வானத்தில் நட்சத்திரங்கள் – கடிதங்கள்

அக்கா,

முதலில் உங்கள் பதிவுகள் நெருக்கமாக இருக்க காரணம் அதில் உள்ள காட்சித்தன்மை. மரமென சொல்லாமல் மாமரம் என்பதும் நோட்டிஸ் என சொல்லாமல் ரோஸ் நிற நோட்டிஸ் என்பதும் காட்சிகளை கண்முன் உருவாக்குகிறது. அதற்கு பிறகு அப்படியே நீங்கள் பாடிக்கொண்டு ஓடுவதை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அப்புறம் இயல்பாக வரும் நகைச்சுவை. இதில் ஏசு இயல்பாக இந்து கடவுள் ஆகிறார். அப்படிதான் ஆக முடியும். என் வீட்டில் சீன கடவுளை வணக்கும் வழக்கமொன்று இருந்தது. (அதன் காரணத்தை இன்னொரு நாள் சொல்கிறேன். என் பாட்டி ஊதுவத்தியைக் கொழுத்தி அதை வணங்கு முறையில் சிவனாகவே மாற்றிவிடுவார்.

எப்போதும் அக்காக்கள் கொஞ்சம் சூழ்ச்சியானவர்கள்தான். தம்பிகள் வெகுளியானவர்கள். அவர்களிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் திடுக்கிடும் உண்மைகள் வெளிபடும். ஆனாலும் அத்தனையையும் மன்னித்து தம்பிகளின் கையை பற்றியே இருப்பது அக்காவின் கடமை. அப்புறம் இந்த தம்பிகளுக்கு எத்தனை முறை போட்டாலும் சில சட்டைகள் சலிப்பதில்லை என்ற உளவியலையும் அக்காக்கள் அறிய வேண்டும். உடலுக்கு பழகிவிட்ட உடைகளே ஊர் சுற்ற ஏற்றது.

படித்துக்கொண்டே சென்றபோதுதான் நான் வாசித்துக்கொண்டிருப்பது ஒரு சிறந்த சிறுகதை எனத் தோன்றியது. சிறுகதைதான். வாசித்து முடித்தப்பிறகு அதில் கடைசிவரை இருந்த ஒருமையும் தம்பியை முன்வைத்து பின்னப்பட்ட பாங்கும் அப்படியே அதை நிரூபித்தது.

தொடக்கத்தில் இருந்து துள்ளலும் அறிவின் துடிப்புடனும் இருக்கும் அக்கா தம்பியின் அறியாமையையும் அதன் வழி வெளிபடும் உணர்ச்சியையும் அறிபவள்தான். அவள் கொஞ்சம் பெரிய மனுஷியல்லவா.

ஆனால் அவளே கண்களைத் திறந்த தம்பி, ஏசுவாகவே தன்னை எண்ணியிருப்பதையும் அறிகிறாள். தன்னைப் பார்க்க வந்த மூன்று ராஜாக்களை அறியும் ஏசுவின் மிளிரும் கண்களை அறிகிறாள். மிச்சமில்லாத துன்பத்தை அனுபவித்த ஒரு மனிதனின் முதல் புன்னகையை கள்ளமில்லா தம்பியின் முகத்தில் வெளிபடும்போது அவள் அன்னையாகத்தானே ஆக வேண்டும்.

எழுத்தாளர் நவீன்,

மலேசியா.

***

மேடம்,

சிறுமிகளின் கண்கள் பெரிதாக உள்ளன அவர்கள் வளர வளர அவை சிறிதாகின்றன என எண்ணுவேன், பின்னர் முகம் வளர்வதால் தான் அவ்வாறு தோன்றுகிறது என அறிந்து கொண்டேன். ஒரு நோக்கில் அவர்கள் பார்ப்பதும் பார்த்தவற்றை மனதில் இருத்திக் கொள்வதும் வளர வளர சிறிதாகிறது என்பது உண்மையே. உங்களுக்கு அப்படி நிகழவில்லை போலும் இன்றைய கண்களால் அன்றைய காட்சியை பார்த்து விட்டீர்கள். பால்ய கால உற்சாகமும் ஒரு கலா அனுபவமும் ஒருங்கிணைந்த நிகழ்வை விரித்து வரைந்த கட்டுரை இது, ஆகவே மிக அழகானது.

இதில் உள்ள நுண் சித்தரிப்பும் நாடகீய முடிச்சும் மிகச் சிறப்பானவை. தேர்வு முடிந்து உணரும் விடுதலை, இரட்டிப்பு மகிழ்ச்சியாக பாஸ்கா நாடக திட்டம், முகர்ந்து பார்த்து பக்கோடாவை அறிவது, ஒரு மகிழ்ச்சியான குடும்ப உரையாடல், உடுக்கும் ஆடைத் தேர்வு போன்ற சாதாரண நிகழ்வுகள் எல்லாம் சிற்றிளமையில் வண்ணமாக மின்னுகிறது. பட்டுக்கோட்டை பயணத்தை விடவும் அதன் ஆயத்தம் பெரிது, காணப் போகும் விழா காணும் விழாவை விடப் பெரிது.

இக்கட்டுரையை சிறுகதை என தரம் உயர்த்தியது மனித குமாரனின் வதையும் உயிர்த்தெழுலும் நிகழும் நாடகம் தான். மிக அற்புதமான விவரிப்பு, குறிப்பாக இயேசுவின் தண்ணீர் குவளையை தட்டி விடும் இடம் மற்றும் மூன்று நட்சத்திர தரிசனம். அந்த இரவில் திறந்தவெளி ரிக்ஷா பயணம் ஒரு ஓவியம் போல இருந்தது. இதன் உணர்ச்சிகரம் கனக்கிறது. சொல்லிலேயே அரங்கு அமைத்து ஆட்டம் நிகழ்த்தி கண்டு நெகிழ்ந்து அமைந்து விட்டீர்கள். மென்மையாக வளர்ந்து சென்ற ஒரு அனுபவத் தொடர் சரடு திடீரென்று ஒரு நாகமாக படமெடுத்து நின்றது. ஒரு கச்சிதமான இருமை இது.

ஒரு ஏவப்பட்ட தீபாவளி வாணம் உயரப் பறந்து கொண்டே சென்று இறுதியில் வெடித்து மத்தாப்பு பொழிந்தது போல இக்கட்டுரையை கண்டு முடித்தேன்.

கிருஷ்ணன்,
ஈரோடு.

***

நல்ல நினைவு வைத்து எழுதியுள்ளீர்கள் மேடம். உரையாடல் முழுக்க இன்றே நடப்பதுபோல் அமைந்துள்ளது நகைச்சுவை , தானாக வந்து அமர்கிறது.

நானும் எட்டாம் வகுப்பில் முதல் இரண்டு மாணவர்களாக இருந்து விடுமுறையில் இன்னொருமுறை பரீட்சைக்கு படித்தவன்தான். உங்கள் கதையில் என் கதை கூடவே வந்துகொண்டுள்ளது. நீங்கள் நாடகம் பார்க்கிறீர்கள். என் பள்ளியில் ஜீஸஸ் என்ற படம் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார்கள். அதுவே நான் யேசுவை முதலில் அறிந்தது.
எப்பொழுதும்போல் தலைப்பு சிறப்பு.

கொஞ்சம் சஸ்பென்ஸ் வைக்கமுடியுமா என்று பாருங்கள். வலுக்கட்டாயமாக திணிக்காமல், அதுவே வருவதுபோல். அப்பா, உங்களை நாடகத்திற்கு அனுப்புவாரா இல்லையா என்று எங்களுக்கு கொஞ்சம் பதட்டம் வரவேண்டும். அல்லது நேரடியாக இல்லாமல், முன்னர் பின்னர் சொல்லி, புனைவின் இடத்தை அபுனைவில் வரவைத்தால் கூடுதல் சுவையாக இருக்குமோ என்று நினைத்தேன்.

நன்றி!

ஆஸ்டின் சௌந்தர்.

***

இனிய அருணாக்கா,

மூன்று நட்சத்திரங்கள் பதிவு இந்த அனுபவப் பகிர்வு வரிசையில் மிகுந்த தனித்துவம் கொண்டது. ‘உங்கள்’ அனுபவம் என்பதை உங்கள் எழுத்தின் மாயம் வழியே ‘எங்கள்’ அனுபவமாக மாற்றி விட்டீர்கள்.

அப்பா தம்பி, அம்மா பாட்டி என கதாபாத்திரங்கள் முதல், திருவிழா சூழல் வர்ணனை தொடர்ந்து சர்பத் ருசி தொட்டு ஏசு நாடகம் வரை, அனைத்தையும் உங்கள் தனித்துவ மொழிநடை வழியே உயிர் கொண்டு இயங்க செய்து விட்டீர்கள்.

உங்களை போலவே எனக்கும் எட்டாவதில்தான். ஏசு வேறு விதமாக அறிமுகம் ஆனார். பழைய பள்ளியில் இருந்து பொறுக்கி எனும் பட்டதுடன் வெளியேற்ற பட்ட என்னை, லாரன்ஸ் வாத்தியார்தான் பொறுப்பேற்று எட்டாவதில் புனிதஜோசப் பள்ளியில் கொண்டு சேர்த்தார்.

முற்றிலும் புறக்கணிக்கப்பூட்டு நின்ற ஒருவனின் துயரை அறிவார் அவர் என்று உணர்ந்தேன்.

பின்னர் வெவ்வேறு தருணங்களில் மெல்ல மெல்ல என்னுள் வளர்ந்த என் ஏசுவை, அவரது மலை பிரச்சங்கம் வழியே முற்றிலும் என்னவர் என்றே ஆக்கிக் கொண்டேன். பின்னர் வாழ்வும் இலக்கியமும் பிணைய எனக்கான ஏசுவுக்கு பின்தொடரும் நிழலின் குரல் நாவல் வழியே ஜெயமோகன் முகம் கொடுத்தார்.

உங்கள் பதிவின் அனுபவம் மொத்தமும் ஒரு ஆடியாக முன் நின்று என் அனுபவத்தை பிரதிபலித்து பார்த்துக்கொள்ள வைத்தது.

ஆம் நீங்கள் சொன்னது போல என் ஏசு என் மரியன்னை எல்லோரும் வானத்தில் இருப்பார்கள். நட்சத்திரங்களுக்கும் மேலே. கட்டுரை வாசித்து முடித்ததும், தகவல் வந்து ஏசுவை தேடி போய் பார்த்த வகையில் அந்த மூன்று நட்சத்திரங்கள் நீங்களும் உங்கள் பாட்டியும் தம்பியும்தான் என்று தோன்றியது. 🙂

கடலூர் சீனு

***

அழகான பதிவு அக்கா,

நாடகத்துக்கு செல்வதற்கான ஆயத்தங்கள், பீஷ்ம அர்ஜுன சண்டையில் பறக்கும் அம்பு, கதைகள், தின்பண்டஙகள் என மகிழ்வாகத் தொடங்கி, ஏசு கதையில் உணர்வுகள் எடை கொண்டது. இறுதியாக தம்பியின் நினைவே எஞ்சி நிற்கிறது. அந்த மூன்று நட்சத்திரங்களைப் போல.

அந்த மூன்று நட்சத்திரங்களைப் பார்த்தபடி, அதுதான் நாம் மூவரும், நாம எங்கிருந்தாலும் அதைப் பார்த்ததும் அருகருகே வந்துவிடலாம் என சகோதரிகளோடு மாயப்புனைவுக்கதை பேசிக் கொண்டு அமர்ந்திருந்த பால்யம் நினைவுக்கு வந்தது.

சுபா,

சிங்கப்பூர்.

***

இன்றைய பத்தி, ஒரு நல்ல சிறுகதை படித்த அனுபவம். அற்புதம் 😃

முன்பு நாம் பேசியபோது இளமை பருவத்தை சரியாக எழுதுவதைப்பற்றிய உங்கள் கனவை சொல்லியிருந்தீர்கள். நீங்கள் உத்தேசித்த அழகுடன் இளமைப் பிராயத்தை காட்டிவிட்டீர்கள். அற்புதமான பதிவு.

எழுத்தாளர் சுசித்ரா,

சுவிட்ஸ்சர்லாந்த்.

***

அன்புள்ள அருண்மொழி அம்மாவுக்கு வணக்கங்கள்,

இப்பொழுதைய வழக்கமெலாம் காலையில் காப்பி என்பதற்குள் உங்களுடைய வலதளத்தைத்தான் வந்தடைகிறேன். ஏழு நாட்களுக்குள் ஒரு பதிவு, இடையில் கடித பதிவேற்றம் இருந்தும் தினம் காலை ஒருமுறை மாலை ஒருமுறை என தளத்திற்கு வந்து செல்கிறேன். வந்தமைக்காக திரும்பிச்செல்ல மனமில்லாமல் பழைய பதிவுகளை மீண்டும் வாசிக்கிறேன். அதில்காணும் உங்களது இளமைக்கால பரவசங்கள் குதூகலமடையச் செய்கின்றன. உங்களுடைய வாழ்வனுபவ குறிப்புகளில் இருந்து எழுந்து வரும் அருண்மொழிநங்கை எனும் கதாப்பாத்திரம், அவரது ரசனைகள், தேடல்கள், இசையறிவு மற்றும் வாசிப்பனுபவங்கள் அனைத்தும் வருங்காலத்தில் ‘அருண்மொழி நங்கை எனும் நான்’ அல்லது ‘அருண்மொழி எனும் நங்கை’ என்று தனி தன்வரலாற்று நூலாகவும் வரக்கூடும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுக.

உங்களுடைய நடை மற்றும் மொழிபிரயோகம் இதுவரை பெண் எழுத்தாளர்களுக்கு சாத்தியப்படாத ஒரு திறப்பாகவே தோன்றுகிறது. ஒவ்வொரு பதிவையும் வாசித்து முடிக்கையில் நான் என்னுடைய பதின்பருவ இளமை காலங்களுக்குள்ளும் திரிகிறேன். இத்தனை தூரம் அவற்றை அங்கீகரித்து அனுபவித்து பார்த்ததே இல்லை, இறுதியில் ஆம் அது தானே அதுவும் தானே நான் எனும் நிலைக்கே பயணப்படுகிறேன். நன்றிகள்.

இன்றைய ‘வானத்தில் நட்சத்திரங்களும்’ நிறைவாய் இருந்தது. அதோ அந்த பொற்காலம் என்பதைப்போல் இங்கிருந்தே அந்த மைதானத்தில் நானும் கடைசி வரிசையில் இரண்டு திடல்களில் அருண்மொழியையும், யேசுவையும் மாறிமாறிப் பார்த்துகொண்டிருந்தேன். தம்பி கேவி அழுது திட்டுகயில் கிளுக் என்று சிரித்துவிட்டேன். ரசிக்கக்கூடிய இடம்தான் அது. உங்களது மொழியில் உணர்வுகள் நளினமாக வெளிப்படுகின்றன. ஆம் அது பொற்காலம்தான், இதோ இன்று எங்கள் தலைமுறையின் மீது அனைத்தும் கொட்டப்படுகிறது, இலகுவாகாக கிடைக்கிறது, உள்வாங்கிக்கொள்ளத்தான் முடிவதில்லை, ஏற்கனவே சப்ஸ்க்ரைப் செய்த பலவற்றை அன்சப்ஸ்க்ரைப் செய்தாலும் வேண்டியவைகள் வேண்டாதவைகளுக்குள் தொலைந்துதான் போகின்றன. அகன்ற ஆர்வத்தை சிறைவைக்கும் விழிகளும் செவிகளும் வாய்க்காத ஏக்கம் எஞ்சத்தான் செய்கிறது. அதைதான் உங்களது எழுத்தின் நிசப்தத்தில் தேடுகிறேன் போலும். மிகவும் அழகான நேர்த்தியான இனிமையான கட்டுரைகள். நிறைய எழுதுக. வாசிக்க வேண்டும்.

அகிலா ஆறுமுகம்.

அன்புள்ள அகிலா ஆறுமுகம் அவர்களுக்கு,

உங்கள் கடிதம் மகிழ்ச்சி அளித்தது. இடையில் பயணங்கள். அதனால் தாமதம்.

எல்லோருக்கும் அவரவர்க்கான இளமையின் குதூகலங்கள் உண்டல்லவா? என் எழுத்தின் வழியாக நான் என் இளமையை மீண்டும் நிகழ்த்திப் பார்த்துக் கொள்கிறேன். அதில் வரும் அருண்மொழியை ஏக்கத்தோடு அல்ல , அவளை ஒரு தனி இருப்பாகவே என்னால் காண முடிகிறது. ஒரு சிறு நகரத்தில் , வாய்ப்புகள் மிக அரிதாக கிடைக்கும் ஒரு சூழலில், தமிழ்வழி அரசுப்  பள்ளிக் கல்வியில் வளரும் ஒரு சிறுமிக்கு பெற்றோர் படித்தவர்கள், அறிவு மேல் மரியாதை கொண்டவர்கள் என்பதாலேயே அவள் தீ போல் இருக்கிறாள். கிடைப்பதையெல்லாம் வாரிப் பற்றுகிறாள். 
உண்மையில் அப்படித்தான் இருந்தேன். அது உயிரின் அறிவுத்தேடலின் இயல்பான உத்வேகம். யாருக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல. அப்படி ஆகி விடக் கூடாது என்று. இன்றுபோல் கைதொடும் தொடுகையில் அறிவின் வாய்ப்புகள் அன்று இல்லை. அரிது என்பதாலேயே விலைமதிப்பற்றதாக எல்லாமும் இருந்தன. இன்றைய தலைமுறைக்கு எல்லாம் கொட்டிக்கிடக்கிறது. அதில் தேர்வு செய்வது கடினமாகிவிட்டது. நீங்கள் கூறியது சரிதான்.

உங்கள் இளமை நாட்களை அசைபோட என் பதிவுகள் ஒரு வாய்ப்பாக அமைவதில் எனக்கு சந்தோஷம்.

உண்மையில் இளமை நாட்கள் மிக மங்கலான நினைவுகளாக உள்ளன. எழுதும்போது துலங்கி வருகிறது. இந்த மாயம்தான் என்னை எழுதவைக்கிறது.

பதிமூன்று வயது சிறுமியும், எட்டுவயது சிறுவனும் தங்கள் வாழ்க்கையை மீறிய ஒரு வாழ்க்கையை எதிர்கொள்ளும் தருணம் தான் அந்த இயேசு நாடகம்.

உலகமக்களின் பாவங்களுக்காக தன் ரத்தத்தை விலையாகத் தந்த மனித குமாரன். அவனை அழுகையின், ஆவேசத்தின் வழியாக இருவரும் எதிர்கொண்டு அறிகிறார்கள்.

அக்குழந்தைகளைப் பொறுத்தவரை அது ஒரு நாடகமே இல்லை அல்லவா, ஒரு உக்கிரமான தருணம். இதுவரையிலான அவர்களுடைய சிறிய வாழ்வில் எதிர்கொள்ளாதது.

நன்றி

மிக்க அன்புடன்,

அருண்மொழி.

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s