அன்னையின் பாடல் – கிஷோரி அமோன்கர்: பழனி ஜோதி

அன்புள்ள அருணா அக்கா,

வணக்கம். ஆழமான, ஆத்மார்த்தமான கட்டுரை.

இசை அனுபவத்தை, ரசனையை எழுத்தில் கொண்டு வருவது அத்தனை எளிதல்ல. அதிலும் நம் அன்றாட சூழலில் புழக்கத்திலில்லாத இசையையோ கலையையோ பற்றிக் கூற முயல்வது மிகச் சவாலானது. குறிப்பாக பல அடுக்குகள் கொண்ட செவ்வியல் இசையைப் பற்றி எழுதுவது சிறு பரிசலில் பெருங்கடலைக் கடப்பதற்கு இணையானது. ஒரே கட்டுரையில் ஹிந்துஸ்தானி  இசை பற்றிய அறிமுகத்திலிருந்து துவங்கி, அந்த இசையின் சிக்கலான அடுக்குகள், அந்தக் கலைஞரின் பலபரிமாண ஆளுமை, இசையில் அவர் நிகழ்த்தும் நுட்பங்கள், அவரின் தனித்துவம், அந்த இசை கேட்பவரில் நிகழ்த்தும் மாயம், இத்தகைய நுண்கலைகளின் வழி நாம் அடையும் தரிசனம் என ஒரு பெரும் பரப்பை சிக்கலில்லாத மொழியில் ஒரு தேர்ந்த ஓவியன் கை தூரிகை என தீட்டியிருக்கிறீர்கள்.

நம் சூழலில் எழுதப்படும் பெரும்பான்மையான செவ்வியல் இசை விமர்சன மற்றும் அனுபவக் கட்டுரைகள் பெரும்பாலும் ரசனையின் மெய்யான ஆழங்களைச் சென்று தொடுவதில்லை. ஒன்று, இசையின் நுட்பங்களை விளக்குவதாக நினைத்து அதன் இலக்கணத்தையும், கணக்கு வழக்குகளையும் வறட்சியான மொழியில் சுற்றிச் சுற்றி வரும். இவ்வகைக் கட்டுரைகள் செவ்வியல் இசை கேட்க வரும் புதியவர்களை ’உனக்கு இதெல்லாம் புரிய இன்னும் சில பல பிறப்புகள் தேவைப்படலாம்’ என்று பூச்சாண்டி காண்பிக்கும். இரண்டாவது வகை ஜனரஞ்சகமாக சொல்வதாக நினைத்து வறண்ட உவமைகளால் நிரம்பி, மத்யமாவதியை மசால் தோசையுடன்  ஒப்பிடும் மொழியில் எழுதப்பட்டிருக்கும். இசை நமக்குள் நிகழ்த்தும் அகப்பயணத்தை, உணர்வெழுச்சியை சொல்ல இயல்வது அதற்கிணையான படிமங்களால், உருவகங்களால் அமைந்த மொழியால் மட்டுமே. வலிந்து திணிக்காத மிகத் பொருத்தமான உவமைகளால்  கிஷோரிஜியின் இசையால் நீங்கள் அடைந்த அகப்பயணத்தைத் துல்லியமாகக் கடத்தியிருக்கிறது. மந்தையிலிருந்து பிரிந்த ஒற்றை ஆடு, காற்றில் மிதக்கும் ஒற்றை இறகு, குரலால் ஏந்தப்படும் குழந்தை என கவித்துவமான உவமைகளால் கிஷோரிஜி கேட்பவரின் அகத்தோடு பேசும் வித்தையை  நுட்பமாகச் சொல்லிச் சென்றிருக்கிறது. அன்னையின் இசை போலவே இந்தக் கட்டுரையும் இசை விரும்பும் வாசகர்களின் மனதோடு மூச்சொலியாக உரையாடும்.

கிஷோரிஜியின் ஆளுமை அவரின் இசையில் செலுத்திய ஆதிக்கத்தை அவரின் வாழ்க்கையை நீங்கள் அறிந்து கொள்ள நிகழ்த்திய பயணம் மூலம் சொல்லிவிட்டீர்கள். வாசிக்கும் போது, சுழித்தோடும் ஒரு நதியின் கரையோரம் நடந்து அதன் ஊற்றுமுகத்தை தரிசிக்கும் உணர்வைத் தந்தது. மும்பையின் பத்துக்குப் பத்து அறையில் சூல் கொண்ட இவரது இசையை சரியான திசையில் மடை மாற்றிய பேரன்னை மோகுபாயின் சித்திரம் அபாரம். சம்பிரதாயமான இசைக் கட்டுரைகள் இதைச் செய்வதில்லை. மிகச் சரியாக பின்னிய விததால், இசை அவரையும், அவர் இசையையும் வளர்த்தெடுத்தது ஒரு கதை போல விரிந்திருக்கிறது. கிஷோரிஜியின் கொந்தளிக்கும் அகத்திற்கு தனித்தனி கரானாக்களின் பரப்பு கையளவு நிலமாகத் தெரிந்ததில் வியப்பேதுமில்லை. காற்றை எவரும் ஒரிடத்தில் தளைத்து விட முடியுமா என்ன? கரானாக்களின் சுவற்றை உடைத்து எங்கும் நிறையும் காற்றாய் அவர் தன் பாணியை வகுத்துக் கொண்டது இசை ரசிகர்களின் நல்லூழே. புயலாய், அனலாய் சுழன்றெழும் அவரின் அகத் தேடல் இசையாய் வெளிவரும் போது மட்டும் குளிர் தென்றலாய் அரவணைப்பதின் உருமாற்றத்தை கவிதையாய் சொல்லிச் செல்கிறது உங்கள் கட்டுரை. தும்ரியும் பஜனும் பாடும் போது கன்னி; கயாலும், கீர்த்தனைகளும் பாடும் போது அன்னை. வெறும் அன்னையல்ல. உலகு புரக்கும் அன்னை. அற்புதமான அவதானிப்பு!

எப்போதோ அதிக சிரத்தையின்றி கேட்டுக் கடந்து போன கிஷோரியன்னையின் இசையை என்னுள் உயிர்த்தெழ வைத்துவிட்டது இந்தக் கட்டுரை. இரண்டு நாட்களாக இரவும் பகலும் அவரின் இசை உள்ளும் புறமுமாகச் சுழன்று கொண்டேயிருக்கிறது. இப்போதும் பின்னணியில் அவரின் ஹம்ஸத்வனி துருத் கயால் – ஆஜ் சஜன் சங் மிலன் லூப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. தலைவி தலைவனின் வருகையை எதிர் நோக்கி அழகிய மலர்கொண்டு தொடுத்த மாலைகளைக் கொண்டுவரச் சொல்லும் பாடல். மலர்களின் நிறங்களையும் மென்மையயும் வெல்லும் கமகங்களால் அடுக்கி மாலைகளைத் தொடுத்தவண்ணமிருக்கிறார். குறுந்தொகைப் பாடலின் தலைவி ஹிந்தியில் தன் தலைவனை எதிர்கொள்ளக் காத்திருந்தால் இப்படித்தான் பித்தெழுந்து பாடியிருப்பாள். ஆனால் ஏதோவொரு புள்ளியில் அந்த தலைவி மறைந்து, கிஷொரிஜியும் மறைந்து, சுற்றியுள்ள அனைத்தும் கரைந்து இசை மட்டுமேயாக நிறைந்திருக்கும் மாயக்கணம் ஒன்றை எழுப்பி நிறைக்கிறார். ஊழ்கத்தில் இமை மூடி இசை உதிர்க்கும் பிரிந்த உதடுகளுடன் காலத்தில் உறைந்த அவரின் கருப்பு வெள்ளைப் புகைப்படம் கனவுக்குள் மெல்ல அமிழ்த்திய வண்ணமிருக்கிறது.

பழனி ஜோதி

கலைஞர்கள் கை நழுவி தவறவிட்டால் சிதறிப்போகும் மெல்லிய முட்டை போன்றவர்கள். மென்மையான சிறகுகளின் கதகதப்பில் பொத்தி பாதுகாத்தால் அது மலர்ந்து வானையளக்கும் உன்னதப் பறவை உயிர் கொண்டு சிறகு விரித்தெழுகின்றது. அப்படித் தரையிறங்காமல் வானம் தனதென்று பறந்த ஒரு கம்பீரமான பறவையை மிக அருகிலென விரல் பற்றி கூட்டிச் சென்று காட்டியிருக்கிறீர்கள்.  நுண்ணிய இசை ரசனையும், அவதானிப்பும், ஆழ்ந்த இலக்கிய வாசிப்பும், தான் கண்டடைந்ததைக் கவித்துவமான மொழியில் எழுத முடிவதும் எல்லோருக்கும் கைகூடுவதில்லை. உங்களில் கைகூடியிருக்கிறது. காடே பூத்து மதுவூறி  நின்றாலும் தேனீயால் மட்டுமே பூக்களின் இனிதின் இனிதைத் தேனாகத் தர முடியும். உங்கள் எழுத்தால் தொடர்ந்து பலரை நல்ல இசை நோக்கி ஆற்றுப்படுத்த வாழ்த்துக்கள். தேனீயாய்ப் பறந்துகொண்டேயிருங்கள் அருணா அக்கா! நெஞ்சார்ந்த நன்றி!

அன்புடன்,

பழனி ஜோதி

நியூஜெர்சி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s