழந்தைகளையும்  காப்பாற்றுகிறார். கிஷோரியின் அன்னை ரயிலில் , பொதுப்பெட்டியில் தூங்காமல் பயணித்து செய்த  கச்சேரிகளை  கிஷோரி தனது பேட்டியில் நினைவுகூர்கிறார்.”  நான் அன்னையின் மடியில் படுத்து தூங்கி விடுவேன். ஆனால் அன்னை உறங்காது மறுநாள் கச்சேரி செய்வார்”. ஜெய்ப்பூர் கரானா வழிவந்த சாதனையாளர்தான் மோகுபாய்.

மோகுபாய்   கிஷோரியை தானே பயிற்றுவிக்கிறார்.  ”குரு,  உன் பலமென்ன என்று உனக்கு காட்டத்தான் முடியும். நடப்பதோ, ஓடுவதோ , பறப்பதோ  உன் கையில் தான்  உள்ளது” என்கிறார்.  அன்னைக்கு தெரிந்திருக்கிறது, கிஷோரி சராசரியல்ல,  இசையில் சாதனைகளை நிகழ்த்துவார் என்று.  எனவே  பிற சிறந்த ஆசிரியர்களிடம்  கிஷோரியை அனுப்பி கற்பிக்கிறார். அஞ்சனிபாய், அன்வர் ஹுஸென், சரத் சந்திர அரோல்கர், பால்கிரிஷ்ணபுவா என பல குருவரிசை ஒவ்வொரு கரானாவுக்கும்.   கிஷோரி புகழ் பெறுகிறார். பாராட்டுக்களும், விமர்சனங்களும் சேர்ந்தே எழுகின்றன. குடும்ப வறுமை மறைகிறது.

“மம்மா,  இந்த மாதம் எனக்கு 8  கச்சேரிகள்,’” குதித்து கொண்டு சொல்கிறார் கிஷோரி.  உடனே அன்னை  ஒரு கச்சேரிக்கு  4 நாட்கள்[பயணமும் சேர்த்து].  8*4= 32. சரி , எப்போது சாதகம் செய்வாய் ? பணத்தின் பின்னால் ஓட ஆரம்பித்தால் கலையை இழப்பாய் என்கிறார். அதுவே கிஷோரிக்கு ஆப்த வாக்கியமாகிறது. ஒரு மாதத்தில் நான்கு கச்சேரிகள் மட்டுமே என முடிவெடுக்கிறார். ஹிந்தி சினிமாவில் பாட அழைக்கிறார்கள். 1964 ல் இரு படங்கள் மட்டுமே பாடினார் .  ”வேண்டாம்,  இனி நீ சினிமாவில் பாடினால் என் தம்புராவை தொடாதே” என்கிறார் மோகுபாய்.  கிஷோரி அதன் பிறகு சினிமாவில் பாடவில்லை.  ஒரு வாழ்க்கை சரிதம்[biography] எழுதப்படவேண்டிய அளவு மன உறுதி மிக்க தீரப் பெண்மணி அவர் அன்னை மோகுபாய்.

கிஷோரி  ஒரு நேர்காணலில் தாள வாத்தியமான தபலாவை இரண்டு நிமிடம்  வாசித்து காட்டுகிறார் . தாளம்  பற்றிய துல்லிய பிரக்ஞையும் , அறிவும் கிஷோரிக்கு  இருக்கிறது.

பேட்டிகளில் அவ்வளவு வெளிப்படையாக பேசுகிறார்  கிஷோரி. ”பாகேஷ்ரீ ராகத்தை பாட ஆரம்பிக்கும்போது நான் சந்தோஷமாக ஆரம்பித்தாலும், முடிக்கும்போது மிகுந்த சோகத்திற்குள்ளாகி விடுவேன். அன்று இரவுக்குள் என்னால் அதிலிருந்து  வெளிவர முடியாது ”என்கிறார்.  பூப் ராகத்தை பற்றி அவர்  கூறுவது ஒரு கவிதை போல் உள்ளது. “பூப் ராகம் ஒரு அரசன், ஆனால் அரசன் தன் குழந்தையை கையில் ஏந்தும் கணம் அவன் அரசனல்ல, தந்தை.  அவ்வளவு கனிவு  அவனிடம் வருகிறது. அந்த கனிவு, ஆனால் அவன் அரசனும் கூட.  இந்த complexity யை நான் பாடும்போது  அடையவேண்டும்” என்கிறார்.

கிஷோரி அவரே எழுதி, இசையமைத்து பாடிய “சஹேலாரே” என்ற நான்கு வரி கீர்த்தனை மிகப் புகழ்பெற்றது. அதன் அர்த்தமும், கவித்துவமும் என்னை என்றும் மலரச் செய்வது.

சஹேலா  ரே ஆ மில் காயின்

சப்த ஸ்வரன் கே பேத் சுனாயின்

ஜனம் ஜனம் கோ சேஸ் நா பூலேயின்

ஆப்கே மைலே டு பிச்சட் நா ஜயின்

சஹேலாரே…..

தோழி,  நாம் இணைந்து பாடுவோம்

ஏழு ஸ்வரங்களின் அறியாத மர்மங்களை

பிறவி பிறவிதோறும் இந்த இசைவை

மறக்காமலிருப்போம். 

சந்தித்தோம், ஒருபோதும் பிரியாமலிருப்போம்.

அன்றாட வாழ்வில் அவரின் கொந்தளிப்பான உளநிலையை மீறி ,அவர் கலையில் அடையும் இந்த பரிவு, கனிவு   என்னை என்றுமே பரவசப்படுத்துகிறது.               .

மீரா பஜன், தும்ரி போன்ற மெல்லிசை வடிவங்களை எப்படி அணுகுகிறீர்கள் எனும்போது, இசையின் வழி இறைவனை அடைந்தவள்  மீரா.  நானும் அவ்வாறே அடைய விரும்புகிறேன் என்கிறார்.[ I  love to sing bhajans].   

ஒரு பேட்டி முழுவதும் ஹிந்தியில் நடக்கிறது. பால்கனியில் , ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறார். மெல்ல ஆடியபடியே  பேசிக்கொண்டிருக்கும் அவர் முகத்தில் அஸ்தமன சூரியனின் ஒளி விழுகிறது. அவர் பேசும் ஒரு வார்த்தை கூட எனக்கு புரியவில்லை.  ஆனால் மதிமயங்கி , புலனழிந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.  ஹிந்தி மொழிக்கு இவ்வளவு அழகுண்டா? அவர் பேசுவதனாலேயே அத்தனை அழகாகிறது அம்மொழி.  கலைஞனின் மனம் கண்களில் வெளிப்படும் அல்லவா?  அந்தக் கண்கள் என்னை வெகுவாக மயக்கின. உள்ளேயுள்ள கலையின் கடலாழம் தன்னை கண் வழியே சிறிய அலைகளாக நிகழ்த்திக் கொண்டிருந்தது. என் மனம் அவர் பாதங்களில் ஓடிப் பணிந்தது.  அன்னை கிஷோரிக்கு   என்  வணக்கம்.

14 thoughts on “அன்னையின் பாடல் – கிஷோரி அமோன்கர்

  1. அன்பின் அருணா
    என்ன அற்புதமான கட்டுரை! 🤍
    அப்பாவின் அறுவை சிகிச்சையொன்றின் பொருட்டு ஒரு மருத்துவமனையிலிருக்கிறேன். அப்பா சிகிச்சையின் பொருட்டு மருத்துவரிடம் சென்றபின்னர் நான் மட்டும் இருந்த தனியறையில் முழுதும் வாசித்து பாடல்களை மீள மீள கேட்டேன். அறையின் விளக்குகளை அணைத்து ஜன்னல் திரைச்சீலைகளையும் இறக்கி அரையிருளில் கேட்கையில் வேறுஒரு அனுபவத்தை அளித்தது பாடல்கள். இசைக்கு என்னையும் எனக்கு இசையையும் அத்தனை தெரியாது உண்மையில். இசையின் நுட்பங்களை பாணிகளையெல்லாம் நீங்கள் எளிமையாக எனக்கே புரியும்படி விளக்கியிருக்கிறுர்கள். ஆம் அன்னையின் இசைதான் கிஷோரியுடையது. ஆற்றுப்படுத்தும்குரல் அரவணைக்கும் குரல் தாலாட்டும்குரல் கண்ணீரை துடைக்கும் குரல் மொழி புரியவில்லை ஆனால் அன்னையின் மொழியது. பிள்ளைகளுக்கு புரியும்.
    ஆலாபனையின் கமஹங்களால் என்னை முக்கி திணறடித்தார். சில சமயம் நடுக்கடலில் தூக்கி எறிந்தார்//
    //ஒரு பேரிருப்பாக,  ஒரு சாந்நித்தியமாக , ஒரு தழுவலாக, ஒரு வருடலாக  , மனதோடு உரையாடும் மூச்சொலியாக, வந்து என்னை ஆற்றுப்படுத்தினார்.//
    எத்தனை அழகாக பொருத்தமாக உண்மையாக உணர்ந்ததை சொல்லிட்டீங்கன்னு பிரமித்து விட்டேன்.இருதயத்திலிருந்து எழுதியவை இந்த வரிகள். Beautiful lines.

    காற்றில் மிதக்கும் ஒற்றை சிறகு ,  வானில்  வட்டமிட்டு  கீழிறங்கும் பருந்து, அலையில் மிதக்கும் தனித்த தோணி, விழுதாய் இறங்கும் சர்க்கரை பாகு என்னென்ன சித்திரங்கள் என் மனதில்.  என் தர்க்கமனம் என்னை முழுதாய் கைவிடும் தருணம்.// Hugs dear Aruna mam
    சர்க்கரைப்பாகுதான்
    கிஷோரி கண்டிப்பான அன்னையும் ஆசிரியையும்போலத்தான் தோற்றமளிக்கிறார். நீண்டமுகம் காதுவளையங்கள் பெரிய திலகம். எனக்கு காது வளையங்கள் அணிந்துகொள்ளும் பெண்கள் மீதுதனித்த அன்புண்டு
    முதுகலை பல்கழைக்கழகத்தில் படிக்கையில் வானொலியில் இரவுகளில் இந்துஸ்தானி இசையை கேட்டதுண்டு. மொழிக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட நிறைவு அது
    சமரசம் செய்துகொள்ளாத பிடிவாதம் மிகுந்த நுட்பமான ரசனையும் அதிசயத்தக்க திறமையும் நுண்ணுணர்வும் கண்டிப்பும் கனிவும் அன்னைமையும் கலந்த ஆளுமையான கிஷோரியை அவரின் அற்புதஇசையை ,இசையின் மீதான உங்களின் உள்ளார்ந்த பிரேமையில் தோய்த்து எழுதியஇந்தப்பதிவிற்கு அன்பும் வாழ்த்துக்களும் அருணா

    Liked by 1 person

  2. அன்னையின் பாடலுக்கு மிக்க நன்றி. இளம் வாசகர்களுக்கு கிஷோரி அமோன்கரை அறிமுகப்படுத்தியதற்கு மீண்டும் நன்றிகள் .

    Like

  3. Thanks for introducing hindustani music.My knowledge is of listening to film song’s, like mogaleazam andsome hindustaniusic based film song’s.Now I feel I can make attempt,to listen to orthodox music.

    Like

  4. அன்பு சகோதரி, அருமையான ஆரம்பம். நீங்கள் எழுதிய காவிரியும் குஞ்சிதமய்யர் வாழ்வும் அருமை. ‌‌‌‌திஜாவை நினைவூட்டியது‌. தொடரும் கிஷோரி அமோன்கர் இசை அட்டகாசம். ஏதேது. ஆசான் ஜெயமோகனை மிஞ்சி விடுவீர்கள் போலிருக்கிறதே. வாழ்த்துக்கள். எண்ணங்களை, நிகழ்வுகளை மேன்மேலும் பகிருங்கள்.
    வாழ்த்துக்கள்.

    Like

  5. thank u madam. I am listening now the mesmerizing voice .continue to listen and cherish the music of Kishori Amma

    Like

  6. Madam , Another nice article on music with music.

    Are you sure about the role of Bhava in carnatic music?

    There is always a reference to raga bhavam ,sahitya bhavam and bhakthi bhavam
    Even Semmangudi was supposed to make up his lack of voice felicity with bhavam.

    thanks

    Like

  7. அருமையான கட்டுரை மேடம்..உங்கள் தளத்தின் தலைப்புக்கு நியாயம் செய்யும் எழுத்து…காதும் மனதும் நிறைந்தது..அந்தக் காலத்தில் அகில இந்திய வானொலி ‘ஆகாஷ்வானி சங்கீத சம்மேள’னில், அந்தக் கால குண்டு பல்புகளில் ஒளிர்ந்த இரவுகளில் ஒலித்த இசையை நினைவு படுத்தியது. வாழ்த்துக்கள். அப்படியே, ஒரு இலக்கிய சாம்ராட்டுக்கு மனைவியாய் இருப்பதன் சுக(?) துக்கங்களையும் வரும் கட்டுரைகளில் பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

    Like

  8. ஒரு காட்டில் இரண்டு சிங்கங்கள் இருக்க முடியாது;
    ஓர் உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது;
    தமிழில் பொய்யுரைகளும் உண்டு போலும்.

    Like

  9. அப்பா நாதஸ்வர வித்துவான். கர்நாடக இசை மிகவும் அணுக்கமானது. சீர்காழி கோவிந்தராஜனின் ராகம் தானம் பல்லவி மற்றும் அவரது முருகன் பக்தி பாடல்கள், ஜேசுதாஸ் பாலமுரளி கிருஷ்ணா மற்றும் மதுரை சோமு இவர்கள்தாம் அடிக்கடி கேட்கும் பாடகர்கள். ஹிந்துஸ்தானி இசை கேட்க முயன்று ரசிக்க முடியவில்லை. ஆனால் நீங்கள் அறிமுகம் செய்துள்ள கிஷோரி அமோன்கர் பாடலை நன்றாக ரசிக்க முடிகிறது. மிக்க நன்றி.

    Like

  10. ஹிந்துஸ்தானி இசை பெரிதாகக் கேட்டதில்லை. ஏதோ கல்லூரி காலத்தில் சௌராசியா, சிவகுமார் ஷர்மா என்று சிலர் வந்து lecdem கொடுத்ததைக் கேட்டதோடு சரி. கிஷோரி அமோன்கரின் குரல் முதல் நொடியிலேயே கட்டிப் போட்டுவிட்டது. மணி போன்ற குரல். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    Like

  11. இசை கசிந்து தவழ்ந்து அடைந்து ஒழுகி உள் நுழைந்து உங்களுக்குள் நிகழ்த்திய கிளர்ச்சிகளை எப்படி வார்த்தைகளாய் மொழி மாற்றம் செய்தீர்கள் அம்மா ?
    உங்கள் எழுத்தாற்றலை வியக்கிறேன்
    கானப்ரியன்

    Like

Leave a comment