சின்னச் சின்னப் புரட்சிகள்

விளாதீமீர் இல்யீச் லெனின் உல்யானவ்

என் அப்பா மிகக் கண்டிப்பான நாத்திகர். பெரியார், அண்ணா பக்தர். திராவிட கட்சி பிடிப்பு தவிர அவருக்கு கொஞ்சம் மார்க்சிஸம், லெனினிசம் மீதும் பிடிப்பு உண்டு. அந்த விருப்பத்தினால் தான் என் தம்பிக்கு லெனின் கண்ணன் என்று பெயர் வைத்தார்.  நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என் அப்பா  “இவர்தான் லெனின்” என்ற லெனின்- நினைவுக் குறிப்புகள், [அவரைக் குறித்து மற்றவர்கள் எழுதியது], எங்கெல்சின் “குடும்பம், தனிச்சொத்து, மற்றும் அரசு” என்ற இரு புத்தகங்களை தஞ்சாவூரிலிருந்து வாங்கி வந்தார்.  வழவழ வென்ற தாள்களும் அழகிய கெட்டி அட்டையும் கொண்ட அதுபோன்ற புத்தகத்தை நான் அதுவரை பார்த்ததேயில்லை. கையில் வைத்து தடவிக் கொண்டேயிருந்தேன்.

அதன் அட்டையில் இருந்த லெனின் மிக கம்பீரமாக , அழகிய குறுந்தாடியுடன் இருந்தார். என் அப்பா போலவே அவருக்கும் வழுக்கை. அவர் கண்களில் ஒரு குறும்புச் சிரிப்பு இருந்தது. கம்யூனிஸ்டுத் தலைவர்களிலேயே அவரிடம்தான் அந்த குறும்புப் புன்னகை உண்டு. லெனின் எனக்கு மிகவும் பிடித்தவரானார்.     

இரண்டு புத்தகமும் எனக்கு பைபிள் போல தெரிந்தன. அப்பாவிடம் நான்தான் முதலில் படிப்பேன் என்றேன். அப்பா சிரித்துக் கொண்டே சரி என்றார். அப்பா எந்த விஷயத்தில் எனக்கு செல்லம் கொடுப்பார், எப்போது கோபப்படுவார் என்பது எனக்கு நன்றாக தெரியும். அறிதல் என்பதே நம்மை அடுத்த கட்டத்துக்கு கொண்டு  செல்லும் என்பதை அவர் திடமாக நம்பினார்.

அதில் எனக்கு இப்போதும் ஞாபகத்தில் இருப்பவை சில விஷயங்கள் மட்டுமே. லெனின் வேட்டைக்கு செல்லும் ஒரு பகுதி, ஒரு விவசாயி லெனினுக்கு ரொட்டியில் வெண்ணெயும், பன்றிக் கொழுப்பும் தடவி தருவது, அதை லெனின் விரும்பி புசிப்பது, ஒரு பெண் தொழிலாளி லெனினின் கோட்டில் தன் கோட் பட்டனை வைத்து தைத்து தருவது, பிறகு அவரை அறியாத இரு தொழிலாளர்களிடம் பேசி  தன்னைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று லெனின் அறிந்து கொள்வது போன்றவை. லெனினை அதில்  ஒரு கட்டைகுட்டை மனிதர் என்றே குறிப்பிட்டு இருப்பார்கள்.

இரண்டு புத்தகங்களையும் படித்தபிறகு கண்டிப்பாக ரஷ்யா ஒரு பொன்னுலகம் தான் என்று எனக்கு தோன்றியது . அங்கு  தொழிலாளர்கள்கூட கோட் சூட்டுடன் வேறு இருக்கிறார்கள்.  ராதுகா பதிப்பக வெளியீடான அப்புத்தகத்தில்  லெனினின் தனிப்பட்ட, குடும்ப புகைப்படங்கள்  வழவழப்பான காகிதங்களில், மிக அழகிய அச்சில் என்னை மயக்கின.  மெல்ல என் மனதில் சிவப்புச் சிந்தனைகள் படர ஆரம்பித்தன.

பட்டுக்கோட்டையில் நாங்கள் நகரிலிருந்து மிக ஒதுக்குப் புறமான வளவன்புரம் என்ற பகுதியில் சொந்தவீடு வாங்கி குடிஇருந்தோம்.  . கொஞ்சம் பழைய பாணியிலான  வீடு . மரங்கள் சூழ்ந்திருக்கும். ஒட்டியதுபோல் இருக்கும் இரு பெரிய மாமரங்கள், இரண்டு பலாமரங்கள், பூச்செடிகள், கொல்லைப் புறம் நார்த்தைமரம், மாதுளை, சப்போட்டா, கறிவேப்பிலை, முருங்கை எல்லாம் உண்டு.

ஆனால் அந்தத் தெருவில் சுற்றிலும் குடியிருந்தவர்கள் எல்லாம் ஒண்டுக் குடித்தனங்களிலும் கூரை வீட்டிலும் இருந்தார்கள். பாதிவீடுகளில் வறுமை நிறைந்திருந்தது.  எதிர்வீட்டில் இருந்த வீரண்ணன் எந்நேரமும் வயலில் உழைக்க, அவர் மனைவி பொழுதெல்லாம் மாடுகளுடன் அல்லாடிக் கொண்டிருந்தார். அவர்களின் மகளை பாதிப்படிப்பில் நிறுத்தினார்கள். மாடு மேய்க்க அவளை அனுப்பினார்கள். நான் சிலசமயம் திண்ணையில் உட்கார்ந்து படிக்கும்போது  அம்மா தரும் பூஸ்ட்டை குடித்துக் கொண்டு, பலகாரம் சாப்பிட்டுக்கொண்டு ராஜபோக வாழ்க்கை வாழ்வதுபோல எனக்கு தோன்றும். அவர்கள் என் கண்ணெதிரில் கஷ்டப்படுவது குறித்து பலமுறை மனம் குமைவேன். இவர்கள் எப்போது நம்மைப் போல் ஆவார்கள் என ஆலோசிப்பேன். ரஷ்யாவில் எல்லோரும் சமம் அல்லவா? ஒரு புரட்சியில் லெனின் அதை நிகழ்த்தி விட்டாரே.

என் எண்ணங்களை நான் பகிர்ந்தால் கவனத்துடனும் அதே உணர்வுடனும் கேட்கும் ஒரே ஜீவனாக என் தம்பி எனக்கிருந்தான். துறுதுறுவென்று சிரித்தமுகமாக எந்நேரமும் என்னைச் சுற்றி வருவான். குறும்பும் புத்திகூர்மையும் தெரியும் கண்கள். ஆனால் நான் பேசுவதை கவனிக்கும்போது அவனில் கூடும் ஆழ்ந்த நிலை என்னை எப்போதுமே வியக்கவைப்பது. அவன் வயதுக்கு மீறிய சிக்கலான விஷயத்தை நான் விளக்கும்போதும் அதை எளிதில் வந்து தொட்டு விடுவான்.

நான்  பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது என் தம்பியுடன் புரட்சி பற்றி உரையாடி அவன் மனதிலும் புரட்சிக் கனலை மூட்டினேன். நாங்கள் ரகசிய திட்டங்கள் தீட்டினோம். பாடப்புத்தகம் விரித்தபடியே இருக்கும். முணுமுணுவென்று உரையாடுவோம். என் அப்பா அடிக்கடி  பொத்தாம் பொதுவாக திண்ணையில் இருந்து “படிப்பு நடக்கிற மாதிரி தெரியல, எனக்கு ஒண்ணும் புடிச்சுக்கல” என்பார். “இல்லப்பா, தம்பிக்கு மாத்ஸ் சொல்லிக் கொடுக்குறேன்” என்று சமாளிப்பேன். என் படிப்பு பற்றி அப்பாவுக்கு திருப்திதான். அவனைப் பற்றிதான் மனக்குறை. நான் பத்தாம் வகுப்பில், மாவட்டத்தில் இரண்டாவதும் மாநிலத்தில் முப்பது ராங்க்கிற்கு உள்ளும் வந்திருந்தேன்.

பிராவ்தா பத்திரிகை, கமிஸார், காம்ரேட், கம்யூன் , பூர்ஷ்வா, ப்ரொலொட்டேரியன், போல்ஷெவிக்குகள், மென்ஷெவிக்குகள்  போன்ற வார்த்தைகள் எங்களுக்கு இனம் புரியாத ரகசிய குறியீடுகளாயின. போல்ஷெவிக்குகள்  இங்கிருந்த தீவிரவாதிகளான திலகர் போலவும், மென்ஷெவிக்குகள் இங்கிருந்த மிதவாதிகளான கோகலே போலவும் அவனுக்கு  சொல்லிக் கொடுத்தேன். விளாதீமீர் இல்யீச் லெனின் உல்யானவ் ஒரு போல்ஷெவிக். ஒவ்வொரு முறையும் லெனினின் முழுப் பெயரையும் சொல்வேன். அவன் கிளுகிளுப்படைந்து சிரிப்பான். அவன் பெயரில் லெனின் உள்ளதால் அவனுக்கும் லெனின்மேல் கண்மூடித்தனமான பாசம். எல்லாவற்றையும் அவனுக்கு விளக்கி சொல்லும்போது  நான் மேலும் தெளிவடைந்தேன்.

1917 அக்டோபரில் லெனின்  நிகழ்த்தியது போல் நாமும் இங்கு புரட்சி நிகழ்த்த வேண்டும். வென்றால் யார் பிரதமர்?  கண்டிப்பாக ஜோதிபாசுதான். அதில் எங்களுக்கு குழப்பம் ஏதுமில்லை. நம் புரட்சியில் விவசாயிகளை சேர்க்க வேண்டுமா? இல்லை. ஒருநாள் வருவார்கள், பின் வயல்வேலையை பார்க்க போய் விடுவார்கள், அவர்களை நம்ப முடியாது. லெனின் தொழிலாளர்களைத் தான் நம்பினார். என் தம்பி தொழிலாளர் யூனியன் என்ற ஒரு அமைப்பு ஒவ்வொரு அலுவலகத்திலும் உண்டு என்ற அபூர்வத் தகவலுடன் ஒருநாள் வந்தான். அவன் நண்பனின் அப்பா மத்திய அரசு ஊழியர், ரயில்வே துறையில். பிறகென்ன? விஷயங்கள் இவ்வளவு சுலபமாக வேகம் கொண்டுவிடும் என்று நாங்கள் எண்ணியிருக்கவில்லை.

ஆசிரியர் சங்கம்போல்  இல்லை  இவர்கள்.  நிஜமாகவே  நிறைய  போராட்டம் நடத்தியவர்கள். மாதாமாதம்  இரண்டாம் சனிக்கிழமை  ஆசிரியர் சங்கம் ஒன்றுகூடி  பேசி, டீ குடித்து, மிக்ஸர் சாப்பிட்டு  பிரிவதை  கண்கூடாக பார்த்து மனம் நொந்திருந்தோம். மின்னல் வேகத்தில் திட்டங்கள் தீட்டினோம். எல்லா அலுவலக  யூனியன் ஊழியர்களையும் ஒருங்கிணைத்து மாவட்ட வாரியாக கம்யூன்கள் ஏற்படுத்துவது. வாராவாரம் ரகசியக் கூட்டங்கள்  நடத்தி செயல்திட்டங்களை விளக்குவது. கண்டிப்பாக ஆயுதப் புரட்சி கூடாது. அரசு மிலிட்டரியை இறக்கினால் என்ன செய்வது என்ற குண்டை என் தம்பி போட்டான். சரி, கடைசி கட்டமாக ஆயுத புரட்சி.

விவசாயிகளை ஒருங்கிணைக்க கூட்டுப் பண்ணைகள். அவர்கள் குழந்தைகளின் கல்விச் செலவை கட்சி ஏற்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு சுற்றுலா. விதம் விதமாக யோசித்துக் கொண்டு படுத்து, காலையில் புதிய யோசனையுடன் எழுவோம். நம் கம்யூன் சிஸ்டத்தில் இளைஞர்களும் யுவதிகளும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் . அவர்களுக்குள் காதல் வந்துவிட்டால் எல்லாம் தவறாகப் போய்விடும். பிறகு கல்யாணம் , குழந்தை என்று செட்டில் ஆகிவிடுவார்கள். புரட்சி மனநிலையை காற்றில் பறக்கவிட்டு விடுவார்கள். காந்தி சபர்மதி ஆசிரமத்தில் எவ்வளவு கண்டிப்பாக ஆண்களையும் பெண்களையும் வைத்திருந்தாரோ அதுபோல. வேண்டுமென்றால் மூத்தவர்களை கூப்பிட்டு அறிவுரை கூறவைக்கலாம்.

என் அப்பாவிடம்  அவருக்கு ஏதும் சந்தேகம் வராதபடிக்கு , உலக விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வெளிக்காட்டுவதுபோல், அவ்வப்போது சந்தேகங்கள் கேட்டுக் கொள்வேன்.

”அப்பா, யூகோஸ்லாவியா போலந்து கிழக்கு ஜெர்மனி போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள்ல எல்லாம் எப்டி கம்யூனிசம் பரவுச்சு?”

”பொதுவா அங்க ஒரு சின்ன குரூப் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கும். அப்போதைய அரசை எதிர்த்து ஒரு போராட்டம் தொடங்கும். அது தீவிரமாகும்போது ரஷ்யா தலையிட்டு தன் படையை அனுப்பி வைக்கும். பாதி வன்முறையில தான் அங்கு கம்யூனிசம் நிலைகொள்ளும்.”

”ஏம்பா நம்ம நாட்டுல அப்டி வரல”

”நம்ம நாடு பெரிசு. உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு. இங்கதான் சர்வ சுதந்திரமும் உண்டு. கம்யூனிசம் ஒரு கட்டத்துல சர்வாதிகாரத்துல போய் முடியும்.”

”நமக்கு கொஞ்சம் ரஷ்யா சப்போர்ட் தானேப்பா?”

”ஆமா. ஆனா நமக்குன்னு நேரு வகுத்த கொள்கை அணிசேராக் கொள்கை.”

”என்ன கொள்கையோ! சோப்ளாங்கி கொள்கை!”, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ,  சரி என்று உரையாடலை முடித்துக் கொள்வேன்.  கொஞ்சம் கூட கனவே இல்லாதவர் என் அப்பா.  டி.ஏ, பி.எஃப், அரியர்ஸ், போனஸ், சேவிங்ஸ் அக்கவுண்ட், பிள்ளைகளின் படிப்பு இவை தவிர அவர் மனதில் எதுவும் இல்லை.

தம்பி லெனின் கண்ணன்

ஒருநாள் ஞாயிறன்று என் அப்பா, அம்மா இருவரும் ஏதோ வேலையாக தஞ்சாவூர் போயிருந்தனர். அப்பாவின் டி.வி.எஸ் 50 ஐப் பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை. தம்பியிடம் அவனது நண்பன் வீட்டுக்கு போய்வரலாமா எனக் கேட்டேன். ரயில்வே காலனியில் குவார்ட்டர்ஸ் வீடு. அவன் அப்பா ரயில்வே ஊழியர். பெயர் தேவராஜன்.

”போலாம், வா” என்று வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

”போக்கா, நீயே சிலசமயம் தடுமாறுறே, என்னயக் கொண்டுபோய் எங்காவது சாச்சு விடுறதுக்கா”

”அக்கா மெதுவா ஓட்டுவேனாம். நல்லபுள்ளல்ல, வா”, சொல்லிவிட்டேனே ஒழிய உள்ளுக்குள் எனக்கும் கொஞ்சம் உதைப்புதான். மெயின் ரோடில் சமாளித்துவிட்டேன். கரிக்காடு பக்கம் இருந்த ரயில்வே காலனி ரோடு அநியாயத்துக்கு மேடு பள்ளம். ஒரு இடத்தில் வண்டியுடன் சரிந்து விட்டேன். தம்பி கெட்டிக்காரன், அடிபடாமல் வண்டியை தூக்கி நிறுத்தினான். நான் வழக்கம்போல் முட்டியை பேர்த்துக் கொண்டேன். இலேசாக இரத்தம் கசிந்து எரிந்தது. ”அம்மாட்ட சொல்லாதடா” என்றேன்.

”வா, திரும்பி போலாம்கா”

”இல்ல, இவ்வளவு தூரம் வந்தாச்சு, பாத்துட்டு போலாம்.”

புரட்சிப் பணிகளுக்கு முன்  ரத்தகாயங்கள் ஒரு பொருட்டா, என்ன?

தேவராஜ் மாமா கட்டு மஸ்தாக, பயமுறுத்தும் மீசையோடு , கரு, கரு என்று இருந்தார். வீட்டில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் மூவரின் படம் வைக்கப்பட்டிருந்தது. ஒரு புறம் இயேசுநாதர் படமும் இருந்தது. டீயும் மிக்சரும் தந்தார்கள்.

நானும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

”மாமா, நீங்க உங்க சங்கத்துல என்னவா இருக்கீங்க?”

”வட்டச் செயலாளர் . ஏன் கேக்குற?”

”இல்ல … போராட்டம் பண்ணும்போது இந்தியா முழுசும் சேந்தாப்லதான பண்ணுவீங்க? அரசாங்கத்த எதுத்து.”

”ஆமா.”

”எப்பிடி?”

”ரயில் எதுவும் ஒடாது. நாங்க யாரும் வேலைக்கு போமாட்டோம்.”

”ஓ, அப்றம்.?”

”அரசாங்கம் எங்க பிரதிநிதிகளோட பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர்வு, போனஸ் எல்லாம் குடுப்பாங்க.”

என் தம்பியின் முகத்தை அவசரமாக பார்த்தேன். சுண்டிப் போய் இருந்தது. என் முகமும் அப்படிதான் இருந்திருக்க  வேண்டும்.

அவசரமாக சமாளித்துக் கொண்டு, ”கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில இருந்தா நீங்க போராட வேண்டிய அவசியமே இல்லல்ல?”

”அரசாங்கமா? இவனுங்க ஒத்த டிஜிட்லயும் ரெட்ட டிஜிட்லயும் சீட் வாங்குறானுங்க, அதுலயும் வலது, இடது, எம்.எல் எத்தன குரூப்? புரியாம பேசுறியேம்மா?”, பெரிய பற்களைக் காட்டி வாய் விட்டு சிரித்தார்.

எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ”சரி, நாங்க கிளம்புரோம்” என்று கிளம்பி விட்டோம்.

என்னைப் போலவே தம்பியும் சுரத்திழந்திருந்தான்.

”கண்ணா,  இவர் டாலுக் லெவல் தான். இவருக்கு தியரியெல்லாம் புரியாது. ஆனா மாவட்ட, மாநில லெவல் தலைவர்கள் எல்லாம் நல்ல விவரம் உள்ளவங்களா இருப்பாங்க”, என்று அவனுக்கு சொல்வதுபோல் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

ஒருநாள் எனக்கு அபூர்வமான படம் ஒன்று கிடைத்தது. அதை வழக்கம்போல் என் அறையின் கதவின் பின்பக்கம் ஒட்டிக் கொண்டிருந்தேன். அப்பாவின் பார்வை படாத இடம். ஏற்கனவே என் சேகரிப்புகளான பனிபடர்ந்த இமயமலையின் அழகிய கலர் படம்  [சோவியத் இதழில் வந்தது], கண்மூடி தியானத்தில் இருக்கும் புத்தர், எனக்குப் பிடித்த நடிகை ஸ்ரீதேவியின் ஒரு படம் இவற்றோடு சேர்த்து இதை ஒட்டும்போது என் ரசிகக்குஞ்சு வந்துவிட்டான்.

”அக்கா, யார் இவங்க?” எது செய்தாலும் அதை ஆராதனையோடு பார்க்கும் தம்பியோ, தங்கையோ அமைந்தவர்கள் பாக்கியவான்கள்.

Portrait of Che Guevara (1928-1967), 20th century, Cuba.

”சொல்றேன். தோ பார், இந்த ரெண்டு பேர்ல இவர் ஃபிடல் காஸ்ட்ரோ, இவர் சே குவேரா. ரெண்டு பேரும் சேர்ந்துதான் கியூபான்னு ஒரு நாட்டுல கம்யூனிஸம் கொண்டு வந்தாங்க. யார் ஸ்டைலா இருக்காங்க? ஒனக்கு புடிச்சது யார்?” அவன் சே குவேராவை கைகாட்டினான்.

”எனக்கும் அவரத்தான் புடிச்சிருக்கு”. அதில் சே குவேரா ஸ்டைலாக சுருட்டை உதட்டின் நுனியில் அலட்சியமாக கவ்வியபடி சிரித்துக் கொண்டிருந்தார். பிற்பாடு ’குட், பேட், அக்லி’ யில் வரும் க்ளிண்ட் ஈஸ்ட் வுட் அதே சுருட்டுடன்  எனக்கு சே குவேராவை நினைவு படுத்தினார்.

“சே, உண்மையில ஒரு மெடிக்கல் ஸ்டுடண்ட். தென்னமெரிக்காவுல உள்ள அர்ஜெண்டினால பொறந்தவர். அவர் ஃப்ரெண்டோட சேர்ந்து பைக்ல சௌத் அமெரிக்கா முழுசும் சுத்தி மோட்டார் சைக்கிள் டைரிஸ் புக் எழுதினார். ஜாலி டூர் இல்ல, அங்க சுரங்கங்கள்ள வேல பாக்குற தொழிலாளர்கள சந்திச்சு அவங்களோட ப்ராப்ளம் எல்லாம் தெரிஞ்சுகிட்டாரு. அப்றம் புரட்சி பண்ணி ஃபிடல் காஸ்ட்ரோவோட அமைச்சரவையிலே கொஞ்ச நாள் கியூபாவிலே மினிஸ்டரா இருந்தாரு. அப்றம் ஆஃப்ரிக்காவில காங்கோ போய் புரட்சி பண்ணார். சக்ஸஸ் ஆகல. அப்டியே பொலிவியா வந்தார். அங்க அவர அமெரிக்க சி.ஐ.ஏ. புடிச்சு சுட்டு கொன்னுட்டாங்க.”

அவன் அதிர்ச்சியில் உறைந்து விட்டான். நான் படித்த கட்டுரையை ஒப்பித்து கொண்டிருந்ததால் இதை கவனிக்கவில்லை. பிறகு சமாளித்து ”சி.ஐ.ஏ. ரொம்ப கெட்டது, நம்ம நாட்டுல புடிச்சா ஜெயில்லதான் போடுவாங்க.” என்றேன்.

“அவங்க ரெண்டு பேருமே காலேஜெல்லாம் படிச்சு முடிச்சு 25 வயசுல தான் புரட்சி பண்ணாங்க. நாம இப்ப தியரியெல்லாம் நல்லா படிச்சு வச்சுக்கணும். படிப்ப முடிச்சிட்டுதான் புரட்சி. சரியா?” அவன் குழப்பத்துடன் தலையசைத்தான்.  

கல்யாணமே செய்துகொள்ளக் கூடாது என்று நானும் என் தம்பியும் பிரதிக்ஞை எடுத்திருந்தோம். அதுபோல் நம் கம்யூன் உறுப்பினர்கள்  எல்லோரிடமும் உறுதிமொழி வாங்கிவிட வேண்டியதுதான். கண்ணெதிரில் நாங்கள் பார்த்த குடும்பங்களில் எல்லாம் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் கொத்திப் பிடுங்கிக் கொண்டிருந்தனர். என் பெற்றோரே உதாரண தம்பதியாய் திகழ்ந்து கொண்டிருந்தனர். சண்டை வராத நாளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பள்ளியில் என் புரட்சித் திட்டம் எதுவும் எடுபடவில்லை. பெண்கள் பள்ளி. இதுகள் மூளையில் இதையெல்லாம் ஏற்றுவது கடினம் என்று உணர்ந்திருந்தேன். ஆனால் என் திருமணப் பிரதிக்ஞையை மட்டும் நெருங்கிய தோழிகளிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன். பத்தாம் வகுப்பில், என் உயிர்த் தோழிகள் உமா மஹேஸ்வரி, பர்ஜானா பேகம், நாடியம்மாள். மூவரில் பர்ஜானா பேகம் மட்டும் ஏளனப் புன்முறுவலுடன், மையிட்ட அழகிய கண்களை பாதி தழைத்து “இந்த மாதிரி சொல்றவங்கதான், மொதல்ல கல்யாணம் பண்ணுவாங்களாம்“ என்றாள். ”யாருடி ஒனக்கு சொன்னா” என்று அவள்மேல் பாய்வேன். அவளும் அசராமல் “என்னோட உம்மா” என்பாள் . அவளையும், அவள் உம்மாவையும் சேர்த்து வைத்து கும்மவேண்டும் போல் வெறிவரும் எனக்கு. அவள் வாக்கு பலித்தே விட்டது. 21 வயதிலேயே எல்லோரையும் முந்திக் கொண்டு திருமணம் செய்து கொண்டேன்.

இப்படி புரட்சிச் சிந்தனைகளை உருவாக்கும்போதே , நான் மிகத் தீவிரமாக ரஷ்யாவை கவனித்துக் கொண்டுமிருந்தேன். ”பெரிஸ்த்தோராய்கா”  மற்றும் “கிளாஸ்னோஸ்ட் [பனி உருகுதல்]” எனும் ஜனநாயகத் தன்மையுடைய இரண்டு  சீர்திருத்தங்களை கோர்பச்சேவ் கொண்டுவருவது, கம்யூனிசத்துக்கே உலை வைக்கும் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை.

மிக்கேல் கோர்பச்சேவ்

அமெரிக்கா மூன்று பரிந்துரைகளை கோர்பச்சேவிடம் முன் வைத்தது. சோவியத் யூனியன் உடையாமல் அவரே தலைவராக நீடிப்பது, இரண்டாவது போரிஸ் எல்ட்சின் மற்றும் இதர பால்டிக், பலாரஸ், உக்ரைன் பிரதேசங்களை ஆதரித்து அவர்களின் பிரிவை அனுமதிப்பது, மூன்றாவது எல்லாவிதமான கொள்கைகளையும் மாற்றி பொருளாதாரம் உட்பட தாராளமயமாக்குவது. முதல் நிபந்தனையை சொல்வதுபோல் சொல்லி அமெரிக்கா அதற்கு செக் வைத்துக் கொண்டும் இருந்தது. கட்சியின் தலைவராக கோர்பச்சேவின் இடம் அசைக்க முடியாதது என்றும் அணு ஆயுத மற்றும் செம்படையின்  வலிமை குறித்த அச்சமும் அதற்கு இருந்தது. எனவே ஒரே சமயம் புஷ் கோர்பச்சேவிடமும், மற்ற அமெரிக்க பிரதிநிதிகள் எல்ட்சினிடமும் மாறி மாறி காய் நகர்த்திக் கொண்டிருந்தனர்.

1991 ஆகஸ்டில் எங்கள் திருமணம். அதைத் தொடர்ந்த தேனிலவு பயணங்களில் நானும் ஜெயனும் வேறொரு உலகில் இருந்தோம். இருவர் மட்டுமேயான உலகு. புறச் சூழல் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் மிதந்து கொண்டிருந்தேன். ஜெயனும் அப்படியே.  என் நினைவில் ரஷ்யா எங்கோ தொலை தூரத்தில் கிடந்தது. அதே மாதத்தில்தான்  கட்சியின் தீவிர கம்யூனிஸ்ட்கள் கோர்பச்சேவை எதிர்த்து ஓர் ஆயுத புரட்சியை நிகழ்த்தி  அது தோல்வியில் முடிந்திருந்தது.  உடனே அவர் தன் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி, அதிபராக மட்டும் நீடித்து, ஆட்சியில் கட்சியின் தலையீட்டை முற்றிலுமாக விலக்கினார். ஆனால் கோர்பச்சேவின் வீழ்ச்சியை உலகம் அறிந்தது. தொடர்ந்து சரசரவென்று திரை விலகியது. பலாரஸ், உக்ரைன் பகுதிகள்  தங்கள் விடுதலையை அறிவித்துக் கொண்டன.  நாங்கள் அப்போதும் நம்பிக் கொண்டிருந்தோம். அஸ்திவாரம் பழுதான ஒரு கட்டிடம் விழாது என்று அது விழும் வரை நம்பிக் கொண்டிருக்கும் குடியிருப்புவாசிகளைப் போல.

1991 டிசம்பரில், சு.ரா வின் அழைப்பின் பேரில்  நாகர்கோவில் வந்து அவர் வீட்டில் ஒரு வாரம்  இருந்தோம். தீராத தேனிலவு. இருநாட்கள் மட்டும்  கன்யாகுமரி வந்து விவேகானந்தா கேந்திராவில் அறை எடுத்து தங்கியிருந்தோம். டிசம்பர் தொடக்கத்தில்தான்  ஜெயன் விஷ்ணுபுரம் எழுத ஆரம்பித்திருந்தார் .  நானும் அவருடன் சேர்ந்து அந்த நாவலை எழுதிக் கொண்டிருப்பதைப் போலவே விவாதிப்போம். எப்போதுமே ”ஜெயன், நம்ம விஷ்ணுபுரத்தில” என்று ஆரம்பிப்பேன். அதை அவர் மிகவும் விரும்பினார். சுற்றிலும் உள்ள மனிதர்கள் யாரும் கண்ணில் பட மாட்டார்கள். சோனாவும், ஹரித துங்காவும், அஜிதனும், காஸ்யபனும் மனம் முழுதும் நிறைந்திருந்தனர். முதலில் அவர் எழுத தொடங்கியதே நாவலின் நடுப்பகுதிதான். 

போரிஸ் எல்ட்ஸின்

மாலை ஒரு சுற்று கடற்கரையில் சுற்றி விட்டு அறைக்கு திரும்புகையில் , சிரித்து பேசியபடியே ஒரு சிறிய ஹோட்டலில் தேநீருக்காக ஏறினோம். அங்கு அமர்ந்திருந்த மக்களின் பரபரப்பையும் பதட்டத்தையும் பார்த்து என்னவென்று புரியாமல் அங்கு ஓடிக் கொண்டிருந்த  கறுப்பு வெள்ளை டிவியை நாங்களும் பார்த்தோம். அதில்  சோவியத் யூனியன் உடைந்து, அரிவாள்- சுத்தியல் கொடி இறக்கப்பட்டு, ருஷ்யாவின் பழைய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது காட்டப்பட்டது. எல்ட்ஸின் வென்றிருந்தார், கோர்பச்சேவ் தோற்றது அறிவிக்கப்பட்டது.   ரஷ்யா என்ற பொன்னுலகம் வீழ்ந்தது. கனவுகள் சிதைந்தன. கோர்பச்சேவ் அமெரிக்க ஏஜெண்ட் என்று வசைபாடப் பட்டார்.

எனக்கு தேநீர் தொண்டையில் இறங்க மறுத்தது. கண்ணீருடன் ஜெயனைப் பார்த்தேன். அவரும் கலங்கிப் போயிருந்தார். அவசர அவசரமாக அறையைக் காலி செய்து விட்டு சு.ரா வைப் பார்க்க விரைந்தோம். எங்கள் இருவருக்குமே அவரது அருகாமை தேவைப்பட்டது. சு.ரா. முகம் சிவந்து, அமைதியின்மையுடன் காணப்பட்டார்.

அன்றிரவு நெடுநேரம் தேம்பித் தேம்பி அழுதேன். மாபெரும் கனவு உடைந்து தகர்வதை எளிய உள்ளத்தால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஜெயன் என்னை பலவாறாக சொல்லி நீண்ட நேரம் சமாதானம் செய்தார். பிறகு 1999 ல், பின் தொடரும் நிழலின் குரல் நாவல் வெளிவந்த போது, நான் நெடுந்தூரம் நகர்ந்து வந்திருந்தேன். வரலாற்றில் சித்தாந்தங்களின் இடம், வரலாறு பலவிசைகளால் இயக்கப் படுவது, ஒற்றைப் படையாய் அதைப் புரிந்து கொள்வதின் அபத்தம் எல்லாவற்றையும் காலமும் படிப்பும் எனக்கு புகட்டியிருந்தது. 

ஆனால் தீ போல் எரிந்து கொண்டிருந்த அந்த அருண்மொழியின் பரிசுத்தமான இலட்சியவாதம் ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பும் கூட என்று தோன்றும். அதுதான் அவளை வாசகியாக்கியது, சிந்திக்க  வைத்தது, வாழ்வுக்கு அர்த்தம் அளித்தது. அது என் கனவு மட்டுமல்ல , அந்தக்காலகட்டமே சேர்ந்து அந்தரங்கமாக கண்ட கனவு. அதன் சிதைவு நாம் வாழும் இவ்வுலகம் தன் கனவுகளை இழந்ததன் கதைதான். இன்றைய வலதுசாரி எழுச்சிகள் அங்கிருந்து தொடங்குபவையாக இருக்கலாம். ஆனால் மானுடம் தன் கனவுகளை இழந்துவிடுவதில்லை. அவை மீண்டு வந்துகொண்டே தான் இருக்கும்.

***

12 thoughts on “சின்னச் சின்னப் புரட்சிகள்

 1. அன்பின் அருணா
  நீங்கள் எழுதினவற்றில் மிகச்செறிவானதும் ஆழமானதும் எனக்குமிக பிடித்தமானதும் இந்த கட்டுரை தான்
  . சின்ன வயதில் பெரிய விஷயங்களுக்கான விதை விழுந்தது அக்கனவுகள் சிதைந்தது புதியகனவுகள் முளைத்ததையெல்லாம் அருமையா சொல்லியிருக்கீங்க. நான் ரஷ்ய இலக்கிய உலகையும் அரசியலையும் கொஞ்சமும் அறிந்துகொள்ளவேயில்லை எனும் குற்றவுணர்வை வாசித்ததும் அடைந்தேன்.ஆனால் ரஷ்யா பக்கத்தில் இருப்பதுபோல ஒரு எண்ணமும் ரஷ்யாவின் மீது பிரியமும் ஏற்பட்டிருந்தது. பள்ளியில் படிக்கையில் ரஷ்யகதைப்புத்தகங்கள் மலிவுவிலையில் கிடைக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நடத்தும் கண்காட்சிகளில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கெல்லாம் அழகிய வண்ணப்புத்தகங்கள் கிடைக்கும்.பனி கொட்டும் ஊர்களை, அங்கிருக்கும் மூன்று கரடிகளை, பொம்மை பையனை செக்கச்சிவ,ந்த ஆப்பிள்களை ஜுனிபர் பைன் மரங்களை எல்லாம் அந்த புத்தகங்கள் என் சிறிய உலகிற்குள் கொண்டுவந்தன. சே வை எனக்கும் பிடிக்கும். தேனிலவில் ரஷ்யாஉடைந்ததன் பொருட்டு கண்ணீர் விட்டழுத ஒரே பெண் நீங்களாகத்தானிருக்கும்.//அவளையும், அவள் உம்மாவையும் சேர்த்து வைத்து கும்மவேண்டும் போல் வெறிவரும் எனக்கு//🙂🙂🙂
  உங்கள் தம்பியின் பெயரை குறித்து கேட்க நினைத்திருந்தேன் அறிந்ததில் மகிழ்ச்சி.பூஸ்ட் குடித்து பலகாரம் சாப்பிடுவதிலேயே குற்றஉணர்ச்சி அடைந்த அந்த தூய உள்ள கொண்ட சிறுமியின் புரட்சிக்கனவுகள் வளர்ந்து இந்தியாவையே ஒருங்கிணைக்குமளவிற்கு வளர்ந்து அந்த ரயில்வே பணியாளர் காட்டிய உண்மையில் உடைந்தது உண்மையிலேயே வருத்தமளித்தது. கசக்கும் உண்மைகளை சந்தித்த தருணமல்லவா!
  //புரட்சிப் பணிகளுக்கு முன்  ரத்தகாயங்கள் ஒரு பொருட்டா, என்ன?//🙂🙂🙂
  சிறப்பான பதிவு. கனவுகளை வாசிப்பை அறிதலை உடைதலை எல்லாம் ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் அருணா!

  Liked by 1 person

 2. உங்கள் தளத்தில் வருவதை முதல் முறை படிக்கிறேன். இயல்பான நடை. வளர்க உங்கள் எழுத்துப் பணி.

  Like

 3. கள்ளமின்மையின் சுகந்தம் பரவும் எழுத்து நடை!

  Contagious innocence is likely to inspire the readers’ psyche…

  Splendid humor😇 in Endearing Jeymo’s reference for this write up

  Most welcome reading break – appropriate to neutralize the pandemic pessimism…

  Like

 4. வாசகனை உள்ளிழத்து கொள்ளும் எழுத்து. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  Like

 5. இதுவரை ஜெ.-யின் எழுத்துக்களை மட்டும் பகிர்ந்துக்கொண்டிருந்தோம். இனி உங்களுடையதையும் !

  Like

 6. சுவாரஸ்யமான கட்டுரை. ஒரு எழுத்தாளரை கை பிடிப்பதற்கான ஆற்றல் இடதுசாரி சிந்தனையிலிருந்து மட்டுமே விளைய முடியும். ரஷ்யா போனால் என்ன, உங்களுக்கு ஜெமோ கிட்டியிருக்கிறார்….🙂

  Like

 7. அன்புள்ள அருணா அக்கா,
  நலமா? ஆசானது தளத்தில் உங்களது நூல் வாசிப்பனுபவ கட்டுரைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஏன் நீங்கள் தீவிரமாக எழுத்துக்கு வரவில்லை என தோன்றியதுண்டு. ஆனால் இப்போது எனக்கு ஆச்சர்யமாக இல்லை. உங்களைப் பற்றிய அறிமுகத்தில் ‘வாழ்வில் மிகவும் அணுக்கமான ஆசிரியர் ஜெயமோகன்’ என்று இருந்ததைப் பார்த்தவுடன் அந்த ஆசிரியரின் மாணவி எழுதாவிட்டால்தான் ஆச்சர்யப்படவேண்டுமென நினைத்துக்கொண்டேன்.

  சிங்கப்பூரில் சரவணன் உங்களிடம் என்னை முதன் முதலில் அறிமுகப்படுத்தியபோது எனது ஊர் பட்டுக்கோட்டை என்றவுடன் உங்களது விழிகள் மலர்ந்ததைக் கண்டேன். வாஞ்சையாக எனது கைகளைப் பற்றிக்கொண்டு புன்னகைத்தீர்கள். பிறகுதான் உங்களுக்கும் பட்டுக்கோட்டைக்கும் உள்ள தொடர்பை அறிந்தேன். உங்களது எழுத்தில் தோன்றப்போகும் பட்டுக்கோட்டைக்காக காத்திருந்தேன். சுயநலம்தான். எனது இளமைக்கால நினைவுகளை உங்களது கண்கள் வழியாகப் பார்க்கும் ஆசை. உங்கள் எழுத்து என் நினைவுகளைக் கிளர்த்திவிட்டது. நீங்கள் குடியிருந்த வளவன்புரத்தில் மரங்கள் சூழ்ந்த என் தோழியின் வீட்டிற்கு நான் போவதுண்டு. நீங்கள் டிவிஎஸ்50 இல் சென்றது போல நானும் கரிக்காட்டிலுள்ள ஸ்டேட் பேங்க் காலணிக்கு மிதிவண்டியில் வியர்க்க, வியர்க்க செல்வதுண்டு. பாவாடை தாவணியில் நீங்களும் பாவாடை சட்டையில் நானும் ஒரே சாலையில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு கடந்து போயிருக்கலாம். வாழ்வு யார் யாரை எப்படியெல்லாம் கொண்டு வந்து இணைக்கிறது என்பது மாயப்புதிர்தான்.

  என் அப்பாவிற்கு அஞ்சலில் வரும் மெல்லிய சோவியத் ரஷ்யா இதழ் ஒன்றை நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல அதன் வழவழ தாள்களுக்காகவும் மணத்திற்காகவும் சேர்த்து வைத்த காலமுண்டு. இலட்சியவாதம் அல்லது ஏதாவது ஒரு சித்தாந்தத்தை இறுகப் பற்றிக்கொண்டு அதற்காக நிற்கவும் அதைப்பற்றி பேசவும் ஆண்கள் அந்த வயதில் தெருவுக்குப் போகிறார்கள். ஆனால் பெண்களுக்கோ அது அறவே வாய்ப்பதில்லை. அதனால்தான் புரட்சி, இலட்சியவாதம் என்றவுடன் அவள் முதலில் திருமணத்தை மறுக்கிறாள். ஆனால் அந்த வயதில் நாம் கொண்டிருந்த மாசற்ற தூய கனவுக்குச் சாட்சியாக இருப்பது அந்த கனவு நிதர்சனத்தில் அழிக்கப்படும்போது நம் விழிகள் சொரியும் கண்ணீர்தான். உங்கள் எழுத்து நான் கொண்டிருந்து இழந்த இலட்சியவாதத்தை, கனவை நினைவூட்டிவிட்டது. யாருக்கும் தெரியாமல் அழுது தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

  அன்புடன்

  அழகுநிலா
  சிங்கப்பூர்

  Liked by 1 person

  1. அன்புள்ள அழகுநிலா,
   உங்கள் கடிதம் எனக்கு இளமை நினைவுகளைக் கிளர்த்தியது. பட்டுக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்ட மற்றுமொருவரையும் சந்தித்திருக்கிறேன். அவர் மாரிமுத்து என்ற யூமா வாசுகி. எழுத்தாளர். புற நகரில் கிராம சூழலும் நகரின் நடுப்பகுதியில் நகரின் அனைத்து வசதிகளும் இணைந்த அற்புத கலவை பட்டுக்கோட்டை. முத்துப்பேட்டை ரோடு, திவான் பங்களாவின் எதிர்ப்புறத்திலிருந்து செல்லும் அவ்வளவாக போக்குவரத்து இல்லாத ஸ்டேஷன் செல்லும் சாலை இவைதான் நான் விழுப்புண்களுடன் என் அப்பாவின் வண்டியை பழகிக் கொண்ட சாலைகள். பத்து வருடத்திற்கு முன் என் பெற்றோர் எல்லாவற்றையும் விற்று விட்டு திருவாரூர் வந்து செட்டில் ஆகிவிட்டனர். 2019 ல் நான் சிங்கை வந்தபோது சித்ரா ஏற்பாடு செய்த விருந்தில் கூடினோம் இல்லையா? இனிய நினைவுகள்.
   அன்புடன்,
   அருண்மொழி

   Like

 8. வணக்கம்,தாங்கள் பிறந்து வளர்ந்தது பட்டுக்கோடையா?
  ஜேமோவின் ஊர் நாகர்கோவில்தானே?
  காதல் திருமணமா?

  Like

 9. எள்ளல், எகத்தாள நடையில் ஒரு தத்துவத்தை, வாழ்வியலை துல்லியமாக தொட்டுச்சொன்றிருக்கிறீர்கள். நெகிழ்வையும், உவகையையும் அளித்தது. நன்றி. தொடர்க.

  Liked by 1 person

 10. Respected Ma’m, Thank you for sharing your writing. Your fertile mind and creativity is inspiring. It is courageous of you to write and share it to the world. ( Not worrying about the comparison to your husband’s writing.) I wish your creative journey continues and you go a very long way. My best wishes and prayers for your well being.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s