சின்னஞ்சிறு மலர்

ஆசிரியர்களின் குழந்தைகளாக இருப்பதில் ஒரு சுகமும் உண்டு. அதே சமயம் ஒரு வலியும் உண்டு. அது ஒரு கொடுமை. சக ஆசிரியர்களின் கவனிப்பும், அக்கறையும் கிடைக்கும் அதே நேரம் பெரும்பாலான மாணவர்களின் பொறாமையும், பகைமையும் நம்மை சூழும். நான் இதையெல்லாம் வெட்டிவிட்டு அவர்களில் ஒன்றாகும் கலையைக் கற்றிருந்தேன்.

எல்லோரையும் போல எனக்கும் பள்ளியின் முதல் வகுப்பின் முதல்நாள் அனுபவம் மிகக் கொடுமையானதாக இருந்தது. அதுநாள்வரை அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு பீரியடுக்கும் அம்மா செல்லும் வகுப்பறைக்கு ஒரு குட்டி தண்ணீர் [தொப்பி வைத்த ராணுவ வீரன்] பாட்டிலோடு அலைவேன். அம்மா பாடம் எடுக்கும்போது மேஜையை ஒட்டி தரையில் அமர்ந்து குழந்தைகள் அமர்ந்திருக்கும் வரிசையை பார்த்தவாறு,  எனக்கு அப்பா வாங்கித் தந்த கலர் படங்கள் நிரம்பிய புத்தகங்களை படம் பார்த்து சீரியசாக படிப்பதுபோல் பாவனை காட்டுவேன். படிப்பைவிட பாவனையை அதிகம் பழகிக் கொண்டேன். போரடித்தால் வகுப்பறைக்கு வெளியில் சென்று பறவைகள் கும்மாளமிடும் மாமரத்தை வேடிக்கை பார்ப்பேன். இல்லையெனில் பெல்லடிக்கும் பியூன் மாமாவிடம் நாட்டு நடப்புகளை உரையாடிக் கொண்டிருப்பேன்.

இப்படி காற்றுபோல் திரிந்து கொண்டிருந்த என்னை ஒருநாள் புது கவுன் அணிவித்து, புது சிலேட், பலப்பம், புத்தகங்கள் வைக்கப்பட்ட பையும், சாக்லேட் டப்பாவுமாக அம்மா பள்ளி அழைத்து சென்றாள். ஹெச்.எம் ரூமிற்கு சென்று கொஞ்ச நேரம் எல்லா ஆசிரியர்களுக்கும் சாக்லேட் கொடுத்து விட்டு என்னை அம்மா ஒன்றாம் வகுப்புக்கு விட சென்றாள். நானும் வரவிருக்கும் பேராபத்தை உணராமல் எல்லா குழந்தைகளுக்கும் சிரித்துக் கொண்டே சாக்லேட் வினியோகம் செய்தேன். முடித்து கடைசி சாக்லேட்டை வாயில் இட்டு எல்லோருக்கும் டாடா காண்பித்து பையை தூக்கிக்கொண்டு அம்மாவுடன் கிளம்பும்போது ஒரு முரட்டுக்கரம் என் கையைப் பற்றி வகுப்பறைக்குள் நிறுத்தியது. நிமிர்ந்தால் சுந்தர்ராஜன் சார். எப்போதும் என்னிடம் சிரித்து பேசும் இவர் ஏன் இப்படி கண்டிப்பாக பார்க்கிறார்? ”பாப்பா தொப்பை காலைல எத்தன இட்லி சாப்பிட்டுச்சு”? என்றெல்லாம் கேட்பாரே. நானும் மூணு என்று விரலை காண்பிப்பேனே?

”அம்மா” என்று அலறியபடியே திமிறுகிறேன். அம்மா திரும்பி பார்க்காமல் சென்று கொண்டிருக்கிறாள். புத்தகப் பையை ஒரு திசையிலும், தண்ணீர் குப்பியை ஒரு புறமும் தூக்கி வீசுகிறேன். வகுப்பறையின் சிமெண்டு தரையில் விழுந்து கையையும் காலையும் உதைத்துக் கொண்டு வீறிடுகிறேன். கண்ணீர் தாரை தாரையாக பொழிகிறது. பக்கத்து வகுப்பறையிலிருந்து ஜெயக்கண்ணு டீச்சரும், சத்தியபாமா டீச்சரும் வந்து என்னை சமாதானம் செய்கின்றனர். சத்தியபாமா டீச்சர் தன் மடியில் எப்போதும்போல என்னை இருத்தி கண்ணீரைத் துடைக்க ஜெயக்கண்ணு டீச்சர் அவர் ஃப்ளாஸ்க்கிலிருந்து காபி ஊற்றித்தருகிறார். குடித்து முடித்து கொஞ்சம் சமாதானம் ஆகி மற்ற குழந்தைகளைப் பார்க்கிறேன். எல்லோர் முகத்திலும் புன்னகை. போய் நானாக அவர்களுடன் முதல்வரிசையில்  தரையில் அமர்கிறேன்.

இண்டெர்வெல்லில் எல்லா குழந்தைகளும் என்னை சூழ்ந்து என்னுடன் பேசுகிறார்கள். எனது கண்ணீரால் அழிந்த மைபொட்டை தன் பாவாடை நுனியால் துடைக்கிறாள் கல்யாணி. மாலாவும் வெற்றிச்செல்வியும் என் குப்பியை எடுத்து தந்து என் புத்தகத்தை அடுக்குகிறார்கள். மற்ற பெண் குழந்தைகள் என் வண்ணத்துப்பூச்சி போல் உள்ள கவுனின் ஃப்ரில்களை, அதில் வைத்து தைக்கப்பட்ட வெல்வெட்டை தொட்டு பார்க்கிறார்கள்.  கிருஷ்ணமூர்த்தி ஓடிச் சென்று எலந்தைப்பழம் வாங்கி வந்து எனக்கு நீட்டுகிறான். மணிகண்டனும்  குள்ளபிஸ்கட் கார்த்திகேயனும் எனக்கு கலர் சாக்பீஸ் தருகிறார்கள். சூழ்ந்திருக்கும் அன்புக்கரங்கள், பாசமான , பளபளக்கும் கண்கள், ஆறுதல் வார்த்தைகள், பாப்பா என்ற செல்லம் கொஞ்சும் குரல்கள் நான் மெய்மறந்துவிட்டேன். என் வாழ்நாள் முழுதும் நான் மறக்கமுடியாத ஒரு காட்சி.

 மறுநாளிலிருந்து அதிஉற்சாகமாக பள்ளி செல்ல ஆரம்பித்தேன். தோழமைகள், விளையாட்டுக்கள், படிப்பு, நீதிபோதனை கதை வகுப்புகள், வீட்டில் எனக்கு கிடைக்காத கல்கோணா, அவித்த சக்கரைவள்ளிக் கிழங்கு, அவித்த பனங்கிழங்கு, எலந்தைப் பழம், குச்சி ஐஸ், கலர் ஜவ்வுமிட்டாய் என்று பள்ளி எனக்கு தினம் ஒரு வண்ணத்தைக் காட்டியபடி இருந்தது. எல்லாம் ஓசியில் தான்.  கலர் ஜவ்வுமிட்டாய் தின்கிற அன்று மட்டும் வீட்டில் அடிவிழும். அப்பா பேசமாட்டார், விசிறிமட்டை காம்பும், ஹேங்கரும் நம்மோடு பேசும். அந்த ஜவ்வுமிட்டாயின் வண்ணம் எளிதில் கரைகிறமாதிரி எவனும் கண்டுபிடிக்கவில்லை. எத்தனை முறை கொப்பளித்தாலும் நிறம் போகாது.

சிறுவர்கள் மூவரும் என் உயிர்த்தோழர்கள் ஆனார்கள். என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணமூர்த்திதான் எனது மெய்க்காப்பாளன். அவன் துணையுடன் தான் பள்ளி செல்வேன். ஒரு அடியோ, திட்டோ ,கேலியோ என்மேல் விழ அனுமதிக்கமாட்டான். வகுப்பில் நானே மற்றவர்களைவிட கொஞ்சம் உயரம்தான். ஆனால் அவன் இன்னும் உயரமாக இருப்பதால் வகுப்பே அவனுக்கு பயப்படும். என்னிடம் மட்டும் பாப்பா, பாப்பா என்று அடிமையாக இருப்பான். படிப்பில் அவன் சுமார்தான். என் ரகசிய பட்டப்பெயரான ”அருமுழி, அருவாமுழி” எங்காவது உச்சரிக்கப்பட்டால் அடுத்த நிமிடம் இவன் பாய்ந்து தாக்குவான். அதனால் கொஞ்சம் தெனாவெட்டாகவே திரிவேன்.

மணிகண்டனும் [வெள்ளுலுவை], கார்த்திக்கேயனும் [குள்ளபிஸ்கட்] என்னிடம் அன்பாக இருப்பார்கள்.  படிப்பில் எங்கள் மூவருக்கும் தான் போட்டி. மணிகண்டன் பயங்கர கலராக இருப்பான். மற்றவன் குட்டை. எட்டாம்வகுப்பு வரை ஒரே குழுவாகத்தான் இருப்போம். ஆறாம் வகுப்பில் படிப்பாளி சங்கர் வந்து சேர்ந்தான். கல்யாணி [பொம்முக்குட்டி], மாலா [தின்னிப் பண்டாரம்], வெற்றிசெல்வி[ஒட்டட குச்சி] இவர்கள் அனைவரும் உயிர்த்தோழிகள்.

முதல் சண்டை எனக்கும் கார்த்திகேயனுக்கும் வந்தது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது. அவன் பேச்சுப்போட்டியில் எப்போதும் முதல்பரிசை தட்டி செல்வான். அவன் அப்பா என் அப்பாவுடன் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக வேலை பார்த்தார். அவனது பேச்சுப்போட்டிக்கு அருமையாக எழுதிக்கொடுப்பார். சரித்திர ஆசிரியரான என் அப்பாவும் சளைத்தவரல்ல. மேற்கோள்களை ஆங்காங்கே தூவி பிரமாதமாக எழுதிக் கொடுப்பார். ஆனால் கார்த்தியின் குரல் திருவிளையாடலில் வரும் சுந்தராம்பா குரல்போல் வெண்கலக் குரல். என்னுடையது அவ்வளவு எழும்பாது. அத்துடன் அவன் ஏற்ற இறக்கங்களுடன் அழகாகப் பேசுவான். அவனுக்கே முதல்பரிசு கிடைக்கும். அடுத்தபரிசு எனக்கு. அவன் மேடையேறி இறங்கியதுமே காற்றுபோன பலூன்போல் என் உற்சாகம் வடிந்துவிடும்.

 ஐந்தாம் வகுப்பில் அம்மாவின் யோசனையின்படி நான் 100 திருக்குறள் ஒப்பிக்கப் போகிறேன் என்று ஹெச். எம். ஜெயராமன் சாரிடம் சொன்னேன். அவர் புதிய விஷயம் எதுவாக இருந்தாலும் உற்சாகம் தருவார். மன்னார்குடியிலிருந்து தினமும் வந்து போய்க் கொண்டிருந்தார். வீட்டிலும் பள்ளியைத் தான் நினைத்துக் கொண்டிருப்பார் என்று நாங்கள் பேசிக் கொள்வோம். ஆசிரியர்களின் வருகை, மாணவர்களின் வருகை, படிப்பு, ஒழுங்கு, கட்டுப்பாடு, சுத்தம், வகுப்பறைகளின் சுத்தம், சுற்றுப்புறத்தின் சுத்தம், மதிய உணவின் தரம் என்று ஒருவர் எப்படி இவ்வளவு விஷயங்களை கவனத்தில் கொள்கிறார் என்பதே எங்களுக்கு மலைப்பாக இருக்கும். கார்த்திகேயனிடம் நான் திருக்குறள் பற்றி மூச்சுவிடவில்லை.

தினமும் அம்மா என்னை ஐந்து மணிக்கு எழுப்பினாள். முதல் ஒருவாரம் கண் எரிந்தது. ஆனால் முதல்பரிசை வெல்லும் ஆவலில் தொடர்ந்து மனப்பாடம் செய்தேன். அம்மா நான்கு மணிக்கே எழுந்து சமைப்பாள். காலையில் எழுந்து முகம்கழுவி பல்தேய்த்தவுடன் அம்மா முந்தினநாள் இரவு காய்ச்சி எடுத்துவைத்த பாலில் டீ போட்டு தருவாள். வேறு விளக்குகள் போட்டால் மற்றவர்கள் தூக்கத்திற்கு இடையூறு என்பதால் சமையலறை நிலைப்படியிலேயே அமர்ந்து படிப்பேன். கொல்லைப் புறத்திலிருந்து வரும் குளிர்காற்று, பூச்சிகளின் சத்தம், அதிகாலையின் அமைதி இவற்றுடன் அந்த தேனீரை இருவரும் அமைதியாக அருந்துவோம்.

அம்மா காய்கறி அரியும் நேர்த்தியை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே படிப்பேன். தினமும் பத்து குறள் அம்மாவிடம் ஒப்பிப்பேன். கரி அடுப்பில் வேகும் பருப்பின் மணம், உலையில் வேகும் சோறின் மணம், குழம்பின் மணம் என அடுக்களை களேபரமாக இருக்க,   பாத்திரத்தில் கரண்டி படும் ஓசை கூட கேட்காமல் அம்மா சமையல் செய்யும் நறுவிசை பார்த்துக்கொண்டேயிருக்கலாம். அம்மா அம்மியில் கொல்லையில் அரைக்கும்போது பக்கத்தில் விளக்கை பிடித்துக் கொண்டு நிற்பது ஒரு சுகம். அம்மா கரி அடுப்பின்புகை, மரத்தூள் அடுப்பின் புகை சூழ தேவதைபோல இருப்பாள்.

நூறு குறளையும் மணிமணியாக ஒப்பித்து முதல் பரிசை தட்டிச் சென்றேன். அன்று வேறு ஏதோ காரணம் சொல்லி கார்த்தி என்னிடம் சண்டையிட்டான். அப்புறம் மணிகண்டன் எங்கள் இருவருக்கிடையே சமாதான தூதுவராக செயல்பட்டான். படிப்பில் நான் எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிடுவேன். எங்கள் வீட்டில் நான்கு மணியிலிருந்து ஆறுமணி வரை மாலையில் விளையாட அனுமதிப்பார்கள். அம்மா லைட் போடுவதுதான் கணக்கு. படிக்க உட்கார வேண்டும். இடையில் கரெண்ட் கட்டானால் கத்திக்கொண்டு தெருவில் விளையாட இறங்கி விடுவோம். பள்ளித்தோழர்கள்தான் என் விளையாட்டுத் தோழர்களும். எல்லோரும் அடுத்தடுத்த தெருதான். சனி, ஞாயிறுகளில் முழு நேரமும் விளையாட்டு தான்.

ஒளிந்து பிடித்து விளையாடும் ஐஸ் நம்பர் ஒன், மல்லிப்பூவே, மல்லிப்பூவே மெல்ல வந்து கிள்ளிப்போ, பூப்பறிக்க வருகிறோம், கபடி, கிட்டிப்புல் இதெல்லாம் வெளி விளையாட்டுகள்.  தாயம், பல்லாங்குழி, வளையல் துண்டுகளை கலந்து எல்லோருக்கும் கொடுத்து ஒரே கலர் ஒரே டிசைன் சேர்ப்பவர்கள் ஜெயிப்பது, பிறகு திருடன், போலீஸ், ராஜா, ராணி சீட்டு குலுக்கி விளையாடுவது இவை உள்விளையாட்டுக்கள்.  அப்பா நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது கேரம் போர்டு வாங்கினார். நிறைய பேர் வந்து பார்த்து விளையாடி சென்றனர். என் தோழர்கள் எல்லோருக்கும் விளையாட்டை சொல்லிக்கொடுத்தேன். சனி, ஞாயிறு பகல்களில் பாட்டிக்கு கண் உறங்க முடியாமலானது. உடனே போர்டை கிருஷ்ணமூர்த்தி வீட்டு திண்ணைக்கு மாற்றி விளையாடினோம். அதில் பெரும்பாலும் மணிகண்டன்தான் ஜெயிப்பான். ஸ்ட்ரைக்கரை நேர்த்தியாக சுண்டும் அவன் ஸ்டைலை பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ரெண்டு டீமாக விளையாடுவோம். அவன் டீமில் என்னை சேர்த்துக் கொள்ளமாட்டான். நான் எதிர்டீமில் இருக்கவேண்டும். என்னை ஜெயிக்கவேண்டும் அவனுக்கு.

விளையாட்டு எனக்கு எவ்வளவு இனிப்பானதோ அவ்வளவு கசப்பானது பள்ளியில் நடத்தப்படும் விளையாட்டு போட்டி. இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது நடத்தப்பட்ட ஆண்டிறுதி விளையாட்டுப் போட்டியில் எனக்கு நிகழ்ந்த அவமானம் என் விளையாட்டுப் போட்டி கனவுகளுக்கே முற்றுப் புள்ளி வைத்தது. அந்த விளையாட்டுப் போட்டியில் ஓட்டப் பந்தயத்திலும், நீளம் தாண்டுதலிலும் பேர் கொடுத்திருந்தேன். கிருஷ்ணமூர்த்தி உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், சாக்கு ஓட்டம்[சாக்கில் கால் விட்டுக் கொண்டு ஓடுதல்], இசை நாற்காலி என்று எல்லாவற்றிலும் ஜெயித்து ஆட்ட நாயகனாக திகழ்ந்தான். அவனுக்கு நாங்கள் ’ஓ  ஓ’ வென்று கத்தி உற்சாகம் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

அது முக்கியமான நாள் என்பதால் அம்மா எனக்கு நல்ல கவுனை அணிவித்தாள். அப்போது நாகரீக வரவாக வந்திருந்த நைலான் வளையல்கள், பம்பாயிலிருந்து என் மாமா எனக்கு வாங்கித் தந்திருந்த ஆப்பிள் விதைகளால் செய்யப் பட்டவை போலிருந்த மணி, ஜெயக்கண்ணு டீச்சர் எனக்கு ஆசையாக சூட்டிய சிகப்பு ரோஜா என ஒரு வண்ணமிகு வண்டாக விளையாட்டுத்திடலை நோக்கி பறந்தேன்.

திடலின் ஒருபுறம் போடப்பட்டிருந்த பந்தலில் கலர் பேப்பர்களால் செய்யப்பட்ட டிசைன்கள் தொங்க, மைக்கில் எங்கள் கட்டைக்குரல் ஐய்யாவு சார் போட்டி அறிவிப்பு செய்து கொண்டிருந்தார். கிரவுண்டை சுற்றி வெள்ளைக் கோலமாவால் எல்லை குறிக்கப்பட்டிருந்தது.   போட்டியில் வீரர்கள் நிற்கும் இடம், ஓடி எட்ட வேண்டிய இலக்கு எல்லாம் மாவால் வரையப்பட்டிருந்தது. இலக்கில் இரு அண்ணன்கள் ஒரு கலர் ரிப்பனை குறுக்காக பிடித்துக் கொண்டு நின்றனர்.

பி.டி. மாஸ்டர் என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறார். அவரை கூர்ந்து கவனிக்கிறேன். அவர் சொல்கிறார், ”நான் ரெடி, ஒன், டூ, த்ரீ, ஜூட் என்று விசில் அடித்ததும் ஓடி அந்த ரிப்பனை தொடவேண்டும்“.  என் நெஞ்சு படக், படக் என அடிக்க ஆரம்பித்து விட்டது. அவர் ஒன், டூ, த்ரீ என்றதுமே பிள்ளைகள் சிட்டாகப் பறக்கிறார்கள். நான் ஜூட்டுக்கும் விசிலுக்கும் காத்து நிற்கிறேன். ஓடு, ஓடு என கையசைக்கிறார் மாஸ்டர். மற்றவர்கள் பாதி கிரவுண்டை கடந்திருக்க நான் கட்டக் கடைசியாக ஓடுகிறேன். சுற்றிலும் நின்றவர்கள் “பாப்பா, எல்லாரையும் தொரத்திக்கிட்டு ஓடுது” என சொல்லி கேலியாக கைகொட்டி சிரிக்க, நான் அவமானத்தால் குறுகி அம்மாவைப் பார்க்கிறேன். அம்மாவின் முகம் பதைக்கிறது. அவள் நேரவிருக்கும் ரகளையை உணர்ந்து விட்டாள்.

அப்படியே திடலில் விழுந்து நான் வழக்கமாக நிகழ்த்தும் கலை நிகழ்ச்சியை நிகழ்த்துகிறேன். வளையல்கள் உடைத்து வீசப்படுகின்றன. அழகிய பாம்பே மணி சின்னாபின்னாமாகிறது. பூ தரையில் மிதிபடுகிறது. அம்மா ஓடி வந்து தூக்கி அணைத்து சமாதானப் படுத்துகிறாள். நான் தோற்றது பெரிதில்லை. எல்லோரும் ஜூட் சொல்வதற்குள் விதிகளை மீறி ஓடி ஜெயித்தார்கள். நான் விதிகளுக்கு கட்டுப்பட்டதால் தோல்வியடைந்தேன். திக்கித் திணறி அழுகைக்கிடையே நான் என் தரப்பை சொன்னேன். அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு ஜெயராமன் சார் கிரவுண்டுக்கு வந்தார். நான் மூன்றாம் இடம் ஜெயித்ததாக மைக் அறிவித்தது. நான் மூன்றாமிடத்தை வீரப்பனுடன் பகிர்ந்து கொண்டேன். எனக்கு விழா முடிவில் கலர் சோப் டப்பா பரிசாக வழங்கப்பட்டது . ஆறுதல் பரிசாம். உண்மையிலேயே எனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு மிகுந்த ஆறுதலான பரிசுதான்.

பாட்டுப்போட்டியிலும் பங்குபெறுவேன். அதில் பரிசை வாங்கிவிடுவேன்.  நான் நிறைய பாடல்களைக் கேட்கும் ரேடியோ பைத்தியம் என்பதால் அது எனக்கு எளிதானது. பெரும்பாலும் பாரதியார் பாடல்கள், நாட்டுப் பற்று பாடல்கள் தான் பாடவேண்டும். சினிமா பாடலுக்கு ஒருபோதும் ஜெயராமன் சார் சம்மதிக்க மாட்டார்.

ஆனால் டான்ஸ் என்றாலே எனக்கு அலெர்ஜி. என் பெற்றோர் தன் பெண் சகல கலாவல்லியாக , கலைவாணியின் திருவுருவாக திகழவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். மூன்றாம் வகுப்பில் எனக்கு வகுப்பெடுத்த கமலா டீச்சர் நடனத்தில் வல்லவர். அவர் ஆடுவதை கண்கொட்டாமல் பார்க்கலாம். அவருடைய கையின் அசைவுகள் காற்றில் கொடிகள் துவண்டு ஆடுவதுபோல் அவ்வளவு அழகு. அவர் என்ன சொல்லிக் கொடுத்தாலும் என் கைகள் குச்சிபோல் ஆடும். அந்த நெளிவு, துவளல் எதுவுமே எனக்கு வரவில்லை. இதை உணர்ந்து நான் ஆடமாட்டேன் என்று அம்மாவிடம் அடம் பிடித்தேன். அம்மா ”அதெல்லாம் ஒன்னுல்ல, நீ ஆடு, நெத்திச் சுட்டி, மேக்கப் செட் எல்லாம் வாங்கிட்டேன்” என்றாள்.

ஆண்டு விழாவுக்கு ஊரே திடலில் கூடும். மேக்கப்மேன் போட்டுவிட்ட வேஷத்தில் நான் வேறு யாரோ போல் இருந்தேன். ரோஸ்கன்னமும் லிப்ஸ்டிக்குமாக.  பரத நாட்டிய அலங்காரத்துடன் கலர் லைட்டுகளின் ஒளிவெள்ளத்தில் ’பொம்முக்குட்டி’ கல்யாணி நல்ல புஷ்டியான கண்ணன் வேஷத்தில் இருக்க நான் கண்ணம்மாவாக  ஆடினேன். அவள் புல்லாங்குழலை வைத்துக்கொண்டு நின்றால் போதும். நான்தான் சுற்றிசுற்றி வந்து ’தீராத விளையாட்டுப்பிள்ளை’ என்ற பாட்டுக்கு ஆடவேண்டும். ஓரளவு சமாளித்துவிட்டேன். பாட்டி பாராட்டினார். அம்மா அன்று இரவு வீட்டிற்கு வந்தவுடன் திருஷ்டி சுத்திப் போட்டாள். காரமிளகாயும் உப்பும் பயங்கரமாக வெடிக்க ”ஊர் கண்ணே புள்ள மேல பட்டிருக்கு” என்றாள். ’ரெண்டுமே வெடிக்கிற சமாச்சாரம். வெடிக்காம என்ன பண்ணும்’ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். அப்பா மட்டும் ”மூஞ்சிய ஏன் பாப்பா கசப்பு மருந்து குடிச்ச மாதிரி வச்சிருந்த” என்றார். சிருங்கார பாவம் என்னை மீறி அப்படி வழிந்திருக்கிறது.

அன்று தொடக்கப் பள்ளியில் எங்களுக்கு கடைசி நாள் என்பதால் நாங்கள் மேக்கப் ரூமில் கலாட்டாவாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தோம். நாடக கதாபாத்திரங்களுக்கு மேக்கப் மேன்  மேக்கப் போட்டுவிட்டு கெஞ்சாத குறையாக எங்களிடம் ”பேசாதீங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார். பேசினால் மேக்கப் கலைந்துவிடுமாம். கார்த்திகேயன் வண்டி வண்டியாக வசனம் பேசவேண்டுமே. அவன்தான் நாடகத்தில் முருகன். எல்லார் வசனமும் எங்களுக்கு மனப்பாடம். தென்னந்தோப்பில் எத்தனைமுறை ஒத்திகை பார்த்திருப்போம். கார்த்திகேயனின் வேல் பவுன் நிற பளபள பேப்பர் ஒட்டப்பட்டு எடையில்லாமல் இருந்த்து. அதை தூக்கிப்போட்டு பிடித்து ஒருவருக்கொருவர் விளையாடிக்கொண்டிருந்தோம். நான் பார்வதி. வசனம் குறைவுதான்.  நாதா, ஸ்வாமி, என்று சிவனை சமாளித்து, துடுக்கான முருகனை சமாதானப் படுத்த வேண்டும்.

”உன் தந்தையின் கோபம் நீ அறிவாய் அல்லவா? முருகா, வேலவா, கதிர்வேலா” என்று நான் கெஞ்ச முருகன் ”எனக்கென்று ஒரு நாடு, என் மக்கள் , நான் அங்கு போகிறேன், முடிந்தால் என்னை அங்கு வந்து பாருங்கள்” என்று கிளம்பிவிடுவான். பரமசிவனாக மணிகண்டன். அவன் என்னைவிட கொஞ்சம் உயரம் கூடுதல். ஒத்திகையின்போதே சிரித்து மானத்தை வாங்குவான். எப்போதும் புன்னகை தவழும் அவன் முகத்தில் உக்கிரமோ கோபமோ வருவேனா என்கிறது. அவனை திட்டிக் கொண்டேயிருப்போம்.

அன்றைய எங்கள் நாடகத்துக்கு உச்சகட்ட அப்ளாஸ். ஊர் மக்கள் அனைவரும் ஒன்றி பார்த்து சிலாகித்தனர். நடிப்பில் கார்த்திகேயன் எங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டான். கணீர் குரலில் அவன் மைக்கில் வசனம் பேசும் அழகில் நாங்களே அயர்ந்து விட்டோம். ’மூதன்னையே, ஔவையே’ என்று அவன் ஔவையைப் பார்த்து கேட்கும் கேள்விகளில் அசர வைத்தான். நாடகத்துக்கு அவன் தந்தைதான் வசனகர்த்தா.  அவனுக்காக அவர் மாய்ந்து மாய்ந்து எழுதிய வசனத்தில் சிவன் தருமியிடம் பேசும் வசனமும் சரிசமமாக கலக்கப்பட்டிருப்பதை பிறகுதான் உணர்ந்தோம். ஔவையாக கோபாலும் அசத்தினான். பிள்ளையாராக குண்டு செல்வமணி எங்களை சுற்றி வந்து பழத்தை வாங்கிக் கொண்டு ஒரு இடத்தில் உட்கார்ந்துவிட்டான்.

எங்கள் குழுவின் ஒற்றுமை எல்லோரும் பார்த்து பொறாமைப்படும்படி இருந்தது.  மறுநாள் பள்ளியின் கடைசி நாள். எங்களுக்கும் தொடக்கப்பள்ளியின் கடைசி நாள். ஹெச்.எம். ஜெயராமன் சார் அஸெம்பிளியின் முன் எங்களை  நிறுத்தி பாராட்டி’ உதாரண குழந்தைகள் ’என்றார். கல்வியில் மட்டுமல்ல, எல்லா கலைகளிலும் இதுபோல் சிறந்து விளங்க வேண்டும் என்றார். மிகவும் நெகிழ்ந்திருந்தார். அவரையும் மற்ற ஆசிரியர்களையும் பிரிவதை நினைத்து நாங்களும் கலங்கி இருந்தோம்.

அப்பள்ளியில் இருந்த காலங்களில் கட்டிடங்களுக்கு மத்தியில் இருந்த சிறிய அஸெம்பிளி கிரவுண்டில் ஓரத்தில் நடப்பட்ட நெட்டிலிங்க மரத்துக்கெல்லாம் என் தலைமையில் கிருஷ்ணமூர்த்தியும் பிறரும் வட்ட வடிவ பேசின் குழி அமைக்க நானும் பிறரும் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவோம். வகுப்பறைகளில் எல்லோரும் பத்துபைசா போட்டு தண்ணீர் குடிக்க மண்பானையும், டம்ளரும் , பெருக்க துடைப்பமும் வாங்குவோம். தினமும் முறைவைத்து ஆண்கள் தண்ணீர் எடுத்துவர , பெண்கள் வகுப்பறையை பெருக்கி சுத்தம் செய்வோம். குழுக்களாக பிரிந்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை கிரவுண்டை சுத்தம் செய்வோம். மதிய உணவு பரிமாற ஆண்கள் குழுக்களாக பிரிந்து செய்வார்கள். மதிய உணவில் போடப்படும் மக்காச்சோள உப்புமா எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோடும் தினம் பரிமாறும் முன்பே எனக்கு பூவரச இலைகளைக் கோட்டித் தைத்து அதில் ஆவி பறக்க, கை சூடு பொறுக்க முடியாமல் கொண்டுவந்து தருவான் கிருஷ்ணமூர்த்தி. நான் வீட்டில் கொண்டுவைத்து சாப்பிடுவேன்.

வீட்டில் அம்மா என்ன பலகாரம் செய்தாலும் நான் வாயில் இடும் முன்பே வாசலில் விளையாடும் எல்லோருக்கும் எடுத்து ஓடுவேன். அம்மா ”நீ தின்னுட்டு எடுத்து போ” என்பாள். அதுவரை எனக்கு பொறுக்காது. எல்லோரும் பங்கிட்டுக் கொள்வோம். இரண்டு கல்கோனா இருந்தாலும் ஆடைக்கு அடியில் வைத்து காக்காய் கடி கடித்து பங்கிட்டுக் கொள்வோம். ஒட்டு மாங்காய் ஒன்று கிடைத்தாலும் கதவிடுக்கில் வைத்து உடைத்து பங்கிடுவோம். கிட்டத்தட்ட எங்கள் ஊருக்கும் முசிறி என்ற கிராமத்துக்கும் எல்லையாக உள்ள தேவுணி குளத்துக்கு சனி, ஞாயிறுகளில் போய் குளிப்போம். அப்போது அம்மா அழுக்கு துணியை என் தலையில் கட்டுவாள். சோப்புப் போட்டு ஊறவைத்து வைத்திருப்பாள். கும்மி அலச வேண்டும். கல்யாணியும், மாலாவும் எனக்கு உதவுவார்கள். சிலசமயம் தம்பியும் வரவேண்டும் என்று அடம்பிடிப்பான். என்னால் அவனை கேரியரில் வைத்து டபுள்ஸ் அடிக்க முடியாது. அவனை கிருஷ்ணமூர்த்தியோ, மணிகண்டனோ வைத்து அழைத்து வருவார்கள்.

போகும் வழியில் நின்று, நின்று மரமேறி தொங்கி விளையாடி காய் , பூலான் பழம், காட்டு எலந்தை, தாழையின் நடுப்பகுதி, பழுத்த கோவைக்கனி என்று தின்று சுவைத்து செல்வோம். தம்பி பயந்தாங்கொள்ளி . கேரியரிலேயே உட்கார்ந்திருப்பான். சின்னப் பையன். குளத்திலும் நீச்சல் தெரியாது. படிக்கட்டில் உட்கார்ந்து சொம்பால் தலையில் தண்ணீரை அள்ளி விட்டுக் கொள்வான். அக்குளத்தில் தண்ணீர் படிகம் போல் இருக்கும்.

எங்களுக்குள் அதிகமும் சண்டை வருவது சினிமா விஷயத்தில்தான். ஆண்கள் மூவரும் சிவாஜி ரசிகர்கள். நாங்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள். எனக்கு கறுப்பு வெள்ளை பட எம்.ஜி.ஆரின் சிரிப்பு மிக மிக பிடிக்கும். அதற்கே டிக்கெட்டின் ’பாதிக் காசு போய்விடும்’ என்பேன், ’மீதிக் காசு’ என்று சிரிப்பான் மணிகண்டன். ’தியேட்டர் ஓனருக்கு, போடா’ என்பேன். அதேபோல் கமல் எங்களுக்கும்  ரஜினி அவர்களுக்கும் பிடிக்கும். கலைந்த சிகையுடன் ஸ்டைலாக வரும் ரஜினியை எனக்கும் பிடித்திருந்தாலும் வீம்புக்காக சண்டையிடுவோம்.

ஏழாம் வகுப்பில் எங்களுக்கு கண்ணபிரான் என்ற ஹெச்.எம். பொறுப்பேற்றார். கல்வி, விளையாட்டு போன்ற எல்லா விஷயங்களிலும் எங்கள் பள்ளியை உதாரண பள்ளியாக மாற்றினார். ஃபுட் பால், வாலி பால் விளையாட்டுக்குழுக்களை ஏற்படுத்தினார். கிருஷ்ணமூர்த்தி ஒரு அணியிலும், மணிகண்டன் எதிர் அணியிலும் தலைவனாக ஆனார்கள். இருவரும் வெளியூர் ஃபுட்பால் டீம்களுடன் மோதிவிட்டு சிலசமயம் கோப்பைகளுடன் திரும்பினார்கள். மணிகண்டன் சொல்வான் கிரவுண்டில் வந்து பார்க்க சொல்லி. நான்கு மணி எதிர்வெயிலில் எனக்கு தலைவலி வரும் என்பதால் தவிர்த்துவிடுவேன்.

எட்டாம் வகுப்பில் எங்கள் மாலை நேர விளையாட்டுகள் இதனால் இல்லாமலாயின. அம்மாவும் ஓடிப் பிடித்து விளையாடுவது, ஒளிந்து விளையாடுவது இதெல்லாம் வேண்டாம் என்பதை மறைமுகமாக உணர்த்தினாள். ’தடிப்பசங்க மாதிரி நிக்காதே’, ’பொம்புளப் புள்ளயா லச்சணமா இரு’ என அவ்வப்போது சொல்லப்பட்டது. எங்கள் வீட்டில் அப்பா ரேடியோ வாங்கியதால் என் கவனம் மாலை நேரம் பாட்டுக் கேட்பதில் திரும்பியது. சனி, ஞாயிறு பகல்களில் மட்டும் கேரம் விளையாடினோம்.

அந்த வருடம் ஆண்டுவிழாவில் ஒரு குழு நடனம் ஆடினோம். நான், மாலா, வெற்றிச்செல்வி, கல்யாணி, பவுனம்மாள், ராஜி. ஆறுபேரை வைத்து ஜோதி டீச்சர் பயிற்சி கொடுத்தார். அவர் கொஞ்சம் சுமித்ரா சாயலில் இருப்பார். எனக்கு வரலாறு, புவியியல் எடுத்தார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். பாடல் ’ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ மெட்டில் அமைக்கப்பட்டது. எங்கள் உள்ளூர் பள்ளிக் கவிஞர் சொக்கலிங்கம் சார்,

 ’ஆயிரம் பிள்ளைகள் பாருங்களே’

 ’எங்கள் ஆனந்தப் பள்ளியில் சேருங்களே,’

’இங்கு எங்கள் ஹெச். எம். கண்ணன் சார்’

இப்படியாக  ஹெச். எம் புகழையும், பள்ளியின் புகழையும் சேர்த்து பரணி பாடி வைத்திருந்தார். எங்களுக்கு ஃபிஸிக்ஸ் லேப்பின் ஒரு அகன்ற பகுதியில் ரிகர்சல் தரப்பட்டது. நாங்கள் அறுவரும் வார இறுதிகளில் எங்கள் தொடர்வீடுகளின் விறகு அடுக்கப்பட்ட ஒரு மறைவான இடத்தில் ஒத்திகை பார்ப்போம். அப்போது குஞ்சு,குளுவான்கள் எல்லாம் வந்து எட்டிப்பார்க்கும். அதன் நடுவில் கிருஷ்ணமூர்த்தியும், மணிகண்டனும் சைக்கிளில் ஒரு காலும் , கீழே ஒரு காலுமாக வந்து பார்ப்பான்கள். நாங்கள் விரட்டுவோம். ”இதுக்கே வெக்கப்படுறீங்க, இன்னும் ஒரு வாரத்துல ஊரே தெரண்டு பாக்கும்” என்பான் மணிகண்டன். “அத நாங்க பாத்துக்குறோம், இப்ப நீ போ” என்று விரட்டுவேன். எப்படியோ ஆண்டுவிழாவில் ஜோதி டீச்சர் நிறைவடையும்விதமாக ஆடினோம்.

பாஸ்கா போய்விட்டு வந்தபிறகு  கொஞ்ச நாட்களிலேயே டேலண்ட் டெஸ்ட் எனப்படும் போட்டித்தேர்வு பட்டுக்கோட்டையில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எங்களுக்கு நடந்தது. நானும் மணிகண்டனும் எழுத தேர்வாகியிருந்தோம்.  அப்பா என்னை அழைத்து சென்றார். அதேபஸ்ஸில் அவனும் வந்தான். அவன் முகம் வாடியிருந்தது. ’நல்லா படிச்சியா’ என்று ஜாடையால் கேட்டேன். பலவீனமாக ஆமோதித்து புன்னகைத்தான். நான் தேர்வை திருப்திகரமாக எழுதினேன். முடிந்து பஸ்ஸில் வரும்போது அடுத்த இருநாட்களில் புள்ளமங்கலம் போகும் கனவில் பஸ்ஸில் போட்ட பாடலில் மெய்மறந்து வந்தேன்.

எட்டாம் வகுப்பு முழுஆண்டுத் தேர்வின்போது அப்பாவிற்கும் அய்யாக்கண்ணு என்ற ஆசிரியருக்கும் ஒரு சண்டை வந்து அது கைகலப்பில் முடிந்தது. வீட்டில் அமைதியின்மை நிலவியது. அய்யாக்கண்ணுவின் சொந்த ஊர் ஆலத்தூர் என்பதால் நாங்கள் மாற்றலில் போக வேண்டியிருந்தது . அப்பா தனக்கும் அம்மாவுக்கும் மதுக்கூருக்கு மாற்றல் கேட்டு விண்ணப்பம் கொடுத்தார். இவ்விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றார். நானும் சொல்லவில்லை.

மேமாத விடுமுறை முடிந்து நாங்கள் ஊர் திரும்பி மதுக்கூரில் வீடு பார்த்து அங்கு மாறினோம். ஜாகை மாறுவதற்கு பொருட்களை அடுக்க, கட்ட, ட்ரக்கில் ஏற்ற என் தோழர்கள் அனைவரும், பியூன்கள், பால்கார அண்ணன், ராவுத்தர் மாமா என எல்லோரும் உதவினர். நாங்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை. மனம் கனத்திருந்தது. அம்மாவும் சக டீச்சர்களை பிரியும் துயரத்தில் இருந்தாள். அப்பாவின் வண்டி, என் சைக்கிள் எல்லாவற்றையும் ட்ரக்கில் அனுப்பி விட்டோம். மெயின் ரோடுக்கு போய் பஸ் ஏற நடந்து போகும் வழியெங்கும் கலங்கிய கண்களையும், பிரியா விடை தந்தவர்களையும் பார்த்துக் கொண்டே கையசைத்து சென்றோம்.

என் குழுவினர் ஆறு பேரும், அம்மாவின் சக ஆசிரியைகளும் பஸ் நிறுத்தம் வரை வந்தனர். நான் என் தோழிகள் மூவரையும் கட்டியணைத்து அழுது கொண்டிருந்தேன். கிருஷ்ணமூர்த்தி சத்தமாக தேம்பிக் கொண்டிருந்தான். மணிகண்டனும் கார்த்தியும் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தனர். பஸ் வந்தது. ஏறி அமர்ந்து கண்ணீருடன் கையசைத்தேன். பஸ் நகர்ந்ததும் அம்மாவின் மடியில் விழுந்து அழுதேன்.

டேலண்ட் டெஸ்ட் முடிந்து வந்து மறுநாள் புள்ளமங்கலம் செல்ல பேக்கிங் முழு வீச்சில் என் வீட்டில் நடந்தது. அன்றுமாலை அம்மா சத்யபாமா டீச்சர் வீட்டில் எதையோ கொடுத்துவர சொன்னாள். அவர்கள் வீடு கொஞ்சம் தொலைவு. நான் கொடுத்துவிட்டு ஒரு குறுகிய பாதைவழியாக  பாட்டு பாடியபடியே விரைந்து திரும்பிக் கொண்டிருந்தேன். குறுகிய பாதையை நாங்கள் ஒழுங்கை என்போம். குறுக்கே மணிகண்டன் சைக்கிளில் வந்து நின்றான்.

”அருணா, ஒங்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்.”

”முன்னெல்லாம் பாப்பான்னு கூப்பிடுவ. இப்ப அருணாங்கிற. அது வீட்டுல என்னோட செல்லப்பேரு”.

”நீ இன்னும் என்ன சின்ன பாப்பாவா”. பாதி கிண்டலும் எரிச்சலுமாக சொல்கிறான்.

என்ன அழுத்தம் திருத்தமாக பேசுகிறான். முன்பெல்லாம் மல்லாக்கப் போட்ட பல்லியின் நிறத்தில் வெளிறிப் போயிருப்பான். இப்போது நிறம் ஆரோக்கியமான சிவப்புக்கு வந்துவிட்டது. எங்கள் குழுவிலேயே உயர்தர உடை அணிபவன் அவன்தான். அவன் அப்பா ஆஃபீஸர். ஹெல்த் இன்ஸ்பெக்டர். இப்போது இன்னும் நாகரீகமாக உடை அணிகிறான். முகமும் திருத்தமாக  ஆகிவிட்டது.

”ஒங்கப்பா மதுக்கூருக்கு ட்ரான்ஸ்ஃபர் அப்ளை பண்ணியிருக்காரா? ஒங்க அம்மாவுக்கும் சேர்த்து.?”

அதை நான் யாரிடமும் சொல்லவில்லையே. இவனுக்கு எப்படி தெரிந்தது?

”ஒனக்கு எப்டி தெரிஞ்சுது?”

”அதுவா இப்ப முக்கியம். உண்மையா? இல்லையா? சொல்லு”

”ஆமா. அடுத்த வருஷம் ஒன்பதாவது நான் அங்க சேரப்போறேன்.”

”எங்களல்லாம் பிரிஞ்சு போறது ஒனக்கு கஷ்டமா இல்லியா?”

”கஷ்டமாத்தான் இருக்கு.”

”கஷ்டமாத்தான் இருக்குன்னு சிரிச்சுகிட்டே சொல்ற.”

”சிரிப்பு வருது. என்ன செய்ய? மதுக்கூர் கொஞ்சம் பெரிய டவுனாம்.”

”அருணா , நீ நெனக்கிற மாதிரி அது பட்டுக்கோட்ட மாதிரி இருக்காது. மதுக்கூர் டவுன் பஞ்சாயத்துதான். ஸ்கூலும் ஷிஃப்ட் சிஸ்டமாம். நம்ம கண்ணபிரான் சார் மாதிரி அங்க நல்ல ஹெச்.எம். இல்ல. பசங்களும்  சரியான தறுதலைங்க.”

”அதுக்குள்ள இதெல்லாம் விசாரிச்சிட்டியா? அப்பா முடிவெடுத்துட்டார்.  ஆனா ஒரு வருஷம்தான் மதுக்கூரில. அதுக்கப்புறம் அப்பா பட்டுக்கோட்டையில சொந்தவீடு வாங்கி அங்க என்ன கான்வெண்டுல சேத்துடலாம்னு இருக்கார்.”

அவன் முகம் தொங்கிப்போனது. மவுனமாக தலையைக் குனிந்து கொண்டான்.

”நான் அர்ஜெண்டா போகணும்” என்று சொல்லி வீட்டிற்கு ஓடினேன்.

10 thoughts on “சின்னஞ்சிறு மலர்

  1. அன்பின் அருணா
    அழியாதகோலங்கள் இல்லையா இவையெல்லாம்? உங்களின் அபார நினைவாற்றலை வியக்கிறேன். நானும் ஆசிரியர்களின் மகளானதால் இதில் பல சம்பவங்களை என் பால்யத்துடனும் பொருத்திப்பார்த்துக்கொண்டேன்.
    கிரௌண்டில் நீங்கள் நிகழ்த்திய கலைநிகழ்ச்சியை வாசிக்கையில் வெடித்து சிரித்தேன்.உள்விளையாட்டுக்களில் கூடுதலாக தீப்பெட்டி முகப்பு படங்களை சேகரிப்பதும் எங்களுக்கிருந்தது.
    வாசல் நிலைப்படியில் அமர்ந்து திருக்குறள் வாசிக்கும் அருணாவை சமையலறை வாசலில் அமர்ந்திருக்கும் ஜெ வின் அம்மாவுடன் மனம் எப்படியோ ஒப்பிட்டுக்கொண்டது..
    ஆப்பிள்விதை மாலையை மறந்தே போயிருந்தேன். அது என் மனவெளியின் ஆழத்திலிருந்ததை இன்றுதான் அறிந்தேன். அந்த பளபளக்கும் மணிகளை நினைத்துக்கொண்டேன்.
    துவக்கத்திலிருந்து உங்கள் பக்கமே சாய்ந்திருந்த மனம் கடைசியில் மணிகண்டன் பக்கம் முழுமையாக சாய்ந்து விட்டது. முடிக்காமல் விட்டுவிட்டீர்கள் முடிந்து போன பால்யகாலத்து கதைகளை .வசீகர தலைப்பு வழக்கம்போல.

    Like

  2. சின்ன சிறுமலர்

    பள்ளியெங்கும் உல்லாசமாக திரிந்த உங்களை வகுப்பில் உட்காரவைத்து சிறைபடுத்தியதை உங்களது கண்ணீர் சொன்னது.அந்த சிறுவயது அருண்மொழியின் புகைபடத்துடன், தாரைதாரையாக கண்ணீர் வழிவதை பொருத்திப் பார்த்தேன். சிறுநகை தான் வந்தது.

    வாத்தியார் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஓசி கொடுத்து தோழமையை ஏற்படுத்திக்கொள்வது எல்லா ஊரிலும் நடக்கிறது.அதை விவரித்த விதம் அருமை.

    பட்டப்பெயர், கூடப்படிப்பவர்களுக்கு மட்டும்தானா? வாத்தியார்களுக்கு ……? ஆனால் 6-ம் வகுப்பு முதற்கொண்டு எல்லோருக்கும் பட்டப்பெயர் வைத்துள்ளோம்.

    எல்லா சம்பவங்களும், வகுப்பில் நடந்த போட்டிகள், பள்ளியில் நடந்த பேச்சுப்போட்டி ,பாட்டுப் போட்டி , விளையாட்டுக்கள், நாடகங்கள், குளத்துக்கு செல்லும் பயணங்கள் எல்லாம் ரசனை கொண்டதே.

    இப்படி சிறுசிறு சம்பவங்களை எல்லாம் கோர்வையாக சொல்லும்போதுதான் நம்முடைய பள்ளி வாழ்க்கை ஆனந்தமயமானது என்ற எண்ணம் தோன்றுகிறது.

    வரும் சந்ததிகள் இதை படித்து உங்கள் மீது உண்மையிலேயே பொறாமை கொள்வார்கள்…..எவ்வளவு இன்பகரமானது இவர்களது பள்ளி நாட்கள் என்று.

    நானும் சில சம்பவங்களை நினைத்துக்கொள்வேன்.ஆனால் இவ்வளவு கோர்வையாக சரளமாக எழுத முடியாது.

    கடுமையான மொழிநடைகளை படிந்த உங்களால் எப்படி இந்த எளிய நடையில் எழுதமுடிகிறது என்ற வியப்புடனும்
    வாழ்த்துகளுடனும்
    வே. அனுமுத்து.

    Like

  3. சின்னஞ்சிறு மலர்:
    90’s கிட்ஸ் ஆன நாங்கள்தான் நீங்கள் விளையாடிய அத்தனை விளையாட்டுகளின் கடைசி மொட்டு எனது குழந்தை பருவத்தின் மொட்டுகளனைத்தும் சினிமாவில் வரும் Total recall போல படித்த உங்களின் வரி எனது குழந்தைமை படச்சுருளாக விரிந்தது. குறிப்பாக அம்மா கரி அடுப்பின்புகை, மரத்தூள் அடுப்பின் புகை சூழ தேவதைபோல இருப்பாள். இந்த வரி ஒரு கவிதையின் உச்ச கனம், உங்களின் ஒவ்வோர் பதிவும் டைம் மெஷின் பயணம் போல மீண்டு வருகிறேன்.இன்று ஜெ பதிவிட்ட மொக்கவிழ்தலின் தொடுகையில் அம்மாடி,
    அத்தனை உறுதி ஒன்றுமில்லை.
    சிறுமகள் தொட்ட
    தந்தையின் உடலென
    கொஞ்சம்
    நெகிழ்ந்துதான் போனதென்
    வீடு ,சின்னஞ்சிறு மலரை போல்

    மூர்த்திஅருண், கல்பாக்கம்.

    Like

    1. அருண் மொழி அவங்க நினைவலை சின்னஞ் சிறு
      மலர் செய்யும் குறும்பு என் நினைவில் வந்து சென்றது.
      அழகான தொகுப்பு.

      Like

  4. சின்னஞ்சிறு மலர்… 😊🌹
    நம் பால்ய வாழ்க்கை , பிற்காலத்தில் அசை போட்டுக் கொள்ள, கடவுள் நமக்குத் தந்த பரிசு. உங்கள் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்ற உணர்வில்லாமல், குறுகிய நேரம் அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்தியது. கடந்த கட்டுரைகளை விட மெருகூட்டி, மெய் மறக்க வாசிக்கச் செய்தீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.. 👍💐

    Like

  5. இதை விட சிறப்பாக பால்ய காலத்தை சொல்ல இயலுமா என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. இனி ஒருபோதும் திரும்பக் கிடைக்காத பால்ய காலத்தை நினைத்து பார்க்கும் போது வாழ்க்கை வெறும் மாயா என்றே எனக்கு படுகிறது. தோன்றிய அனைத்தும் சுவடு இன்றி மறைகின்றன. உங்கள் எழுத்துக்கள் வழியாக திரும்பி பார்க்க ஒரு வாய்ப்பு நீங்கள் அளித்துள்ளீர்கள். 

    இன்னொரு விஷயம், நீங்கள் குறிப்பிடும் ஆலத்தூர் என் தங்கையின் மாமனார் ஊர். அவள் நெதர்லாந்தில் வசிக்கிறாள். 2018 ல் அவளுடன் ஆலத்தூர் வந்து இருந்தேன். வெயில் கால மதிய வேளையில் ஆலத்தூரின் அமைதி பிடித்து இருந்தது. ஊர் திண்ணை வீடுகள்..அங்கு அமர்ந்து கொண்டு இரவினில் நிலவை கண்டு ரசித்து கொண்டு வாழலாம் என்று வழக்கம் போல் என் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன. அந்த ஊரின் நீரோடை ஒட்டி ஒரு பிள்ளையார் கோவில், அது என் தங்கை மாமனாரின் தம்பி பொறுப்பில் உள்ளது. கோயில் பூட்டை திறந்து பேசி கொண்டு இருந்தார்கள் தங்கையின் மாமனாரும் அவர் தம்பியும். போன் செய்து ஐயரை வர சொன்னார்கள். எனக்கு அந்த சலசலவென்று ஓடும் ஓடையின் மீதே கண் இருந்தது. அங்கு இருந்த ஆலமர திடலில் பையன்கள் கிரிக்கெட் ஆடி கொண்டு இருந்தார்கள் என்று நினைக்கிறேன். அன்று ஞாயிற்றுக்கிழமை. ஐயர் வந்து பூஜை எல்லாம் நடந்தது. நான் சாமி கும்பிடுவது இல்லையென்றாலும் அமைதியாக ஏற்று கொண்டேன். அன்று இரவு தங்கும் வாய்ப்பு கிடைத்தால் அமைதியாக ஊரை சுற்றி வரலாமே, அந்த ஓடையின் சத்தத்தை கேட்டு கொண்டே வழக்கம் போல் கற்பனை குதிரையை தட்டி விட்டு பறக்கலாமே என்று ஒரு நப்பாசை. ஆனால் சாப்பிட்டு சாயங்காலம் கிளம்புவதுதான் பிளான் என்பதால் நான் ஒன்றும் சொல்லவில்லை. திரும்பவும் வீடு வந்து சாப்பிட்டு விட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவையே பார்த்து கொண்டு இருந்தேன். உள்ளே அனைவரும் பேசி கொண்டு இருந்தார்கள். எனக்கோ இரவினில் எத்தனை அமைதியாக இந்த திண்ணையில் படுத்து கொண்டு கனவு காணலாம் என்று நினைப்பு ஓடுகிறது. இது போன்ற ஊர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். கார் ஊரை விட்டு கிளம்பும் போது என்னையறியாமல் பல நாள் பழகிய ஊரை விட்டு போவது போல் ஒரு நினைப்பு. அதன் பிறகு இப்போது உங்கள் எழுத்துக்களில் அந்த நினைப்பு மீண்டும் வந்தது! 

    Like

  6. நீங்கள் குறிப்பிடும் கோவிலை அடுத்துள்ள இடத்தில் இருக்கும் வரிசை வீடுகளில் ஒன்றில் தான் நாங்கள் குடியிருந்தோம். இப்போது அவ்வரிசை வீடுகளே மறைந்து போயிருக்கலாம். ஆனால் ஆல மரமல்ல, அரச மரம் என்று நினைவு. எங்கள் விளையாட்டு த் திடலில் அதுவும் ஒன்று. அந்த ஓடையில் அபூர்வமாகவே நீரோடிப் பார்த்த நினைவு . 1983 க்குப் பிறகு அங்கு செல்லவில்லை நான். என் நினைவில் இருக்கும் ஆலத்தூர் எனக்கு பொக்கிஷம்போல.

    Like

  7. அபார ஞாபக சக்தி உங்களுக்கு. ஆம், எழுதும் போது எனக்கும் தோன்றியது. அது அரச மரம் தானே என்று, சந்தேகத்தை எதற்கு எழுதுவானேன் என்று விட்டு விட்டேன். அரச மரம்தான். நீங்களும் அதே தெரு என்றுதான் நினைக்கிறேன். அந்த வரிசை வீடுகள் மறையவில்லை. சில சிதிலமடைந்து காணப்பட்டதாக நினைக்கிறேன். அந்த தெரு பெரிய மாறுதல்கள் இல்லாமல் ஒரு காலகட்டத்தை பிரதிபலிப்பது போல் தான் இருந்து கொண்டு இருக்கிறது. 

    Like

Leave a reply to அருண்மொழி நங்கை Cancel reply