மலையில் பிறப்பது – கடிதங்கள்

ஜெயமோகன் ஓடி விளையாடும் ஒரு வீடியோ பார்த்தேன். நண்பர்கள் சிலருக்கு அதை அனுப்பினேன். ஜெயமோகன் ஏன் என்றென்றும் படைப்பு மனதில் இருக்கிறார் என அந்த வீடியோவில் காரணம் உண்டு என்றேன். அதில் ஓடுவது ஒரு பத்து வயது சிறுவன். தினம் தினம் மாணவர்களுடன் புழங்கும் என்னால் அதை உறுதியாகச் சொல்ல முடியும். ஓடுவது என்பது போட்டியாக இல்லாமல் ஓடுவதால் அடையும் இன்பம் ஒன்றுண்டு. அதை அடைய குழந்தமை கொண்ட மனதால் மட்டுமே முடியும். அவர்களால் மட்டுமே எப்போதுமே கட்டற்ற மனநிலையில் வாழ முடிகிறது.

‘மலையில் பிறப்பது’ கட்டுரை கைவிடப்பட்ட ஒரு சிறுவனின் குதூகலத்தை மெல்ல மெல்ல மீட்டெடுக்கும் அன்னையின் கதை. ஒன்றை மீட்க பிடிவாதமான திட்டங்கள் உதவுவதில்லை. வண்ணத்துப்பூச்சியின் சிறகையோ பூவின் இதழையோ எந்த பயிற்சியால் விரிவடைய செய்ய முடியும்?  விளையாட்டுத்தனத்தை உருவாக்க விளையாட்டுத்தனம் கொண்ட இன்னொரு இணை உள்ளம் மட்டுமே தேவைப்படுகிறது. அடுத்த நிமிடம் குறித்த திட்டங்கள் இல்லாத, அசடு வழிவதைப் பற்றி கவலை இல்லாத, வெளியில் நமக்குக் கொடுத்துள்ள அடையாளங்களின் சுமைகளை மனதில் ஒருபோதும் ஏற்றிக்கொள்ளாத, சூழலை அழகாக்கிக்கொள்ள சிறிய பாவனைகளைச் செய்யத் தயங்காத ஒரு விளையாட்டு பெண் தன் இணைக்கு அதையே பரிசளிக்கிறார். இவ்வாழ்வு அப்படி ஒன்றும் சிக்கல் இல்லை என்கிறார்.

இசையறியாத சிறுவனுக்கு நீங்கள் அறிமுகம் செய்வது இசையை மட்டுமா? இசை என்பது பெண் என்பதையும்தான். அதன் வழி ஒரு சிறுவன் தேடிக்களைத்த அன்னையின் தரிசனத்தையும்தான். ஒரு தேவதை தன் மந்திரக்கோளை அசைத்து வரத்தைக் கொடுப்பதுபோல நீங்கள் காற்றில் தவழும் இசையைத் திரட்டி தாய்மையைக் கொடுத்திருக்கிறீர்கள். அதன்வழி, அலைந்து திரிந்து அனுபவங்களைச் சேமித்து வந்த உடலினுள் குதூகலமாக ஓடி விளையாடிய ஒரு பழைய சிறுவனைத் தேடிக் கண்டடைந்து  இணைக்கிறீர்கள்.

குழந்தமையில் குதூகலத்தை உங்கள் வழியும் தாய்மையில் அரூப அணைப்பை இசையின் வழியும் சமன் செய்கிறீர்கள்.

எழுத்தாளர் ம.நவீன்,

மலேசியா.

***

மீண்டும் ஒரு உணர்வுபூர்வமான பதிவு. மீனாட்சியின் முன்னிலையில் உணரும் நமக்கும் அவளுக்கும் மட்டுமேயான அந்தரங்கம், பிரகார வெளியின் ஒவ்வொரு துளியையும் நிறைந்து சூழும் நாதஸ்வர இசை, திருவையாற்றின் காற்றிலேயே கலந்திருக்கும் இசை, அந்த மாலைநேர ஆற்றுப்படிக்கட்டில் அமர்ந்திருக்கும் அனுபவம் என அனைத்தையும் அனுபவித்த தருணங்கள் மனதில் நிறைந்தன. இறுதியாக அந்த ஹிமகிரி தனயே பாடல். நான் முதல் முறை இமயம் காணச் சென்ற போது மொத்த பயணத்திலும் அந்தப் பாடல்தான் ரீங்கரித்துக் கொண்டே இருந்தது. உடன் பார்வதி நதி உடன்வர இது அவளது நிலமல்லவா என்றேதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.. மலைமகள் என்ற பெயர் எவ்வளவு கம்பீரமாக அவளுக்குப் பொருந்துகிறது! இந்திரநீலத்தின் முதல் அத்தியாயத்தின் பெயரான மலைமுடித்தனிமை எனக்கு மிகப் பிடித்த தலைப்புகளில் ஒன்று. அதை உலகாளும் அன்னையோடும், விசாலாக்ஷி அம்மாவோடும், எங்கெங்கும் உடன்வரும் இசையோடும் அகம் இணைத்துக் கொண்டது மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது.

அந்த உற்சவமும், ஆசை ஆசையாய் கேசட்களைத் தேர்ந்தெடுத்ததும், முதன் முதலில் வாங்கிய டேப்ரிகார்டரும், காட்டன் புடவையும் மல்லிகைச் சரமும், ஆற்றூரின் அன்பும்,கான கந்தர்வனின் வருகையும் என வர்ணித்திருந்தாலும் அனைத்திலும் அடிநாதமாக உங்கள் நேசத்தின் அழகு மிளிர்கிறது.

Love this post..
🤗🤗😍

சுபா,

சிங்கப்பூர்.

***

இனிய அருணாக்கா,

மலைகளில் பிறப்பது வாசித்தேன்.

மெல்லிய ஏக்கம் ஒன்றை கவியச் செய்தது.

அக ஆழத்தில் புதைந்து கிடக்கும் மிக மிக அந்தரங்கமான ஒரு அனுபவம், சில சமயம உள்ளிருந்து் துள்ளி வெளிப்பட்டு அடங்கும். மீன் போல. அந்த அந்தரங்க அனுபவ பொதிவைக் காட்டிலும் பரவசம் அளிக்கும் அனுபவமாக இது இருக்கும். அப்படி ஒரு கட்டுரை.

இன்றைய நாளை இனிமை செய்தீர். நன்று.😊👍🏽

கடலூர் சீனு.

***

சின்னச் சின்ன அபசர்வேஷன்ஸ் பல வருவது சுவாரஸ்யமாக உள்ளது.அஜியை கவனிக்கச் சொல்லும்போது இப்போ ரசிஸிஸ்டன்ஸ் கம்மியாயிட்டு வருது என்பது,மலைகளில் தனிமை உணர்வது என. சிறப்பு.

எழுத்தாளர் லஷ்மி மணிவண்ணன்.

***

இனிய அருண்மொழி அம்மாவுக்கு

இன்று தங்களுடைய மலையில் பிறந்தது வாசித்தேன். எனக்கு மரபிசையில் எப்பயிற்சியும் கிடையாது. அப்பாடல்களை பெரிதாக கேட்டு ரசிக்க தன் முனைப்பும் கொண்டதில்லை. எப்போதாவது காதில் விழுந்தாலும் சட்டென்று மனதில் ஒட்டுவது இல்லை. மலையில் பிறந்தது வாசித்தப்பின் சும்மா ஒருமுறை முயற்சித்து பார்ப்போம் என்று, நீங்கள் சுட்டி கொடுத்த பாடல்களை ஒவ்வொன்றாக திறந்து கொண்டு வந்தேன். மஹாராஜபுரம் சந்தானம் பாடிய மோக்‌ஷமோ தியாகராஜரின் கீர்த்தனை என்னை கவ்வியிழுத்து கொண்டது.

முதல்முறையாக நம் மரபிசையின் பாடலை முழுதூன்றி ரசித்தேன். இந்த நேரத்தில் மானசீகமாக உங்கள் கைகளை பிடித்து கூறுகிறேன். என் நன்றியும் அன்பும் மகிழ்வும். ஏனோ தெரியவில்லை இப்பாடலை கேட்கும் பொழுது மலையிறங்கி எழுந்து கடலை அறைந்து எழும் ஆற்றுப்பெருக்கே கற்பனையில் விரிந்தது. எழுவது என்ற ஒற்றை சொல்லாக உள்ளம் துள்ளியது. சிறுகதையோ, நாவல் ஒன்றின் சிறந்த அத்தியாயம் ஒன்றையோ வாசித்து முடிக்கையில் எழும் நிறைவை முதல்முறையாக இசை ஒன்றில் கண்டேன். வெறும் வார்த்தைகள் போதவில்லை நன்றிக்கு.

இதனோடே நினைவில் குமரித்துறைவியில் கிடைத்த அனுபவம். அது சிலைகளின் திருமணச் சடங்கு என்பதை அழித்து அம்மை அப்பனின் அருங்கல்யாணம் என என்னை முழுமையாக மாற்றியது. அதற்கிணையாகவே இன்று இசையில் நிகழ்ந்தது. உங்கள் கட்டுரையிலும் மீனாட்சி வருவது அதற்கிணையாகவே உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒன்று. அங்கிருந்து உங்களை கொண்டு பெண்ணிலெழும் வண்ணங்களை ஒவ்வொரு காட்சிகளில் கடத்தி விட்டீர்கள். ஜெவை கைவிடப்பட்ட குழந்தை என கூறுகையில் காதலியில் எழும் அன்னையை, முதல் பேச்சிலேயே நறுக்கி வைக்க வேண்டும் என்கையில்  மனைவியாக, அஜி இருக்கிறான் இரவாகிவிட்டது என்ற அன்னையை, இசைக்காக அசோகாவை தியாகம் செய்த சிறுமியை என்று எத்தனை வண்ணங்கள்.

அதன் பின் இசையில் மூலம் அடைவது ஒவ்வொன்றிலும் ஒத்திசைவை காண்கையில் எழும் தருணமே என்னில் கலை கண் திறந்த கணம் எனும் கூர்ந்த அவதானிப்பு. மலையில் பிறந்தது படித்து பாடல் கேட்டு காற்று வாங்கி வெளிமுற்றத்தில் அமர்ந்திருக்கையில் மிக இயல்பாக உள்ளத்தில் இசை, இசைதல் ஒன்றுடனொன்று இசையும் ஒத்திசைவை காண்பது நீரை போல என எழுந்தது.

மலைகளின் அரசி பர்வத ராஜகுமாரி, எப்போதும் அவளும் குலாவும் அப்பன். இவற்றிற்கு அப்பால் என்றும் நீங்கா தனிமை கொண்டவள் என்பது கவிதை போல் இருக்கிறது. அது ஏற்படுத்தும் உணர்வும் எண்ணமும் சொல்லில் எழமுடியாதவை.

இறுதியாக தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி, என்னை போல மரபிசை அறியாத ஒருவன், ரசிக்க முயல்பவன் எங்கிருந்து தொடங்கலாம் என்பதற்கு ஒரு வழிச்சித்திரத்தை தர முடியுமா ?

அன்புடன்

சக்திவேல்

அன்புள்ள சக்தி,

இக்கடிதம் என்னை குதூகலிக்க வைத்தது. கட்டுரை படித்து ஒரு ஐந்து பேராவது மரபிசை கேட்க எத்தனித்தால் அதுவே என் கட்டுரையின் வெற்றி என உணர்கிறேன்.

ஜெயனின் நற்றுணை கதையில் வருமல்லவா ஒரு வரி ”முதல் காலடிகள் எல்லாமே மகத்தானவை’ என்று . அது எனக்கு மிகப் பிடித்த வரி. கலையிலும்  அவ்வாறே எனக் கொள்கிறேன். ஒரு கலையை அறிமுகம் செய்துகொள்ள நாம் வைக்கும் முதல் காலடி என்றுமே மிக இன்றியமையாதது. புதிய ஒரு கலையை ரசிக்க பழக ஒரு மெல்லிய பனித்திரை மட்டுமே அக்கலைக்கும் நமக்கும் இடையே உள்ளது. செய்ய வேண்டியது அப்பனித்திரையை உடைப்பது மட்டுமே. ஏதோ தயக்கத்தினால்  சிலருக்கு அது  நிகழாமலே போய்விடும். நீங்கள் கேட்க துவங்க வழ்க்கம்போல சந்தானம் மிக உகந்தவர்.தமிழ் கீர்த்தனைகளிலிருந்து துவங்கலாம். சந்தானம் பாடிய பாரதியார் பாடல்கள் என்று ஒரு காணொளி உள்ளது. கிட்டத்ட்ட எட்டு பாடல்கள் 45 நிமிடம் ஓடக்கூடியது.

ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் கிருதிகள் சுதா ரகுனாதனின் குரலில் மிக இனிமையாக இருக்கும். அலைபாயுதே கண்ணா – சுதா ரகுனாதன் என்று டைப் செய்து தேடினால் கிடைக்கும். 12 பாடல்கள் . 60 நிமிடம் ஓடக்கூடியது.

அன்புடன்,

அருண்மொழி.

***

அன்புள்ள அருண்மொழிநங்கை Ma’am,

   அனுபவப் பதிவுகளுக்கும் கருத்துக்களுக்கும் எதிர்வினையாற்றலாம். ஒரு அற்புதமான காதல் கடிதத்துக்கு எப்படி Ma’am எதிர்வினையாற்றுவது? அதை ரசித்து நெகிழத்தான் முடியும். இசைக்கும், காதலுக்கும், தாய்மைக்கும், ஜெயமோகன் Sirக்கும் ஒட்டுமொத்தமாக ஒரு அற்புதமான காதல் கடிதத்தை எழுதிவிட்டீர்கள். வாசித்துவிட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதாமல் இருக்க மனம் ஒப்பவில்லை. ஆனால் இந்த கட்டுரையைப் பற்றி எழுத என்னிடம் நெகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமே இல்லை. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் Ma’am.

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்

***

மேடம்,

எனக்கும் முதல் திருவையாறு ஒரு அலாதியான அனுபவம். நீங்கள் ஜெ வுக்கு தந்த அதே ஷோபா சந்திரசேகர், சௌம்யா, பாம்பே ஜெயஸ்ரீ, குறுந்தகடுகளை நீங்கள் தந்ததாக சொல்லி அவர் தந்தார். ஆராதனைக்கு ஒரு மாதம் முன்பே கர்நாடக சங்கீதத்திற்கு காதை பழக்கத் துவங்கி விட்டேன், மனம் பழக்கிய குதிரை போல் சீர் நடையில் செல்லத் துவங்கியது. தஞ்சை சிறப்பு பஸ்ஸில் இருந்தே ரீங்கரிக்கத் துவங்கிவிட்டது இசை. தியாகையர் சமாதிக்கு நடந்து செல்லும் வழியில் சூழலே மெலிதாக அதிர்ந்து கொண்டிருந்தது. சென்று அமர்ந்ததும் பொது அவையில் மைதான வெளியில் ஒலிக்கப்படும் இசை நமது அந்தரங்க கேளலுக்கு சற்று மேல் என தோன்றியது இஷ்ட்ட தெய்வத்தை திருவிழாவில் கண்டது போலது அது.

நாதசுவர அனுப்பவும் அவ்வாறே. 2008 பயணத்தில் ஆந்திரத்தில் ஆள் ஒழிந்த ஹனுமகொண்டா மண்டபத்தில் தனி ஒரு கலைஞன் இசைத்த வெங்கலமாக ஒலித்த அந்த ஒற்றை நாதசுவரம் ஒரு பேரனுபவம்.

இசை விவரனை சவாலானது தான். ஓவியத்தின் சட்டகத்தை மட்டும் தான் சென்று தொட இயலும் அழகுற வடிக்க இயலும் உள் காட்சியை வேறு காட்சியால் தான் தொட்டுக்காட்ட இயலும். அஸ்தமனத்தில் காவிரியும், இறுதியில் ஹேமலதமும் அதன் முதுகில் சவாரி செய்து இமயத்தின் மடிப்புகளுள் சஞ்சரித்த இடத்திலும் நழுவும் முன் சற்று நேரம் பிடித்து விட்டீர்கள் என தோன்றியது.

கிருஷ்ணன்,

ஈரோடு.

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s