கண்ணீரும், கனவும் – கடிதங்கள்

அருண்மொழி ஜெயமோகன் சில நாட்களுக்கு முன்பாக ஒரு வலைத்தளம் தொடங்கி எழுதி வருகிறார்.அருண்மொழிக்கு ஜெயமோகன் அளவுக்கே விரிந்த வாசிப்பு உண்டு. ஜெயமோகன் அதிகம் விரும்பாத தளங்களுக்குள்ளும் சென்று வாசிக்கக் கூடியவர் என்று கண்டிருக்கிறேன். கொரொனாவுக்கு முன்பு பார்த்தபோது நோம் சாம்ஸ்கியும் பூக்கோவும் நிகழ்த்திய அதிகாரமும் அறமும் என்கிற விவாதத்தைப் பார்க்கச் சொன்னார் யூ ட்யூபில் கிடைக்கிறது. அஜிதனுக்கும் நல்ல வாசிப்பு உண்டு. குறிப்பாக ஜெர்மானிய தத்துவ சிந்தனையாளர்கள் மேல் பற்று உண்டு. சைதன்யா அதிகம் பேச மட்டார். நாம் பார்க்காத சமயங்களில் வாசிப்பாராய் இருக்கும். ஜெயமோகன் எழுதும்போது இவர்கள் இருவரிடம் ஆலோசனைகள் கேட்பதுண்டு என்று சொல்லியிருக்கிறார்.

இப்போது தனது இளமைக்கால நினைவுகளை எழுதிவருகிறார்.வண்டியை கிளப்பி பர்ஸ்ட் கியரில் நகர்த்திக் கொண்டிருப்பது போல. கதைகள் நாவல்கள் போன்றவையும் எழுதக் கூடியவரே மிக வேகமான நடை. அதில் ஜெயமோகனின் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயமோகனுக்கு நேரெதிரான கலாச்சாரப் பின்னணி கொண்டவர் என்பதால் இருக்கலாம். திராவிட பாரம்பரியக் குடும்பத்திலிருந்து வந்தவர். ஜெயமோகனின் திராவிட ஒவ்வாமைக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிற ஒரு பிராய்டிய தியரி என்னிடத்தில் உண்டு. (என் மனைவி குடும்பம் ஒரு ஆர் எஸ் எஸ் குடும்பம்)

சற்றே நகைச்சுவையும் தன் கேலியும் கொண்ட நடை. ஜெயமோகன் தன் கிட்டே வருகிற எல்லோரையும் அவரைப்போல எல்லாவற்றையும் தலையை சாய்த்து பார்க்கக் கூடியவராக மாற்றிவிடும் மந்திர சித்தி அடைந்தவர் எனும்போது இவ்வளவு நாள் அவர் கூட இருந்தும் தொற்று ஏற்படாமல் இருப்பது வியப்புதான். பெண்களுக்கு immunity அதிகம்தான் போலிருக்கிறது!

முகநூலில்…

எழுத்தாளர் போகன்.

***

பொதுவாக எல்லாரையும் போல வாசிக்க ஆரம்பித்து இடையில் ஒரு தாவலை நிகழ்த்தியுள்ளீர்கள் அக்கா. என் அம்மா சொல்வார் ‘அப்போவெல்லாம் நான் இந்துமதி, சிவசங்கரின்னு படிக்காத நாள் இல்ல. ஒரு கையில சமையல் இன்னொரு கையில புத்தகம் இருக்கும்’ என்பார். ஏன் தொடரவில்லை எனக்கேட்பேன். அவருக்கு பதில் தெரியாது. இத்தனைக்கு அந்த நூல்களை படித்தால் அவர் மாமா அடிக்கக் கூடும் என்பதால் ரகசியமாகவெல்லாம் படித்திருக்கிறார். பின்னர் அதை ஒத்த சீரியல்கள் அவ்விடத்தை எடுத்துக்கொள்கின்றன.

உங்கள் கட்டுரையை வாசித்தபோது ஓர் உண்மையைக் கண்டுப்பிடித்தேன். நீங்கள் புனைவுகள் மட்டும் அல்லாமல் அவர்களின் நேர்காணல்கள் உள்ளிட்டவைகளையும் வாசித்துள்ளீர்கள். அவர்கள் வழி தீவிர வாசிப்பை அடைந்துள்ளீர்கள். தீவிர இலக்கியங்கள் ஒருபோதும் வேறுவகை கேளிக்கைகளுக்கு மாற்றாகாது என்பதால் அதில் நிலைத்துள்ளீர்கள்.

முந்தைய கட்டுரைகளுக்கும் இதற்கும் ஒரு பேதம் உண்டு. சொற்களை முந்திக்கொண்டு உங்கள் மனம் கொப்பளித்து செல்கிறது. மனம் போன வேகத்துக்கு விரல்களின் வேகத்தை கூட்டியிருப்பீர்கள் என நினைக்கிறேன். உண்மையா?

இந்தக் கட்டுரை என் அம்மாவிடம் வாசிக்கக் கொடுத்துள்ளேன். பார்ப்போம்

எழுத்தாளர் ம.நவின், மலேசியா.

***

மேடம்,

எலெனா (எ) நெல்லி நான் இன்றுவரை மறக்காத கதாபாத்திரம். நீங்கள் அவளை குறிப்பிட்டதில் மகிழ்ச்சி. ஒரு சிறுமிக்கு எவ்வளவு இளம் வயதில் தன்மானம் பிறக்கும் என்கிற கேள்விக்கு விடையாக அமைந்த பாத்திரம், இறுதியில் நாம் பார்க்கப் பார்க்க இறந்து போவாள். இப்போதும் நெல்லியை நினைத்து நான் வருந்துவதுண்டு. Insulated and humiliated தான் தாஸ்த்யவெஸ்கியின் பூரண வடிவம் கைவரப் பெற்ற ஒரே நாவல் என எண்ணுகிறேன், கிழவரின் உயிற்பற்ற பார்வையையும், அசோர்கா நாயையும், அதை படித்த நாட்களையும் இன்றும் நினைவு கூறுகிறேன்.

வாசிப்பு மூலம் உலகு திறப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம், இக்கட்டுரையில் அதை சிறப்பாக விவரித்துள்ளீர்கள், எனக்கு அது சற்று பிந்தி நடந்தது. சிறு வயதில் எனக்கு அவ்வளவாக வாசிப்பு பழக்கம் இல்லாததால் இக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சுஜாதா, பாலகுமாரன், புஷ்பா தங்கதுரை நாவல்கள் என எதையும் நான் வாசித்ததில்லை.

நீங்கள் இறுதியில் கூறியது சரிதான் என எண்ணுகிறேன், பிறர் பொருட்டு சிந்தும் கண்ணீரே அறத்தின் அடிப்படை. ஒரு பாத்திரத்தின் பொருட்டு சிந்தும் கண்ணீர் இன்னும் உயர்வானது.

கிருஷ்ணன், ஈரோடு.

***

அட! அற்புதமான கட்டுரை. பேரழகு 😃🌺 வாசிப்பின் வசீகரத்தை மாயத்தை தேடலை அந்த obsession-ஐ கொண்டுவந்துவிட்டீர்கள். வாசிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

நானும் சர்வோதய இலக்கியப்பண்ணையால் வளர்த்தெடுக்கப்பட்டவள் 😄 நியூ சென்சரி புக் ஹவுஸும் பிரியத்துக்கிறிய இடம். 90களில் டர்னிங் பாயிண்ட் என்று டவுன் ஹால் ரோட்டில் ஒரு புத்தகக்கடை இருந்தது. அதுவும் ஓர் ஆதர்சம்… ஒவ்வொரு வாசகருக்குள்ளும் இருக்கும் புத்தகப்பாதையை கண்டிப்பாக கிளர்த்திவிடும் இந்தக் கட்டுரை 😃

தீவிர இலக்கியம் ஒரு underground movement என்றால் பெண்கள் வாசிப்பது அதை விட underground போல.

எழுத்தாளர் சுசித்ரா, சுவிசர்லாந்து

***

அன்புள்ள அருண்மொழி அவர்களுக்கு,

நலம். எனக்கு எப்பொழுதுமே ஒரு ஆசை இருந்தது. எங்கள் காலத்தில் வாழும் செல்லம்மாவை கொஞ்சம் அணுக்கமாக அறிந்துகொள்ள வேண்டும் என்று. ஜெயமோகனின் சங்கச்சித்திரங்களில் வரும் அருண்மொழிதான் எனக்கு முதன் முதலில் அறிமுகம். ‘கள் மணக்கும் மலர்’ கட்டுரையில், ‘பேசிக்கொண்டே நடக்கையில் அருண்மொழி சற்றுத்தாவி, கையில் இருந்த புத்தகத்தால், பூத்துக் குலுங்கிய கொன்றை மரக்கிளையை அடித்தாள். மஞ்சள் நிற இதழ்கள் கொட்டின. அவளுடைய தலையில் பொன்னிற இதழ் ஒன்று வெகு நேரம் இருந்தது”. அவரது தரப்பை அறிந்த எனக்கு உங்கள் தரப்பை அறிந்துகொள்ள இவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியிருந்தது. “உன் பெயரை நான் மந்திரம்போல் உச்சரிக்கிறேன் என்று அவர் கடிதம் எழுதிய பிறகே, எனக்கு என் பெயர் பிடித்தமானதாக ஆனது”. தொட்டும் தொடாமலும் எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள். அப்பா அம்மாவின் காதல் கதை கேட்டு குதூகலிக்கும் குழந்தையின் சந்தோஷம் எனக்கு.

நானும் சுஜாதாவின் வாசகனாக, அவர் பெண்களுக்கு வைக்கும் பெயரை ரசித்திருக்கிறேன்.  அவர் அனிதாவை அறிமுகப்படுத்தியபொழுது ஊரில் அவ்வளவாக அனிதா இல்லை. தனது கதைகளின் நாயகிகளுக்கு, அவர் பெயர் தேர்ந்தெடுத்த விதமே அவளின் அழகு வாசகனுக்குப் புரிந்துவிடும். அல்லது, அவர் பாணியில், அவர். அவளின் அழகைப் பற்றி எழுதவேண்டிய வர்ணனையைக் கொஞ்சம் ஒத்திப்போடலாம்.  நான் மிகவும் வியந்த பெயர், நிரூபமா. அந்தப்பெயரில், எனக்குத் தெரிந்தவர் அமைய, பல வருடங்கள் பிடித்தன. வேலைகிடைத்து, டில்லியெல்லாம் செல்லவேண்டியிருந்தது. டில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்தபொழுது, ஒரு சாதாரணப் பெண், ஒட்டப்பந்தயத்தில் அசாதாரண சாதனை செய்ய, தமிழரசி என்று பெயர் வைத்து, குமுதத்தில் ‘பத்து செகன்ட் முத்தம்’ என்று ஒரு தொடர் எழுதினார். ஆனாலும், தமிழரசியை,  ‘ரசி’ என்றுச் சிக்கனமாக்கி, பெயருக்கு புதுமையூட்டிதான் முதல் அத்தியாயத்தை ஆரம்பித்திருந்தார். 

உங்களைப் போலத்தான் எனக்கும். சுஜாதா-வின் வழியே எனக்கு சுந்தர ராமசாமி, கா.நா.சு எல்லாம். மீரா-வின் கவிதைகளின் பிரதிபலிப்பில்தான் என் பதின்ம வயதுக் கவிதைகளும் இருந்தன. மு. மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள், நா காமராசனின் கவிதைகள் எல்லாம் மனப்பாடமாக சொல்லி நண்பர்களை அசத்தும் காலம். பிற்காலத்துக்கு சென்று நல்ல இலக்கியத்தை நோக்கிப் பயணம் செய்த ஒரே தெருவில் வசித்த  ஒத்த மனம் கொண்ட இன்னொரு நண்பனை இந்தக் கட்டுரை வாயிலாக அறிந்துகொள்கிறேன்.

ஒரு குக்கிராமத்தில், கணையாழியை சந்தா கட்டி வாசித்தவன் என்ற வகையில். அசோகமித்திரனை நான் நேரடியாகவே அறிந்திருந்தேன். ஆனால், அவரது கதைகளை உள்வாங்கி நல்லிலக்கியம் என்ற அறிய வருடங்கள் ஆகிவிட்டன. சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்களை அந்தந்த மாதமே வாசித்திருக்கிறேன். அசோகமித்தரனின் நாவல் பற்றி நீங்கள் ஒன்றும் குறிப்பிடவில்லை. சுந்தர ராமசாமி, அவரது ‘குழந்தைகள், பெண்கள் ஆண்கள்’ முன்னுரையில் உங்களின் விமர்சனம் பற்றி குறிப்பிட்டிருப்பார்.  கட்டுரையின் நீளம் கருதி அதையெல்லாம் துண்டித்துவிட்டீர்களா ?

என்றோ வாசித்த ‘the insulted and humiliated’ நாவலில் வரும் நெல்லியை நேற்றுத்தான் அவளுடன் இருந்தீர்கள் என்பதுபோல் உங்களது உணர்வுகள் வெளிப்படும் கட்டுரை.  உங்கள் எழுத்தில் ஒன்று பார்க்கிறேன். நீங்கள் எனக்கு நன்றாகத் தெரிந்தவர் என்றாலும், ஒரு பெண் எழுதியது என்று நினைக்கவே தோன்றவில்லை. எழுத்திற்கு ஆண் பெண் என்று இல்லை. எழுத்தாளர், அவ்வளவே. உங்கள் எழுத்து பாலினத்தை ஏதொ ஒரு வகையில் வெட்டி வீழ்த்தியிருக்கிறது என்பதை நான் பதிவு செய்தாகவேண்டும்.  

ராதாவும் கட்டுரையை வாசித்தார். அவரும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ராணி நாவல்கள், சுஜாதா நாவல்கள் என்று வளர்ந்து இலக்கிய வாசகியானவர்.  நீங்கள் மதுரை கடைவீதியில் குண்டு மல்லி, பவுடர், பொட்டு சீப்பு வாங்கும் கும்பலிலிருந்து நழுவி புத்தகக் கடைக்கு சென்றதை ரசித்து சொன்னார்.  

நீங்கள் மேலும் போட்டு இந்தக் கட்டுரையை முடித்திருக்கிறீர்கள். அடுத்த எந்த சந்தில் எந்த புத்தகத்துடன் அல்லது ஒரு இசைத்தட்டுடன் சந்திப்போம் என்று பார்ப்போம்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s