நெடுஞ்சாலையில் ஓர் இடம்

மார்ச் 21, 1977, காப்பிடல் செண்டர், லார்கோ, மேரி லாண்ட் , அமெரிக்கா. பித்துநிலையில் இருக்கும் இசைரசிகர்கள் முன்னிலையில்  ’ஈகிள்ஸ்’ பாண்ட் முதல் ஆல்பத்தின் ’ஹோட்டல் காலிஃபோர்னியா’ இசைக்கப் பட்டது. அக்காற்றில் இசையின் அதிர்வுகள், கிடாரின் மீட்டல்கள், பித்தாக்கும் ட்ரம்ஸ் இசையுடன் குரல் ஒலிக்க மக்கள் திரள் கட்டுண்டு வயப் பட்டது. ஃபெப்ரவரி, 1977 ல் வெளியிடப்பட்ட அந்த ஆல்பம் அந்த வருடத்திற்குள் ஒரு மில்லியன் கிராமஃபோன் ரெக்கார்டுகள் விற்கப்பட்டு  அதுவரையிலான இசை வரலாற்றில் சாதனை படைத்தது. கப்பல்களில் அவை ஏற்றப்பட்டு இதர நாடுகளுக்கும் சென்ற சாதனை வரலாற்றை பலர் அறிந்திருக்கலாம். அவர்களுக்கு இணையான புகழுடன் ’பீட்டில்ஸ்’ இசைக் குழுவினரும் அறியப்பட்டனர்.

இன்று ’ஹோட்டல் காலிஃபோர்னியா’ ஒரு துணைவரலாறு. பலர் அதை நிறைய தடவை கேட்டிருக்கலாம். நான் அப்பாடலை முதன்முதலில் கேட்டது 2009 ல். ஜெயனுக்கு ஒரு ஐபாட்[I pod] அமெரிக்காவிலிருந்து பரிசாகக் கிடைத்தது. அதில் அதிகமும் சினிமா பாடல்கள், ஒன்றிரண்டு ஆங்கில ஆல்பம் பாடல்களும் இருந்தன. அதில் ஓரிரவில் இப்பாடலை நான், அஜி, சைதன்யா மூவரும் கேட்டோம். முதலில் பாடலின் துடியான தாளமும், கிடாரின் இன்னிசையும் ,பாடலின் டுயூனும், பாடுபவரின் குரலும் மிகவும் ஈர்த்தன.

இதில் மிகவும் விரும்பப்பட்டு அத்தனை ஜனத்திரளையும் பித்தாக்கியது  பாடல் முழுவதும் இழையோடும் கிடார் இசையும் அதன் துடிப்பான தாளமும். கடைசி மூன்று நிமிடங்கள் ஜோ வால்ஷின் டபுள் ஸ்ட்ரிங் கிடாரும், டான் ஃபெல்டர், க்ளென் ஃப்ரே, ஆகியோரின் கிடாரும் இணைந்து செய்யும் மாயம் ஒரு துர்க்கனவின் சுழல்தன்மையை நமக்கு நினைவுறுத்தியபடி இருப்பதுதான். அந்த நேரடி இசை நிகழ்ச்சியில் அவர்கள் வாசிப்பது எலெக்ட்ரிக் கிடார் தான். பிற்பாடு அக்கொஸ்டிக் கிடார் இசையுடன்  அது மீண்டும் வெளியிடப்பட்டது.  ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டே டான் ஹென்லே பாடுகிறார். அது அசாத்திய முயற்சி என எனக்குப் பட்டது.

திரும்பத் திரும்ப கேட்கையில் பாடலின் வரிகள் மேல் என் கவனம் சென்றது. அதை உன்னிப்பாக கேட்கத் தொடங்கியதும் அதன் அர்த்தம் என்னை ஈர்த்தது. அவை மிகுந்த உருவகத்தன்மையுடன் கூடிய வரிகள். பெரிய கவித்துவம் இல்லையெனினும்  துர்க்கனவொன்றின் காட்சி சித்தரிப்பின் மொழி அதிலுள்ளது . அதன் புதிர்த்தன்மையே என்னை சுழற்றியடிக்கும் ஒரு மாயத்தைக் கொண்டுள்ளது என அறிந்தேன்.

இருட்டான பாலைவனச் சாலை. 

குளிர்ந்த காற்று என் தலைமயிரைக் கோதியது.

கோலீட்டாஸ்* அரும்புகளின் வெப்பமான மணம் 

காற்றில் எழுந்து படர்ந்தது.

அங்கே, தூரத்தில், மினுமினுக்கும் ஒரு வெளிச்சம்.

என் தலை கனத்தது, கண் மங்கியது

இரவுக்கு நிற்க வேண்டி வந்தது.

அங்கே அவள் நின்றாள், கதவருகே.

மிஷன் சர்ச்சின் மணி ஒலித்தது.

“இது சொர்க்கமாகவும் இருக்கலாம், நரகமாகவும் இருக்கலாம்”

என்று நான் நினைத்தேன்.

அவள் மெழுகுவர்த்தி ஏற்றி, உள்ளே வழி காட்டினாள்.

பாதை நெடுகக் குரல்கள் அழைப்பதுபோல் ஒலித்தன…

“ஹோட்டல் காலிஃபோர்னியாவுக்கு வருக!

அருமையான இடம் இது (அருமையான இடம்!)

அருமையான முகம்!

இங்கே எப்போதும் இடமிருக்கும்

எந்த பருவத்திலும் (எந்த பருவத்திலும்!)

அறைகள் திறந்தே இருக்கும்”

செல்வச் செழிப்பின் அத்தனை கோணல்களையும்

கொண்ட மனம் அவளுக்கு, 

மெர்சிடீஸ் பென்ஸ் வைத்திருக்கிறாள்.

அவள் பின்னால் அழகழகான பையன்கள், 

அவர்களை ‘நண்பர்கள்’ என்று அழைக்கிறாள்.

எல்லோரும் முற்றத்தில் கூடி ஆடுகிறார்கள்

இனிய வேனில் வேர்வை நனைக்க – 

சிலர் எதையோ நினைவுகூர ஆடுகிறார்கள், 

சிலர் மறக்க.

நான் காப்டனை அழைத்தேன்.

“என் ஒயினை கொண்டுவாருங்கள்” என்றேன்.

“1969 முதல் அந்த ஸ்பிரிட்** இங்கே இல்லை,” 

என்று அவர் சொன்னார்.

இப்போதும் அந்தக்குரல்கள் தூரத்திலிருந்து அழைக்கின்றன.

நடு இரவிலும் நம்மை  எழுப்புகின்றன…

“ஹோட்டல் காலிஃபோர்னியாவுக்கு வருக

அருமையான இடம்! (அருமையான இடம்!)

அருமையான முகம்!

ஹோட்டல் காலிஃபோர்னியாவில் 

கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

என்ன ஆச்சரியம்! (என்ன ஆச்சரியம்)

இங்கே நீங்கள் இல்லை என்பதற்கான 

சான்றுடன் வரவும்…”

கூரையில் பதிக்கப்பட்ட கண்ணாடிகள்

ஐசில் வைக்கப்பட்ட பிங்க் நிற ஷாம்பேன் புட்டிகள்

“இங்கே நாம் எல்லாரும் கைதிகள், நம் சந்தர்ப்பங்களின் கைதிகள்,” 

என்று அவள் சொன்னாள்.

தலைவரின் தனியறையில்

அவர்கள் விருந்துக்காக கூடினார்கள். ஆனால்,

கூர்கத்திகள் மின்ன எவ்வளவுதான் குத்தினாலும்

அந்த வன்மிருகத்தை அவர்களால் கொல்லவே முடியவில்லை.

என் கடைசி நினைவு. நான்

கதவை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன்

தொடங்கிய இடத்துக்கே.

திரும்பும் பாதையை கண்டு பிடிக்கவேண்டும்.

“ரிலாக்ஸ்” என்றான் இரவு கண்காணிப்பாளன்.

“நாங்கள் வரவேற்க மட்டுமே பணிக்கப்பட்டவர்கள்.

எப்போது வேண்டுமென்றாலும் நீ வெளியேற முடிவெடுக்கலாம்.

ஆனால் ஒருபோதும் உன்னால் வெளியேபோக மட்டும் முடியாது” என்றான்.  

* கோலீட்டாஸ் – கஞ்சா செடியின் அரும்புகளை குறிக்கும் ஸ்பானிஷ் மொழிச்சொல். ‘குட்டி வால்’ என்பது நேரடியான அர்த்தம். பாலியல் சார்ந்த கொச்சை வார்த்தையாகவும் பயன்படுத்தப்படுகிறது.  

** 1969-ன் வியட்நாம் போர் எதிர்ப்பு சார்ந்த ஹிப்பி கலாச்சாரத்தின் ‘ஸ்பிரிட்’ (உணர்வு) இங்கே சிலேடையாக குறிப்பிடப் படுகிறது.

இப்பாடலில் ஒரு உருவகமோ அல்லது ஒரு படிமமோ அதன்மேல் ஏற்றப்படும் அனைத்து அர்த்தங்களையும் மீறி நின்று கொண்டு நம்மை சவாலுக்கு அழைக்கிறது. சீண்டுகிறது. என்னை முடிந்தால் புரிந்துகொள் என்கிறது. எனக்கு மிகப் பிடித்தமான விளையாட்டு இது. நான் எனக்கு தெரிந்தவற்றை வைத்து அதை உணர முயன்று ஆடை அணிவித்து அழகுபார்க்கிறேன்.

அது அமெரிக்காவில் ஹிப்பி கலாச்சாரம் அதன் உச்சத்தில் இருந்த காலகட்டம். மாபெரும் நுகர்வு கலாச்சாரத்தில் அமெரிக்கா அடியெடுத்து வைத்ததும் அப்போதுதான். ஹெடோனிசம் ஹிப்பிகளின் தாரக மந்திரம். எல்.எஸ்.டி , கோகெய்ன் போன்ற போதை வஸ்துக்களின் பெருக்கம், ராக் இசை போன்ற பல்வேறு இசைக்குழுக்களின் பிடியில் அமெரிக்க மக்கள் இருந்த காலம். கூடவே அப்போது முளைவிட்ட தனிமனித சுதந்திரம், இருத்தல் பற்றிய கேள்விகள் எல்லாமாக சேர்ந்து அமெரிக்காவை ஆட்டிப் படைத்தன. வியட்நாம் போரை ஒட்டிய மக்களின் மனநிலையையும் இது பிரதிபலிக்கிறது. பல வருடங்கள் நீண்ட அப்போரில் 1969 ல் முழுமூச்சாக ஐந்து லட்சம் வீரர்களை அமெரிக்கா களமிறக்கியது. அந்த வருடம் இப்பாடலில் ஒரு குறிப்பாக இடம்பெறுகிறது.

இசைக்குழுவின்  டான் ஹென்லேயும், க்ளென் ஃப்ரேயும் சேர்ந்து எழுதிய பாடல். வெளிவந்தவுடன்  ஹோட்டல் காலிஃபோர்னியா என்ற உருவகம்[ metaphor ] அப்போதைய  சாத்தான் வழிபாடு நடந்ததாகக் கூறப்படும் ஒரு தேவாலயத்தை குறிப்பிடுகிறது என்றும், மனநல விடுதி ஒன்றைக் குறிப்பதாகவும், போதையின் பிடிக்குள் செல்பர்களை சுட்டுகிறது என்றும் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் இதை எழுதியவர்களில் ஒருவரான டான் ஹென்லே ’’நாங்கள் அமெரிக்காவின் மிட் வெஸ்ட் பகுதியின் சிறு நகரத்திலிருந்து வந்தவர்கள். எங்கள் பார்வையில் லாஸ் ஏஞ்சல்ஸின் பகட்டும், மின்னும் ஒளிவெள்ளத்தில் அதன் அழகும், மேல்தட்டு நாகரிகத்தின் வசீகரமும் எங்களை ஈர்த்தன. அது ஒரு அழகிய வசீகரப் பொறி. இப்பாடல் ஒன்றுமறியா கபடமின்மையை எப்போதைக்குமாக இழப்பதை சுட்டுகிறது.  அமெரிக்கா என்ற கனவிற்கும் அமெரிக்கா என்ற துர்க்கனவிற்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை உணர்த்துகிறது.  மரபார்ந்து சொல்லப்பட்டுவரும் முரணைக் குறிக்கிறது… நன்மை, தீமை, ஒளி, இருள், இளமை, வயதடைதல், ஆன்மீகம், மதங்களைக் கடத்தல்  இன்னபிற.

ஆனால் உள்ளே புக மட்டுமே முடியும். ஒருபோதும் வெளியேற முடியா ஒரு இடம் என்பது நாம் அனைவருமே அறிந்தது. நம் கனவுகளில் மீண்டும் மீண்டும் வருவது.

சில பாடல்களை நினைக்க விரும்புவோம், இதை மறக்க விரும்புகிறேன். ஆனாலும் இது நினைவில் நீடிக்கிறது. உடைந்த துண்டுகளாக. துண்டுகள் ஒவ்வொன்றும் முளைப்பதாக.

ஆடுகிறார்கள் சிலர் நினைவுகூர, சிலர் மறக்க,

”1969 முதல் அந்த ஸ்பிரிட் இங்கே இல்லை”.

”எத்தனை கூர் கொண்ட கத்தியால் குத்தினாலும் நமக்குள் இருக்கும் மிருகத்தை நம்மால் கொல்லமுடிவதில்லை”

எத்தனை வீசியெறிந்தாலும் திரும்ப வரும் வரி

எப்போது வேண்டுமானாலும் நீ வெளியேற முடிவெடுக்கலாம்

ஆனால்  ஒருபோதும் போக மட்டும் முடியாது.

***

பின் இணைப்பு:

ஆங்கில வரிகளில் பார்க்க:

***

9 thoughts on “நெடுஞ்சாலையில் ஓர் இடம்

  1. அருணாம்மா…

    //துர்க்கனவொன்றின் காட்சி சித்தரிப்பின் மொழி//
    //இங்கே நாம் எல்லாரும் கைதிகள், நம் சந்தர்ப்பங்களின் கைதிகள்//
    //சில பாடல்களை நினைக்க விரும்புவோம், இதை மறக்க விரும்புகிறேன்.🥺 ஆனாலும் இது நினைவில் நீடிக்கிறது. உடைந்த துண்டுகளாக. துண்டுகள் ஒவ்வொன்றும் முளைப்பதாக.//
    //எப்போது வேண்டுமானாலும் நீ வெளியேற முடிவெடுக்கலாம்
    ஆனால் ஒருபோதும் போக மட்டும் முடியாது.//

    எப்படியென்றாலும் பாடல்களில் நாம் நினைவுகளை… காலத்தை.. உணர்வுகளைத் தான் புதைத்து வைக்கிறோம். துர்கனவுகளை புதைத்து வைத்திருக்கும் சில பாடலாகளை மீட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இப்போது. தாங்கவியலாத வேதனைகளை சில பாடல்களில் ஒளித்து வைத்துவிட்டு துக்கம் தேவைப்படும்போது அதற்கான தனிமை அருளப்படும்போது கேட்டு அழுது தீர்க்கும் சில பாடல்கள் எனக்கும் உண்டு… வெளியற எத்தனை பிரயத்தனப்பட்டு முடிவெடுத்தாலும் அது முடியவில்லை தான்… போக முடியாது தான்… போக வேண்டாம் தான்… சில துக்கங்கள் மதுரமானவை.. இந்த இரவில் அவற்றை மீட்டிக் கொண்டிருக்கிறேன்… ❤️🥺
    பாடலிலுள்ள Strings… 👌🏼👌🏼 வேறு ஏதோ காலத்திற்கு தான் அழைத்துச் செல்கிறது…
    இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி தான்னு தோணுது… அதை உணர்ந்து கொள்ள… இனிமையா வலியா என்றறியாத அவற்றை ரசிக்கும் மனநிலை வாய்க்கப்பெற்றிருப்பது நல்லது தான்.. யாவுமே ஒரு அனுபவம் தான்…
    ஒவ்வொரு கட்டுரையும் ஒரு உணர்வின் உச்ச தருணத்தை காணித்து அவற்றை மீட்டச் செய்கிறது…
    சென்ற கட்டுரையில்… இனிமையின் நினைவுகள்… இப்போ துர்கனவின் வலி.. மறக்க நினைக்கும் தருணத்தை மீட்டும் இசை… வெளிச்செல்லவியலாத சுழலின் சந்தர்ப்பத்தில் விக்கித்தவித்திருக்கும் தருணத்தை மீட்டச் செய்கிறது…
    அருமை மா… அன்பு முத்தங்கள்..

    -இரம்யா

    Like

  2. அன்பின் அருணா
    இத்தனை துடிப்பான இசையில் இத்தனை ஆழமான தத்துவார்த்தமான வரிகள் இருக்குமென்று நீங்கள் எழுதியிருக்காவிட்டால் தெரிந்துகொண்டிருக்கவே மாட்டேன். மிக ஆழமான அர்த்தம் பொதிந்த வரிகள் //துர்க்கனவின் சித்தரிப்பு எத்தனை கூர் கொண்ட கத்தியால் குத்தினாலும் கொல்ல முடியாத நமக்குள் இருக்கும் மிருகம். இல்லை என்பதற்கு கொடுகவேண்டிய சான்று// என ஒருபோதும் மறக்கவியலா வரிகள். பிரமாதமாக துவங்கி பிரமாதமாக முடித்திருக்கிறீர்கள். நட்சத்திர குறியிட்ட சொல்லின் பொருளை, இந்த பாடல் உருவான பின்னணியை, ஹிப்பி கலாச்சாரத்தை, பாடல் வெளியாகி அடைந்த பிரபல்யத்தை என்று அழகாக கோர்த்து கொடுத்திருக்கிறீர்கள்

    . //இப்பாடலில் ஒரு உருவகமோ அல்லது ஒரு படிமமோ அதன்மேல் ஏற்றப்படும் அனைத்து அர்த்தங்களையும் மீறி நின்று கொண்டு நம்மை சவாலுக்கு அழைக்கிறது. சீண்டுகிறது. என்னை முடிந்தால் புரிந்துகொள் என்கிறது. எனக்கு மிகப் பிடித்தமான விளையாட்டு இது// இந்த பத்தி மிகச் சிறப்பு. வாசித்தபோது உணர்ந்ததை விடவும் பாடலை கேட்கையில் இந்த வரிகள் எத்தனை உண்மை என புரிகிறது.

    //எப்போதுவேண்டுமானாலும் வெளியேறலாம் அனால் ஒருபோதும் வெளியேற முடியாது// இந்த வரிகள் எத்தனை தத்துவார்த்தம் இல்லையா? மீள மீள வாசித்துக்கொண்டும் அதைக்குறித்தே நினைத்துக்கொண்டுமிருக்கிறேன்
    அன்பு

    Like

  3. அருணாமா, நெடுஞ்சாலையில் ஓர் இடம் தலைப்பு ஹோட்டல் கலிப்போர்னியா பாடலுக்கு மிக பொருத்தமான கவித்துவம் கூடியது.. துர்க்கனவின் சுழலுக்கு நல்ல பொருத்தம். டான் ஹென்லே குறிப்பிடுவது போல நாம் எல்லாரும் வாழ்க்கை என்ற கனவின் பரந்த நெஞ்சாலையில் தான் நுழைகிறோம். ஆனால் இன்றியமையால் ஹோட்டல் கலிப்போர்னியாக்களால் விழுங்க படுகிறோம். ““இங்கே நாம் எல்லாரும் கைதிகள், நம் சந்தர்ப்பங்களின் கைதிகள்” என்ற வரியை அப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது. வெளியே போக நினைத்தாலும் வெளியே போக முடியாது என்ற வரி துர்க்கனவுகளை விவரிக்கும் சிறப்பான சொல்லாட்சி.

    இசையில் கடைசியில் வரும் கிட்டாரின் வீச்சு அந்த மாயத்தை நிகழ்த்துகிறது. இனிமையானது, வலி தருவது, தன் புண்ணை தானே நக்கி சுவைக்கும் நிலை. துர்க்கனவுகளின் இயல்பு. சுழலும் மாயம், வெளியேற நினைக்கையில் வேறொரு அறைக்குள் நுழைந்து தவித்தல். முடிவிலாது இருக்கும் அனுபவம். அந்த வலி நமக்கு ஏன் தேவைப்படுகிறது. தெரியவில்லை, ஆனால் அண்மையில் வாசித்த இசையின் இந்த கவிதை நினைவுக்கு வருகிறது.

    மகிழ்ச்சி
    எல்லாவற்றையும் மங்கலாக்குகிறது; பறக்க விடுகிறது
    துக்கம்
    எல்லாவற்றையும் தெளிவாக்குகிறது; நிலைக்குக்
    கொண்டுவருகிறது
    இப்போது
    இந்தக் காக்கையின் ஒவ்வொரு மயிரையும்
    என்னால் காணமுடிகிறது.

    துர்க்கனவுகள் ஒருவகை துக்கங்கள் அல்லது வேறொரு வகை இன்பங்களா என்ன ? நீங்கள் சொல்வது போலவே எத்தனை சொற்களை அள்ளிப்போட்டாலும் மீறி நிற்கிறது. எத்தனை கூர்மையான கத்தியாலும் கொல்லப்படா முடியாத வன்மிருகம். பல்வேறு சிந்தனைகளுக்கு இட்டுசெல்லும் வரி.

    அன்புடன்
    சக்திவேல்

    Like

  4. அருமையான பகிரல் அருண்மொழி. லோகமாதேவியும் கூறியதே போல் // எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் ஆனால்

    ஒருபோதும் வெளியேற முடியாது// பல இடங்களிலும் பொருந்தும் வரிகள். நன்றி. சுஜா.

    Like

  5. Though as a singer, as a music appreciater and as a writer I get ecstasies , get musical sublimes, I really find it difficult to translate them into words. But Mrs. Arulmozhi , you have found equivalents for them. Just fabulous madam.
    SRIDHARAN from Chennai

    Like

  6. இந்த பதிவுக்காக நன்றி madam,
    19-03-2022 அன்று மாலை 6 மணிக்கு இதை படித்தேன், எதேச்சையாக, அன்று இரவு 10 மணிக்கு pawn stars நிகழ்ச்சியில் இந்த இசைத்தட்டின் முக்கிய பிரதி ஒன்று 1750 dollor விலை போனது பற்றி ஒளிபரப்பு ஆனது எனக்கு பெரிய வியப்பாக இருந்தது. ஒரு இசை துறையை சேர்ந்த நபர் அதன் சிறப்பு தன்மையை விலக்கிக்கொண்டு இருந்தார்.

    Like

  7. இணையத்தில் இப்போது தான் கட்டுரைகள் படிக்க தொடங்கியுள்ளேன். அருண்மொழி என்ற பெயரால் ஈர்க்கப்பட்டு படித்தேன். மனம் கனத்து விட்டது. ஒரு புது வாசிப்பு அனுபவத்தில் உங்கள் தயவால் நுழைந்துள்ளேன். நன்றி

    Like

  8. அன்பு அருள்மொழி அவர்களுக்கு,

    உங்களது பல பதிவுகளுக்கு பதில் எழுத வேண்டும் என்று நினைப்பேன். நீண்ட காலமாக இந்த குறை இருந்து வந்தது ஆனால் வேலைப்பழு காரணமாக முடியவில்லை. இன்று எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு நீண்ட பதில் எழுதப் போகிறேன்.

    நான் 15 வருடங்களுக்கு மேலாக ஜெயமோகனின் இணையதளத்தை தொடர்ந்து வாசித்து வருபவன். டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டன் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் 2006 ஆம் ஆண்டு வாங்கிய ஆயிரம் கால் மண்டபம் என்ற சிறுகதை தொகுப்பு மூலம் ஜெயமோகன் அறிமுகம். ஜெயமோகன் மூலமாக உங்களை கண்டறிந்து தற்போது உங்களது கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்து மகிழ்பவன். நான் வேலை நிமித்தம் காரணமாக அமெரிக்காவுக்கு 20 வருடங்களுக்கு முன்பு வந்து தற்போது இங்கு வசித்து வரும் இலங்கை தமிழன். உங்களது ஆரம்பகாலப் பதிவுகள் எனக்கு எனது இளமைக்கால வாழ்க்கையை திரும்பி வாழ்ந்தது போல் இருந்தது. நான் எனது இளமை காலத்தில் தொடர்ந்து வாசித்து வந்தவன். i used to read anything and everything I could lay my hands on. My favorite quote at that time was “If you want to make someone hate a book make it a text book”. ஆரம்பகால பதிவுகளுக்கு பின்னூட்டம் எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் முடியவில்லை. இதை பார்த்தவுடன் கட்டாயம் எழுத வேண்டும் என்று யோசித்து இப்போது எழுதுகிறேன்.
    I am going to finish my reply in English. But I will definitely reply in Tamil for some of your articles. More than anything your articles motivate me to write about my experience as a Sri Lankan Tamil living through a civil war but still had very good experiences similar to yours. I want to write it for the next generation.

    A colleague and close friend of mine around 2005 bought a new Mercedes hardtop convertible and wanted to take me for a ride along Highway 1, a single lane highway running along the West Coast of the USA with scenic views and can be dangerous at times. We were staying in San Francisco at that time. Once the car came out of the city traffic and hit Highway my friend started playing this song and increased the volume. I am hearing it for the first time and was immediately hooked by the music and lyrics. After the song started and till it finished, we didn’t speak. Once the song finished playing he asked me how was it Inpa? I didn’t know how to react. He started laughing and said “I was having fun watching you react to the song at the same time trying to stay focused on driving”. He went on to say that this is one his all time favorites and he bought a guitar to learn to play this song and explained about Eagles. Thereafter I bought the CD and introduced this song to my wife and son. I have heard this song played live once by street performers near Universal studio(an acoustic version) and everytime I hear it is just magical. Living in USA road trips are a way of life and every time we go road trips in addition to the things we need to pack, we pack our music collection which starts with my wife’s must have Tamil Devotional songs, 80s songs and my collection of Nusrat Fateh Ali Khan, Adnan Sami collection and then our favorite of all os us the eagles CD just for this song. We start the road trip with Bakthi paatu for half an hour and then favorite 80’s songs and a bit of Adnan Sami or Nustat Fateh Ali Khan and whenever I feel a bit sleepy or tired my wife knows what to do. She plays “Hotel California ” and there we go. I sing along, drum and bass guitar on the steering wheel and my son complains I am spoiling the experience for him because of my bad singing. Then we play it again without me singing or playing on the steering wheel for my son to enjoy it and then we play it for the third time and then go back to Tamil Songs.

    So when I saw your article I couldn’t resist but reply, which I have been wanting to do for some or all of your previous articles.
    Keep writing and introduce us to more experiences.

    Inpa

    Like

Leave a comment