மாயச்சாளரம்

‘சம்பூர்ண ராமாயணம்’ படம் பார்க்கும்போது எனக்கு ஒன்பது வயது. நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் எங்கள் வீட்டில் அப்பாவின் ‘சாங்க்‌ஷ’ னுக்காக நாங்கள் ஒரு குட்டி நாடகமே போடவேண்டியிருக்கும். கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க போகும் வழியில் நானும் பாட்டியும் திட்டமிடுவோம். வெள்ளிக்கிழமையன்று வரவிருக்கும் படத்தின் போஸ்டரை வியாழக்கிழமை மாலை செல்வமணி மாமாவின் டீக்கடை வாசலில் பார்த்ததிலிருந்து திட்டமிடுதல் கட்டம், கட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கும்.

ஆலத்தூர் போன்ற சிறிய கிராமத்தில் சினிமாதான் வெளி உலகத்திற்கான ஜன்னல். மிகச்சிறிய ஜன்னல். அதையும் அரைவாசிதான் திறக்கமுடியும். அதற்கும் ஆயிரம் போராட்டங்கள். சினிமாவில் மோசமான சினிமா என்றுகூட உண்டென்று கல்லூரி வந்தபிறகே அறிந்தேன். அன்றெல்லாம் திரையில் விரியும் எல்லா சினிமாவும் காட்சி அனுபவங்களை கொட்டி என்னை நிறைத்தன. நான்காம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை நான் ஓரளவு படங்கள் பார்த்தேன். அப்போதுதான் என் பாட்டி எங்களுடன் இருந்தார்கள். பிறகு அம்மாவுடன் வந்த சண்டையில் கோபித்துக் கொண்டு சித்தப்பா வீட்டிற்கு போய் விட்டார்கள். அது ஒரு சினிமாக்காலம்!

அப்பா சினிமா பிள்ளைகளை கெடுத்துவிடும் என்று நினைத்தார். அவர் அஞ்சியது சமகாலத்தை, அல்லது எதிர்காலத்தை. ஆகவே இறந்தகாலம் நோக்கி திறக்கும் சம்பூர்ண ராமாயணம், திருவிளையாடல் போன்ற புராண படங்கள், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வரலாற்று நாயகர்களின் வீரதிரைக் காவியங்கள், மலைக்கள்ளன், அலிபாபா போன்ற கற்பனைக்கதை கொண்ட படங்கள், பராசக்தி, மந்திரிகுமாரி, மனோகரா வகை வசனமழைப் படங்களுக்கு அனுமதி அல்வா போல் கிடைத்துவிடும். கலைஞர் மு.கருணாநிதியின் படங்கள் என்றால் ‘போனஸா’க அப்பா கதைச்சுருக்கமும் சொல்வார். பாட்டியும் நானும் மட்டுமே செல்வோம்.

அம்மாவும் அப்பாவும் ஆலத்தூர் டெண்ட் கொட்டகையில் படம் பார்த்ததேயில்லை. அவர்கள் பட்டுக்கோட்டை போய் நவீனத் திரையரங்கில் மட்டுமே பார்ப்பார்கள். அவையெல்லாம் புதுப்படங்கள். டெண்ட் கொட்டகையில் படம் பார்க்கும் இன்பத்தை நுகராத அற்பப்பதர்கள் என்று வீரப்பா பாணியில் இடுப்பில் கைவைத்து ஹா ஹா என்று மனதிற்குள் சிரித்துக் கொள்வேன். அனேகமாக நாங்கள் படத்துக்குச் சனிக்கிழமை செல்வதால் வெள்ளியிலிருந்து திட்டமிடுதல் முழுவேகத்தில் நடக்கும். பாட்டி மிகப் பெரும்பாலான பழைய படங்களைப் பார்த்திருப்பார். அதனால் கதையை விலாவாரியாக சொல்வார். எனக்கு என் பாட்டி கதை சொல்லிக் கேட்க பிடிக்கும். கதையை தெரிந்து கொண்டு படத்திற்கு செல்வது தான் நல்லது. இல்லையெனில் யாருக்கு யார் காதலி, யாரை யார் கொல்கிறார்கள் என்று குழம்பி பாட்டியை படத்தின் நடுவே நச்சரிப்பேன்.

மாலை 6.45 போல் தான் டிக்கெட் கொடுப்பார்கள். வீட்டிலிருந்து 5.30 க்கு கிளம்பி நடந்து செல்வோம். டெண்ட் கொட்டாய் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மெயின் ரோட்டில் இருந்தது. தின்பண்டங்கள், தண்ணீர் குப்பி , பாட்டியின் வெற்றிலைப் பெட்டி , கீழே தரையில் விரித்து அமரும் துண்டு எல்லாம் எடுத்துக்கொண்டு நடந்து செல்வோம். கிளம்பும் முன் தம்பி அடம்பிடிப்பான் என்பதால் அம்மா அவனை கொல்லைப் பக்கம் பராக்கு காண்பிக்க நாங்கள் வாசல் வழியாக நழுவி விடுவோம். போகும் வழியில் தான் என் தோழிகள் வீடு பவுனம்மாள், கல்யாணி, வெற்றிச் செல்வி, மாலா நின்று நின்று சினிமா போகும் சம்பவத்தை பெருமையுடன் சொல்லிச் செல்வேன். சிலசமயம் அவர்களும் அவர்களின் அப்பா அம்மாவிடம் அனுமதிகேட்டு கூட வருவார்கள்.

கியூவில் நிற்கும் நேரத்தில் திடுக்கிடும்படி கிர்ரிங்க் என்ற ஓசையுடன் டிக்கெட் கவுண்டர் திறக்கும் அந்தப் பொற்கணம் ஒரு தனி உற்சாகம் அளிக்கும். ஆண்கள் கவுண்ட்டர், பெண்கள் கவுண்ட்டர் தனித்தனியாக இருக்கும். தரை டிக்கெட் முப்பது பைசா, பென்ச் 75 பைசா, சேர் ஒரு ரூபாய். அப்பா பென்ச் டிக்கெட் போக சொல்வார். அது சாய்மானம் இல்லாத பென்ச் என்பதால் பாட்டி விரும்ப மாட்டார். அகலம் குறைவான அந்த பென்ச்சில் அமர்ந்து பார்ப்பதே பெரும் இம்சை. அக்கால படங்கள் அப்படி முழுப்படத்தையும் இருக்கைநுனியில் அமர்ந்து பார்க்கும்படி இருக்காது.

பாட்டிக்கும் எனக்கும் தூண் மறைக்காத இடமாக தேர்வுசெய்து , பாட்டிக்கு தூணில் சாய்ந்து உட்கார விருப்பப்படி மண்ணை அழகாக குவித்து சமன் செய்து துண்டை விரித்து இருக்கை அமைப்பேன். அதில் அமர்ந்து கால்நீட்டி சம்பிரம்மமாக வெற்றிலை போடுவார் பாட்டி. கொஞ்ச நேரத்தில் நியூஸ் ரீல் ஆரம்பிக்கும். அதையும் கண்கொட்டாமல் பார்ப்போம். பெரும்பாலும் காந்தியின் தண்டி யாத்திரை, இந்திரா காந்தியின் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி வங்கியின் செயல் திட்டங்கள் என்று இருக்கும்.

சம்பூர்ண ராமாயணம் கோலாகலமாக ஆரம்பிக்கும். பெரும்பாலும் வயதான பாட்டிகள், உழைக்கும் பெண்கள்தான் எங்கள் பக்கம் அமர்ந்திருப்பார்கள். படத்தை உடலும் உயிரும் ஒன்றி பார்ப்பார்கள். படம் கிட்டத்தட்ட மூன்றேமுக்கால் மணிநேரம் ஓடும். மூன்று இண்டெர்வெல் விடுவார்கள். “ரீல் மாத்துறான்” என்போம். சிலர் சம்பந்தமில்லாமல் பேச்சை மாற்றுவதற்கும் அதேபோல் சொல்வோம். முறுக்கு, சோடா, கலர் விற்கும் பையன்கள் நாம் உட்காரும் இடத்திற்கே வந்து விற்பார்கள். படத்தில் ராமாராவ் ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் என்றே பிறந்தவர் என்று தோன்றும். முகத்தில் அவ்வளவு சாந்த பாவம், மிக அகலமான புன்சிரிப்பு. சீதையாக எனக்கு பிடித்த பத்மினி, பாவம் சிவாஜிக்கு பரதன் என்ற ஒப்புக்கு சப்பாணி வேடம். ஆங்காங்கே நின்றுகொண்டிருப்பார்.

எனக்கு ராவணனின் முறுக்கிய மீசையையும், பத்து தலையும் பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. நான் கதைகளில் கேட்டு வெறுத்த உருவம். பெண்களை தூக்கிக்கொண்டு செல்பவன். ஆனால் இப்படத்தில் அவன் அட்டகாசமாக வீணை வாசிக்கிறான். நன்றாக பாடவும் செய்கிறான். தீமையின் உருவகமாக நினைத்து வைத்திருந்த ராவணனின் இந்தப்பக்கம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. பாட்டியை உலுக்கினேன். “பாட்டி, ராவணன் நல்லா பாடுறானே, எப்பிடி?” 

“அவன் சிவபக்தன்னு சொன்னேன்ல, அதான் பாடுறான். சும்மா நொய் நொய் ங்காம படத்த பாரு”.

அனுமன் வந்து செய்யும் சாகசங்கள் சிரிப்பை வரவைத்தன. திரை அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது.

முடிவில் கொஞ்சம் தூங்கிவிட்டேன். ஆனால் பாட்டி ராமர் பட்டாபிஷேகத்துக்கு என்னை எழுப்பினார். அது பார்த்தால் புண்ணியமாம். திரும்ப வரும்போது வழக்கம் போல சண்டித்தனம் செய்தேன். தூக்கத்தோடு எப்படி நடப்பது?  கண் தானாக மூடுகிறது. பாட்டியால் என்னை தூக்கவும் முடியாது. பாட்டி திடகாத்திரம்தான். ஆனால் நான் கொஞ்சம் புஷ்டியான குழந்தையாக இருப்பேன். தரதரவென்று தரையில் போட்டு இழுக்காத குறையாக பாட்டி இழுத்து வருவார்கள்.

எப்படியோ வந்து படுக்கையில் விழுவதுதான் தெரியும். பின்னிரவில் பாட்டியுடன் திண்ணையில் படுத்திருக்கும்போது தாழ்ந்து தெரியும் நிலவில் ராமரின் முகம் தெரிவதாக எண்ணிக் கொண்டு கனவும் விழிப்புமான ஒரு நிலையில் படுத்திருப்பேன். சன்னல் வழியாக அந்தப்பக்கம் சென்றுவிட்டிருப்பேன். புராணகாலத்திற்கு. 

மறுநாள்தான் உற்சாகம். நினைத்து நினைத்து ஒவ்வொரு சீனாக நினைவுகூர்ந்து பாட்டியுடன் விவாதிப்பது, அதற்கும் மறுநாள் வகுப்பில் தோழிகளுக்கு கதை சொல்வது என்று அந்த வாரமே வண்ணமயமாக இருக்கும். கடந்தகாலத்திற்கு, புராணகாலத்திற்கு செல்லமுடியும் என்பதனால் எனக்கு பாட்டியின் புராணக்கதைகளை காட்சி ரூபமாக காண்பிக்கும் படங்கள் எல்லாமே பிடித்திருந்தன. திருவிளையாடல், கந்தன் கருணை, திருவருட்செல்வர், மனோகரா, உத்தமபுத்திரன், மணாளனே மங்கையின் பாக்கியம் போன்ற படங்கள். தெய்வங்கள் வரம் தந்தன. கெட்டவர்களை சபித்தன. மனிதனை  பாம்பாக்கின. கல்லாக்கின. கல் திரும்பவும் விமோசனம் பெற்று மனிதனாகியது. அழகன் குரூபியானான். நல்லவர்கள் படம் முழுக்க கதறினார்கள். கெட்டவர்கள் கிளைமாக்ஸில் கதறினார்கள்.

ஆனால் எல்லா புதிய படங்களையும் பார்த்துவிடும் கல்யாணி கதையை வகுப்பில் வந்து சொல்லி எனக்கு பொறாமையை உண்டுபண்ணுவாள். அலாவுதீனும் அற்புதவிளக்கும், ராம், ராபர்ட், ரஹீம், மேல்நாட்டு மருமகள், தாய் மீது சத்தியம், நீயா போன்ற படங்களின் கதையை பெருமூச்சுடன் கேட்டுக்கொள்வேன்.  பாட்டியிடம் ‘நீயா’ பற்றி சொல்லி பாம்பு பழி வாங்கும் கதை என்று அப்பாவிடம் அனுமதி கேட்க சொன்னேன்.

“பாம்பாம் , பழிவாங்குதாம், படிக்கிற புள்ளய கெடுக்காதீங்கம்மா, நீங்க வேணா போய் பாத்துட்டு வாங்க” என்றார்.

பாட்டி என்னை விட்டு தனியே பார்க்க சென்றார். மறுநாள் முழுவதும் ,நான் பாட்டியுடன் சண்டை. ஆணித்தரமாக ‘டூ’ விட்டு விட்டேன்.

’டீன்ஏஜ்’ காலகட்டத்தில் ஒவ்வொரு படமும் என்னை மிகவும் பாதிக்கும். கதாபாத்திரங்களின் உணர்ச்சிக்குள் நான் முழுசாகவே போய் விடுவேன். சோகப்படத்தில் மிகுந்த சோகத்திற்கு ஆளாவேன். ஒருமுறை எட்டாம் வகுப்பு படிக்கும்போது திருவாரூர் தேரோட்டம் முடிந்து மாலைக் காட்சி. புதுப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் பேபி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ’தங்கப்பதுமை’ என்னும் படத்திற்கு போனோம். என் பாட்டி உட்பட எல்லோருக்கும் ஏன் சென்றோம் என்று ஆகிவிட்டது நான் அடித்த ரகளையில். சிவாஜிக்கு கண்பார்வை போய்விடும் ஒரு காட்சியில். வீட்டிற்கு வருவார். பத்மினி அவரைப் பார்த்து அத்தான், அத்தான் என்று கதறிய கதறலைக்கண்டு  நான் அழுத அழுகையில் எங்கள் பாட்டி ஒரு தீர்மானம் எடுத்தார்கள். இனி அருணாவைக் கூட்டிக் கொண்டு சிரிப்பு படம் மட்டும் தான் பார்க்கவேண்டும். பிள்ளைக்கு தேரோட்டம் பார்த்த சந்தோஷமே போய்விட்டது.

எங்கள் ஆலத்தூர் ஒரு விவசாய கிராமம் என்பதால் நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை ஸ்பிக் யூரியா, ஃபாக்டம்பாஸ்  உர விளம்பரத்திற்காக  ஒரு பெரிய வேன் வரும். அதில் ப்ரொஜெக்டர் கொண்டுவருவார்கள். இரு பள்ளிகளுக்கும் பொதுவான விளையாட்டுத் திடலில்  திரை கட்டி இருட்டியவுடன் ஒன்பது மணிபோல் படம் போடுவார்கள். சிலசமயம் அப்பா அனுமதிக்க மாட்டார். மார்கழிப் பனியில் வெட்டவெளியில் பார்ப்பதால் சளி பிடிக்கும் என்பார். நல்ல பிள்ளையாக நானும் பாட்டியும் திண்ணையில் படுத்து விடுவோம். கொஞ்ச நேரம் கழித்து விளம்பரசத்தம் இங்கு கேட்கும். கால் மணிநேரத்திற்குமேல் விளம்பரம் ஓடும். வீட்டைத்தாண்டி சிறிய பிள்ளையார் கோவில், அதை ஒட்டி மண்டகப்படி, பிறகு திடல். தம் பிடித்து ஓடினால் ஒரு நிமிடத்தில் போய் விடலாம்.

ஹாலின் உள்ளே படுத்திருக்கும் அப்பாவின் குறட்டைக்காக காத்திருப்போம். அந்த இனிய சைரன் முழங்க ஆரம்பித்தவுடன் தலையணையை நெடுக்குவாட்டில் வைத்து போர்வையை போர்த்திவிட்டு செருப்பு போடாமல் கிளம்பி விடுவோம். ஓடி உட்காரும்போது டைட்டில் ஓடிக்கொண்டிருக்கும். படத்தில் கால்மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த விளம்பரத்தை மட்டும் சகிக்கப் பழகினால் போதும். படம் நல்ல அனுபவமாக இருக்கும். முற்றிலும் இலவசமாக ஒரு படம், பாதி ஊரும் அந்த திடலில் தான் இருக்கும். கொஞ்ச நேரத்திலேயே குழந்தைகள் எல்லோரும் அந்த விளம்பரத்தை பாட பழகிவிடுவோம்.

”என்னண்ணே , உங்க வய மட்டும் கதுரு நல்லா விளெஞ்சிருக்கே, என்னுது தேம்பிப் போயி கெடக்குது”

”நீ ஸ்பிக்கு யூரியா போடலியா, போட்டுப் பாரு, அப்புறம் பாரு”

ஸ்பிக் யூரியா : ; 18: 46 என்று கோரசாக நாங்கள் பாட ஒரே கோலாகலம்.

அன்று ’அண்ணன் ஒரு கோவில்’ போட்டிருந்தார்கள். பாசமான அண்ணன் தங்கை கதை. ஒன்றி பார்த்துக் கொண்டிருந்தோம். நடுவில் வந்தது வினை. சிவாஜியையும் , சுஜாதாவையும் போலீஸ் துரத்தும். இருவரும் காதலர்கள். காட்டில் நெருக்கமாக அடுக்கி வைக்கப்பட்ட மரக்கட்டைகளுக்கு  நடுவே இருவரும் நெருங்கி படுத்துக்கொண்டு பாட்டு பாடுவார்கள். ”நாலு பக்கம் வேடருண்டு, நடுவினிலே மானிரண்டு. காதல், இன்பக் காதல்.”

பாட்டி என் தலையைக் கழுத்தோடு சேர்த்துப் பிடித்து அவர்களின் மடியில் குப்புற அழுத்துகிறார்கள். நானோ அம்மாதிரி நெருக்கமான காட்சியை அதுவரை பார்த்ததில்லை. என்ன செய்கிறார்கள்? சிவாஜி சுஜாதாவின் கழுத்தில் வாசம் பிடிக்கிறார். அறிந்துகொள்ளும் ஆவல் மீதூறுகிறது. கடைசியில் ”பாட்டி, கழுத்து வலிக்குது. மூச்சு முட்டுது.” மெலிதாகக் கத்துகிறேன். ”பாத்து தொல, கண்றாவிய, படமா எடுக்குறானுங்க , தீவட்டி தடியனுங்க”. மறுநாள் அப்பா கண்டுபிடிக்கவில்லை. அந்த ரகசியமே கிளுகிளுப்பாக இருந்தது.

பின்பு நான் கொஞ்சம் வளர்ந்தபின் மாதம் ஒருமுறை பட்டுக்கோட்டைக்கு குடும்பத்துடன் புதுப்படம் பார்க்கச் செல்வோம். மளிகை சாமான்கள் இதர சாமான்கள் வாங்கி முடித்து மேட்னி ஷோ போவோம். பட்டுக்கோட்டையில் நீலா, ஐயா, ராஜாமணி, முருகையா, என்று நான்கு தியேட்டர் இருப்பதால் மணிக்கூண்டு அருகே நின்று தீவிர விவாதம் புரிவோம். எந்த சினிமா செல்வது என. எனது ’சாய்ஸ்’ பெரும்பாலும் கமல், ஸ்ரீதேவி தான்.  தம்பி ரஜினி படம் என்பான், அம்மா அப்பாவுக்கு சிவாஜி, கே ஆர் விஜயா. அதிகமும் என் விருப்பம் நிறைவேற்றப்படும்.

ரஜினி படத்தில் முள்ளும், மலரும் எனக்கு மிகப் பிடித்தது. சிவாஜி படம் ஜெனரல் சக்கரவர்த்தி, சந்திப்பு, திரிசூலம் போன்றவை பார்த்திருக்கிறோம். ஆனால் சிகப்பு ரோஜாக்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, ரோஜாப்பூ ரவிக்கைகாரி போன்ற படங்கள் அப்பா, அம்மா மட்டும் போய் பார்ப்பார்கள். முடித்து வரும்போது எனக்கு பிடித்த அருண் ஹோட்டலில் மசால் தோசையோ , ரவா ஆனியனோ சாப்பிடுவோம்.  சாப்பிட்டு முடித்த பின்னர் அப்பா எனக்கும் தம்பிக்கும் மட்டும் குலாப் ஜாமூனும் வாங்கித்தருவார். பாட்டிக்கு பார்சல் வாங்கி கிளம்புவோம்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது பட்டுக்கோட்டையில் வீரா என்று ஒரு ஏ.ஸி. தியேட்டர் திறந்தார்கள்.  அம்மா நான்கு நாட்கள் தம்பியை கூட்டிக்கொண்டு புள்ளமங்கலம் போய்விட்டாள். நான் சோர்வுற்று இருந்ததால் அப்பா என்னை ஏ.ஸி. தியேட்டர் கூட்டி சென்றார். என்ன அழகான சொகுசான தியேட்டர். பால்கனியில் முதல்முறையாக அமர்ந்து படம் பார்த்தோம். சீட்டில் உட்கார்ந்தவுடன் நம்மை அப்படியே உள்ளே வாங்கிக் கொண்டது. அவ்வளவு மென்மை, ஸ்டீரியோஃபோனிக்கில் ஏதோ மென்மையான சங்கீதம் ஓட, அரங்கத்தின் உள்கட்டமைப்பு, இதமான குளிர் எல்லாம் சேர்ந்து மெய் மறந்து விட்டேன்.

”அப்பா, எவ்ளோ நல்லாருக்கில்லப்பா” என்றேன்.

”சும்மாவா , இருபது ரூபா டிக்கெட்” என்றார்.

கஞ்சூஸ் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். நிகழ்காலம்! இனிய குளுமையான ரகசியமான காலம். அதற்கு இருபது என்ன இருநூறு கொடுக்கலாம்.

பத்தாம் வகுப்பில் கிளாஸ் கட் அடித்துவிட்டு நானும் செல்வகுமாரியும் பார்த்த வைதேகி காத்திருந்தாள் என்னால் மறக்க முடியாத படம். தினமும் பஸ் ஸ்டாண்டைக் கடந்து ஸ்கூல் செல்லும்போதெல்லாம்  அப்படத்தின் போஸ்டர் கண்ணில் பட்டு எங்கள் ஆசையைத் தூண்டிக்கொண்டே இருந்தது. நூறு நாளைக் கடந்து ஓடிய அப்படத்தில்  ரேவதி வேறு அழகுப் பதுமையாக இருந்தார். பார்க்கவேண்டும் என்ற ஆசை கூடிக்கூடி வந்தது.

மதியம் மட்டும் ஹெச். எம் சிஸ்டர் அனுமதியோடு லீவ் கிடைத்துவிட்டால் பார்த்துவிடலாம் என்று தீர்மானித்தோம். எனக்கு ஏற்கனவே டிமிக்கி சுந்தரி என்று ஹெச்.எம். சிஸ்டர் பட்டப்பெயர் வைத்திருந்தார். அடிக்கடி லீவ் எடுப்பேன் என்பதால். ஆனால் ஸ்கூல் ஃப்ர்ஸ்ட் எடுப்பதால் என்னை கோபித்துக்கொள்ளவும் மாட்டார். கடைசி மூன்று மாதங்கள் அவர் தான் எங்களுக்கு கணிதம் எடுத்தார். கணிதத்தில் எப்போதும் ’செண்டம்’ எடுப்பேன். அதனால் எனக்கு அவரிடம்  விசேஷ சலுகை. மதியம் ஹெச்.எம். சிஸ்டர் ரூமுக்கு சென்று உடம்பு சரியில்லாததுபோல்  நடித்தேன். துணைக்கு செல்வகுமாரியையும் கூட்டிக்கொண்டு எங்கள் வீட்டிற்கு போகிறேன் என்றேன். உடனே அனுமதி கிடைத்தது.

காம்பவுண்டை விட்டு வெளியில் வந்ததும் சிரித்துக் கொண்டு நாங்கள் ஓடிய காட்சியை சிஸ்டர் மட்டும் பார்த்திருந்தால் வெயிலில் கொடுமணலில் முட்டி போடவைத்திருப்பார். பரக்க பரக்க வியர்த்து வழிந்து டிக்கெட் எடுத்து பென்ச்சில் அமர்ந்து பார்த்தோம். பாடல்கள் எல்லாம் அருமை. படமும் நன்றாக இருந்தது. முடிந்து நல்ல பிள்ளையாக வீட்டிற்கு போய்விட்டோம். ஆனால் படம் நாங்கள் நினைத்ததுபோல கொண்டாட்டமாக இருக்கவில்லை. ரேவதி விதவை. வெள்ளைப்புடவையுடன் ஆடினார். ஒரே சோகம். ஆனால் அந்தச் சோகம் நெஞ்சை அழுத்தியது. இப்படியெல்லாம் இருக்கிறது பெண்களின் வாழ்க்கை என்று அந்தப்படம் சொன்னது.

பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பில் திருச்சியில் ஹாஸ்டலில் தங்கி படித்தேன். அப்போது சினிமா என்பது எனக்கு உணர்ச்சிகரமான காதலின், நவீன நாகரிகத்தின், பெண்ணின் தனித்துவத்தை உணர்த்தும் ஒரு வாசலாக இருந்தது. சன்னலின் திசை திரும்பி விட்டிருந்தது. முற்றிலும் புதிய உலகம். எதிர்கால உலகம். அன்று மௌன ராகம் மிகப் பிடித்த படமாக இருந்தது. திவ்யா என்ற கதாபாத்திரம் ஒரு தனித்துவம் மிக்க ஆளுமை என்பதே எனக்கு முக்கியமாகப் பட்டது. அதற்கு முன்பு ஜானி படத்தின் ஸ்ரீதேவி  மனதுக்கு நெருக்கமான ஒரு ஆளுமையாக இருந்தார். கண்ணியமும், நாசுக்கும் கூடிய , குறைவாக பேசும், மென்மையாக சிரிக்கும் அழகிய ஆனால் புகழின் உச்சியில் இருக்கும் ஒரு பெண். பெண்மை ததும்பும் அவரது அழகிய அசைவுகள், பார்வை, புன்னகை…

பிறகு நாயகிகள் உடுத்தும் ஆடைகள், ஃபாஷன் வகைகள், காதல் இதன்மேல் கவனம் திரும்பியது. ஹாஸ்டலில் என் ரூம் மேட் லக்‌ஷ்மி ஒரே நேரம் கமல் போலவும், சத்யராஜ் போலவும் நடித்துக் காட்டுவாள். கும்மாளமாக இருக்கும். பத்து மணிக்கு ஹாஸ்டல் வார்டன் ரவுண்ட்ஸ் வருவார். அந்த அம்மணியின் குரல் ஆண்குரல் போலவே மிரட்டும். லைட்டை அணைத்துவிட வேண்டும். மெழுகுவர்த்தி பொருத்தி வைத்து எங்கள் கலைநிகழ்ச்சியை தொடர்வோம்.

அவள் அடிக்கடி சொல்வாள், “அருணா , நீ கண்டிப்பா லவ் மேரேஜ் தாண்டி பண்ணிப்ப.“

“எப்டி சொல்ற”?

“ஒன் கண்ண பாத்தா தெரியுது”

“யெஸ். லவ் மேரேஜ்தான்.  அரேஞ்டு மேரேஜ் ஒரே போர்”

மெதுவாக கிளுகிளுப்புடன் சிரித்துக் கொள்வோம்.

மதுரை வேளாண் கல்லூரிக்குப் படிக்க வந்ததும் எங்களுக்கு வாரத்தில் சனிக்கிழமைதோறும் ஒரு படம் கல்லூரி ஆடிட்டோரியத்தில் திரையிட்டார்கள். அதில் எல்லா படங்களும் கலந்து வரும். அப்போது என் ரசனை கொஞ்சம் தேறிவிட்டது. படத்தை தர்க்கபூர்வமாக அணுகும் ஒரு நிலையை அடைந்துவிட்டேன். போலியான உணர்ச்சிச் சித்தரிப்புகள், செயற்கைத் தருணங்களை மனம் இனம் காணும் பயிற்சியை அடைந்து விட்டது. அதற்கு பிறகு நான் கல்லூரியில் அழுத ஒரே படம் உதிரிப்பூக்கள். அதன் கதையம்சம், யதார்த்தமான சூழல், குறைவான வசனங்கள், காட்சி வழியாகவே கதை சொல்லும் விதம், இயல்பான நடிப்பு என  எல்லாவிதத்திலும் அப்படம் என்னைக் கவர்ந்தது.

கல்லூரியில் சினிமா போடுவதென்பது ஒரு குட்டித்திருவிழா போல. அரங்கமே கேலிக்கூச்சல்களாலும் விசில்களாலும் அதிரும். டீன் மட்டும் வரமாட்டார் என்பதால் பசங்கள் தறிகெட்டு திரிவார்கள். குவார்ட்டர்ஸ்ஸில் தங்கியிருக்கும் மற்ற பேராசிரியர்களும் வருவார்கள். யார் கண்டுகொள்வது?  பெண்களும் கூச்சலிட்டு கும்மாளமிடுவோம். சினிமா என்றாலே கூட்டம்தான், கொண்டாட்டம்தான். ஆங்கில சாகசப்படங்கள், தமிழ் காதல்படங்கள், கதாநாயகர்கள் கதாநாயகிகள்…

அன்றெல்லாம் தூர்தர்சனின் தேசிய ஒளிபரப்பில் வாரம்தோறும் ஞாயிறு அன்று பிராந்திய மொழிக் கலைப்படங்களை ஒளி பரப்புவார்கள். நான் தற்செயலாக அவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன். படம் தொடங்கும்போது கொஞ்சபேர் இருப்பார்கள். பத்துப்பதினைந்து நிமிடங்களில் பெரும்பாலானவர்கள் கிளம்பிச் சென்றுவிடுவார்கள். என் தோழி கலைச்செல்வி அருப்புக்கோட்டை என்பதால் அவள் வார இறுதிகளில் ஊருக்குப் போய்விடுவாள்.

கலைப் படங்கள் எனக்கு என்ன அளித்தன என இன்று யோசிக்கிறேன். யதார்த்த வாழ்வின் சிக்கலின் உண்மையான தருணங்கள், அபத்தங்கள், உணர்ச்சிகளில் சிக்கிச் சீரழியும் மனிதனின் அகம் போன்றவற்றை.  பாதேர் பாஞ்சாலி, அபுர்சன்ஸார்,  எலிப் பத்தாயம், போக்குவெயில், சிதம்பரம், நிர்மால்யம், கொடியேற்றம் போன்ற படங்கள் நிகழ்த்திக்காட்டின. உணர்ச்சியே இல்லாத கதைசொல்லல் முறையில் அது எப்படி நமக்கு கடத்தப்படுகிறது? ‘இதில் உணர்ச்சிக்கொந்தளிப்பு அடையவோ, குதூகலிக்கவோ ஒன்றுமில்லை, ஏனென்றால் இது வாழ்க்கை’ என அவை சொல்கின்றன என்று தோன்றுகிறது.

கல்லூரி விடுதியின் மனமகிழ் மன்ற டி.வி ஹாலில் ஒரு ஞாயிறன்று மதியம் தூர்தர்ஷனில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மணல்மேடு. தகிக்கும் கோடை. கூர்ந்து பார்த்தால் ஆவியெழுவது தெரிவது போன்ற பிரமை. சிறிது நேரம் அந்த மேடு மட்டுமே தெரிகிறது. நேரம் செல்லச் செல்ல ஒரு உருவம் தெளிவில்லாமல் மேட்டின் பின்புறமிருந்து நம்மை நோக்கி வருகிறது. கொஞ்ச நேரத்தில் உருவம் தெளிகிறது. ஒல்லியான, முகம் ஒடுங்கிய வேட்டி கட்டிய இளைஞன். தலை வாரப்படவில்லை. முகம் உச்சபட்ச பதட்டத்தில், ஆவேசத்தில் என மாறி, மாறி தென்பட அந்த மணல் மேட்டை ஒரு பைத்திய வெறியுடன் சுற்றுகிறான்.  ஒரு தெளிவற்ற உருவம் கையில் சட்டியில் உள்ள தீக்கங்குகளோடு அவன் பின்னாலேயே சுற்றுகிறது. அந்த சட்டியும் தீக்கங்குகளும் நாம் சுடுகாட்டில் இறுதிச் சடங்கில் மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு காட்சி. ஒரு கட்டத்தில் அவன் தலையை பற்றிக் கொண்டு மயங்கி சரிகிறான்.

இந்தக் காட்சியை அதற்குமேல் பார்க்க முடியாமல் நெற்றிப் பொட்டை பற்றிக் கொண்டு குனிந்து கொண்டேன்.  ஒரு காட்சி சட்டகமாக என்னை பாதித்த,  பலநாள் பின்தொடர்ந்த ஒரு திரை அனுபவம் இது. மலையாள திரை இயக்குனர் அரவிந்தனின் போக்குவெயில் படத்தின் காட்சி.

சுத்தமாக ஒரு வார்த்தை கூட மொழி புரியாத என் இருபதாவது வயதில்  அப்படத்தை பார்த்தேன்.ஆள் ஒழிந்த கல்லூரியின் காரிடாரில் அவ்விளைஞன் நடந்து, நடந்து வருவான். அந்தக் காட்சி குறைந்தது ஐந்து நிமிடங்களாவது  திரையில் நீடிக்கும். வெறுமை நிறைந்த வகுப்பறைகள். கதவுகள், ஜன்னல்கள், காரிடாரின் மறுபுறம் நிற்கும் காங்கிரீட் தூண்கள். காமிரா ஒவ்வொன்றாக தொட்டுத் தொட்டுக் காட்டும் அந்த வெறுமை.

திடீரென்று உணர்ந்தேன், அந்த அறையில் நான் மட்டுமே இருந்தேன். ஹரிப்பிரசாத் சௌரஸ்யாவின் புல்லாங்குழலின் மீட்டலுடன் படம் வெறும் காட்சியோட்டமாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த முழுத்தனிமையில் அந்தப்படம் எனக்குள் ஓடிக்கொண்டிருப்பதை ஒரு சிறு ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

***

13 thoughts on “மாயச்சாளரம்

 1. சிற்றோடை போல் குதித்துக்கொண்டு துவங்கி பேராற்றில் கலந்து பின்னர் கடலில் கலப்பது போல சிறுமியின் கொண்டாட்டமும் துள்ளலும் குறும்புமாக துவங்கி மெல்ல மெல்ல கனம் கூடி வேகம் குறைந்து ஆழமாகிவிட்ட பதிவு. உங்கள் மனோவேகம் மொழிநடையிலும் இருக்கிறது.. வேக வேகமாக பேசும் நீங்கள் அதே வேகத்தில் சிந்தித்து அந்த விரைவு எழுத்திலும் இருப்பது போல் எனக்கு தோன்றியது.
  பல அனுபவங்கள் என் வாழ்க்கையையும் திரும்பிப்பார்க்க வைத்தது. மணலில் அமர்ந்துபாட்டியுடன் திரைப்படங்கள் பார்த்தது திண்பண்டங்கள் தியேட்டருக்குள்ளேயே வந்தது டிக்கட் வாங்க காத்திருந்தது எல்லாம். நீயா கதையை அத்தை எனக்கு பலநூறுமுறை சொல்லியிருக்கிறார்கள்.பொள்ளாச்சி வீட்டிலிருக்கையில் அருகில் ஆயிரம் குடித்தனங்கள் இருந்த போலிஸ் குவார்ட்டர்ஸ் இருந்தது.அங்கு இப்படி வெட்டவெளியில் ப்ரொஜெக்டரில் அவ்வப்போது திரைப்படங்கள் போடுவார்கள். மூன்றாம் பிறை அப்படித்தான் பார்த்தேன். இளமைஊஞ்சலாடுகிறது பார்க்க அப்பா அம்மா அத்தைகள் எங்களிருவரையும் வீட்டில் விட்டுவிட்டு போனார்கள்.சென்னை IITஅத்தை மாமா வீட்டில்தான் பத்தில் படிக்கையில் தொலைக்காட்சிப்பெட்டியை முதன் முதலில் பார்த்தேன். ஒலிபரப்பு துவஙங்கும் முன்னால் திரையில் தெரியும் புள்ளிகளை மாமா மெரினாபீச் மணலென்று சொன்னதை நம்பியஅப்பாவி தேவியை இப்போது நினைத்துக்கொண்டேன். கலைப்படங்களையும் ஞாயிறுகளில் அங்குதான் பார்த்தேன்.
  //தெய்வங்கள் வரம் தந்தன. கெட்டவர்களை சபித்தன. மனிதனை  பாம்பாக்கின. கல்லாக்கின. கல் திரும்பவும் விமோசனம் பெற்று மனிதனாகியது. அழகன் குரூபியானான். நல்லவர்கள் படம் முழுக்க கதறினார்கள். கெட்டவர்கள் கிளைமாக்ஸில் கதறினார்கள்//
  அழகா தொகுத்துசொல்லிட்டீங்க அப்போதைய பெரும்பான்மையான படங்களின் சாரத்தை.
  அத்தான் கதறலில் நீங்களும் இணைந்துகொண்டது மானசீக வீரப்பாசிரிப்பு டிமிக்கி சுந்தரியெல்லாம் அருணாவை இன்னும் அணுக்கமாக்கி விட்டிருக்கிறது.
  உங்களுக்குள் நிகழ்ந்த வயதுக்கேற்ற மாறுதல்கள் மனமுதிர்ச்சிகளோடு தேடல் நிரம்பிய உங்ளின் ஆளுமையும் மெல்ல உருவானதையும் எளிதாக இயல்பாக சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை திரைப்படங்களைவிடவும் அவற்றின் பின்புலத்திலிருக்கும் கண்டிப்பான கூடவே பாசமானஅப்பா உங்களின் ஆளுமையாக்கத்தில் பெரும்பங்கு வகித்திருப்பவரென்று (நான் நினைக்கும்) பாட்டி அம்மா தம்பி தோழிகள் ஆசிரியர்கள் அடங்கிய அந்தகுடும்பச்சித்திரம்தான் வெகு சிறப்பாக இருந்தது.
  அன்பு

  Like

 2. அன்புள்ள திருமதி ஜெயமோகன்,

  இதற்கு முந்தைய கட்டுரையில் எழுதிய திருவையாறு அனுபவங்களுக்கு சற்றும் சுவாரஸ்யத்தில் குறைந்தது அல்ல இந்தக்கட்டுரை. பார்த்தவை திரைப்படங்கள்தான் என்றாலும் பார்க்கும் முன் திட்டமிடும் பாங்கு , பார்த்துக்கொண்டிருக்கும்போது அடையும் பரவசம், பார்த்து வந்தபின் அசைபோட்ட அனுபவம் அனைத்தையும் சுவைபட எழுதி இருக்கிறீர்கள் .

  என்ன வியப்பு என்றால் படத்தைப்பற்றி மட்டும் அல்லாமல் அதற்கு முன்பு காண்பித்த நியூஸ் ரீல் பற்றியும் எழுதி உள்ளது தான். வீட்டுக்கருகே பார்த்த யூரியா உர விளம்பரத்தை வார்த்தை தவறாமல் குறிப்புட்டுள்ளது கூடுதல் சுவை.

  பார்த்துச் சுவைப்பது ஒரு கலை என்றால் இவ்வளவு ஆண்டுகளுக்குப்பின்னும் மற்றவர்களுக்கு சுவையாக எடுத்துச் சொல்வது தனித் திறன் .

  தங்கள் தனித்திறன் கொண்ட எழுத்து தொடரவும் வளரவும் , சாளரத்தின் காட்சிகள் பெருகவும் வாழ்த்துக்கள்

  Like

 3. “நல்லவர்கள் படம் முழுக்க கதறினார்கள். கெட்டவர்கள் கிளைமாக்ஸில் கதறினார்கள்” Humor in its lighter vein but has got depth in dimensions
  I enjoyed Nice pun

  Like

 4. அன்புள்ள அருண்
  மிக அழகிய மொழியில் உங்கள் அனுபவங்கள் படிக்க மிகவும் நன்றாய் இருக்கிறது. சிறுவயதில் நான் ஒரு சினிமா பைத்தியம். எனக்கும் நல்லபடம், கெட்டபடம் என்ற பேதமில்லை. எங்கள் வீட்டில் சினிமா பார்க்க அனுமதி இல்லை. அதனால் அம்மாச்சி வீட்டில் இருந்து சித்திகளுடன்போய் எல்லா படமும் பார்ப்பேன். வீட்டிற்கு வந்து அடியும் வாங்குவேன். எங்கள் வீட்டில் இருந்து நாங்கள் எல்லாரும் குடும்பமாய் பார்த்த ஒரே படம் சம்சாரம் அது மின்சாரம். நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்கள் எல்லாம் பழைய ஞாபகங்களை எழுப்பியது. எதைப் பற்றி எழுதினாலும் அந்த இடத்திற்கே எங்களை கூட்டிப்போய் விடுகிறீர்கள். சினிமா பார்ப்பதைவிட அதற்கு ஆயத்தம் ஆகிறதே மகிழ்சியையும் ஒரு விறுவிறுப்பையும் தரும். புதிய ஏ ஸி தியேட்டர் நினைவுகள். அவைகள் வந்தபோது பீங்கான் கப்-பில் காபி விற்பார்கள். அதைக் குடித்துவிட்டு எங்கள் பெரியம்மா கையில் கப்பை வைத்துக்கொண்டு சேலை தலைப்பை ஒத்தையாய் விட்டுக்கொண்டு வீட்டிற்கு எடுத்து வந்துவிடுவாங்க. இப்ப நினைத்தால் சிரிப்பு வருகிறது.
  சிறுவயதில் அய்யம்பட்டி என்ற கிராமத்தில் என்னுடைய நெருங்கிய உறவினர் பங்கு சாமியாராய் இருக்கும்போது பார்த்த பாஸ்காவை உங்களின் வானத்தில் நட்சத்திரங்கள் என்ற பதிவில் நினைவு படுத்திக்கொண்டேன். ஜெயமோகன் சார் உங்களைப்பற்றியும் உங்கள் மேல் கொண்ட காதலைப் பற்றியும் எழுதி நிறைய படித்திருக்கிறோம். ஆனால் நீங்கள் அதை எழுதும்போது அவ்வளவு நன்றாய் இருக்கிறது. சிரிக்கவும், கண்ணீர் விடவும் வைக்கும் எழுத்துக்கள். நிறைய எழுதுங்கள் அருண். படிக்க மிகவும் ஆவலாய் உள்ளோம்.
  பிரியத்திற்குரிய டெய்ஸி.

  Liked by 1 person

 5. ஆஹா! நீங்கள் எழுதியதும் கூட படமாக கண்முன்னே காட்சியாய் ஓடிக்கொண்டிருக்கிறது.. நிறுத்தவே மனமல்லாத காட்சிகள்… சிறுவயதில் பிடித்த சீரியலில் “தொடரும்” போடும் அந்தத் தருணத்தில் வரும் ஒரு ஏக்கம் உங்கள் எழுத்தின் விளிம்பில் வருகிறது… 🥺

  Liked by 1 person

 6. அருமையாக விவரித்துள்ளீர்கள். சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள். நான் ஜெயமோகனை தொடர்ந்து படிப்பவன் என்பதால் “கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் “என்ற எண்ணம் வந்து கொண்டு இருக்கிறது. எழுத்து நடை வேறு என்பதும் நன்றாக தெரிகிறது.
  வாழ்த்துகள் !தொடரட்டும் தங்களது அனுபவங்களின் சுவையான வெளிப்பாடு !!
  =அம்பைசுந்தரம் =

  Like

 7. Aruna Madam,
  Very good narrative .. Young age memories , that too when we are deeply involved with each and every minute aspects , which we love are always fresh. We can see the growth of maturity in your writing skill , step by step in your narrations now. Keep rocking. JeMo is very lucky .

  Like

 8. மாயச்சாளரம் படித்து முடிந்தபின் அந்த கால நினைவுகள் கண்முன் வரிசையாக ஒன்றன்பின் ஒன்று வந்து கொண்ட இருக்கிறது. உங்கள் எழுத்தில் உள்ள தங்குதடையில்லா நடை படிக்க படிக்க அப்படியே இழுத்துக்கொண்டு செல்கிறது

  நானும் உங்கள் மாதிரி குக் கிராமத்தில் வளர்ந்தால் அதைப் போன்ற அனுபவம் எனக்கும்.

  உங்கள் மாதிரி பெண் குழந்தைகளுக்கு இருந்த அனுமதி பிரச்சனை ஆண் பிள்ளையாகிய எங்களுக்கும் இருந்தது.

  இந்த படம் பார்க்கலாமா வேண்டாமா என்பதை அப்பாதான் முடிவு செய்வர். ஏனென்றால் அவர்தான் காசு கொடுப்பார். சைக்கிளும் வேண்டும்.

  எங்கள் ஊரில் டெண்ட் கொட்டகைகூட இருக்காது . பக்கத்தில் ஐந்தாறு கிமீ துரமுள்ள ஊர்களிலில் இருக்கும் டெண்ட் கொட்டகைக்கு சைக்கிளில்தான் செல்ல வேண்டும். எப்பவும் டபுல்ஸ்தான் கேரியர் இல்லாத சைக்கிளில்.

  சைக்கிளில் முன்னால் உட்கார்ந்து மூன்று காலில் பெடல் செய்து சினிமா கொட்டகைக்கு வந்து டிக்கட் எடுப்பதும் ஒரு சகாசம்தான். பெண்கள் கௌண்டர் மாதிரி இருக்காது. ஓபன் கௌண்டரில் உள்நுழைந்து தரை டிக்கட் எடுப்பதும் ஒரு சகாச செயல்.

  சிவாஜி எம்ஜியார் என்று சண்டை போட்ட நாட்களும் அப்போது பார்த்து ரசித்த மலைக்கள்ளன் முரடன் முத்து…..அடுத்த நாள் அதைப்பற்றி கலந்துரையாடல்….ஆஹா அந்த பரவசம் இன்றும் மனதுக்கு இதமாகத்தான் இருக்கிறது.
  இப்படியாக நினைவுகளை எங்கெங்கே இழுத்து சென்றுவிட்டீர்கள்.

  கடைசியில் நீங்கள் படத்தின் தகுதியை முடிவு செய்த நிலை போல, அஹ்ரகாரத்தில் கழுதை,பதேர் பாஞ்சாலி,சோனர் கல்லா, அங்கூர், மன்தன், தலைமுறைகள், பாலுமகேந்திராவின் கதை நேரம்…..இப்படி கொண்டுபோய் சேர்ந்துவிட்டது. (தற்போது வெண்முரசு படிப்பில். )

  அப்போது நீங்கள் படித்த புத்தகங்கள்.வார,பத்திரிககைகளில் வந்த சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ கொலையுதிர்காலம் இவற்றை எல்லாம் காத்திருந்து வாசித்திருக்கிறேன். தினத்தந்தியில் வந்த கன்னித்தீவு பட கதை போல. ஆனால் எதுவுமே இப்போது மனதில் இல்லை. நீங்கள் எல்லாவற்றையும் நினைவு வைத்திருப்பது உண்மையில் ஒருவரமே. (கண்ணீரும் கனவும்)

  சரளமான உங்கள் மொழிநடையை படிக்க எந்த வித சிரமமும் இல்லாமல் இருந்தாலும் மறுவாசிப்பில்தான் உணர்ந்து கொள்ள முடிகிறது.

  வாழ்த்துக்களுடன்,
  வே. அனுமுத்து

  Like

 9. அன்பு சகோதரி,
  மாயச்சாளரம்- அருமையான தலைப்பு, என் பால்யகால சினிமா அனுபவத்தை ஞாபகப் படுத்தியது. டென்ட் கொட்டாய் சினிமா, ஊர்த் திடலில் திரை கட்டி சினிமா, டெக்- கேசட் சினிமா முதல் சமீப கொரோனோ கால OTT movies.. வரை, சினிமா அனுபவம் உண்மையில் மாயச் சாளரம் தான்.

  கடந்த சில கட்டுரைகளை வாசித்தேன். உங்கள் எழுத்து எளிமையாக, மிக அருகில் தோழியுடன் (குறிப்பாக வெகு நாட்கள் கழித்து சந்திக்கும்) வெறுமனே உரையாடி மகிழும் அனுபவமாக இருக்கிறது.

  Like

 10. What a beautiful word’Maya salaram.’Like Jeyamohan sir said about the word’Neela Mala’ this word is kept on ringing in my mind.Profound meaning.Cinema as well as life,both are virtual.When we are immature both appear real.To peep into other maya, a window (eyes)is needed ,which is also a ‘Maya salaram’.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s