கண்ணீரும், கனவும்

அது  ஒரு ஞாயிற்றுக்கிழமை. அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். முதன் முதலாக குமுதத்தில் வந்த , வாஸந்தி எழுதிய ஒரு சிறுகதையை முழுவதுமாக வாசித்தேன். பெயர் நினைவில்லை. அக்கதை என்னை புரட்டிப் போட்டது. கதையின் சாராம்சம் இதுதான். ஒரு கிராமத்து ஏரிக்கரைக்கு சுற்றுலா வரும் ஒரு பணக்கார, பெரிய வட இந்திய குடும்பம் விரிப்பு விரித்து, பலவித தயாரித்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு, சீட்டாடிவிட்டு , விளையாடிவிட்டு செல்கிறது. அவர்களுக்கு அருகில் ஆடுமேய்க்கும் ஒரு சிறுமி, குடிதண்ணீர் கொண்டுவந்து கொடுத்து உதவுகிறாள். அவளுக்கும், இக்குடும்பத்தின் பணக்கார குட்டிப் பெண்ணுக்கும் இடையே  ஒரு நல்ல புரிதலும், நட்பும் உருவாகிறது. கடைசியில் அவர்கள் போகும்போது , மீதமான எல்லா உணவையும் கொட்டிக்கவிழ்த்து , அவளுடைய பாத்திரத்தில் இட்டு சென்றுவிடுகிறார்கள். கிட்டத்தட்ட எச்சில்சோறு. அப்பெண் , அவர்கள் போவதை கலங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். இப்பக்கம் அவள் பணக்காரத் தோழியும் அழுகிறாள். குடும்பம் கண்டுகொள்வதில்லை.

அக்கதை என்னை நிலைகுலைய வைத்தது. நெடுநேரம் .நினைத்து, நினைத்து அழுதுகொண்டிருந்தேன். எட்டு வயது அருண்மொழி முதல்முறையாக, பிறருக்காக சிந்திய கண்ணீர். அதுவரை குமுதம், விகடனில் வரும் ஜோக்குகள், சிறிய குறிப்புகள், ரத்னபாலா, கோகுலத்தில் வரும் சிறார் கதைகளை விரும்பி படித்துக் கொண்டிருந்தேன். இதைத் தவிர காமிக்ஸ் எனும் வகைமைகளையும் படித்துத் தள்ளிக் கொண்டிருந்தேன் . அதிலும் சாகச கதைகளில் வரும் இரும்புக்கை மாயாவி, இன்னபிற சாகச கதாநாயகர்களை விட , துப்பறியும் சாம்பு வரும்   காமிக்ஸ் புத்தகங்கள் என் பிரியத்திற்குகந்தவையாக  இருந்தன.  சாம்பு கொஞ்சம் அசமஞ்சம்.  கூட இருக்கும் சிறுவனும், நாயும் அதி புத்திசாலிகள். அவர்கள் உதவியால் சாம்பு மாமா துப்பறிந்து விடுவார்.

அதன்பிறகு மிகுந்த ஆர்வத்துடன்  கதைகள் வாசிக்கத் தொடங்கினேன். கதைகளில் இந்துமதி, வாஸந்தி, சிவசங்கரி, மூவரும் ஒரே மாதிரியாக எழுதினார்கள். குடும்ப கதைகள், காதல் கதைகள் என. ஆனால் சுஜாதா மட்டும் வித்யாசமாக எழுதினார். வளர, வளர எனக்கு சுஜாதா மிக உவப்பானவராக இருந்தார்.

எங்கள் வீட்டில் விகடன், குமுதம் இரண்டும் வாங்குவோம். பள்ளியில் அம்மாவும், பிற டீச்சர்களும் இக்கதைகளைப்  பற்றியே உரையாடிக் கொள்வார்கள். நான் அதைக் கேட்டுக் கொண்டு நின்றால், என் அம்மா “ பெரியவுங்க பேசிக்கிறத வாய் பாக்காத”  என்று அதட்டுவார். அப்போது குமுதம் , விகடன்  இரண்டிலும் சுஜாதாவின் ”கரையெல்லாம் செண்பகப்பூ” வும், ”கொலையுதிர் காலமு’ம் தொடராக வந்து, எல்லோராலும் பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டது.

சுஜாதாவின் எழுத்தின் வழியாக, பல அறிவியல்  தகவல்களை அறிந்து கொண்டேன். ஸ்டெல்லெட்டோ என்ற ஒரு கத்தி உள்ளது. அதை வைத்து கீறிவிட்டால் இரத்தம் உறையாமல் இறந்து விடுவார்கள். அது விரலிடுக்கில் மறைத்துக் கொள்ளும் அளவு சிறியது. இப்படியாக பல தகவல்களை, நட்பு வட்டத்தில் கசியவிட்டு பெரிய ஆளாகிக் கொண்டிருப்பேன். வாய்பிளந்து கேட்கும் கூட்டம் என்னைச் சுற்றி இருக்க, மிகப் பெருமிதமாக உணர்வேன். சொந்தசரக்கையும் கலந்து அடித்துவிடுவேன்.

கொலையுதிர் கால ஹீரோயின் “லீனா” என் ஆதர்ச நாயகி. என்ன அழகான பெயர். எனக்கும்தான் வைத்திருக்கிறாரே என் அப்பா, சொல்லி முடிப்பதற்குள் மூச்சு வாங்குகிறது. என் பெயரை நான் மிக, மிக வெறுத்தேன். என் பெயர், எனக்கு பிடித்தமானதாக ஆக 1991 வரை நான் காத்திருக்க வேண்டியிருந்தது. “ உன் பெயரை நான் மந்திரம்போல் உச்சரிக்கிறேன்” என்று அவர் கடிதம் எழுதிய பிறகே, எனக்கு என் பெயர் பிடித்தமானதாக ஆனது.

லீனாவை,  ஜெயராஜ் மாடர்ன் கேர்ள் ஆக, அழகாக வரைந்திருப்பார். அவள் ரத்தம் நீல நிறமாக இருக்கும். நடுராத்திரியில், பயப்படாமல் சுடுகாட்டிற்கு போவாள். ஒரு அமானுஷ்யப் பிறவிதான் அவள். ஒவ்வொரு வாரமும் உச்சகட்ட திகிலில் நிறுத்தி தொடரும் போடுவார் சுஜாதா. அடுத்த வாரம் வரை நிலைகொள்ளாது. போஸ்ட்மேன் குமரன் அண்ணனை, பாலத்தின் கலுங்கருகே எதிர்கொண்டு நிறுத்தி, குமுதம், விகடனை வாங்கி பாலத்தில் அமர்ந்து படித்துவிட்டு ,சாவகாசமாக வீட்டிற்கு வருவேன். பிறகு அம்மா, அப்பா படித்து இரண்டு, மூன்று வீடு சுற்றியே கைக்கு வந்து சேரும்.

அதில் வரும் நகைச்சுவைகள், கணேஷ் , வசந்த் உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அதுவும் வசந்த், அந்த மெக்சிகன் சலவைக்காரி ஜோக்கை கடைசி வரை சொல்லவே மாட்டான். மறுபுறம் பெண் எழுத்தாளர்கள், குடும்ப வாழ்வு, மாமியார் கொடுமை, காதல் என்று எழுதிக் கொண்டிருந்தனர்.  காதல் என்பது ஆணும் , பெண்ணும் பெரியவர்களான பிறகு வரும் உணர்வு என்றும், ஒரு ஆண் ,ஒரு பெண்ணைத் தொட்டால் அவளுக்கு  ஷாக் அடித்தால் அது காதலென்றும் என் குட்டி மண்டை புரிந்து வைத்திருந்தது. ஆனால் இதையெல்லாம் பிறரிடம் பகிரக் கூடாதென்றும் அந்த குட்டிமண்டைக்கு தெரிந்திருந்தது.

இப்பிடியாக போய்க் கொண்டிருந்த எனக்கு, முழுப்புத்தகமாக ராணிமுத்து வெளியீட்டு நாவல்கள் கிடைக்க ஆரம்பித்து தேடித் தேடி , வீடு வீடாக சென்று படித்தேன். அக்காக்களிடம் நச்சரித்து வாங்கி, சனி, ஞாயிறுகளில் தென்னந்தோப்புகளில் அமர்ந்து படித்தேன். பைண்ட் செய்யப்பட்ட பல தொடர்கதை பொக்கிஷங்களும் எனக்கு கிடைத்த வண்ணமிருந்தன. ஆறு, ஏழு வகுப்புகளில் படிக்கும்போது , முழு நாவலாக படித்ததில் கல்கி, சாண்டில்யன் என்னை அவ்வளவாக கவரவில்லை. ஆனால் ஸ்டெல்லா புருஸ், மகரிஷி,  பி. வி.ஆர்,  ஸ்ரீ வேணுகோபாலன் ஆகியோர் மிகவும் கவர்ந்தனர். ஸ்டெல்லா புரூஸின் “அது ஒரு நிலாக்காலம்” மகரிஷியின் “நதியைத் தேடி வந்த கடல்” வேணுகோபாலன் எழுதிய ”திருவரங்கன் உலா”  “சுவர்ணமுகி”  சிவசங்கரியின் “ஒரு மனிதனின் கதை” ஆகியவை மிகவும் கவர்ந்தவை. படித்து தள்ளியதில், மனதில் நின்றவை இவை மட்டுமே எனும்போது, அவற்றில் வணிக அம்சத்தை மீறிய ஏதோ ஒன்று இருந்ததாக எனக்குத் தோன்றுகிறது. பிறகு ஜெயகாந்தன் மிக முக்கிய தாக்கத்தை என்னில் ஏற்படுத்தினார்.

இதற்கிடையில் அப்பா, நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதிருந்து துக்ளக்கும், சோவியத் இதழ்களும் வாங்க ஆரம்பித்தார். துக்ளக்கில் சோ அப்போது, எல்லா அரசியல்வாதிகளையும் கடுமையாகத் தாக்குவார். இந்திரா, எம்.ஜி.ஆர், கொ.ப.செ ஜயலலிதா , கருணாநிதி என்று  எல்லோரையும் சகட்டுமேனிக்கு காய்ச்சுவார். கேள்வி , பதில் பகுதியில் , கார்ட்டூனில், கிண்டல் கரைபுரண்டு ஓடும். படித்து, படித்து சிரிப்போம். அதில் வரும் அருண்ஷோரி, குல்தீப் நய்யார் கட்டுரைகளை விரும்பி படிப்பேன். துக்ளக்கில் ஒரு தொடரும் வந்தது. ”கூவம் நதிக் கரையினிலே” என்று.  ஒரு ஐயர் தெரியாத்தனமாக கட்சி ஆரம்பித்து விடுவார். நிறைய குளறுபடிகள்.  சற்று விவரம் குறைந்த ஐயருக்கு, அதிபுத்திசாலியான ஜக்கு என்ற பேட்டை ரவுடி அந்தரங்க ஆலோசகராக இருப்பான். ”இன்னா ஐயிரே, பேமானி மாரி முளிக்காதே” என்று அதிகாரத்துடன் அதட்டியபடியே ஆலோசனை சொல்வான். குருட்டாம் போக்கில் இவர் ஜெயித்தும் விடுவார். இந்திராவுடன் சீட் ஒதுக்கீடு சம்பந்தமாக, ஐயர்  உரையாடும் இடம் உச்சகட்ட நகைச்சுவை.

பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையிலும்,  கல்லூரி முதலாமாண்டும் என் வாசிப்பு வேறு திசையில் பயணித்தது. வீட்டில் எல்லோர் பேரிலும்  நூலக உறுப்பினர் அட்டை இருந்ததால் , நூல்களை அள்ளிக் கொண்டு வருவான் என் தம்பி. வானம்பாடி கவிஞர்களின் கவிதைகள்  மேல், எனக்கு பித்தெழுந்த ஒரு  காலகட்டம். அப்துல் ரஹுமான், மு. மேத்தா, நா. காமராசன், மீரா, வைரமுத்து, அபி என்று அனைத்துத் தொகுப்புக்களையும் படித்துத் தள்ளினேன். அவற்றில் அபி அவர்களின்” மௌனத்தின் நாவுகள்’ தொகுப்பும் இருந்தது. மழையில் நனையாமல் வரும் கொசு போல ஊடே புகுந்து வெளிவந்து விட்டேன். தம்பியிடம்” இவர் கவிதைகள் மட்டும் புரியல.  ஆனா நல்ல கவிதை போல இருக்கு” என்றேன்.

சுஜாதா

பிறகு ஒரு வகைதொகை இல்லாமல் ,சோமலெ எழுதிய நூல்கள், ஏ.கே.செட்டியாரின் பயண நூல்கள்,  லேனா தமிழ்வாணனின் நம்பிக்கை நூல்கள், நா.பா, அகிலன், தொடங்கி ரமணி சந்திரன் வரை ,  ராஜேஷ் குமார் தொடங்கி  பட்டுக்கோட்டை பிரபாகர் வரை சமூக மற்றும் துப்பறியும் நாவல்களாக வாசித்து தள்ளினேன்.  சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? அறிவியல் கேள்வி பதில்கள் ஜுனியர் விகடனில் தொடராக வந்தது. அறிவியல் சம்பந்தமாக என்பதால் அதையும் விரும்பி படித்தேன்.

சுஜாதா, அவ்வப்போது சிறுபத்திரிகை பற்றி குறிப்பிடுவார். ஒரு பேட்டியில் அசோகமித்ரன் பெயரை சொல்லி அவரை writer” s  writer என்று கூறியிருந்தார். சுஜாதாவே குறிப்பிடும் அவர் பெரிய எழுத்தாளராகத்தான் இருக்க வேண்டும். அப்துல் ரஹ்மான், ஒரு கட்டுரையில் தனது ஆதர்ச எழுத்தாளர் சுந்தர ராமசாமி என்றும் , பிடித்த நாவல் ’ஒரு புளிய மரத்தின் கதை’ என்றும் கூறியிருந்தார். பெயர்களே மிகப் புதுமையாக ஒலித்தன. என் தம்பியிடம் தேடிப்பார்க்க சொன்னேன். அவன் உதட்டைப் பிதுக்கியபடி வந்தான்.

இரண்டாம் வருடம் கல்லூரியில் படிக்கும்போது ,கல்லூரியின் பெயர் மாற்றம் தொடர்பாக ஒரு ஸ்டிரைக் வந்தது. புரட்சி மனநிலையை வெளிப்படுத்த ஒரு அரிய சந்தர்ப்பம்.. தேமேயென்று இருந்த  எங்கள் பசங்களுக்கு  கூட வீரமும், ஆவேசமும் வந்து  கண்டன ஆர்ப்பாட்டம், வகுப்புகளை காலவரையின்றி புறக்கணிப்பது, உண்ணாவிரதம் என்று  போராட்டம் தீவிரம் கொண்டது. கல்லூரி விடுதியின் மெஸ் மூடிவிட்டதால், உண்மையிலேயே உண்ணாவிரதம் தான். காண்டீனும் பூட்டப்பட்டது. கலங்கிப் போனோம். இரண்டாம் நாளே சோர்வு ஆட்கொண்டது. மதுரை ஒத்தக்கடைக்கு அடுத்த பேருந்து நிறுத்தமான மலையாளத்தாம் பட்டி எங்கள் கல்லூரி வளாகம் இருந்த இடம். அது தனித்த 150 ஏக்கர்களைக் கொண்ட பெரிய வளாகம். எதற்கும் வழியில்லை. அம்மா செய்து தந்த அதிரசம், முறுக்கு, பொட்டுக் கடலை உருண்டையை [பொட்டுகடலை மாவு, சீனி, நெய் சேர்த்து செய்வது] இரவு உண்டு, தண்ணீர் குடித்து நானும், என் தோழிகள் கலைச் செல்வி, அமுதாவும் சமாளித்தோம். இந்த தகவல் பக்கத்து ரூம்களுக்கு கசிந்து, எல்லோரும் படையெடுக்க மறுநாளே எல்லாம் காலி.

நேரமே போகாமல் சோர்வும், சலிப்பும் ஆட்கொண்ட அந்த நேரத்தில், ஒரு சீனியர் அக்கா ,அவர் பாலகுமாரனின் அதி தீவிர ரசிகை,  மெர்க்குரிப்பூக்கள்,  இரும்புக் குதிரைகள், கரையோர முதலைகள்  மூன்று நாவல்களையும்  தந்தார். எல்லாவற்றிலும் கதாநாயகனுக்கு , திருமணத்தை மீறிய ஒரு உறவொன்று ஏற்படும். அந்தப் பெண் அறிவு ஜீவி, மனைவி அசமஞ்சம்.  இதே வழக்கமான பாணியை  பாலகுமாரன் பயன்படுத்தியிருப்பார்.. அதுவும் சலித்தது. ஆனால் இரும்புக் குதிரை நாயகி ஞானக்கூத்தனின் கவிதையை விரும்பிப் படிப்பாள். எனக்கும் தமிழ்தான் மூச்சு, அதை பிறர் மேல் விடமாட்டேன்,  ’அம்மாவின் பொய்கள்’ என்ற முழுக்கவிதையும் சொல்வாள். அதுவரை ஓசை மிகுந்த கவிதைகளையே படித்த எனக்கு, இவரது  அடங்கிய தொனி கவிதைகள் பிடித்தன. தேடுதல் பட்டியலில் அ.மி., சு.ரா, வுடன்  மூன்றாவது நபரும் சேர்ந்து விட்டார். பொதுவெளியில் காணக்கிடைக்காத இவர்கள் நக்சலைட் எழுத்தாளர்களோ, குறுங்குழு போல் இயங்குவார்களோ என்ற சந்தேகம் எனக்கு பலமாக வந்தது. 

அப்போதுதான், தினமணியில் ஐராவதம் மஹாதேவன் ஆசிரியராக வந்தார். அவர்   தமிழ்மணி என்ற இலக்கிய இணைப்பை வெள்ளிதோறும் கொண்டுவந்தார். தமிழ்மணி இலக்கியஇணைப்பு,  தமிழ் தீவிர இலக்கிய உலகுக்கு ஆற்றிய பணி மகத்தானது. என்ன அதிசயம், அதில் அசோகமித்ரன், சுந்தர ராமசாமி இருவரும் கட்டுரை எழுதியிருந்தனர். ஒருகணம் பரவசத்தில் என் கண் மங்கித் தெளிந்தது.

அசோகமித்ரன் கட்டுரை “மோபி டிக்” நாவலைப் பற்றியது. மிக, மிக தீவிரமான ,,அழகான மொழியில் ஆன கட்டுரை. உடனே மோபிடிக் படிக்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும் கட்டுரை. இந்த அடங்கிய தொனியில், வாசகர்களுக்கு எப்படி அந்த உணர்வை கடத்துகிறார். சும்மாவா சொன்னார் சுஜாதா ”எழுத்தாளர்களின் எழுத்தாளர் ”என்று. சு.ராவும் தீவிர இலக்கியம் பற்றி எழுதி, பல எழுத்தாளர்களின் பெயரை குறிப்பிட்டு இருந்தார். புதுமைப் பித்தன், மௌனி, க.நா.சு,  தி.ஜா, லா.ச.ரா, ஆ.மாதவன் என்று என் பட்டியல் நீண்டது.

இதற்கிடையில் ,அந்த சீனியர் அக்கா என் நச்சரிப்பு பொறுக்க முடியாமல்,  ஒரு சிறுகதைத் தொகுப்பை என்னிடம் கொடுத்து ”தோ பார், இது ரொம்ப போரடிக்கும். ட்ராகிங்,  வேற ஒன்னுமே இல்லன்னா, படிச்சு பாரு” என்றார். அது அ.மி யின் விமோசனம் தொகுப்பு. அவர் பெயரைக் கண்டதும் என் மொத்த ரத்தமும் தலைக்குப் பாய்ந்தது. எப்படி ரூமுக்கு வந்தேன் என்று நினைவில்லை. கடைசியில் என்னைத் தேடியே வந்துவிட்டார் அசோகமித்ரன். பிற்பாடு அறிந்தேன். சு.ரா வின் செல்லத் தியரிகளில் ஒன்று , நாம் மிகத் தீவிரமாக ஒரு எழுத்தாளரையோ, ஒரு புத்தகத்தையோ தேடிக் கொண்டிருந்தால் அது நம்மைத் தேடி வந்துவிடும் என்று.

சர்வோதய இலக்கிய பண்ணை, மதுரை

படிக்க ஆரம்பித்தேன். முதல் கதை ஹார்மோனியத்தில் குருவி கூடு கட்டும் கதை. ஒகே. அடுத்தடுத்து வந்த மாலதி, விமோசனம், புலிக் கலைஞன் இதர கதைகள் என்னை உலுக்கின. வாழ்க்கை இப்படித்தானே இருக்கிறது. கதையும் இப்படியல்லவா இருக்கவேண்டும். அதுவரை நான் படித்த ஜிலு ஜிலு எழுத்தாளர்கள் அனைவரும், நொடியில் நுரைக் குமிழிகளாய் என் மனதிலிருந்து மாயமானார்கள்.

என் புரட்சி கனவையும், தீவிர இலக்கிய மோகத்தையும், தேடுதலையும் கலைச் செல்வி என்ற என் தோழிக்கு ஊட்டியிருந்தேன். எங்கள் கல்லூரியில், மாதத்தில் இரு வியாழக்கிழமைகள் அவுட்டிங் உண்டு. மாலை 4 – 8 மணி. தேவையான பொருட்கள் வாங்க, கோவிலுக்கு செல்ல என்பதற்காக அந்த அவுட்டிங்.  நிரல் எழுதப்பட்ட செயலி  பொருத்திய ரோபோ போல போய் வருவோம்.

பெரியார் பஸ் நிலையத்தில் இறங்கி, தங்க ரீகல் திரையரங்குக்கு எதிர்ப்புறம் உள்ள சாலை வழியே சென்றால் கோவிலின் மேற்கு வாசலை அடையலாம். உள்ளே போய் மீனாட்சியையும், சொக்கநாதரையும் தொழுதுவிட்டு திரும்பும் போது, நெருங்கத் தொடுத்த குண்டுமல்லி, பவுடர், பொட்டு, சீப்பு, சோப்பு இதர சாதனங்களை வந்த வழியில் உள்ள கடைகளில் ஏறி வாங்கிக்கொண்டு, வரும்வழியில் நீயூ காலேஜ் ஹவுஸ் ஹோட்டலில் ஏறி மசால் தோசையும், காபியும் சாப்பிடுவோம். இந்த நிரல் இப்படியே போய்க் கொண்டிருந்தது. மெனு கூட மாறுவதில்லை.

ஒருநாள் கலையிடம் ரகசியமாகச் சொன்னேன். இந்த கும்பலோடு போகாமல் நாம் தனியாகப் போவோம் என்று. அவள் புருவங்கள் முடிச்சிடப் பார்த்தாள். புத்தகக் கடைகளில் நாம் ஏறி இறங்கித் தேடுவோம் , குறித்துவைத்த ஏதாவது எழுத்தாளர்களின் படைப்புகள் கிடைக்கிறதா என.  ஒருவழியாக சர்வோதய இலக்கிய பண்ணை என்ற புத்தகக் கடையை அடைந்து, விற்பனையாளரிடம் லிஸ்ட்டை நீட்டினேன். அவர் குழப்பத்துடன் பார்த்து, நீங்களே தேடி எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். அ.மி. யின் கரைந்த நிழல்கள், லா.ச.ரா வின் புத்ர, வண்ண நிலவனின் கடல்புரத்தில், சுஜாதா , ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் எழுதிய ”கணையாழி கடைசி பக்கங்கள்” இவை மட்டுமே கிடைத்தன.

அடுத்தகட்டமாக,   தீவிர இலக்கிய சிறுபத்திரிக்கைகளை சந்தா கட்டி வரவழைத்தேன். கணையாழி, முன்றில், கனவு,  நிகழ், கல்குதிரை எல்லாம் கிடைத்தன. கணையாழியின் தரம் எதிர்பார்த்த அளவு இல்லை. அப்போதுதான் அ.மி. அதிலிருந்து வெளியேறி இருந்தார். . முன்றிலின் ஆசிரியர் மா. அரங்கநாதன் .  மேலும் அ. மி. மற்றும் க.நா.சு ஆகியோரின் பங்களிப்பினால்  முன்றில்  தரமாக இருந்தது.  நிகழ், மார்க்ஸிய சிந்தனை போக்கு கொண்ட கட்டுரைகள் அதிகமுள்ள இதழாக இருந்தது. அதில் பிரமிள் குவாண்டம் இயற்பியல் கோட்பாடு பற்றி எழுதிய கட்டுரையும் இருந்தது. கல்குதிரை தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழாக வந்திருந்தது. கல்குதிரையை கோணங்கி நடத்தி வந்தார்.

நூற்றைம்பது பக்கங்கள் கொண்ட கல்குதிரை சிறப்பிதழை , நான்காம்வருடம் ஆல் இண்டியா காலேஜ் டூர் சென்றபோது, ரயில் பயணத்தின் ஆறு நாட்களில் படித்து முடித்தோம் நானும், கலையும். சு.ரா, சா. தேவதாஸ், தேவதச்சன், யுவன், ஜெயமோகன் என நிறைய எழுத்தாளர்கள் எழுதியிருந்தனர். தஸ்தாயெவ்ஸ்கி நாவலின் சில பகுதிகளும் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டிருந்தன.

டூர் முடிந்து வந்ததும், மனம் முழுதும் தஸ்தாயெவ்ஸ்கி நிறைந்திருந்தார். ஒருநாவலாவது படித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில், மதுரை நீயூ செஞ்சுரி புக் ஹவுஸில்  தேடினேன். எல்லாமே ஆங்கிலப்பதிப்புகள் , அழகிய அச்சில்.  இருப்பதிலேயே சிறிய நாவலான The Insulted and humiliated  [500 பக்கம்] எடுத்துப் பார்த்து,  தயக்கத்துடன் வாங்கினேன். ஆங்கிலம் என்பதால் வந்த தயக்கம். படிக்கும்போது முதலில் சற்று திணறல்தான். நான் பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழ்மீடியம் படித்திருந்தேன். கல்லூரியில் மட்டுமே ஆங்கிலம். கல்லூரி ஆங்கிலம் என்பதே ஒரு மாயை. வெறும் நூறு வாக்கியங்களுக்கள் சுற்றிச் சுழலும் ஒரு உலகம். ஆகவே அதையே  ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு , அகராதியை பக்கத்தில் வைத்துக்கொண்டு படித்தேன். ஐம்பது பக்கம் கடந்ததுமே , சற்று சிரமம் குறைந்தது.

நாவல் படிக்கும்போது, நான் பீட்டர்ஸ்பர்க்கில் வாழ்ந்தேன். பிச்சைக்காரர்கள், வேசிகள், முறைதவறிய உறவில் பிறக்கும் குழந்தைகள் போன்றவர்களின் துயரங்களை அவரைப்போல் சொன்னவர்கள் வேறு யாருமில்லை. அந்தகாலத்தில், ருஷ்யாவில் குழந்தைகளின் மேலும், மிருகங்களின் மீதும் அதீத வன்முறை செலுத்தப்பட்டதுபோல் தோன்றும்.

நான் என்னை, அந்நாவலின் பதிமூன்று வயது நெல்லியுடன் அடையாளப்படுத்திக் கொண்டேன். அவளுடன் அலைந்தேன். அவள் அவமானப்படுத்தப்படும் போதும், துன்பப்படுத்தப் படும்போதும், அவள் தந்தை அவளை இரக்கமின்றி கைவிடும்போதும், மனம் நொந்தேன்.   இலக்கியவாதிகள் கருணையற்றவர்கள். மாற்றவியலா விதியின் கரங்களால், மனிதர்கள் பகடைகளாய் உருட்டப்படும்போது, இவர்கள் மௌன சாட்சிகளாய் உடன் நிற்கிறார்கள். 

சிலசமயம் பின்னிரவின் தனிமையில், எனது மேஜை விளக்கொளியில் , மதுரையின் வேனிற்கால இரவில், பீட்டர்ஸ்பர்க்கின் உறைபனியின் குளிரை உணரும், கந்தலாடை அணிந்த நெல்லியாக நான் உருமாறியிருக்கிறேன். ஒருகட்டத்தில் மனம் உருகி கண்ணீர் நாவலின் பக்கங்களில் சிதறும். எட்டுவயது அருண்மொழியின் கண்ணீரும், இருபது வயது அருண்மொழியின் கண்ணீரும் ஒன்றுதான், ஒரே அடர்த்திதான். இலக்கியம் தருவது வாசிப்பின்பம், மகிழ்ச்சி, உணர்வெழுச்சிகள், உன்னத தருணங்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி பிறர் துன்பத்திற்காக விடும் கண்ணீரில்தான் இலக்கியத்தின் தெய்வம் வாழ்கிறது.

[மேலும்]

19 thoughts on “கண்ணீரும், கனவும்

 1. அன்பின் அருணா
  எட்டு வயசு அருணாவைஅப்படியே கண் முன்னால் பார்த்ததுபோலிருந்தது. உங்கள் பால்யத்துக்குள் எளிதில் எங்களையும் அழைத்துச்சென்றுவிட்டீர்கள். ஒருசில பத்திகளை தவிர்த்து விட்டு வறுமையையும் நிராதரவான நிலையையும் சேர்த்துக்கொண்டால் என் பால்யத்தையே நீங்கள் எழுதினதாக எடுத்துக்கொள்ளலாம். இரும்புக்கை மாயாவி புத்தகம் பல்நூறு முறை வாசித்து பக்கங்கள் நைந்து பாவமாகிவிட்டிருந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது புத்தகத்தின் பக்கவாட்டில் எல்லா பக்கங்களின் விளிம்பிலுமாக சிவப்புச்சாயம் அடித்திருக்கும் அது ஒரு பெரிய வசீகரம் அப்போது. டயானாவும் டெவிலுமாக எங்களுடனே வாழ்ந்த காலமது. ஒரு சில புத்தகங்கள் வாசிக்க கிடைத்தாலும் விகடன் குமுதம் வாசிக்க தடை இருந்தது அப்பா அம்மா வெளியே செல்கையில் அவற்றை எங்களுக்கு எட்டாத அலமாரியின் மேல்தட்டில் வைத்துச்செல்வார்கள். நாற்காலி போட்டு ஏறி திருட்டுத்தனமாக வாசிப்போம் நானும் மித்ராவும். கல்கிக்கு மட்டும் அனுமதி இருந்தது. இப்படி பலதையும் நினத்துப்பார்க்கவைத்தது உங்கள் கட்டுரை. அத்தனை எழுத்தாளர்கள் மத்தியில் ஜெ வின் பெயரும் வருவதை மனம் புன்னகையுடன் குறித்துக்கொண்டது. நீங்களும் கலையுமாகசென்ற அந்த தெருவில் விறகப்ட்ட நெருங்கித்தொடுத்த குண்டுமல்லிச்சரத்தின் மணம் போலவே எட்டு வயது அருண்மொழியின் பால்யகாலஇலக்கிய பரிச்சயம் கட்டுரையெங்கும் மென்மையான சுகந்தத்துடன் கமழ்கிறது கல்லூரியில் பாலகுமாரனும் சுஜாதாவும் உண்டாக்கிய உணர்வெழுச்சிகளை அப்படியே நானும் உணர்ந்திருக்கிறேன். கடைசி வரியில் மனம் சிக்கிக்கொண்டது.எத்தனை உண்மை நீங்க சொல்லியிருக்கறதுன்னு. களங்கமற்ற உள்ளமொன்றின் கண்ணீரில் இலக்கியத்தின் தெய்வமம் மட்டுமல்ல , எட்டுவயதில் இன்னொரு சிறூமியின் பசியை இனங்கண்டுகொண்ட ஒரு அன்னை மனதும் தெரிந்தது. வாழ்த்துக்கள் அருணா!

  Liked by 1 person

 2. வேறு என்ன சொல்ல என்று கேட்டுவிட்டாலும் பேசாமல் இருக்க முடியவில்லை. // “ உன் பெயரை நான் மந்திரம்போல் உச்சரிக்கிறேன்” என்று அவர் கடிதம் எழுதிய பிறகே, எனக்கு என் பெயர் பிடித்தமானதாக ஆனது. // இது கவிதை!

  Like

 3. Arun Mozhi….Amazing writing. I was reading this as if my experience and exposure to Tamil Novels during my school and college days.

  Like

 4. பலரது இலக்கியப் பயணம் ஒரே மாதிரிதான் தொடங்கியிருக்கிறது — சிறிய வேறுபாடுகளுடன்.தேடலின் தீவிரத்தால் சிலர் சீக்கிரம் அடைந்து விடுகிறார்கள். சுவையான பயணம்.
  …….. சாந்தமூர்த்தி

  Like

 5. வாசிப்பும் எழுத்தாளர்கள் அறிமுகமான குறிப்புகளும் அந்த காலகட்டத்தின் சிறு சிறு சம்பவங்களும்
  பல்வேறு சுவாரஸ்ய தருணங்களை நினைவில் உருவாக்குகிறது அக்கா..பெயர் வெறுத்து பின் விருப்பமாக ஆன பகுதி வாசிக்கும் எனக்கு மிக புதிய செய்தி…

  Like

 6. எனது வரிசை (யற்றது): அம்புலிமாமா, பாலமித்ரா, காமிக்ஸ்,ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, சுஜாதா, James Harley chase, Irving Wallace, Arthur Harley, Margret Mitchel (முதல் இலக்கியம்), பாலகுமாரன்,கல்கி, தேவன், தி.ஜானகிராமன், அகிலன்,சாண்டில்யன், கி. ராஜணாரயனன், R.K. Narayan, Tagore, Shakespeare, DH Lawrence, Thomas Hardy, Bronte sisters, Jane Austen, புதுமை பித்தன்,, Catherine Mansfield, John Galsworthy , Osho, Russel, Eckort Tole, Bill Bryson, Yuva; Noah Harare, புத்தர்,Richard Dawkins,. Jared Diamond,(ஜெயமோகன், ராமக்கிருஷ்னன் என் வாழ்வில் வரவேஇல்லை) தற்பொழுது அபுனைவுகள் மட்டும் இதில் ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாரு, உண்டு.(ஜெயமோகனின் காடு, நாவல், ஆறு தரிசனங்கள், அறம் (படித்து இது என் ரசனை இல்லை என்று கண்டுகொண்டேன்)

  Like

 7. அற்புதமான எழுத்தாக்கம்..

  என் பெயர் எனக்கு பிடுத்தமானதாக ஆக 1991 வரை காத்திருந்தேன். அவர் கடிதம் எழுதும் வரை.

  வாசித்த அனுபவங்களை அழகாக ஆக்கியிருக்குறீர்கள். விரைவில் ஒரு நாவலோ புத்தகமோ வரட்டும்.. வாழ்த்துக்கள்..

  Like

 8. 80களின் இறுதியில் கல்லூரி முடித்த எங்களில் பல பேருக்கு நீங்கள் குறிப்பிட்ட காமிக்ஸ், முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் பரிச்சயம் உண்டு. அபார ஞாபகசக்தி குறிப்பாக ஞானக்கூத்தன் (இ. கு)
  கோபால்

  Like

 9. அருமை, இலக்கிய பண்ணையை அடுத்த வடக்கு பெருமாள் மேஸ்திரி தெருவில் இருந்த ரோசரி சர்ச் பள்ளியில் ஆரம்ப கல்வி,டவுன்ஹால் ரோடு ஒரு கனவுலகம் போல எனக்கு பிடித்தமானது, இந்த மேற்கு கோபுரம் போகும் வழியில் இலக்கிய பண்ணை போலவே தெற்கு கோபுரம் போகும் நேதாஜி சாலையில் நிறைய பழைய புத்தக கடைகள் இருந்தன, அதில் காமிக்ஸ் , பழைய அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர்,ரஷ்ய சிறுவர் இலக்கிய கதைகள் ,சுஜாதா, ரா.கி.ர வின் ஜூவி யில் தொடராக வந்த ஆங்கில நாவல் தமிழாக்க கதைகள், சிவசங்கரி,பாலகுமாரன், வாங்கி படித்தேன், நீங்கள் குறிப்பிட்ட ஸ்டில்லடோ கத்தி மெர்குரி பூக்களில் முதலில் படித்து அதன் டீடெய்லால் கவரப்பட்டு நிறைய பேரிடம் பகிர்ந்திருந்தேன்.,சுவாரஸ்யம் தொடருங்கள்.

  Like

 10. அழகான தமிழ். உண்மையான தமிழும் கூட! அதே வருடங்களில் அதே மதுரையில்… மருத்துவமும் தமிழும் படித்த நினைவுகள் வந்து போனது. ஜெயமோகனிடம் வந்து சேர இத்தனை வருடங்கள் எனக்கு ஆனது ஏன் ஏனப் புரிபடவில்லை! பிறருக்காக உண்மையிலேயே கண்ணீர் சிந்தும் தருணங்களிலேயே இலக்கியம் வாழ்ந்ததென்பதை உங்களுடன் நானும் உணர்கிறேன். அருட்செல்வன்…இங்கிலாந்திலிருந்து!

  Like

 11. உங்களின் இந்த பதிவை படித்ததும் மதுரையில் இருக்கும் போது புத்தகங்களை தேடி தேடி படித்த என் இளமை பருவம் ஞாபகத்திற்கு வருகிறது அந்த கால்த்தில் ஜெய்காந்தன் எழுதிய அக்னிபரிட்சை இணையதளங்கள் இல்லாத போதே பெரும் விவாவத்திற்கு சர்ச்சைக்கும் உள்ளானது

  எல்லா எழுத்தாளர்களையும் பற்றி எழுதிய நீங்கள் லட்சுமி என்பவர் எழுதிய குடும்ப கதைகளை படித்ததே இல்லையா?

  Like

  1. ஒன்றோ, இரண்டோ படித்திருக்கிறேன். அப்போது லக்‌ஷ்மி கொஞ்சம் வயதானவர்களுக்கு பிடித்த எழுத்தாளர். இவர்கள் மூவரிடமும் இளமையின் ஒரு மீறல் உண்டு. அது என்னை கவர்ந்திருக்கலாம்.

   Like

 12. கண்ணீரும் கனவும்…

  Titles with brevity & thoughtful charm!

  இதில் தங்களின் எழுத்து நடை இலகுவாகி, பொலிவு கொள்ள துவங்கியுள்ளது!

  லா. சா. ரா,
  ஸ்டெல்லா ப்ரூஸ் – அது ஒரு நிலாக்காலம்,

  சுஜாதா ரங்கராஜன், பாலகுமாரன் வாசிப்பு தொடங்கிய தருணங்களை, மிருதுவான
  நினைவுபடுத்தும் பாணி

  படிக்கும் பொழுதினை இனிமையாக்கியது.

  மதுரை மலரும் நினைவுகளை மிளிரச்செய்த முயற்சிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  Pretty sure, the writing looks set to reach more discerning readers!

  24 Bus WeekEnd (escorted!) sojourn from AC & RI Mdu – has come out well in your impish nostalgia🙂

  I ended up in a feel – similar to gently throwing pebbles on the pond water…

  During a monsoon inspired, overcast lazy afternoon

  With a stare fixed,

  Even as the ripples emerge and dissolve in concentric circles…

  Grateful to you, for choosing an intriguing subject

  And making us delve into campus time memories,

  striking at the right strings – in a very sincere write up👌

  Like

 13. நல்ல பதிவு. நல்ல நடை.இந்தப் பதிவில் எனக்குப்பிடித்தது கடைசி வரிகள்.
  நானும் எனது சகோதரிகளும் போட்டி போட்டு படித்த காலங்கள் நினைவுக்கு வந்தது.நாங்கள் சிவசங்கரி,பாலகுமாரன்,துக்ளக், ஜூ.வி. , வரை வந்தோம். அதற்கு அடுத்த கட்டத்தை தேடாததால் தவற விட்டோமா? அல்லது கிராம வாழ்க்கையில் அந்தக்காலத்தில் அவ்வளவு தான் அடைய முடிந்ததா? தெரியவில்லை. ஆனால் என்னுள் உள்ள தேடல் ஆசான் ஜெயமோகன் தளத்தை 2012ல் கண்டு அடைந்தது மூலம் நிறைவு பெற்று இன்று வரை தொடர்கிறது.
  பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் பெயர் பிடிப்பதில்லை தான். உங்களைப்போல.

  Like

 14. your post reminded my good old school and college days.. those days we spent more time in reading novels , magazines, self improvement books. after that job and home took all our time… can’t go back.. again this lockdown gave us some luxury of time.. interesting mam.. expecting more..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s