இரு கடிதங்கள்

’காதலின் இசை’, ’கண்ணீரின் இனிமை’ கட்டுரைகளை பற்றிய கவிஞர் அபியின் கடிதம்

அன்புள்ள அருண்மொழி,

மொகல்-ஏ-ஆஸம் படத்தில் இடம்பெற்ற படே குலாம் அலிகானின் இசையைக் கொண்டு ஓர் இரவு முழுவதையும் நிரப்பிக்கொண்ட உங்கள் அனுபவம் மகிழவும் நெகிழவும் செய்கிறது.

உங்கள் பரவசத்தை வெளிப்படுத்த ‘குரல் செய்யும் மாயம்’, ‘மயக்கம்’, ‘காதலின்வலி’, ‘தவிப்பு’, ‘இனிமை’… இப்படி சொற்களில் தாவித்தாவி அமர்ந்தும், நிறைவு பெறாமல் நீங்கள் ‘இன்பத்துன்பத்தில்’ திளைத்தது தெரிகிறது.

சொல் சுமக்க முடியாத, சொல்லில் வராத எந்த அனுபவத்தையும் சொல்வதற்குக் கவிதைதான் துணைவர வேண்டும். உங்களுக்கு நேர்ந்த இசை அனுபவத்தைச் சொல்ல முயன்ற போது உங்கள் கட்டுரை தன்னை அறியாமல் கவிதைக்குள் நுழைந்துவிட்டிருக்கிறது.

உங்கள் உணர்வின் வழியே பார்த்தால் சலீம்-அனாரின் வெண்பனி போர்த்த காதலின் அற்புதம்! அந்தக் காட்சியை மட்டும் ஆசிஃப் இயக்கவில்லை, படே குலாம் அலிகானின் வருடும் இசையே இயக்கியிருக்கிறது; நானும் உணர்கிறேன்.

உயிர்-உயிர் இசைவின் கோடானு கோடிக் காதல்களையும் உங்கள் முன் கொண்டுவந்து குளிரக்குளிர நிரப்பியிருக்கிறது கானின் இசை. வானின் ஆசி, பூமியின் அணைப்பு என இசையில் காதலை நீங்கள் காணும் போது வானாகி, மண்ணாகி என்ற மாணிக்க வாசகரின் ஆன்மத் திளைப்பை இணைத்து அனுபவம் காண்கிறேன்.

உடலைவிட்டு மனம் தனித்துப் பறப்பது போல நீங்கள் உணர்ந்ததும் அந்தக் காதலின் சாட்சியாக உங்களை உணர்ந்ததும் மிகையற்ற உணர்வுகளே. யுங், மாரடைப்பு ஏற்பட்டபோது மரணத்தின் வாசலை நெருங்கிவிட்டதாகவும், இன்னதெனச் சொல்லமுடியாத ஒரு மயக்க நிலையில் தாம் உடல் களைந்து மிதந்ததாகவும், விண்ணில் எங்கோ ஓரிடத்தில் கடவுளின் ஆண் பெண் தன்மைகளின் திருமணத்தைப் பார்த்ததாகவும், அந்த நொடியில் ‘தாமே அந்தத் திருமணம்’ எனக் கண்டதாகவும் சொல்லியிருக்கிறார். குறுகிய பொழுதில் தோன்றி மறைந்து வாழ்நாள் முழுவதையும் வயப்படுத்திக் கொள்ளும் ஆன்ம அனுபவம்! நீங்கள் காதலின் சாட்சியாக நின்றதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.

அப்புறம், எனக்கென்னவோ அந்தக் காட்சியில், மல்லாந்து மூடிய அந்த அகல் விழிகளுக்குள் இசையும் கவிதையும் பரந்து வினைபுரிவது போலவே இருக்கிறது. காட்சிக்குள் காட்சி! அதனால் காட்சியுடன் பாட்டைக் கேட்பதே என் விருப்பம்.

இசையின் தொடர்ச்சியில் புறச்செவிப் புலன் பின்வாங்கி, இருந்து இல்லாதாகிவிட, ஒரு கணத்தில் ஒலியவிந்த சாந்தத்தில் நாம் நின்று நிறைகிறோம். அந்த உச்சத்தை ’ஏக மவுனம் இயன்றது காண்’ என்றார் பாரதி. இசையின் வாசனை காதல் என்பதாக உணர்ந்திருக்கிறீர்கள். கனல் மணப்பதும் கானம் மணப்பதும் உணர்வு நுட்பம் உடையவர்களுக்கே வாய்க்கும்.

கண்ணீரின் இனிமை’ என்ற உங்கள் தலைப்பு வழக்கம்போல் ஒன்றின் உள்ளுண்மையைத் தொடுவதற்கு அதன் எதிர்மறை தேவைப்படுகிறது. ‘Yaad Piya Ki Aaye’ படே குலாம் அலிகான் இளமையிலேயே தம் மனைவி மறைந்த துக்கத்தை அளக்க முயன்றிருக்கிறார். மகா நியதியின் முன் வெறும் கையராக, அவர் கையறு நி்லையில் நிற்பதை, அதன் கரங்களில் தலைவைத்து மன்றாடுவதைப் பாட்டில் கண்டிருக்கிறீர்கள்.

பம்பரம் போல் நின்ற புள்ளியிலேயே நின்று தொலைவாழங்களுக்குத் தன்னை விசிறிக் கொடுக்கிறது இந்துஸ்தானி இசை என்பது என் அனுபவம். இந்தப் பாட்டு ஒரு சான்று. ‘இசையே ஒருவகைத் துயரம் தான்’ என்பது உங்கள் பெருமூச்சு. இந்த நுட்பங்களும், நிறைவின்றி நீளும் அனுபவங்களும் உங்களுக்கு எப்போதும் வாய்க்குமாக !

அபி

***

’பனி உருகுவதில்லை’ நூல் வெளியீட்டு விழா பற்றி குட்டி நிவேதிதாவின் கடிதம்

அன்புள்ள அருண்மொழி ஆண்டிக்கு,

என் பெயர் நிவேதிதா. ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன் .போன ஞாயிற்றுகிழமை ‘பனி உருகுவதில்லை’ நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தேன். புத்தகமும் வாங்கினேன். பார்க்கிற்குள் நுழையும் போது எனக்கு மிகவும் பிடித்தது. அப்பாவிடம், “அப்பா பார்க்கை சுத்தி பார்க்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது” என்று சொல்ல அப்பா, “சரி போகலாம்” என்று சொன்னார். சுத்திப் பார்த்தோம். சூப்பராக இருந்தது. பிறகு கொஞ்சம் நேரம் கழித்து நீங்களும் ஜெயமோகன் அங்கிளும் வந்தீர்கள். எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை! அங்கிளிடமும் உங்களிடமும் பேச வேண்டும் என ஆசையாக இருந்தது. ஆனால் கூச்சம் அதை தடுத்து நிறுத்தியது. எல்லோரும் ஜெயமோகன் அங்கிளிடம் மட்டும் நிறைய பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். உங்களிடம் சில பேர் தான் பேசினார்கள். இது உங்களுக்கு கஷ்டமா இருந்திருக்காதா? என்று எனக்கு யோசனையாகவே இருந்தது. மேடையில் கோபாலகிருஷ்ணன், சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர், காயத்ரி ஆகியோர் பேசியதில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் சிலதை கவனிக்கவும் இல்லை. இதை நினைத்தால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது.

வீட்டிலிருந்து புறப்படும் போது அப்பாவிடம் பார்க்கில் “Snacks” கொடுப்பார்களா என்று கேட்டுக் கொண்டே என்னை என் மனதிலேயே ‘தீனிபண்டாரம்’ என்று நினைத்துகொண்டேன். அப்பாவும் அம்மாவும் சிரித்து கொண்டே ’கொடுப்பார்கள் ’என்று சொன்னார்கள். என் மனதில் சமோசாவே ஓடி கொண்டிருந்தது! விழா ஆரம்பிக்க யாராவது காமெடி சொன்னால் ஒரு முறை என் அப்பாவின் முகத்தை பார்த்துவிட்டு அப்பா சிரித்தால் நானும் சிரிப்பேன். Snacks க்கா காத்திருந்தேன், கடைசியில் பார்த்தால் டீயும் மேரி பிஸ்கெட்டும் தான் இருந்தது. எனக்கு கோபம் ‘சுர்’ என ஏறியது. நீங்கள் எழுதிய நூலில் நான் உங்களிடம் கையெழுத்து வாங்கும் போது நீங்கள் ‘இதிலிருந்து என்ன என்ன கதை படித்திருக்கிறாய்’ என்று கேட்டீர்கள். நான் முழித்துக் கொண்டே ’தலைப்பை மறந்துவிட்டேன் ஆனால் கதை சூப்பராக இருந்தது’ என்று சொன்னேன். அந்த தலைப்புகளின் பெயர்கள் ’சின்னஞ்சிறு மலர்’ மற்றும் ‘கண்ணீரும், கனவும்’.

பதிலுக்காக காத்திருக்கும்.

அன்புடைய மாணவி,

வீ.நிவேதிதா.

அன்புள்ள செல்லக்குட்டி நிவேதிதாவுக்கு,

உன் கடிதம் எனக்கு மிகுந்த சந்தோஷம் தந்தது. நேற்று வேலை மிகுதியால் பதில் போட முடியவில்லை.

நீ அங்கு வந்து பார்த்த நிகழ்வுகளையும், உன் மன உணர்வுகளையும் அழகாக எழுதி வெளிப்படுத்தி இருக்கிறாய்.

உனக்கு அந்த பூங்காவினைக் கொண்டிருக்கும் முகப்பு சந்தோஷம் தந்ததை , நீ சுற்றிப் பார்த்ததை எழுதியது எனக்கு நிறைவாக இருந்தது. அப்புறம் வெளியில் நின்றபோதே என்னிடம் வந்து பேசியிருக்கலாம் தானே? ஏன் தயங்கினாய்? கூச்சப்பட்டாய்? 

மற்றவர்களிடம் பழக வேண்டும், பேச உனக்கு ஆசை என்றால் தயங்க வேண்டாம். நம்மைப் போல அவர்களும் மனிதர்கள். புரிந்து கொள்வார்கள். நம் ஆளுமையின் ஒரு பகுதியாக துணிவும், தன்னம்பிக்கையும் வேண்டும்.

ஜெயன் அங்கிளிடம் நிறைய பேர் பேசினார்கள், உங்களிடம் கொஞ்சம் பேர் பேசினார்கள் . உங்களுக்கு வருத்தமாக இல்லையா என்று கேட்டாய். எதற்கு வருத்தப் பட வேண்டும்? அவர் 200 புத்தகங்கள் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். நண்பர்கள், வாசகர்கள் அதிகம் அவருக்கு. நிறைய மீட்டிங்குகளில் பேசியிருக்கிறார்.

நான் அப்படியல்ல. முதல் புத்தகமே இப்போதுதான் எழுதியிருக்கிறேன். நான் வருத்தப்பட என்ன இருக்கிறது?

அப்புறம் உனக்கு பலரின் மேடைப் பேச்சு புரியவில்லை என்றாய். அது இயல்பான விஷயம் தான். நீ நிறைய புத்தகம் படித்து வளர்ந்து பெரியவளானால் அவர்கள் பேச்சு புரியும்.

உண்மையில் நானும் தீனிப் பண்டாரம் தான். இப்போது கூட. இதற்கும் வெட்கப் படத் தேவையில்லை. எங்கள் வீட்டில் அம்மா கொடுப்பதை த் தவிர நிறைய தின்பண்டங்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து சாப்பிடுவேன். நுரை, பாதுஷாவும் சந்திரகலாவும் கட்டுரையில் அது வரும்.

நான் நண்பர்களிடம் சமோசாவும் டீயும் வைக்க யோசனை சொன்னேன். ஆனால் கையில் எண்ணெய் பிசுபிசுப்பு வரும். சிலர் விரும்ப மாட்டார்கள் என்று தான் பிறகு பிஸ்கட் வைத்தோம்.

நீ இரண்டு கட்டுரைகள் படித்ததில் எனக்கு சந்தோஷம். யசோதை, வானத்தில் நட்சத்திரங்கள், மாயச்சாளரம், இரண்டு அன்னப்பறவைகள், ஊர் நடுவே ஓர் அரச மரம் போன்ற எளிதான கட்டுரைகளை நீ படிக்கலாம்.

உனக்கு நன்றாக எழுத வருகிறது. நீ எங்கு சென்றாலும், புதிய அனுபவம் கிடைத்தாலும் அதை உனக்காக நீயே டைரிபோல் பெரிய நோட்புக்கில் எழுதி வைத்துக் கொள். அது ஒரு நினைவு குறிப்பாக நமக்கு பிறகு வாசிக்கும்போது இன்பத்தை தரும். உன் மொழி தேர்ச்சி பெறும். பிற்காலத்தில் நீயும் ஒரு எழுத்தாளர் ஆகலாம்.

மிகுந்த அன்புடன்,

உன் அருணா ஆண்ட்டி.

***

3 thoughts on “இரு கடிதங்கள்

  1. அன்பு அருணா அவர்களுக்கு,
    கவிஞர் அபி கடிதம் நான் நினைத்த கருத்துகள் அதை
    அழகாக எழுதி விட்டார்.நான்
    கொஞ்சம் மக்கு.எழுத சரியாக
    வராது.
    குட்டிப் பெண் நிவேதிதா, குட்டி
    அருணா தன்னை தீனிப்பண்டாரம்
    என்று சொல்வது போல கருத்தை
    சொன்னது அருமை.
    அருணா அவர்கள் மேலும் பல
    குட்டி வாசக செல்வங்களை பெற
    வாழ்த்துக்கள்!
    அன்பு ராணி

    Like

  2. அருணாமா, கவிஞர் அபி எழுதியது மகிழ்ச்சியாக இருக்கிறது. தனது சொந்த அனுபவம், மேலும் இசை கவிதையை தேடும் இடம். அது கிளர்த்தும் உணர்ச்சிகரத்தை வேறொரு சாளரம் வழி பார்க்க உதவியது.

    இரண்டாவதான, அந்த குட்டி பெண் நிவேதிதாவின் கடிதம் மிக அழகாக இருந்தது. அடுத்தமுறை பார்த்தால் சந்திக்க வேண்டும். இந்த வயதில் தன் எண்ணங்களை கோர்வையாக எழுதுவது ஒரு வரம் தான்.

    அப்புறம் உங்கள் பதிலையும் ரசித்தேன். அவள் வாழ்க்கையின் இனிய அனுபவங்களில் ஒன்றாக திகழும்.

    Like

Leave a comment