மலையில் பிறப்பது…

சுந்தர ராமசாமியுடன் அவருடைய வீட்டில் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார், நாயர்களுக்கு காது கிடையாது என்று. அதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன். ஆகவே உடனடியாக ‘ஆமாம்’ என்று ஒரு தலையசைப்பின் மூலம் ஆமோதித்தேன். கடைக்கண்ணால் ஜெயனைப் பார்த்து நானும், சு.ராவும் புன்னகைத்துக் கொண்டோம். ஜெயன் அவசரமாக பேசும் விஷயத்தை திசைதிருப்ப முயன்று தோற்று பலவீனமாக புன்னகைத்தார். பிறகு இசை பற்றி கொஞ்ச நேரம் பேசும்போது சு.ரா. மாலியின் புல்லாங்குழல் பற்றி சிலாகித்து சொல்லி அவரைப் பற்றிய சில சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார். அன்றே முடிவெடுத்து விட்டேன்.

பஸ்சில் தருமபுரி திரும்பும்போது  டேப் ரிகார்டர் வாங்குவது என்ற என் பலநாள் கனவை ஆசையோடு முன்வைத்தேன். என் ஆசை எதையும் ஜெயன் மறுத்ததில்லை. “ம்ம்… வாங்கலாம்” என்றார். அதற்குள் சேலத்திற்கு போய் எந்த டிசைனில், எந்த கலரில் வாங்கலாம் என்பதையும் சொல்லி எனக்கு நானே கனவில் மிதந்தேன்.

மதுரையில் இடையில் இறங்கியபோது  எனக்கு மீனாட்சியை தரிசிக்க வேண்டும்போல் இருந்தது.  கல்லூரியில் படிக்கும் நான்கு வருடங்கள் எனக்கு மிகவும் அணுக்கமானவளாக இருந்திருக்கிறாள். அக்காலங்களில் பலவித சஞ்சலங்கள், பயங்கள், வீட்டின் சச்சரவுகள் எல்லாவற்றையும் அவளிடம் மட்டுமே முறையிட்டு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஆயிரம் பேர் நிற்கும் சன்னதியிலும் நானும் அவளும் மட்டுமேயான பரிபூரண தனிமையை உணரும் அனேக சந்தர்ப்பங்கள் எனக்கு வாய்த்திருக்கின்றன. ஜெயனும் நானும் காதலிக்கும்போது முதன்முதலில் சேர்ந்து வெளியில் சென்றது மீனாட்சி கோவில்தான். அவள்தான் எங்களை சேர்த்து வைத்தவள்.

முதல்முறையாக ஜெயனுடன் வந்து தொழும்போது ஏனோ அவர் அம்மா விசாலாக்‌ஷி அம்மாவை நினைத்துக் கொண்டேன். அவரிடம் ஆசி வாங்குவதுபோல் உணர்ந்தேன். மீனாக்‌ஷி, காமாக்‌ஷி, விசாலாக்‌ஷி எல்லாமே மலைமகளின் வேறு வேறு நாமங்கள் இல்லையா? ஜெயனிடம் உடனே சொல்ல கூச்சமாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பான முதல் சந்திப்பின் தனிமையில் அவர் அம்மாவைப் பற்றி நிறைய கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் அந்தக் கொந்தளிப்பிலிருந்து முழுவதும் வெளிவந்துவிட்டாரா என்று அறிய விரும்பினேன். பெரும்பாலும் அந்த நினைவுகளை உணர்ச்சி கலக்காமல் தர்க்கபூர்வமாக நினைவுகூர்வது போலத்தான் இருந்தது. ஆனாலும் அடியாழத்தில் இருந்த அந்த கைவிடப்பட்ட குழந்தையின் தவிப்பையும் தனிமையையும் நான் உணர்ந்து கொண்டேன்.

பஸ்சில் வரும்போது  யோசித்தேன். மரபிசையில் எனக்கு  கொஞ்சமாவது அறிமுகம் இருக்கிறது. மரபிசையின் ஒரு துளித் தேனை நான் குஞ்சிதபாதம் ஐயர் வழியாக சுவைத்திருக்கிறேன். என் அப்பாவும் இசைரசிகர் தான். அவர் வாய்ப்பாட்டு அதிகம் கேட்காவிட்டாலும் நாதஸ்வரம் மிக விரும்பி கேட்பார். ஷேக் சின்னமவுலானா, திருவீழிமிழலை சகோதரர்கள், காருக்குறிச்சி அருணாசலம், ராஜரெத்தினம் பிள்ளை எல்லோரையும் கேட்பார்.

எனக்கு நாதஸ்வரம் பண்டிகை நாட்களில் கேட்க மிகவும் பிடிக்கும். கோவில் மண்டபங்களில் ஒலிக்கும் நாதஸ்வரத்தின் இசையைக் கேட்டு வெளிப் பிரகாரத்தில் அரைமயக்கநிலையில் அமர்ந்திருப்பது வாழ்வின் பெரும் இன்பங்களில் ஒன்று. அகன்ற கோவில் பிரகாரங்களில் கேட்கும் நாதஸ்வரத்துக்கு அந்த பிரத்யேக இனிமை எப்படி வருகிறது? இசையை வீசியடிப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட கருவி அது, ஆகவே திறந்தவெளிகளை பெருகி நிறைக்கிறது  என்று தோன்றும்.

ஆனால் ஜெயனுக்கு சாஸ்திரீய இசையே அறிமுகம் இல்லை. எப்படி தொடங்குவது? அறிமுகம் இல்லாதவர்களுக்கு சாஸ்திரீய இசை அவ்வளவாக பிடிக்காது. மறுவாரம் நாங்கள் பொங்கலுக்கு பட்டுக்கோட்டை செல்லவேண்டியிருந்தது. அங்கே சென்றபின் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கலிலிருந்து திருவையாறு தியாகராஜர் ஆராதனை என்பதை பத்திரிக்கையில் படித்து அறிந்தேன். ஜெயனும் பட்டுக்கோட்டையில் என்வீட்டில் போரடித்து, ஏகப்பட்ட உணவுவகைகளைச் சாப்பிட்டு மப்படித்து கிடந்தார். வெளியே போகலாம் என்று சொன்னதும் துள்ளியெழுந்தார். ”போகலாம் போகலாம்” என்றார். முதலில் அம்மாவையும் அப்பாவையும் சமாளிக்க வேண்டுமே, அஜி பதினொரு மாதக்குழந்தை.  குழந்தைய விட்டுவிட்டு கச்சேரி கேட்கவா என்ற ஆட்சேபம் எழலாம்.

ஜெயனுக்கு ஒரு யோசனை எழுந்தது. என் வீட்டில் அப்பா  அப்போதுதான் லேண்ட்லைன் கனெக்‌ஷன் வாங்கியிருந்தார். பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சூருக்கு போன் செய்தோம். ஆற்றூர் ரவிவர்மாவின் மனைவி எடுத்தார்கள். “சார் திருவையாறு போயல்லோ, அவிட தஞ்சாவூர் கார்த்திக் ஹோட்டலில் முறி எடுத்துட்டிண்டு. ஜெயமோஹன் அவிட போயா மதி. உச்சைக்கு சேஷமே கச்சேரிக்கு போகும்”. என்றார். ஆற்றூர் இருவரையுமே அழைத்திருக்கிறார் என்று சொன்னால் என் அம்மா அப்பாவால் தட்ட முடியாது.

ஜெயன் சுறுசுறுப்பாக கிளம்பினார். ஆற்றூரை பார்க்கப் போகும் குஷி அவருக்கு. என்னிடம் “நான் இப்ப போறேன் அருணா.  நீ மத்யானம் சாப்டுட்டு அஜிக்கு ஃபீட் பண்ணிட்டு கெளம்பி தஞ்சாவூர் வா. கார்த்திக் ஹோட்டல்ல நான் ஆற்றூருடன் வெயிட் பண்றேன். நீ வந்ததும் மூணுபேருமா  திருவையாறு போலாம்” என்றார்.

நான் மிதக்க ஆரம்பித்தேன். திருவையாறு எப்படியிருக்கும் என்பதே எனக்கு மறந்து விட்டது. பத்துவயதில் யாரோ சொந்தக்காரர்கள் திருமணத்திற்கு சென்றது. அதன்பிறகு திருவையாறு அசோகா என்ற இனிப்பு வடிவில் தான் என்னிடம் வந்துகொண்டிருந்தது. அப்பா எப்போது தஞ்சை சென்றாலும் வாசன் பேக்கரி அல்லது அய்யங்கார் பேக்கரியிலிருந்து திருவையாறு ஸ்பெஷல் அசோகாவை வாங்கி வருவார். எனக்கு அல்வாவை விட அசோகாதான் மிகப் பிடிக்கும். பாசிப்பருப்பில் செய்யப்படும் அதன் சுவையே வேறு.

மதியம் அவசரம் அவசரமாக சாப்பிட்டேன். அம்மாவிடம் அஜிக்கு செரிலாக் கொடுப்பது பற்றி ஏகப்பட்ட அறிவுறுத்தல்கள் கொடுத்தேன். “அம்மா, பால் பாட்டில் மூணு தனித்தனியா ஸ்டெரிலைஸ் பண்ணி வச்சுருக்கேன். பால் கொடுத்து முடிச்சதும் தண்ணியிலே போட்டுடு. நாங்க கச்சேரி முடிஞ்சு வர பதினொரு மணியாய்டும்”.

“நானும் தான் வளத்துருக்கேன் ரெண்டு புள்ள, சும்மா கழுவிட்டுதான் கொடுப்போம். இவ்ளோ ஆர்பாட்டம் பண்றே நீ” என்று நீட்டி முழக்கினார் அம்மா.

“அப்ப மாதிரியில்லமா இப்ப. கிருமிகள் பெருகிடுச்சு. ஒம் புள்ளக்கி இருந்த ரெஸிஸ்டன்ஸ் எம் புள்ளக்கி இல்ல, போதுமா?”.

அப்பா எதிர்ப்பே தெரிவிக்கவில்லை நான் போவது குறித்து. நான் தீர்மானித்து விட்டால் மாற்றமுடியாது என்று அப்பாவுக்கு தெரியும். என்னவென்றால்  மாப்பிள்ளை மகா பிடிவாதக்காரர் என்ற இமேஜை நான் உருவாக்கி வைத்திருந்தேன். என்னிடம் ஜெயனைப் பற்றி சிறிய விமரிசனத்தோடு யார் பேச வந்தாலும் குட்டி போட்ட புலிபோல சீறுவேன். ஆரம்பத்திலேயே இவர்களை நறுக்கி வைக்க வேண்டும், அவர் பற்றி என்னிடம் பேசவே பயப்படுவார்கள் .

மாப்பிள்ளை தமிழ்மண்ணின் செவ்வியல் இசையை கேட்கப் போகிறார் என்பதே என் அப்பாவுக்கு பெருமையாக இருந்திருக்கும். மெல்ல மெல்ல முழுத்தமிழராக மாற்றி விடலாம். பாப்பா மெல்ல காந்தமுள்ளை இந்தப் பக்கம் திருப்பிவிடும் என்று அப்பாவுக்கு ஒரு நினைப்பிருந்திருக்கும்.

அஜியை தூங்கவைத்துவிட்டு பஸ் ஏறிவிட்டேன். அப்பா நான் புறப்படும்போது  ”கார்த்திக் ஹோட்டல் பஸ் ஸ்டாண்டின் பின்பக்கமாக இருக்கும். நாம் அடிக்கடி காஃபி குடிப்போமே அந்த ஹோட்டெல்” என்று வாசல்வரை துரத்திவந்து வழிசொன்னார்.

அம்மா பட்டுப்புடவை உடுத்திபோகச் சொன்னாள். பெரிய சபா ஹால் கச்சேரி என்று நினைத்துவிட்டாள் போலிருக்கிறது. கூரைப் பந்தல், மண் தரை என்றதும் காட்டன் புடவைக்கு சம்மதம் சொல்லிவிட்டாள். அம்மாவைப் பொறுத்தவரை எங்கு போவதென்றாலும் நன்றாக உடுத்தவேண்டும். அழகிய காட்டன் புடவை அணிந்து மல்லிகை சரம் வைத்து ஒரு உதாரண தமிழ்ப் பெண்ணாக ஆற்றூர் முன்போய் நின்றேன். ”அருண்ண்மொழி வரணம்”. என்பெயரில் நடுவில்  ண்ண் என ஓர் அழுத்து அழுத்துவார். என்னிடம் பேசும்போது மலர்ந்துவிடுவார். பேச்சில் சிரிப்பும் உற்சாகமும் கொப்பளிக்கும். ஜெயன் என்னைப் பார்த்து புருவம் உயர்த்தினார். ”அழகா இருக்கேடி” என்று காதில் கிசுகிசுத்தார்.

திருவையாறுக்கு தஞ்சையிலிருந்து நிமிஷத்திற்கொரு டவுன் பஸ் ஸ்பெஷல் சர்வீஸ் இருந்தது. திருவையாறு பஸ் ஸ்டாண்டில் இறங்கியதுமே கர்னாடக இசை காற்றில் வந்து தழுவிக் கொண்டது. மெல்ல நடந்து காவிரியின் பாலத்தைக் கடந்து கோவில் பிரகாரத்தில் நுழைந்தோம்.  முதலில் எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது அதன் வெளிப்பிரகார சுற்று மதில்சுவர். சாதாரண கோவில்களைக் காட்டிலும் மிக உயரமாக இருந்தது. பொறுமையாக சிற்பங்களை ரசித்து, தொழுதுவிட்டு வெளியில் வந்தோம். கச்சேரி நடக்கும் பெரிய பந்தலுக்கு பின்புறமாக உள்ள தியாகையரின் சமாதிக்கும் சென்றோம். அங்கு மனமுருகி வேண்டினேன். சங்கீதத்திற்கு காது திறக்கவேண்டும் என்றுதான் – ஜெயனின் காது.

தியாகையரின் கீர்த்தனையின் பக்தியையும், உருக்கத்தையும், எளிமையையும், அழகையும் நாம் வேறு யாரிடமும் உணர முடியாது என்று குஞ்சிதையர் சொல்வார். அவரையும் நினைத்துக் கொண்டேன். அப்படியே போய் ஆற்றில் கால் நனைத்துவிட்டுப் படிகளில் அமர்ந்துகொண்டோம். சிறிதுநேரம் கழித்து பந்தலில் போய் அமரலாம் என்றார் ஆற்றூர். ஆற்றூர் அந்தப் பந்தலில் தண்ணீரில் மீனாக எனக்கு தோன்றினார். எல்லா இடங்களும் அவருக்கு தெரிந்திருந்தது. கிட்டத்தட்ட திருவையாறுவாசி போல் இருந்தார்.  பத்து வருடங்களாக தொடர்ந்து ஆராதனைக்கு வருகிறார்.

மாலைநேர காற்றும் சங்கீதமும் ஒரு வினோதமான இனிமையை என்னுள் நிறைத்தன. மூவரும் அமைதியடைந்து கேட்டுக் கொண்டிருந்தோம். மனம் அமைதியடையும்போது இசை நமக்குள் ஊடுருவுகிறது. அப்போது வயலின் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. கண்முன்னே காவிரியின் ஒழுக்குடன் வயலின் இசை ஒத்திசையும் அந்தக் கணம் என்னுள் கலை கண் திறந்த கணம் என நான் உணர்ந்தேன்.

மெல்ல சிலுசிலுத்த ஆற்று நீரின் ஓட்டம், தழுவிய காற்று, எதிர்ப்புற கரையில் மாலை ஒளியில் அசையும் தென்னை ஓலைகள், அமர்ந்திருக்கும் படிக்கட்டில் என்னைக் கடந்து செல்லும் விதம் விதமான மெட்டி, கொலுசணிந்த பாதங்கள், மடிசார் பட்டின் விசிறி மடிப்புகள், ஆண்களின் முரட்டு கறுத்த, சிவந்த பாதங்கள், குழந்தைகளின் துள்ளல் பாதங்கள். இவை எல்லாமே அந்த இசை லயத்தில் எப்படி இணைகின்றன.

மாலைச் சூரியன் எரிந்து அணைந்ததும் பந்தலில் போய் அமர்ந்து கொண்டோம். பந்தலில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லோரும் தரையில் மணலில் அமர்ந்திருந்தனர். பெரிய பந்தல். சமாதியை ஒட்டி பின்பக்கமாக பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. திறந்த  பந்தலின் வலதுபுறம் காவிரி தெரிந்தாள். இடதுபுறம் வெளியேறும் வழியின் இருபுறமாக கடைகள். பெரும்பாலும் கேசட் கடைகள், பக்தி புத்தக கடைகள், இனிப்பு விற்கும் கடைகள், காப்பி கடைகள், இதர கடைகள்.

மேடை இருபகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதியில் வாய்ப்பாட்டு பாடிக் கொண்டிருந்தார் ஒருவர். அடுத்த மேடையில் அடுத்ததாக பாட இருப்பவர் தன் வாத்திய கோஷ்டியுடன் சுருதி சேர்த்து தயாராக இருந்தார். ஒவ்வொரு பாடகருக்கும் 20 நிமிடங்கள். காலை நேரங்களில் புதிதாக அரங்கேற்றம் செய்யும் குழந்தைகள், சிறு வயதினர் பாட அனுமதிக்கப் படுவார்கள். மாலை முடிந்து இரவு நெருங்க, நெருங்க முக்கிய பிரபல கர்னாடக சங்கீத வித்வான்கள் பாடினர்.

அன்று பாடியவர்களில் நெய்வேலி சந்தான கோபாலன், இளம் வயது சஞ்சய் சுப்ரமணியம், விஜய் சிவா, மாண்டலின் ஸ்ரீனிவாஸ், குட்டி சஷாங்க் அனைவரும் கலக்கினர். சஞ்சயிக்கும், சஷாங்குக்கும் ஒரே ஆரவாரம். பார்வையாளர்களில் குட்டி குழந்தைகள் கூட ராகத்தை இனம் கண்டு அவர்கள் பெற்றோரிடம் சொல்லி ரசிப்பதைப் பார்த்து எனக்கு பொறாமையாக இருந்தது.

ஜெயனிடம் முணுமுணுத்தேன். “அதுங்க பொறக்கும்போதே இசைகேட்டு பொறக்குதுங்க. இங்க தியாகையரோட மூச்சு காற்று கலந்திருக்கு”. என்றார்.

யேசுதாஸ் வருகிறார் என்ற செய்தி காற்றில் பரவியது. எனக்கு விரல்கள் ஜில்லிட்டன. வெள்ளை வெளேர் ஜிப்பா வேஷ்டியில் கான கந்தர்வன் வந்தார். அவர் பாடியதில் ‘சுகி எவ்வரோ’ மனதில் நின்றது. பார்வையாளர்கள் மற்றவர்களுக்கு கைதட்டியது போல் தான் யேசுதாசுக்கும் தட்டினர். சிறப்பு வரவேற்பெல்லாம் இல்லை.

மணி பத்தரை. முடிகிறமாதிரி தெரியவில்லை. எனக்கு அஜி ஞாபகம் வந்தது. மேலும் தாமதித்தால் பட்டுக்கோட்டைக்கு கடைசி பஸ் போய்விடும். ஆற்றூரிடம் விடைபெற்று கிளம்பினோம். பஸ்ஸில் ஒரே பேச்சுதான். ஜெயனையும் இசைபற்றி பேசவைத்து விட்டதில் எனக்கு பரமகுஷியாக இருந்தது. சிறிது கண்மூடினாலும் இசைகேட்பது போன்ற பிரமை.

வீடு வந்து சேர்ந்தபோது நேரம் பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அம்மா விழித்துக்கொண்டிருந்தாள். என் மெல்லிய முணுமுணுப்பு கேட்டு அஜி விழித்துக்கொண்டான். பாய்ந்து தூக்கிக் கொண்டேன். சமத்துக் குட்டியாக விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறான். அப்பா பலவேடம் போட்டு ஆடிப்பாடி நடித்திருக்கிறார்.

உறக்கம் வரும்போது என்னை தேடினானாம். தொட்டிலில் நான் அன்று உடுத்திப் போட்டிருந்த சேலையை வைத்து அதன்மேல் படுக்கவைத்து அம்மா உறங்க வைத்துவிட்டாள்.

மறுநாள் உற்சாகமாக கிளம்பினேன். மாலை அங்கு சென்றபோது ஏதோ நெடுநாள் பழகிய ஊர் போல திருவையாறு இருந்தது. ஆற்றங்கரையில் அமர்ந்து இசை கேட்டோம். காஃபி குடிக்க போகும்போது  மெல்ல கேசட் கடைக்கு ஜெயனை நகர்த்தி சென்றோம்.

ஆற்றூர் சில அறிவுரைகள் வழங்கினார். முதலில் கேட்க மஹாராஜபுரம் சந்தானம் உகந்தவர். சட்டென்று நம்மைக் கவர்ந்து உள்ளிழுத்து விடுவார். கோவிலின் முதல் தோரண வாயில்போல. இலக்கியத்தில் முதலில் உள்நுழைபவர் தி. ஜாவை வாசிப்பது எப்படியோ அப்படி. முதலில் பிள்ளையார் சுழியாக மஹாராஜபுரம் வாங்கினோம்.

பிறகு நான் பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, சுதா ரகுநாதன், சஞ்சய், மாண்டலின் ஸ்ரீனிவாஸ், லால்குடி வயலின் என்று பரபரப்புடன் தேர்ந்தெடுத்தேன். ஆற்றூர் எனக்கு பொறுமையாக கேசட்டின் பின்புறம் உள்ள கீர்த்தனைகளின் பட்டியலைப் பார்த்து தெரிவு செய்ய சொல்லிக் கொடுத்தார். நான் அதுவரை ஜெயஸ்ரீ, சௌம்யா, சுதா ஆகியோர் மிக அழகாக தெரியும் கேசட்டுகளை தெரிவு செய்திருந்தேன். அதிலும் ஒரு கேசட்டில் எளிமையாக வெள்ளை முத்துமாலை அணிந்து ஜெயஸ்ரீ தேவதை போலிருந்தார்.

பிறகு மெல்ல செவ்வியல் கலைகளின் அறிமுகத்திற்கு ஒரு ரசிகன் தன்னை எவ்விதம் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று ஆற்றூர் உரையாடிபடியே வர அவரை கூர்ந்து கவனித்துக் கொண்டு நடந்தோம். வழியில் அசோகா வாசனை என்னை ஈர்த்தது. நா ஊறியது. கேட்க தயக்கமாக இருந்தது. ஜெயன் மட்டும் இருந்திருந்தால் அங்கேயே அடம்பிடித்து வாங்கியிருப்பேன். ஆற்றூர் இருக்கிறார், பக்கித்தனத்தை காட்டக்கூடாது என்று அடக்கமாக வந்து கொண்டிருந்தேன். செவ்வியல் இசையா இனிப்பா என்று மனம் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. அசோகாவை இசையின் பொருட்டு தியாகம் செய்தேன்.

டேப் ரிகார்டர் வாங்கும் முன்பே கேசட் வாங்கியாயிற்று. இனி எவ்வகையிலும் டேப் வாங்குவதை தாமதப்படுத்த முடியாது. எங்கள் அதிருஷ்டம் அன்று திருவையாறில்  மஹாராஜபுரம் பாடினார். மெல்லிய செருமலுடன் அவர் தொடங்கும் கணங்களில் எனக்கு புள்ளமங்கலம் குஞ்சிதையர் ஞாபகம் வந்து கொஞ்சம் நெகிழ்ந்து விட்டேன். ‘நன்னு பாலிம்ப’ தியாகையரின் புகழ்பெற்ற கிருதியை முதலில் பாடினார்.

அன்றும் கிளம்ப பத்தரை மணியாகிவிட்டது. அவசரமாக பேருந்து நிலையம் விரைந்தோம். பஸ் ஏறியவுடன் ஜெயன் பாக்கெட்டில் கைவிடும்போதுதான் தெரிந்தது, மிகக் குறைவான பணம் தான் உள்ளது என. தஞ்சைவரை செல்ல டவுன்பஸ்ஸுக்கு மட்டுமே பணம் இருந்தது. திக்கென்றது. என் ஹேண்ட் பேக்கையும் துழாவினேன். கொஞ்சம் சில்லறைகளாக கிடந்தன. பையை நிறைத்து ஆசை ஆசையாக வாங்கிய கேசட்டுகள். பஸ் தஞ்சையை நெருங்கிக் கொண்டிருந்தது.

உடனே நிதானமாக யோசித்தேன். என் ஒன்றுவிட்ட சித்தப்பா அன்பழகன் தஞ்சை வல்லம் ரோட்டில் குடியிருந்தார். போலீஸ் சர்வீஸில் இருந்தார். அங்குபோய் டவுன்பஸ்ஸில் இறங்கி  பணம் வாங்கி வீட்டிற்கு போகலாம். தேவாரம் நகர் என்று இலேசாக அட்ரஸ் ஞாபகம் இருந்தது. சிக்கலான தருணங்களில் நம் பிரக்ஞையும் மூளையும் அதிதுல்லியமாக வேலை செய்வதை நான் எப்போதுமே ஆச்சரியத்துடன் கவனித்து வந்திருக்கிறேன்.

போய் இறங்கி வீடு கண்டுபிடித்து செல்ல பதினொரு மணி தாண்டிவிட்டது. எல்லோரும் சாப்பிட்டு ’ஊத்தி மூடி’ படுக்க தயாராக இருந்தார்கள். வியர்த்து வழிந்து கொண்டு போய் நின்றோம். என் சித்தியும் சித்தப்பாவும் உற்சாகமாக வரவேற்றார்கள். நிலமையை எடுத்துச் சொன்னதும் ஒரே சிரிப்பு. எங்கள் சித்தி அடுப்பு பற்றவைத்து டிஃபன் செய்ய ஆயத்தமாகி விட்டார்.  சித்தி நரம்பு போல் இருப்பார். குரல் வெண்கல மணி நாதம். தெளிவான உச்சரிப்புடன் பேசுவார். சித்தப்பா போலீசுக்கு ஏற்ற கச்சித உடம்பு. முறுக்கிய மீசையும் களையான முகமுமாக இருப்பார். பேச ஆரம்பித்தால் சிரித்து சிரித்து விழுந்து கொண்டேயிருப்போம். ஜெயனுக்கு அச்சூழலே மிகப்பிடித்துவிட்டது. சித்தப்பா ”அருணா, இனிமேல் பஸ் இருக்காது, தங்கிவிட்டு காலையில் செல்லுங்கள்” என்றார். அவர்வீட்டு ஃபோனிலிருந்து அம்மாவுக்கு தகவல் சொன்னேன்.

திருவையாறு தியாகராஜ ஆராதனை

ஆராதனையின் கடைசி நாளன்று அனைத்து  ஆண் , பெண் பாடகர்கள் எல்லோரும் இணைந்து தியாகையரின்  பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை தரையில் அமர்ந்து பாடுவார்கள். அந்நிகழ்ச்சி பார்த்தபோது அத்தனை கலைமனங்களும் ஒன்றிணைந்து பாடும் அத்தருணம் என் வாழ்வில் மறக்க இயலாத தருணம் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அப்பாடல்களில் இருந்த ராக ஒத்திசைவு, லயம், கலைஞர்களின் அர்ப்பணிப்பு, பக்தி பாவம். அது உண்மையிலேயே தியாகையருக்கு செலுத்தப்படும் மகத்தான ராக அஞ்சலி. என் மெய்யும் மனமும் சிலிர்த்தது. 

ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக சேலம் சென்று டேப் ரிகார்டர் ஒன்று வாங்கினோம். கறுப்பு கலர் பானோசோனிக். நாம் விரும்பும் நேரம் பாட்டுக் கேட்கலாம் என்ற நினைவே தித்தித்தது . கூடவே அதில் ரேடியோவும் உண்டு. எல்லாம் வாங்கி இரவு உணவும் சேலத்தில் சாப்பிட்டு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தோம். திரும்பும்போது பஸ்சில் ஜெயன் நல்ல உறக்கம். சிலுசிலு காற்றுபட்டால் போதும், அவரை உறக்கம் அடித்துசென்றுவிடும். நான் பஸ்சின் வெளிப்புற காட்சிகளை நிலவொளியில் பார்த்துக்கொண்டே வந்தேன். சேலம் தருமபுரி ரூட்டில் இடையில் ஊர்கள் மிகவும் குறைவு. மலைகள் கூடவே வந்துகொண்டிருக்கும் அதுவும் தொப்பூர் பகுதிகளில்.

மலைகளை நிலவொளியில் பார்ப்பது முற்றிலும் புதிய அனுபவம் எனக்கு. அதன் உச்சி வரைகள், முகடுகள் துலங்கித் தெரிந்தன. பார்க்க பார்க்க துலக்கம் கூடி அருகே உள்ளவைபோல் ஆயின. ஆனால் தூரம் போலவும் தென்பட்டன. மலையைப் போல் தனிமையை நினைவுறுத்தும் ஸ்தூல வடிவம் ஒன்றில்லை. மலையின் அரசி, பர்வத ராஜகுமாரி, மலைமகள், அவளை தீராமல் கொஞ்சும் சிவன் அருகே உள்ளபோதும் அவளது தனிமை தீண்டப்படாதது என்றே தோன்றும். மெல்ல விசாலாக்‌ஷி அம்மா என் நினைவில் இணைந்தார்.

சில இணைவுகள் நம் மனதில் உருவாகும் விந்தையை நானே ஆச்சரியத்துடன் கவனிப்பேன். அது தர்க்கத்தில் அடங்குவதேயில்லை. பலநாட்கள் தன்னந்தனியாக திண்ணையில் பின்னிரவில் மூக்குத்தி ஒளிர தனிமையில் அமர்ந்த அம்மாவை தான் பார்த்ததாக ஜெயன் கூறியதுண்டு. தனக்கெல்லாம் வெகு அப்பால் வேறெங்கோ அவர் இருந்ததாக தான் உணர்ந்ததை பலமுறை ஜெயன் சொல்லியிருக்கிறார். 

அன்று இரவு படுத்துக்கொண்டு விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு  முதல்முதலாக  நான் தேர்வுசெய்து அதில் இட்டுவைத்த கேசட்டை ஆன் செய்தேன். சஸ்பென்ஸாக இருக்கட்டும் என்று ஜெயனிடம் சொல்லவில்லை. முதல் பாடல் மஹாராஜபுரம் சந்தானம் குரலில் வழக்கமான தாழ்ந்த ஸ்தாயி செருமல். சட்டென்று ஹிமகிரி தனயே ஒலித்தது. ஹிமகிரி தனயே… ஹேமலதே… அம்ம ஈஸ்வரி… ஸ்ரீலலிதே மாமவ

இமையத்தின் புதல்வியே… ஹேமலதே… அன்னையாகும் உலகு புரக்கும் ஈஸ்வரியும் நீ… லலிதமானவள்.

முத்தையா பாகவதர் கிருதி. சுத்த தன்யாசி ராகம். மஹாராஜபுரத்தின் குரலில் கயிலை மலை சிவனை விடுத்து எனக்கு அன்னையின் மாமலையாகத் தெரிந்தது. இமையத்தின் புதல்வி நான் இசை எனும் கலையில் வைத்த முதல்காலடியில் என்னைப் பற்றி பிடித்துக்கொண்டாள். என்னை கைபற்றி அழைத்துச் சென்றாள். என்னை ஒவ்வொரு முகடுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் அழைத்துசென்று அதன் மடிப்புகள் அனைத்தையும் காட்டினாள். மலையமாருதம் என்றால் தென்றல். மலையில் பிறப்பது. இசையும் தென்றலும் ஒன்றுதான்.

திருவையாறில் கேட்டபோது இசை அங்கு ஒரு கொண்டாட்டமாக, ஒரு திருவிழாபோல் நிகழ்ந்து கொண்டிருந்தது. எங்கு சென்றாலும் ஒலிபெருக்கி மூலம் நம்மை துரத்தி வந்துகொண்டிருக்கும் இசை ஒரு விழா மனநிலையை நமக்கு தருகிறது. இசையை அறிமுகம் செய்துகொள்ள இந்த இசைவிழாக்கள் மிக உகந்தவை. பலவகையான ராகங்கள், கிருதிகள் நம் காதில் விழுந்துகொண்டேயிருப்பது நம் நனவிலியில் அவற்றை தோயவைக்கிறது. ஆனால் வீட்டில் இரவில் டேப் ரிகார்டரில் கேட்பது முற்றிலும் வேறு அனுபவம். எனக்கே எனக்கு மட்டும் மஹாராஜபுரம் பாடுகிறார். மிக மிக அணுக்கமாக, அந்தரங்கமாக. நம் ஆத்மாவிற்குள்ளும் ஊடுருவுகிறது இசை.

மகாராஜபுரம் பாடி முடித்தபோது என் கண்கள் பனித்திருந்தன. என் மனம் பாட்டிவீடு, காவிரி ஆறு, புள்ளமங்கலம்,  ஐயர் என்று  எதன்மேலெல்லாமோ படிந்து படிந்து கடைசியில் விசாலாக்‌ஷி அம்மாவில் வந்து நின்றது.  ஜெயனும் நெகிழ்ந்திருந்தார். ”அம்மாவ நெனச்சுக்கிட்டேன்” என்றார்.

***

பின்னிணைப்பு:

பஞ்சரத்ன கீர்த்தனை: https://youtu.be/Wh-B4va72I8

ஆசை முகம்: https://youtu.be/P4hpfLioC64

ஹிமகிரி தனயே ஹேமலதே: https://youtu.be/7zxy4Y_72Yk

மோக்‌ஷமோ: https://youtu.be/gTi3kpwEMfs

17 thoughts on “மலையில் பிறப்பது…

 1. எத்தனை அழகிய பதிவு அருணா! காதல் இசை ரசனை எல்லாம் கலந்த சிறப்பான பதிவு. ஜெ வை கைவிடப்பட்டகுழந்தை என்று குறிப்பிட்டது, உங்களை தேடியஅஜி உங்கள் புடவையில் படுத்துறங்கியது,அழகாயிருப்பதாய் உங்கள் காதில் ஜெ சொன்னதுன்னு அப்படியே உங்க அப்போதைய உணர்வுகளை அப்படியே முன்வைக்கறீங்க. ஒரே மூச்சில் வாசிச்சு முடிச்சதும் கூட நானுமே வந்திருந்தது போல இருந்தது. இரவுப்பயணத்தில் மலைகளை கவனித்ததும் வீட்டில் கேட்ட ஹிமகிரியுமாகஅட்டகாசமாய் முடித்திருக்கிறீர்கள். முன்பு ஜெ வின் மனைவியாக உலகிற்கு அறிமுகமானீர்கள், பின்னர் வாசகியாக அறிமுகம், பேய்ச்சி வந்தபோது உங்களுக்குள்ளிருந்த பேச்சாளரை, ரசனையை தெரிந்து கொள்ளமுடிந்தது. இந்த பதிவுகளில் அருணா என்னும் தனியான மிகச்சிறப்பான ரசனையும் தேடுதலும் அபாரமான நினைவாற்றலும் மொழிவளமும் உள்ள ஆளுமையாக துலங்கி வந்துகொண்டேயிருக்கிறீர்கள்.
  அன்பு

  Liked by 1 person

 2. அக்கா ,இசை பின்தொடர்ந்து வருவதை அவ்வளவு அழகாக எழுதி உள்ளீர்கள்.நினைவில் இருந்து எழுதும்போது சில சம்பவங்கள் மறந்து விடும்.ஆனால் இதில் சம்பவங்கள் அடுத்தடுத்து வரிசைக்கிரமமாக வருவது மிகுந்த சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. சுரா அவர்களின் சந்திப்பிலிருந்து தொடங்கும் ஆரம்பம் கட்டுரையின் கடைசி வரியில் தான் நிற்கின்றது.புடவையில் அஜிதன் உறங்க வைத்தது பல்வேறு நினைவுகளை என் சொந்த வாழ்வில் குழந்தைகள் சார்ந்து நினைக்க வைத்தது.500 புத்தகம் 5000 புத்தகம் போலவே இதிலும் காது பற்றி
  சொல்வது சிறப்பாக உள்ளது.நன்றிகள்.

  Liked by 1 person

 3. \\ஆனாலும் அடியாழத்தில் இருந்த அந்த கைவிடப்பட்ட குழந்தையின் தவிப்பையும் தனிமையையும் நான் உணர்ந்து கொண்டேன்.\\

  கலங்கச் செய்துவிட்டீர்கள் அருணா… பாய்து துள்ளி எழும் கண்கள் கொண்டு படித்துக் கொண்டிருக்கிறேன்…

  அன்பு முத்தங்கள் உங்களுக்கு…

  Like

 4. incredible picturization!!Your versatility is amazing!-You are almost reaching your celebrity husband’s level of writing!!

  Like

  1. அன்புள்ள சகோதரி.
   மிக சமீபத்தில் தான் திருவையாறு சென்றோம். ஆனால் ஒரு முறை கூட தியாகராஜ ஆராதனை பார்க்கவில்லை. உங்கள் பதிவை பார்த்த பின்பு கட்டாயம் கீர்த்தனை கேட்க உள்ளேன். நாங்கள் திருவையாறு சென்று கோயிலின் சிறப்பு பற்றி வீடியோ எடுத்தோம். அதன் காணொளி இது. மறக்காமல் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

   Like

 5. ஒவ்வொரு பதிவும் மெருகேற்றி மிளிர்கிறது அருண்மொழி.குஞ்சிதமாதம் ஐயர் வீட்டில் இசை கேட்ட பதின் வயது அருணாவிலிருந்து இன்று ஆராதனையை நினைவு கூர்கிற அருண்மொழி யின் நடை அபாரமான மாற்றம். It mada a very pleasant reading. Keep writing. இருவருமே விசாலாக்ஷி அம்மாவை நினைவு கூர்ந்து நெகிழச் செய்தது. தொடர்ந்து எழுதுங்கள்.

  Like

  1. அருணா ஜெயன் நல்ல காதல் கவிதைகளாக இசைரசிகையாக
   அழகிய நினைவலைகள் அம்மா
   அப்பா அஜியை பார்த்துக் கொள்வது அதையும் ரசனையோடு
   சொல்லும் அழகு .மலை இரவில்
   அதை ரசிக்கும் அழகு. எழுத்தாளர்
   ஜெயன் நல்ல அருண் மொழி
   ஜோடி சூப்பர். வாழ்க நலமுடன்.

   Like

 6. ஒவ்வொரு பதிவும் மெருகேற்றி மிளிர்கிறது அருண்மொழி.குஞ்சிதமாதம் ஐயர் வீட்டில் இசை கேட்ட பதின் வயது அருணாவிலிருந்து இன்று ஆராதனையை நினைவு கூர்கிற அருண்மொழி யின் நடை அபாரமான மாற்றம். It mada a very pleasant reading. Keep writing. இருவருமே விசாலாக்ஷி அம்மாவை நினைவு கூர்ந்து நெகிழச் செய்தது. தொடர்ந்து எழுதுங்கள்.

  Like

 7. ‘இசையை வீசியடிப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட கருவி அது’
  ஆஹா என்ன அற்புதமான வரி.உங்கள் எழுத்தின் வீச்சை அந்த ஒற்றை வரியே இனங்காட்டுகிறது.உங்களோடு சேர்ந்து நாங்களும் ஓர் இசைப் பயண அனுபவத்தில் திளைத்தது போன்ற எழுத்து நடை.
  வாழ்க வளமுடன்.

  Like

 8. Dear Arunmozhi,
  I am so happy to read your essays .Now i am translating this essay in Malayalam.It is speacial to me because it provides a sparkling image of our master poet Attoor Ravivarma. Please give permission to translate and publish this essay in malayalam
  with thanks
  P.Raman

  Like

 9. அன்புள்ள ராமன்,

  நலம் தானே?

  உங்கள் கடிதம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. கட்டுரை உங்களுக்கு பிடித்திருப்பது குறித்து உவகை அடைந்தேன். அனுமதி எல்லாம் கேட்க வேண்டுமா என்ன? அதை மொழிபெயர்க்க உங்களுக்கு பூரண உரிமை உண்டு, எனது நீண்ட கால நண்பர் என்ற முறையில்.

  அதில் மிகக் குறைவாகவே ஆற்றூரைக் குறித்து எழுதியுள்ளேன். அது ஒரு மனக்குறையாகவே உள்ளது.

  நீங்கள்’ மரபிசையும் காவிரியும்’ படித்துவிட்டு ஜெயனுக்கு எழுதிய குறிப்பை எனக்கு காண்பித்தார். உற்சாகமாக இருந்தது.

  மொழிபெயருங்கள்.

  மிக்க அன்புடன்,
  அருண்மொழி

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s