அறிமுகம்

தந்தை பெயர் சற்குணம், தாயார் பெயர் சரோஜா. பூர்வீக ஊர் தஞ்சை மாவட்டம், திருவாரூர் அருகே உள்ள புள்ளமங்கலம் கிராமம். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியராக பணியாற்றியவர்கள். தந்தை வழி தாத்தா இராமச்சந்திரன் பிள்ளை ஆசிரியராக பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவர்.

அப்பா, அம்மா இருவரும் ஓய்வு பெற்று பூர்வீகமான திருவாரூரில் வாழ்கின்றனர். கணவர் எழுத்தாளர் ஜெயமோகன். வெண்முரசு, விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர் ஆகிய நாவல்களின் ஆசிரியர். மத்திய அரசில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தற்போது சினிமா துறையிலும், திரைக்கதையிலும் பங்களிக்கிறார். குழந்தைகள் அஜிதன், சைதன்யா.

நான், அருண்மொழிநங்கை, பிறந்தது தமிழில் பங்குனி மாதம் 22 ஆம் தேதி, 6 மார்ச் 1970. வளர்ந்தது பட்டுக்கோட்டையில். திருவாரூரில் மிக சிறு பிராயத்திலேயே இலக்கியமும், இசையும் அறிமுகமாகியது. இளங்கலை மதுரை வேளாண்மை கல்லூரியில் பயின்றேன். 1990ல் ஜெயமோகனின் ரப்பர் நாவல் மூலம் அறிமுகமானார். அதனை படித்த பின்பு அவருடன் மலர்ந்த காதலில் 1991ல் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

1993ல் தர்மபுரியில் மத்திய அரசு பணியில் சேர்ந்தேன். பின் நாகர்கோவிலில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன்.

இலக்கியம், இசை மீது தீராத பற்றும், பயணங்களில் தீராத மோகமும் கொண்டவள். ஓய்விற்கு பின் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துள்ளேன். இந்தியாவினுள் வருடம்தோறும் தொடர்ந்து பயணம் செய்து வருபவள்.

இலக்கிய ஆதர்சங்கள் தமிழில் புதுமைப்பித்தன், அசோகமித்தரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அ.முத்துலிங்கம். இந்திய இலக்கியங்களில் வைக்கம் முகமது பஷீர், எஸ்.எல்.பைரப்பா, சிவராம காரந்த், தாரா சங்கர் பானர்ஜி, அதின் பந்தோபாத்யாயா.

உலக இலக்கிய ஆதர்சங்களில் அணுக்கமானவர்கள் டால்ஸ்டாய், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, நிகோஸ் கசான்சாகிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.

வாழ்வில் மிகவும் அணுக்கமான ஆசிரியர் ஜெயமோகன்.