சில கீர்த்தனைகள் – சில குரல்கள் – சில பித்துக்கள்

நன்னு பாலிம்ப

தியாகையரின் கீர்த்தனைகளில் மிகப் புகழ்பெற்றதும் , கவித்துவம் நிரம்பியதும் உருக்கமானதுமான கீர்த்தனைகளில் ஒன்று நன்னு பாலிம்ப. மோகன ராகத்தில் அமைந்தது. ராம பிரான் தன்னைக் காக்க நடந்தே வந்ததாகக் கருதி ஆற்றாமையோடும், நெகிழ்வோடும் பாடும் வண்ணம் அமைந்திருக்கிறது.

என்மேல் பிரியமுள்ளவனே, என்மேல் அருள்பாலிக்க அவ்வளவு தூரம் நடந்து வந்தாயா?

என் வாழ்வின் அரும்பொருளே, என் ஜீவிதத்தின் அர்த்தமே, உன் அருகமர்ந்து உன் கனிந்த அழகிய வதனத்தை பார்ப்பதிலும், சேவிப்பதிலுமல்லவா அடங்கி இருக்கிறது.

என் நீண்ட, தாகித்த காத்திருப்புக்கு விடைபோல நீ  வந்தாயா?

தாமரை போன்ற அழகிய கண்களை உடையவனே, நீ எத்தனை வசீகர ரூபத்தில் எனக்கு காட்சி தருகிறாய்.!

நீலமணி போன்ற ரத்தினக்கல் சூழ்ந்த இடம் அதனால் ஒளியூட்டப்படுவதுபோல, முத்து மாலைகளால் அணி செய்யப்பட்ட உன் மார்பு ஒளியுடன் திகழ்கிறது.

பிரகாசிக்கும் கோதண்ட வில்லை ஒரு கரத்திலும், மறு கரத்தில் சீதா தேவியையும் தழுவி , நீ அங்கிருந்து நடந்தே வந்தாயா, என்னைக் காண? ராமா.

செம்பை வைத்தியநாத பாகவதர் பாடிய ”நன்னு பாலிம்ப” என்றும் என் பிரியத்திற்குரியது.

***

பக்கலா நிலாபாடி

இதுவும் தியாகையரின் கிருதிகளில் முக்கியமானது. ராமனின் இருபுறமும் நிற்கும் சீதா தேவியிடமும், லக்‌ஷ்மணனிடமும் முறையிடுவதுபோல் இக்கிருதியை அமைக்கிறார். கரஹரப்பிரியா ராகத்தில் அமைந்த கீர்த்தனை இது.

என் நாதனாகிய ராமனின் இருபுறமும் நின்றபடியே அவனை குறைவில்லா பரவசத்தில் ஆழ்த்த உங்களால் எப்படி இயல்கிறது?

ஓ, சீதையாகிய என் அன்னையே, உன் முகம் நிலவின் தேஜஸைப் பெற்று ஒளிர்வதுபோல் பிரகாசிக்கிறது. முத்துக்களை அழகிய வரிசையில் அடுக்கியதுபோல் உன் புன்னகை சுடர்கிறது.

லக்‌ஷ்மணா, ராமனின் தீவிரமான பக்தனாக, சேவகனாக இருப்பவனே.

நீங்கள் அவன்முன் சாஷ்டாங்கமாகப் பணிந்து, அவன் நாமத்தையே ஜெபித்து, அவனை தியானித்து அதில் நீங்கள் உங்களை இழந்ததுண்டா?

எனக்கு அந்த ரகசியத்தை சொல்லித் தாருங்கள். நான் என்னை அர்ப்பணித்து கடைத் தேற்றிக் கொள்கிறேன்.

எனக்கு பிரியமானது எம்.எஸ். சுப்புலெக்‌ஷ்மி அவர்கள் 1984 ல் தியாகராஜர் ஆராதனையில் பாடியது. தொடக்க ஆலாபனையே பாதி நேரம் எடுத்துக் கொள்கிறார். அழகிய மயக்கும் ஆலாபனை.  வயலின் கண்டதேவி அழகிரிசாமி, மிருதங்கம் குருவாயூர் துரை, கடம் விக்கு வினாயக் ராம். வாத்தியங்களும் குரலும் சேர்ந்து தரும் ஒரு மயக்கும் அனுபவம் இந்த கச்சேரி.

***

சுகி எவ்வரோ

இதுவும் தியாகையரின் புகழ்பெற்ற கிருதிகளில் ஒன்று.  கானடா ராகம். என் மனதிற்கு நெருக்கமான ராகங்களில் ஒன்று. ஒரே சமயம் மனதிற்கு புத்துணர்ச்சியையும், கிறக்கத்தையும் தரவல்லது. இக்கீர்த்தனையின் சமர்ப்பணத் தன்மைக்கு இந்த ராகம் எவ்வளவு பொருந்திப் போகிறது.

ராம நாமத்தை அனுதினமும் உச்சரித்து சுகிப்பவர் எவர்?

 ராம நாமத்தை ஜெபிப்பதால் மலர்ந்த முகத்தை உடையவர் எவர்?

ராம நாமத்தை ஜெபிப்பதால் வீடுபேறு அடைந்தவரின் சாரமென்ன?

தியாகராஜனாகிய நான் உன் நாமத்தை புகழஞ்சலி ஆகச் செய்கிறேன்.

ஆனால் மெய்ஞானம் என்பது என்ன? இப்புடவி மக்கள் அனைவருக்கும் பொதுவானது, அனைவரையும் வழிநடத்துவது, அனைத்துக் கடவுள்களுக்கும் வேறுபாடில்லாமல் செய்வது, அழிவற்றது.

முடிவின்றி பாடி துதித்துக் கொண்டிருக்கும் அந்நாமத்தை சுகிப்பவன் யார்? ராமா.

இக்கீர்த்தனையை ஆல் இண்டியா ரேடியோ அரங்கிசையில் கேட்பது எனக்கு பழைய, இனிய, இளமை நினைவுகளை கிளர்ந்தெழச் செய்தது. அறிவிப்பாளர் குரலின் அறிவிப்பை மீண்டும் மீண்டும் கேட்டவாறிருந்தேன். எத்தனை இனிமை அவ்வறிவிப்புக்கு காத்திருக்கும் நிமிடம். அம்ருதா முரளி அருமையாகப் பாடியுள்ளார். பத்மா சங்கர் வயலின், என்.எஸ். கல்யாணராமன் மிருதங்கம் இரண்டும் அனுபவத்தை நமக்கு முழுமையாக்குகின்றன.

***

புரோச்சேவருரா

இக்கீர்த்தனை மைசூர் வாசுதேவாச்சார் இயற்றியது. காமாஸ் ராகத்தில் அமைந்தது. கர்நாடகத்தில் பிறந்த வாசுதேவாச்சார் இருநூறுக்கும் மேற்பட்ட கிருதிகளை எழுதியுள்ளார். அவரின் புகழ்பெற்ற கீர்த்தனைகளில் இதுவும் ஒன்று. இவர் கலாஷேத்ராவில் பதினைந்து வருடம் பணிபுரிந்திருக்கிறார். தியாகையரின்  நேரடி சிஷ்யரின் மாணவர் இவர். ருக்மிணி தேவியின் ஆறு பகுதிகளாக நிகழ்த்தப்பட்ட புகழ்பெற்ற ராமாயண நாட்டிய நாடகங்களுக்கு இசை அமைத்தவர்.

அழகிய ரகுவரனே, உன்னையன்றி என்னைக் காக்க வல்லவர் யார்?

கருணையின் ஆதி ஊற்றே, உன் தாமரைப் பாதங்களை  விட்டு நான் விலகுவேனா? மகத்தான இருப்பான பிரம்மனே உன்னை தொழுதபிறகும் நீ ஏன் விலகி தனித்து இருக்கிறாய்?

என்னிடமிருந்து நீ விலக நினைத்தால் நான் யாருமற்றவனாவேன்.

 உன்னைப் போற்றிப் புகழ்ந்து நான் பாடும் பாடல்களில் நான் எதையுமே உணர்த்த முடியாதவனாகிறேன்.

என் மொழி போதாமலாகிறது. என் பதற்றங்களை தணித்து என்னைக் காத்து அருள்வாயாக.

சீதையின் நாயகனே, என் மீது கருணை கொண்டிருக்கிறாயா?

அனுமனால் பாதசேவை செய்யப்பட்டவனே, என் புலம்பலைக் கேட்கிறாயா?

கஜேந்திரனைக் காப்பாற்றியதால் பெருமை கொண்டவனே, என் பாவங்களைக் கழுவி, என் கைபற்றி காப்பாற்ற உன்னைத் தவிர யாரால் முடியும்?

எம்.எல். வசந்தகுமாரி அவர்கள் பாடிய புரோச்சேவருரா என் மனதுக்கு நெருக்கமானது.

***

6 thoughts on “சில கீர்த்தனைகள் – சில குரல்கள் – சில பித்துக்கள்

  1. அன்பின் அருணா,

    அனைத்மே சிறப்பான இனிமையான கீர்த்தனைகள்.கேட்க கேட்க பித்தளிப்பவை. எனக்கு பிரியமானது இவற்றில் புரொச்சேவருராவும் நன்னு பாலிம்ப வும்தான்.
    //மொழி போதாமலாகிறது //
    எத்தனை சரி இல்லியா? இசையனுபவத்தை அது அளிக்கும் பித்தை எழுத்தில் முழுமையாக கொண்டு வரவேமுடியாதுதான். இன்றைய நாளை இனிமையான கீர்த்தனைகளுடன் துவங்க வைத்துவிட்டீர்கள்.
    அன்பு

    Liked by 1 person

    1. அன்ப அருணா வணக்கம்.
      உங்கள் இசைத் திறனறியும்
      ரசனைக்கு ,பாராட்டு. .
      Happy Christmas to you and God’s blessing be with you and your family.
      By
      Anburani

      Like

  2. விகடனில் உங்கள் பேட்டி இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது. சிறப்பாக இருந்தது. எதன் பொருட்டு இவ்வுலகம் படைக்கப்பட்டது என்று பல நாட்கள் யோசித்தது உண்டு. குழம்பி கிடந்தது உண்டு. உங்களின் பேட்டியை படித்ததும் எனக்குள் ஒரு எண்ணம் “படைப்பைப் போல் நிறைவளிக்கும் ஒரு செயல்பாடு இவ்வுலகில் இல்லை!” என்ற உங்கள் கருத்து அருமை. உண்மைதான். அதைத்தான் இந்த உலகத்தை, மனிதர்களை, அனைத்தையுமே படைத்த இயற்கையின் செயலாக இருக்கலாம் அல்லவா! என்று தோன்றியது. மனிதர்கள் வேண்டுமானால் கடவுள் படைத்தார் என்று நினைக்கலாம். கடவுள்கள் கூட மனிதர்களின் படைப்புகள் தானே தவிர இயற்கையின் படைப்பு அல்ல, எது எப்படியோ “படைப்பைப் போல் நிறைவளிக்கும் ஒரு செயல்பாடு இவ்வுலகில் இல்லை” என்பது எத்தனை பெரிய உண்மை! 

    Like

  3. தியாகராஜரின் கீர்த்தனைகளில் உள்ள ஏக்கமும் இசையின் ஏக்கமும் பிரித்தறியமுடியாத வகையில் எனக்கு எப்போதும் பொருள்படும். நன்னு பாலிம்ப பாட்டின் மொழியாக்கத்தை இப்போது வாசிக்கும்போது அது ஒரு காதல் கவிதையாக பொருள்பட்டது. அதுவும் மிக பொருத்தமாக இருக்கிறது தானே. நடந்தேவா இத்தன தூரம் என்னப் பார்க்க வந்த? என்பது உச்சபட்சமான வாஞ்சையின் கேள்வி தானே.

    நீலமணி போன்ற ரத்தினக்கல் சூழ்ந்த இடம் அதனால் ஒளியூட்டப்படுவதுபோல, முத்து மாலைகளால் அணி செய்யப்பட்ட உன் மார்பு ஒளியுடன் திகழ்கிறது – இந்த வரியை இப்போதுதான் கவனிக்கிறேன்.
    ராமன் அணிந்திருக்கும் முத்துக்களின் ஒளியில் அவன் கருமணி நிறம் பிரதிபலித்து அவன் மார்பு அதனால் ஒளியூட்டப்படுகிறது. ஒரு பெரிய கருமுத்து போன்ற ஒளிர்வு கண்முன்னால் தோன்றுகிறது.
    மிக அருகே அமரும் ஒருவரை பிரியத்துடன் பார்க்கையில் தான் பார்வை அப்படி ஆகும் இல்லையா? அற்புதமான உவமை.

    எம்.எஸ்.அவர்களின் பக்கால நிலபடி எனக்கும் பிடித்த வெர்ஷன். அதேபோல் சக்கனி ராஜ மார்கமு பாட்டும் கரகரபிரியாவில் எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. செம்பை பாடியது குறிப்பாக.

    Liked by 2 people

  4. இனிய அருண்மொழி அம்மாவுக்கு

    முதல் இசை அன்பின் இருதய ஒசை அல்லவா ? எத்தனை வெறுமையிலும் அந்த பூந்தளிர் கைகள் தீண்டினால் போதும் மீண்டு விடுகிறேன். நீங்கள் அனுப்பிய பாடல்களில் மூன்றை இப்பொழுது தான் கேட்டேன். இந்த புத்துணர்வின் மகிழ்வை அன்பை நன்றி கூறலை இந்த கடிதம் முழுக்க தாங்காது.

    நேற்று நீங்கள் அனுப்பிய நேரம் தீயின் எடை வாசித்து கொண்டிருந்தேன். இன்று முடித்தேன். இந்த பாடல்கள் இல்லையேல் இவ்விரவு வெறுமையில் உழன்றிருப்பேன். இவை கொடுக்கும் காதலின் பித்து உள்ளத்தை நிகர் கொள்ள வைத்தது. அன்பு ஒரு மாயக்காரம். அதை ஊற்றும் இசை இன்னொரு தெய்வீகம். பெருநாவல் தரும் வெறுமையின் போது அணைத்து படுத்துக்கொள்ள அன்னையின் மடி என நிற்கும் இசை. இன்று எனக்கு பெருவரம் தான் இது. காட்டின் இனிமை காட்டி என்னை அழைத்து சென்றமைக்கு அன்பும் நன்றியும். இந்த பாடல்களில் பக்கலா நிலாபாடி மிக பிடித்திருந்தது. இன்னும் சில விஷயங்கள் கூற வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவை இப்போது இங்கு பொருத்தமில்லாதவையாகவே படுகின்றன. பின்னர் எழுதுகிறேன்.

    அன்புடன்
    சக்திவேல்

    Like

  5. அன்புச் சகோதரி,
    அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வரியிலும் எங்களுக்கும் உங்கள் அனுபவம் கிடைக்கிறது. கர்னாடக சங்கீதத்தின் அடிப்படை கூடத் தெரியாது என்றபோதும் சிறு வயதிலிருந்தே அதைக் கேட்டு வந்திருக்கிறேன்.

    பக்கல நிலபாடி… என்னை நினைவுச் சுழலில் சுழற்றியடித்துவிட்டது.

    இந்தக் கச்சேரியை, என் அம்மாவோடு நேரில் கேட்ட பாக்கியம் எனக்கு உண்டு. எம்.எஸ் அம்மாவின் கச்சேரியை மூன்று முறை நேரில் கேட்டிருக்கிறேன். இது அவற்றில் ஒன்று. அப்போது இந்தப் பாட்டின் அருமையோ நுணுக்கங்களோ ஏதும் தெரியாது. எம்.எஸ் அம்மா பாடுகிறார்… அதுபோதும் எனக்கும் என் அம்மாவுக்கும்.

    இதற்குச் சில ஆண்டுகள் கழித்து, தியாகராஜர் மண்டபத்தைப் புதுப்பித்து அதற்குக் குடமுழுக்கு போன்ற ஒரு வைபவத்தை நடத்தினார்கள். அப்போதும் எம்.எஸ் அம்மா திருவையாறு வந்து பாடினார். ஆனால், அந்தக் கச்சேரியில் இந்த அளவுக்குக் கூட்டமில்லை. சொல்லப் போனால், கூட்டமே இல்லை. வழக்கமான இடத்தில் மேடை போடவில்லை அப்போது. காவேரிக் கரையோரமாக உள்ள திண்டை ஒட்டி மேடை போட்டிருந்தார்கள். அந்தக் கச்சேரியில் விக்கு விநாயக்ராம் வெளுத்து வாங்கியதாக நினைவு.

    இந்தக் கட்டுரையின்மூலம் என் காலையை ஒளிமிக்கதாக்கி விட்டீர்கள். நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் நான் உணர்வதை எழுதிவிட முடியுமா தெரியவில்லை.

    Like

Leave a comment