காதலின் இசை – கடிதங்கள்

When Dilip Kumar revealed his feelings for Madhubala in his autobiography:  'Must admit I was attracted to her' | Bollywood - Hindustan Times
மதுபாலா, திலீப் குமார்

மேடம்,

காதலின் இசை ஒரு அற்புதம். இசையை எழுத்தின் கரங்களால் ஒரு கணம் அணைத்துக் கொண்டு விட்டீர்கள் எனலாம். “மனம் ஓய்ந்து மண்ணில் படிந்தது” என்கிற வரிகளில் நீந்தி சலித்து கரையேகும் ஒரு நிறைவு. ஒரு பாராசூட்டில் சுழன்று சுழன்று மெல்ல மெல்ல ஒரு புல் வெளியில் மெத்தென தரை இறங்கும் அனுபவம். பின்னர் தான் இப்பாடலை கேட்டேன். உங்கள் எழுத்து பாடலை மேலும் மிதக்கச் செய்திருக்கிறது.

காதலிப்போர் பொதுவில் அதை மறைத்துக் கொள்ளும் சம்பவங்களைப் பார்த்துள்ளேன், உள்ளூர ரசித்துக் கொண்டே இதைச் செய்வார்கள். ஆனால் விலகியோர் காதலிப்பது போல நடிப்பது ரணம் தான், இது போன்ற களத்தில் மட்டுமே நிகழ சாத்தியமான ஒரு அரிய நிகழ்வு. ஆனால் மதுபாலா விழிகளில் தெரிவது அசல் காதல் தான். நௌஷாத்தும் சாகேப்பும் இந்த விழிகளில் இருந்தே தமது இசையைப் பெற்றிருப்பார்கள்.

தற்செயலாக துவங்கி ஒரு பாடலை பற்றிக் கொண்டு வெகு உயரத்துக்கு மிதந்து விட்டீர்கள். காதலித்தவர்கள் காதலை எழுதுதல் என்பது ஒரே சமயம் வாய்ப்பும் தடையும் ஆகும். மறுபுறம் இசையை எழுதுவது மேலும் சவாலானதும் ஆகும். இசையை யாரால் எழுதக் கூடும் என்றால் ஒருவேளை அசலாக காதல் கொண்டவர்களால் இயலும் எனலாம் ஒரு வலையால் இன்னொரு வலையை விரித்துப் பிடிப்பது போல. நீங்கள் இரண்டையும் செய்துவிட்டீர்கள்.

முகல் இ அசம் முதலில் கருப்பு வெள்ளையில் வந்தது. 40 ஆண்டுக்குப் பின்புதான் வண்ணம் ஏற்றப்பட்டு இப்போதுள்ளது போல காணக் கிடைக்கிறது. அனார்கலி சலீமுக்கு வண்ணம் தீட்டி மதுபாலா திலீப் ஆக்கி விட்டீர்கள்.

கிருஷ்ணன்,
ஈரோடு.

***

இனிய அருண்மொழி அம்மாவுக்கு

காதலின் இனிமையை கேட்டேன். கான் சாஹேப்பின் குரல். ஒரு விண் பறவையின் குரல். இங்கு காதலென்று நிகழும் மகத்துவத்தை குரல் மட்டுமேயாகி அழைத்து சென்று விடுகிறார். எங்கோ எப்போதோ எப்பொழுதுமாக இடையறாது நீடிக்கும் இனிமையை ஒரு குரல் மட்டுமே அழைத்து சென்று விடுவது மிக விந்தையானது. பாடல் முடியும் ஒவ்வொரு முறையும் யாரோ மண்ணில் பிடித்து அறைந்தது போலிருக்கிறது. அதன் விளைவான ஆழ்ந்த மௌனம். அது இங்கு அனாதி காலம் தொட்டு ஒலிக்கும் பொங்கும் பரவசத்தின் ஓசையல்லவா!

//பூமியில் நிகழ்ந்த முதல் காதல் தொட்டு அதைப் பார்த்து நிற்கிறது என் போதம். காற்றில் கரைகிறது அதன் இனிமை. பூமியில் பொழிகிறது அதன் தவிப்பும் வலியும். உடலை விட்டு எழ முடியுமா பிரியம் மட்டும் ? மனம் தனித்து பறக்க நிலவின் ஒளியாக, இரவின் குளிராக, வானின் ஆசியாக, பூமியின் அணைப்பாக காதலை உணர முடியுமா ?

காதல் யோகினியாகி
அழகிய தன் காதலனிடம் செல்கிறாள்
காதலின் வானமென
அவள் தன் காதலனிடம் போகிறாள்
அவள் கண்கள்
காதலனின் கண்களை
சந்திக்கும்போது
நிம்மதி கிடைத்து விடுகிறது
இதயத்தின் தாகம் அணைகிறது
அழகிய இனிய அந்த இரவு முழுவதையும்
காதலின் யோகினியாகி
தன் காதலனுடன்
கழித்திருக்கிறாள் அவள்…//

காதலின் வானமென, காதலின் யோகினியாகி மிக சிறந்த காதல் கவிதைகளில் ஒன்றல்லவா இது. இந்த மொத்த கட்டுரையிலும் கான் சாஹேப் இசையில் வெளிப்படுத்திய பித்தின் உச்சத்தை மொழியில் வடித்து வைத்தவை. மொழியை எப்போதும் நாம் ஏந்தி கற்பனை தீட்டி செல்ல வேண்டியிருக்கிறது. இங்கு எப்போதும் ஒலியென நம்மை சூழ்ந்திருப்பது கனிந்து இசையாகி வருகையில் அது நம்மை ஏந்தி கொள்கிறது.

பாடலை காட்சிகளோடு சேர்த்து சற்று வீரியமிழந்து விடத்தான் செய்கிறது. ஆனால் அந்த காட்சிகளை மட்டுமே எடுத்து கொண்டால் மதுபாலாவின் மயக்கத்தில் கிறங்கும் அவ்விழியசைவை காண்கையில் அவர்களுக்குள் பிரிவு இருந்ததை நம்ப முடியவில்லை. இந்த பாடலோடு சென்ற வாரம் கேட்ட மழ கொண்டு மாத்ரம் என்ற மலையாள பாடலின் காட்சிகளும் நினைவிற்கு வருகிறது. கான் சாஹேப் பித்தின் இனிமையை வழங்குகிறார். அங்கே நேரெதிராக உடைந்த காதலின் வலியை சொல்கிறது அப்பாடல். ஒன்று செவ்வியல், இன்னொன்று கற்பனாவாதம்.

மொகல்-இ-அஸாம் இன் முழு கதையையும் சொல்லி இப்பாடலை நிறுத்துவது மாளிகையை எழுப்பி அதன் உச்சி கலசத்தில் வைரத்தை பதித்து ஒளிர செய்கிறது.

அன்புடன்
சக்திவேல்

***

அம்மா,

சூரிய அஸ்தமனம் எப்போதும் எங்கும் அழகாகவே இருக்கிறது. ஆனால் நாம் பலமுறை அதை மறந்து விடுகிறோம். ஆனால் மலையின் உச்சியிலோ, கடற்கரையிலோ, பாலைவனத்திலோ, தவிர்க்கவே முடியாத ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. அஸ்தமனம் ஆகும் சில நொடிகள் நம் உள்ளம் மௌனம் கொண்டு அந்த தருணத்தில் ஆழ்ந்திருக்கிறது. பிறகு அது எண்ணில் அடங்காத நினைவுகளில் ஒன்றாக சேமிக்கப்படுகிறது.

இந்த படம், பாடல் முன்பே கல்ட் ஆக இருந்தாலும், பலர் தவற விட்டிருக்கலாம், மறந்து போய் இருக்கலாம். இந்த கட்டுரை அந்த இசையின் மகத்துவத்தை, படத்தின் பிரமாண்டத்தை, ஒரு வெளி அமைத்து அதில் நிகழ்த்திக் காண்பிக்கிறது. ஆழ்ந்த மௌனம் ஒன்று கட்டுரையின் இறுதியில் நிலவுகிறது.

இசை பற்றிய சுவாரசியமான கட்டுரை என்று வாசிக்க துவங்கினேன்.. அதன் பின்னணி, வரலாறு என ஒரு வரைபடம் குடுப்ப தொடு நிறுத்தாமல் காதலின் இசையை மனதில் ஒலிக்க வைத்துவிட்டீர்கள். படே குலாம் அலி கான் அவர்களின் குரல் இனிக்கும் முன்பே உங்கள் வார்த்தைகள் திதிக்கத் துடங்கியது.

மொகல்-இ-ஆசமை பார்க்க துண்டும் கட்டுரை, பார்த்தால் கட்டுரையின் தாக்கம் அதிகரிக்கும் என நினைக்கிறேன்.

நன்றி,

நிக்கிதா.

***

அம்மா,

”காதலின் இசை” கட்டுரையை வாசிக்கும் போதே என்னுள் ஒரு துள்ளல் எழுந்தது. இந்த பாடல் வரியின் முதல் வரியே அத்தனை கவித்துவமானது ”காதல் யோகினியாகி அழகிய தன் காதலனிடம் செல்கிறாள். காதலின் வானமென அவள் தன் காதலனிடம் செல்கிறாள்” என்ற வரி மீண்டும் மீண்டும் மனதுள் அசைப்போட்டது.

இது ஒரு பித்து நிலை, அந்த பித்து நிலையில் ஒரு துளி போதம் வந்துவிட்டால் அதன்பின் இந்த கவிதை நிகழ்வதில்லை, காதலும் தான். அந்த அபோத கனவின் வரிகள் இவை. உங்களின் கட்டுரையை வாசித்த போதும் நீங்களும் அதே நிலையில் எழுதியிருக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது. அதன் உச்சமான அழகிய வரி என்பது நீங்கள் உங்களை மறந்து எழுதிய இந்த வரி என்றே நினைக்கிறேன்.

“என் உடலை விட்டு மனம் தனித்து பறப்பதுபோல் உணர்ந்தேன். அந்த அனாதி காலத்தில் சலீம்- அனார் காதலின் சாட்சியாக என்னை உணர்ந்தேன். அது மட்டுமல்ல, பூமியில் நிகழ்ந்த முதல் காதல் தொட்டு அதைப் பார்த்து நிற்கிறது என் போதம். காற்றில் கரைகிறது அதன் இனிமை.”

ஒரு கட்டுரையில் எத்தனை சரடுகள் எத்தனை காதல்கள் அனார்கலி, சலீம் எனத் தொடங்கி திலீப் குமார், மதுபாலாவில் உச்சம் கொள்கிறது. ஆனால் நீங்கள் நேரடியாக சொல்லாமல் பின்னணி இசை போல் இக்கட்டுரையின் பின்னணியில் இசை மீதான் கான் சஹேபின் காதல் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆசிஃபிற்கு கான் சஹேப் இசையின் மீதுள்ள பிரேமை ஒரு பாய்ச்சல் போல் அவர் அந்த பத்தாயிரம் ருபாய் அட்வான்ஸ் கொடுக்கும் போது வெளிப்படுகிறது.

இந்த கட்டுரைக்கு காதலின் இசை அத்தனை பொருத்தமான தலைப்பு. கட்டுரை முழுவதும் காதலுக்காக ஒலித்துக் கொண்டிருக்கும் இசை சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு மேல் ஒரு பிரேமை இந்த கட்டுரையில் இழையோடுவதை காண்கிறேன். அந்த பிரேமை நீங்கள் அந்த ஓர் இரவில் மொகல்-இ-அஸம் பாடலின் மேல் கொண்ட பிரேமையின் வெளிப்பாடு என நினைக்கிறேன்.

நன்றி,

நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.

***

இணைப்புகள்

Leave a comment