நீர் – கடிதங்கள்

இனிய அருணாக்கா,

ஆம் இந்த வாரம் நிச்சயம் ஒரு சிறுகதையுடன் வருவீர்கள் என்று எதிர் பார்த்தேன். அதுவே நிகழ்ந்தது 🙂

ஜெயமோகன் சார் நதி கதையில் அவரது தீவிர இலக்கியப் பயணத்தை துவங்கினார் எனில் நீங்கள் நீர் கதை வழியே துவங்கி இருக்கிறீர்கள்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத காவிரியால் என்று சொல்லத் தக்க பூர்வ வாழ்க்கை கொண்ட அபியின் குடும்பம்.

அபியின் பால்ய எண்ணைக் குளியல், காளி குளிப்பாட்டு படலம், பாட்டி வாழும் விவசாய வாழ்க்கை, 18 ஆம் பெருக்கு கொண்டாட்டம் இந்த அத்தனை பின்புலம் வழியே அபி குடும்பத்தை போஷிக்கும் காவிரியின் சித்திரம் துலக்கி வருகிறது. இங்கிருந்து பின்னால் சென்று சங்க இலக்கியங்கள் பேசும் காவிரியில் புதுப்புணல் வருகைக்காக கொண்டாட்ட சித்திரத்தை நோக்கி வாசகனால் ஒரு பயணம் சென்று விட முடியும்.

மனித உடலில் எண்பது சதமானம் நீர்தான் என்று அறிவியல் கூற்று உண்டு. இந்த குடும்பத்து உடல்களின் எண்பது சதமான நீரும் திருமலை ராஜன் என்று விளிக்கப்பெறும் காவிரி நீரால் ஆனதே.

நன்னிலம். என்ன ஒரு அழகான பெயர். அங்கே துவங்கி இங்கே வந்து இப்போது பாட்டி காணும் வறண்ட நிலத்தின் சித்தரிப்பு, நீரைப் பிரிந்த மீன் எனும் மிகப் பழைய ஆனால் என்றுமுள்ள துயரை சுட்டும் உதாரணத்துக்கு அருகே நிற்பது.

குளியல், அதுவும் ஆற்றுக் குளியல், அதிலும் பெண்கள் கொள்ளும் ஆற்றுக் குளியல் அதன் பரிமாணம் இன்னும் ஆழம் கொண்டது. இப்போது (இக்கணம் நினைவில் எழுவது கல்பற்றா நாராயணன் எழுதிய சுமித்ரா நாவலில் வரும் குளியல் சார்ந்த உணர்வு நிலைகள்.) அத்தகு குளியல் நிகழ்த்தும் பாட்டி பக்கிட் தண்ணீரில் எவ்விதம் குளித்திருப்பாள்?

காவிரிக் கரை வாழ்வு, வறண்ட நிலம், அருவி என இக் கதை சித்தரிக்கும் நிலக் காட்சிகள் கவித்துவமும் உணர்வெழுச்சியும் துல்லிய சித்தரிப்பும் ஒருங்கே கொண்டிருக்கிறது.

பாட்டி வாழ்வில் முதன்முறையாக காணும் அந்த அருவி சித்திரம் நவீன தமிழ் இலக்கியத்தில் இத்தகு சிதரிப்புகளில் தனி இடம் கோரி நிற்க கூடிய ஒன்று.

ஒரு வாசகனாக அந்த பாட்டி வழியே அங்கே நான் அருவி எனக் கண்டது, தனியே தனது எட்டு குழந்தைகளை கரை சேர்க்க பாட்டி எடுத்த விஸ்வ ரூப தோற்றத்தைத்தான்.

கதை எனும் பரிணாம வரலாற்றில் இன்றைய சவால் என்பது தூய கவிதையின் தூய உணர்ச்சி உணர்வு உள்ளடக்கத்தைக் கொண்டு வருவது என்பதாகவே இருக்க முடியும். இக் கதை கதை யின் சாராம்சம் என்பதை (கதைக் கட்டுமானத்தை உதறி) உயிரோட்டமான மொழியால் உணர்ச்சியூட்டும் சித்தரிப்பால் வாசகனுக்கு கையளித்து விடுகிறது.

இறுதியில் நிகழும் அந்த அருவி தரிசனம் என்பது, அபி தனது அம்மா பாட்டி வழியே பின்னால் பின்னால் சென்று தரிசிக்கும் பேரன்னையின் உருவேதான்.

புன்னகையுடன் நினைத்துக் கொள்கிறேன். பாட்டி நிச்சயம் பக்கிட் தண்ணீரை தொட்டு வணங்கிவிட்டே குளித்திருப்பார்.

கடலூர் சீனு.

***

நீர்: பேரன்னையின் பெருங்கருணை

அன்புமிகு எழுத்தாளர் அவர்களுக்கு,

வணக்கம்.

பாட்டி ஒரு தலைமுறையின் உயிருள்ள காவல் தெய்வமாக தன் சந்ததியை பாதுகாத்து இரண்டாம் தலைமுறையின் பாதுகாப்பான வாழ்வினை காண விரும்பியவர். போதிய நீரின்மை பசுமையற்ற வெளி அவரின் கடந்த கால துயரினை நினைவூட்டி அவரை பிணிக்குள்ளாக்குகிறது. அவரின் ஆளுமை பெருங்கருணையையும் தாண்டி வாழ்வியலின் சிக்கல் தன் இரண்டாம் சந்ததிக்கு ஏற்பட்டதாக அவருக்குள் நிகழ்ந்த உளவியல் சார்ந்த துயரம். நீரின்மை என்பது அவருக்கு வாழ்வியலின் பாதுகாப்பற்ற தன்மையயும் வறுமையையும் கருணையின்மைமேயாகும். நதி அவரின் துணையாக பெருங்கருணையாக தெய்வமாக வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இருந்திருக்கிறது. அவருக்குள் இருக்கும் வாழ்வியல் /  பொருளாதார பாதுகாப்பு என்பது பசுமையே.

அதைத் தாண்டி அவரின் ஆழுள்ளம் பயணம் கொள்ளவில்லை.வறண்ட நிலத்தின் ஆழத்தில் பாயும் பெரு நதியின் ப்ரவாகம் அவரின் துயரினை போக்கி சம நிலைப்படுத்துகிறது. ஆனாலும் அவருக்கு எப்போதும் வறண்ட நிலம் பெரும் துயரே. அவரே வறண்ட நிலத்தின் துயராகவும் பெரு நதியின் கருனையாகவும் இருக்கிறார். அவர் பேத்தியை வருடியது அவர் அடைந்த பாதுகாப்பு குறித்த மன நிறைவை.

சரி, ஆனால் கதையைப் படித்ததும் கொற்றவையின் இறுதி பக்கம் நினைவில் தோன்றியது. அன்னையாக மாற விரும்பும் இளம் பெண். அல்லது அன்னையாகவே பிறந்து கருணையை பூக்களாக வரம் வாங்கி வந்தவர்.

நன்றி

தண்டபாணி ஆடுதுறை.

*** 

அன்புள்ள அருணா அக்கா,

நலம்தானே? நீர் சிறுகதை படித்தேன். நீங்கள் உங்களின் முதல் சிறுகதை என்று சொன்னாலும், புனைவின் நுட்பமும் அழகும்  இதற்கு முந்தைய கட்டுரைத் தொடரிலேயே முழுமையாகக் கூடியிருந்தது. உங்களுக்கேயான  புனைவின் பாணியையும், மொழியையும் கண்டடைந்து விட்டிருந்தீர்கள். ‘நீர்’ தன்னளவில் ஒரு சிறப்பான சிறுகதை, ‘மரபிசையும் காவிரியும்’,  ‘மலையில் பிறப்பது’ போன்ற பதிவுகளின் பின்னணியில் வைத்துப் பார்த்தால் ஒரு அழகிய நீட்சி – அந்தக் காவிரியைப் போலவே. இன்னும் எத்தனை வடிவமெடுத்து அழகிய படிமமாய் உங்களின் படைப்புகளில் ஓடி வரக் காத்திருக்கிறாளோ?
கதையைக் காட்சிகளின் துல்லியதால், கச்சிதமான வடிவத்தால் மிக நேர்த்தியாக முன்னும் பின்னுமாக நகர்த்திச் செல்கிறீர்கள். வறண்ட மண்ணை, மேகமற்ற வானத்தை, விரிந்து கிடக்கும் வெற்று நிலத்தை கண் முன் கொண்டுவந்தாலும், வாசக மனங்கள் சோர்வடைவதற்குள் சரியான இடத்தில் உங்களின் இளைமைக் காலப் பொன்னி பொங்கி வந்து கனவென நிறைக்கிறாள். முட்செடிகள் மண்டிய, வறண்டு வெடித்த பாறைகளைக் கண்டு நாவறளத் துவங்கும் முன் ஆடிப் பெருக்கின் கொண்டாட்டத்துடன் காவிரியன்னை ஆதுரத்துடன் அணைக்கிறாள்.

நீங்கள் அளிக்கும் பாட்டியின் சித்திரம் அபாரம். வேளாண்மை என்றதும் இயல்பாக என் மனதில் எழுவோர் முண்டாசு கட்டிய கலப்பை பிடிக்கும் ஆண் விவசாயிகள்தான். ‘நீர்’ அளிக்கும் பாட்டியின் சித்திரம் அதைத் தலைகீழாக்கி விட்டது. ஏர் பிடிக்கும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்ல ஒரு பெண் எழுத்தாளர் வரவேண்டியிருக்கிறது. சேற்று மணத்தில் கிளர்ந்தெழும், நில மகளை உச்சிமோர்ந்து உவகை கொள்ளும் பாட்டிக்கும் நிலத்துக்குமான உறவு அன்னைக்கும் மகளுக்குமான உறவாகவே மலர்கிறது. அன்னையரின் கதையாகவே விரிந்திருக்கிறது. பூ மகளுக்கு உவந்து முலையூட்டும் காவிரி அன்னை, அந்த அமுதைத்  தன்னில் பெருக்கி தன இனிய மகளுக்கு புல்லாய், நெல்லாய் உவந்தளிக்கும் நில அன்னை,  கன்றையும், கழனியையும், சுற்றத்தையும் கண்ணெனப் புரக்கும் பாட்டியில் உறையும் பேரன்னை, பாட்டியின் சிறிய ஆடிப்பாவையாய் அவரின் அகமறிந்து குளிர வைக்க அபியில் கிளர்ந்தெழும் இனிய அன்னை, என காவிரி முத்தமிட்ட மண்ணில் முளைத்தெழும் விதைப் பெருக்காய் கதை முழுவதும் அன்னையர் எழுந்த வண்ணமிருக்கிறார்கள். வறண்ட சொர சொரப்பான பாட்டியின் விரல்கள் மிக அழகான படிமம். ஈரம் சொட்டும் அவர் மனதின் ஈரம் கதை முழுதும் மென்மழையாய் பொழிந்த வண்ணமிருக்கிறது.  

ஆற்றையும், அருவியையும் சென்று சேரும் முன் அடையும் உள  எழுச்சியும், நிலக் காட்சியும் ஒரு இசைக் கச்சேரியின் இனிய கீர்தனைக்கு முன் வரும் அழகிய ராக ஆலாபனை போலிருக்கிறது. ஆர்ப்பரிக்கும் ஹொகேனக்கலின் சித்திரம் – புகையெழும் கல், தீயெனத் தழலாடும் கல், சன்னதமெழுந்த கூந்தல் விரித்த பெண் – அழகிய கவிதை அருணா அக்கா.

என் பள்ளிப் பருவம் முழுவதும் கழிந்தது புதுக்கோட்டையில். நீர் கதையின் வறண்ட நிலத்தின் பருவெளி. கோடையில் ஒரு குடம் நீருக்காக குருதி சிந்தவும் தயாராய் இருக்கும் மனிதர்கள். இந்த நிலைமை பெரிதும் மாறியது எங்களூருக்கு காவிரி நீர் குழாய் மூலம் கொண்டுவரப்பட்ட போதுதான். தஞ்சைக்கு முலையூட்டிய காவிரியன்னை எங்களுக்குக்  கனிந்து புட்டிபால் தந்தாள். கனிவோடு காவிரியின் கோடையை நினைத்துக் கொண்டேன்.  படித்து முடித்தவுடன் ஆசை தீர காவிரியில் குளித்தெழுந்தது போலிருந்தது. உடல் சூடிறங்கி காது மடல் குளிர்ந்திருந்தது பிரமையாய் இருக்கலாம். சர்வநிச்சயமாய் மனது குளிர்ந்திருந்தது. நன்றி அருணா அக்கா!

அன்புடன்,
பழனி ஜோதி
நியூ ஜெர்ஸி

***

அக்கா,

முதல் கதையாக ஒரு தேர்ந்த எழுத்தாளருக்குரிய நிதானத்துடனும் கலைத்திறனுடனும் மிகச் சிறிய வாழ்வின் தருணமொன்றை எடுத்துக் கொண்டு, இயல்பான கதை சொல்லல் வழியே நகர்த்திச் சென்று உயர் தளத்துக்கு கதையை மேலெழுப்பியிருக்கிறீர்கள். அனுபவக் குறிப்புகளையும் காவிரியில்தான் துவக்கியிருந்தீர்கள். காவிரியும் பாட்டியும் என்ற புள்ளியை மிக அழகாக விரித்தெடுத்திருக்கிறீர்கள். எந்த நிகழ்வையும் உரக்கச் சொல்லும், அடிக்கோடிடும் பதற்றங்கள் இல்லாத நடை. பாட்டி வெற்று நிலத்தை விழிவிரித்துப் பார்த்தபடி வந்த போது ஆறு பெண்களோடு நின்ற அந்தக்காலம் அவர் மனதில் நினைவில் வந்திருக்கும். வறண்ட நிலம் நோக்கி நூறு கைகள் விரித்தெழும் காவிரி போல அந்த வாழ்வின் இன்னல்மிகு தருணத்தில் பராசக்தி அவதாரம் எடுத்த பாட்டியின் கடந்த காலத்துக்கு அவர் சென்று மீண்டிருப்பார். காவிரி பாயும் நிலத்தைத் தாண்டாதவராக பாட்டி இருந்தாலும் நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை என்பதையும் ஒவ்வொரு காலத்திலும் அவள் ஒவ்வொரு விதம் என்ற ஞானமும் கொண்டவராகவே பாட்டி இருக்கிறார். ஒரு பக்கெட் தண்ணீரில் சில மக்கள் வாழ்கிறார்கள் என்பது தன் இல்லத்து மடியில் பாலாகி வந்த காவிரியை, தான் வளர்த்த எருமையை விற்று குடும்பத்தைக் காத்த பாட்டிக்கு புரிந்திருக்கும். ஒரு வாளி நீரிலும் காவிரியைப் பார்த்திருப்பார் என்பதாகத்தான் அவரைப் புரிந்து கொள்கிறேன்.

வெளியே தெரியாவிட்டாலும் கூட மண்ணடியில் இருந்து பசுமை கிளர்த்தும் அந்தர்வாகினியாக காவிரி எப்போதும் உங்கள் எழுத்திலும் கூடவே இருப்பாள் என்று தோன்றுகிறது. உங்கள் முளைப்பாரி பசிய நிறம் கொண்டு அழகாகத் தழைத்திருக்கிறது. புனைவுலகில் வேர் பிடித்து வளரட்டும். மீண்டும் வாழ்த்துக்கள் அக்கா.

சுபஸ்ரீ,

சிங்கப்பூர்.

***

அன்புள்ள அருணாம்மா,

நீர் சிறுகதை மிக நன்றாக வந்துள்ளது. எனக்கு மிகவும் பிடித்தது. உங்கள் கட்டுரைகளுக்கே ஒரு சிறுகதை தன்மை இருந்தது. ஆனால் இதில் புனைவின் தூரத்தை இன்னும் அழுத்தமாக்கி எழுதியுள்ளீர்கள். ஒரு நிகழ்வு என்பதைத்தாண்டி, ஒரு மூத்தோள் தன் வழிதோண்றலின் மனத்தில் பதியும் இடத்தை தொட்டதனால் வாசிக்கும் எல்லோருடைய கதையாகவும் ஆகிவிடுகிறது. பாட்டிக்கும் நதிக்குமான இணைவு இயல்பாக அற்புதமாக வந்தது. “எங்கும் தண்ணீர் கண்ணுக்குப் படவில்லை. ஆனால் மண்ணுக்கு அடியில் தண்ணீர் இருக்கிறது” என்னும் இடம் கதையின் தரிசனம் எனக்கு.

காட்சிகளாகவே கதையை விவரித்து கொண்டுபோகிறீர்கள். எனக்கு இந்தக்கதையில் மிகவும் பாதித்த இரண்டு காட்சிகள், பாட்டி ஆற்றில் குளிப்பதும், மூங்கில் பாதை வழியாக செருப்பில்லாமல் அபி பாட்டியுடன் நடந்து செல்வதும். அந்த மூங்கில் பாதை உங்கள் சிக்னேச்சர் போல தோன்றியது

அன்புடன்
எழுத்தாளர் சுசித்ரா

***

அன்பான அக்கா.

முதல் சிறுகதையை சிறந்த கதையாகக் கொடுத்துள்ளீர்கள். இதை தாண்டி நீங்கள் செய்யப்போகும் பாய்ச்சல்கள் ஆவலாக எதிர்ப்பார்த்திருக்கிறேன்.

ஊரில் துள்ளலுடன் காவிரியாக ஓடும் நீரின் முதல் நுழைவை பாட்டி பார்த்து பிரமிக்கும் தருணம் சிலிர்த்துக்கொண்டது. கணவனை இழந்தபிறகு ஆறு பெண்குழந்தைகளுடன் பன்னிரெண்டு கைகளை முளைக்கவிட்டு பராசக்தியான பாட்டியின் தோற்றம்தானே அது. அருவி சன்னதம் கொண்ட பெண்ணாக காட்சியுற்றபோது பாட்டியின் முழு சித்திரமும் கிடைத்துவிட்டது.

பாட்டி தன்னைதான் பார்க்கிறார். அந்த பாட்டியை கதைச்சொல்லி பார்த்ததில்லை. அவள் பார்த்ததெல்லாம் அந்த ஆங்காரம் அடங்கி சமநிலையில் ஓடும் காவிரியைதான். பாட்டி நீர் வழியாக தன்னை அறிவதுபோலதான் கதைச் சொல்லியையும் அறிந்திருப்பாள். தண்ணீரை பக்கெட்டில் பார்த்த அவர் நம்ப முடியாமல் வியப்பது அதனால்தான். கிராமத்தில் காவிரியாக ஓட வேண்டிய பேத்தியின் பரிணாமத்தை அறிய அந்த ஒரு தருணம் போதும். பாட்டியால் நீர்வழியாகவே எதையும் அறிய முடியக்கூடும். ஆனால் அவள் அந்த நீரை உதாசினம் செய்திருக்க மாட்டாள். நெல்லும் புல்லினம் என அறிந்தவள் அல்லவா அவள்.

இந்தக் கதையில் முக்கியமான பகுதி, பாட்டியின் எல்லா மன அசைவுகளையும் சொல்லும் கதைச்சொல்லிதான் கடைசியில் மடி தேடி படுக்கிறாள். அவள் பாட்டியின் ஒரு அம்சம். அடியாழத்தில் அருவியாக நதியாக துள்ளுபவள். தன் ஒரு பக்கெட் நீரை அள்ளி நதியின் பெருக்கில் ஊற்றிச் செல்ல முயல்கிறாள். பாட்டியின் வழி அவளது சொல்லப்படாத துக்கமே இந்த கதை முழுவதும் படந்துள்ள நீர்.

எழுத்தாளர் ம.நவீன்,

மலேசியா.

***

அன்புள்ள அருணா அம்மாவுக்கு

வணக்கம். நீர் சிறுகதையை வாசித்தேன். நீரின் இயல்புகள் மனிதர்களுக்குள் இறங்கி உடல் மொழி, பேச்சு, மொழி என அனைத்தையும் நிறைப்பதை மிக அழகாகக் காட்டியிருந்தீர்கள். தஞ்சையில் ஓடும் காவிரியின் செழுமையும் விசை மாறுபாடுகளும் ஒகேனக்கலிலே தொடங்குகிறது. ஒரு வகையில் பாட்டியும் தன்னுள் உறைந்திருக்கும் நீர்மையின் ஆதியைக் கண்டு தரிசித்த நாள்தான் ஒகேனக்கலைச் சென்று கண்ட தருணம். அத்தருணத்தை ஆன்மீகத் தரிசனமாகவே காண முடிந்தது. எல்லா செடிகளும் வேரினடியில் ஒரு துளி நீராவது சேகரித்து வைத்திருக்கவே விழைகின்றன. அந்த ஒரு துளி நீரே உயிர் வாழ்வதற்கான ஆதாரமாகி உலகியல்பைத் தொடரச் செய்கின்றன. நீரில் தொடங்கி உயிராதரத்தையும் உலகியல்பையும் கதை சென்று தொடுகிறது. பாட்டியின் பாத்திரம் நெஞ்சுக்கு மிக நெருக்கமானதாக அமைந்திருந்தது.

நன்றி.

எழுத்தாளர் அரவின் குமார்,

மலேசியா.

***

காலயில முதல் வேலயா உங்க கதை தான் படிச்சேன். அப்பிடியே காவிரியில குளிச்ச மாதிரி சில்லுன்னு fresh-ஆ இருக்கு. பயத்தம்பொடி வாசன கம கமன்னு தூக்குது. அந்த பாட்டி காவிரி நீர கண்ணில வச்சு கும்பிடறத மாதிரி எங்க பாட்டி, அம்மா எல்லாம் கடல்நீர கண்ணில வச்சு கும்பிடுவாங்க. நானும் அந்த பழக்கத்த adopt பண்ணிட்டேன். Atlantic, Pacific, எல்லாத்தயும் கும்பிட்டாச்சு.

ரெமிதா,

யூ.எஸ்.

***

அன்புள்ள அருண்மொழி அவர்களுக்கு,

வணக்கம். ‘நீர்’ காளியாக அருவியில் , காவிரியில் ஓடி நெல்லாக, பயிராக, கரும்பாக உருமாருகிறாள். நீரையே பார்த்துப் பழகியவர்களுக்கு, வறண்ட நிலம் கண்ணீரை வரவழைக்கும்தான். கதைசொல்லியுடன் நானும் பாட்டிக்கு நீருடனான உறவை அனுபவித்து அறிந்தேன். Feel good story.
கதைகள் மேலும் மேலும் ஊற்றூர வாழ்த்துக்கள்!

அன்புடன்,
சௌந்தர் ஆஸ்டின்.

***

Leave a comment