மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்

அந்த செய்தியை அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததை  கேட்டதுமே எனக்கு படபடப்பாய் இருந்தது. கண்கூட இலேசாக இருட்டிக் கொண்டு வந்தது. உடனே ஜோதி டீச்சரின் முகம்தான் மனதில் வந்தது. போய் அவரிடம் சொல்லவேண்டும். அவர் எப்படி இதை எதிர்கொள்கிறார் என்று பார்க்கும் குரூர ஆசை ஒன்றும் மனதில் முகிழ்த்து அடங்கியது. செய்தி இதுதான். மனோகரன் சாருக்கு வீட்டில் பெண்பார்த்து முடிவு செய்து விட்டார்களாம். நிச்சயதார்த்தம் தான். அதற்கு தான் அவர் வியாழனிலிருந்து  லீவ் எடுத்து சென்று திங்கள் திரும்பி விட்டார்.  பெண் மைசூர். பணக்கார பெண்.

”ஏன் மைசூர்?” என்று அம்மா கேட்டாள்.

”அவங்க எல்லாம் அந்தக் காலத்துல, கொள்ளுத்தாத்தா காலத்துலேயே ஸ்ரீரெங்கபட்டணத்துலே இருந்து இங்க வந்து மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர்ல செட்டில் ஆன கொங்கணி ப்ராமின்ஸ்டி. பின்ன அங்க பாக்காம தமிழ்நாட்டுலயா பாப்பாங்க” அப்பா சொன்னார்.

எனக்கு இருப்பு கொள்ளவில்லை. சைக்கிளை எடுத்துக் கொண்டு டீச்சர் வீடு சென்றேன். வாசலில் ஸ்டாண்ட் போடும்போதே கவனித்தேன். பேபி டீச்சர் மட்டும் பூத்தொடுத்துக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார். என்னைப் பார்த்ததும் கொல்லைப்புறம் விரலைக் காண்பித்தார். விரைந்தேன். கிணற்றின் திட்டைப் பார்த்தவாறு  சாய்ப்பில் அமர்ந்திருந்த ஜோதி டீச்சரின் முதுகுப் பக்கமே எனக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. என் கால்கள் துவண்டன.

என் மெல்லிய கொலுசு சத்தம் கேட்டு திரும்பிய அவர் புன்னகைக்க முயன்றார்.  ”வாடி அருணா, என்ன சேதி”?

”ஒன்னுல்ல… ஒங்களுக்கு தெரியுமா? அப்பா சொல்லி இப்பதான் எனக்குத் தெரியும்”.

”கொஞ்சநாள் முன்னாடியே எனக்கு தெரியும்டி. அவங்க வீட்ல ரொம்ப ஆர்த்தடாக்ஸ். இதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க.”

 ’ஆர்த்தடாக்ஸ்’ என்ன வார்த்தை? புரியவில்லை. அப்பாவிடம் பிறகு கேட்கவேண்டும். அப்புறம் ஏன் பழகினார்? இந்தக் கேள்வி என் மனதில் தொக்கி நின்றது.

”அவர் பழகும்போதும், பேசும்போதும் ஜாக்ரதையாவே இருந்தார். அப்பவே இது இப்படித்தான் முடியும்னு எனக்குத் தெரியும்.” ஒரு பெருமூச்சு வந்தது அவரிடமிருந்து. அப்பா, எதிர்பார்த்த அளவு பாதிப்பு இல்லை. ஒரு ஆசுவாசம் தோன்றியது எனக்கு. பாவமாகவும் இருந்தது.

”காப்பி போட்டுத் தரட்டுமாடி?” என் வறண்ட தொண்டைக்கு  அது தேவையாக இருந்தது. அவருக்கும் குடித்தால் தேவலையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. ”ம்ம்”, என்று தலையசைத்தேன்.

காப்பி போடும் அவரை கடைக்கண்ணால் பார்த்தேன். என்ன அழகு ஜோதி டீச்சர்? சுமித்ரா மாதிரியே , வகுப்பெடுக்கும்போது கண்ணாடியை  அவளைப்போலவே கைவைத்து ஏற்றி விடுவார். பின்னல் தொடை வரை நீண்டு அவர் நடக்கும் போது அழகாக அசையும். கம்பீரம், அதேசமயம் பிரியம் தெரியும் கன்னம் குழியும் புன்னகை. எனக்கு மட்டும் எதையோ சேர்த்துக் குழைத்த புன்னகை அவரிடம் வெளிப்படும். அடிமையாக இருந்தேன் அவரைப் பார்த்த நாள் முதல்.

காப்பியை எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வந்தோம்.

”லிட்டில் ஃப்ரெண்டு வந்ததும் தான் மூடு மாறிச்சோ அம்மணிக்கு“ என்றார் பேபி டீச்சர்.

”ஆமா, அவ ஏதோ மேஜிக் பண்றா,  சரி, அருணா ரேடியோப் போடு.”

 ஆவலோடு ஆன் செய்தேன். சிலோன் ரேடியோ . ஓலா, ஓலா ஓலலா… ஓல ஓலா…ஓல ஓலா …ஹம்மிங் ஒலித்தது.

அருணா, ஒனக்கு புடிச்ச பாட்டுடி, நீ சின்னப்புள்ளைல எப்பிடி பாடுவ இந்தப் பாட்ட, எங்க பாடு

”மீன்கொடி தேரில் மீன்கொடிதேரில், மீன்கொடிதேரில்“ நாலைந்து வரிகளும் இதைவைத்தே பாடிவிடுவேனாம். அம்மா சொல்வாள்.

பாடிக்காட்ட மூவரும் சிரித்தோம். அப்பாடி என்றிருந்தது. அடுத்த பாடல் வந்தது.  ’அழைத்தால் வருவாள், கேட்டால் தருவாள், அவள்தானே மனைவி’ .

இருவரும் குஷி மூடிற்கு மாறிவிட்டனர். ”அருணா, கேட்டால் தருவாள் என்னன்னு சொல்லு பாக்கலாம்,”

”எனக்குத் தெரியாதா? காஃபி தான்” என்றேன். இருவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

நான் வளர்ந்து விட்டேன் என்றோ , எட்டாம் வகுப்பு படிக்கும் எனக்கு அது முத்தம் என்று தெரிந்திருக்காது என்றோ எண்ணிச் சிரிக்கும் அவர்களின் அறியாமையை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.

பாட்டு முடிந்தது. தொடுத்த பூவின் ஒரு சிறு பகுதியைக் கிள்ளி எனக்கு சூட்டினார் பேபி டீச்சர். அவர் எனக்கு பாடம் எடுக்க வருவதில்லை. வேறு செக்‌ஷனுக்கு செல்வார். சயின்ஸ் எடுப்பார். எனக்கு ஸ்டீஃபன் சார் தான் சயின்ஸ்க்கு.

”நான் கெளம்புறேன் டீச்சர்,” என்று வெளியில் வந்தேன்.

வெளியில் ஓட்டி வரும்போது  காற்றில் இலேசான குளிர். இருட்டி விட்டது. அம்மா தேடுவாள். மனோகரன் சார் நினைவு தன்னிச்சையாக வந்தது.

மனோகரன் சார், பெயர் மட்டுமல்ல ஆளும் அதிமனோகரம். பள்ளியில் வகைதொகையில்லாமல் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு பெண்கள் வரை எல்லோரும் அவரை சைட் அடித்தோம். கமல், ஒருதலைராகம் சங்கர், மோகன்  யாருமே அவருடன் போட்டியிட முடியாது. அவ்வளவு அழகு.

நல்ல உயரம், அளவான சுருள்முடி, பொன்னிறம், எங்கள் ஊரில் யாரும் அப்படியொரு நிறத்தைப் பார்த்ததே கிடையாது . பள்ளியே வியந்தது. அவர் வகுப்பில் வந்தால்’ லைட் போட்ட மாதிரி இருக்கு’ என்று பேசிக் கொண்டார்கள். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூவுக்கு மட்டும் கணிதம் எடுத்தார்.

மாத்ஸில் எம்மெஸி எம்மெட் முடித்த கையோடு போஸ்டிங் கிடைத்து வந்திருந்தார். இவர்கள் எல்லோரும் ஒரே பாட்ச் தான். என் அப்பா வீட்டுக்கு வந்து ஒரே பீத்தல் அவரைப் பற்றி. இவ்வளவு சின்ன வயசுல என்ன படிப்பு. யுனிவெர்சிடி  கோல்ட் மெடலிஸ்ட்டாம். என்னைப் பார்த்துக் கோபமாக ஒரு வசை ”நீயும்தான் படிக்கிறீயே லெச்சணமா” என்று. ’என்ன அநியாயம், நான் இப்போதே யுனிவெர்சிட்டி போக முடியுமா?’

ஆனால் மனோகரன் சார் ஆலத்தூருக்கு வந்த தினம் ஞாபகம் வந்து எனக்கு புன்னகை வந்தது. கிட்டத்தட்ட அது அப்போதைய கிராமப் படங்களில் வரும் வழக்கமான காட்சிபோல் இருந்தது. மெயின்ரோட்டில் இறங்கி சூட்கேசுடன் நடந்து வந்ததில் வியர்த்துக் களைத்திருந்தார். அது ஒரு ஞாயிறு மாலை. பொதுவாக திங்கள் பள்ளியில் ஜாயின் செய்பவர்கள் ஞாயிறு மாலையே பள்ளிக்கு வந்து ஃபிஸிக்ஸ் லேப்பில் தங்கிக் கொள்வார்கள்.

பள்ளிக்கு அருகிலேயே தான் எங்கள் குடிதண்ணீர் கிணறு. அம்மாவுடன் நானும் சிறிய குடத்துடன்  வருவேன். நான் அம்மாவிடம் எதையோ சொல்லிக் கொண்டிருக்க அம்மா கவனத்துடன் கிணற்றைப்பார்த்தபடி நீர் இறைத்துக் கொண்டிருந்தாள். பின்னால் இவர் வந்து நின்றதை தாமதித்தே கவனித்தேன்.

“என்ன வேணும்?” என்றேன்.

’கொஞ்சம் தண்ணீர்“ குப்பியை நீட்டினார். உடனே நான் என் சிறிய குடத்திலிருந்து தண்ணீரை நிரப்பினேன். ஆவலுடன் குடித்துவிட்டு மீண்டும் நீட்டினார். மீண்டும் நிரப்பினேன். முகம் தெளிந்தது. அம்மா அதற்குள் திரைத்துக் கட்டிய புடவையை தழைத்து விட்டிருந்தாள். நான் அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.

” ஸ்கூல் ஃபிஸிக்ஸ் லேப் எங்கயிருக்குன்னு ஒனக்கு தெரியுமா? காட்ட முடியுமா?” என்னைப் பார்த்துக் கேட்டார்.

நான் அம்மாவைப் பார்த்தேன். ’போய் காட்டிட்டு வா’ என்று சைகையில்  சொன்னாள்.

’’வாங்க ”என்றபடி அவருக்கு முன்னால் நடந்தேன். ஊரில் பல ஆசிரியர்களுக்கு இதுபோல் வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். அது என்னவோ என் தலையில்தான் இப்பொறுப்பு எப்போதும் வந்து விழுகிறது.

சூட்கேஸும் இன்னொரு பையுமாக அவர் கஷ்டப்படுவதுபோல் தோன்ற ”சூட்கேஸ நான் தூக்கிட்டு வரேன் சார், எங்கிட்ட குடுங்க“ என்றேன்.

”இல்ல, ஒன்னால முடியாது. நல்ல வெயிட்“ என்று பையைத் தந்தார்.

வாங்கிக் கொண்டே ”ஃபர்ஸ்ட் போஸ்டிங் இங்கயா ஒங்களுக்கு, என்ன சப்ஜக்ட்?” என்றேன்.

கொஞ்சம் அயர்ந்துவிட்டார் போல“ ரொம்ப தைரியமான பொண்ணாயிருக்கியே”.

”எங்க அப்பாவும் இந்த ஸ்கூல் தான், சற்குணம் சார், பிடி அஸிஸ்டண்ட்”

”ஓ, அதான். நான் மேத்ஸ் மெயின்.  ஃபர்ஸ்ட் போஸ்டிங்தான். ஹையர் செகண்டரிக்கு எடுப்பேன்.  நீ என்ன படிக்குறே? பேர் என்ன?”

”அருணா. எயித் போறேன். நாளைக்கு தானே ரீஒப்பனிங்.”

அதற்குள் லேப் வந்துவிட்டது.  நான் உள்ளே ஓடிச் சென்று தங்கிருந்த மற்ற ஆசிரியர்களான சந்திர மவுலி சார், ராஜாமணி சார், சுவாமிநாதன் சார் இவர்கள் வசம் அவரை ஒப்படைத்துவிட்டு வெளியே வந்தேன்.

ஒருவாரம் வரை அவரைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அதற்குள்ளாகவே அவர் பள்ளியில் பேசுபொருளாயிருந்தார். நிறம், குணம், பாடம் நடத்துதல் சம்பந்தமாக. வகுப்பு மிக அருமையாக எடுக்கிறார் என்றும், ஆனால் மிகுந்த கண்டிப்பு என்றும்.

ஒரு வாரம் கழித்து புதிதாக ஜாயின் செய்யவந்த ஜோதி டீச்சருக்கும் பேபி டீச்சருக்கும் நான் தான் பாடிகார்ட் போல வீட்டுக்கே கூட்டி வந்துவிட்டேன். ஏனெனில் அவர்கள் அங்கு பார்த்துச் சென்ற வீடு ரெடியாகவில்லை. ஏதோ பராமரிப்பு பணிகள் பாக்கி உள்ளதால் மூன்று நாட்கள் ஆகும் என்றார்கள். எங்கள் வீட்டுக்கே அழைத்துவந்தேன். அம்மாவும் அப்பாவும் ஒன்றும் சொல்லவில்லை. வரவேற்று உபசரித்தார்கள். ஜோதி டீச்சரின் சொந்த ஊர் வைத்தீஸ்வரன் கோயில், பேபி டீச்சர் சுவாமி மலை. இருவரும் பி.டி அஸிஸ்டண்ட் தான்.

இருவரும் அந்த முதல்நாள் இரவிலேயே என்னுடனும், பாட்டியுடனும் நன்கு பழகி விட்டனர். நான் , பாட்டி, டீச்சர் இருவரும் வரிசையாக திண்ணையில் படுத்துக் கொண்டோம். அந்த மூன்று நாட்களில் எங்களுக்குள்  ஆழமான பிணைப்பு உருவாகிவிட்டது.

ஒருவாரம் கழித்து அம்மா உரப்படை, இனிப்படை இரண்டும் செய்தாள்.  ”அடைக்கு ஊறப்போட்டிருக்கியாடி? சுடும் போது பாப்பாகிட்ட ஒரு எட்டு மணிபோல லேப்புக்கு கொடுத்தனுப்பு. நான் அங்கதான் இருப்பேன்.” என்று அப்பா சொன்னார். அப்பா தினமும் காப்பி குடித்து, நியூஸ் கேட்டு ஆறேமுக்காலுக்கு லேபுக்கு  போனால் ஒன்பது மணிக்கு தான் இரவு வீட்டுக்கு வருவார்.

”எத்தன பேர்?”

”மூணு பேர். ராஜாமணி சார் லீவுல போயிட்டார்.”

”சரி. நீங்க வீட்டுல வந்து சாப்புடுங்க.”

அம்மா எல்லாம் பக்குவமாக செய்து என்னிடம் கொடுத்தனுப்பினாள்.

ஒரு பாக்ஸில் இனிப்படை, இன்னொன்றில் கார அடை, தனியாக ஒரு சிறிய டப்பாவில் கார சட்னி, கொஞ்சம் தொட்டுக்கொள்ள நாட்டு சர்க்கரை.

இத்தனையையும் தூக்கிக் கொண்டு உள்ளேபோனால் அரசியல் விவாதம் அங்கே தூள் பறந்துகொண்டு இருக்கிறது. எல்லோரும் என்னை திரும்பிப் பார்த்துவிட்டு விவாதத்தில் திரும்பவும் மூழ்கி விட்டனர்.

மனோகரன் சார் மட்டும் என்னை நோக்கி புன்னகையுடன் வந்தார். என் கையில் இருப்பதை வாங்கிக் கொண்டார். ”என்ன இது?” என்று மெல்லிய குரலில் கேட்டார்.

”அடை, அம்மா செஞ்சாங்க”  நானும் மெல்லிய குரலில் பதில் சொன்னேன். இதுதான் நாகரீகம் போலிருக்கிறது. இனிமேல் இவரிடம் நாம் எப்போதும் பேசுவதுபோல் காட்டுகத்தல் கத்தக்கூடாது. ஸ்டைலாக பேசவேண்டும்.

”நெறய பாக்ஸ் இருக்கே”

”இனிப்பு, ஒறப்பு ரெண்டும்.”

”எங்க ஊர்ல இனிப்பு போளி, கார போளி செய்வோம் இதுபோல.”

”ஒங்க ஊர் எது?”

”மைசூர் பக்கத்துல”

”அப்பா மதுரைக்கு பக்கம்னு சொன்னாங்க.”

”இப்ப இருக்குறது மதுர, பூர்வீகம் மைசூர். மைசூர் கேள்விப்பட்டிருக்கியா?”

”ம்ம்… ஹைதர் அலி, திப்பு சுல்தான்,மெர்க்காரா, காவேரி…”

”ம்ம்.. குட்.”

அதற்குள் அப்பா பக்கத்தில் வந்து ”எல்லோருக்கும் எடுத்துவை பாப்பா” என்றார்.

நான் எல்லோர் தட்டையும் கழுவி அடையை எடுத்து வைத்து விட்டு ”அப்பா நான் போறேன். நீங்க பாத்திரத்த எடுத்து வந்துடுங்க” என்றேன்.

மறுநாள் நான் எதேச்சையாக கெமிஸ்ட்ரி லேப் பக்கம் சென்றேன். அதற்கு வெளிப்புறம் ஒரு திருகு பைப் உண்டு. அந்த தண்ணீரில் மாங்காய் ஒன்றை கழுவ. அதற்குப் பக்கத்தில்தான் பன்னிரெண்டாம் வகுப்பு. கணித வகுப்பு முடிந்து வெளியில் வந்தவர் என்னைப் பார்த்து புன்னகைத்தபடியே அருகே வந்தார்.

”இங்க என்ன பண்ற, அருணா?”

நான் மாங்காயை அனிச்சையாக பின்னே மறைத்தேன்.

”என்ன அது?”

தயக்கத்துடன் காட்டினேன்.

சிரித்துக்கொண்டே ”அன்னிக்கு அடை ரொம்ப நல்லாயிருந்துச்சு. எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்துது. ஒனக்கும், அம்மாவுக்கும் தாங்க்ஸ்.”

நான் பேச்சை மாற்றும்விதமாக ”இந்த ஸ்கூல் ஒங்களுக்கு புடிச்சிருக்கா?”

”ம்ம். புடிச்சிருக்கு.”

”ஆனா பசங்க நீங்க ரொம்ப ஸ்டிரிக்ட்ன்னு சொல்றாங்க , யார்ட்டயும் பேச மாட்டீங்களாம்.”

”ஆமா, நான் ரொம்ப ஜுனியர் . அப்படித்தான் இருக்கணும். இல்லாட்டி பசங்க தலையில ஏறி மொளகா அரைச்சுருவாங்க.”

பெல்லடித்தது. ”சயின்ஸ் பீரியட் போகணும்” என்றேன்.

”பாப்போம்” என்றார். ஆங்காங்கே தலைகள் எட்டிப் பார்த்தன. பன்னிரெண்டாம் வகுப்பின் அக்காக்களின் பொறாமைக் கண்கள் என்னை சூழ்ந்தன.

லன்ச் பிரேக்கில் ஒரு சீனியர் மாணவியர் குழு என்னை நோக்கி வந்தது.

”என்ன அருணா , ஒங்கிட்ட மட்டும் அந்த சிடுமூஞ்சி சார் அப்டி சிரிச்சு பேசுறாரு”

”யார சொல்றீங்க?”

”மனோகரன் சாரத்தான்”

”அவர் எங்கப்பாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட். எனக்கும் ஃப்ரெண்ட். அதுனாலதான்.”

”ஓகோ”, அவர்கள் முகத்தில் ஒரு எகத்தாளமும் கேலியும் தெரிந்தது.

நான் கண்டுகொள்ளாமல் சைக்கிளை மிதித்தேன். வீட்டில் வந்தாலும் அப்பா வாயிலிருந்து அவரைப் பற்றிய புகழாரங்கள் வந்த வண்ணமிருந்தன.

”என்ன மனுஷன், எவ்ளோ அறிவு, தெறம, இருந்தாலும் எவ்ளோ பொலைட் தெரியுமா? சொக்கத் தங்கம்டி” என்றார் அம்மாவிடம்.

பிறகு எப்படியும் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நான் லேபுக்கு செல்வேன். அம்மா செய்யும் பருப்பு வடை, உளுந்து வடை, பஜ்ஜி, பக்கோடா கொடுப்பதற்காக என்று. அப்பாவிற்கு அவர்களுக்கு கொடுக்காமல் சாப்பிடத் தோன்றாது.

பாட்டியும் ”பாவம், பொண்டாட்டி புள்ளங்கள பிரிஞ்சிருக்காங்க, நாக்கு செத்துபோய் கெடப்பாங்க,  இத சாப்டா ஒரு ஆறுதலாயிருக்கும், கொண்டு போ“ என்பார்.

போகும்போதெல்லாம் மனோகரன்சார் தான் என்னிடம் பேசுவார். அவர் சரிக்கு சமமாக என்னை நடத்துவார். அப்பாவின் நண்பர்களில், என் பேச்சை காது கொடுத்துகேட்கும் ஒரே ஆள். மற்றவர்கள் பாப்பா என்று சின்ன பாப்பாவைப் போல் என்னை நடத்துவார்கள்.

அதேபோல் ஒரு தோழியைப் போலவே என்னை நடத்துபவர் ஜோதி டீச்சர். என் நண்பர்களுடன் வெளி விளையாட்டுகள் குறைந்தபோது மாலைப் பொழுதுகளில் ஜோதி டீச்சர் வீட்டில் பழியாய் கிடப்பேன். அவர்களுக்கு பூத்தொடுத்துக் கொடுத்து  சின்ன சின்ன உதவிகள் செய்வேன். இரு டீச்சர்களும் என்னைப் போலவே ரேடியோ பைத்தியம். நான் பாடல் ஆரம்பிக்கும் முதல் வாத்திய இசையிலேயே பாடலை கண்டுபிடித்து சொல்லி பாராட்டு மழையில் நனைவேன்.

சிலசமயம் சனி, ஞாயிறு விடுமுறைகளில் அவர்களுடன் பட்டுக்கோட்டைக்கு சினிமாவுக்கு அனுப்புமாறு அம்மாவிடம் வ்ந்து கேட்பார் ஜோதி டீச்சர். எப்போதாவது அனுப்புவார் அப்பா. சில நாள் அவர்களின் வீட்டை சுத்தப் படுத்துகிறேன் பேர்வழி என்று இறங்குவேன். ”நீ சும்மா இருடி அருணா” என்பார்.

”ஏன், நான் ஓர ஒதுங்க வைக்கிறது ஒங்களுக்கு புடிக்கலயா?”

”ஆமா, ஒங்க வீட்டுல கட்டில விட்டு கீழிறங்க மாட்டன்னு ஒன் அம்மா என்கிட்ட சொன்னாங்க.”

”பொய்யி, நான் நல்ல தண்ணீ தூக்கிட்டு வருவேன், விறகு வாங்கி சைக்கிள்ள கட்டி எடுத்துட்டு வருவேன், மில்லுல நெல்லரச்சுட்டு வருவேன். இதெல்லாம் அம்மா சொல்ல மாட்டாங்களே”

”சரி, சரீ நீ பெரிய ஆளுதான். இங்க நீ என் செல்ல அருணாக்குட்டி, சரியா?”

நான் சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டு திரிவேன். சுதந்திர தினம் வந்தது. ஆடல் நிகழ்ச்சிக்கு பத்தாம் வகுப்பு பெண்களுக்கு பயிற்சி கொடுத்தார் ஜோதி டீச்சர். ”இந்திய நாடு என் நாடு, இந்தியன் என்பது என் பேரு’ பாட்டு போட்டு பயிற்சி செய்ய டேப் வேண்டும். யாரிடம் போவது?

எனக்கு சட்டென்று மனோகரன் சார் நினைவு வந்தது. அவர் டேப் வைத்து பாட்டு கேட்பதை பார்த்திருக்கிறேன். ஜோதி டீச்சர் எப்படியாவது கேட்டு வாங்கி வா என்றார். ”ஒன் ஃப்ரெண்டுதானே, தருவார்”.

நான் அன்று மாலையே லேப் சென்றேன். வாசலிலேயே நின்றிருந்தார். என் கையைப் பார்த்தார்.

”இன்னிக்கு ஒண்ணும் பலகாரம் இல்லயா? சும்மா வந்திருக்க”.

”அது…. அதுவந்து ஒங்க டேப் ரெகார்டர் வேணும். ஜோதி டீச்சர் டான்ஸ் ப்ராக்டீஸ் கொடுக்குறாங்க, கொஞ்சம் புள்ளங்களுக்கு. அதுக்கு வேணுமாம். கேக்க சொன்னாங்க.”

”அவங்களுக்கு வேணும்னா அவங்கள வந்து கேட்க சொல்லு”.

எனக்கு குபீரென்று ரத்தம் தலைக்கேறியது. அவரைப் பார்த்தபோது அவர் அதே குறும்பு சிரிப்புடன் நின்றிருந்தார். சைக்கிளை வேகமாக மிதித்தேன். வீட்டிற்கு போகவும் பிடிக்கவில்லை, ஜோதி டீச்சரை பார்க்கவும் பிடிக்கவில்லை. என் தோல்வி எனக்கே அவமானமாக இருந்தது.

ஜோதி டீச்சர் வந்து கேட்டால்தான் கொடுப்பாராமே? ஏன்? என்னப் பாத்தா மனுஷியா தெரியலயா? இவரோடு பேசவே கூடாது இனிமேல். என்னிடம் வந்து கெஞ்சி மன்னிச்சுடு அருணான்னு சொன்னாதான் பேசுவேன்.

ஜோதி டீச்சரிடம் நடந்ததை சொன்னேன். முதல்முறையாக அவர் முகத்தில் நாணமொன்று குடியேறியதைக் கண்டதும் எனக்கு எரிச்சல் வந்தது. எப்படியோ அதன்பிறகு இருவரும் ஆங்காங்கே சேர்ந்து பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் தென்பட ஆரம்பித்தார்கள். மாலை நேரங்களில் புதிதாக தொடுத்த பூவை சூடிக்கொண்டு டீச்சர் சிவன்கோவிலுக்கு போக ஆரம்பித்தார். அவர்கள் அங்கு சந்தித்து பேசுவது வழக்கமாகியது. எல்லாம் என் காதுக்கு எப்படியோ வந்துவிடும்.

ஆனால் ஜோதி டீச்சர்  எப்போதும் போலவே என்னை செல்லங்கொஞ்சிக் கொண்டிருந்தார். அவர்மேல் எனக்கு கோபம் வரவேயில்லை. அதே பாசம்தான். ஆனால் இருவரையும் சேர்த்துப் பார்த்தால் பிடிக்கவில்லை. அதே சமயம் அவர்கள் இருவரையும்  மாலையும் கழுத்துமாக கற்பனை செய்து பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருந்தது. ரொம்ப பொருத்தமான ஜோடி எனத்தோன்றியது.

கிட்டத்தட்ட ஒருமாதம் கழித்து  ஒருநாள் மாலை அம்மா ஏதோ பலகாரம் என்னிடம் கொண்டுபோகச் சொன்னாள். ”நான் கொண்டுபோக மாட்டேன், தம்பிகிட்ட கொடுத்தனுப்பு” என்று அடம் பிடித்தேன். ”அவன் எங்கயாவது தடுக்கி விழுந்து எல்லாத்தையும் கொட்டி நாசமாக்கிருவான் பாப்பா. நீ போடா என் கண்ணுல்ல”

”சரி, கொண்டா” வேண்டாவெறுப்போடு போனேன். போனவுடன் நிமிர்ந்தே பார்க்காமல் ஒயர் கூடையை வைத்து விட்டு வேகமாக திரும்பினேன்.

”அருணா, நில்லு.” என்றவாறே வந்தார் மனோகரன் சார்.

”நான் ஒடனே போகணும்“ என்று வெளியில் வந்தேன். வேகமாக வந்தவர், காரிடாரில் என் வழியை மறைத்தவாறு நின்றுக் கொண்டார். விளக்கில்லாததால் அரை இருள். உள்ளிருந்து வந்த வெளிச்சம் மெல்லிய திரைபோல் கிடந்தது.

”ஏன் எம்மேல கோவமா? ஒருமாசமா ஒன்னப் பாக்கவே முடியல.”

”கோவம்லாம் இல்ல”. என் குரல் எனக்கே கேட்கவில்லை.

”இல்ல. என்னப் பாத்துப் பேச மாட்டேங்குற. ஏதோ கோபம்.”

நான் மவுனமாகவே நின்றிருந்தேன்.

”சாரி. நிஜம்மாவே…. உன்ன நான் ஏதாவது ஹர்ட் பண்ணியிருந்தா.”

”சரி. நான் வர்றேன்.”

அதன்பின் சில நாட்களில் மனோகரன் சார் ஊரில் இருந்து அவர் அம்மாவை கூட்டிவந்து வாடகைக்கு வீடெடுத்து மெயின் ரோட்டில் குடியேறினார். பால் டெப்போவை ஒட்டினாற் போல வீடு. இருவருக்கு மிக வசதியானது. பால் காய்ச்சி குடியேற எங்களை மட்டும் அழைத்திருந்தார். அப்பா என்னையும் தம்பியையும் அழைத்து சென்றார். அப்பா பார்த்து தந்த வீடுதான். சாரின் அம்மா சார் போலவே நல்ல நிறம். அதிகம் பேசவில்லை. ஆனால் சிரித்தமுகத்துடன் உபசரித்தார்.

”அம்மணிக்கு கோபமெல்லாம் போச்சா?” என்றார் சார் என்னிடம். வாய்விட்டு சிரித்தேன்.

காலாண்டுத்தேர்வில் கணிதத்தில் நான் மதிப்பெண் குறைந்திருந்தேன். என் வகுப்பில் எல்லோருமே குறைவாக எடுத்திருந்தோம். சிவஞானம் சாரால் வந்தவினை. அவர் ஒரு தூங்குமூஞ்சி. கணிதம் நன்றாகவே எடுக்கமாட்டார். எங்கள் எ செக்‌ஷனுக்கு அவரை போட்டுவிட்டார்கள்.

அப்பா மதிப்பெண் குறைந்ததற்கு என்னைத்திட்ட நான் அழுதுகொண்டே காரணம் கூறினேன். அம்மா ”புள்ளய திட்டி என்ன பிரயோஜனம், மனோகரன் கிட்ட கேட்டு பாருங்க, அவர் டியூஷன் எடுப்பாரான்னு” என்றாள்.

அப்பா கேட்க அவர் ஒத்துக் கொண்டார். திங்கள், புதன், வெள்ளி மூன்று நாட்கள் மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை. முதல்நாளே ”அருணா , இப்ப உள்ள கரெண்ட் போர்ஷன் முதல்ல சொல்லித்தர்ரேன். பழய போர்ஷன சைட்பைசைட் படிச்சுக்கலாம்” என என் மிரட்சியை போக்கினார்.

அவர் சொல்லித்தரும்போது எல்லாம் எளிமையாகி விடுகின்றன. நானே மிக எளிதில் விளங்கிக் கொள்வேன். என் விரைவைப் பார்த்து அவருக்கும் திருப்தி. முதல் வாரத்திலேயே பதற்றம் போய் இலகுவானேன்.

”அருணா, நாளைலேர்ந்து ஜியாமெட்ரி எடுப்பேன். பாக்ஸ் எடுத்துட்டு வந்துடு.”

”பாக்ஸ் இல்ல, வாங்கணும்.”

”இந்த ப்ராண்ட் வாங்கு . CAMEL காட்டினார்.”

”என்ன சொல்லு பாப்போம்.”

”கமல்” என்று சொல்லிவிட்டு அவரையே பார்த்தேன்.

”கொழுப்பா, மூன்றாம் பிறை ஸ்ரீதேவின்னு நெனப்பு.”

”சினிமால்லாம் பாப்பீங்களா?”

”பின்ன, நான் என்ன சாமியாரா?”

”ஸ்ரீதேவி புடிக்குமா? எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்.”

”அது ஒரு குண்டு பூசணி. எனக்கு சாந்தி கிருஷ்ணா பிடிக்கும். பன்னீர் புஷ்பங்கள்.”

”அவ ரொம்ப சின்னபொண்ணு. அது நடிக்கும்போது அவளுக்கு பதினேழு வயசாம்.”

”இதெயெல்லாம் மண்டையில ஏத்திப்பியா நீ?”

”பின்ன… எல்லாம்தான்  தெரிஞ்சுக்கணும். அப்பா சொல்வார். ஒருத்தங்களோட பேசும்போது அவுங்க ஏரியா ஆஃப் இண்ட்ரெஸ்ட் என்னன்னு தெரிஞ்சு போரடிக்காம பேசணும். ஒங்களுக்கு பொலிடிக்ஸ் பிடிக்கும்னா  அதுவும் பேசுவேன்.”

”அப்புறம் அப்பா என்னல்லாம் சொல்வார்?”

”மத்தவங்களோட பேசும்போது நம்மளப்  பத்தி அவங்க கேட்டாலொழிய நாமளா பேசக்கூடாது. காமன் இண்ட்ரெஸ்ட் உள்ள விஷயங்கள ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா பேசணும். ஹுயுமரா பேசணும். ஒன் சைடா பேசிட்டே போக்கூடாது. அவங்க பேசறதையும் காது குடுத்து கவனமா கேட்கணும்.”

”குட் லெஸன். அப்டியே ஃபாலோ பண்ணிதான் இவ்ளோ ஸ்வீட்டா பேசறியா?”

கிண்டலடிக்கிறாரா? நிஜமாகவே புகழ்கிறாரா? முகத்தில் கிண்டல் இல்லை.

மறுநாள் அவர்கள் அம்மா ஒரு கேசரி செய்திருந்தார்கள். மஞ்சள் நிறம். அவ்வளவு சுவையாக இருந்தது. திண்ணையில் தான் க்ளாஸ் எடுப்பார். அவர் சேரில் இருக்க நான் எதிர்ப்புறம் நாடாக்கட்டிலில் அமர்ந்து கணக்கு போடுவேன். ஒரு கிண்ணத்தில் ஸ்பூன் இட்டு எனக்கு தந்தார்.

நான் துளித்துளியாக சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவர் எப்போதும் போல் ஆங்கில செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தவர்

”இன்னுமா சாப்பிட்டு முடிக்கல, டைம்பாஸ் பண்றியா?”

”இல்ல. ரொம்ப டேஸ்டா இருக்கு. என்ன போட்ருக்காங்க?”

”இது பைன் ஆப்பிள் கேசரி. எங்க ஊர்ல ஃபேமஸ்.”

”ரசிச்சு சாப்பிட வேண்டாமா? இனிப்பு மட்டும் நாக்குல எல்லா எடத்துலயும் படுற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடணும். எந்தம்பி அவுக்குண்ணு முழுங்குவான்.”

”அப்புறம் ஒன் சாப்பாட்டுத்தியரிய கொஞ்சம் எடுத்துவுடு.”

”காப்பிய எப்டி குடிப்பீங்க?”

”சூடா”

”அதில்ல. நான் டீயோ, காஃபியோ நாலு சொவத்துக்குள்ள குடிக்க மாட்டேன். மனுஷங்கள பாத்துட்டு குடிக்க மாட்டேன். தொடுவானம் இல்லாட்டி ஏதாவது செடி, கொடி, இயற்கை பாத்துட்டு குடிப்பேன்.அப்பா கூட கிண்டல் பண்ணுவாங்க.”

”பயங்கர ரசன. வேற என்னல்லாம் புடிக்கும்.?”

”மழ பேஞ்சு முடிச்சதும் அந்த சாஃப்ட் மண்ணு மேல வந்திருக்குமே, அதில வெறும்காலோட நடக்க பிடிக்கும். அப்புறம் புதுசா பொறந்த கன்னுக்குட்டி பாத்திருக்கீங்களா?”

”ம்ம். . சொல்லு.”

”உடம்பெல்லாம் ஒரு கலர்ல இருக்கும். நெத்தி மட்டும் வெள்ளயா நெத்திசுட்டி மாதிரி இருக்கும். அதோட கழுத்த கட்டிப் புடிச்சு அந்த நெத்திசுட்டில முத்தம் குடுக்க புடிக்கும்”.

”ஹா… ஹா” என்று சத்தமாக சிரித்தார்.

”அது ரொம்ப கஷ்டம். எப்டி துள்ளும் தெரியுமா? பர்ப்பஸ்ஸே இல்லாம துள்ளிக்கிட்டு கெடக்கும்.”

”’ஒன்ன மாதிரி…”. கண்ணில் சிரிப்பு மின்னியது.

முதல்முறையாக எனக்கு வெட்கம் வந்தது.

”அப்றம்..”

”விழுப்புறம்.. அவ்ளோதான்.”

பேச்சுவாக்கில் நேரம்போனது தெரியவில்லை. ”அருணா, தனியா போய்டுவியா, பயம் இல்லல்ல.?”

”இல்ல. சைக்கிள்ல லைட் இருக்கு.” சொல்லிவிட்டேனே ஒழிய திக் திக் தான். பேய்க்கதைகள் எல்லாம் ஞாபகம் வ்ந்து சில்லிட வைத்தன. முருகேசன் வீடு தாண்டியதும் கொஞ்ச இடத்துக்கு தெருவிளக்கு இல்லை. முருகா, முருகா என்று சொல்லிக்கொண்டே மிதித்தேன்.

வேகமாக வரும்போது எனக்கு இணையாக இன்னொரு சைக்கிள்.

”அருணா, ஏன் இப்டி பேய்வேகத்துல போற?”

மணிகண்டன், ”இப்டியா பயமுறுத்துவ? அறிவில்ல ஒனக்கு.?”

”சாரி, அருணா, அவர்ட்ட நானும் டியூஷன் சேந்துக்கறேன். சொல்லுவியா? மேத்ஸ்ல மார்க் கம்மின்னு என் அப்பா திட்டுறார்.”

”நீ வந்து கேட்டுக்கோ. நா மாட்டேன்.”

”அந்தாள் சிடுமூஞ்சி. பயமாயிருக்கு”.

”அந்தாள்னு மரியாதையில்லாம சொன்ன இருக்கு ஒனக்கு.”

”ஒன்கிட்ட மட்டும்தானெ அவர் சிரிச்சு பேசுறார். அப்டி என்ன பேசிப்பிங்க?”

”தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினெஸ்.”

அப்பா புதிதாக எனக்கு சொல்லிக் கொடுத்த இந்த ஒற்றை வரி மந்திரம் நன்றாக வேலை செய்தது. பேச்சு மூச்சு இல்லாமல் வந்து கொண்டிருந்தான். வீட்டிற்கு வந்துவிட்டேன்.

இன்னொரு நாள் சார் அம்மா வந்து ”பச்ச மொளகா சட்னி வைக்கவா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.  அவர் ”ம்ம்”.என்றார்.

எனக்கு பக்கென்று சிரிப்பு வந்தது. ”சிரிக்கிற மாதிரி என்ன நடந்துச்சு இங்க?” என்றார்.

”நெஜமாவே ஒங்களுக்கு தெரியாதா?”

”என்ன?”

”பள்ளியில் தங்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் திருநாமங்களில் அதுவும் ஒன்று, மைசூர் மஹாராஜா”

”கொழுப்பு கூடிக்கிட்டே வருது ஒனக்கு. வேற என்னல்லாம் பேர்?” ஆர்வமில்லாததுபோல் கேட்டார்.

”சிடுமூஞ்சி, தொட்டாசிணுங்கி, பச்ச மொளகா… அப்றம் எங்க வீட்ல ஒங்க பேரு சொக்கத்தங்கம். அப்பா வச்சது.”

”அப்றம் நீ ஒண்ணு வச்சிருப்பியே எனக்கு”

”இல்ல.”

”பொய்.”

”சத்தியமா இல்ல.”

”நீ பொய் சொல்றத ஈசியா கண்டுபிடிச்சுருவேன் அருணா”

”’மைசூர் சாண்டல்’ இது தான் நான் வச்ச பேரு.”

“ஏன் அப்டி?”

“அந்த சோப் கலர்ல இருக்கீங்க. ஒங்க வீட்ல அந்த சோப்தானே. எங்கப்பா லைஃப்பாய மாத்த மாட்டார். அதான் நான் இப்டியிருக்கேன்.”

”எப்டி“

”கறுப்பா”

”நீ மாநிறம்தானே. கலர்ல என்ன இருக்கு.”

ஜோதிடீச்சரும் சுற்றிவளைத்து டியூஷன் பற்றி கேட்பார்கள்.

”எப்டி எடுக்கிறார்டி”

”ரொம்ப நல்லா”

”எங்க உக்காந்து சொல்லித்தருவார்?”

”அவர் சேர்ல. நான் கட்டில்ல”

”பக்கத்துல ஒக்காருவாரா?”

”ம்ம்.. எப்பவாவது.” வேண்டுமென்றே பொய் சொன்னேன். டீச்சரை சீண்டிப் பார்க்கும் ஆசை வந்தது. சார் உண்மையிலேயே ஜெண்டில்மேன். பக்கத்தில் வர மாட்டார். கிள்ளவோ, அடிக்கவோ, தொடவோ மாட்டார். குட்டுவது போல் கையை கொண்டுவந்து பாவனை செய்வார். குட்ட மாட்டார்.

”அடிப்பாரா?”

”இல்ல. காதப் பிடிச்சு திருகுவார்.”

அய்யோ,.டீச்சரின் முகம் எப்படி கறுக்கிறது? எனக்கு குஷியாக இருந்தது.

ஒருநாள் போகும்போது சார் காஃபி குடித்துக் கொண்டிருந்தார். ”அருணா, என்ன ரொம்ப மாத்திட்ட நீ. பாரு நானும் தொடுவானத்த பாத்துட்டு குடிச்சிட்டிருக்கேன்”

”அப்டி வாங்க வழிக்கு”. நான் ஏதோ சொல்ல சத்தம் போட்டு சிரித்தார்.

”நீங்க இப்பல்லாம்தான் சத்தம் போட்டு சிரிக்கிறீங்க”..

”ஆமால்ல”. அவர் அம்மா வெளியில் வந்தார். ”அருணா ஒன்னோட பழகினப்புறம்தான் இவன் இப்டி சிரிச்சே நான் பாக்குறேன் “என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

அவர் முகம் தீவிரமானது. ”ஒனக்கு ஒண்ணு தெரியுமா, எங்க அப்பா ஒரு டாம் ப்ரொஜெக்ட்ல பெரிய எஞ்சினீயரா இருந்தார். நான் ஒரே பையன், ரொம்ப செல்லம். எனக்கு பதினாலு வயசு இருக்கும்போது கிட்டத்தட்ட இப்ப ஒன்னோட வயசு எங்கப்பா ஒரு கார் ஆக்ஸிடெண்ட்ல இறந்து போனார். என்னால அப்ப அத ரொம்ப நாளைக்கு நம்பவே முடியல. அப்டியே ஒடுங்கிப் போயிட்டேன். யாரோடயும் அதிகம் பேசாதவனா சிடுமூஞ்சியா ஆயிட்டேன்.”

”என் தாய்மாமா என்ன படிக்கவச்சார். அவ்வளவு ஆவேசத்தையும் படிப்புல காமிச்சேன். மைசூர் யுனிவெர்சிட்டில கோல்ட் மெடல் வாங்குனேன். காலேஜ்ல அந்த வயசுல லேடிஸ் மேல ஒரு இண்ட்ரெஸ்ட் வரும்ல. அதுகூட எனக்கு வரல”.

”இங்க வேலைல ஜாயின் பண்ணப்புறம் இந்த ஃப்ரெண்ட்ஸ் கூட பழகி நான் கொஞ்சம் நார்மலா ஆனேன். ஆனா என்ன ரொம்ப ஜாலியானவனா மாத்துனது நீதான்.”

நான் கண்ணீருடன் புன்னகைத்தேன்.

பிறகுதான்  ஒரு மாதத்தில் அவர் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு என் அப்பாவும் பள்ளி ஆசிரியர்களும் சென்றனர். ஜோதி டீச்சரும், பேபி டீச்சரும் செல்லவில்லை. திருச்சியிலிருந்து பெங்களூர் வரை டிரைன். மைசூரில் கோலாகலமாக திருமணம். அப்பா போய்வந்து வாய் ஓயாமல் புகழ்ந்து கொண்டிருந்தார்.

”கல்யாணம் எப்டிங்ற? கிராண்ட். ஸ்வீட்டே நாலஞ்சு. பெரிய விருந்து. ஜாம்ஜாம்னு. எங்களையெல்லாம் பெரிய ஹோட்டல்ல தங்க வச்சார். மாப்பிள்ளை ஊர்வலம் பெரிய கண்டெசா கார்ல.”

”பொண்ணு எப்டி?” என்றாள் அம்மா

”மைசூர் ராஜபரம்பரைல வந்த பொண்ணு மாதிரி தகதகன்னு நல்ல அழகான பொண்ணு. நம்ம மனோகரனும் அழகுல கொறச்சலா என்ன? அவ்ளோ பொருத்தம். எவ்வளவு நக… நாம வாழ்நாள்ல அவ்ளோ நக பாத்துருக்க மாட்டோம்டி.”

எனக்கு எரிச்சல் வந்தது. அப்பா ஃபோட்டோ காட்டினார். பார்த்தேன். பெண் பேரழகு. சாரும் மலர்ந்த முகத்துடன் இருந்தார். பெண் இருந்த இடத்தில் ஜோதி டீச்சரை கற்பனை செய்தேன். உடனே ஜோதி டீச்சரைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

போனேன். வழக்கம்போல் அடுக்களை ஜன்னல் வழியே இலக்கற்று பார்த்துக் கொண்டிருந்தார். முகம் களையிழந்திருந்தது. பக்கத்தில் இந்த கல்யாண ஃபோட்டோ. வா என்று கையை நீட்டினார். மனம் பொங்கியது.

ஓடிப்போனேன். அணைத்துக் கொண்டார். அவரிடம் ஒரு சிறு கேவல் வந்து  அடங்கியது. சூடான கண்ணீர் என் நெற்றியில் விழுந்தது. எனக்கும் தொண்டை அடைத்து கண்ணீர் வந்தது.

***

17 thoughts on “மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்

 1. ஆசிரியரின் செறிவான இலக்கிய விவாதக் கட்டுரைகளைக் கவனத்துடன் படித்துக்கொண்டு, மானசீகமாய் அவருடன் கவனம் பிசகாமல் உரையாடிக்கொண்டிருக்கையில், திடீரென ஒரு காஃபி வந்தால் எப்படியிருக்கும்? அப்படி இதமாகவும், அந்த ஆழத்திலிருந்து கொஞ்சம் விடுபட்ட விடுதலையோடு காலை ஆட்டிக்கொண்டு குடிக்கிற அவகாசமும், எனது வாழ்க்கையின் அற்புத தருணங்களைக் கொஞ்சம் அசைபோட்டுக்கொள்கிற தருணத்தையும் தந்து சென்றது உங்கள் கட்டுரை.
  மிக்க நன்றிகளுடன்
  ப. சரவணமணிகண்டன்

  Like

  1. This is a very subtle and nuanced “story” on its own. Your comment is very misleading. And there is a slight stereotyping when you describe a woman’s writing as refreshing coffee in the middle of serious stuff. Intentional or not we need to be careful with our expressions.

   Thank you

   Like

  2. இந்த ஞாபகக் கட்டுரைகளில் உங்கள் எழுத்துத் திறனை நிரூபித்து விட்டீர்கள். சில உணர்வுகளை சொல்லாமல் சொல்வது அழகாக இருக்கிறது. உங்கள் புனைவுக்காக காத்திருக்கிறேன்

   Like

 2. ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. நேரில் பார்ப்பது போன்று இருந்தது படிக்கும் போது. பொருத்தமான ஜோடிகளை பார்ப்பதே மிக கஷ்டம். சில ஜோடிகளை பார்க்கும் போது என்னடா காம்பினேஷன் என்று தோன்றும். இங்கு இருவரின் தோற்றமும் அதை நீங்கள் சொன்ன விதமும் சூப்பர். 

  சஸ்பென்ஸ் வைக்காமல் எடுத்த எடுப்பிலேயே முடிவை சொல்லி ஆரம்பித்த விதம் படிக்க படிக்க ஏக்கத்தை கொண்டு வந்து விட்டது. படித்து விட்டு யோசித்து பார்க்கும் பொழுது மனிதர்கள் சாதி, மதம் இது போன்ற கணக்கற்ற எத்தனை விஷயங்களால் காலம் காலமாக தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு பிறகு கட்டுப்படுத்தலுக்கு பழகி போய் கிடைத்த ஒரே ஒரு வாழ்க்கையையும் பாழடித்து விடுகிறார்களே என்றுதான் தோன்றியது. 

  Like

 3. இயல்பாய் மலர்ந்த காதலை இயல்பான எழுத்து நடையில் சொல்லியவிதம் அருமை.
  ஜோதி டீச்சரை நீங்கள் வெறுப்பேற்றியது குறும்பின் உச்சம்.
  இந்த கிளைமாக்சில் மனம் கனத்துவிட்டது.

  Like

 4. அன்பின் அருணா

  அழியாத கோலங்களின் பதிவு இது.எல்லோருக்குமே பள்ளி வாழ்வில் இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கும் எனினும் இப்படி அவற்றை நினைவில் வைத்திருந்து கோர்வையாக எழுதி, உங்களின் அப்போதைய உணர்வுகளை எங்களுக்கும் கடத்துவது எல்லோருக்கும் சாத்தியமில்லை. மீண்டும் ஒரு அழகிய பதிவு.

  பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவிகளுக்கு இருக்கும் வாஞ்சை கல்லூரி ஆசிரியர்கள் மீது பொதுவாக இருப்பதில்லை. எனக்கும் என் பள்ளிக்காலத்தில் கணக்கு சொல்லி கொடுத்த ஜனத் டீச்சர் மீது கொள்ளைப் பிரியம் அவர் காதுகளையும் கூந்தல் மறைக்கும் படி கொண்டை போட்டுக் கொண்டு வருவார்.எனக்கும் கணக்கு பாடத்துக்கும் ஏழாம் பொருத்தம், எனக்கு கணக்கு தெரியாது என்பதோடு கணக்குக்கும் என்னை சுத்தமாக தெரியவே தெரியாது. எனினும் ஜனத் டீச்சரினாலேயே அவ்வகுப்புக்கள் எனக்கு பிரியமானவையாக இருந்தன.
  அவருக்கு கொடுக்க வென்று அடிக்கடி பூக்கள் கொண்டு செல்வேன். அவர் நான் கொடுத்த பூவை தலையில் வைத்துக் கொண்டார் என்றால் அன்று முழுவதும் என்னை கையில் பிடிக்க முடியாது அப்படி பெருமையில் மிதந்து கொண்டிருப்பேன்
  .
  பொதுவில் இப்படி டீச்சர்களின் good book ல் நன்றாக படிக்கும் மாணவிகள் தான் இருப்பார்கள் உங்களைப்போல. அரிதாக நானும் ஜனத் டீச்சரின் பிரியத்துக்குரிய வளாக இருந்தேன். கால ஓட்டத்தில் என் நினைவிலிருந்து மலருதிர்வதைப்போல இயல்பாக உதிர்ந்து விட்டிருந்த அவரின் நினைவுகள் மீண்டும் இன்று மலர்ந்து விட்டது இதை வாசித்ததும்

  மனோகர் சார் ஊருக்குள் நுழைவது, கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த உங்களிடம் நீர் கேட்டு வாங்கிக் குடித்ததும், அம்மா புடவையை தழைத்து கொண்டதுமாக அந்த நுழைவு காட்சி அப்படியே பாக்யராஜ் சார் அல்லது பாரதிராஜா சார் திரைப்படக் காட்சியை போல இருந்தது. என்ன இதில் கதாநாயகி நீங்களில்லாமல் ஜோதி டீச்சராக இருப்பது தான் வித்தியாசம்

  அந்த மனோகர் சார் முகத்தை மனதில் கற்பனை செய்ய முயற்சித்தும் என்னவோ அப்படி ஒரு முகம் நினைவில் துலங்கி வரவில்லை. ராஜா என்னும் ஒரு நடிகர் இப்படியான பாத்திரங்களுக்கென்றே தமிழ் சினிமாவில் செட் பிராப்பர்ட்டி போல் இருந்தார் அவரையும் உங்கள் சித்தரிப்புக்களுடன் பொருத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால். ஜோதி டீச்சரை என்னால் கற்பனை செய்து கொள்ள முடிந்தது. உணர்வுபூர்வமான ஒரு சிறு கதையை வாசித்த அனுபவம் . அழகிய திரைப்படமாகவே எடுத்துவிடலாம் இதை.

  சமீபத்தில் ஒரு anthology ’’ஆணும் பெண்ணும்’’ என்று ஒரு மலையாளப்படம் பார்த்தேன் அதில் ராக்கியம்மா என்னும் ஒரு சின்னப்படம் ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது. பள்ளிக்கூடத்துக்கு பதில் தேயிலை எஸ்டேட், ஜோதி டீச்சருக்கு பதில் பார்வதி, மனோகர் சாருக்கு பதில் ஆஸிஃப்.

  சில வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் பேராசிரியராக இருந்த என் தங்கை அவளுடன் பணிபுரிந்த ஒருவரை விரும்பினாள். அவருக்கும் விருப்பம். இருவீட்டாரும் ஒரே ஜாதி என்பதால் எதிர்ப்புமில்லை. 1 வருடகாலம் இருவரும் மகிழ்ந்துகாதலில் திளைத்திருந்தனர்.கல்யாண பேச்சுவார்த்தை தொடங்கியபோதுதான் இருவரும் ஒரே குலம் என்பது தெரிய வந்தது. மாப்பிள்ளையால் அவரது விதவை தாயாரை இதற்கு சம்மதிக்க வைக்க முடியவில்லை உண்மையில் அவரால் எந்த முடிவும் எடுக்க முடியாத சிக்கலாகிவிட்டிருந்தது இது. யாரையும் குற்றம் சொல்ல முடியவைல்லை. இரக்கமற்ற ஊழின் ஆடல், வேறேன்னெ?

  கோவை சென்று திரும்பிய ஒரு கார் பயணத்தில் என் மடியில் படுத்து வழிநெடுக கதறி அழுது தன் காதலை ஜோதி டீச்சர் போலவே கண்ணீரிலேயே கரைத்து விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டாள் தஙகை. அவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சற்றே பிரெளன் கலரில் பூனைக்கண்ணுடன் ஜெயம் ரவி சாயலில் இருக்கும் அவரை அவ்வப்போது கல்லூரியில் பார்க்க நேரிடுகையில் அவரின் கண்களில் தெரியும் அந்த சங்கடம் என் மனதை பிழியும். அன்றென் மடியில் நானுணர்ந்த அக் கண்ணீரின் அதே வெம்மையை இதில் கடைசி பத்தி வாசிக்கையில் மீண்டும் உணர்ந்தேன்.

  வெள்ளிக்கிழமைகளில் இப்போது உங்கள் பதிவு வந்திருக்கும் என்ற நினைவுடன் தான் விழித்துக் கொள்கிறேன். இயல்பான எளிய மொழி, உணர்வுபூர்வமான சரளமான நடை, அருணா எனக்கும் தெரிந்தவராதலால் கதையை நீங்களாகவும் நானிருந்து வாசிக்கும் போது இன்னும் கதையுடன் ஒன்றி போக முடிகிறது.

  ஜெ.சைதன்யாவில் வருமே அஜி பள்ளிக்கு போய் வந்து சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவையெல்லாம் தனக்கும், தான் படிக்கும் பள்ளியில் நடந்ததாகக் சைது சொல்லுவாளே அதைப்போல , இந்த நினைவுகள் எல்லாம் எனக்கும் நடந்ததுபோலவே பிரமை வாசித்து முடித்ததும்.

  அன்பு

  Like

 5. Respected madam
  இந்த பதிவை படித்தபின் எனக்கு வண்ணநிலவன் எழுதிய விதி என்கிற சிறுகதை ஞாபகம்
  வந்தது..
  படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்…..
  மிகவும் சிறப்பான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
  சங்கரன் சத்தியவகீஸ்வரன்
  ஸ்ரீஹரிகோட்டா

  Like

   1. அக்கா, வெண்முரசின் தீவிர வாசகன் நான். அப்படியே கண் முன் நிகழ்த்திக் காட்டுவதைப் போன்ற எழுத்து உங்களுடையது. இறுதியில் அந்த கண்ணீரின் வெம்மை என்னையும் சுட்டது.

    Like

 6. நல்ல அருமையான சம்பவம்,இது கற்பனை போல தெரியவில்லை,உரைநடை மட்டுமே கள்பனையோ
  ஆனாலும் மனதை தொட்டது.

  Like

 7. வணக்கம் .இக்கதையில் வளர்இளம் பருவத்திற்கான குறும்புத்தனம் நிறைந்து காணப்படும் பெண்ணாக ஓவியம் போல் வலம் வருகிறாள் அருணா . மனம் கூடினாலும் மாலை சூடாத காதலாக டீச்சரின் காதல் . அருணாவின் ஆதிக்கமே எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது .பிறரிடம் எவ்விதத்தில் பேச வேண்டும் என்ற வாழ்க்கைப் பாடத்தையும் உணர்த்தி உள்ளீர்கள் . சிற்றோடையின் இசையை கேட்பது இக்கதை எனக்குள் இசையையைத் தோற்றுவித்தது போல் உள்ளது . நன்றி

  Like

 8. அருமையான நினைவலைகளல பகிர்ந்தமைக்கு நன்றி. இதைப்படித்த ஒவ்வொரு வாசகி/வாசகனும் தன் பள்ளிப்பருவத்தை எண்ணாமல் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

  Like

 9. Hello Aruna madam, wonderful writing. Every one has beautiful memories but only a few can write like. you are one of that few. I follow only a few blogs on literature and your blog has made me to read it continuously. your writing has all the elements of fiction, only you have to change the name and place it will become an excellent short story. I expect you to start writing stories soon. we have met in Odisha. I hope you remember me.

  Sankar kutty
  Hyderabad

  Like

 10. அன்புள்ள சங்கர்குட்டி ,
  நன்றாக நினைவிருக்கிறது. அர்த்த ஜாமத்தில் நாங்கள் புவனேஸ்வரில் ரயில் நிலையத்தில் இறங்கும்போது நீங்களும், பெருமாள் அவர்களும் கொடுத்த வரவேற்பை மறக்க முடியுமா? ஜெயனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இத்தனை வண்டிகளும் அலுவலக சகாக்களும் நம்மை வரவேற்பது வி ஐ பி யாக உணர வைக்கிறது என்று. நம் குடும்பத்துடன் உண்ட விருந்தும் மறக்கவில்லை. உங்கள் வீட்டில் உங்கள் பையன் ரவுடி பேபி பாட்டை மீண்டும் மீண்டும் வைத்து நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான். நீங்கள் ஜகன்னாத் திருவிழாவின் அத்தனை அலுவல்களுக்கிடையிலும் எங்களை வந்து பார்த்து சென்றீர்கள். வழியனுப்ப வந்தீர்கள். எதையும் மறக்கவில்லை. என் பதிவுகளை தொடர்ச்சியாக வாசிப்பதறிந்து மகிழ்ச்சி.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s