விட்டு வந்த இடம் – கடிதங்கள்

அன்பின் அருண்மொழி ❤

சில எழுத்து, emotionally நம்மள outburst ஆக வச்சுரும்ல. அப்படி ஆகக்கூடாதுன்னு யோசிச்சுட்டே படிச்சாலும், நம்மளக் கைவிடுறதை, அந்த எழுத்தே நிகழ்த்திருதுல.

இன்னைக்கி உங்க ப்ளாக்ல, ‘விட்டு வந்த இடம்’ படிச்சப்ப அப்படி பீல் ஆச்சு.

அதும் ‘’நான் எழுத்தில் சாதனைகள் நிகழ்த்த இயலாமல் கூடப் போகலாம். ஆனால் தன்னந்தனியாக அமர்ந்து தன் யாழை தானே மீட்டும் ஒரு கண்ணில்லாத பாணன் போல இலக்கியத்திலேயே மூழ்க விழைகிறேன்’

இது படிச்சப்ப, ஒரு மாதிரி unstable ஆகிருச்சு அந்த மொமென்ட்.

சட்டுன்னு கண்ணீர் வர்ற மாதிரி இருந்துச்சு  ஏன்னு தெரில. உங்களோட எங்கயோ கனக்ட் ஆனா மாதிரி வேற feel.

ஒரு எழுத்து என்னிய நிலைகுலைய வைக்குறப்ப, அதை அந்த எழுத்தாளர்கிட்ட சொல்ல ஒரு மாதிரி கூச்சமா, தர்மசங்கடமா இருக்கும் எப்பவும் எனக்கு. அதுனாலவே நிறைய சொல்ல மாட்டேன்.

ஆனா, உங்க கூட எங்கயோ கனக்ட் ஆனா மாதிரி இருந்துச்சா, அதான் சொல்லணும் தோனுச்சு.
அடுத்த தடவ உங்கள நேர்ல பாக்கிறப்ப ஒரு முறை hug பண்ணிக்கிறேன். ❤ loadss of love உங்களுக்கு.

கவிதா சொர்ணவல்லி.

***

அன்பான அக்கா…

இந்தப் பகுதியை நான் வாசித்தவுடன் இது உங்களால் மட்டுமே எழுதக்கூடிய வாழ்க்கை அனுபவம் என்று தோன்றியது.

திருமணமான புதிதில் உலகின் மகத்தான இலக்கியங்களால் உங்களை நிறைத்துள்ளீர்கள். குழந்தைகளின் வருகைக்குப் பிறகு தீராத தாய்மை உணர்வை நிறைத்திருக்கிறீர்கள். இவை இரண்டுக்கும் இடையில் உங்களிடம் குழப்பங்கள் இல்லை; புகார்கள் இல்லை.

நான் அது ஏன் என்று யோசித்தேன். சிறுமியாக இருக்கும் போதிருந்தே உருவாகி வந்த உங்கள் மனநிலையை வாசித்ததன் வழி (கடந்த பகுதிகளில்) அது தொடக்கத்திலேயே நீங்கள் பேரிலக்கியங்களை வாசித்து முடித்ததால் என்று தோன்றுகிறது. அடுத்து, அவற்றை குறித்து உரையாட மகத்தான வாசகர் ஒருவர் உங்கள் அருகில் இருந்துள்ளார். ஒருவகையில் நீங்கள் தொடங்கிய பணியை நிறைவாக முடித்துள்ளீர்கள். பின்னர் குழந்தை வளர்ப்பை. வேலையிடத்தில் அதிகாரியாகவும் நிறைவாகவே செய்திருப்பீர்கள். அப்படித்தான் இருக்கும் இல்லையா?

அக்கா, ஒரு பலம் பொருந்திய யானை தன்னை ஒரு வண்ணத்துப்பூச்சியாக நினைத்துக்கொள்வது எத்தனை ஆச்சரியமானதோ அத்தனை ஆச்சரியமானது உங்கள் வாசிப்பும் அதை பற்றிய எவ்வித பெருமிதமும் இல்லாத உங்கள் எழுத்தும். ஒருவகையில் அந்த மனநிலைதான் உங்களை பறக்க வைக்கிறது. யானை உடலைச் சுமந்து பறக்கும் வண்ணத்துப்பூச்சிபோல.

உங்கள் எழுத்தில் உள்ள அங்கதம் ரசிக்கக் கூடியது. கூடுதலாக அதில் ஜெயமோகனை காண முடிவது. நான் அவர் செயல்களை மனதில் நிகழ்த்திப் பார்க்கிறேன். ஒருவிதத்தில் அவரை ஒளிந்துகொண்டு கவனிப்பது போல ஒரு பரவசம்.

அது தொடரட்டும்

எழுத்தாளர் ம.நவீன்,

மலேசியா.

***

அக்கா..வாசிப்பு குறித்த உங்கள் பதிவு மிகவும் வியக்க வைக்கிறது. ஒரு இடத்தில் குழந்தைகளை என் கண்மணிகள் என் செல்வங்கள் என்று வர்ணிப்பது பாரதிதாசன் கவிதைகள் வரை வாசித்து வந்த தாயன்பு போல தோன்றியது.. அதை வாசிக்கும் போதே அடுத்த வரியில்.. அவர்கள் என் நீட்சி அல்ல.. என் அறியா உலகின் பிரதிநிதிகள் என ஒரு பெரிய ஜம்ப் அடித்து கடந்து விட்டீர்கள்.. வாவ்.. என்று இருந்தது..🙏🏻🙏🏻🙏🏻

மிகவும் ரசித்த வரி..ஐயாயிரம் புக்லாம் இருக்காது.. ஐநூறு இருக்கும்.. எல்லாம் வழக்கமான புனைவுதான் என்கிற வரி..

வீட்டில் அஸ்வத் அவெஞ்ஜர்ஸாக மாறி தானோஸ் அன்ட் கோ வுடன் சண்டைபோட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது ஓரமாக உட்கார்ந்து work from home பார்த்துக்கொண்டிருக்கும் அப்பாவிக்கு இப்படித்தான் லெஃப்டில் ஒரு கிக் விட்டு செல்வான்..😀😀😀

எழுத்தாளர் காளி பிரசாத்,

சென்னை.

***

இனிய அருணாக்கா,

விட்டு வந்த இடம் கட்டுரையை மெல்லிய உவகையும் உணர்வெழுச்சியும்
கொண்டே வாசித்து முடித்தேன்.

தொடர் வாசிப்பின் வழியே இன்று ஆய்வு, அ புனைவு, கவிதை, கட்டுரை இவற்றிடையே உள்ள பேதம் குறைந்து கொண்டே வந்து நான் வாசிக்கும் எதுவும் பிரம்மாண்டமான புனைவு ஒன்றின் ஒரு பகுதியே எனும் நிலையில் இன்று இருக்கிறேன்.

அந்த வரிசையில் உங்கள் கட்டுரைகள் வழியே எழுந்து வரும் அருண் மொழி எனும் கதாபாத்திரமும் அவளது உணர்வுகளும் உவகைகளும் அகம் பற்றிப் பறித்து சுழற்றி அடிக்கிறது.

உலக இந்திய புனைவுகள் சார்ந்து அருணாவின் உலகம் விரியும் தருணம், தர்மபுரி இல்ல நாட்கள் அங்கிருந்து மொழிபெயர்ப்பு குழந்தைகள் தொட்டு இன்றைய எழுத்துக்கள் என அபாரமான வாசிப்பு அனுபவம்.

அருணா குழந்தைகளுடன் இருக்கும் படம் பித்து பிடிக்க வைக்கும் ஒன்று. அப்படியே இளமையில் என் அம்மா. (பிறகொருநாள் புகைப்படம் அனுப்புகிறேன்)

இப்படித்தான் அப்பா தொழில் முடிந்து வந்து உள்ளே கிடந்து உறங்கும் அம்மாவை கதவை இடித்து இடித்து எழுப்ப முயலுவார். தெருவே கூடி விடும்.

அம்மா எழுந்து தூக்கத்தில் நடந்து வந்து, நிலைவாசல் அருகே உள்ள ஆளுயர ஜன்னலை திறந்து விட்டு போய் படுத்து விடுவார்.

பின்னர் அம்மா வசம் இது குறித்து அப்பா கிண்டல் செய்யும் போதெல்லாம், முதலிரவு நாளில் அறைக்குள் அம்மா வர முகூர்த்தபடி சற்று நேரம் ஆக, அப்பா அடித்து போட்ட படி தூங்கி விட்டார். அப்பாவை எழுப்பும் முயற்சியிலேயே இரவு முடிந்து போனதை சொல்லி, உங்களுக்கு நானே போதும் என்று பதிலுக்கு கேலி பேசுவார்.

நூலகம் அமைக்கும் கனவு என்பது எத்தகையதொரு கனவு. 96 அப்பா தவறி, வியாபார கடனுக்கு வீடு உட்பட வீட்டின் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரும் தூக்கி சென்று கொண்டே இருந்தனர். என் சிறிய தேக்கு பீரோ வெளியே சென்றது. திறந்து பார்த்தனர். அன்று வரை நான் வாசித்த காமிக்ஸ் முதல் சுஜாதா வரை உள்ளே. ‘டேய் குப்பையை கொட்டிட்டுட்டு வெறும் பீரோல வண்டில ஏத்துடா” கட்டளைக்குப் பின் பீரோல் நடு தெருவில் குப்புற கவிழ்க்க பட்டது.

என் அந்தரங்கம் முழுதும் தெருவில் இறைக்கப்பட்டு பின்னர் செருப்பாலும் அடி வாங்கிய அவமானம்.

இன்று என் சொத்து என நான் உணர்வதெல்லாம் என் சிறிய நூலகத்தை மட்டுமே. முழு கடனில் முழு பட்டினியில் முழு அவமானத்தில் கிடைத்த சிறு தொகைகளை பதுக்கி பழைய புத்தக கடைகள் வழியே சேர்த்த நூல்கள் பல.

பைத்யக்காரனின் கந்தல் உடை போன்ற என் வாழ்வில் இன்று வரை ஒழுங்காக இருக்கும் ஒன்றே ஒன்று எனது நூலகம் மட்டுமே.

மிகப் பின்னர் அறிந்தேன். சுஜாதா தவறிய பிறகு, அவரது நூலகம் மொத்தமும் கீழே கார் ஷெட் இல் குவித்து போட பட்டது என.

கொடுத்துவைத்தவர் நீங்கள், நீங்கள் ஒளித்து வைத்த வெட்டுக்கிளி அங்கே அவ்வாறே இருக்கிறது. அவமானங்களுக்கு வெளியே நான் பதுக்கி வைத்து பொத்தி வளர்த்த காணாமல் போன அந்த பட்டாம் பூச்சியை தேடிக்கொண்டு இருக்கிறேன். மீண்டு வரும் பார்ப்போம்.

கடலூர் சீனு

***

அன்பின் அருண்மொழிநங்கை அவர்களுக்கு,

வணக்கம்.

ஜெமோ அவர்களின் ‘பத்தினியின் பத்து’ முகங்கள் வழியாக உங்களை முதன்முறையாக அறிந்தேன். அன்றிலிருந்து உங்கள் ஆளுமையைப் பற்றிய குறிப்புகளை இன்னும் ஆர்வமாக கவனிக்கத் தொடங்கினேன். அர்த்த ராத்திரியில் வீட்டினுள் நுழைய பல ஆயுதங்களை எறிந்துக் களைத்திருந்த ஜெமோவை நீங்கள் டால்ஸ்டாயை சுட்டி போக்குக் காட்டியதை நினைத்து வெடித்துச் சிரித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் டால்ஸ்டாயை குழந்தைக்கான நிலாச்சோறு போல் சுளுவாக பயன்படுத்துக்கொண்டதும் அவருக்குத் தெரியும்.

வெகு இயல்பாக உங்கள் எழுத்தில் ஒரு சமனிலை அமைந்து இருக்கிறது. இலட்சியவாதம், குடும்பம், சுயபகடி, காதல், இரசனை, வாசிப்புத் தீவிரமென உங்கள் எழுத்தில் பல கூறுகள் சரியான விதிச்சாரத்தில் அமைந்துள்ளது. உங்கள் சொல்லில் ஒரு புதுமையும் நேர்மையும் உள்ளது.

பேராளுமைகளின் இணையர்கள் பெரும்பாலும் ‘+1’ ஆக குறுகி மறைபவர்களாக இருக்கிறார்கள், அவர்களின் இருப்பே அந்தப் பேராளுமைப் பிம்பத்தை வளர்க்கத்தான் என்று கூட தோன்றும், நீங்கள் முக்கியமான விதிவிலக்கு. குறிப்பாக பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் வந்த பிறகு அவர்கள் புற அழுத்தம் காரணமாகவோ இல்லை சுயமாகவோ தங்கள் தேடலை குறைத்துக்கொள்கிறார்கள் என்பதைக் கண்டு வருந்தியிருக்கிறேன். குழந்தை வளர்ப்பில் நீங்கள் கண்டடைந்தவை எவ்வகையிலும் புறந்தள்ளக்கூடியதோ அல்லது குறைத்து மதிப்பிடப்படுவதோ அல்ல. அது தியாகம் அல்ல, தெளிவான சிந்தனையிலெழுந்த தெரிவு. ஆனாலும் அது முடிவோ எல்லையோ அல்ல என்று புரிந்து கொள்கிறேன். உண்மையில் என்னைப் போன்ற இளம் பெண்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. அவ்வகையில் எழுத்துலகில் உங்கள் மறுவருகை எனக்குப் பேருவகையை அளிக்கிறது.

உங்கள் சாதனைப்பசியே உங்களை துக்கி  மேலேற்றிச் செல்லிடம் சேர்த்து விடும். உங்கள் தனிமையின் யாழிசையைக் கேட்க ஆவலுடன் இருக்கிறோம். உங்கள் வெட்டுக்கிளி எழுந்து வானில் பறக்க என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,

பார்கவி. 

***

அக்கா வணக்கம்,

இன்றைய கட்டுரை மிக முக்கியமான ஒன்று அக்கா.கண்டிப்பாக இது மிக கவனம் பெரும் ஒன்றாக மாறும்.வாசிப்பு பழக்கம்,தீவிரம் ஒரு கால கட்டத்தில் பல்வேறு சூழல்களில் தேங்கி நின்று விடும் அல்லது அப்படி நின்றுவிட்ட பலருக்கு இது ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை…மிக மகிழ்வாக இருந்தது அக்கா.

வெட்டுக்கிளி கதையுடன் முடித்து இருக்கிறீர்கள்.நாம் தேடுவது எதை என்பது தெளிவாக புரிகிறது. செல்ஃப் achievement தான் இப்படி செயல்பட தூண்டுகிறது என்பதையும் உணர முடிகிறது.

ஈஷா பள்ளி மொத்தம் 9 உள்ளது அக்கா.அதிலுள்ள தமிழ் ஆசிரியர்கள் வாசிப்பு குழு ஒன்று சுஷில் அண்ணா உருவாக்கி உள்ளார்.தினம் ஒரு கதை பகிர்வோம்.வாசித்து விட்டு அவர்கள் தங்கள் வாசிப்பு அனுபவம் எழுத வேண்டும்.இன்று உங்கள் கட்டுரை பகிர்ந்து உள்ளேன்.

நன்றிகள் அக்கா.

குமார் சண்முகம்,

Iniya food products.

***

நல்லா இருக்கீங்களா? கொரானா கால வாழ்க்கையும் குழந்தைகளும் எப்படி இருக்கிறார்கள். விட்டு வந்த இடம் வாசிக்க கிடைத்தது. மனதிற்கு நெருக்கமான ஆத்மார்தமான நடை, சொல் முறையில் சரளம்.இன்னொரு குழந்தைக்கான சாத்தியங்கள் இருந்தாலும் நீங்கள் எழுதுவதை தொடர வேண்டும். கிட்டத்தட்ட என் பயணம் போலவும் இருந்தது. மற்ற இந்திய எழுத்தாளர்களை வாசித்ததில்லை. வங்காள, மளையாள மொழிபெயர்ப்புகள் கொஞ்சம்,சம்ஸ்காரா, விவேக் ஷன்பேக் இப்படி.

ரமேஷ் சுப்ரமணியம்.

***

அன்புள்ள அருண்மொழி,

உங்களின் இன்றைய கட்டுரை மிக அருமை. நீங்கள் விட்டு வந்த வெட்டுக்கிளி, இன்னும் உயிர்ப்புடன் இன்னும் அழகுடன் உங்கள் கையிலேயே வந்தமர்ந்திருக்கிறது.
மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,

கல்பனா ஜெயகாந்த்.

***

அன்புள்ள அருண்மொழிநங்கை அவர்களுக்கு,

குரு நித்தய சைத்தன்ய யதி யின் கட்டுரை ஒன்றில் Depression-மனசோர்வு நிலை  என்பது எண்ணையில் விழுந்த ஈ போன்றது என்கிறார். ஈ யின் இறகுகள் ஊரி விடும். என்று அந்த ஈ அதிலிருந்து எழுந்து பறக்கிறதோ அன்று தான் அதற்க்கு விடுதலை. விடுதலையே இங்கு வாழும் ஒவ்வொரு உயிரும் தேடும் உணர்வு என்கிறார். 

நீங்கள் அன்னை நிலையை தேனில் விழுந்த ஈ என்கிறீர்கள். மிக அழகான உவமை. தேனால் பறக்கமுடியாத ஈ. எதிர் உவமை  அல்லது எதிர் தரிசனம். அல்லது முற்றிலும் வேறு ஓன்று. பறப்பதைவிட ஈ க்கு தேனில் இருப்பது இன்பமாக இருக்கலாம் இல்லயா. அன்னையின் நிலையே தன்னை இழந்து இன்னொன்றில் மூழ்கி திளைத்திருப்பது போல. அன்னையாக மாறியே அதை புரிந்துகொள்ள முடியும். விடுதலையும் அன்னையும் மாறாத முரண்களில் ஒன்றா. இல்லை. ஏன் அன்னையாக இருப்பதே ஒரு விடுதலையாக இருக்க கூடாது. அதற்கான உதாரணங்களையும் நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றி,

பிரதீப் கென்னடி.

***

அருண்மொழி அக்காவுக்கு,

விட்டு வந்த இடம் வாசித்தேன். ”குழந்தை என்னும் பரவசத்தை இழக்க விரும்பவில்லை” எனும் எளிய வரியில் திகைத்தும், ஆச்சர்யித்தும் அமர்ந்து விட்டேன்.

இலக்கியமா, குழந்தைகளா என கேள்வி வந்தால் தயங்காமல் குழந்தைகளைத்தான் தேர்ந்தெடுப்பேன் என நீங்கள் குறிப்பிடும் சூழலை தாய்மை எனும் பதத்தில் பொருத்திக் கடந்துவிட நான் விரும்பவில்லை. தாய்மையைத் தட்டைப்படுத்துவதாகவே அது அமைந்துவிடும்.

குழ்ந்தைகளின் இருப்பு என்பது கண்டுகொள்ள முடியாக் கடவுளின் பெளதீகச் சிரிப்பை ஒத்தது. பக்தனாக இருந்த காலகட்டங்களில் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அச்சமயங்களில் கருவறையில் தீபாராதனை காட்டப்படும்போது கடவுளின் முகத்தை கண்களை இடுக்கி உற்றுக் கவனிப்பேன். குழந்தைமையின் குறுகுறுப்போடு அம்முகம் என்னைக் நெருங்கி வருவதைப் போன்ற சிலிர்ப்பு அகத்தில் தானாய் நிகழும். அச்சிலிர்ப்புக்காகவே கோவில் வழிபாடுகளில் தொடர்ந்து கலந்து கொண்டதுண்டு.

ஊர்க்கடவுளான கரிய காளியம்மனுக்கு முன் நின்ற பல தருணங்களில் என்னை அறியாமல் குழந்தை ஆக மாறியிருக்கிறேன்; சில சமயங்களில் கண்களில் கண்ணீர் தானாக வரத் தொடங்கி விடும். நெடுஞ்சாண்கிடையாக அவள் இருக்கும் திசைநோக்கிப் பணிந்து விழுவேன். அவளின் அர்த்த வீராசனத்தில் என்னை இருத்திக் கொண்டதைப் போல ஒரு குதூகலம் உள்ளுக்குள் நிகழும். அங்கிருந்து வெளியே வந்து அமைதியாய் அமர்ந்து கொள்வேன். பக்தியை இன்றுவரை சமர்ப்பணம் என என்னால் ஏற்றுக்கொள்ள இயலவே இல்லை; பக்தியை குழந்தைமை என்றே தீவிரமாய் நம்புகிறேன்.

என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். குழந்தை எனும் பரவசத்தின் வழியாகவே கடவுள் எனும் பரவசத்தைக் கண்டுகொள்ள முடிந்தது. கரத்தில் வேலை ஏந்திக்கொண்டு குமிழ்சிரிப்பு காட்ட குழந்தைவேலாயுதனால் மட்டுமே முடியும். அக்குமிழ்சிரிப்பின் வழியாகவே சமய இலக்கியங்களை வாசிக்கும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றேன். சமய இலக்கியங்கள் வழியாகவே வாழ்வின் பரவசத்தை மறைத்துப் பூசப்பட்டிருக்கும் லெளகீகச் சாயங்களைக் கொஞ்சம் விளங்கிக் கொள்ள முடிந்தது.

இன்றைக்கு இலக்கியம், வாசிப்பு, வாழ்க்கை என ஒவ்வொரு நிலையிலும் தத்தளிப்புத் தருணங்கள் மிகுந்திருக்கின்றன. சிடுக்குகள் மிகுந்ததைப் போன்ற யதார்த்தச் சூழலின் வெக்கையில் திரும்பவும் குழந்தைமையே என்னை மீட்டெடுக்கிறது. குழந்தைமை இல்லா உலகைக் கற்பனை செய்யவே நடுங்குகிறேன்.

கொஞ்சம் தளர்வாய் யோசித்ததில், குழந்தைமை எனும் பரவசத்தின் நீட்சியாகவே வாசிப்பு எனும் பரவசம் வாய்த்ததாகத் தெரிகிறது. மறைத்துவைத்து விட்டு வந்த வெட்டுக்கிளியைச் சென்று பார்த்துவிடும் துடிப்பை வாசிப்பே எனக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் வாசிப்பைக் குழந்தைமையாகவே உருவகிக்கிறேன்.

நீங்கள் ஒளித்துவைத்திருக்கும் வெட்டுக்கிளி அப்படியே இருக்கிறதா, தெரியவில்லை. ஆனால், வெகுநிச்சயம் இருக்கிறது.

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

***

அன்புள்ள அருண்மொழி அவர்களுக்கு,

நலம். எனக்குத் தெரிந்து, புத்தகம் வாசிப்பவர் என்பதால் அவரைக் காதலித்தேன் என்று சொன்ன பெண்கள் இருவர். ஒன்று நீங்கள். இன்னொருவர் மிச்சேல் ஒபாமா. அவர் vogue பத்திரிகைக்கு கொடுத்த நேர்முகத்தில் இப்படி சொல்லியிருப்பார். “பராகாவை எனக்குப் பிடித்ததற்கு காரணம். அவர் அன்பானவராக இருந்தார். என்னை அழகி என்றார். அது எனக்குப் பிடித்திருந்தது.  எல்லோரையும் போல இல்லை. புது வீடு வாங்க வேண்டும், கார் வாங்கவேண்டும், என்று சொல்லமாட்டார். அவருடைய பணம் பெரும்பாலும் புத்தகம் வாங்க செலவளிக்கப்பட்டது.”

அமெரிக்காவில் குழந்தைகள் பன்னிரெண்டாம் வகுப்பு வந்தவடன், அவர்கள் அனைவரையும், ஐந்தாம் வகுப்பு படித்த பள்ளிக்கு அழைத்துச் சென்று , அன்று அவர்கள் பள்ளி நினைவுப் புத்தகத்தில் பிற்காலத்தில் என்னவாக நினைக்கிறார்கள் என்று எழுதிவைத்திருப்பதை வாசித்துக் காண்பிப்பார்கள். அதில் அத்தனை குழந்தைகள் தான் அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என்று எழுதி வைத்திருப்பதைக் கண்டு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து ஆர்ப்பரிப்பார்கள். நம் ஊர் பள்ளியிலும் இந்த முறை இருந்திருந்தால், புரட்சியாளர் அருண்மொழி எப்பொழுது மனம் மாறினார் என்று தெரிந்திருக்கும். இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. உங்கள் எழுத்து எல்லா உண்மைகளையும் எங்களுக்கு சொல்லிச் செல்கிறது.

தமிழ் இலக்கிய உலகில், ஜெயமோகன் மட்டும்தான், நீ எழுத்தாளன் ஆகவேண்டும் என்றால் , மரபை வாசிக்கவேண்டும் என்று வழியுறுத்துகிறார் என்ற பொதுவான மனப்பான்மை உண்டு. உங்கள் கட்டுரையில் எலியட்டும் அப்படித்தான் சொல்லியுள்ளார் என்று வாசித்து சிலர் திகைப்படையலாம். இல்லை, உண்மையிலேயே மனம் மாறலாம். வாரத்தில், ஒரு  நாள், உலகின் ஏதெனும் ஒரு மூலையிலிருந்து ‘அம்மா இங்கே வா வா’ ஸ்டைலில் கவிதை எழுதி, நானும் கவிதை எழுதியிருக்கிறேன் என்று தொந்தரவு செய்கிறார்கள். அவர்களுக்கு இனிமேல் உங்கள் கட்டுரையை அனுப்பி வைக்கிறேன்.

நீங்கள் இத்தனை மொழிபெயர்ப்பு செய்ததை  நான் அறிந்திருக்கவில்லை. அதையெல்லாம் தேடிப்பிடித்து ஒரு நிரலைக் கொடுக்கமுடிந்தால்,  நீங்கள் ஆஸ்டின் வரும் சமயம் என் கையால் காப்பி போட்டுக் கொடுக்கிறேன்.

சைதன்யாவையும், அஜிதனையும், அன்னையின் பார்வையில் எழுதியிருப்பது , அந்தப் புகைப்படம் எல்லாம் சேர்ந்து ஒரு கலைபடம் பார்ப்பதைப்போன்ற உணர்வை கொண்டு வந்துள்ளது.

நீங்கள் தன்னந்தனியாகவெல்லாம் யாழை மீட்டவில்லை. அதைக் கேட்க உலகெங்கும் கேட்பதற்கு ரசிகர்கள் இருக்கிறோம். ராதா , எங்கள் வியாழன் மாலையெல்லாம், உங்கள் பதிவு , இந்திய வெள்ளிக்கிழமை காலையில் வந்துவிடும் என்று காத்திருக்கிறார். அப்புறம் என்ன ? விட்டுவந்த இடத்தை, அனைவரும் சேர்ந்து சென்று பார்ப்போம். மீண்டும் துவங்குவோம்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்.

***

மதிப்பிற்குரிய  அருண்மொழி மேடம் அவர்களுக்கு , 

நலம் என்று நினைக்கிறேன். தங்கள் ” விட்டு வந்த இடம் ” கட்டுரையை படித்தேன். தங்களின் வாசிப்பின் அளவு மற்றும் ஆழம் இரண்டையும்  பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. இத்தனை வருட எழுதாத  எழுத்துக்களின் எழுத்துக்கள் ஒரு துள்ளலுடன் , புத்தம் புதிதாக இருப்பதாக எனக்கு பட்டது. நான் பெரிய வாசகன் எல்லாம் இல்லை தங்கள் பதிவில் இருந்து நான் பெற்றுக்கொண்டது  ஒரு வகையான மகிழ்வை ,உங்கள் அகத்தை அந்த பதிவில் மிக அழகாக வெளிப்படுத்தி இருந்தீர்கள்.

அருமையான மொழி நடை புதிதாக இருந்தது .நான் பெண் எழுத்தாளர்களை அதிகம் படித்தது இல்லை உங்கள் எழுத்து அவர்களின் உலகை காண்பித்தது. என் அம்மா தன் இளமையில் வாசகியாக இருந்தார்கள் பின் குடும்ப சூழல் காரணமாக வாசிப்பை  விட்டு விட்டார்கள் . அவர்களை மீண்டும் இப்போ வாசிப்பின் பக்கம் கொண்டு போக முயன்று கொண்டு இருக்கிறேன். தங்களின் பதிவு  என் அம்மா இத்தனை வருடம் தொலைத்த அந்த வாசிப்பை எனக்கு கொடுத்து உள்ளார் என்று பட்டது.அதனாலே அந்த பதிவு எனக்கு மிக அனுக்கமாக பட்டது.

“இருபத்தைந்தாண்டுகள்! நான் இழப்பை உணர்கிறேனா என்றால் இல்லை. அன்னை என்பதும் ஒரு பெரிய தகுதிநிலைதான். எழுத்து, தாய்மை இரண்டில் ஒன்று என்றால் நான் அதைத்தான் தெரிவு செய்வேன். குழந்தைகளே பெறாத நம்மாழ்வாரும், பெரியாழ்வாரும் கண்ணனைக் குழவியாக்கி தங்களை அன்னையென உணர்ந்த பெருநிலை. ஆணையும் அன்னையென உணரவைத்த குழவியனுபவம் என்பது பேரிலக்கியம் தரும் பித்துநிலைக்கு நிகர்தான்.”

இந்த வரிகளை அவர்களுக்காக எடுத்து கொள்கிறேன். எனக்காக தன் வாசிப்பை அவர்கள் தொலைத்தார்கள். அன்னை என்று மட்டும் நின்று என்னை வாழ்க்கையில் உயர்தியவர்கள் .இப்படி பல அன்னைகளின் இடத்தில் இருந்து உங்கள் எழுத்தை பார்க்க தோன்றியது. மிக ஆழமான பார்வைகளையும் இயல்பாக சொல்லி  செல்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி , 

சுகதேவ், மேட்டூர். 

அன்புள்ள சுகதேவ்,

உங்கள் கடிதம் மகிழ்ச்சியளித்தது. 

குறிப்பாக நடை துள்ளலாக உள்ளது என்று கூறியிருந்தீர்கள். எழுதும் உள்ளடக்கம் உயர் தத்துவம் அல்லது சிக்கலான உளநாடகங்கள் அல்லாத பட்சத்தில் , எளிமையான நடையே நம் கூறுமுறைக்கு மிகவும் ஏற்றது என்று நான் உணர்ந்திருக்கிறேன். அசோகமித்ரன், பஷீர், முத்துலிங்கம் இவர்கள் மூவரும் இளமைப் பருவத்தை எழுதுவதில் என் ஆதர்சங்கள். 

நன்றாக கவனித்து பாருங்கள்.  அவர்கள் எழுத்தில் வயதின் பாரமே இருக்காது. வயதை கழட்டி வைத்துவிட்டு எழுதுவதுபோல.

எழுதும் அக்கணத்தில் நான் அந்த வயதுக்கு போய் விடுகிறேன். என்னுள் இருக்கும் சிறுமியை நான் இன்னும் இழக்கவேயில்லை. வயதின் களிம்புகள் என் மனதில் ஏற நான் ஒரு எல்லைவரை அனுமதிப்பதில்லை.

பிறகு விட்டுவந்த இடம். பெண்கள் அனைவருக்கும் அப்படி ஒரு இடம் உள்ளது. எதன் பொருட்டு என்றாலும் நம் கடமைகளை ஒரு கட்டத்தில் திருப்திகரமாக முடித்து  திரும்பிப் பார்த்து நமக்கே நமக்கான ஒருஇடத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது.

நமக்கான ஆன்ம நிறைவு அல்லது வாழ்வுக்கான அர்த்தம் எப்படி வேண்டுமென்றாலும் அதை சொல்லிக் கொள்ளலாம்.

அன்புடன்,

அருண்மொழி.

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s