ஒரு கீர்த்தனை – பல ராகங்கள்

நின்னையே ரதியென்று

பாரதியார் கவிதைகளில் எனக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று நின்னையே ரதியென்று. பாரதியாரின் கண்ணன் பாடல்களும், அவனைக் கண்ணம்மாவாக உருவகித்து அவர் எழுதிய பாடல்களும் காலத்தால் அழியாதவை. கர்நாடக இசையில் முக்கிய இடம் வகிப்பவை பாரதியின் பாடல்கள்.

நம் பக்தி மரபில் இக்கவிதைகளுக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. இறையை காதலியாக, அரசனாக, தோழனாக, சேவகனாக உருவகித்துப் பாடுவது ஆழ்வார்கள் காலத்திலிருந்து தொடரும் ஒரு மரபு. வடக்கில் கபீரும், ஜெயதேவரும், மீராவும், சிஷ்டியும் பாடிய மரபின் ஒரு தொடர் கண்ணி. இவை எல்லாவற்றிலுமே காதலும், பக்தியும், பித்தும் ஒன்று கலக்கின்றன.

இக்கவிதைகளை வெறும் காதல் கவிதைகளாக மட்டும் கூட ஒருவர் படிக்க இயலும். பக்திக் கவிதைகளாகவும் படிக்கலாம். அதற்கு இதில் காணக் கிடைக்கும் ஒரு அம்சம்  சரணாகதித் தன்மை. தன்னை மறந்த ஒரு பாவம்.

ஆண்டாள் பாசுரங்களை முழுக் காதல் கவிதைகளாகவும் நாம் படிக்கலாம். அதுபோலவே பாரதியார் கவிதைகளையும். கண்ணனை உருவகித்தது போலவே அவனையே கண்ணம்மாவாக்கி காதலியாக, குழந்தையாக உருவகித்து பாடியுள்ளார். அதில் மிகப் புகழ்பெற்றவை நின்னையே ரதியென்று , சுட்டும் விழிச்சுடர்தான், பாயுமொளி நீ எனக்கு, தீர்த்தக் கரையினிலே, சின்னஞ்சிறு கிளியே போன்ற சில பாடல்கள்.

‘கண்ணம்மா என் காதலி’யில் ஐந்தாறு பாடல்கள் உள்ளன. முதல் பாடல் சுட்டும் விழிச்சுடர்தான் – ‘காட்சிவியப்பு ‘என்ற தலைப்பில் வருகிறது. இரண்டாவது ‘பின்வந்து நின்று கண் மறைத்தல்’- மாலைப்பொழுதில் என்ற பாட்டு. மூன்றாவது ‘முகத்திரை களைதல்’- தில்லி துருக்கர் செய்த வழக்கமடி, பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல், நான்காவது ‘நாணிக் கண் புதைத்தல்’, ஐந்தாவது பாட்டு ‘குறிப்பிடம் தவறியது’- தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே. ஆறாவது’ யோகம்’ என்ற தலைப்பில் பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நான் உனக்கு.

இவற்றில் ‘நின்னையே ரதியென்று’ வேறு வேறு ராகங்களில் பாடப் பட்டிருக்கின்றது. அதில் பொதுவானது பாகேஸ்ரீ ராகம். இதில் சஞ்சய் பாடியிருப்பதைத் தருகிறேன். சஞ்சய் சுப்ரமணியம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு மரபிசைப் பாடகர். அவர் இப்போது அதிகம் தமிழ் கீர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் தந்து பாடுகிறார். பாசுரங்களும், பதிகங்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் எல்லாம் பாடி இந்த நோயச்ச காலத்தில் இணையத்தில் பதிவிட்டார்.

’எழுந்தாளே பூங்கோதை, எழுந்தாளே சீதை’ என்ற பாடல் முதன்முதலாக நான் அவர் பாடித்தான் கேட்டேன். இசைக்கு மொழி ஒரு தடையல்ல என்றாலும் தாய் மொழியில் கேட்கும் அனுபவம் கூடுதலாக சுவைக்கின்றது.

இந்த சிறு பாடலிலும் தொகையறா பாடுவதுபோல் தீர்த்த கரையினிலே பாடி நின்னையே ரதியென்றை தொடங்குகிறார். ’மாரன் அம்புகள் என்மீது வாரி வாரி வீச’ இந்த இடத்தில் தன் கற்பனையைக் நிகழ்த்துகிறார். இப்பாடல் ஒரு அழகிய இசை அனுபவம்.

ஆனால் என் மனதுக்கு இன்னும் நெருக்கமானது பிரின்ஸ் ராமவர்மா சிந்துபைரவியில் பாடிய நின்னையே ரதியென்று. ப்ரின்ஸ் ராமவர்மா அஸ்வதித் திருநாள் ராமவர்மா என்று அறியப் படுகிறார். கேரள திருவிதாங்கூர் சமஸ்தான அரச பரம்பரையில் பிறந்தவர். கர்நாடக இசை வாய்ப் பாட்டு கலைஞர். வீணைக் கலைஞரும் கூட . இவர் பாலமுரளிக் கிருஷ்ணாவின் சிஷ்யர்.

இவரது இசை வகுப்புகள் இன்றைய இசை பயிலும் தலைமுறைக்கு ஒரு வரப்பிரசாதம். அதிகளவில் இணைய வகுப்புகளை நடத்துகிறார். வெளிநாடுகளில் பல கச்சேரிகள் செய்துள்ளார். இவரது பரம்பரையில் முன்னோடியான சுவாதித் திருநாள் ராம வர்மா அவர்களின் கீர்த்தனைகள் கர்னாடக சங்கீதத்தில் விரும்பிப் பாடப் படுகின்றன. வருடம் தோறும் சுவாதித் திருநாள் சங்கீத உற்சவம் திருவனந்தபுரத்தில் இவரால் நடத்தப் படுகிறது.

இவர் தன் குடும்ப நண்பர்களும் இதர நண்பர்களும் கூடியிருக்கும் ஒரு சிறிய கூடுகையில் நின்னையே ரதியென்றை சிந்துபைரவியில் பாடுகிறார். அது லயித்து பாடப்படுவதால் அதன் உணர்ச்சி நம்மை ஆட்கொள்கிறது. அவர் புன்னகைக்கு கேரளத்தில் பெண் ரசிகைகள் ஏராளம். இப்பாடல் முழுவதும், முடிவிலும் அப்புன்னகையுடனே பாடுகிறார்.

சிந்து பைரவி ராகத்தில் சௌம்யா பாடிய நின்னையே ரதியென்றும் எனக்கு மிக பிடித்தமானது. அவரது அழகிய குரல் அதற்கு நாம் உத்தேசிக்காத ஒரு நாட்டுப்புற பாடலின் ஜீவனையும் தருகிறது எனத் தோன்றும்.

தமிழ்த் திரையிசையில் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள், பல பாடல்களை  பல ராகங்களையொட்டி இசையமைத்திருப்பார்.  எம்.எஸ். வி. அவர்களிடம் நான் வியக்கும் விஷயம் ராகங்களை பயன்படுத்தும்போது அந்த பாடல்களின் உணர்வு நிலையோடு பொருந்தும், அதை செழுமைப்படுத்தும் வகையிலேயே அதை இட்டிருப்பார். உ-ம் கர்ணன் படப்பாடல்களை குறித்து மட்டுமே ஒரு கட்டுரை எழுதலாம். அந்த அளவுக்கு உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். எத்தனை ராகம், எத்தனை பாவம் அப்படப் பாடல்களில். அவரது பல பாடல்களுக்கு நான் அடிமை. குறிப்பாக தங்க ரதம் வந்தது வீதியிலே, கண்ணுக்கு குலமேது, மாலைப் பொழுதின் மயக்கத்திலே… சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த நின்னையே ரதியென்றை அவர் கல்யாண வசந்தம் என்ற ராகத்தில் இட்டிருக்கிறார். கண்ணே, கனியமுதே படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடியது. இவ்வரியின் உணர்வுகளுக்கு இந்த ராகம் அழகாகப் பொருந்துகிறது.

Q..F.Rஎன்ற நிகழ்ச்சியை நீங்கள் அறிந்திருக்கலாம். சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் கடந்த மார்ச் 2020 கோவிட் ஊரடங்கு தொடங்கப்பட்ட காலம் முதல் அந்த இணையவழி இசை நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். நான் அதை தொடர்ச்சியாகப் பார்க்கிறேன். இப்போது அது நானூறாவது எபிசோடை நெருங்க உள்ளது. தமிழ் திரையிசையில் அது ஒரு பெரிய சாதனை என்றே கருதுகிறேன். 1945 முதல் 1991 வரையிலான பல காலகட்டத்து, பல இசையமைப்பாளரின் சாதனைகளை, அரிதான பாடல்களை முறையாக அறிமுகம் செய்து பல பாடகர்களை ஒருங்கிணைத்து அவர் பாட வைக்கிறார். பாடகர்கள் அனைவருமே தொழில் முறை நேர்த்தியுடனும், சுருதி சுத்தத்துடன், அழகிய இனிய குரலில் பாடுகிறார்கள்.

அவர்களின் பின்னணி இசைக் குழுவினரும் கைதேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்கள். பாடகர்கள் பலரும் உலகின் பல நாடுகளில் இருப்பவர்கள். அவர்களை ஒருங்கிணைக்கும் கண்ணி சுபஸ்ரீ அவர்கள். இப்படி ஒரு நிகழ்ச்சியை ரசிகர்களின் நன்கொடையுடன் மட்டுமே நடத்துகிறார். அதுவும் நூறு நிகழ்ச்சிகளுக்குப் பிறகே அவர் நன்கொடை பெற்றார். அதுவரை இலவசமாக நடத்தினார்.

சுபஸ்ரீ அவர்களின் ஒருங்கிணைப்பு திறன் நான் என்றென்றும் வியக்கும் ஒரு விஷயம். ஒரு நூறுகோடி டர்ன் ஓவர் பெறும் நிறுவனத்தைக் கூட அவரால் திறமையாக லாபகரமாக நடத்தமுடியும் என்று எண்ணிக்கொள்வேன். அவர் ரசனையும் அர்ப்பணிப்பும் அலாதியானது.

இதில் நின்னையே ரதியென்று பாடலை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பத்மனாபன் குமார் என்பவர் பாடியுள்ளார். அவர் Q.F.R. இன் நட்சத்திர அந்தஸ்து பெற்ற பாடகர். யேசுதாஸ், ஜெயச்சந்திரன், பி.பி. ஸ்ரீனிவாஸ் மூன்று குரல்களிலும் அனாயசமாகப் பாடுவார். நம் மரபிசை பயின்றவர் . இப்பாடலை சுருதிசுத்தத்தோடு, அந்த அழகிய ஆலாபனையின் லயம் குறையாமல், பாவத்தோடு பாடியுள்ளார். இதில் வெங்கட் அவர்களின் தாளமும், ஜதியும் நம்மை மிகவும் ஈர்ப்பவை.

நின்னையே ரதியென்று ஜோன்புரி ராகத்திலும் பாடப்பட்டுள்ளது. அதன் லிங்க் எனக்கு கிடைக்கவில்லை.

***

4 thoughts on “ஒரு கீர்த்தனை – பல ராகங்கள்

  1. அன்பின் அருணா
    மீண்டும் உங்கள் பிரியத்துக்குரிய. இசைக்கட்டுரை.மிகச்சிறப்பு. அற்புதமான பாடல் நின்னையே ரதியென்று. சரியாக அந்த சரணாகதி பாவத்தை சுட்டிக்காட்டியிருக்கொகிறீர்கள். சுபஸ்ரீயின் QFRநான் தொடர்ந்து கேட்கிறேன் கிறங்குகிறேன். நன்றி.மீண்டும் இசையுடன் வெள்ளிக்கிழமை காலையை துவங்க வைத்ததற்கு.!

    Like

  2. நேற்று தற்செயலாக வெண்ணிற இரவுகள் வாசித்து முடித்தேன். காதலின் கனவுலகம். இன்று பாரதியின் இப்பாடல் எனக்கு நாஸ்தென்காவை உயிர்த்தெழ வைத்தது. காதலென்று பக்தியென்று சரணாகதியென்று எத்தனை வண்ணங்களில் மிளிர்கிறது இப்பாடல். நான் Q.F.R இல் தொடங்கி சஞ்சய் சுப்ரமணியம் அவர்களுடையது வரை கேட்டேன். ஒவ்வொரு விதத்திலும் ஒரு உச்சம் இருக்கிறது. ஒவ்வொரு பாடலும் முடிந்து போகையில் அவ்வளவு தானா என மனம் ஏங்குகிறது. இப்பாடலை காதலென்றே கொண்டாட வேண்டும். எத்தனை பித்திருந்தால் இத்தனை தித்தித்திருக்கும் அவன் மனம். எளிய வரிகள் என தோன்றுபவை இசை சென்று தொட்டவுடன் இதயத்தை நெகிழ்த்தி விடுகின்றன. கனவுலகவாசியின் காதலை மீள ஒருமுறை மீட்டி கொண்டேன். இந்த பதிவிற்காக அன்பும் நன்றியும்

    Like

  3. தமிழிசையிலிருந்து தமிழ் இலக்கியத்தை நோக்கி வந்தவர்கள் என்று ஒரு பட்டியல் இருக்குமா என்று தெரியவில்லை. நான் ஒரு விதத்தில் அந்த வகை தான். ஒன்பதாம் வகுப்பில் ஒரு பாட்டுப்போட்டிக்கு சில பாரதி பாடல்களை குழுவாக சேர்ந்து கற்று பாடினோம். முதல் பரிசு. அதற்கு பாக்கெட் சைசில் ஒரு பாரதியார் பாடல் திறட்டு புத்தகத்தையே பரிசாகக் கொடுத்தார்கள். தெளிவு தான் 🙂 ஆனால் எனக்கு அது நற்பேராக முடிந்தது.

    அப்போது தான் தமிழ் எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்திருந்தேன். குமுதம் கலைமகள் மங்கையர் மலர் என்று நின்றுவிடாமல் என்னை அப்போது கரையேற்றியது பாரதி தான். அப்போது கேட்ட கர்னாடக சங்கீத கேஸட்டுகளில் பாடப்பட்ட பாரதி பாடல்களால் வசீகரிக்கப்பட்டு வரிவரியாக புத்தகத்தில் பின் தொடர ஆரம்பித்தேன். ஆசை முகம் மறந்து போச்சே, செந்தமிழ் நாடெனும் போதினிலே, தீராத விளையாட்டுப் பிள்ளை மாதிரி அடிக்கடி பாடப்படும் பாடல்கள். அந்த வரிசையில் தான் நின்னையே ரதியையும் தீர்த்தக் கரையினிலேவையும் கேட்டு, வாசித்தேன். பாடலை விட புத்தகத்தில் இன்னும் நான்கு ஐந்து பத்திகள் அதிகம் எப்போதும் இருக்கும். அதுவே ஆச்சரியம். பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. இருந்தாலும் அதை வாசித்து, சந்தம் பிரித்து, மெட்டுடன் பாடிப்பார்த்து, இப்படித்தான் முதன்முதலாக இலக்கியரீதியான தமிழை படிக்க ஆரம்பித்தேன். நல்ல தெளிவான உச்சரிப்புடன் கூடி பாடியவர்களை (பாம்பே ஜெயஶ்ரீ, டி.கே.பட்டம்மாள் உள்ளிட்டோர்) நான் கேட்க நேர்ந்ததும் அதற்கு ஓர் காரணம்.

    சில பாடல்களிலிருந்து அதிகம் தெரியாத கவிதை உலகுக்குள்ளும் செல்ல நேர்ந்தது. 2003 வாக்கில் ஒரு மார்கழி கச்சேரியில் பாம்பே ஜெயஶ்ரீ நான் அதுவரை கேட்டிராத அற்புதமான வரிகளை விருத்தம்போல் முகப்புப்பாடலாக பாடினார். அந்த வரிகளால் பித்துப்பிடித்து அது என்ன பாடல் என்று தேடிக்கொண்டே இருந்தேன். பாரதி வரிகள் தான். வசனக்கவிதை. ‘ஞாயிரே இருளை என்ன செய்து விட்டாய், ஓட்டினாயா கொன்றாயா விழுங்கிவிட்டாயா’ என்று தொடங்கும் வரிகள். அது என் விழிப்பை இன்னொரு திசைக்கு இட்டுச்சென்றது.

    நின்னையே ரதி பாடலை பிரின்ஸ் பாடியது எனக்கும் ரொம்ப பிடிக்கும். சஞ்சயின் ராகம் இன்னும் அசலாக அந்த உணர்வுக்கு நெருக்கமாக தோன்றுகிறது. ஆனால் பிரின்ஸின் குரலில் தோன்றும் பாவமும் ஆழமும் என்னை மேலும் கவர்கின்றன.

    அன்புடன்
    சுசித்ரா

    Like

  4. சஞ்சய் பாடிய பாடல்களில் நான் மிகவும் ரசித்து கேட்பவை

    துன்பம் நேர்கையில்………….பல்லாண்டு பல்லாண்டு………………………..போகீன்ந்திர சாயினம் (ஸமஸ்கிருதம்) .. வாய்ப்பு கிடைக்கும் போது கேளுங்கள்…… Third one will be really stunning…..ragam குந்தாள வராளி

    Like

Leave a comment