சின்னச் சின்னப் புரட்சிகள் – கடிதங்கள்

மேடம்,

நீங்கள் அந்த tvs இல் இருந்து விழுந்தது ஒரு சித்தாந்த வீழ்ச்சி, ஜெ வை மணந்தது ஒரு சித்தாந்த துரோகம் 😀.

1995 இல் என் சட்டக் கல்லூரி நாட்ககளில் “செயல் இதுவே சிறந்த சொல்” என்கிற மந்திர வாக்கியம் மூலம் எனக்கு தனது சுருட்டுடன் அறிமுகமானார் “சே”. அப்போது சோவியத் வீழ்ந்து ஐந்தாறு ஆண்டுகள் கடந்து இருந்தது. அதன் பின் அவர்தான் என் ஆதர்ச நாயகன். அதை தொடர்ந்து சேலத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு நண்பர் ஒருவருடன் தற்செயலாக செல்ல நேரிட்டது. முகப்பில் இருபுறமும் ஸ்டாலின் மற்றும் லெனின் ஓவியங்கள். ஸ்டாலினின் கம்பீரமான மீசையை பார்த்துக் கொண்டிருந்த என்னை ஒரு தோழர் இந்தப் பக்கம் உள்ளவர் லெனின் அவரது புருவம் கேள்விக்குறி போல இருக்கும் என ஆற்றுப் படுத்தினார். உடனே “கற்பனாவாத சோசலிசம்” என்னுள் துளிர்த்தது.

பின்னர் லாவ்டிரட்ஸ்கியின் “சே”, காஸ்டனாடாவின் சே வரலாறு, அமரெந்தா மொழியாக்கம் செய்த பொலிவிய நாட் குறிப்புகள், அதன் பின் பிடலுக்கு கடிதங்கள், அக்டோபர் புரட்சி என வாசித்தேன். தீவிரம் மிக்க நாட்கள் அவை. ஒரு புத்தகத்தில் லெனினின் மனைவி குரூப்ஸ்கயா புகைப்படம் இருந்தது. பேரழகியாகத் தெரிந்தார், பார்த்துக் கொண்டே இருந்தேன்.

இப்போது திரும்பிப் பார்க்கையில் உங்களைப் போலவே சே, ஸ்டாலின் மற்றும் லெனினின் புகைப்படங்கள் மீதான ஈர்புதான் என்னை கம்யுனிஸ்ட் சித்தாந்த விரும்பியாக மாற்றியது என உணர்கிறேன். சித்தாந்தம் முதல் ஆளுமைக் கவர்ச்சி பிறகு என்கிற வரிசையில் நகர்கிறோம் என நாம் நினைத்தாலும் உண்மையில் தனி மனித கவர்ச்சி முதல் கருத்தியல் பிறகு எனும் இந்தத் தலை கீழ் பாதையில் தான் நாம் துவங்குகிறோம், பிறகு நமது நம்பிக்கைகள் சரிகிறது.

ஒரு கள்ளமற்ற அறியாமையில் துவங்கும் அரசியலும் அக் கனவு கலையும் வலியும் இக்கட்டுரையில் அழுத்தமாகவே வெளிப்பட்டு உள்ளது. குறிப்பாக தேவராஜ் மாமாவை சந்திப்பதும் அவர் எதார்த்தத்தை எடுத்து முகத்தில் அடிப்பதும் ஒரு புனைவுத் தருணம். எதிர் வீட்டு உழைப்பாளிகளை பார்த்து குற்ற உணர்வடைவது, சிற்றில் சித்தாந்த புரட்சி இயற்றுவது, வீட்டில் ரகசிய நடவடிக்கைகள், மணம் மறுக்கும் லட்சியத்தை ஏற்பது எல்லாம் ஒரு நாவலில் உள்ள பக்கங்கள். உங்கள் தேனிலவில் சோவியத் உடைவது கூட ஒரு வாழ்க்கைத் தருணம். ஒரு புனைவாளனுக்கு உரிய கச்சாப் பொருள் உங்களிடம் போதுமான அளவு உள்ளது. அந்த சோவியத் தாளின் மெருகும் வழவழப்பும் கனவின் பொலிவைக் கூட்டுகிறது.

நான் பின்தொடரும் நிழலின் குரலை 2007 வாக்கில் படிக்கிறேன். ஜெ ஒரு பயண நிமித்தம் என் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது இந்த புத்தகத்தை பரிசளித்தார். அவர் மறு அறையில் உறங்க நான் அதை படிக்கத் துவங்கினேன், இப்போதும் நான் வியக்கும் பொற் தருணம் அது. அப்போதே என் மனதில் சே வும் லெனினும் பின்னகரத் துவங்கி விட்டனர். மெல்ல மெல்லக் காந்தி முன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார்.

இப்போது பார்க்கையில் சே, லெனின் உருவங்களின் கவர்ச்சி சற்று மங்கிவிட்டது, அந்த சுருட்டுப் புகை மறைந்துவிட்டது. கதராடை காந்தி ஒரு பேரழகனாகத் தெரிகிறார். இதை வரித்துக் கொடுத்தது இக்கட்டுரை தான்.

கிருஷ்ணன், ஈரோடு.

***

அன்பான அக்கா. சின்ன சின்ன புரட்சிகள் வாசித்தேன்.

அப்பா ‘கண்டிப்பான நாத்திகர்’ என்பதை வாசித்தபோது ‘தீவிரமான’ அல்லது ‘பிடிவாதமான’ நாத்திகர் என்பதைதான் சொல்கிறீர்களோ என நினைத்தேன். ஆனால் அவரிடம் பயந்தே கம்யூனிஸம் பழகினீர்கள் என வாசிக்க வாசிக்க கண்டிப்புதான் சாரியான பதமென பட்டது. அப்படியே வாசித்தபடி சென்றால், முடக்கி வைக்கப்பட்ட மனித வெடிகுண்டுடன் இத்தனை நாள் நான் பேசிக்கொண்டிருப்பது அதிர்ச்சியளித்தது. 🙂

அக்கா, இந்தப் பகுதியை என்னால் ஒரு நல்ல சிறுகதையாகவே வாசிக்க முடிந்தது. கள்ளமில்லா இரு குழந்தைகளின் உள்ளம் ஒவ்வொரு சொல்லிலும் வெளிபட்டுக்கொண்டே இருக்கிறது.

புனைவில் அதை நிகழ்த்த பலரும் தவறிவிடுவது உண்டு. அல்லது, innocent – நின் நெகிழ்வுத்தன்மையை அனுமதிப்பதில்லை. ஆனால் இந்தக் கட்டுரையில் அசாதாரணமாக அந்த அபோதத்தின் பரபரப்பு வெளிபட்டபடி உள்ளது.

பின் தொடரும் நிழலின் குரல் உங்களை என்ன செய்தது என அறிய ஆவல் எழுந்தது.

கட்டுரையின் இறுதியில் உங்கள் கண்ணீர் சோவியத் யூனியன் உடைவால் மட்டுமல்ல நீங்கள் உங்களுக்குள் அந்தரங்கமாக இழந்த உங்களின் குழந்தமையின் ஒரு பகுதியாலும்தான்.

எழுத்தாளர் ம.நவீன்,

மலேசியா.

***

அன்புள்ள அருண்மொழிநங்கை Ma’am,

இன்றுதான் “சின்னச் சின்னப் புரட்சிகள்” வாசித்தேன். ஒரு நாவல் எழுத ஆசை இருப்பதாக எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சாரின் கடிதத்திற்கான பதிலில் கூறியிருந்தீர்கள். இந்த கட்டுரையை வாசித்த பிறகு அந்த நாவலுக்கான எதிர்பார்ப்பு என் மனதில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஒரு லட்சியவாதம், அதன் சிதைவு நோக்கிய பயணம், அந்த பயணத்தின் வழியே ஒரு பெண்ணின் வாழ்வு என்று ஒரு நாவலுக்கு தோதான கதைக்கரு இந்த கட்டுரையிலேயே இருக்கிறது. பதின் பருவங்களில் ஏதோவொரு “சாரி” லட்சியவாதத்தால் ஈர்க்கப்படாமல் போனவர்கள் பெரும்பாலும் பிற்காலங்களில் கனவுகள் வற்றிப்போன ஒரு வெறுமையைத்தான் சென்றடைகிறார்கள். அந்த லட்சியவாதங்களில் திளைத்து மீண்டவர்கள் அல்லது அவற்றின் வழியே தங்களை களப்பணிகளை நோக்கி செலுத்திக்கொண்டவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் இந்த லட்சியவாதங்கள் தரும் பெரும் கொடை என்பது ஒரு மகத்தான கனவுதான். அந்த பெருங்கனவு அவற்றிலிருந்து மீண்டவர்களுக்கும்கூட வேறு பெருங்கனவுகளை காண்பதற்கான சாத்தியங்களை அமைத்துத் தருகிறது. அது இல்லாமல் போனவர்கள் அவர்களின் சில்லறை வாழ்க்கையையே நிறைவாக ஏற்றுக்கொண்டு வாழ முயற்சித்து கடைசியில் ஒரு வெறுமையில் சென்று நின்றுவிடுகிறார்கள். லட்சியவாதங்களால் கவரப்பட்ட பதின்பருவத்தின் நினைவுகள், அந்த லட்சியவாதத்தை நாம் கடந்து வந்தவுடன் ஆரஞ்சுமிட்டாய்களாக மாறிவிடுகின்றன. இனிப்பும் புளிப்புமாக அவற்றின் சுவை அலாதியானது.

தொடக்கத்திலேயே லெனினையும் எங்கெல்ஸையும் வாசித்து லட்சியவாதத்திற்குள் வருவது என்பது பெரிய ஆச்சரியம்தான். பெரும்பாலும் என் தலைமுறையினருக்கு “சே குவேரா” தான் முதலில் அறிமுகம் ஆகியிருப்பார். லெனின், மார்க்ஸ் போன்ற சிந்தனையாளர்களைவிட சே குவேராவின் சாகசங்கள்தான் பதின் பருவ ஆண்களுக்கு அதிகம் ஈர்ப்பை தரக்கூடியது. அது ஒரு விதமான பெண்களை கவரக்கூடிய லட்சியவாத நாயகனின் பிம்பம் அல்லவா? சொட்டை தலை மாமாவையும் கோரை தலை தாடி தாத்தாவையும்விட வாயில் சுருட்டுடன் காடுகளில் அமர்ந்து “தீவிரமாக” எதையோ எழுதிக்கொண்டிருக்கும் “சே” மிகவும் கவர்ச்சிகரமானவர். வலது சாரி லட்சியவாதாத்தில் இதற்கு நேர் எதிர் செயல்பாடுதான் சுவாமி விவேகானந்தரை ஆதர்சமாக ஏற்றுக்கொள்ளுதல். அந்த வசீகரம் முதலில் வந்த பிறகுதான் மார்க்ஸ், எங்கெல்ஸ், கோல்வால்கர் எல்லாம்  வருவார்கள். அவர்களெல்லாம் வந்துவிட்டால் லட்சியவாத நாயகர்களின் ஆட்டம் தாங்க முடியாது. 100 பக்கங்கள் உள்ள புத்தகத்தில் மொத்தத்துக்கு 12 பக்கங்கள் புரிந்துவிட்டால் போதும் “கேளடா மானிடா” என்று நாங்கள் முழங்கத் தொடங்கிவிடுவோம். பிரின்சிபலுக்கு பயப்படாதவர்கள் கூட எங்களை கண்டால் தெறித்து ஓடிவிடுவார்கள். அப்படி ஓடியவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது சில வருடங்களுக்கு பிறகே புரியும். அப்போது திரும்பவும் சே குவேராவிடம் தஞ்சம் அடையவும் தன்மானம் இடம் கொடுக்காது. உங்கள் கட்டுரையில் “பள்ளியில் என் புரட்சித் திட்டம் எதுவும் எடுபடவில்லை. பெண்கள் பள்ளி. இதுகள் மூளையில் இதையெல்லாம் ஏற்றுவது கடினம் என்று உணர்ந்திருந்தேன்.” என்ற வரிகளை படித்தவுடன் வெடித்துச் சிரித்துவிட்டேன். அது எத்தனை அழகான பதின் பருவ பாவனை.

கட்டுரையை வாசித்து முடித்தவுடன் உங்களிடம் ஒன்று மட்டும் கேட்கவேண்டும் என்று நினைத்தேன். லெனினில் தொடங்கி சே குவேரா, கோர்பச்சேவ் வரை அனைவரைப் பற்றியும் இத்தனை அழகான நினைவுகளை கொண்ட உங்கள் வாழ்வில் ஸ்டாலின் என்ற பெயர் எப்போது அறிமுகமானது? தீவிர லட்சியவாதத்தால் ஈர்க்கப்பட்டு புரட்சிக்காக ரத்தம் சிந்திய நீங்கள், லட்சியவாதத்திற்கு சம்பந்தமே இல்லாமல் நேர் எதிர் திசையில் நின்ற அந்த மீசைக்காரரை எப்படி எதிர்கொண்டீர்கள்?

அவர் எப்படி போனாலும், இந்த அற்புதமான கட்டுரைக்கு நன்றி Ma’am. உங்கள் நாவலை வாசிக்க மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன்.

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்

அன்புள்ள விக்னேஷ் ,

 நான் நேரடியாக லெனின் , எங்கெல்ஸ் லிருந்து கோர்பச்சேவ்க்கு ஒரு தாவலை நிகழ்த்தி விட்டேன் . ஸ்டாலின் என்ற சரித்திர நாயகன் என் கவனத்தில் வராமலே போனார் . என்னவென்றால் நான் அப்போது கல்லூரியில் சிறுபத்திரிகை வேட்டை நிகழ்த்தி கொண்டிருந்தேன் . பி.தொ.நி.கு  வழியாக அவரை அறிந்தேன் . சரியான அறிமுகம் என்று பிறகு தோன்றியது . சே யின் பொலிவிய நாட்குறிப்புகள் சில பகுதிகள் மட்டும் வாசிக்க கிடைத்தன.

அருண்மொழி. 

***

சின்னச் சின்ன புரட்சிகள் கட்டுரை மிக நன்றாக இருக்கிறது அக்கா..சிறுவயதில் வழவழத் தாள் கொண்ட புத்தகத்தில் லெனின் அறிமுகமாவது தொடங்கி, பள்ளிப் பருவத்தின் புரட்சிக்கனவும் அதைத் தம்பியிடம் விதைப்பதும், திட்டங்களுக்கான தகவல்களைத் திரட்டுவதும், ஒரு தேநீர் வேளையில் தொலைக்காட்சி செய்தி வழியாக அந்தப் பொன்னுலகம் இல்லாமலானதை அறிந்து கொள்வதும் என நேர்த்தியாக சொல்லிச் செல்கிறீர்கள்!

“எது செய்தாலும் ஆராதனையோடு பார்க்கும் தம்பியோ, தங்கையோ அமைந்தவர்கள் பாக்கியவான்கள்” – நூறு சதவீதம் உண்மை 😍

மனதுக்கு மிக அணுக்கமாக உணர்ந்த கட்டுரை…

சுபஸ்ரீ, சிங்கப்பூர்.

***

சின்னச் சின்னப் புரட்சிகள்

இலக்கிய ஆர்வம் கொண்டு புத்தகம் வாசிக்கும் பெரும்பாலானோருக்கு இளமையில் வரும் தவிர்க்க முடியாத உணர்வு, புரட்சி பற்றிய சிந்தனை. சமூகத்தை சீர்திருத்தி, மேம்படுத்த வேண்டும் அதற்கு புரட்சி ஒன்றே வழி என்று இள ரத்தம் கொதிக்கும் நாட்கள். சே குவாரா அனைவரின் ஆதர்சம்.

உங்களின் இலக்கிய தேடலும், புரட்சி பற்றிய கனவும் படிக்கையில் தன் இளமை கால வாழ்வை வேறு சில நிகழ்வுகளை கொண்டு எழுதியுள்ளதாக அனைவரும் உணர்வார்கள்.

ஆனந்தவிகடன், குமுதம், காமிக்ஸ் என்று ஆரம்பித்து வாஸந்தி, இந்துமதி, சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து என்று தொடர்ந்து பின்பு சிற்றிதழ்கள், ஜெயகாந்தன் என் தீவிர இலக்கியத்துள் நுழைந்து தீவிர இலக்கிய வாசகராக தொடர்வது என்பது மிக சிலரை தவிர்த்து மற்ற அனைவருக்குமான இலக்கிய படிநிலையாக உள்ளது. இதில் உங்கள் அனுபவங்களை மிக சிறப்பாக பதிவு பண்ணியுள்ளீர்கள்.

உங்கள் வாசிப்பு அனுபவத்தை படிக்க ஆரம்பிக்கையிலே ஒரு பரபரப்பும் ஆர்வமும் தொற்றிக்கொண்டது. எவ்வாறு ஜெ வை அறிந்துகொண்டீர்கள், எப்பொழுது, எங்கே, எப்படி என்று ஒவ்வொரு வரியிலும் எதிர்பார்த்தேன் ஆனால் ஒரு வார்த்தையில் கடந்து சென்றுவிட்டீர்கள். பெருத்த ஏமாற்றம்.

இன்றும் தொடரும் தங்களின் பரந்துபட்ட, தொடர், தீவிர வாசிப்பும் அவை தொடர்பான உங்களின் அவதனிப்பும், விமர்சனமும் என்னை வியப்பில் அழ்த்துபவை.

புரட்சி பற்றிய உங்கள் கனவும் அது தொடர்பான சிறு சிறு செயல்பாடுகளும் இன்று பார்க்கையில் சிறு புன்னகையோடு படிக்க தோன்றலாம் ஆனால் பெண்கள் அவ்வாறு இருப்பது அரிதினும் அரிது.

கிருஷ்ணன் கூறினார், பரந்த வாசிப்பு, கம்யூனிச ஈடுபாடு, புரட்சி கனவு என்று கல்லூரி காலத்தில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதெல்லாம் யோசிக்கவே ஆச்சர்யமாக உள்ளது அப்படி இருந்தால் அவர் ஆயிரத்தில் ஒருவர். நான் கூறினேன், ஆம் அவர் அவ்வாறே ஆதலால்தான் அவருக்கு ஜெ என்ற விலைமதிக்க முடியாத பொக்கிஷம் வாழ்வில் கிடைத்துள்ளது.

செந்தில், அட்வகேட்,

சென்னை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s