பறக்கும் புரவியின் குளம்போசை: கடிதங்கள் – 2

அன்புள்ள அருண்மொழி அவர்களுக்கு,

வணக்கம்!

உங்களுடைய இசை பற்றிய கட்டுரைகளை படித்ததும் உவகையடைந்தேன். கர்நாடகசங்கீதமும், ஹிந்துஸ்தானி சங்கீதமும் உங்கள் மனதைகொள்ளை கொண்டது போலத்தான் எனக்கும். உங்களுடைய வர்ணனை அழகாக இருக்கிறது. கிஷோரி அமோன்கர் பற்றி பேசியவுடன்  மனதிற்கு மிகவும் நெருக்கமாகி விட்டீர்கள்.  அத்துடன் கவ்வாலி, கஜல், அபங் பற்றியும் ஆர்வமுண்டா?”நீங்கள் சிறுவயதிலிருந்து இசை கேட்டு வளர்ந்த கதை சொன்னீர்கள். இசையை முறையாகக் கற்கும் வாய்ப்பு கிடைத்ததா? ஜாகீர் ஹுசேனின் அந்த கச்சேரியைநான் சென்ற வருடம் என் கணவரோடு கேட்டு சிலிர்த்திருக்கிறேன். “விரல்களின் துடிப்பு விரைந்து ஓடும் குதிரைக் குளம்படியை ஒத்திருக்கின்றன” என்று நீங்கள் கூறிய வர்ணனை மிகச் சரி.வட நாட்டவர்கள் மானினம் வேகமாகத் துள்ளி ஓடுவதை கூறி ஒப்பிடுவார்கள்.இசைக்கச்சேரியை வார்த்தைகளில் இவ்வளவு அழகாக வார்த்தெடுத்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்களுடன் என் அன்பும்!

இஷ்ரஜ் கணேசன்

அன்புள்ள இஷ்ரஜ் அவர்களுக்கு , 

வணக்கம். உங்கள் கடிதம் உவகையளித்தது.

நான் சாஸ்திரீய இசை பயின்றவளில்லை. ஒரு ஆர்வம் சிறுவயது முதலே உண்டு. முறைப்படி கேட்க சந்தர்ப்பம் வாய்த்ததே 1993-1996. ஆவலோடு கேட்டிருக்கிறேன். அதன்பிறகு இப்போது கொஞ்சம் ஹிந்துஸ்தானி. எல்லாமே அறிமுக அளவில் தான்.    சொல்லப்போனால் நான் முதல்படியில் நின்றிருப்பவளாகவே என்னை உணர்கிறேன். நிறைய தூரம் போகவேண்டும். 

என் பரவசத்தை என்னைப் போல் ஆர்வமும், ஆனால் தயக்கமும் உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கம் மட்டும்தான்.

மிக்க அன்புடன்,

அருண்மொழி.

***

தலைப்புகளே கவித்துவமாக உள்ளது. “அன்னையின் பாடல்” “பறக்கும் புரவியின் குளம்போசை”….

பொதுவாக இசை நிகழ்வுகளை பற்றி எழுதுபவர்கள், இசையின் நுட்பங்களையும், அதை அந்த ஆளுமை வெளிப்படுத்தும் விதத்தையும், சில ஒப்பிடுகளையும், தன் ரசனையையும் மற்ற சில இசை கோட்பாடுகளையும் விவரிப்பார்கள். இவை அந்த இசையை பற்றி அறிதல் உள்ளவர்களுக்கு உகந்ததாய் இருக்கும்.

என் போல் இசை என்றால் வெறும் சினிமா பாடல்கள் என்று உள்ளவர்களுக்கு மேற்சொன்ன கட்டுரைகள் ஒன்றுமே புரியாது. ஷாஜி சில அற்புதமான இசை தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளார்( அதில் சில சார் மொழிபெயர்த்தது) ஆனால் அதில் மொத்தமாக ஓர் இசை கலைஞனின் ஆளுமையை முன்வைப்பார்.

உங்களின் எழுத்து முற்றிலும் வேறு தளத்தில் உள்ளது. இசையை வெறும் உணர்வுப்பூர்வமாக மட்டும் அணுகுவது. இசை கேட்கையில் தான் அடையும் அனுபவத்தை எழுத்தின் மூலம் மற்றவர்களும் அனுபவிக்க செய்வது.

குறிப்பாக ஜாகிர் ஹுசேன் இசை நிகழ்ச்சி. ஓர் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை உருவாகிவிட்டிர்கள். மிகச்சிறப்பான விவரிப்பு. உங்கள் கட்டுரையை வாசித்த பிறகு நிகழ்ச்சியை பார்த்ததால் எனக்கும் அதே உணர்வா அல்லது உண்மையில் அது அப்படித்தானா என்று தெரியவில்லை. (அடுத்தமுறை வீடியோவை பார்த்துவிட்டு கட்டுரையை படிக்கலாம் என்று இருக்கிறேன்😊)

உங்கள் எழுத்தின் முக்கிய அம்சமாக நான் கருதுவது, சார் ரின் பாதிப்பு இல்லாமல் உங்களுக்கென்று ஒரு தனி நடை உருவாகியிருப்பது. அவரின் எழுத்தை இவ்வளவு தீவிரமாக படித்துக்கொண்டு ஆனால் அவரின் சாயல் வராமல் பார்த்துக்கொள்வது ஒரு பெரிய சவால்.

வாழ்த்துக்கள்,

செந்தில், அட்வகேட், சென்னை.

***

சிறப்பாக வந்திருக்கிறது அக்கா ! குழலோசை பற்றிய அவதானிப்பு, அழகு.

சுவரங்களைத் தாண்டிய ஒரு அழகு ஜப்பானிய, சீன குழலிசையில் இருப்பதாக எனக்குத் தோன்றும். அதேபோல், செவ்விந்தியர்கள் குழலிசையும் மயக்கும். இவை எல்லாமே, தனக்கென்று ஒரு தனி நாதத்தை கொண்டிருக்கும்.

எனக்கு பான்சுரி என்னும் வட இந்திய குழலும் பிடிக்கும்.

இன்னொரு ரசனையான கட்டுரை!

ஜாகீர், கேட்பதற்கும் பார்ப்பதற்கும் உன்னதமான கலைஞன்! அந்த குழந்தைத் தனம் இன்னும் அவரிடம் இருப்பதே பல விஷயங்களை சொல்கிறது.

அவருடைய ஆளுமை கட்டுரையில் நன்றாக வந்திருக்கிறது!

ராஜன் சோமசுந்தரம்

***

இனிய அருணாக்கா,

நேற்று இரவு உங்கள் பறக்கும் புரவியின் குளம்போசை கட்டுரையில் இணைக்கப்பட்டிருந்த பண்டிட் ஜாகிர் உசேன் பண்டிட் ராகேஷ் அவர்களின் சேர்ந்திசையை மீண்டும் கேட்டேன்.

கட்டுரையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, தொழில் நுட்பம் ‘அடிக்கோடிட்டு’ கலை அனுபவத்துக்கு அளிக்கும் ‘மேலதிகமான ஒன்று’ குறித்தது.

இது எப்போதுமே என்னை வசீகரிக்கும் அம்சம். மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் இணைகயில் கலை அதற்கான ரசிகனின் மனதை ஊடுருவி செல்லும் ஆழம் இன்னும் கூடுகிறது என்றே சொல்வேன்.

எனது பால்யத்தின் பெரும்பாலான இரவுகள் எங்கள் பொடி கடை எதிரே உள்ள திரை அரங்கில்தான் கழிந்தது. எங்கள் கடையில் வணிகத்துக்கு வெளியே சென்ற முகவர்கள் எல்லாம் வந்து கணக்கு முடித்து கடை மூட பெரும்பாலும் இரவு 12. 30 ஆகி விடும். நான் அதுவரை அரங்கத்தில் (அங்கே எல்லோரும் அப்பாவின் நண்பர்கள்) ஆப்ரேட்டர் அறையில் அமர்ந்து நாங்கள் உருவாக்கி காட்டும் மாய ஒளி ஒலி உலகில் கூட்டம் கட்டுண்டு கிடப்பதை பார்திருப்பேன்.

சினிமா ஸ்கோப் முதல் dts துவங்கி இன்றைய முப்பரிமானம் டால்பி அட்மாஸ் ஒலி வரை அதன் பரிமாண வளர்ச்சியை அருகே இருந்து அது அளிக்கும் உவகையை உணர்ந்திருக்கிறேன்.

“ச்சத்தமெல்லாம் அந்தனைக்கி துண்டா கேக்கு லே… ஒவொண்ணு பீக்கரும் தனித்தனியா பாட்டு படிக்கி லே”

என் மாப்பிளை முதன் முதலாக dts ஒலியில் படம் பார்த்து விட்டு வெளியே வந்து பரவசத்தில் பகிர்ந்த சொல் இது.

வெகு ஜனம் மத்தியில் இந்த ஒலி தொழில் நுட்பம் குறித்த போதம் இரண்டு படங்கள் வழியே விதைக்கப்பட்டது. முதல் படம் ஷோலே . மூன்று முதல் ஆறு ஸ்டீரியோ பாதைகள் வழியே ஒலியை பிரித்து அரங்குக்குள் முப்பரிமாண சூழல் உணர்வை கொண்டு வந்தது அப்படம்.

இரண்டாவது படம் ப்ரியா. அப்போது சென்னை போன்ற நகரம் தவிர வேறு எங்கும் அரங்கத்தில்் stereo வசதி கிடையாது. ரெகார்ட் பிளேயரில் ஒலி கேட்பதில் ஒரு புரட்சியை கொண்டு வந்தது அப்பட பாடல்கள்.

பின்னர் எனது இளமையில் பெரும் பொருட் செலவில் பாடல் பதிவகம் ஒன்றை நிறுவி நடத்துகயில் இந்த தொழில்நுட்பம் சார்ந்து இளையராஜா என்ன என்ன எல்லாம் செய்தாரோ அதை இன்னும் அணுக்கமாக அறிந்தேன்.

ராஜா ஒரு விதத்தில் மிக தெளிவாக வேலை பார்திருக்கிரார். அவர் செய்யும் ஒலி அமைப்பு வெளியே வெகு ஜனம் பொதுவாக கேட்க்கையில் எந்த வகையில் சென்று சேரும் என்று கவனம் எடுத்து பெரும்பாலான பாடல்களை கொண்டு வந்திருக்கிரார். தொழில் நுட்பம் மாறுகையில் பல பாடல்கள் சோபை இழந்ததை கண்டேன். உதாரணமாக எஜமான் பட பாடல். அந்த பாடல்களை முள் எழுதும் இசை பேசும் தட்டுகளாக பிலிப்ஸ்ல் கேட்கையில் தபேலா வெளியிட்ட உயிர் மூச்சு, கேசட்டில் cd இல் கேட்கும்போது சோபை இழந்து இரும்பால் செய்த நுரையீரலுக்கான மூச்சு போல கேட்க வாய்த்தது.

ஷாஜி இது சார்ந்து நாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா என்றொரு நல்ல கட்டுரை எழுதி இருக்கிறார். இன்று அத்தனை தொழில் நுட்பமும் நாம் ‘சரியாக’ கேட்க கூடிய இசை எனும் நிலைக்கு மிகுந்த அருகே வந்து விட்டது.

முன்பு பண்டிட் ரவி ஷங்கர் ஒலிப்பதிவு செய்யும் காணொளி கண்டேன். எல்லா வாதியங்களும் ஒன்றன் மேல் ஒன்று படிந்து கேட்கும் மோனோ ஒலிப்பதிவு முறை. அறைக்குள் மின்விசிறி ஓடினால் மொத்த ஒலிப் பதிவையும் அது சிதரடித்து விடும். ஆகவே மின்விசிறி அற்ற அறையில் வேர்த்து ஒழுக் இயக்கிக் கொண்டு இருக்கிறார். அங்கிருந்து குவரண்டைன் பிரம் ரியாலிட்டி ஒலிப்பதிவு நிலைக்கு பரிணமித்து வந்திருக்கிறது தொழில்நுட்பம். இந்த தம்தன தம்தன பாடலில் ஒவ்வொரு குரலும் கோரஸ் உட்பட வாத்தியங்களும் எதன் மேலும் ஓவர் லெப் ஆகாமல் ஒவ்வொரு இழையும் துல்லியமாக கேட்கிறது. இதில் உள்ள ஒவ்வொருவரும் உலகின் வெவ்வேறு பகுதியில் இருந்து செய்தது இது. தொழில்நுட்பத்தின் சாதகமும் தொழில்நுட்பத்தால் அடிக்கோடிடப்படும் கலையால் ரசிகன் பெறுவது மேலாதிகம் என்பதன் சான்று.

அதனினும் துல்லியம் வெளிநாட்டில் வந்து விட்டது. Bianural sound முறையிலான ஒலிப்பதிவு அவர்களின் சிம்பனி கேட்கும் நிலையை வேறு உயரங்களுக்கு கொண்டு சென்று விட்டது.

இணையாகவே அதை கேட்கும் மொபைல் கருவியில் இருக்கும் டால்பி ஜெட் போன்ற ஒலி நிரலிகள் இவற்றுடன் இணைந்து வேறு விதமான மாயா ஜாலத்தை நிகழ்த்திக் காட்டுகின்றன.

இந்த தொழில்நுட்ப பின்னணி வழியே இசை வாத்தியங்கள் ஒவ்வொன்றும் கொள்ளும் மேலதிக அழகை ஒவ்வொரு வாத்தியமாக பல பத்து இரவுகள் முழுக்க முழுக்க அதில் திளைத்திருக்கிறேன்.

இந்த வரிசையில் என் அகத்துக்கு மிக அணுக்கமானது தொட்டு தொட்டு இசை கிளர்த்தும் வாத்தியத்தில் தபேலா. முத்தி முத்தி இசை கிளர்த்தும் வாத்தியத்தில் பான்சூரி குழல். மீட்டி மீட்டி இசை கிளர்த்தும் வாத்தியத்தில் ருத்ர வீணை மற்றும் சித்தார்.

இந்த ஒவ்வொரு வாத்திய இசை மேன்மை குறித்தும் பல நூறு பக்கம் சொல்வதற்கு இருக்கிறது என்றும் ஒரு சொல் கூட சொல்லாக எழுதி விட முடியாது என்றும் ஒரே சமயத்தில் தோன்றும்.

குறிப்பாக தபேலா. இளையராஜாவின் மெல்லிசைகள் வழியாகவே எனக்கு அறிமுகம் ஆனது. தபேலாவின் உயிர்த் துடிப்பு பாடல் மொத்தத்தையும் ஜீவன் கொண்டதாக மாற்றியது. பின்பு இன்னும் நெருங்கி கேட்க சலில் சௌத்ரி அவர்கள்தான் தபேலாவின் எந்த அம்சம் உயிரோட்டம் கொண்டது என்பதை எனக்கு நெருக்கமாக உணர்த்தினார். உதாரணமாக உள்ளமெல்லாம் தள்ளாடுத்தே பாடலின் பல்லவி பின்னணியிலும், பூ வண்ணம் போல நெஞ்சம் பாடலின் சரணத்தின் பின்னணியிலும் எழும் தபேலா இசை. ஒப்பு நோக்க இளையராஜா மிக குறைவான பாடல்களில் மட்டுமே அந்த உயரத்தை சென்று தொட்டிருக்கிறார்.

இந்த உயிரோட்டம் உண்மையில் அது கலைஞனின் விரல்கள் கிளர்த்துவதா அல்லது தபேலா என்பது தனித்ததொரு உயிர் ராசியா என்ற குழப்பம் எனக்கு எப்போதும் உண்டு. ஒரு தபேலா செய்வதை அருகே இருந்து பார்த்ததில் இந்த குழப்பம் இன்னும் கூடியது. தச்சனின் கைகளை கடன் வாங்கி எழுந்து வரும் உயிர்ப் பொருள் என்றே அந்த தபேலா பார்வைக்கு தோன்றியது.

இந்தியாவின் 2000 வருட இசை பாரம்பரியதுடன் இணைந்த தபேலா என்ற இரு முக முழவுக்கு கடந்த 400 வருடங்களித்தான் இதனை ரசிகர்கள். இந்த இரு முகத்தின் வலது பாகத்தின் பெயர் பயா. இடது பாகத்தின் பெயர் தயா. பயா 400 வருடங்கள் முன்பெல்லாம் முழுக்க முழுக்க கடம் போல மண்ணில் வணயப்பட்டு இருக்கிறது. இப்போதும் பல பயாக்கள் அவ்விதம் உண்டு. தயாக்கள் எந்த மரத்தில் செய்யப் பட்டாலும் தோல் கட்டி வார் இழுப்பதான் நுட்பம் வழியே அதை பயா உடன் ஒத்திசைவு கொள்ள வைத்து விட முடியும். இங்கே பண்ரூட்டியில் தயா செய்பவர்கள் உண்டு. தோல் கட்டி வார் இழுப்பவர்கள் திருவாரூர் பக்கம் நிறைய உண்டு. முழவின் மையத்தில் இருக்கும் கருப்பு வட்டம் குறிப்பிட்ட மாவு ஒன்றை (அது தொழில் ரகசியமாம்) தண்ணீருடன் கலந்து முழவின் தோல் பரப்பில் பூசி உருவாக்குவது. அந்த கலவைக்கு திருவாரூரில் ‘சோறு’ என்று பெயர். பிறகென்ன தபேலா உயிர் ஜீவன் தானே 🙂

இந்த உயிர் ஜீவனுடன் இணைந்து களி கொள் கலைஞன் எத்தனையோ பேர் இருக்க, ஜாகிர் எங்கே தனித்துவம் கொள்கிறார்?

அரூபமான நமது உள் இருப்பை ரூபமாக்கி, அந்த ரூபத்தின் களி நடனத்தை நம்மை நாமே தனது விரல்கள் வழியே காணச் செய்பவர் ஜாகிர். சில தருணங்களில் அங்கே ஜாகிர் இல்லை. நாமும் இல்லை. முழவின் நடனமாக நமது உள்ளிருப்பு மட்டுமே இருக்கும் கணம் வாய்க்கிறது. ஜாகிர் எனும் அந்த இசை அரசன் ஏதோ ஒரு பொற் கணத்தில் தானிருக்கும் அந்த இசை ராஜங்கத்தின் சிம்மாசனத்தில் நம்மையும் கைபிடித்து இழுத்து உயர்த்தி அருகே இருத்திக் கொள்ளுகிறார்.

இவருடன் பான்சூரி குழலும் சேர்ந்தால்?

உண்மையில் குழல் என்பது நியாண்டர்த்தால் மனிதர்கள் வசமிருந்தே தொடரும் ஒன்று. மேலை மானுடவியல் வெண் தோல் வேந்தர்களை அவ்வுண்மை தொந்தரவு செய்வதால் அது இன்னும் சர்சைக்குள்லேயே இருக்கிறது.

ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்ட கரடி எலும்பில் செய்த முதல் குழலுக்கு வயது 45 000. ஜெர்மனியில் மலை கழுகு எலும்பில் செய்து கண்டெடுக்கப்பட்ட குழலுக்கு 35000 வயது.

இந்தியாவில் க்ரிஷ்ணன் குழலுடன் இணைந்தே அறிய படும் அளவு கந்தன் அவ்வாறு அறிய படுவதில்லை. கந்தனும் குழல் விற்பன்னர் என்பது கிருபானந்த வாரியார் இலக்கிய சான்றுகள் வழியே நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றில் உண்டு.

சங்க இலக்கியம் குறள் இவற்றில் காணப்படும் குழல் இதோ ஜெயமோகனின் நீலம் வரை தொடர்கிறது. நான் நீலத்தில் க்ரிஷ்ணன் ஊதும் குழலை பான்சூரி குழல் என்றே கற்பனையில் வைத்திருக்கிறேன். அந்த இசையை ஹரிப்ரஸாத் சௌரஸ்யா இசையுடன் இணைத்தே உள்ளுணர்ந்திருக்கிறேன்.
பேலூர் ஹாலபேடு கோவில்களின் வேணு கோபாலன் கையில் இருப்பது பான்சூரி வகை குழல்தான்.

உங்கள் காணொளியில் உள்ள ராகேஷ் துவங்கி பிரவீன் காட்கிண்தி, ரோனு மஜூம்தார், சஷாங் என்று பல மேதைகள் பான்சூரி வகை குழல் இசையில் இருக்க, ஹரி பிரசாத் இன் தனித்துவம் என்ன ?

அடிப்படையில் இந்த பான்சூரி வகை குழல் ‘காட்டுத் தனமானது’ என்ற உணர்வு எனக்கு உண்டு. இதன் கார்வை காமத்துடன் அந்த உணர்வுடன் நேரடியாக பிணைந்தது. ஹரிப்ரஸாத் இன் குழல் இசை எனும் பறவைக்கு உள்ள இரண்டு சிறகுகளில் ஒன்று காட்டுத் தனமானது.
மற்றது தெய்வீகமானது.
இந்த இரு சிறகுகள் கொண்டு இசை வெளி அளக்கும் அந்த பறவையின் மத்திம மார்க்க அழகை முத்தி முத்தி மீட்டி மீட்டி அதன் சிகரத்தில் நிற்கையில் நிகழ்த்திக் காட்டும் மேதை ஹரி பிரசாத்.

இந்த இரண்டு மேதைகளையும் நேற்று இரவு முழுக்க உங்கள் கட்டுரை வழியே சென்று மீண்டும் மீண்டும் கேட்டேன்.

நண்பர்கள் சொந்தங்கள் என முகம் காணாமல் விதி வழி சென்று கொண்டே இருக்கும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இரவுகளில் அவர்கள் நினைவுக்கு ஈடாக, நண்பர்களே சொந்தங்களே உங்களை நினைத்துக் கொள்கிறேன் என்ற அவர்களுக்கான என் செய்தியை
இந்த இசை ராஜாக்கள் அவர்கள் வாழும் சொர்க்கத்தில் கொண்டு சேர்ப்பார்கள்.
ஆம் மண்ணில் கால் ஊன்று எழுந்து விண்ணில் திகழும் சொர்க்கம் அல்லவா இசை.😊

கடலூர் சீனு

***

One thought on “பறக்கும் புரவியின் குளம்போசை: கடிதங்கள் – 2

  1. கடலூர் சீனு – “Binaural” literally means “having or relating to two ears.”

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s