எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கடிதம்

வணக்கம் அருண்மொழி

நலமா?

உங்கள் எழுத்துக்களை சொல்புதிது காலத்தில் படித்திருக்கிறேன். மறுபடியும் எழுதவந்தது வரவேற்கத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் ஆறு இல்லை. ஆற்றில் குளித்தது கிடையாது. கால் நனைத்ததுதான். உங்கள் எழுத்தை படிக்கும்போது பரவசமாக இருக்கிறது. அதே எட்டு வயது என்னுடைய வயதுக்குள்ளும் இருக்கிறது. நான் அங்கே சென்றுவிட்டேன். அன்னக்கிளி நான் இன்னும் பார்க்கவில்லை. உங்கள் எழுத்தை படித்த பின்னர் என்ன வாழ்க்கை வாழ்ந்தோம் என்று வெறுப்பாக இருக்கிறது. இனிமேல் திரும்பி போகமுடியாது. இழந்தது இழந்ததுதான்.

கம்பியை பிடித்தபடி கால்களை தொங்கப்போட்டு காட்சிகள் பின்னோக்கிப் போக நீங்கள் பயணம் செய்தபோது பக்கத்தில் இருந்தேன். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை என்னை இழுத்துச் சென்றது உங்கள் எழுத்து. நீர்வழிப் படூஉம் புணைபோல் என்று சொல்வார்களே, அப்படி. அதுசரி எப்படி ஐந்து வயதிலும் 15 வயதிலும் இப்பவும் அதே கண்கள். இசையும் தெரியாது,  காவிரியும் தெரியாது ஆனால் அந்த வாசனையை உணர்ந்தேன். இலக்கிய சுவையை அறிய நேர்ந்தது. நல்ல இனிய அனுபவம்.

நான் மேலே எழுதியது எல்லாம் முழுமையாக இல்லை. சும்மா கால் நனைத்ததுதான். நிறைய எழுதுங்கள். ஜெயமோகன், தள்ளி உட்காருங்கள்.

அன்புடன்
அ. முத்துலிங்கம்

அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய முத்துலிங்கம் சார் அவர்களுக்கு,

வணக்கம். 

உங்கள் வாழ்த்தும், பாராட்டும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனக்கும் அந்த அனுபவங்கள் 15 வயதுவரை மட்டுமே.

அதற்கு பிறகு நான் பாட்டி வீடு போவது குறைந்து விட்டது.

உலோபி தன் சேமிப்பில் உள்ள பொன் நாணயங்களை இருட்டில் எடுத்து வருடி பார்த்துக் கொள்வதைப் போல் அந்நினைவுகளை பெருமூச்சுடன் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். கைபட்டால் கலங்கும் ஓவியம் போல் அவை என் நினைவில் மங்கலான பிரதியாக உள்ளது. ஆனால் எழுதும்போது துலங்கி வருகிறது.  இந்த மாயம் என்னை அலைக்கழிக்கிறது.  ஒரு நாவல் எழுத ஆசை. அந்த பின்புலத்தில், அம்மாவை மையமாக வைத்து. 

இறையருள் துணைநிற்க வேண்டும்.

மிக்க அன்புடன்,

அருண்மொழி.

***

அன்புள்ள அருண்மொழி,

வணக்கம்.

ஓடும் குதிரையில் தாவி ஏறுபவர்போல என்ன அழகாக எழுத்துலகில் நுழைந்துவிடுகிறீர்கள். உங்கள் ஞாபகசக்தி அசரவைக்கிறது. சொல்வளம் மிரட்டுகிறது. வேறு என்ன வேண்டும்.

உதாரணமாக நீங்கள் படிப்படியாக வாசித்து வந்த எழுத்தாளர்களையும் புத்தகங்களையும் துல்லியமாகச் சொல்கிறீர்கள்.  என்னால் அப்படிச் செய்யவே முடியாது. குதிரையின் முதுகோடு வளைந்து ஒன்றிப்போய்விடுங்கள். மீதியை குதிரையே பார்த்துக்கொள்ளும். 

என்றும் அன்புடன்

அ. முத்துலிங்கம்  

அன்பிற்கும் , மதிப்பிற்கும் உரிய முத்துலிங்கம் சார் அவர்களுக்கு,

வணக்கம். 

உங்கள் சொற்கள் எனக்கு மிகுந்த உவகையையும், ஆற்றலையும் அளிக்கின்றன. நீங்கள் குதிரையை உவமித்திருப்பதால் , குதிரை சக்தி கிடைத்திருப்பதை போல் உணர்கிறேன். ஆற்றலை குதிரை சக்தி [horsepower] எனும் அலகால் குறிப்பிடுவார்கள் அல்லவா?

ஜுவனைல் ரீடிங் என்று கூறப்படும் வளரிளம் பருவ வாசிப்பு அக்காலகட்டத்தில் இவ்வளவு படிகளை கடந்து வர வேண்டியிருந்தது. அது ஒரு முறையான பரிணாமம் என்று தோன்றுகிறது. நம் தர நிர்ணய அளவுகோள்களை அவ்வாசிப்பின் வழியே நாம் துல்லியமாக உருவாக்கி கொள்ள முடிகிறது.

இப்போதைய தலைமுறையினர்  இணையம் வழியே எளிதில் தீவிர இலக்கிய வாசிப்பில் நுழைந்து விடுகின்றனர்.

தொடர்ந்து இசை குறித்தும்  தன்அனுபவக்குறிப்புகளும் எழுத தீர்மானித்திருக்கிறேன். எழுத்து எனக்கு இன்னும் பழக கொஞ்ச நாளாகும் போல் தெரிகிறது. ஒரு கட்டுரையை மூன்று, நான்கு முறை செம்மைப்படுத்தி, திருத்தி எழுதுகிறேன்.

அங்கு உங்கள் மனைவி, வைதேகி, சஞ்சயன், அப்ஸரா அனைவருக்கும் என் அன்பைத் தெரிவியுங்கள்.

மிக்க அன்புடன்,

அருண்மொழி

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s