சின்னஞ்சிறு மலர் – கடிதங்கள்

அன்பான அக்கா,

சின்னஞ்சிறு மலர் வாசித்தேன். பொதுவாக உங்கள் கட்டுரைகளை வாசிக்கும்போது அதுபோல எனக்கும் ஏற்பட்டுள்ள அனுபவத்தைதான் உடனடியாகப் பகிர தோன்றும். ஆனால் அது தவறு. ஒரு வாசகன் செய்யக்கூடாதது அதுவென நினைப்பேன். அப்படிப் பகிரும்போது எழுத்தாளர் தொட்டுள்ள ஆழம் செல்ல முடியாமல் மறுபடியும் தனது நினைவுகளிலேயே வாசகன் சுழன்றுக்கொண்டிருக்க நேரிடும். பின்னர் அவன் அடையும் இன்பமும் தவிப்பும் அவனது நினைவுகளை எண்ணியதாகவே இருக்கும். எனவே முதலாம் ஆண்டில் நுழைந்த நான் மூன்று மாதமாக பள்ளிக்குச் செல்லாமல் அடம் பிடித்ததை என்றாவது விரிவாக எழுத வேண்டுமென இப்போதைக்கு நினைத்துக்கொள்கிறேன்.

அக்கா, இந்தக் கட்டுரை எனக்கு வேறு வகையில் முக்கியமானது. இந்தக் கட்டுரை வரும் மணிகண்டனை மட்டும் தனியாக இன்னொருமுறை  வாசித்தேன். அவர் வரும் தருணங்கள். அவர் பேசும் எல்லைகள். கவன ஈர்ப்புக்காக உதிர்க்கும் சிற்சில சொற்றொடர்கள் என கட்டுரைக்குள் இன்னொரு மனிதனின் வாழ்வும் எண்ணமும் மறைந்து வருகிறது. அப்படி மறைந்து மறைந்து வருவதுதானே மணிகண்டனின் குணம். அதற்கு நேர் எதிராக கிருஷ்ணமூர்த்தியின் வெளிப்படையான துடுக்குத்தனம் தெரிகிறது. பிரிவில் அழும்போதுகூட கிருஷ்ணமூர்த்தி சத்தமாக அழுகிறார்; மணிகண்டனின் அழுகை கூட மௌனமானது. கட்டுரையில் கூட அட்டகாசமாக தொடங்கும் கிருஷ்ணமூர்த்தி வருகை மெல்ல மெல்ல அடங்குகிறது. மணிகண்டன் இருளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் துலங்கி தெரிகிறார்.

இது இருவருக்குமான நிரந்தர குணமல்ல. தன்னை அவர்கள் உங்களிடம் எப்படி வெளிக்காட்ட நினைத்தார்கள் என்ற தேர்வு. இது முற்றிலும் வேறு இடத்தில் வேறு வகையாக மாறும்.

கட்டுரையை வாசித்து முடித்தவுடன் சின்னஞ்சிறு மலர் மணிகண்டன் என்றே தோன்றியது. தன் அதீத கவனத்தை அப்பட்டமாகக் காட்டும் கண்களை அவர் சின்னஞ்சிறிய மலராக்கி எத்தனை காலமாக காத்து வைத்திருப்பார் என நினைக்கையில் மனம் கனத்துப்போனது.

இதை ஒரு ஆண் பார்வையில் இருந்து எழுதியிருந்தால் அவ்வளவு கிளிஷேவாக இருந்திருக்கும். இப்போது இது மௌன கொந்தளிப்புகளால் வலுவாக நிற்கிறது.

எழுத்தாளர் ம.நவீன்,

மலேசியா.

***

இனிய அருண்மொழி அம்மாவுக்கு

சின்னஞ்சிறு மலர் வாசித்தேன். இந்த கட்டுரைகள் அனைத்தும் உண்மையை புனைவின் ஆழத்தோடு சொல்கின்றன. கதைகள் என்றே சொல்லலாம். வாசிக்கையில் அங்கு சென்று வந்தது போலவே இருக்கிறது. என்னுடைய பால்ய நினைவுகளை எல்லாம் மீட்டியது. இந்த பதிவுகளின் தனித்துவமே தன்னுடைய சொந்த பதிவு என்பதற்கப்பால் ஒரு காலத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தை காட்டுகின்றன. உங்களுடைய எழுபதுகளில் இருந்து என்னுடைய இரண்டாயித்திரத்தின் முதல் பத்தாண்டுகள் வரைக்கும் ஒரு கோடு இழுக்கலாம். உங்கள் காலக்கட்டத்தின் கடைசி பகுதிகள் என்று எங்களை சொல்லலாம்.

பள்ளியில் சேரும் முதல் அழுகை எல்லோருக்குமே மறக்க முடியாதது அல்லவா. என்னுடைய முதல் அழுகையும் சற்று வித்தியாசமானது தான். நாங்கள் மொத்தம் ஐந்து பேர் நானும் தம்பியும் இரு அத்தை மகள்களும் இன்னொரு அத்தையின் மகனும். அவர்கள் எங்களை விட பெரிய பிள்ளைகள். பள்ளியில் சேர்ப்பது என்றால் அங்கும் நம் ஆட்கள் என்றே நினைப்பு. பால்வாடியில் கொண்டு போனவுடன் அழுகை அந்த நாடகம் முடிந்து அவர்களுடன் வந்து சேர்ந்தோம்.

அதன் பின் இந்த ஊருக்கு வந்து சேர்ந்த பள்ளியில் எப்போதும் கொண்டாட்டம் தான். நீங்களும் சொல்லும் அந்த மிட்டாய்கள் எல்லாம் வாங்கி தின்று கொண்டிருப்பது தான். எனக்கு இயல்பாகவே எந்த சாக்லேட்டும் ஒப்புவதில்லை. ஆனால் வேண்டுமா என்று கேட்காத நண்பர்கள் இல்லை. உங்களை போலவே ஆசிரியர்களின் செல்லப்பிள்ளை. படிப்பும் இப்படி இருப்பதுமே அதற்கு காரணம். இதுவே மற்ற மாணவர்களோடும் பழகுவதற்கும் தடை களைந்தது.

எத்தனை கொப்பளித்தாலும் சாயம் போவதில்லை எவன் கண்டுபிடித்தானோ என்ற பாப்பாவை மிக ரசித்தேன். அந்த பட்டப்பெயர்கள் அது இல்லாத ஆளே இருக்க மாட்டன். நல்ல பிள்ளைகள் டீச்சர்களுக்கு சூட்டுவது இல்லை. பின் வரிசை என்றால் அதுவும் நடக்கும்.

போட்டிகளில் வெல்லும் களிப்பை கூறியிருந்தீர்களே அருமை. நீங்கள் கொடுத்த வைத்தவர் அம்மா. ஏட்டிக்கு போட்டி இல்லாத போட்டி வெத்து பொட்டி என்றே சொல்லலாம். பள்ளியில் பல பேச்சு போட்டிகளில் வென்றதுண்டு. ஆனால் சரியான ரீவைவெல் இல்லையே, அப்புறம் அந்த விளையாட்டுகளில் பல என் பள்ளி நாட்கள் வரை கண்டு களித்தாடியவை.

பள்ளியில் மாணவ நிர்வாகத்தை கச்சிதமாக ஒரு பத்தியில் கூறிவீட்டீர்கள். எங்கள் பள்ளியில் அவை எல்லாவற்றையும் குழு பிரிந்து செய்வோம். அது மகிழ்வானதும் சுய பொறுப்புகொள்வது ஆகும். இன்று எப்போதாவது பள்ளிக்கு சென்றால் நண்பர்கள் வைத்து நீருற்றிய மரங்கள் வளர்ந்து நிற்பதை பார்க்கையில் பழைய நினைவுகளோடும் மகிழ்ச்சி பொங்கும்.

எல்லா கட்டுரைகளையும் போலவே இதன் முடிவும் அற்புதமானது. அதை வாசிக்கையில் சிறுகதையின் திருப்பம் போலிருந்தது. கதைகளின் இறுதியில் கேள்வியொன்று வைக்கப்பட்டிருக்கும். இங்கும் மணிகண்டன் எப்படி அறிந்தான் என்பது வாசகன் கற்பனையில் வளர்த்து கொள்ள நல்ல களம் அவன் தனியாக வந்து கேட்டு வருத்தம் கொள்வது ஏன் என்பது இன்னொரு கேள்வி. இந்த பதிவிற்கு சுட்டி கொடுக்கையில் ஜெ ஊசிகீறல் என்று குறிப்பிட்டவுடன் இப்பகுதியே நினைவில் எழுந்தது. இதயத்தில் சேமிக்கும் முத்துக்களில் ஒன்று. நாமறிந்த எதனோடு சேர்த்தாலும் ஒளி மங்குவது. அது அவ்வண்ணம் இருத்தலில் அழகொன்று உண்டு. சின்னஞ்சிறு மலர் மிக பொருத்தமான தலைப்பு.

அன்புடன்

சக்திவேல்

***

இனிய அருணாக்கா, சின்னஞ்சிறு மலர் வாசித்தேன். மீண்டுமொரு அழகிய பதிவு. நாஸ்டாலஜியா வாக அன்றி, ஒரு பூ் மலர்தலின் இன்றியமையா இயற்கை விதியை நெருங்கி அறிந்த அனுபவத்தை அளித்த பதிவு.

வயதடைதல் எனும் தருணம் இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் வித விதமாக எழுத்தப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் அது சொல்லப்படுகையில் முன்பு சொல்லப்படாத ஒன்று அதில் வந்து குடியேறி விடுகிறது.

இதிலும் அவ்வாறே. ஒரு பெண்ணாக அகத்தால் பால்யம் இன்னும் முற்றிலும் விலகி விடாத, இளமை முகிழ்ந்து விட்ட ‘கருத்தறியாத’ அந்த gray area அழகாக தொழில்பட்டிருக்கிறது.

கடலூர் சீனு

***

மேடம்,

கடந்த வசந்தம் என்பதற்கு எப்போதும் பரவலான ஏற்பும் நெகிழ்ச்சியும் உண்டு என்பதால் எழுதுபவர்களுக்கு இது உடனடி தேர்வாக இருக்கிறது. ஆனால் வெறும் பால்ய நினைவுகள் எப்போது இலக்கியமாகிறது என கேட்டுக் கொண்டேன்.

நினைவுகளின் துல்லியம், புலன்களின் கூர்மை, ஒரு கதை போன்ற வடிவம் ஆகியவை சேர்ந்து இதை சாதிக்கிறது. சின்னஞ்சிறு மலர் இதை வெற்றிகரமாக சாதித்துவிட்டது.

சிறிய வாழ்க்கை, சிறு சிறு நிகழ்வுகள், சிறு பிரிவு ஆனால் பெரிய வாழ்க்கைக்கு உண்டான தீவிரம். இது இக்கட்டுரையின் மகுடம்.

நீங்கள் அணிந்த சட்டையின் நிறம், ஆசிரியர்கள், குட்டி நண்பர்கள், நாடக ஒத்திகை, சமயல் மணம், புகை சூழ்கை, வண்ண மிட்டாய், வண்ணப் பட நோட்டு புத்தகம் என ஒன்றாம் வகுப்பு முதல் நிகழ்ந்தவைகளை விவரித்த விதம் அபாரம். ஒரு மந்திரக் குழாய் மூலம் இன்றில் இருந்து நேற்றைப் பார்த்துவிட்டீர்கள்.

முதல் வகுப்பில் தாயை முதலில் பிரியும் கணம் வலிமிக்கது, பின்னர் 9 ஆம் வகுப்புக்கு ஊர் அகலுதல் எடை மிக்கது. இது படிக்கும்போது ஒரு காவிய துக்கம் நிலவியது போன்று இருந்தது. இதுவே இக்கட்டுரையின் வெற்றி.

கிருஷ்ணன்,

ஈரோடு.

***

அன்புள்ள அருணாம்மா,

இந்தப்பதிவும் வண்ணமயமாக இருந்தது. நிறைய முகங்கள், கொண்டாட்டங்கள்.

காலநகர்வை போகிரபோக்கில் நிகழ்த்தியவிதம் சிறப்பு. ஆரம்பப்பள்ளியிலிருந்து அருணா கிளம்பும் தருணம் அவளுடைய இழந்த பிள்ளைப்பிராயத்துக்காக ஒரு நொடி ஏங்க வைத்தது.

அம்மாவின் சித்திரம் இந்த பதிவில் எனக்கு ஒரு ஹைலைட். அம்மாக்களை மகள்கள் உள்ளூர பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அம்மா மகள் கண்ணுக்கு ஒவ்வொரு தருணத்திலேயும் ஒவ்வொன்றாக தெரிகிறாள். அடுப்புப்புகை, சமையல் வாசனைக்கலவைகளில் அம்மா தேவதையாகத் தெரிவதும், அம்மியில் அரைக்கையில் மகள் நின்று பார்ப்பதும் என்னை பாதித்தது. அப்படி என் அம்மாவை நான் நின்று பார்த்த பல இடங்களை நினைத்துக்கொண்டேன். அந்த உணர்வுகளையும். உங்கள் பதிவுகளில் எப்போதுமே novelistic ஆக விரியக்கூடிய தருணங்கள் ஆங்காங்கே காணக்கிடைக்கிறது. அவை எப்போதும் என்னை கவர்பவை.

*

இப்பதிவுடன் பலவகையில் என்னால் தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்தது. நானும் ஆசிரியை மகள். அந்த நிலையின் எல்லா சாதகபாதகங்களும் அனுபவித்திருக்கிறேன். பதினோராம் வகுப்பில் பள்ளியின் school pupil leader-ஆக கிடைத்த வாய்ப்பு ஆசிரியை மகள் என்று மறுக்கப்பட்ட நிகழ்வு என் பால்ய காலத்தின் பெரும் சோகங்களில் ஒன்று. ஆனால் அம்மாவின் மாணவர்கள் அனைவரும் என்னிடம் பிரியமாக நட்பாக இருப்பார்கள். அம்மா ஆசிரியையாக இருந்ததால் எனக்கு பள்ளியில் அண்ணன் அக்காக்களுக்கு குறைவே இல்லை.

அப்பாவுக்கு அடிக்கடி மாற்றலாகும் வேலை என்பதால் நான் பத்து பதினோறு பள்ளிகளில் படிக்க நேர்ந்தது. சில நேரங்களில் பாதி வகுப்பில் பிடுங்கப்பட்டு புதுப்பள்ளியில் சேர்க்கப்படுவேன். அவை ஒவ்வொன்றும் சதை அறுத்து வெட்டப்படும் அனுபவங்கள். சிறு காலத்திலேயே மிக நெருக்கமான தோழமைகள் வாய்த்துவிடும், அதே வேகத்தில் பிரிந்தும் விடும். அவர்களில் சிலர் கடிதத்தோழர்களானார்கள். டியூஷன் கோச்சிங் கிளாஸ் வயது வந்தவுடன் அந்த நூலும் அறுந்தது.

புதுப்பள்ளியில் ஒன்ற ‘culturals’ எனப்படும் கலைநிகழ்வுகளே எனக்கு முக்கியமாக உதவிசெய்தன. கோமாளியும் கூத்தாடியும் என்றால் தான் எல்லாருக்கும் பிரியம் ஆயிற்றே. பேச்சுப்போட்டி, வினாடிவினா, நாடகம், நடனம், இசை முதல் ரங்கோலி, சமையல் போட்டி வரை அனைத்திலும் புகுந்துவொடுவேன். இதற்கெல்லாம் வரும் பிள்ளைகளும் ஒரு வகையாகத்தான் இருப்பார்கள். பாம்பு பராமரிப்பு நிலையத்தில் வேலை பார்த்த ஒரு சாரின் மகன் பாரதிகிருஷ்ணன் ஒரு நாள் நாடக ரிகர்சலுக்கு அவன் வீட்டில் வளர்க்கும் ball python பாம்பை கொண்டு வந்து பெரிய களேபரம் ஆனது. விஜயவாடாவில் படிக்கும்போது பள்ளிகளுக்கிடையிலான culturals நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி மாணவன் ஒருவன் நட்பானான். அவன் அப்பா கூத்து நடிகர். பள்ளிக்கூடம் போகாத நாட்களில் அவனும் அப்பாவுடன் மேடையில் நடிப்பான். ஆகவே எங்களைப்பார்க்க புரொஃபெஷனல். என்.டீ.ஆரின் தான வீர சூர கர்ணா திரைப்படத்தில் அவர் கர்ணன், துரியன், கிருஷ்ணன் என்று மூன்று வேடத்தில் நடிப்பார். அதை அவன் மாறி மாறி நடித்துக்காட்டி அசத்தினான்.

இப்படி பல நினைவுகள். மாறும் பிராயங்களின் வண்ணங்களை அழகாக கொண்டுவந்துள்ளீர்கள் அதான் இத்தனை நினைவுகளை எழுப்புகின்றன. நன்றி.

எழுத்தாளர் சுசித்ரா,

சுவிட்சர்லாந்த்

***

Leave a comment