பனி உருகுவதில்லை

சில படங்கள் அல்லது புகைப்படங்கள் சிறு வயதில் நம் மனதில் அழியா படிமமாக நிலைத்து விடுகின்றன. அதன் கருத்துருவம் நம் எண்ணத்தில் பதிவதற்கு முன்பே இது நிகழ்ந்து விடுகிறது. அப்படி என் பத்து வயதிலிருந்து பதிந்த சித்திரம்  புத்தரின் படம் ஒன்று,  பனி படர்ந்த இமைய மலையின் புகைப்படம்  மற்றொன்று. 

முன்னது  என் மாமா எனக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்து, பின்னது சோவியத் இதழில் வந்த வண்ணப் புகைப்படம்.  புத்தரின் மோன நிலை என்னை அமைதியிழக்க செய்தது. ஆசையே துன்பத்துக்கு காரணம், ஆசையை ஒழித்தால் துன்பத்தை ஒழித்துவிடலாம். சொன்னால் மட்டும் போதுமா, எப்படி ஒழிப்பது என்று சொல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு விட்டார். நான்காம் வகுப்பு பாடத்தில் இவ்வளவு தான் இருந்தது.

ஆனால் மாறாக இமையத்தின் புகைப்படம் என் கனவுகளில் ஊடுருவியது. அதன் பனி மூடிய முகடுகள் தியானத்தில் ஆழ்ந்தவைபோல் என்னிடம் தினமும் மௌனமாக எதையோ சொல்ல விழைந்தன. அதை நேரம்போவது தெரியாமல் பார்த்துக் கொண்டே அந்த பனிக்குளிரை கற்பனை செய்து கொள்வேன். பனியில் சறுக்கி , உருண்டு விளையாடலாம். பனியை எடுத்து ஒருவர்மேல் ஒருவர் தூவி விளையாடலாம். இமையமலையில் பனி உருகுவதே இல்லை என்று அறிந்தேன்.

பிறகு ரஷ்ய படைப்புகள் படிக்கும் போது மொத்த ரஷ்யநிலத்தையும் இமையமாகவே கற்பனை செய்துகொண்டேன். அங்கு நிறைந்திருக்கும் பனியை பலவாறாக விரித்துக் கொள்வேன். பனிபடர்ந்த நிலம், பனிக்கோட்டும் ஸ்வெட்டரும் அணிந்த முகம்சிவந்த மனிதர்கள், தடித்த காலுறையும் பனிக்குல்லாயும் போட்ட சிவந்த ரோஜாப்பூ நிற குழந்தைகள், வெண்பனியால் மூடப்பட்ட சாலை, கூரை, மரங்கள். காணுமிடமெல்லாம் கண் நிறைக்கும் வெண்பனி. பனி தூய்மையானது. வெண்மை என்பது தூய்மையின் நிறம்.

தஸ்தாயெவெஸ்கியின் நாவலில் வரும்  நெல்லி பீட்டர்ஸ்பர்க்கில் குளிரால் வாடும்போது அவளுக்காக மனம்  உருகினேன் என்றாலும் எனக்கு பனியை எதிர்மறையாகவே நினைக்க முடியவில்லை. குளிர் தாங்கமுடியாத குதிரைவண்டியோட்டிகள், பிச்சைக் காரர்களையும் கூட அவர் விவரித்திருப்பார். எனக்கு அப்போதுகூட பனிக்குளிர் என்பது ஒரு சிலிர்ப்பூட்டும் இன்ப அனுபவமாகவே இருந்தது.

தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் கொஞ்சமாவது குளிர்வதே நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் தான். மீதி நாட்கள் எல்லாம் சுட்டெரிக்கும் வெயில். ஓட்டுவீடுகளில் காதும் மூக்கும் எரிந்துகொண்டே இருக்கும். ஆகவே எனக்கு குளிர் அபூர்வமானதாகவும், மிகப் பிடித்தமானதாகவும் இருந்தது. கதகதப்பாக போர்த்திக் கொண்டு உறங்கப் பிடிக்கும். அது கருப்பைக்குள் இருப்பதுபோல.

நம் இலக்கியமரபில் குளிர் என்பதே இதம் என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது. சிவன் இருக்குமிடம் ’பனிபடு நெடுவரை’. அதுதான் நம் வடக்கு எல்லை. அப்பனுடன் இருக்கும் அன்னை குளிர்ந்தவள். ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே’ என்றுதான் இறைவனைப் பாடியிருக்கிறார்கள். கருவறைக்குள் கன்னங்கரிய ஒளியுடன் அமர்ந்திருக்கும் தெய்வங்களைக் காணும்போது அந்தச் சொல் நினைவில் எழும். நிழல் கனிந்த கனி. நாகப்பழம்தான் நிழல்கனிந்த கனி.

பனிபடிந்த ரஷ்யா எனக்கு முகில்நிறைந்த விண்ணுலகமாகவே தெரிந்தது. படிக்க ஆரம்பிக்கும்போது நீண்ட தாடியுடன் இருந்த டால்ஸ்டாயை நம் மரபின் வசிஷ்டர் எனவும், தஸ்தாயெவெஸ்கியை  கோபம் கொண்ட விசுவாமித்திரர் எனவும் உருவகித்துக் கொண்டேன். பனிமுடி மலைகளின் உச்சிகளென அவர்கள் திகழ்கிறார்கள். ரிஷிகளுக்குரிய ஞானமும், விவேகமும் நிரம்பியவர்கள் .காலத்துக்கு அப்பால் தியானத்தில் இருப்பவர்கள். 

துர்க்னேவ்

ரஷ்யப்படைப்புகளில் நான் படிப்பதற்கு முதலில் எடுத்தது மூன்று காதல் கதைகள். இவான் துர்கனேவ் எழுதியது . துவக்கமே இனிமையாக இருக்கட்டுமே என நினைத்தேன். முதல்காதல், ஆஸ்யா, வசந்த கால வெள்ளம். மூன்றுமே என்னை மிகவும் கவர்ந்தன. மிகமிக நுட்பமான உணர்வுகளை ஊசியால் தொட்டு எடுப்பது போலச் சொல்வதில் துர்கனேவ் வல்லவர். அணுகுவதும் பிரிவதுமான காதலின் தத்தளிப்பை,  காதலர்கள்  இருவரும் நிகழ்த்திக் கொள்ளும் அந்த மாயநாடகத்தை, அவர்கள் விரும்பி அனுபவிக்கும் இனிய துயரை, சொல்லாமல் ஒளித்து மனம் போடும் பல திரைகளை, கவித்துவம் மிகுந்த தருணங்களை அவருடைய கூர்மையான, சிக்கனமான மொழியில் கொண்டுவந்து விடுவார்.

அடுத்து அவரது குறுநாவலான தந்தையரும் தனயரும் படித்தேன். அதில்தான் நிஹிலிசம் பற்றி முதன்முதலில் அறிந்துகொண்டேன். பஸரோவ் என்ற அந்த சிந்தனையாளனாகிய இளைஞன் அந்தக்காலகட்டத்தின் முகம். எல்லாவற்றையும் முதலில் இடிப்போம், கட்டுவதை அதன்பிறகு யோசிப்போம் என்று அவன் சொல்கிறான். நானும் அன்று அப்படித்தான் கற்பனையில் வாழ்ந்தேன். இடிப்பதற்குள் காதலித்து கல்யாணம் செய்தாயிற்று.

புஷ்கினின் காப்டன் மகள், துப்ரோவ்ஸ்கி இரண்டும் படித்தேன். புஷ்கின் ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடி என்ற அளவில் நன்றாக இருந்தது. பிறகு அலெக்ஸாண்டர் குப்ரின் எழுதிய செம்மணி வளையல், நாவல்,  சிங்கிஸ் ஐத்மாத்தவின் அன்னைவயல், மாக்ஸிம் கார்க்கியின் தாய் என்று படித்தேன்.  

ஆண்டுக்கணக்கில் ரஷ்யாவின் நிலத்தில் வாழ்ந்திருக்கிறேன். ரஷ்யப் படைப்புகளில் வரும் ரை, பார்லி, உருளைக் கிழங்கு பயிர் விளையும் விரிந்த வயல்வெளிகள், ஸ்டெப்பிப் புல்வெளி, காகஸஸ் மலையை ஒட்டி வாழும் கஸாக்குகளின் மலைக்கிராமங்கள், குலக்குகள் என்று சொல்லப்படும் நடுத்தர விவசாயிகள், நாய்களுடன் குதிரைகளில் பனிக்காடுகளில் வேட்டைக்கு செல்லும் சாகச மனிதர்கள், குதிரைகளையும், நாயையும் நண்பனைப் போல் சினேகித்து பனிவெளியின் தனிமையில் அவற்றுடன் பேசிக்கொண்டே இருப்பவர்கள். பெருகிச்செல்லும் வோல்கா நதி, ஒன்பது மாதங்கள் உறைந்தே இருக்கும் ஓப், எனிஸி, லீனா நதிகள் எல்லாமே கனவுகள். சைபீரியக் கொடும்பனி எனக்கு தவத்திற்கான தனிமையை அளிக்கும் வெண்போர்வையாகவே தோன்றியது.

வார் அண்ட் பீஸ்  புத்தகம் ஜெயனிடம்  இல்லை. எனக்கு அது வேண்டும் என்ற ஆவல் பயங்கரமாக எழுந்தது. பெங்களூர் போகும்போது மஹாலிங்கம் சார் [ஜெயனின் நாவல் கோட்பாடு நூலை வெளியிட்டவர்] எனக்கு அதை வாங்கிப் பரிசளித்தார். சிக்னெட் கிளாசிக்கின் பேப்பர் பேக் எடிஷன். பெங்களூர்  எம்.ஜி. ரோட்டில் அதை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட நடனமாடினேன்.

போரும் அமைதியும் ஒரு முழுவாழ்க்கை. நமக்கே நூறுவயது வாழ்ந்ததுபோல சலிப்பும் நிறைவும் உருவாகிவிடும். நான் பலமாதங்கள் கொசாக்குகள், புத்துயிர்ப்பு, அன்னா கரீனினா, போரும் அமைதியும் என்று டால்ஸ்டாயை படித்தே வாழ்ந்தேன். ராதுகா பதிப்பகத்தின் ஆங்கில மொழியாக்கங்கள் மிக எளிமையான நடைகொண்டவை

தஸ்தாயெவெஸ்கியை அதன்பின்னர்தான் படித்தேன். குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள். அதேவெறியில் ஆண்டன் செக்கோவ், போரிஸ் பாஸ்டெர்னாக், அலெக்ஸி டால்ஸ்டாய், நிகொலாய் கோகல் என்று சென்றது. இப்போதுகூட பட்டுக்கோட்டையோ, திருவாரூரோ தெரிந்தததை விட பீட்டர்ஸ்பர்க்கும் மாஸ்கோவும்தான் நன்றாகத்தெரியும்.

எனக்கு ரஷ்ய எழுத்தாளர்களில் டால்ஸ்டாயும், தஸ்தாயெவெஸ்கியும், துர்கனேவும் மிகவும் பிடித்தமானவர்கள். வார் அண்ட் பீஸ் நாவலின் தத்துவம், தரிசனம் எதுவும் புரியாத வயதில் எதையுமே யோசிக்காமல் கதையாக வாசித்து உணர்ச்சிகளில் அலைக்கழிந்து முடித்தேன். டால்ஸ்டாயின் கதாபாத்திரங்கள் நமக்கு தெரிந்த மனிதர்களாக ஆகிவிடுவார்கள். அவர் எப்படி அதை  பதிய வைக்கிறார் என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன். கதாபாத்திரத்தின் குணஇயல்பின் ஒரு துளியை நமக்கு அளித்துவிடுவார். மன ஓட்டங்களைப் பற்றி விரிவாக சொல்லாமலே இதை சாதித்து விடுவார்.

உதாரணமாக, போரும் அமைதியும் நாவலில் பியர் பற்றி சொல்லும்போது அவன் நடந்துகொள்ளும் சில சந்தர்ப்பங்களை மட்டுமே சொல்கிறார். பெரிய உயர்குடி விருந்தில் அந்த பிரபுகுல மூத்த சீமாட்டிகளிடமும் பெரிய மனிதர்களிடமும் பெரிய விருப்பமில்லாமல் பேசியபடி இருப்பான். அப்போது அவனுக்கு பிடித்தவர்கள் அங்கு வந்துவிட்டால் அந்த உரையாடலை அந்தரத்தில் நிறுத்திவிட்டு அவர்களை நோக்கிச் சென்றுவிடுவான். உரையாடலை முறையாக முகமன் சொல்லி முடித்து அவர்களிடமிருந்து விடுபட வேண்டும் என்ற போதம்கூட அவனுக்கு இருக்காது.

மரணப் படுக்கையில் இருக்கும் தந்தையை அவன் பார்க்கப் போகும்போது அந்த மக்களையும் அந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள இயலாமல் தத்தளிப்பான். அப்போது பாவ்லோவ்னா எனும் தந்திரமான முதியவள் அவனை ஒரு சிறுவன் போல் கையில் எடுத்துக் கொள்வாள். அன்னையின் புடவை நுனியை பற்றியபடி செல்லும் குழந்தைபோல அவள் பின்னாலேயே செல்வான். இந்த இயல்பைச் சொல்வதன் மூலம் அவனை நாம் நன்றாக அறிந்த ஒரு மனிதனாக ஆக்கி விடுவார் டால்ஸ்டாய்.

டால்ஸ்டாய்

பியர் உயர்குடிகளின் தளுக்குகள், பாவனைகள் இவற்றோடு ஒட்டாமல் விலகி விட்டேற்றியாக இருப்பவன், கொஞ்சம் உலகியல்சார்ந்த அசட்டுத்தனம் கொண்டவன், உணர்ச்சிகளின் உச்சம் அல்லது சோர்வுடன் இருப்பவன், சிறுபிள்ளைத்தனம் கொண்டவன் , உள்ளார்ந்த நன்மையில் விருப்பம் கொண்டவன். இன்றைக்கும் அவனை நினைத்தால் மனம் மலர்ந்துவிடுகிறது.

அதேபோல் ஆண்ட்ரூவையும் எளிய குறிப்புகள் வழியாக மிக நெருக்கமாக ஆக்கிவிடுவார். நிதானமும், கம்பீரமும், தர்க்க மனமும் கொண்ட ஆண்ட்ரூ நடாஷா மேல் காதல் கொள்ளும் தருணங்கள் மிக நுட்பமானவை. கம்பீரமான ஆண்கள்தான் காதலில் வெட்கப்பட்டு அசட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள். போர்நடவடிக்கைகளில் குட்டுசோவின் அந்தரங்க காரியதரிசியாக ஒரே சமயம் அவற்றில் ஈடுபாட்டுடனும், விலக்கத்துடனும் அவர் நடந்து கொள்ளும் விதத்தை டால்ஸ்டாய் சித்தரிக்கிறார். தனிப்பட்ட முறையில் போரையும் அதில் வெற்றியையும் ஆன்ட்ரூ விரும்புகிறார். ஆனால் ஒரு மனிதனாக அந்த அழிவை அவர் உள்ளம் வெறுக்கிறது.

டால்ஸ்டாயின் உலகம் மனிதத்திரளால் ஆனது. அவருடைய கதாபாத்திரங்கள் எத்தனை வகையானவை! பக்தியும், ஒழுக்கமும் தன் கறார் தந்தைமேல் மிகுந்த பிரியமும் கொண்ட மேரி, நிகொலாய் மேல் அளவற்ற காதலும் அடக்கமும் கொண்ட சோனியா, அறிவற்றவளும் பேரழகியும் அனைத்து ஆண்களையும் தன் வலையில் வீழ்த்துவதை கடமையாகக் கொண்டவளுமான ஹெலன், முட்டாள்தனமும் அழகும் கொண்ட பெண்பித்தன் அனடோல், வம்பனும், முரடனுமான டோலக்கோவ், படைப்பொறுப்பில் அடுத்தடுத்த படி நிலைகளில் ஏறிக் கொண்டேயிருக்கும் போரிஸ், நடைமுறை யதார்த்தம் அறிந்த, நகைச்சுவை உணர்வு கொண்ட தளபதி குட்டுசோவ், கனவும், கற்பனையும், வீராவேசமும் நிறைந்த நிகொலாய் ரோஸ்டொவ்….இருபத்தைந்தாண்டுகளில் எத்தனையோ உண்மையான மனிதர்களை மறந்துவிட்டேன். அந்நாவலின் ஒரு முகம்கூட மறக்கவில்லை.  

அத்தனைக்கும் மேலாக நடாஷா, டால்ஸ்டாயை படித்த அனைவரின் கனவுதேவதை அவள். இன்றுவரை நான் வாசித்த புனைவுகளில் என் மனதை கொள்ளை கொண்ட ஒரு கதாபாத்திரம் என்றால் அது நடாஷாதான். எப்போதும் மகிழ்ச்சியும், உற்சாகமும் ததும்பும் அவளது பிரகாசமான கண்கள். வளரிளம்பருவத்தில் அவளுக்கு பார்க்கிறவர்களை எல்லாம் காதலிக்க வேண்டும் என்று துடிப்பு. போரிஸ், டெனிசோவ், ஆண்ட்ரூ, அனடோல்…படிப்படியாக அக்கதாபாத்திரத்தின் அக வளர்ச்சியை, ஒரு அன்னையாக அவள் அடையும் நிறைவை, நாவலின் போக்கிலேயே நம் கண்முன்னால் அவள் முதிர்ந்து கனிவதை டால்ஸ்டாய் காட்டவில்லை, நாம் காண்கிறோம்.   

நடாஷாவிடம் ஆண்ட்ரூ கொண்ட காதல் ஒரு செவ்வியல்தன்மை கொண்டது. அவரது மரணப்படுக்கையில் அக்காதல் அவளை அவரது அருகே கொண்டுவந்து சேர்த்துவிடும். ஆண்ட்ரூ நடாஷாவின் மேல் தனக்குள்ள காதலை உணர்ந்து மகிழ்வு கொள்ளும் தருணத்தில் ஒரு பட்டுப்போன ஓக் மரம் துளிர்ப்பதை பார்ப்பார். டால்ஸ்டாய் யதார்த்தமானவர், அவரை மீறி கவித்துவம் பொங்கும் தருணத்தை எழுதிய இடம். அதேபோல் ஒரு கவிதையை பாடலாக பாடிக்கொண்டு  பனிபொழியும் இரவில் நிலவொளியை பார்த்து ஜன்னல் வழியாக பறந்துபோக நடாஷா விரும்பும் கணம்.

நடாஷாவின் சிறுபிள்ளை குறும்புத்தனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்குள்ளும் நான் அவளை உணர்ந்தேன். அவள் அம்மாவின் படுக்கையறையில் ஓடி வந்து வந்த வேகத்தில் டைவ் அடித்து அவள் அம்மாவைத் தாண்டிப் போய் விழுவாள். பின் எழுந்து அவள் கையைப் பற்றி ஒவ்வொரு விரல் முட்டையும் முத்தமிட்டு தன் பரவசத்தை அன்னையிடம் பகிர்ந்து கொள்வாள். நானும் ஒருநாளும் என் படுக்கையில் ஒழுங்காக படுத்ததில்லை. ஸ்டண்ட் அடிப்பேன். என் அம்மா என்னை ”தடிக்கழுதை, தடிமாடு, பொம்புளப் புள்ளயா லச்சணமா இருக்க மாட்டியா?” என்று அர்ச்சிப்பார்கள். “எவன் கட்டி மேய்க்கப் போறானோ, ஒனக்குன்னு எங்க பொறந்துருக்கானோ?”

எத்தனை தடவை கேட்டது , எத்தனை வாய்கள் சொல்லிக் கேட்டது என்றாலும்  ‘எங்க பொறந்துருக்கானோ’ என்ற கற்பனை ஒரு சிலிர்ப்பைத் தரும். தேய்வழக்காக இருந்தாலும் அது மிக அழகிய கற்பனை. எங்கோ ஒரு இடத்தில் இருப்பான், எப்படி இருப்பான், நம்மை நினைப்பானா, நம்மை எப்படி கட்டி மேய்க்கப் போகிறான், தொலைந்தான் அவன் என பலவிதமாக கற்பனை செய்து எனக்குள் புன்னகைத்துக் கொள்வேன். நடாஷா இறுதியில் பியரை மணக்கும்போது ‘ஓ,இவன்தானா’ என்ற புன்னகை எழும்.

அன்னா கரீனினாவில் வரும் அப்பாவி கிட்டி, அழகும் , நுண்ணுணர்வும் மிக்க அன்னா, பரந்த மனமும் , கனிவும் கொண்ட லெவின், வறண்ட கரீனின், விரோன்ஸ்கி. புத்துயிர்ப்பு நாவலில் ஆரம்பத்தில் தேவதை சாயலுடன் வரும் மஸலோவா பிறகு வாழ்க்கையின் போக்கில் வதையுண்டு அற்பத்தனம் கொண்ட தந்திரக்காரியாக மாறுவது, அதிலிருந்து அவள் அடையும் மீட்சி.

தஸ்தாயெவெஸ்கி

தஸ்தாயெவெஸ்கி கதாபாத்திர ஆளுமை வளர்ச்சியை விட கதாபாத்திரங்களின்  அந்தந்த தருணங்களின் மன ஒட்டங்களை , ஆழ்மன வெளிப்பாடுகளை  நீண்ட தன்னுரைகள் மற்றும் உரையாடல்கள் வழியாக நிகழ்த்தி காட்டுவார். ஒரு கதாபாத்திரம் ஒரு தரப்பின் பிரதிநிதிபோல் வாதிடும். நாடகீய தருணங்களின் உச்ச நிகழ்வுகள். அவரது நாவல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் விஷயங்கள் கடவுள், மதம், குற்றம், தண்டனை, மனிதனின் உள்ளார்ந்த இயல்பான தீமை இவை போன்ற அடிப்படையான கேள்விகள். இதைச் சொல்ல அவர் தேர்ந்த வடிவம் அது.

கரமசோவ் பிரதர்ஸ் நாவலில் வரும் இவானின் கவிதை நாடகமான கிரேட் இன்குவிசிட்டர், இவானுக்கும் அல்யோஷாவுக்கும் ரெஸ்டாரெண்டில் நடக்கும் உரையாடல், திமீத்ரீக்கும் அல்யோஷாவுக்கும் மரத்தடியில் நிகழும் உரையாடல், ஃபாதர் சோசிமாவுக்கும் அல்யோஷாவுக்கும் நடக்கும் உரையாடல்… அப்படி பல இடங்கள். டால்ஸ்டாய் நாவலில் நிகழ்வதுபோல அங்கே நாம் அந்த வாழ்க்கையில் பங்கெடுப்பதில்லை, அந்த இடத்தில் ஓரமாக அமர்ந்திருக்கிறோம்.

குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்நிகோவ் சோனியாவிடம் தான் செய்த குற்றத்தைக் கூறி மனம் திறக்குமிடம், நெல்லியின் மரணப் படுக்கை உரையாடல் போன்ற இடங்களில் நாம் நமக்குள் ஓர் உக்கிரமான நாடகம் நடப்பதை உணரமுடியும். தஸ்தாயெவெஸ்கியின் நாவல் நிகழும் கால அளவு குறுகியது என்பதாலேயே இந்த வடிவம் மிக உகந்ததாக உள்ளது.  

கேரள கவிஞர்  ஆற்றூர் ரவிவர்மா என் மனதிற்கு மிக நெருக்கமானவர். என் குரு. ஆனால் மனதிற்குள் ஒரு தந்தையாகவும் அவரை நான் வரித்திருந்தேன். தோன்றும்போதெல்லாம் நாங்கள் திருச்சூர் போவோம். ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது தஸ்தாயெவெஸ்கியைப் பற்றி அவர் சொன்னார். ”He is an architect of ​darkness.” அப்போது எனக்கு அதன் முழு அர்த்தத்தின் கனமும் விளங்கவில்லை. படிக்கப் படிக்க அது சரிதான் என்று தோன்றியது. இருளைக் கொண்டு கட்டப்படும் ஒரு தேவாலயத்தின் உச்சியில் ஒரு சிறு விளக்கினைப் போல் ஒளியை காட்டுகிறார்

நான் அவர் படைப்பில் மனம் நெகிழ்ந்த தருணங்கள் பல உண்டு. ஃபாதர் சோஷிமா அல்யோஷாவை பூமியை முத்தமிடச் சொல்லும் தருணம், சோனியா ரஸ்கோல் நிகோவை மன்னிக்கும் தருணம், திமீத்ரீ மனம் திறக்கும் தருணங்கள். நன்மைக்கும், தீமைக்கும் இடையே அல்லாடும் ஒரு பாத்திரமாக திமீத்ரீயை படைத்திருப்பார். புலனிச்சைக்கும், அவன் மனதின் நன்மைக்கும்  இடையே நிகழும் ஓயாத போர். மனித மனதின் அலைக்கழிப்பின் ஸ்தூல வடிவம் திமீத்ரி, ஒளியின், களங்கமின்மையின் தூய வடிவமாக அல்யோஷா, தர்க்க மனம் கொள்ளும் சந்தேகங்களும், தடுமாற்றங்களுமாக இவான்.

குழந்தைகள் அவர் படைப்பில் உயிர்ப்புடன் வருவார்கள். துறுதுறுப்பும் அறிவும் குறும்புத்தனமும் மிக்க கோல்யாவின் முகம் நினைவில் வருகிறது. வறுமையிலும் தன்மானமுள்ள சிறுவன் இல்யூஷா, தன் தந்தை எந்நிலையிலும் மித்யாவிடம் மன்னிப்பு கோரக் கூடாது, அவன் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று உறுதி வாங்கிக் கொண்டு இறந்து போவான்.

டாக்டர் ஷிவாகோ

இவையனைத்திலும் பின்னணியில் பனி பெய்துகொண்டிருந்தது. குளிர்காற்று சன்னல்கள் வழியாக வந்துகொண்டிருந்தது. மனிதர்களும் சொற்களுமெல்லாம் குளிர்ந்திருந்தன. டாக்டர் ஷிவாகோ நாவல் நெடுகிலும் பனி நம்மை தொடர்ந்து கொண்டேயிருக்கும். சிறுவனாக இருக்கும் யூரியின் அன்னை இறக்கும் தினத்தன்று ஒரு பனிப்புயல் வீசும். பிறகு லாராவை அவன் சந்திக்கும் தினம், கட்டாய ராணுவப் பணியில் மருத்துவனாக பணி புரிவது, குடும்பத்தை பிரிந்து , பின் மீண்டும் சேருமிடங்கள் எல்லா இடத்திலும்  ஒரு மௌனசாட்சியாக பனி நிறைந்திருக்கும். பனியில் பூக்கும் மலரென அவன் மனம் முழுவதும் லாரா நிறைந்திருப்பாள். உருக வைக்கும் யூரியின் காதலும், கவிதையும், பனியும் நிறைந்த அந்நாவலை ஒரு குளிர்மாதத்தில் தான் படித்தேன்.

போரும் அமைதியும் நாவலில் டால்ஸ்டாய் எல்லாவற்றையும் ஒரு விலகி நிற்கும் துறவியின் பார்வையில் சொல்லிச் செல்வதாக எனக்குத் தோன்றும். போரின் அபத்தத்தை, வாழ்வின் போக்கை காட்டும் அவர் மானுடப் பெருக்கெனும் நதியில் ஓரிரு துளிகளெனவே கதாபாத்திரங்களைக் காட்டி செல்கிறார். நெப்போலியனும், ஜாரும், ஆண்ட்ரூவும் அவருக்கு மானுடப் பெருக்கில் துளிகள் தான். இந்தப் பார்வை ஒரு கனிந்த விவேகமுள்ள துறவியின் பார்வையாகவே எனக்குப் படுகிறது. நிஜ வாழ்க்கையிலும் அவர் தனது சில எழுத்துக்களை தவிர எல்லா படைப்புக்களையும் துறந்தார். தனது வசதியான வாழ்க்கையைத் துறந்தார். யாஸ்னா பால்யானாவை துறந்து அவர் வெளியில் வைத்த காலடியும், சென்ற தொலைவும் ஒரு கீழைத்தேச ஞானிக்கே உரியது.    

ரஷ்யாவின் பண்பாட்டில் எப்போதும் இந்த கிழக்கு அம்சமும் உண்டு. ஆகவே ரஷ்ய எழுத்தாளர்கள் நம் மனநிலைக்கு மிக நெருக்கமானவர்கள் என்று தோன்றும். இவர்கள் அளவுக்கு எனக்கு ஐரோப்பிய எழுத்தாளர்களிடம் ஒன்ற முடிந்ததில்லை. ஆச்சரியம்தான், ஒரு தேசம் அதன் இலக்கியம் வழியாக தொடர்பே இல்லாத இன்னொரு மண்ணில் இவ்வளவு ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. எனக்கு என் முன்னோர்கள் என்று நினைக்கும்போதெல்லாம் ரஷ்ய இலக்கியமேதைகளும் சேர்ந்தே நினைவில் எழுகிறார்கள்.

சோவியத் ருஷ்யாவில் 1990 களில் நடந்த கிளாஸ்னோஸ்ட், பெரிஸ்த்ராய்க்கா என்ற சொற்களால் குறிப்பிடப்படும் அரசியல் மாற்றங்களை ’பனியுருகல்’ என்று அக்காலத்தில் குறிப்பிட்டனர். அங்கே பனி உருகத்தான் செய்தது. என்னுள் கனவுகளை நிறைத்த அந்த தூய வெண்பனி ஒருபோதும் உருகியதில்லை. 

***

6 thoughts on “பனி உருகுவதில்லை

 1. அன்பின் அருணா
  மற்றுமொரு சிறப்பான கட்டுரை. உங்கள் பேச்சைப்போலபே எழுத்திலும் வேகம் கூடியதுபோல் இருக்கிறது. இன்னும் நேரம் கிடைத்தால் பிரவாகமாக எழுத்து பொங்குமென இந்த கட்டுரை வாசிக்கையில் தோன்றியது.

  உங்கள் எழுத்தின் வசீகரம் இலக்கியஆர்வம் ,வாசிப்பின் ஆழம் , காதல் நிறைந்த அந்தரங்க வாழ்வு ,வாழ்வனுபவங்கள் ஆகியவற்றின் கலவையாக இருப்பதால்தான்.

  நடாஷாவும் டிமித்ரியும் எனக்கும் பிரியமானவர்கள். நடாஷா என்னும் பெயரே எனக்கு பதின்பருவத்தில் ஒரு புரட்சிகரமான, ஸ்டைலான, நவீன பெயராக இருந்தது. லோகமாதேவி என்ற பெயரை வெறுக்கத்தோன்றும் நடாஷாவை நினைக்கையிலெல்லாம்.
  //அவள் அன்னையாகி முதிர்ந்ததை ஆசிரியர் காட்டவில்லை நான் காண்கிறோம் //
  .//யூரியின் வாழ்வில் முக்கியத் தருணங்களிலெல்லாம் மௌனசாட்சியாக பனி நிறைந்திருக்கிறது//
  /;உங்களுக்குள் கனவுகளால் நிறைந்திருக்கும் வெண்பனி உருகியதேயில்லை//
  இவ்வரிகள் ரசிக்கவைத்தது அருணாவை அவர் எழுத்தை மொழிவளத்தையெல்லாம் வியக்க வைத்தது. ரஷ்ய இலக்கியத்தை பரிச்சயம் செய்துகொள்ள நினைக்கும் புதியவர்களுக்கு இந்தக்கட்டுரை வழிகாட்டும்

  இன்னும் நிறைய நிறைய எழுதுங்கள்
  வாழ்த்துக்களுடன்

  லோகமாதேவி

  Liked by 1 person

 2. சகோதரி அருண்மொழி,
  உங்கள் எழுத்தின் வழி ரஷ்யாவின் குளிர் பரவுகிறது. போரும் அமைதியும் வாங்கி விட்டு நெடுநாட்களாக வாசிக்காமல் இருக்கிறேன்(பக்க எண்ணிக்கை கண்டு) உங்கள் பதிவை படித்த பின் வாசிக்க போகிறேன். நான் வாசிக்கும் போது கண்டிப்பாக டால்ஸ்டாய் உங்களுக்கு நன்றி சொல்வார்.

  Like

 3. அன்புள்ள அருண்மொழி,
  உங்கள் கட்டுரைகள் தெளிவான, சுவாரசியமான நடையில் அமைந்திருக்கிருக்கிறது. ரஷ்ய நாவல்கள் படித்ததில்லை ஆனால் படிக்கத் தூண்டுகிறது உங்கள் எழுத்து. எந்த அழுத்தமும் இல்லாமல் இப்படியே ரசித்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

  முருகேஷ்

  Like

 4. மதிப்பிற்குரிய அருண்மொழி மேடம் அவர்களுக்கு ,

  ரஷ்ய இலக்கியம் ஜெவின் மூலமாகவும் வானவன் ,வல்லபி சகோதரிகள் மூலமு தான் அறிமுகமாகியது. முதன் முதலில் குற்றமும் தண்டனையும் நாவலை படித்து விட்டு அவருக்கு எழுதிய கடிதத்தில் ஒரு ஆய்வாளர் பார்வையில் வாசிப்பில் தவர விட்ட இடங்களை குறித்து எழுதி இருந்தேன். அவர் தான் ஒரு வாசகனாக அந்த கதையை படிப்பதும் ,ஒரு வாசகனுக்கு காலப்போக்கில் திறக்கும் சாத்தியங்கள் ஒரு ஆய்வாளரை விட எப்படி சிறந்தது என்றார்.அதை இன்று உணர்கிறேன்.

  ரஷ்ய இலக்கியத்தில் டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தோவஸ்கி படித்து உள்ளேன் உஙகளின் பறந்து பட்ட வாசிப்பை பார்க்கும் போது இன்னும் ரஷ்ய இலக்கியத்தில் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று தெரிகிறது.

  ரஷ்ய இலக்கியத்தின் அந்த நீண்ட உரையாடல்களை , அந்த பனிபடிந்த அந்த நிலங்களை நீங்கள் வர்ணிக்கும் போது புதிதாக உள்ளது. உங்கள் எழுத்து நடையும் மிக புதிதாக ஒரு துள்ளல் நடையில் இருக்கிறது. வாழ்த்துக்கள் மேடம்.
  “”ஒரு தேசம் அதன் _இலக்கியம் வழியாக தொடர்பே இல்லாத இன்னொரு மண்ணில் இவ்வளவு ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. எனக்கு என் முன்னோர்கள் என்று நினைக்கும்போதெல்லாம் ரஷ்ய இலக்கியமேதைகளும் சேர்ந்தே நினைவில் எழுகிறார்கள்.””_ இந்த வரிகள் அபாரம். தொடர்ந்து எழுதுங்கள்.

  –சுகதேவ்–

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s