பறக்கும் புரவியின் குளம்போசை

கடந்த  சில  மாதங்களாகவே  ஹிந்துஸ்தானி  இசையை   தேடித் தேடி   கேட்டுக் கொண்டிருப்பதால், என்னுடைய  யூ டுயூப்  பரிந்துரையில் [recommendation ] தானாகவே  ஒரு கான்செர்ட்  வந்து  நின்றது.  வெளி நாட்டில் , அனேகமாக  போலந்தின் க்ரகொவ்  நகரத்தில்  நடந்த ஒரு மணிநேர  இசை நிகழ்ச்சி . தபலா இசைக் கலைஞர்  ஜாகிர் ஹுசேனும்,  புல்லாங்குழல் இசைக் கலைஞர் ராகேஷ்  சௌரஸ்யாவும் இணைந்து  நிகழ்த்தியது.  ராகேஷ்,  ஹரி பிரஸாத் சௌரஸ்யாவின்  மகனாக   இருக்குமோ  என இணையத்தில் தேடியதில் அவருடைய மருமகன்,  பிரதான சிஷ்யன் எனக் காட்டியது.  சரி,  அதைக்  கேட்கலாம்   என  நான்  முடிவெடுத்த   கணம் ஒரு பொற்கணமாகத்தான்  இருக்க  வேண்டும். எல்லாவிதத்திலும்  என்னை நிறைவுறச்செய்த  ஒரு நிகழ்வு.

முதலில் என் மனதை நிறைத்தது, அந்த அரங்க வடிவமைப்பும், ஒளி அமைப்பும். எப்படிப் பட்ட அரங்கம் அது. அதை வடிவமைத்தவன் அழகுணர்ச்சி மிக்கவனாகவும், கலைஞனின் மனதையும், ரசிகனின் மனதையும் அறிந்தவனாகவே இருப்பான். அரங்கம், பார்வையாளர் பகுதி, நிகழ்ச்சி நடக்கும் பகுதி என இரு சம பகுதிகளாக பிரிக்கப் பட்டிருந்தது. பார்வையாளர் பகுதி முழு இருளில்[ மிகக் குறைந்த ஒளியில்] இருக்க, இசைக் கலைஞர்களுக்கு இவ்வளவு இடம் எதற்கு என யோசித்த மறுகணமே அந்த வடிவமைப்பு தரும் அழகை, தனிமையை, ஆசுவாசத்தை உணர ஆரம்பித்து விட்டேன்.

அந்தப் பெரிய இடத்தில் ஒரு சிறிய செவ்வக மேடை. இருவர் அமர்ந்து, இசைக்கருவிகள் வாசிக்க போதுமானதாக இருந்தது. மைக் , மூன்று தபலாக்கள் ஹுசேனுக்கு,  குழலும், மைக்கும் ராகேஷ்க்கு. குறுக்கும் , நெடுக்கும் போய் தொந்தரவு செய்யும் வயர்கள், சௌண்ட் பாக்ஸ்கள், இதர கருவிகள் எதுவும் இல்லை. செவ்வக மேடைக்கு மட்டும் மேலிருந்து பிரத்யேக வட்ட ஒளி, அவர்களுக்கு பின்புறம் இருட்டு. ஆங்காங்கே சிறு, சிறு திட்டுகளாக மிதமான ஒளி. சுருதி வாசிப்பவர் கூட முழு இருளில் இருப்பதை சிறிது நேரம் கழித்தே உணர்ந்தேன். எத்தனை ரசனையான அரங்கம். ஓபெரா நடக்கும் அரங்கு போல. அந்த மிதமான ஒளியில், கலைஞர்கள் எவ்வளவு இலகுவாக, சகஜமாக உணர்கிறார்கள் என்பது தெரிகிறது.  நம் ஊரில் C F L , L E D விளக்குகளின் மிதமிஞ்சிய ஒளி முகத்தில் அறைகிறது. கண்கூசும் ஒளியை எந்த மேலைநாட்டவரும் விரும்புவதில்லை. எல்லா இடத்திலும் மிதமான ஒளிதான்.

ஒலிப்பதிவு அத்தனை துல்லியம், தபலாவில் விரல் வைத்து உரசும் ஒலி விம்மென்று எழுகிறது. அதேபோல் இசைக் கலைஞர்களின் இமை முடிகள், விரல் நகங்களின் பளபளப்பு கூட தெரியுமளவு ஒளிப்பதிவும் நேர்த்தி. மேடைக்கலை என்பது இதுதான், ஒரு சிறந்த அழகியல் அனுபவம் தரும் நிறைவு.

பெரும்பாலானவர்களைப் போல , எனக்கும் ஜாகிர் ஹுசேன் , தாஜ் டீ விளம்பரம் வழியாகத் தான் அறிமுகமானார்.  நான் கல்லூரி மூன்றாம் வருடம் படிக்கும்போது அந்த விளம்பரம் வந்ததாக ஞாபகம். தாஜ் மஹாலின் முன்பு ஒரு சிறுவனோடு அமர்ந்து, துரித தாளத்தில் தபலா வாசிப்பார். டீயை குடித்துவிட்டு “ வாஹ் , தாஜ் ”என்பார். கலைந்தாடும் கேசமும், சிறுவர்களுக்கே உரிய குதூகல சிரிப்புமாக , அவ்வளவு அழகு ஜாகிர். அதைப் பார்க்கவே காத்திருப்போம் அந்த விளம்பரம் வரும்வரை. இப்போதும், இந்த அறுபத்தைந்து வயதிலும் அப்புன்னகையில் அதே குதூகலம்.

இருவரும் மேடையேறி ,பரஸ்பரம் புன்னகைத்து,  வணங்கி அமர்கிறார்கள். அங்கிருந்த சிறிய தண்ணீர் பாட்டிலை குழல்போல் வைத்து விளையாட்டாக அபிநயம் பிடிக்கிறார் ஜாகிர். கொஞ்சம் பதட்டத்தோடு இருந்த, இளையவரான ராகேஷ் சிரித்து இலகுவாகிறார். புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்ததும் வேறு உலகத்துக்கு கொண்டு செல்கிறது இசை. குழலிசையின் முதல் எட்டு நிமிடங்கள் கண்மூடி, அதைக்கேட்டபடி அமர்ந்திருக்கிறார் ஜாகிர். பிறகு மெல்ல தபலாவை வருடி விம்ம வைத்து, ஒரு விரல் தாளத்துடன் உடனிணைகிறார் . படிப்படியாக , முழுமையாக தபலா இணைகிறது.

நம் ஆதி மனித இசை குழலிசைதான் என்று எனக்குத் தோன்றும். பிறகுதான் தாளம் வந்து இணைந்திருக்கும். குழல் ஆதி  இசைக்கருவியாக இருந்திருக்கலாம். ஆசியா, குறிப்பாக தெற்காசியாவின் மிக முக்கிய இசைக்கருவி புல்லாங்குழல். குழலிசையின் உச்சம் தொட்ட நாடுகள் ஜப்பானும், சீனாவும் என்கிறார்கள். இதன் பரிணாமத்தை உணர்வது எளிது. மூங்கில் பயிராகும் நாடுகளில் எல்லாம் குழலிசை உள்ளது.

ஒரு சிறிய மூங்கில் குழாய், அதில் சில துளைகள், கலைஞன் தன் மூச்சுக் காற்றால் இத்தனை இனிய இசையை எழுப்புகிறான் என்பது என் சிறு வயதில் இருந்தே என்னை பிரமிக்கச் செய்த ஒன்று.  நமக்கு, நம் பரம்பொருள் இசைத்த இசை. வேணுகானம் தந்த கார்மேகவண்ணன்.  நம் நனவிலியிலேயே அதன்மீதுள்ள பிரேமை தோன்றியிருக்கவேண்டும்.

ராகேஷின் குழலோசை தத்தி தத்தி பறக்கும் பறவையின் குரலைக் கொண்டு ஒரு அழகிய இசைக் கோலத்தை வரைகிறது. பதினைந்தாவது நிமிடத்திலிருந்து ஜாகிரில் ஏதோ ஒன்று குடியேறுவதை உணரமுடிகிறது. பதினெட்டாவது நிமிடத்திலிருந்து தாளமும், குழலும் முழுவதும் ஒத்திசைகின்றன. திருமணமான சில வருடங்களில் கணவன் மனைவியிடம் வரும் பூரண ஒத்திசைவு போல. அந்த உரையாடல் மிக அழகாக நிகழ்கிறது. குழல் பெண், தாளம் ஆண் என நான் உருவகித்துக் கொண்டேன். இந்த குழலிசையில் சோகம் துளியும் இல்லை. பெண்ணுக்கு துள்ளல் தான் எப்போதும், சில சமயம் ஆணிடம் கொஞ்சுகிறது, குழைகிறது. ஆண் புன்னகைத்தபடி தழுவிக் கொள்கிறது. பெண் முறையிடுகிறது, செல்லக் கோபம் கொள்கிறது, ஆண் ஆற்றுப் படுத்துகிறது.

ஜாகிர் முழுமையாக  கண்மூடி, புருவங்கள் முடிச்சிட, ஒரு பக்கம் தலைசாய்த்து தன்னுள் ஆழ்ந்து வாசிக்கிறார். தாளத்தின் ஒரு பகுதியாகவே, தொய்வடையும் தோல் பரப்பை சிறு சுத்தியலால் சரிசெய்கிறார். முப்பத்தாறாவது நிமிடத்திலிருந்து தபலா தனி ஆவர்த்தனம் தொடங்குகிறது. தாள வாத்யத்துக்கு இத்தனை அழகுண்டா, தாளம் இப்படியும் மயக்குமா, கட்டிப் போடுகிறது நம்மை. ஒரு இசைத் தெய்வம் அவரில் குடியேறுவதுபோல,  அடுத்த 15 நிமிடங்கள் ஒரு அவதாரம் எடுக்கிறார் ஜாகிர். எதிரில் பார்க்கிறார், ஆனால் அது ரசிகர்களை அல்ல, மேடைக்கு முன்பு அமர்ந்திருக்கும் இசை பேரிருப்பை பார்ப்பதைபோல. கண்கள் முற்றிலும் மாறி விடுகின்றன. கலைஞனில், கலை நிகழும் அந்த மந்திர கணத்தை நாம் பார்ப்பது இசைக் கலைஞனிடம் மட்டுமே. இசை ,ஒரு நிகழ்த்துகலையும் கூட இல்லையா? ஓவியனையோ, கவிஞனையோ நாம் பார்க்க வாய்ப்பதில்லை.

தன்னுள் மூழ்கி அவர் வாசிக்கையில் அரங்கம் இல்லை, மேடை இல்லை,  அவரும் தபலாவும் மட்டுமே, அது கூட இல்லை, தாளமும் அவரும் மட்டுமே. மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். ராகேஷ் ,அவரில் கலை திகழ்வதை பார்த்து புன்னகைத்து பூரிக்கிறார். ஒரு இடத்தில், ஜாகிர் ஜதியை வாயால் சொல்கிறார். என்ன விரைவு. விரல்களின் துடிப்பு விரைந்து ஓடும் குதிரைக் குளம்படியை ஒத்திருக்கின்றன. பின்னர் இருவரும் இணைகின்றனர். முடித்ததும் வணங்கி பின்னகர்கின்றனர். பிறகு ஜாகிர் அந்த மாலை நிகழ்வை, பிறந்து ஐந்து நாட்களே ஆன  தன் பேத்தி ஸாராவுக்கு சமர்ப்பணம் செய்கிறார். சபை பலத்த கரகோஷத்துடன் எழுந்து நின்று வாழ்த்துகிறது. பார்வையாளர்களின் விருப்பத்திற்கிணங்க, ஒரு வட இந்திய நாட்டுப்புற இசையை இருவரும் வாசிக்கின்றனர். நிகழ்ச்சி இனிதே முடிகிறது. ஒரு கோடி பார்வையாளர்களுக்கும் மேல் பார்த்த ஒரு யூ டுயூப் நிகழ்ச்சி இது. பலரும் பார்த்திருக்கலாம். ஆனால் என் பரவசத்தை நான் பகிர வேண்டும் எனத் தோன்றியது.

இதன் பிறகு தொடர்ச்சியாக,  ஜாகிர் ஹுசேனுடன் fusion இசை வாசித்த பலரையும் கேட்டேன். குறிப்பாக பண்டிட் ரவிசங்கர், சந்தூர் இசைக் கலைஞர் ஷிவ்குமார் ஷர்மா, ராகுல் ஷர்மா என நீண்டு கொண்டே செல்கிறது பட்டியல். ஹிந்துஸ்தானி பல வாசல்களை எனக்கு திறந்து தருகிறது. புதியது அறிமுகமாவதன்  பரவசத்தில் நித்தமும் திளைக்கிறேன்.

One thought on “பறக்கும் புரவியின் குளம்போசை

 1. அருமை அருமை. இப்படி இசையை குறித்து உருகி உருகி எழுதிகூடவே உடனே பார்க்கும்படி காணொளியைம் இணைத்திருப்பது சிறப்பு. வாசித்த கையோடுசுடச்சுட கேட்க முடிகிது. ஆம் குழலிசையே முன்னதாக வந்திருக்கும்.குழலிசை செவியில் நுழையாமல். நேரடியாக இதயத்தாலேயே கேட்கும்படியான இசையோ என ஒருமயக்கம்.
  ரகசியமாக ப்ரத்யேகமாக எனக்கே எனக்கென்று வாசிக்கப்படுவதை போல ஒரு பிரமை.யளிக்கிறது. ஜப்பானில் மூங்கில் காடுகளிலிருந்துபுறப்பட்டு வரும் இசையை பாதுகாக்கப்பட்ட நூறுஒலிகளில் ஒன்றாக வைத்திருக்கிறார்கள். மேடையமைப்பு நீங்கள் சொன்னது போலபிரமாதம் கனவுலகு போலிருக்கிறது. அம்மேடையில் நம்மை பார்த்து “எப்படியிருக்கிறீர்கள்” என்று கேட்டாலே பரவசமாக இருக்குமென்று தோண்றியது. அத்தனை அற்புத மேடையில் அதியுன்னமானஇசையை கேட்பதென்பது கொடுப்பினைதான்.
  இசையை ராகத்தை பற்றி மட்டும் சொல்லாமல் ஆளுமைகளை அவர்கள் உங்களுக்கெப்படி அறிமுகமென்பதை எல்லாம் சொல்லியிருப்பதால் எதோஒரு முழுமையான நிறைவு உண்டாகின்றது கட்டுரையை வாசித்துஇசையைகேட்கையில்
  சாராவுக்கான அந்த “ஹேப்பி பர்த்டே ” சிறப்பு
  நன்றி அருணா. இந்நாளை இனிதாக்கினீர்கள்

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s