பனி உருகுவதில்லை – கடிதங்கள்

மேடம்,

இக்கட்டுரை ஒரு தேர்ந்த எழுத்தாளருடையது என்பதை அது வளர்ந்து செல்லும் வடிவமும் இறுதியில் நிகழும் உச்சமும் காட்டுகிறது.

சில புனைவுகளை வாசித்து முடிக்கும் போது இதுவரை சந்திக்காத இனியும் சந்திக்கப் போகாத முகமற்ற சக வாசகர்களை மனதில் பார்த்து புன்னகைத்துக் கொள்வேன். பின்னர் அவர்கள் ஒரு சிலரை ஒவ்வொருவராக சந்தித்து வருகிறேன். அவர்கள் வேறொரு தேதியில் வேறு ஊரில் இதே படைப்புகளை படித்திருப்பார்கள், கிட்டத் தட்ட அதே உணர்வை அடைந்திருப் பார்கள். ஒரு மலை ரயில் பயணத்தில் வேறு பெட்டியில் அல்லது வேறு தேதியில் உடன் வருபவர்கள் போல அவர்கள்.

இந்தக் கட்டுரையை வாசித்து முடித்ததும் அதே உணர்வை அடைந்தேன். நாம் சந்திப்பதற்கு முன்பே சந்தித்து இருக்கிறோம். நான் ரஷ்ய இலக்கியத்தை வாசித்ததும் கிட்டத்தட்ட இதே வரிசையில் தான். The death of Ivan Ilyich தொகுப்பை படிக்கும் போது பனி மேவிய நிலத்தில் ஒரு ஆறடி ஆழத்தில் இருந்து படிப்பது போல உணர்ந்தேன். இமய மலைகளுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையை உருவாக்கியதே ரஷ்ய இலக்கியம் தான், ஆனாலும் பனிப் பிரதேசம் எனக்கு ஒரு அந்நிய நிலம் தான்.

ஆனால் கருவறைக்குள் கன்னங்கரிய ஒளியுடன் அமர்ந்திருக்கும் தெய்வங்களை பேசும் இடம் வந்ததும் அட இதுவும் கூட நமது நிலம் அல்லவா என எண்ண வைத்தது.. வேகும் வெயில் தஞ்சை மண்ணில் பனியில் பொதிந்த நாவல் வாசிப்பு என்பதே ஒரு ஆச்சர்ய இருமை.

நடாஷா பீயரை மணக்கும் இடம் வந்ததும் இந்த வாழ்வு தற்காலிக வண்ணங்கள் ஏறியது இது போலத் தான் அது வெளிரிப் போகும் என நினைத்தேன். மூன்று காதல் கதைகளும், செம்மணி வளையலும் நம்மை சில நேரம் ஒரு வானவில்லில் கட்டி தூரியாடச் செய்பவை.

தஸ்தாயெவெஸ்கியின் நாவல் நிகழும் கால அளவு குறுகியது என்பதை இப்போது தான் யோசித்துப் பார்க்கிறேன், ஆம் சரிதான். புனைவின் வீச்சு கால அளவை மறக்கச் செய்து விடுகிறது.

ஒவ்வொரு முறையும் நான் சக வாசகர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களிடம் எதிர்பார்ப்பது பல்வேறு படைப்புகளை ஒரே சமயம் கவனத்தில் கொண்டு பாத்திரங்களை வரிசையிடுவது அவர்களின் ஒற்றுமை வேற்றுமைகளை பேசுவது, நிகழும் சம்பவங்களின் தாக்கத்தை அது அமைந்த சூழலை பரிசீலிப்பது, வர்ணனைகள் விவரிக்கப்பட்ட விதத்தை ஒப்பிடுவது போன்றவையே. அது இக்கட்டுரையில் நிகழ்ந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. இல்லுஷாவின் நடத்தையும், நெல்லியின் நடத்தையும் பேசப் பட்டுள்ளது, திமிட்ரியும் நடாஷாவும் ஆன்றூவும் அருகருகே அமர்த்தபட்டுள்ளனர்.

பார்லியும், உருளையும், பீட்டர்ஸ் பெர்கும் இன்ன பிற கருப் பொருட்கள் எல்லாம் இக்கட்டுரையில் வந்துவிட்டன, இந்த நாவல்களில் எல்லாம் எப்போதும் இருக்கும் அந்த கனப்பை தவிர.

கிருஷ்ணன், அட்வகேட்,

ஈரோடு.

***

அக்கா,

இந்தக் கட்டுரையை உடனே படித்தேன். சிறுமியாக நீங்கள் பார்த்த பனிமலை வழியாக ரஷ்ய இலக்கியத்தில் நுழைந்த அனுபவம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். நான் உங்களிடம் அப்படியான வேறு ஒரு அனுபவம் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

எங்கள் வீட்டில் அப்போது Holiday On Ice முகப்பவுடரைதான் வாங்குவார்கள். அதுதான் பெரியதாகவும் விலை மலிவாகவும் இருக்கும். அந்த பவுடரை பூசிக்கொள்வதில் எனக்கு அப்படி ஒரு இஷ்டம். அதில் உள்ள படமே அதற்கு காரணம். பனிமலையில் இருவர் சறுக்கிச்செல்லும் படம் அதில் அச்சாகியிருக்கும். நீலவானத்தின் கீழ் வெண்மலை. நான் அந்த புட்டியை சுழற்றியபடியே பார்த்துக்கொண்டிப்பேன். அதில் நானும் சறுக்கிச்செல்வதாக கற்பனைகள் விரியும். என்னால் பவுடர் சீக்கிரம் தீர்வதாக அம்மா ஏசுவார். உடலெல்லாம் பவுடரை கொட்டி ஐஸ்  மழையில் நனைவதுதான் காரணம். இதன் காரணமாகவே எனக்கு கிறிஸ்மஸ் பிடித்துப்போனது. அப்போது மட்டும்தான் தொலைக்காட்சியில் கார்ட்டூன்களும் ஆங்கிலப்படங்களும் போடுவார்கள். அது எல்லாவற்றிலும் ஐஸ் இருக்கும்.

பனிகட்டிகள் கொண்ட நிலம் சிறுவர்களுக்கு எத்தனை இன்பம் கொடுக்கும் என இப்போதும் என்னால் துல்லியமாக உணரமுடிகிறது. நாமெல்லாம் இப்போதும் சிறுவர்கள்தானே.

மற்றபடி கட்டுரையில் ரஷ்ய இலக்கியங்கள் உங்களை உங்கள் மனதை எவ்வாறு வடிவமைத்தது என இதில் இணைத்திருக்கலாமோ என்று தோன்றியது. அவற்றை வாசித்து முடித்த பிறகு உங்களுக்குள் ஏற்பட்ட அந்தரங்கமான மாற்றம் இருந்தால் அதை அடுத்தடுத்து பதிவு செய்வீர்களா? உதாரணமாக அக்னி நதியை வாசித்து முடித்தவுடன் வேறு யாரையும்விட கமால் என்னை அதிகம் கலங்கடித்தார். தனியாக அமர்ந்து அழுதேன். வீரம் என நினைத்துக்கொண்டு செய்ததெல்லாம் உதிர்ந்து அர்த்தம் இல்லாமல் போனது. நான் முதியவனாகிவிட்டதாகவும் யாரின் முன்பும் புன்னகையை மட்டுமே கொடுக்க முடியுமென்றும் தோன்றியது. அது நீடித்ததா என்பது வேறு விசயம். ஆனால் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியது.

இந்தப் பதிவு மனம் முழுவதும் குளிரெடுக்க வைத்துள்ளது. எங்காவது தேடி ஐஸ் பவுடர் புட்டியை வாங்க வேண்டும்.

எழுத்தாளர் நவீன்,

மலேசியா.

***

அற்புதமான பத்தி அம்மா 😃 பல நினைவுகளை கிளர்த்திப் போட்டது.

ஆம், பனியை பார்க்காத நாட்களில் பனியை பற்றிப் படிப்பதென்பது பெரிய கிளர்ச்சி தானே. நீங்கள் சொல்வதெல்லாம் தான். அறியாத உலகம், அந்த உடைகள், அந்த வெதுவெதுப்பு, எல்லாமே கவர்ச்சி… பனியின் போது நெருப்பு முன்னால் குளிர்காய்வது, கையுரைகள் போடுவது (பனி ஆடைகளிலேயே இன்று வரை ஆகப் பிரியமானது. நம்மையும் ஒரு சீமாட்டி ஆக்கிவிடுவது 😁) பனியில் படுக்கலாம், உருளலாம், நடனமாடலாம், ஐஸ் கிரீம் போல சொகுசான ஒன்று

பனி என்றதுமே தஸ்தாயேவ்ஸ்கியின் வெள்ளை இரவுகள் தான் நினைவுக்கு வருகிறது. தஸ்தவியேஸ்கியிடம் அப்படி ஒரு மென்மையான கதையையே எதிர்பார்க்கவில்லை. அந்த பனி ஒரு மௌன சாட்சியாக அங்கே பொழிந்துகொண்டே இருக்கும். ஒரு மாதிரி ஏக்கமாக இருக்கும். பனி விழும் ஊரில் வாழ வாய்ப்பு கிடைத்தபோது இதை மேலும் உணர்ந்திருக்கிறேன். நம்ம ஊர் மழை ஊர்க்கார கிழவி மாதிரி சொடசொடசொடவென்று கொட்டி ஓய்ந்துவிடும். பனியின் அமைதியில் நுட்பமானதொரு ஏக்கம், மௌனம், அறிதல் என்னென்னவோ இருக்கும்.
மழையை விட பனிக்கு அர்த்த அடர்த்தி ஜாஸ்தி என்று தோன்றியதுண்டு.

அப்புறம் போரும் அமைதியில் பல காட்சிகள்… ரோஸ்தோவ் பனியில் ஒரு ஓனாய் வேட்டைக்குப் போவானே? (ஓனாய் தானே?) ஐஸ் ஆகிவிட்ட ஒரு ஏரியின் மேல் டெனிசோவ் ஓடுவான் பின்னாலேயே சைனியர்கள் கூட்டம் ஓட ஐஸ் பிளந்து விழுந்து சாவார்கள்… ஒரு ஏரியே ஐசாக ஆகுமா என்று எனக்கு வியப்பு வந்ததுண்டு.

அன்னா கரினீனாவில் பனி இன்னொன்றாக தெரியும்… கடும் பனி பொழியும் இரவில் பனி சக்கரங்களை அடைத்து ரயில் நின்றுவிடும்,
அப்போது தான் விரோன்ஸ்கி அன்னாவை எதிர்கொண்டு தன் காதலைச் சொல்வான். ஆனால் லெவின் கிட்டியை பட்டப்பகலில் ஐசில் நடனமாடிக்கொண்டு பார்க்கையில் காதல் கொள்வான். அவளுடைய இருப்பு சூரியனைப்போல் என்று அவன் நினைப்பானே… நேராக பார்க்க முடியாதது ஆனால் ஒவ்வொரு நொடியும் உணர்வது என்று. பனி தேசங்களில் பகல் எத்தனை ஒளிமிக்கதாக தெரியும் என்று பார்த்தபோது தான் அந்த வார்த்தைகளின் ஆழம் எனக்குப் புரிந்தது. ஐஸ் ஏரியும் பனியும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும்போது உண்மையிலேயே நம்மைச்சுற்றி சூரியன் ஒளிர்வதுபோல் இருக்குமல்லவா! அந்த contrast… பனி அவர்களுக்கு எத்தனை உயிர்ப்பான உடன்பிறப்பு இல்ல?

ரஷ்ய நாவல்களில் தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கியின் ஒரு சில நாவல்கள் மட்டும் தான் இதுவரை நான் வாசித்தது. என் வாசிப்பு நிறைய பிரிட்டிஷ் ஐரோப்பிய நாவல்களை நோக்கிப் போய்விட்டது. துர்கனேவ், புஷ்கின், பாஸ்டர்னாக் எல்லாம் வாசிக்க உங்கள் பதிவு தூண்டுகிறது.

அப்புறம்… தல்ஸ்தாயின் கவித்துவத் தருணங்கள். ஆம் இதைப்பற்றி மட்டுமே ஒரு பதிவே எழுதலாம். எழுதவேண்டும். அவர் கராரான யதார்த்தவாதி தான் விலகி நின்று பார்ப்பவர் தான். ஆனால் வரண்டவராக கடுமையானவராக கசப்பானவராக என்னால் ஒருநாளும் அவரை பாவிக்க முடிந்ததில்லை. அவர் எல்லாவறையும் விலகிநின்று தான் பார்க்கிறார்… அந்த விலகல் supreme detatchment மட்டுமே உருவாக்கக்கூடிய ஒரு கவித்துவ நோக்கு அவருக்கு உள்ளதல்லவா? வாழ்க்கையில் எதையுமே அவர் romanticise செய்வதில்லை. அதாவது சிலாகித்து நெகிழ்ந்து உருகுவதில்லை. ஆனால் ஒட்டுமொத்த யதார்த்தப் பரப்பில் அதன் இடம் என்ன என்று தொட்டுக்காட்டுகையிலேயே அந்த உச்சக் கவித்துவத்தை எட்டிவிடுகிறார்.

உதாரணம்… வார் அண்ட் பீஸில் ஆரம்பத்தில் வரும் ஒரு காட்சி. வீட்டில் அனைவரும் குழுமியிருப்பார்கள் அப்போது நடாஷாவின் அப்பா நடனமாடுவார். அந்த கொண்டாட்டம் சட்டென்று நம் மனதைக் கவர்ந்துவிடும். மேலெழுந்து பறக்கச் செய்துவிடும். நாவலில் நாம் உள்ளே செல்லச்செல்ல காலம் மாற மாற அந்த நடனத்தை ஓர் ஏக்கத்துடன் நினைவுகொள்வோம். எத்தனை எளிதாக கடந்து விட்டது. ஒரு சக்கரம் சுழல்வதுபோல் தான். அதன் பரப்பில் ஒரு புள்ளி பூமியை தொட்டக்கணமே எழுந்துவிடுகிறது. சாதாரணங்களின் கவித்துவம் இது என்று தோன்றியதுண்டு. சின்னப்பெண் ஒருத்தி நடக்கையிலேயே தன்னையறியாமல் எம்பி கிளைகளை இழுத்து பூவிழச் செய்வதுபோல். அவளே அறியமாட்டாள். பார்க்கும் நமக்கும் அந்த கணம் கடந்துவிடும். ஆனால் கிளை மட்டும் அவள் தொடுகையோடு அசைந்துகொண்டே இருக்கும்…

நடாஷா ஆண்ட்ரூவைப்பற்றி சோனியாவிடம் சொல்வது இன்னொரு விதமான கற்பனாவாதம்… அந்த நிலவு, அதை ஆண்ட்ரூவே கேட்டுக்கொண்டிருப்பான் அல்லவா?
அது ஒரு மேஜிக்கல் தருணம். அதன் பிறகு தான் நீங்கள் சொல்லும் அந்தக் காட்சி நிகழும் என்று நினைக்கிறேன். நடாஷா அம்மாவிடம் வந்து சொல்வாள். அம்மா ஆனந்தப்படுவாள். ஆனால் அப்போதும் அந்த தருணத்தின் உன்னதத்தை உணர்ந்தவளாக இருப்பாள். அன்னையில் கடந்து விட்டக் காலம் மகளில் துளிர்க்கும் அந்த புள்ளியில் பேரழகும் பெரிய விவேகமும் ஒளிந்திருப்பதாக எனக்குப் படும். அந்த கற்பனாவாதத்தை வேறொன்றாக மாற்றிவிடுவார்.

சோனியாவும் ரஸ்தோவும் கொள்ளும் பிரிவு, ரஸ்தோவும் மரியாவுக்கும் மலரும் அன்பு, இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்…

ஆனால் சமீபத்தில் பெரிதாக உணர்ந்த ஒரு தருணம் அன்னா கரீனினாவில் வருவது, இறுதியில். கிட்டி குழந்தையை குளிப்பாட்டுவதைப் பார்த்து லெவின் அகம் மலர்வான். அந்தச் செயலின் பரம லௌகீகத்தன்மை, ஆனால் அதிலிருந்து எழுந்து வரும் ஒரு நித்திய சத்தியம். பிறந்த மேனி பிஞ்சு உடலின் உயிர், வேறு கண்ணேயில்லாதை அன்னை, நீரின் ஸ்பரிசம், அந்தத் தருணத்தின் நெருக்கம். வாழ்க்கையின் உயர்கவித்துவம் அது என்று இப்போது தோன்றுகிறது.

இத்தனை மீட்டல்கள் வழியாக இந்தக் காலைப்பொழுதை இனிமையாக்கிவிட்டீர்கள் 😃🙏🏽 நன்றி.

எழுத்தாளர் சுசித்ரா,

சுவிட்ஸ்சர்லாந்த்.

***

அக்கா,

இன்றுதான் வெண்முரசு காணொளி முழுமையாகப் பார்த்து முடித்தேன். வெண்முரசின் பல பரிமாணங்களை மிக லேசாகத் தொட்டுச் செல்வதென்றால் கூட எவ்வளவு சொல்ல வேண்டியிருக்கும், நமக்குள் எத்தனையெத்தனை அறிதல்களை இது அளித்திருக்கிறது என்பதை இப்படி ஒட்டுமொத்தமாக நீங்கள் பேசும்போது உணரமுடிகிறது.

எனக்கு இக்காணொளியில் மிகவும் பிடித்தது உங்கள் உடல்மொழியும் முகபாவனைகளும்தான். பேசும் அவ்வளவு மகத்தான விஷயங்களைத் தாண்டி ஒரு கள்ளமற்ற குழந்தையின் கதை சொல்லும் லயிப்பும் ஆர்வமும் உங்கள் கண்களிலும் குரலிலும் இருந்து கொண்டேயிருக்கிறது. மிக அழகான பதிவு.

இதைத் தொடர்ந்து “பனி உருகுவதில்லை” பதிவை வாசித்தேன். ஒரு மணிநேரம் உங்களைப் பார்த்துவிட்டு வாசித்ததாலா எனத் தெரியவில்லல. அந்தக் கட்டுரையில் உங்கள் மிக விரிவான, ஆழமான வாசிப்பு வெளிப்படும் அதே நேரம் அக்கட்டுரையிலும் தாங்கள் இதே போல விழிகள் விரிய அப்பனிநிலத்துக்குள் கனவில் சென்று பேசிக் கொண்டிருந்ததாகவே மனம் உணர்ந்தது. அத்தனை அறிதல்களும் சென்றமைந்த பின்னரும் கலையாத தங்கள் தூய்மையை அந்த உருகாத பனியாக உணர்ந்தேன் 😍

சுபஸ்ரீ,

சிங்கப்பூர்.

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s