மாயச்சாளரம் – கடிதங்கள்

அக்கா,

சினிமா எனும் கலையின் வளர்ச்சியும் உடன் உங்கள் ரசனையும் மெல்ல மெல்ல மாறி, வளர்ந்து உச்சமாகச் செல்லும் தருணத்தில் கட்டுரையை முடித்துள்ளீர்கள்.

காட்சிகள், பாடலையும் வசனத்தையும் விளக்கும் இணை கலையாக ஒரு காலத்தில் இருந்த இந்திய திரைப்படங்கள், மெல்ல வளர்ந்து தனக்கான தனி கலை நுட்பங்களை உருவாக்கிக்கொண்ட காலத்தில் நீங்கள் அதன் முதல் தர ரசிகையாய் உருவாகியிருக்கிறீர்கள்.

உங்கள் பதிவுகளில் முக்கியமாக நான் நினைப்பது ஒரு கலை அனுபவத்தைப் பெறும் முயற்சியில் இறங்கும் நீங்கள், அதற்கு நிகராக உங்கள் வாழ்வில் ஏற்படுத்திக்கொண்ட இணை அனுபவங்கள்தான்.

தம்பியுடன் நாடகம் பார்த்தபோதும், ஜெயமோகனுடன் இசை கேட்டபோதும், பாட்டியுடன் சினிமா பார்த்தபோதும் கிடைத்த அனுபவம், அதற்கான முன் தயாரிப்பினால் கூடுதலாகச் சுவைக்கிறது.

மரத்தில் பின்னிக்கிடக்கும் கொடிபோல அந்த அனுபவங்களின் மேல் சுழன்றுள்ள உங்கள் நினைவுகள் மொத்த மரத்தையும் ஒரு பசுமை காடாக காட்டுகிறது. அதுவே உங்கள் கட்டுரைகளை மேலும் ஈர்ப்பாக்குகிறது.

எழுத்தாளர் ம.நவீன்,

மலேசியா

***

மேடம்,

வெகுதூரம் சென்று தோண்டி எடுத்து தலையில் சுமந்து வரும் சிறுவன் ஒரு சினிமா தாளை பார்த்துக்கொண்டே கவனமற்று குடத்தை தவற விடுவான்.
வெடித்து காய்ந்து போன மண் அதை குடித்துவிடும், வெறிகொண்டு அந்த நிலத்தை அவன் தோண்டுவான். மண்ணின் தாகமும் மனிதனின் தாகமும் எதிர் நின்று போராடும் காட்சி அது.

நான் தியேட்டருக்கு சென்று பார்த்த படங்களில் இருந்து நினைவில் நிற்கும் ஒரே காட்சி “தண்ணீர் தண்ணீர்” படத்தில் இந்த வரும் முதல் காட்சி தான். அப்போது நான் பள்ளிச் சிறுவன், அப்படமே வைய்யமாக படு அறுவையாக இருந்தது. நீங்கள் விவரித்த போக்கு வெய்யில் இந்த காட்சியை ஒத்தது. இப்போது அது எவ்வளவு ஆழமாக என்னுள் படர்ந்திருக்கிறது என உணர்கிறேன்.

இக்கட்டுரை ஒருவரின் சீரான ரசனை வளர்ச்சியை காட்டுகிறது. கூடவே எனக்கு அது இயல்பில் நிகழவே இல்லை என்கிற வருத்தத்தையும் அளிக்கிறது. பின்னர் குறுந்தகடுகளில் உலக சினிமா பார்த்துத் தான் அது நிகழ்ந்தது. திருவிழா, கோயில் போல வெகுஜன சினிமாவுக்கும் நம் கலாச்சாரத்தில் பெரும்பங்கு உண்டு.

நம் அனைவருக்கும் தேர்வு செய்யப்பட்ட சில ஆண்டுகள் இருக்கும் அதை அப்போதைய சினிமாவால் தான் நினைவில் வைத்திருப்போம். நம் இளம்பருவ ஞாபகங்கள் சினிமாவால் ஆனாது.

முன்பு பாஸ்கா காணப் போகும் அனுபவம் என்றால் இப்போது சினிமா காணப் போகும் அனுபவம். பரிசசளவுக்கே பொதிக் காகிதமும் அழகாக உள்ளது. இதெல்லாம் ஒரு குடும்பத்தில், கல்லூரிக் காலத்தில் சாதாரணமாக நிகழும் நிகழ்வுகள் தான். இலக்கியம் அன்றாடத்தை அழகாக்கும் கலை தானே.

கலையில் கால்பட்டவுடன் நாம் உணர்வது இன்றியமையாத தனிமையை தான். ஆனால் உங்கள் கல்லூரி மனமகிழ்மன்ற அனுபவத்தை விவரித்த விதத்தில் தனிமை தான் கலையாகிறதோ என எண்ண வைத்தது.

“மாயச் சாளரம்” ஒரு ரம்யமான தலைப்பு, “கனவுத் தொழிற்சாலைக்கு” இணையானது.

கிருஷ்ணன் ஈரோடு

***

அன்புள்ள அருணாம்மா, சின்னச்சின்ன டீட்டெய்ல்ஸ் வழியாக பெரிய வாழ்க்கையின் சின்ன துண்டு என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது உங்கள் கதை-கட்டுரைகள். பாட்டியிடம் கிணற்றடிக்கு போகிற சாக்கில் பேசிக்கொள்வது அந்த வீடு, குடும்பம், சூழல் அனைத்தையும் முன்னால் கொண்டுவந்து காட்சியாக்கிவிடுகிறது. உங்கள் எழுத்துநடையின் பெரிய ரசிகை ஆகிவிட்டேன். முக்கியமான அம்சம் வாழ்க்கைப்போக்கில் அனாயாசமாக தோன்றும் மெல்லிய ஹாஸ்யம். நீங்கள் இடுப்பில் கைவைத்து தலையை பின்னால் தள்ளி பி.எஸ்.வீரப்பாவைப்போல் சிரிக்கும் காட்சி எளிதில் மனதிலிருந்து மறையப்போவதில்லை.

ஒவ்வொரு வயதிலும் மாறும் ரசனையை காட்டியதும் சிறப்பு. பதின் வயதில் உணர்ச்சிவசப்படுதலை எழுதியிருக்கிறீர்கள். நல்ல அவதானிப்பு, என் அனுபவமும் கூட (கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி செக்கிழுத்ததற்கெல்லாம் அழுதிருக்கிறேன்). ஆளுமை மிக்கப் பெண்களை அந்தக்காலத்து தமிழ்ச்சினிமா காட்சிப்படுத்தியதும் உண்மை. அந்த படங்களை ஒரு தலைமுறைத்தாண்டி நானும் ரசித்தேன். எங்கள் தலைமுறையில் எல்லா நடிகையருமே பம்பாயிலிருந்து இறங்கி வந்த பளிங்கு பதுமைகள்.

யோசிக்கையில் நூறு வருட வாழ்க்கையில் நம்முடைய பார்வை குறுகிக்கொண்டே இருப்பதாகத் தோன்றுகிறது. முதலில் பெரிய திரை வந்தது. நீங்கள் வாரம் ஒரு படம் பார்த்தச் சாளரம். பிறகு சின்னத்திரை. எங்கள் தலைமுறையில் வாரம் இரண்டு மூன்று படங்கள் கூடப் பார்ப்போம், டீவியில். பலவகையான நிகழ்ச்சிகள் காணக்கிடைத்தாலும் அந்த பெரிய சாளரத்தின் மாயம் இல்லை. காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தாலும் டீவி பார்வையை குறுக்குகிறது. இன்று கைக்கடக்கமான சாளரம். உலகமே அதில் கொட்டிக்கிடக்கிறது. பொறுமையாக வேடிக்கைப்பார்க்க கவனம் தான் இல்லை. நம் கவனத்தை இழுத்து நிப்பாட்டி, நம்மை அதன் ஓட்டத்தில் கொண்டுவந்து, அதன் கதியில் நகரச்செய்வது தான் சினிமாவின் மாயம் என்று தோன்றுகிறது. உங்களை உள்ளிழுத்த கலைப்படத்தின் காட்சியில் முடியும் அவ்விடம் அந்த மாயத்தின் சான்று.

எழுத்தாளர் சுசித்ரா,

சுவிட்சர்லாந்த்.

***

இனிய அருண்மொழி அம்மாவுக்கு

மாயச்சாளரம் வாசித்தேன். உங்களுடைய தலைப்புகளே கவித்துவமாக உள்ளன. சினிமாவை மாயச்சாளரம் என்பது எத்தனை பொருத்தம். ஆனால் முடிவில் அதை தாண்டியும் சிறகு விரிக்கிறது. நாம் உலகை அறிவதே வெவ்வேறு சாளரங்களின் வழி தானே. எல்லா சாளரங்களும் ஏதோ ஒருவகையில் மாயம் கொண்டவை தான். முடிவில் அறியும் மெய்மை என்பது அந்த இறுதி காட்சியை போன்ற மாற்றில்லா வெறுமையை தானா என்ன ?

இந்த கட்டுரையின் இனிய தொடக்கம் பழைய நினைவுகளை கிளறிவிட்டது. எனக்கு தெரிந்து இரண்டாயித்து ஐந்து வரைக்கும் கூட அந்த இனிமை நீடித்தது. இப்போது சில கீற்றுகள் என்றே காட்சிகள் நினைவில் வரும் சித்திரா கொட்டகை சினிமாக்கள் எத்தனை இனிமையானவை. மணலை அளைந்து விளையாடி அப்படி படுத்து தூங்கியெழுந்து பார்க்கும் படங்கள். மெய்யாகவே அது ஒரு திருவிழா தான். நம் வயதொத்தவர்களிடமெல்லாம் சினிமாவை பார்க்க போவதாக சொல்வதும் சேர்ந்து போவதும் மகிழ்வின் தருணங்கள்.

ஒரு புனைவை போல காட்சிகள் விரிகையிலேயே உங்களுக்கேயான நுண்ணிய அவதானிப்புகளும் வருகின்றன. பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என சொல்லும் அப்பாவுடன் பாதுகாப்பான இறந்த காலத்தில் வாழ்வது என்பது மிக கூர்மையானது. அன்று சினிமாவை போல் இன்று இணையமும் செல்போன்களும் உள்ளன. தலைமுறைகள் தாண்டி நிற்கும் மனோநிலை மானுடனின் பாதுகாப்புணர்வுக்கு சாட்சி.

உங்களுடைய பாட்டி சொல்லும் கதைகள் என்கையில் என்னுடைய பாட்டி நினைவுக்கு வந்துவிட்டார். எனக்கு பழைய பாடல்களை கேட்கும் வழக்கம் உண்டு. அப்போது நாயகர் நாயகிகளை சுட்டி இது யார் வினவினால் பெயரிலிருந்து தொடங்கி மிக விரிவாக கதை கூறுவார். கதையோடு அக்கால சினிமா சார்ந்த பொது செய்திகளும் கிடைப்பது ஒரு போனஸ். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அம்மாவிடம் கேட்டால் அப்போதெல்லாம் வாரம் ஒரு படம் செல்வோம் என்பார். பாட்டியின் உணர்ச்சி வசப்படலை இப்போது கூட எப்போதேனும் வீட்டில் பழைய படங்கள் ஓடினால் காண முடியும்.

இன்று நினைக்கையில் அரிதாக இருப்பதாலேயே அவை மதிப்புள்ளவை ஆகின்றன. இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு வாக்கில் எல்லாம் மிக பரவாக டிவிடிகள் வந்துவிட்டன. அதன்பின் இணைய பெருக்கம் படங்களை சென்று பார்ப்பதை அரிது என்பதில் இருந்து இறக்கிவிட்டன. எங்கள் தலைமுறைக்கு அவ்வனுபவம் அவ்வளவாக கிடைத்திருக்காது. இன்று திரைகளை பார்ப்பது மாபெரும் காட்சிகளை மிக பெரிய கற்பனை வீச்சுடன் பார்ப்பதற்கு தான். இன்னொன்று கூட்டாக சேர்ந்து பார்க்கும் கேளிக்கை கொண்டத்திற்காக. இந்த காரணம் எப்போதுமே அடித்து செல்லப்படாது. அந்த கூட்டு கேளிக்கை அளிக்கும் இன்பமே தனி. அதெல்லாம் அதிகம் பெறாதவன் என்பதில் வருத்தம் தான்.

இன்னொரு பக்கம் இந்த டிமிக்கி சுந்தரி என்ற வரியெல்லாம் புன்னகைக்க வைக்கின்றன. அத்தோடு இன்றிலிருந்து பார்த்தால் அந்த மீறல் அம்சம் அல்லவா காதல், இலக்கியம், தேடல் என விரிந்து உங்களை தனித்துவமான ஆளுமையாக செதுக்கியிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக உங்கள் நினைவுகூரல்கள் கடந்து சென்ற காலத்தை கண்ணாடியில் ஒவியங்களென வடிக்கின்றன.

அன்புடன்

சக்திவேல்

***

இனிய அருணாக்கா,

மாயச்சாளரம் வாசித்தேன்.

முழுமையானதொரு கலாப்பூர்வமான அனுபவப் பதிவு.

இந்த முழுமை மூன்று அலகுகள் வழியே கூடி வந்திருக்கிறது.

ஒன்று. இப் பதிவு உருவாக்கிக்காட்டும் ஒரு காலக்கட்டம்.

இரண்டு. இது உருவாக்கம் வாழ்வனுபவம்.

மூன்று. ஒரே சமயத்தில் ஆவணப் பதிவு போலும், ஒரு காலக்கட்டம் மீதான பரிசீலனை போலும் அமைந்து கலாப்பூர்வம் கொண்ட அனுபவப் கதையாக இருப்பது.

ஒரு பெண் பால்யம் துவங்கி கல்லூரி வரை வளர்வது போலவே,

திரை அரங்கங்களும் டெண்ட் கொட்டா, திருவிழா திரை காட்டல், ஏ சி அரங்கம் என வளர்கிறது.

திரைப்படங்களின் உட்பொதிவுகளும் மாறுகிறது வளருகிறது.

குறிப்பாக அப்பா கலைஞர் படங்களை முன் விவரனை அளிக்கும் இடம்.

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு நாபாகீய breaking point தான் மு க அவர்களுடையது.

புராண படங்களை பின்னுக்கு தள்ளி பகுத்தறிவை பேசி கிட்டத்தட்ட தமிழ் சினிமா நவீனதுவதுக்கு நகர்ந்ததின் முதல் அடி போல அமைந்து விட்டார் மு க. இதன் எதிர்நிலை அம்சமும் உண்டு. சினிமா எனும் ‘காட்சிக் கலைக்கு’ இறுதி சங்கு ஊதியதே அது. அன்று துவங்கி இன்றைய ரா. பார்த்திபன் வரை பேசி பேசி மாயும் இந்த வினோதமும் மு க வால் நிகழ்ந்ததே.

நீங்கள் விவரிக்கும் கால எல்லையில் உள்ள சிவாஜியும் எம்ஜியாரும் பின்நவீன மாஜிக் என்றே சொல்ல வேண்டும், ஜஸ்டிஸ் விஸ்வநாத், பட்டாகத்தி பைரவன், பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கி விடும். எம்ஜியாரோ இன்னும் மேலே நீதிக்கு தலை வணங்கு என்றொரு படம் 50 தொட்ட எம்ஜியார் நம்பியார் இருவரும் காலேஜ் யூத்.

இந்த வினோத சூழலில்தான் ரஜினி கமல் எழுந்து வருகிறார்கள். கமல் ஸ்ரீதேவி அந்த காலத்தின் இளம் மனங்களின் கனவு ஜோடி.

அங்கிருந்து உதிரிப் பூக்கள் போக்குவெயில் என கதை சொல்லியின் அகம் கொள்ளும் கேரக்டர் ஆர்க்.

இதனையும் கலாப்பூர்வமாக துலக்கி பரவசமான வாசிப்பின்பம் அளித்த அழகிய அனுபவப் பதிவு.

அழகு. அழகிய பதிவு அக்கா. வாழ்த்துக்கள் :).

கடலூர் சீனு

***

அருணா அக்கா,

பத்து நாட்கள் டென்னிஸியில் ஸ்மோக்கி மலைக்கு சென்று மூன்று நாட்களுக்கு முன் வந்தோம். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பின் நீண்ட இனிய பயணம். ஒரு சுற்று எல்லோரும் காய்ச்சலில் விழுந்து மீண்டோம்.

‘மலையில் பிறப்பது’, ‘மாயச்சாளரம்’ இரண்டையும் படித்துவிட்டேன். 👌👌அருமை அருணா அக்கா. எத்தனை அடுக்குகள். நுண்ணிய விவரணைகள்… ஆற்றூர் ‘அருண்ண்மொழி’ என்று அழைப்பதில் துவங்கி பிரமிப்புடன் அவர் முன்செல்ல நீங்கள் அவரையும், காவிரியின் கரையில் பிரவாகமெடுத்த இசையையும், விழி விரிய குறும்புடன் உங்களுடன் எப்போதும் இருக்கும் சிறுமியையும், கனிந்த அன்னையையும், மனதொத்த காதலர் இருவரையும் என ஒரே கட்டுரையில் எத்தனை முகங்களைக் காட்டி விடீர்கள்! Classic அருணா அக்கா!

மாயச்சாளராம், இன்னொரு கள்ளமற்ற கவிதை போல இருந்தது. பகடியும் இயல்பாய் கூடி வந்திருக்கிறது. “நல்லவர்கள் படம் முழுக்க கதறினார்கள். கெட்டவர்கள் கிளைமாக்ஸில் கதறினார்கள்”🤣🤣… கூரிய , நுட்பமான அவதானிப்பு. இந்த வரிசைக் கட்டுரைகள் அனைத்தும் ஒரு தொகுப்பாக நூலாய் வர வேண்டும். கட்டுரையின் நுட்பமும், புனைவின் சுவாரஸ்யமும் பின்னிய எழுத்து அருணா அக்கா! அடுத்த பதிவுக்கு ஆவலாயிருக்கிறேன்.

பழனி ஜோதி,

நியூ ஜெர்ஸி

***

குதூகலமான பதிவாக ஆரம்பித்து இறுதிப் பகுதியில் போக்குவெயிலின் தாக்கத்தை அப்படியே எழுத்தில் கடத்தி முடித்தது அருமை..

எவ்வளவு குறும்பான இளமைப்பருவம், நினைவுமீட்டலில் மிக வண்ணமயமாக இருக்கிறது..😍😍

நானெல்லாம் நினைவுகூறும்படியாக ஒரு குறும்புமே பண்ணலக்கா 😕

//நல்லவர்கள் படம் முழுக்க கதறினார்கள். கெட்டவர்கள் கிளைமாக்ஸில் கதறினார்கள்// 😂👍🏻 nice summary

அப்பாவை ஏமாற்றி வெளியே படம் பார்க்க போவது, கட் அடிப்பது – இப்படி எல்லாம் எதுவுமே பண்ணதில்ல 😫😫

காலேஜே நடக்காது பாதி நாள்.. ஆனா பகுதி நேரமாக கம்ப்யூட்டர் சென்டர்ல வேலைக்கு போவேன், வீணை வகுப்புக்கு போவேன்.. (காலேஜ் நேரத்துலயேதான் எல்லாம்).. ஆனா கட் அடிக்கவே இல்லையேன்னு என்னை ஃபீல் பண்ண வைத்த பதிவு இது 😩😩😂

சுபா,

சிங்கப்பூர்.

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s