விட்டு வந்த இடம்

நாங்கள் காதலிக்கும்போது ஜெயன் அவரிடம் ஐந்தாயிரம் புத்தகங்கள் இருப்பதாக என்னிடம் அடித்து விட்டிருந்தார். நானும் மலைத்து விட்டேன். காதலிக்க அதுவும் ஒரு காரணம். கனவுகளில் ஜெயனும் புத்தக அடுக்குகளும் மாறி மாறி வந்து என்னை இம்சித்தனர்.

பத்தாம் வகுப்பில் என்னை ஒரு தனியார் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று அப்பா விரும்பினார். அதுவரை அரசுப் பள்ளி. மிகப் பிந்திவிட்டது. பட்டுக்கோட்டையில் உள்ள செயிண்ட் இசபெல்லா பள்ளி. பெரிய காம்பவுண்டும், கட்டிடங்களுமாக மிரட்சியைத் தந்தது. நாங்கள் சென்றதுமே ஒரு சிஸ்டர் ஓடி வந்து எங்களை என்னவென்று விசாரித்தார். விஷயத்தைச் சொன்னதும் ஃபாதர் செபாஸ்டினிடம் போகச் சொன்னார். நாங்கள் தயங்கி நின்றதும் அவரே எங்களை அந்த பிரின்சிபாலிடம் அழைத்து சென்றார். அவர் வேகத்துக்கு நாங்கள் ஓட வேண்டியிருந்தது. அவர் எனக்கு கணிதம் எடுக்க பிறகு வந்த ஃப்ளோரா சிஸ்டர். வகுப்புக்கும் ஓடிவந்து ஓடி திரும்பிச்செல்வார்.

சிஸ்டர் அழைத்து சென்ற அந்த அறையை நான் என் வாழ்நாளிலேயே மறக்கமாட்டேன். முதல் பார்வையிலேயே  பிரமித்து நின்றுவிட்டேன்.  ஃபாதர் செபாஸ்டின் இருந்த அந்த அறையில் அவருக்குப் பின்னால் அவ்வறையை நிறைத்து இருந்தது, ஒரு நூலகம் போன்ற, தேக்கினால் இழைத்த பெரிய அழகிய அலமாரி. புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டு கண்ணாடிச் சட்டமிடப்பட்டு வைக்கப் பட்டிருந்தன. பெரும்பாலும் ஆங்கில புத்தகங்கள். என்ன அழகு. தனக்கென்று ஒரு நூலகமே வைத்திருக்கிறார் இந்த மனிதர்.

பெரிய தேக்கு மர மேஜையின் அப்புறமிருந்து வட்டவடிவமான நவீன கண்ணாடி அணிந்த சிவந்த பரந்த முகமும், கனிந்த பார்வையும் , உதடு பிரியாமல் மென்மையாக ப்ளீஸ் சிட் டௌன் என்று அவர் கூறியதும் இன்றும் எனக்கு கனவுபோல் இருக்கிறது. 

”இவ்வளவு தாமதமா கொண்டு வந்து சேக்கிறீங்களே, காலாண்டுக்கு இன்னும் ஒரு மாசம்தானே இருக்கு?” என்றார்.

என் அப்பா அவசரமாக “என் பொண்ணு பிக் அப் பண்ணிடும்” என்றார்.

அவர் என்னை எங்களுக்கு அப்போது ஆங்கிலத்தில் மனப்பாடக் கவிதையாக இருந்த ஷேக்ஸ்பியரின் ’டு  பி ஆர் நாட் டு பி’ என்று ஆரம்பிக்கும் ஹேம்லெட்டில் வரும் பகுதியை எழுதி காண்பிக்க சொன்னார். நான் தவறில்லாமல் எழுதிக் காண்பித்தேன். அட்மிஷன் கொடுத்து விட்டார்.

ஆங்கிலம் மட்டும் அவர்தான் எங்களுக்கு எடுப்பார். அத்தனை துல்லிய, அழகிய உச்சரிப்பு. ஆங்கிலத்திலேயே பேசுவார். அவருக்கு எல்லா பிரிட்டீஷ் கவிஞர்கள் மேலும் ஈடுபாடு உண்டு என்று பிற்பாடு அறிந்தேன். பிரத்யேகமாக ஷேக்ஸ்பியர். பாதி அலமாரி முழுதும் ஆங்கில கவிதை நூல்கள்.

அன்று திரும்பி பஸ்ஸில் வரும்போது எனக்கு புதிய ஆசை வந்தது. புரட்சியாளராக ஆவதை கொஞ்சநாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம். நடுவே கொஞ்சநாள் இவர் போல் கல்லூரியில் பிரின்ஸிபாலாக வேண்டும். நமக்கே நமக்கு என்று ஒரு லைப்ரரி வேண்டும். பிறகு அதுதான் என் வாழ்நாள் கனவு. .

திருமணம் முடிந்து நாங்கள் தருமபுரியில் வாடகைக்கு குடிபுகுந்தது வெண்ணாம்பட்டி அரசு குடியிருப்புப் பகுதியில் புத்தம்புதிய வீடு. அடுக்குக் குடியிருப்பு அல்ல. தனித்தனியான நவீனமான மொசைக் போட்ட வீடுகள். வீட்டை சுற்றிலும் இடம் உண்டு. கொன்றை, புங்கை மரங்களுடன் கூடிய நேரான நிழலான ஊடு சாலைகள்.

வீடு இருவருக்கு மிக வசதியானது. பெரிய ஹால், படுக்கையறை, நவீன சமையலறை, குளியலறை, கழிப்பறை தனித்தனியாக, பெரிய பெரிய சுவர் ஷெல்ஃப்கள்.  ஊரிலிருந்து வந்த பாத்திரங்களையும் பலகாரங்களையும் அம்மாவும் அத்தையும் [அப்பாவின் தங்கை] அடுக்க, நானும் ஜெயனும் புத்தகங்களை ஆவலுடன் அடுக்கினோம். ஐந்து அடுக்குகளாக  இரண்டு  ஷெல்ஃப்புகள் நிறைய புத்தகங்கள். ஐந்தாயிரம் என்பது அவரது வழக்கமான புனைவு. ஐநூறு இருக்கும். ஏதோ இரண்டு கோடி சொத்துக்கு அதிபதிபோல் உணர்ந்தேன்.   

ஆனாலும் நான் உடனே படிக்க ஆரம்பிக்கவில்லை. கொஞ்சலிலும், குலாவலிலும் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. சமையலும் அப்போதுதான் அம்மாவின் கடிதங்கள் வழியே கற்றுக் கொண்டிருந்தேன். பலவித ரசாயனச் சோதனைகள் நிகழ்த்தி ஜெயனை பரிசோதித்துக் கொண்டிருந்தேன். சீக்கிரமே தேறிவிட்டேன். பயணங்களும் அடிக்கடி, பெங்களூர், மைசூர், திருச்சூர், திருவனந்தபுரம், திருவட்டார், நாகர்கோவில் என.

ஆறுமாதம் ஓடிய பின்பே இத்தனை புத்தகத்தை வைத்துக்கொண்டு படிக்காமல் இருப்பது எனக்கு உறைத்தது. ஜெயனிடம் ஒருநாள் “ஜெயன், எப்படி ஆரம்பிக்க, தமிழ் சீரியஸ் ரைட்டர்ஸ் மாடர்ன் க்ளாசிக் வழியே ஆரம்பிக்கவா? புதுமைப்பித்தனில் தொடங்கி…” என்றேன்.

“வேண்டாம். முதலில் ரஷ்யன் க்ளாசிக்குகளில் தொடங்கு. அதுவே உன் தர நிர்ணய அளவுகோல்களை செட் பண்ணிடும்” என்றார். பாதி ஷெல்ஃபை அவைதான் ஆக்ரமித்திருந்தன.    

முதலில் ரஷ்ய நவீனச் செவ்வியல் படைப்புகள் துர்கனேவ், ஆண்டன் செகோவ், புஷ்கின், சிங்கிஸ் ஐத் மாத்தவ், மாக்சிம் கார்க்கி, டால்ஸ்டாய், தஸ்தாயெவெஸ்கி, நிகொலாய் கோகல், அலக்ஸி டால்ஸ்டாய், போரிஸ் பாஸ்டர்னாக் வரிசையாக படித்து முடித்தேன். அதிகமும் ஆங்கிலத்தில் தான் இருந்தன.

தருமபுரியில் தொலைபேசி துறை வேலையில் ஜெயன் பெரும்பாலும் மாலை ஷிஃப்ட்டை விரும்புவார். காலையில் விஷ்ணுபுரம் எழுதிவிட்டு, சாப்பிட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டு செல்லும் வேலை. மாலை 4.40 லிருந்து 11.40 வரை. அடுத்த ஆள் 11 மணிக்கே வந்து அந்த போர்டில் அமர்ந்து கொள்வதால் உடனே கிளம்பி விடலாம். தருமபுரியில் நாங்கள் இருந்த வெண்ணாம்பட்டி ஹவுசிங் காலனி நகரிலிருந்து வெளியில் இருப்பதால் பஸ் பிடித்து வீடு வந்துசேர 11.30 ஆகிவிடும்.

நான் ஜெயன் சென்றபிறகு மாலை  ஆறு மணிக்கு படிக்க அமர்ந்தால் இரவு பத்து  மணி வரை எந்த இடையூறுமின்றி படித்துக் கொண்டிருப்பேன். வேலைகள் மதியத்துடன் முடிந்துவிடும்.  ரேடியோ, டிவி, ஃபோன் எந்த தொந்தரவும் இல்லை. அப்படியே ரஷ்யாவில் உலவிக்கொண்டிருப்பேன். பத்து மணிக்கு சாப்பிட்டுவிடுவேன். பசி தாங்காது.  திரும்ப படிக்க உட்கார்ந்து , மெல்ல சரிந்து படுத்துக்கொண்டே படித்து தூங்கிவிடுவேன்.

தருமபுரியில் இரவு வெப்பநிலை மிகக்குறைவு. குளிருக்கு இதமாக ஒரு ஜெர்கினை போட்டுக்கொள்வேன். அது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அணிந்து கொண்ட ஒரு புல்லட் புரூஃப் கோட்டை நினைவுபடுத்தும். ஆகவே அப்போதெல்லாம் புரட்சித்தலைவி என அன்போடு அழைக்கப்பட்டேன்.

ஜெயன் வரும்போது  மெத்தையில் கம்பளிக் குவியல் போல நல்ல உறக்கத்தில் இருப்பேன். வாசல் கதவைத் தட்டி தோல்வியுற்று பெட்ரூம் ஜன்னலை தட்டுவார். விழிப்பதற்கான அறிகுறியே இல்லை எனும்போது கடைசி ஆயுதமாக சிறுசிறு ஜல்லிக் கற்களை எடுத்து ஜன்னல் வழியே வீசுவார். ஏதோ தட்டுபட்டு பரக்க எழுந்து உட்கார்ந்து சூழல் விளங்காமல் பார்த்துக் கொண்டேயிருப்பேன். ”கதவத் தெறடி” என்றதும் தான் உணர்வு வந்து கதவைத்திறப்பேன். ”தூங்கிட்டேன் ஜெயன்” என்பேன். அது மறுக்கமுடியாத உண்மைதானே?  .

அவரை சமாளிப்பது எப்படி என்று எனக்கு தெரியும். குழம்பை சூடு செய்துகொண்டே “ஜெயன், இந்த ஒலேனின் இருக்கானே, அந்த ரிட்டெயர்ட் கர்னல் வீட்டு விருந்துல எப்டி எஞ்சாய் பண்றான் தெரியுமா? அவனுக்கு அந்த வைன், ரொட்டி, மாமிசம், மியூசிக், அந்த நடனம் எல்லாம் அவனோட அந்த பழைய  பிரபுகுல வாழ்க்கைய ஞாபகப்படுத்துது. அதுல தெளைக்கிறான்”

மலர்ந்து விடுவார் ஜெயன். சாப்பிட்டுக்கொண்டே அவர் படித்த தருணங்களை பகிர்வார். பேசிக்கொண்டே படுத்து உறங்க வெகுநேரம் ஆகிவிடும். காலையில் பக்கத்து வீட்டு அக்கா கதவை இடிப்பார்கள். ”தண்ணி வருது, நீ பாட்டுக்கு எட்டு மணிவர தூங்குற’ என்று.

பிறகு ரஷ்யாவை விட்டு வெளியில் வந்து ஹெர்மன் ஹெஸ், ஹெமிங்வே, காஃப்கா, கம்யு, கஸந்த்சாகிஸ், பீட்டர் ஷாஃபரின் நாடகங்கள்,ரேமண்ட் கார்வர், ரே பிராட்பரி, இடாலோ கால்வினோ,  ஐசக் பாஷவிஸ் சிங்கர் சிறுகதைகள் , மார்க்யூஸ் என்று சுற்றி வந்தேன்.

அதன் பின்னர் இந்திய நாவல்கள் வங்க, கன்னடம் தொடங்கி ஜெயன் குறிப்பிட்ட எல்லா நாவல்களையும், தமிழில் புதுமைப் பித்தன் தொடங்கி யுவன், கோணங்கி தலைமுறை வரை படித்து முடிக்கும்போது ஆறு வருடங்கள் ஓடியிருந்தன.

நாங்கள் தருமபுரி செந்தில்நகர் ஈ.பி காலனியில் குடிபுகுந்தோம். 1995 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். அப்போது கோபால் [அப்போது சூத்ரதாரி, இப்போது கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில் எழுதுகிறார். மணல் கடிகை, மனைமாட்சி], செங்கதிர் [இப்போது ராஜஸ்தானில் ஐ.பி.எஸ் ஆக உள்ளார்.], கோவிந்தராஜ் [பசலை என்ற சிறுகதை தொகுதி], சிபிச்செல்வன் [மலைகள் என்ற இணையதளம் நடத்துகிறார்],ரிஷ்யசிருங்கர், சேலம் குப்புசாமி [ஆர்.கே என்றபேரில் பிரபலமான மேடைப்பேச்சாளர்] அனைவரும் வார இறுதிகளில் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். சேர்ந்து ஏதாவது ஒரு புத்தகம் வாசிப்போம். கூட்டு வாசிப்பு போல. தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதைகள் , சில அபுனைவு நூல்கள்.

அதில் அமெரிக்க கவிஞர் எமிலி டிக்கின்சன் கவிதை ஒன்று ”என் கல்லறையில் அமர்ந்து நீங்கள் வாசிக்கும் கவிதையை நான் என் கிரானைட் உதடுகளால் சுவைப்பேன்” அந்த கிரானைட் உதடு என்ற படிமம் என்னை உலுக்கியது. அவரது கவிதைகளில் எனக்கு மிகப் பிடித்தது I Died for Beauty. உண்மையை ஆண்கள் தேடுகிறார்கள், பெண்கள் தேடுவது அழகை. யாரோ ஒருவர் என்றோ வாசிக்கையில் மண்ணுக்கு அடியில் மண்ணாக இருந்து புன்னகைப்பேன் என்கிறாள் எமிலி.   

அப்போதுதான் எனக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற ஆவல் வந்தது. “ஜெயன், நானும் ஒரு புக் எழுதி இது பக்கத்துல அடுக்கணும் போல இருக்கு” என்பேன். யாரும் வாசிப்பதற்காக அல்ல. அந்த வரிசையில் ஒரு மூலையிலாவது நானும் இருக்கவேண்டும்.யாரும் வாசிக்காவிட்டாலும் டால்ஸ்டாய்க்கு அது தெரியும் அல்லவா?

அன்று வாசித்த புத்தகங்களில் மிக முக்கியமானது The Selected Prose of T.S.Eliot. அதிலும் மிக முக்கியமான கட்டுரையான Tradition and The Individual Talent கட்டுரையை மட்டும் நான்கு வார இறுதிகளை எடுத்துக்கொண்டு வாசித்தோம். மொழி பெயர்த்தோம். அதை ஒட்டி ஒவ்வொருவரும் கட்டுரை எழுதினோம். நான் எழுதிய கட்டுரை தலைப்பு கூட நினைவில் உள்ளது. உணர்ச்சியற்ற விலகல்.

அதில் எலியட் ஒரு எழுத்தாளனுக்கு இருந்தாக  வேண்டிய அடிப்படைத் தகுதிகளைப் பட்டியலிடுகிறார். அவற்றைப் பெறுவதற்கே அவன் பத்து வருடங்களையாவது செலவழிக்க வேண்டியிருக்கும். அவன் அவனுடைய மரபிலக்கியத்திலும் தேர்ச்சி உள்ளவனாகவும், அதே சமயம் அவனது மொழியின் சமகால இலக்கியத்தை பயின்றவனாகவும் இருக்க வேண்டும். இதிகாசங்களைப் பயின்றிருக்க வேண்டும். தொன்மையான ஏதாவது இரு மொழிகள் பயில வேண்டும். அவர்களுக்கு அவர் சிபாரிசு செய்வது லத்தீன், ஹீப்ரூ. சமகால அண்டை பிராந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றையும் பயில வேண்டும். உதாரணம் பிரெஞ்சு. எழுத்தாளன் ஆவதற்கான தகுதிக்கான இவ்விஷயங்களை படிக்க படிக்க தலை சுழன்றது.

ஆனாலும் எழுதிப் பார்க்கவேண்டும் என்ற ஆசை என்னுள் வளர்ந்தது. சொந்தமாக எழுதுவதை கற்பனைசெய்தாலும் ஒன்றும் தோன்றவில்லை. எல்லாம் கற்பனையில்தான்.ஒரு சமயம் திடீரென ஒரு எண்ணம் தோன்றி 1995 ல் டேனிஷ் எழுத்தாளரான இசாக் டெனிசன் எழுதிய தி புளூ ஜார் எனும் சிறுகதை ஒன்றை மொழிபெயர்த்தேன்.  அது அரிய சீன நீல ஜாடிகளை சேகரிக்கும் செல்வந்தரின் மகளுக்கும் ஒரு வணிகக்கப்பலில் பிழைப்புக்காக கடல் பயணம் செய்யும் இளம் ஆங்கில கடலோடிக்கும் இடையே வரும் ஒரு காதல் பற்றிய கதை. அவர்கள் செல்லும் கப்பல் மூழ்கும்போது அவன் அவளை காப்பாற்றி விடுவான். அவர்கள் ஒன்பது நாள் தனியாக நடுக்கடலில் பயணம் செய்வார்கள். மேலே கவிழ்ந்தகிண்ணம் போல் நீலவானமும், கீழே கடல் நீலமும் என அவள் வாழ்வின் அதி உன்னத காதல் நாட்கள். கடைசியில் பிரிந்துவிடுவார்கள். அதன் குறியீடாக இருக்கும் நீலஜாடியை தேடியபடி இருப்பாள்.

எனது மொழிபெயர்ப்பு நன்றாக வந்திருப்பதாக  ஜெயனுக்கு தோன்றியிருக்கவேண்டும். சுப மங்களா இதழுக்கு அனுப்பினார். பிரசுரமானது. அழகான நீலஜாடியின் படத்துடன் அது பிரசுரமாகி கையில் கிடைத்த அந்த தருணத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். என் வாழ்வில் மற்றுமொரு அதிஉன்னத நாள் அது. நாம் ஒன்றைப் படைத்தோம் என்ற உவகைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்று உணர்ந்தேன்.

தொடர்ந்து ஃப்ரெஞ்ச் கதை ஒன்றை மொழிபெயர்த்தேன். மற்ற மனைவி [The other wife] காலச்சுவடில் பிரசுரமானது. பிறகு சொல்புதிதில் ஒரு கதை. அதன் பிறகு அம்பை அவர்களின் Sparrow அமைப்பின் சார்பாக  மராத்திய பழங்குடிப் பெண்களின் வாழ்க்கை சார்ந்த ஒரு கேஸ் ஸ்டெடி ஒன்றை மொழிபெயர்த்தேன். சொல்புதிதில் விமரிசனங்களும் எழுதத் தொடங்கினேன்.

இதற்கிடையில் 1993 ல் எனக்கு வேலை கிடைத்தது, அதே வருடம் அஜிதன் பிறந்தான். 1996 ல் சைதன்யா பிறந்தாள். அஜி பிறந்தபின்னும், சைதன்யா பிறந்தபோதும் ஒன்றிரண்டு வருடங்கள் நான் படிப்பது மிகவும் குறைந்தது. என் இரண்டு செல்லங்களும் என்னை தங்கள் இருப்பால் நிறைத்தனர். அன்னையின் முழு அன்பையும், கவனத்தையும் குழந்தைகள் தங்களை நோக்கி முழுமையாக திருப்பி விடுகின்றன. ஓரிடத்தில் படுத்திருந்தவாறே வீடு முழுதும் நிறைந்திருக்கும் வித்தையை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். நாம் எங்கிருந்தாலும் நம்மை அருகே வைத்திருக்கவும் கற்றிருக்கிறார்கள்.

குழந்தை பெற்ற அன்னை தேனில் விழுந்த ஈ போல. சிக்கிக் கொண்டால் வெளியேற முடியாது. வெளியேறத் தோன்றாது. என்  நண்பர்களில் ஆண்களை நான் கவனித்திருக்கிறேன். தொழிலில், வேலையில், அரசியலில் ஈடுபட்டு எழுதுவதை நிறுத்தியவர்கள் பலர் உண்டு. இலக்கியத்தைவிட அது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்திருக்கலாம். மீண்டு வந்து எழுதியவர்களும் உண்டு. பெண்களுக்கு கலையிலக்கியத்தின் பரவசத்தைவிட பலமடங்கு மேலான பரவசம் அளிக்கும் குழந்தை என்னும் திசைதிருப்பல் இருக்கிறது. மற்ற எதைவிடவும் ஆற்றல்மிக்கது அது.

வேலைக்குப் போய்க்கொண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்வது பெரும்சுமையாக இருந்தது. வாசிப்பே குறைந்துவிட்டது. எழுதும் கனவும் மறைந்துவிட்டது. என் பெற்றோர் சைதன்யா பிறந்து ஒரு வருடத்தில் ஓய்வு பெற்றனர். பட்டுக்கோட்டையில் வைத்து அவளை வளர்க்கிறோம் என்றனர். அவ்வளவு போராட்டத்துக்கிடையிலும்  நான் அவளை அங்கு அனுப்பவில்லை.குழந்தை என்னும் பரவசத்தை இழக்க விரும்பவில்லை.

ஒவ்வொரு நாளும் என் கண்மணிகள் எனக்கு புதிய அனுபவத்தை பரிசளித்தனர்.  மொழியின் புதிய சாத்தியங்களை அவர்களின் மழலையிலிருந்து நான் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நாளும் அவர்களைப் போலவே புதிதாய் பிறந்தெழுந்தேன். அஜி ஒரு நம்பமுடியாத சாத்தியத்தின்  உச்ச எல்லையில் தான் எப்போதும் நின்றிருப்பான். கொய்யா மரத்தின் நுனிக் கிளையில் இருந்து ஜாக்கி சானாக கற்பனை செய்துகொண்டு குதிக்கலாம். கூரை விளிம்பில் நிற்கலாம். ஒவ்வொரு நாளும் அவன் ஒவ்வொரு கதாநாயகன்.

கற்பனைத் திறனும், உயிர்த்துடிப்பும், சாகசங்களுமாக அஜி என்றால் நேர்மாறாக அழுத்தமும், எண்ணி சொல்லெடுத்துப் பேசும் மொழியில் பல சாத்தியங்களை நிகழ்த்துபவளாகவும் எதையும் நெடுநேரம் மௌனமாக, கூர்ந்து கவனிப்பவளாகவும் சைதன்யா இருந்தாள்.

இதற்கிடையில் போராடி நேரம் கண்டுபிடித்து. பீட்டெர் ஷாஃபரின் நாடகமான ஈகஸ் என்ற நாடகத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அவரது மற்றொரு புகழ் பெற்ற நாடகம் அமெடியஸ். மொஸார்ட்டின் வாழ்க்கை வரலாற்றை அடியொற்றி  எழுதப்பட்டது. பிற்பாடு திரைப்படமாகவும் வந்து புகழ்பெற்றது. ஈகஸ் என்ற அவரது மற்றொரு  நாடகம் ஒரு பதின்ம வயது சிறுவனுக்கும், அவனுக்கு சிகிச்சை தரும் உளவியல் மருத்துவருக்குமான உறவைப் பற்றிய நாடகம். அவனுக்குள் உறைந்திருக்கும் வன்முறையின் இழையினை தேடி சென்று அவனை குணப்படுத்த முயல்வார். கிட்டத்தட்ட மனித மனதின் அடியில் உறைந்திருக்கும்  காம, குரோத, மோகங்களின் தீராத போரினை நவீன உளவியல் முறையில் அணுகும் ஒரு படைப்பு. சிறிய ஃபாண்ட் பேப்பர்பாக் எடிஷனில் கிட்டத்தட்ட 100 பக்கங்கள் வரும் நாடகம்.

மொழிபெயர்ப்பு முடிய இருபது பக்கங்களே பாக்கி உள்ள நிலையில் நாங்கள் தருமபுரியிலிருந்து குமரி மாவட்டத்தின் தக்கலைக்கு மாற்றலாகி வந்தோம். அந்த இடமாற்றத்தில் எனது மொழிபெயர்ப்பின் பிரதி காணாமலானது. ஏற்கனவே குறைந்து வந்த எழுத்துவாழ்க்கையை அது முடித்துவைத்தது.

இன்று குழந்தைகள் வளர்ந்து விட்டனர். அவர்கள் தங்களை தனித்த ஒரு ஆளுமையாக உணர தொடங்கிவிட்டனர். இனிமேலும் என் உடலின் நீட்சி அல்ல அவர்கள். அவர்களின் ரசனை, வாசிப்பு, இலக்கு எல்லாமே என்னிலிருந்து  விலகி புதிய பரிமாணம் கொள்பவை. நான் அறியா புதிய உலகின் பிரதிநிதிகள் அவர்கள்.

நான் வாசிப்பது, இசை கேட்பது எல்லாமே என்னை நிரப்புகிறது. ஆனால் அது போதவில்லை. ஒரு முழுமையுணர்வை மனம் நாடுகிறது. ஒரு சாதனையுணர்வு [Sense of achievement] தேவைப்படுகிறது. எழுதுவதன் பரவசத்தை நான் 25 வருடங்களுக்கு முன்பு ருசித்துவிட்டேன். மீண்டும் அது தேவைப் படுகிறது.

இருபத்தைந்தாண்டுகள்! நான் இழப்பை உணர்கிறேனா என்றால் இல்லை. அன்னை என்பதும் ஒரு பெரிய தகுதிநிலைதான். எழுத்து, தாய்மை இரண்டில் ஒன்று என்றால் நான் அதைத்தான் தெரிவு செய்வேன். குழந்தைகளே பெறாத நம்மாழ்வாரும், பெரியாழ்வாரும் கண்ணனைக் குழவியாக்கி தங்களை அன்னையென உணர்ந்த பெருநிலை. ஆணையும் அன்னையென உணரவைத்த குழவியனுபவம் என்பது பேரிலக்கியம் தரும் பித்துநிலைக்கு நிகர்தான்.

நான் எழுத்தில் சாதனைகள் நிகழ்த்த இயலாமல் கூடப் போகலாம். ஆனால் தன்னந்தனியாக அமர்ந்து தன் யாழை தானே மீட்டும் ஒரு கண்ணில்லாத பாணன் போல இலக்கியத்திலேயே மூழ்க விழைகிறேன்.

பெர்ட்னாடோ பெர்ட்லுச்சியின் The Last Emperor என்ற படத்தில் ஒரு காட்சி வரும். சிறு வயதில் முடிசூட்டப்பட்ட அரச குடும்பத்து சிறுவன் பு-யி புரட்சியால் அரசிழந்து அரண்மனையை விட்டு வெளியேற்றப் படுவான். அறுபது ஆண்டுகளுக்குப்பின்னர் ஒரு சாதாரணப் பார்வையாளனாக அந்த அரண்மனைக்கு வருவான். அரியணையின் பின்னால் ஓர் இடத்தில் அவன் சிறுவயதில் ஒளித்து வைத்த வெட்டுக்கிளி [Pet Cricket] இருக்கிறதா என தேடுவான். அது உயிரோடு இருக்கும். அவன் முகம் மலர்வான். அதை எடுத்து ஒரு சிறுவனுக்குக் கொடுத்து “நான் சொர்க்கத்தின் மகன், அரசன்” என்று சொல்வான்.

நான் விட்டுவந்த என் எழுத்து எனும் வெட்டுக்கிளியும் அங்கே அப்படியே இருந்திருக்கிறது.   

25 thoughts on “விட்டு வந்த இடம்

 1. அன்புள்ள அருண்மொழி,

  “ஓரிடத்தில் படுத்திருந்தவாறே வீடு முழுதும் நிறைந்திருக்கும் வித்தையை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்” என்ற வரி அருமை. ஜெ -வைப் பற்றி அவரின் எழுத்துக்கள் வழி அறிவததைத் தாண்டி மேலும் ஒரு பரிமாணத்தை அளிக்கிறது உங்கள் எழுத்து. அதுவல்லாமலும் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை இரசிக்கிறேன். கேட்கிறேன். ஒரு பெண்ணாக.

  -இரம்யா.

  Like

 2. அன்பின் அருணா,
  மற்றுமொரு சிறப்பான கட்டுரை. ஒவ்வொருபதிவும் மொட்டின் இதழ்கள் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக அவிழ்வது போல அவிழ்ந்து அருணா யாரென காட்டுகின்றன. உங்கள் வாசிப்பின் ஆழமும் அகலமும் வாசிப்பின் மீதான பிரேமையும் வியப்பூட்டுகின்றது. அன்னைமையை குறித்தெழுதியவைகளை புன்னகையுடன் ஆமோதித்தபடிக்கே வாசித்தேன். ஜெ வுடனான பழைய நினைவுகளில் வெட்கி கன்னம் சிவக்கிற அகலக்கண்களை மலர்த்தி வேக வேகமாக பேசுகிற அருணாவின்இன்னொரு பக்கமான மற்றொரு தீவிர இலக்கிய ஆளுமையை இக்கட்டுரைகள் காட்டுகின்றன. இன்னும் வரப்போகின்ற கட்டுரைகளின் வழியே அருணாவை நெருங்கி அறிந்துகொள்ளும் ஆவலுடன் இருக்கிறேன். கடைசிப்பத்தி அபாரம்!
  அன்புடன்
  லோகமாதேவி

  Liked by 1 person

 3. பேரன்புள்ள அருண்மொழிநங்கை அண்ணிக்கு, வணக்கம்.
  கி.பி. 2000த்தில் நான் உங்கள் வீட்டிக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கியிருக்கிறேன். உங்களிருவரின் அசாத்தியமான உழைப்பினையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
  நீங்கள் உங்களின் அலுவலகப் பணிகளோடு ஜெயமோகன் அண்ணாச்சியின் எழுத்துப் பணிகளுக்கு உதவிய விதமும் அண்ணாச்சி தன்னுடைய எழுத்துப் பணிகளோடு வீட்டுப் பணிகளுக்கு உதவிய முறையும் என்னை வியக்கச் செய்தன. இத்தனை அன்பு மிக்க தம்பதியரை நான் பார்த்ததே இல்லை.
  அண்ணாச்சியால் நீங்கள் மிகுதியாகப் படித்தீர்கள். உங்களால்தான் அண்ணாச்சி மிகுதியாக எழுதினார். இரண்டுபேரும் வென்றீர்கள் இந்த இனிய இலக்கிய உலகை. வாழ்த்துகள்!
  இப்படிக்கு,
  முனைவர் ப. சரவணன், மதுரை.

  Liked by 2 people

 4. அக்கா மிகச் சிறப்பாக நினைவுகளைத் தொகுத்து அழகான சித்திரமாக அளித்துள்ளீர்கள். பரவசமாக கண்கள் விரித்து நீங்கள் நேரில் சொல்வது போலவே உள்ளது. மீண்டும் நீங்கள் நிறைய எழுத வேண்டும், இனிவரும் நாட்கள் உங்களுடையதே..
  .

  Liked by 1 person

 5. மிக சிறப்பான கட்டுரை என்று முடித்துக் கொள்வதை விட…வாழ்வின் அனுபவங்களை தொகுத்தது போன்ற உணர்வு இவ்வெழுத்துக்களில் மிளிர்கிறது.ஜெமோ எப்படி இவ்வளவு எழுதுகிறார் என்று தோன்றியதுண்டு…அதற்கு பின்னால் நிகழ்ந்திருக்கும் ஒரு அழகிய வாழ்வும் இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது.மகிழ்ச்சி

  Like

  1. அன்புள்ள அருண்மொழி,

   நெஞ்சை கொள்ளை கொள்கிறது உங்கள் தமிழ் நடை. முதல் மழை புதுவெள்ளம் என தனக்கான பாதையை தானே தேறுகிறது உங்கள் நினைவுகளின் போக்கு. நிறைவாக வாழும் ஒரு மனுஷியிடமிருந்து மட்டுமே இப்படி ஒரு நினைவோடை பொங்கி பிரவகிக்க முடியும். வாழ்க்கையை நன்கு உணர்ந்து ஆழ்ந்து அனுபவித்து உணர்வுபூர்வமாக வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதை பறைசாற்றுகிறது உங்கள் எழுத்து.

   வயசு எல்லாம் ஒரு தடையே அல்ல தோழி! எழுதுவதற்கும் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கும் விஷயங்கள் உள்ளதா என்பதுதான் கேள்வி. பிறரை மகிழ்விக்கும் படிப்பவர்களின் வாழ்வின் அந்த நாளை மேம்படுத்தும் பல உன்னத விஷயங்கள் உங்கள் எழுத்தில் உள்ளன. இது போதும் எழுதுவதற்கு.

   தினம் ஒரு நான்கு பக்கம் என உங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளை எழுதத் துவங்கினாலே போதுமே… அதுவே ஒரு தன்வரலாற்று நூலாக ஒரு ஆண்டுக்குள் பூத்துவிடும். எல்லோராலும் எழுதி விட முடிவதில்லை. உங்களால் கொஞ்சும் நடையில் எழுத முடிகிறது என்பதே ஒரு வரம். குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிட்ட காரணத்தினால் உங்களுக்கு இப்பொழுது மிக நிறைய நேரம் இருக்கிறது. அத்தனையையும் பொன்னான எழுத்துக்களாக மாற்றி நீங்களும் நிறைவாக வாழ்ந்து உங்களை விரும்பி படிக்கின்ற எங்களையும் நிறைவுற செய்யுங்கள்.
   உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

   வாழ்க்கையில் நாம் யாராகவும் ஆக வேண்டியதில்லை. நமக்கு பிடித்ததை நாம் செய்தாலே போதுமானது. அந்த அற்புதமான புரிதல் உங்களிடம் உள்ளதை காண்கிறேன். அதையே உங்கள் கட்டுரையில் மிக அழகாக எழுதியும் இருக்கிறீர்கள். தொடர்ந்து உங்களை வெளிப்படுத்துங்கள்.

   நீங்கள் தொடர்ந்து நிறைய எழுத எல்லாம் வல்ல அந்தப் இயற்கை பேராற்றல் உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும், உடல் நலத்தோடு கூடிய நீள் ஆயுளையும் நல்கட்டும்.

   நல்வாழ்த்துக்கள்!

   மிக்க அன்புடன்
   ஆனந்த் சுவாமி

   Liked by 1 person

 6. தன்னிடமுள்ள நூல்களின் எண்ணிக்கையைச் சொல்லிக் காதலியைக் கவர்வது நூல்களையும் சேர்த்துக் காதலிப்பது போல. வாசிப்பின் பரவசத்தை அழகோடு சொன்ன கட்டுரை.இந்தத் தன் வரலாற்றையே நூலாகத் தொகுக்கலாம். இதற்கு அந்த வெலுயு உண்டு.

  Like

 7. உங்களின் வாசிப்பு அறிவு வியக்க வைக்கிறது,ஜாடிக்கு ஏற்ற மூடி. புத்திசாலி தம்பதிகள் எப்படி இருப்பார்கள் என்று உணர முடிகிறது. வேலை பார்ப்பதும், குழந்தைகளை கவனிப்பதும் நடுவே இலக்கிய வாசிப்பை மட்டுமே நிகழ்த்த முடிகிறது. எழுதுவதற்கான அதீத சிந்தனையை நிகழ்த்த முடிவதில்லை. தேர்ந்த கட்டுரையை படித்த உணர்வு. கி ராவைப்போல் ஆரம்பியுங்கள். ஆவலாக காத்திருக்கிறோம் உங்கள் எழுத்தை வாசிக்க.

  Like

 8. அனுபவங்களை அழகாக எடுத்து சொல்லும் உங்கள் பாணி அருமைம்மா…

  //கவிஞர் எமிலி டிக்கின்சன் கவிதை ஒன்று ”என் கல்லறையில் அமர்ந்து நீங்கள் வாசிக்கும் கவிதையை நான் என் கிரானைட் உதடுகளால் சுவைப்பேன்” அந்த கிரானைட் உதடு என்ற படிமம் என்னை உலுக்கியது.///

  உங்களை அல்ல என்னையும்தான். என்னமாதிரியான சிந்தனையில் அந்த வரிகள் முளைத்து இருக்க வேண்டும்

  Like

 9. Great narrative-Your thirst for reading,and the books you have read are admirable. The writing style brings alive the principal,the bookshelves, the kids,and all the events directly to our visual field. Looking forward to a novel

  Like

 10. பிரமிப்பா இருக்கு. 25 வருசத்துக்கும் சேர்த்து வச்சு இனி எழுதுங்க மேடம். எதிர்பார்த்திருக்கிறோம்.

  Like

 11. வணக்கம், உங்களின் வாசிப்பு அனுபவம் மூலம் எங்களையும் அந்த வாசிப்பு அறிவுக்கு இட்டு செல்கிறது தங்களின் கட்டுரைகள். தொடர்ந்து இலக்கியப்பயணத்தை வாசகர்களுடன் பயணிக்க வாழ்த்துக்கள்

  Like

 12. அன்புள்ள அருண்மொழி நங்கை அவர்களுக்கு, நீங்கள் எழுதத் துவங்கிய நாளிலிருந்து உங்கள் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். முதல் நாளே வாழ்த்துச் சொல்லி எழுதனும்னு நெனச்சேன்.. ஆனால், இது மால்குடி டேஸ் போல ஒரு மெமாய்ர் ஆ இருந்துருமோ ஒரு பயம் இருந்துச்சு.. இன்றய கட்டுரையின் இறுதியில் உங்கள் வாக்கியம் மிகவும் மகிழ்ச்ச்சியடையச் செய்கிறது. உங்களுடைய கட்டுரைகளில், உங்களுக்கான தனித்துவம் மெல்லத் துலங்கி வருகிறது. இந்தக் கட்டுரையின் இறுதியில், நீங்கள் ஒரு மலை உச்சியில் நின்று பறக்கப் போகிறேன் என்று அறிவிப்பதாய் உணர்கிறேன்.. தடைகளற்ற உயர் வெளியில், மிகச் சுதந்திரமாகப் பறக்கும் ஒரு பயணத்தைத் தொடங்கி வெற்றிகரமாக மேலே மேலே செல்ல வாழ்த்துகளும் அன்பும்.

  Like

 13. அன்புள்ள அருணா அக்கா,

  ‘விட்டு வந்த இடம்’ வாசித்தேன். அரசுப்பள்ளியோடு நிறுத்திவிடுவீர்களென நினைத்தேன். இசபெல்லா பள்ளி என்றவுடன் மனது அப்படியே இறக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்துவிட்டது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளி அது. மிக்க மகிழ்ச்சி.

  புரட்சியாளராக ஆக வேண்டுமென்பதிலிருந்து கல்லூரி பிரின்ஸிபாலாக வேண்டுமென்று மாறிய உங்கள் கனவு எனக்கு புன்னகையை வரவழைத்தது. புத்தக அடுக்குகளுக்கு மத்தியில் காதலனோடு டூயட் பாடி இருக்கிறீர்கள். அருண்மொழி நங்கையின் ஜெயன் இதுவரை அறியாத ஆசானை எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். ‘நான் இழப்பை உணர்கிறேனா என்றால் இல்லை. அன்னை என்பதும் ஒரு பெரிய தகுதிநிலைதான். எழுத்து, தாய்மை இரண்டில் ஒன்று என்றால் நான் அதைத்தான் தெரிவு செய்வேன்’ இப்படி contented ஆக இருக்க முடிந்திருப்பதே உங்களது பரந்துபட்ட வாசிப்பாலும் அது தந்த மனவிரிவாலும்தானென உறுதியாக நம்புகிறேன்.

  இரண்டு அல்ல, மூன்று பிள்ளைகளுக்கு அன்னையாக இருந்து மிகப் பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டீர்கள். ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல நமக்கு தனிப்பட்ட முறையில் ஒரு முழுமையுணர்வு தேவைப்படத்தான் செய்கிறது. நீங்கள் விட்டு வந்த வெட்டுக்கிளி இனிமேலும் அங்கிருக்காமல் தொடர்ந்து பறக்கட்டும்.

  அன்புடன்
  அழகுநிலா
  சிங்கப்பூர்

  Like

 14. புத்தகக் காதல் மகத்தானது. அது சிறுவயதில் வந்தால்தான்.வந்து விட்டால் மண்மூடும் வரை விலகாது. இப்போதென்றால் தர்மபுரி அலமாரி ஜெ.எழுதிய புத்தகங்களை வைக்கவே போதாது. எழுதுவதற்கு வயது எதற்கு? வளமான நிலம். விளையாமல் என்ன? பெற்றோரின் திருஷ்டி பெரிது என்பார்கள். கணவருடையதைப் பற்றி தெரியவில்லை. எதற்கும் உங்களுக்கு நீங்களே சுற்றிப் போட்டுக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!
  ….. சாந்தமூர்த்தி

  Like

 15. Fantastic. சூப்பர். அதுவும் அந்த ஜெயமோஹனை சமாளிக்கும் இடம்.
  ”அவரை சமாளிப்பது எப்படி என்று எனக்கு தெரியும். குழம்பை சூடு செய்துகொண்டே “ஜெயன், இந்த ஒலேனின் இருக்கானே, “…. பேஷ் பேஷ். 🙂
  அழஹான நீரோட்டம். அமைதியாக 25 ஆண்டுகள் அன்னையாக / அரசு ஊழியராக/ ஜெயனின் அனைத்துமாக/. இருந்துள்ளீர்கள். / இருப்பீர்கள்.
  ஜெயன் ..”மனைவிதான் முதல் வாசகி” என்றும் எழுதும் போது ஆச்சரியமாக இருக்கும், ஒடிசாவில் அண்மையில்தான் “MAA TARA TARINI” என்ற சக்தி பீடம் கண்டு பிடித்தார்களாம். அப்பீடம் அங்கே ஏற்கனேவே உள்ளது. அதுபோல்தான் நீங்களும்.

  இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்,

  Like

 16. நிதானமான எழுத்து நடை. போகிறபோக்கில் படிமங்கள் சேர்க்கும் ஆறு போல மென்மையான பதிவு❤️.
  வாசிக்க வாசிக்க அதன் நிதானம் என்னை ஈர்த்து என் எழுத்தை வெட்கினேன். அது என்னைப் போலவே படுவேகமாக தடதடத்து ஒடுவதாகத் தோன்றியது.

  ஒரு சிறந்த எழுத்தாளர் ஏதோ ஒன்றை பாடமாகப் போகிற போக்கில் பதித்துச் செல்வார். ஆசானைப் போலவே நீங்களும் அதைச் செவ்வனே செய்கிரீர். வாழ்த்துக்கள்.

  Like

 17. நான் எழுத்தில் சாதனைகள் நிகழ்த்த இயலாமல் கூடப் போகலாம். ஆனால் தன்னந்தனியாக அமர்ந்து தன் யாழை தானே மீட்டும் ஒரு கண்ணில்லாத பாணன் போல இலக்கியத்திலேயே மூழ்க விழைகிறேன்.
  கட்டுரையின் இந்த வாசகங்கள் எனக்கு பிடித்த வாசகங்கள்.

  Like

  1. அருண்மொழி மேடம்,
   உண்மையில் வயது முதிர முதிர எல்லோருக்குள்ளும் அனுபவங்கள் அடுக்கடுக்காய் ஊற்றெடுக்கின்றன. அவரவர் சார்ந்த துறை, குடும்பம், சுற்றம், பயணம், பார்த்த சினிமா, கேட்ட இசை, வாசிப்பு, கோபம், நெகிழ்ச்சி, சந்தோஷம் என பல்வேறு பரிமாணங்களாய் நினைவுத்தடங்களாய் வாழ்க்கையை வழிநடத்துகின்றன – தூக்கத்தில் கனவுகளாய் கூட பரிணமிக்கின்றன.
   ஆனால் அதை எழுத்தாக்கும் ஆற்றல் எல்லோருக்கும் கை கூடுவதில்லை. மொழிவளம் வசப்படுவதில்லை. வசப்படும் வரம் வாய்த்த சிலருக்கும் சோம்பேறித்தனம் உடனிருக்கும் சத்ருவாய் சதி செய்கிறது.
   ஆனால் உங்கள் எழுத்து நடை வசீகரிக்கிறது. மெல்லிய நீரோடை போல் எளிமையாய் மனம் நிறைக்கிறது. விஷயங்கள் சுவாரஸ்யப்படுத்துகின்றன. Jio net work போல் எங்கெங்கும் வியாபித்து நிற்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள் மேடம்.
   பாரதி எழுதிய உவமை “விசையுறு பந்தினைப் போல்” உங்கள் எண்ணங்கள் அனுபவங்கள் அனைத்தம் எழுத்தாகும் வண்ணம் இறைவன் அருளட்டும்.
   நன்றி.

   கண்ணன் வெங்கட்ராமன்

   ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

   Like

 18. அருமை அக்கா அருண்மொழி ,
  நான் பட்டுக்கோட்டையில் வசிக்கிறேன். என் குழந்தையும் புனித இசபெல்லா பள்ளியில் தான் படித்து வருகிறாள். நீங்கள் அங்கு படித்தது பற்றி வாசித்து மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வாழ்க்கையில் வாசிப்புக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் கண்டு வியக்கிறேன். உங்கள் எழுத்து நடை அருமை. விரைவில் உங்களிடமிருந்து சிறுகதை நாவல் எதிர்பார்க்கிறேன்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s