மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும் – கடிதங்கள்

அன்பான அக்கா,

‘வானத்தில் நட்சத்திரங்களுக்கு’ பிறகு மற்றுமொரு நல்ல சிறுகதை படித்த அனுபவம். ஒரு நல்ல புனைவு மனிதர்களைப் பற்றி நமக்கேற்படுத்தும் அறிமுகம் என்பது நம்மையும் அறிந்துகொள்வதுதானே. புனைவுகள் அவற்றை மீண்டும் நம் கண் முன்னால் நிகழ்த்திக்காட்டும்போது நாம் மீண்டும் காண்பது கடந்து வந்த அந்த சாம்பல் தருணங்களைத்தான். என்ன… நாம் அப்போது அதிலிருந்து வெளியில் நிற்போம்.

இந்தப் பதிவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானவர்கள். அவ்வளவு அழகாக அவர்கள் கதைக்குள் உருவாகி வருகிறார்கள்.  எல்லோரும் வியக்கும் அழகுகொண்ட மனோகரன் ஆசிரியர் மேல் உங்களுக்கு இருந்த ஈர்ப்பு எல்லா மாணவிகளுக்கும் ஓர் ஆசிரியர் மேல் ஏற்படுவது. ஆனால் அந்த ஈடுபாட்டின் மீது எந்த பொருளும் இல்லை என ஒவ்வொரு மாணவிகளும் உள்ளூர அறிந்திருப்பார்கள். ஆனாலும் தன் மீது அந்த ஆசிரியர் செலுத்தக்கூடிய தனி கவனம் என்பது மாணவர் பருவத்தில் அலாதியானது.

இந்த கதையின் நாயகன்/ நாயகி மனோகரன் சாரோ ஜோதி டீச்சரோ இல்லை; நீங்கள்தான். நீங்கள் மனோகரன் சாருடன் பழகுவதால் மூத்த மாணவிகளுக்கு ஏற்படும் பொறாமையையும் வெறுப்பையும் நீங்கள் அறிவதுபோலவே ஜோதி டீச்சர் அவரால் நாணம் அடையும்போது எரிச்சல் அடைக்கிறீர்கள். அவர்கள் இருவரும் ஜோடியாக இருப்பது அழகானதுதான், ஆனால் அதில் உங்கள் இருப்பு என்ன என்பது உங்களுக்கு முக்கியமானது.

அந்த வயதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் ஆதாரமான கேள்வி அல்லவா அது?

அந்தக் கேள்விக்கான பதிலை உங்களுக்குள் உறுதி செய்துக்கொள்ள நீங்கள் ஆடும் ஆட்டத்தின் சுவாரசியம்தான் இந்தக் கதை. மணிகண்டனை பதைபதைக்க வைக்கிறீர்கள். “நான் உனக்கு பாதுகாப்பாக உடன் வருகிறேன்” என்பதைதான் தனக்கு கணக்கு சரியாக வரவில்லை என சுற்றி வளைத்து சொல்கிறார் பாவம். அடுத்து ஜோதி டீச்சரை பொறாமை அடைய செய்கிறீர்கள். ஒரு கட்டம் மனோகரன் சாரைக்கூட இறங்கி வர வைக்கிறீர்கள். எல்லாமே உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விளையாட்டு. ஆனால் அந்த விளையாட்டு நிகழும் மெல்லிய கோட்டில் உங்கள் சமநிலையை அசைக்கும் சலனங்கள்தான்  இதை உச்சமாக்குகிறது.

டீச்சரை நீங்கள் கட்டிக்கொண்டு அழும்போது ஒரு நிமிடம் நீங்கள் மறந்துபோகும் விளையாட்டின் விதிகள் இதை சிறந்த பதிவாக மாற்றுகிறது.

எழுத்தாளர் ம.நவீன்,

மலேசியா.

***

மேடம்,

வாழ்வின் எடையால் துவண்டு போன ஒரு மலாரத காதல் கதை இக் கட்டுரை. ஒரு சிறுமிக்கு எவ்வளவு தெரிகிறது என ஒரு சமயமும், இவ்வளவு தான் அவள் அறிவாள் என மறு சமயமும் எண்ணவைத்தது. அச் சிறுமி கண்ட ஜோதி டீச்சர் மனோகரன் சார் உறவு என்பது மிக மிக குறைவாகவே வெளிப்பட்டுள்ளது, அதாவது எவ்வளவு அவளுக்கு தெரியுமோ அவ்வளவு, சற்று யோசித்தால் எவ்வளவு உள்ளதோ அவ்வளவு. இந்த அளவுக் கச்சிதம் மிக மிக குறைவான எழுத்தில் தான் காணக் கிடைக்கிறது. நீங்கள் எழுதித் தேற வேண்டியது எதுவும் இல்லை.

வளரிளம் பருவ சிறுமிக்கும் மனோகரன் சாருக்கும் உள்ள உறவும் அவ்வாறே ஒரு crush coated friendship. இதுவும் சரியான பதத்தில் சொல்லப் பட்டுள்ளது. ஜோதி டீச்சர் மீது பொறாமை கொள்ளாதது வாழ்க்கையில் நாம் காணும் இன்னுமொரு மர்மம் தான்.

இது போன்ற உறவுகளும் பிரிவுகளும் அப்போது பெரிதாகத் தோன்றும் பின் சிறுத்து விடும். ஆண்டுகள் போன பின் எண்ணிப் பார்க்கும்போது மீண்டும் பெரிதாகும். ஒரு பலூனை ஊதி அவிழ்த்து பின் ஊதுவது போல, காற்றில் கரைந்ததை நினைவில் நிரப்புகிறோம். நெடுநாள் மறந்த இசையை எதிர்பாராத சந்தர்பத்தில் கேட்டது போல இருந்தது மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும்.

கிருஷ்ணன்,
ஈரோடு.

***

அழகான பதிவு. மீண்டும் ஒரு சிறுகதை. சொல்லாமலே அநேகம் சொல்லும் உங்கள் திறனை மிகவும் வியக்கிறேன் அருணாம்மா 🤗

இந்தப்பதிவில் மனோகரன் சாரின் பாத்திரம் மிகத்துல்லியமாக வந்துள்ளது.

அவர் அருணாவின் கண் வழியாக பார்க்கப்படுபவராகவே வருகிறார். வளர்ந்து வளர்ந்து ஒரு கட்டத்தில் அவர் மனம் வெளிப்படும் இடத்தில் ஒரு quick reversal நடக்கிறது. அருணா பார்க்கப்படுகிறாள், அதை அவளும் உணர்கிறாள். ஒரு சின்ன self consciousness முளைக்கும் இடம். அது கதையில் நிகழ்த்தப்பட்ட விதம் மிகச்சிறப்பாக பட்டது.

மணிகண்டன் வந்த இடம் அவனை மேலும் நெருக்கமாக உணர வைத்தது 🙂

அருணாவுக்கும் ஜோதி டீச்சருக்குமான இணைவின் மர்மம் – நெருக்கமும் குரூரமும் மாறி மாறி தோன்றும் இடங்கள் – இந்தக்கதையின் உச்சப்புள்ளிகள். அவை மிக மென்மையாக சொல்லப்பட்டுள்ளன.

வயது குறைவான அருணாவால் மனோகர் சாரிடம் சுதந்திரம் எடுத்துக்கொண்டு கிண்டல் கேலி என்று பழக முடிகிறது. சாருடன் ஜோதி டீச்சரின் உறவு சற்று முதிர்ச்சியானது, ஆனால் அதில் அந்த சுதந்திரம், வெளிப்படைத்தன்மை இல்லை.

இரண்டு பெண்களும் எங்கோ ஒருவரை ஒருவர் வேவு பார்க்கிறார்கள், சின்னதாக பொறாமை கூடக் கொள்கிறார்கள், ஆனால் மறுபுறம் இணக்கமாகவும் இருக்கிறார்கள். அருணா அவர்கள் சுற்றுவதைப் பார்க்கப் பிடிக்காமல் இருப்பதும், ஆனால் மாலையும் கழுத்துமாக கற்பனை செய்கையில் அது அழகாகத் தோன்றுவதும் நுட்பமான இடம். அதே போல் ஜோதி டீச்சர் அருணாவை கவனமாக கேள்வி கேட்பதும்.

எழுத்தாளர் சுசித்ரா,

சுவிட்ஸ்சர்லாந்த்.

***

அன்புள்ள அருண்மொழி மேடம்,

உங்கள் மனோகரன் சாரும் ஜோதி டீச்சரும் வாசித்தேன். இந்த கட்டுரை, சுய நினைவுகள் என்னும் பதிவை தாண்டி சிறுகதையின் உச்சத்தைத் தொட்டுவிட்டது.

கந்தர்வன் மனிதனாவதும், மனிதன் கந்தர்வன் ஆவதும் தமிழ் சிறுகதைகளில் நிறைய பேசப்பட்ட பின்பும் கூட இந்த கதையில் வரும் மனோகரன் சார் கந்தவர்கன் என்னும் நிலையில் இருந்து மனிதனாக மாறும் தருணம் அதன் புதுமையுடனே நிற்கிறது.

மனோகரன் சார் ஜோதி டீச்சர் மட்டுமல்லாமல் இந்த பதிவின் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் முக்கியமானவர்கள். மனோகரன் சார் கதையில் மணிகண்டன் ஏன் வந்து செல்கிறார் என்ற கேள்வி எழுகிறது. மிக முக்கியமாக உங்கள் கதாப்பாத்திரம், அந்த வளரிளம் வயதில் ஆசிரியரின் கவனத்தை, தன்னை ஆசிரியரின் சரிநிகர் சமம் மாக நடத்தச் சொல்லும் பெண்மையும், அவரை சிரிக்க வைக்கும் குழந்தையும் ஒன்றான கதாப்பாத்திரம் அருணா.

அவரிடம் உள்ள கந்தர்வனை மீட்டெடுத்து அருணா ஜோதி டீச்சருக்கு கொடுக்கிறாள். ஒரு மாபெரும் விளையாட்டு அந்த கந்தர்வனை மீண்டும் மனிதனாக மண்ணில் இறக்கி வேடிக்கைப் பார்க்கிறது. அதனை விளையாட்டு என்றே சொல்லத் தோன்றுகிறது. அதனை விதி என்றாலோ, கோழைத் தனம் என்றாலோ, சமூகத்தின் நெருக்கடி என்றாலோ, அருணா என்ற கதாப்பத்திரம் ஆட சென்ற விளையாட்டின் எதிர் முனை துலாத்தட்டு இறங்கிவிடும். அதனால் மனோகரன் சார் இரண்டு பக்கத்தையும் பரமபத ஆட்டத்தின் போக்கென்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது. அந்த ஆட்டத்தின் ஏணி அருணாவாக நிற்கிறார். மனோகரன் சார் அந்த ஏணியில் ஏறிச் சென்று ஜோதி டீச்சரை அடைய முயற்சிக்கிறார். நடுவில் வந்த நாகங்களின் விளையாட்டே இந்த பரமபதம். ஆனால் அவை சொல்லாமல் சொல்லப்பட்டதே இக்கதையின் சிறப்பு என்று நினைக்கிறேன்.

நல்ல சிறுகதை மேடம். நன்றி.

அன்புடன்,

விஜிதா.

***

அன்பின் அருண்மொழி நங்கைக்கு,

வணக்கம்.

தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.உங்கள் நினைவுத்திறன் கண்டு வியப்பாக இருக்கிறது.நாங்களும் பள்ளிப்பருவத்தையெல்லாம் கடந்துதான் வந்திருக்கிறோம்.ஆனாலும் இப்படி இம்மி பிசகாமல் பால்ய நினைவுகளை மீட்டெடுப்பது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தனித்திறன்.தங்களுக்கு அது வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்கள்.         

“இங்க வேலைல ஜாயின் பண்ணப்புறம் இந்த ஃப்ரெண்ட்ஸ் கூட பழகி நான் கொஞ்சம் நார்மலா ஆனேன்.ஆனா என்ன ரொம்ப          ஜாலியானவனா மாத்துனது நீதான்.”என்று மனோகரன் சார் கூறியதும், நான் கண்ணீருடன் புன்னகைத்தேன் என்பதாக அந்த வரிகளை முடிந்திருந்தது ஓர் அற்புதமான தரிசனம்.         ஒரு மேலதிகாரியோ அல்லது நமது மனதிற்குப் பிடித்தமானவர்களோ நம்மை நேரடியாகப் பாராட்டும்போது உணர்ச்சி மேலீட்டால் மயிர்கூச்செரிந்து கண்ணீர் திரளும் அந்தத் தருணத்தின் உணர்ச்சி பாவங்களை அப்படியே வாசகனுக்கும் கடத்திய விதமே தங்கள் கூர்மையான எழுத்தின் தரத்தை கட்டியம் கூறுகின்றன.      இன்றைய பதிவு என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தேன்.நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு உயிரியல் பாடம் எடுத்த கௌரி டீச்சரை மீண்டும் கண்ணெதிரே நிறுத்தி விட்டீர்கள்.நான் அவர்களின் செல்லப் பிள்ளையாக வலம் வந்ததும் சக மாணவர்கள் பொறாமைத் தீயில் வெந்ததும் நினைவுக்கு வந்து போனது. (கௌரி டீச்சர் பல் எடுப்பாக சோடா புட்டி கண்ணாடியோடு இருப்பார்கள் என்பது மேலதிக தகவல்)  ஒரு பேச்சுப் போட்டியில் நான் வகுப்பையே அண்ணார்ந்து பார்க்கவைத்த தருணத்தில் கௌரி டீச்சர் என்னைப் பாராட்டி மாணவர்களை எழுந்து நின்று கைதட்ட வைத்தபோது அன்று திரண்ட கண்ணீரை இன்று மீண்டும் துடைக்க வைத்துவிட்டீர்கள்.    

நன்றி.

வாழ்க வளர்க.                

இரா.விஜயன்         

புதுச்சேரி-10.

***

Leave a comment