நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 1

மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவின் வீட்டிற்கு நானும் ஜெயனும் பலமுறை சென்றிருக்கிறோம். அவர் ஜெயனுக்கு குருவும் தந்தையுமானவர். கேரளத்தில் திருச்சூரில் இருந்தார். எங்களுக்கு திருமணமாகி நான்கைந்து வருடங்கள் கழித்து ஒருமுறை அங்கு சென்றபோது, அவர் வீட்டு முற்றத்தில், மாமரத்தடியில் அமர்ந்து அவருடன் தனியே பேசும் சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. அப்போது ஆற்றூர் என்னிடம் ஜெயன் பற்றி ஏதோ கேட்டார். நான் என் வழக்கப்படி உணர்ச்சி பரவசத்துடன் பதில் கூறினேன்.
அப்போது அவர் “மலையாளத்தில் ’பிரகாசம் பரத்துந்ந பெண்குட்டி’ என்றொரு சொற்பிரயோகம் உண்டு. நீயும் ஜெயமோகனும் உங்கள் திருமணம் நடந்த மறுநாள் இங்கு வந்து பத்து நாட்கள் போல தங்கினீர்கள். .அப்போது உனக்கு சிறிதும் மலையாளம் தெரியாது. எனக்குத் தெரிந்த குறைந்தபட்ச தமிழில் உன்னுடன் உரையாடுவேன். நீ பேசும் அதிவேகமான தமிழை நான் உன் கையசைவை வைத்து ஓரளவு புரிந்து கொள்வேன். அப்போது தோன்றிய அந்த எண்ணம் இப்போது வரை எனக்கு அப்படியே உள்ளது. நீ உன்னைச் சுற்றிலும் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருபவள்” என்றார்.

எனக்கு அப்புகழ்ச்சி பிடித்திருந்தாலும் கூச்சமாக இருந்தது. அவர் அப்படி உணர்ச்சிகரமாக பேசுபவரே அல்ல. அவர் கவிதைகள் கூட மலையாள உரத்த கவிதைகளுக்கு மத்தியில் அடக்கப்பட்ட உணர்வு வெளிப்பாடும், ஒரு முரண் நகைச்சுவையும் அமையப் பெற்றவை.

நான் உடனே ”எனக்கு எப்போதும் இந்த சந்தேகம் வரும். எப்படி சிலர் வாழ்வில் மட்டும் இந்த இயற்கையின் நியதி சற்று கருணையோடிருக்கிறது என்று? ஒத்த ரசனையுள்ள, மனமொத்த தம்பதிகளை நான் மிக அரிதாகவே கண்டிருக்கிறேன். திருமணம் குறித்த அச்சம் என்னை வெகுவாக ஆட்டிப் படைத்து ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தேன். அப்போதெல்லாம் மிகச் சராசரியான, உலகியல் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் ரசனையற்ற மனிதன் ஒருவன், எனக்கு அமைந்து விட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வதே என்னால் தாள முடியாததாக இருந்திருக்கிறது . ஆனால் என்னிடம் அந்த நியதி அளவுகடந்த கருணை காண்பித்திருக்கிறது என்று தோன்றும். அந்த வியப்பு எனக்கு இன்றும் தீரவில்லை. எது எங்களை ஒன்றிணைத்தது?” என்றேன் அடங்கிய குரலில்.

நான் அறிந்தவர்களிலேயே மிகச் சிறந்த ஆசிரியர் ஆற்றூர். நீட்டி முழக்கி எதையும் விரிவாக போதிக்க மாட்டார். அவர் எனக்கு சொல்லித் தந்த சாக்ரடீஸின் ’கேவ் அலிகரி’யை இப்போது முப்பது வருடம் கழித்தும் என்னால் துல்லியமாக நினைவுகூர முடிகிறது. அவர் எதையும் எப்போதும் காட்சிகளாலோ படிமங்களாலோ தான் விளக்க முற்படுவார். சிறிதுநேரம் கண்மூடி யோசித்துவிட்டு இவ்வாறு கூறினார்.

“அருண்ண்மொழி, ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு மூட்டை முழுவதும் நிறைய நெல்லிக்காய்கள் இருக்கின்றன. அவற்றில் இரு நெல்லிக்காய்கள் அருகருகே உள்ளன. அந்த மூட்டையை உதறிவிட்டு வேறொரு சாக்கில் எல்லா நெல்லிக்காய்களையும் திரும்பவும் போட்டு கட்டுகிறார்கள். அப்போது முன்பு அருகருகே அமைந்த அந்த நெல்லிக்காய்கள் இரண்டும் மீண்டும் அதேபோல் அமையப் பெற என்ன நிகழ்தகவு [probability] உண்டோ அதுபோல் தான் ரசனையொத்த தம்பதிகள் அமைவது” என்றார். புன்னகையுடன் தலையசைத்தேன். அவரும் புன்னகைத்தார்.

நம் வாழ்வில் புனைவை மிஞ்சும் தருணங்கள் எப்போதாவது நிகழ்வதுண்டு. என் வாழ்விலும் அப்படிப்பட்ட தருணம் ஒன்று நிகழ்ந்தது. எந்த சந்தர்ப்பத்தில் நினைத்துக் கொண்டாலும் புன்னகையை வரவழைப்பது அது. எல்லா விதிகளுக்கும் ஒரு தேவதை உண்டு என்பார் என் பாட்டி. உதாரணமாக விளக்கு வைத்தபின் அபசகுனமாக பேசக்கூடாது .அது அந்த தேவதை காதில் விழுந்து பலசமயங்களில் நடந்துவிடும் என்பார்.

1990 ஜூனில் நான்காம் வருடம் கல்லூரி திறந்ததிலிருந்து நானும் கலைச்செல்வியும் பல முயற்சிகள் வழியாக சிற்றிதழ்களை சந்தா கட்டி வரவழைக்க தொடங்கி விட்டோம். கணையாழி, நிகழ், முன்றில், கல்குதிரை போன்றவற்றையும், ஓரளவு தீவிர இலக்கிய ஆசிரியர்களையும் படிக்க ஆரம்பித்து விட்டோம். அசோகமித்ரன், லா.ச.ரா, மௌனி, வண்ண நிலவன், ஆதவன், இப்படி…. கலைச்செல்வி என் உற்ற தோழி. என் தம்பிக்கு புரட்சிக்கனலை ஊட்டியது போலவே அவளுக்கும் இலக்கிய ஆர்வத்தை ஊட்டியிருந்தேன். அவளும் என் நிழலாக எப்போதும் என்னை வழிபடும் மனநிலையுடன் அலைந்தாள். சேர்ந்து படித்தோம். விவாதித்தோம்.

ஆனாலும் நிறைய கிளாசிக்குகள் என்று எல்லோராலும் அடிக்கடி குறிப்பிடப்படும் படைப்புகளோ, நாவல்களோ பொதுவெளியில் கிடைக்காமல் இருந்தன. மதுரையில் பல கடைகளில் ஏறி இறங்கியும் அ.மி யின், சு.ரா. வின் நாவல்கள் கிடைக்கவில்லை. அது எங்களுக்கு கோபத்தை வரவைத்தது. இவர்கள் ஏன் இவ்வாறு பொதுவெளிக்கு வரமறுக்கிறார்கள். நம்மை தவிக்க வைக்கிறார்கள் என்று.

அப்போது சிறுபத்திரிகை எழுத்தாளர் யாரிடமாவது இதை எழுதிக் கேட்டால் என்ன என்று எங்களுக்கு ஒரு எண்ணம் வந்தது. அதுவரை முகவரி ஏதும் கிடைக்காததால் எங்கள் கோபத்திற்கு ஒரு வடிகால் அமையவில்லை. எதேச்சையாக கணையாழி பத்திரிகை குறுநாவல் போட்டி ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை எழுத்தாளர்களின் பெயர் மற்றும் முகவரியோடு பிரசுரித்திருந்தது. அதில் தமிழில் அப்போது எழுதிக் கொண்டிருந்த நான்கு பேரின் முகவரிகள் தரப்பட்டிருந்தன.

நான் கலையிடம் சொன்னேன் ‘ இவர்களில் யாருக்காவது எழுதி நம் சந்தேகத்தைக் கேட்டால் என்ன’ என்று. ’சரி, எழுதலாம்’ என்று முடிவு செய்து யாருக்கு எழுதுவது என்று தீர்மானிக்க ஒரு யோசனை செய்தோம். ’கண்ணை மூடிக்கொண்டு நான் தொடுகிறேன். யார் வருகிறதோ அவருக்கு எழுதலாம்’ என்றேன். அவள் உடனே’ கண்ணை மூடு’ என்றவள் கணையாழியை கவிழ்த்து பின் நிமிர்த்தி விரித்தாள். அதாவது நாம் வழக்கமாக படிக்கும்படி இல்லாமல் அது தலைகீழாக திரும்பியிருந்தது.

கண் திறந்து பார்த்தால் நான் தொட்டிருந்த பெயர் ஜெயமோகன். அப்போது காதலின் தெய்வம் புன்னகையுடன் ’உனக்கு இவன் வேண்டுமா? நான் தருகிறேன்’ என்று நினைத்திருக்கக் கூடும் என்று நான் கற்பனை செய்து கொள்வேன். அது எப்போது நினைத்தாலும் எனக்கு சிலிர்ப்பையும் பெரு நியதி ஒன்றின்மேல் நம்பிக்கையையும் ஏற்படுத்துவது.

கடிதம் சேர்ந்தே எழுதினோம். அடக்கப்பட்ட கோபம் வார்த்தைகளில் வெளிப்பட எழுதிய கடிதத்தில் ’ஏன் சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் அனைவரும் இந்த 300 பிரதிகள் என்ற எண்ணிக்கையை வைத்துள்ளீர்கள்.? நிறைய பேரிடம் இலக்கியம் செல்ல வேண்டாமா? நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இதைக் கண்டுபிடித்தோம், தெரியுமா?. இன்னும் அனேக எழுத்தாளர்களின் படைப்புகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நீங்கள் ஏதாவது விசேஷ குறுங்குழுவா? நக்சலைட் இயக்கம்போல்?’ என்றெல்லாம் எழுதியிருந்தோம். கீழே இருவரும் கையெழுத்திட்டு அனுப்பிவிட்டு காத்திருந்தோம்.

டிசம்பர் பாதியில் எழுதிய அக்கடிதத்துக்கு ஜனவரி முதல்வாரம் வரை பதில் ஏதும் வராததால் நாங்கள் நம்பிக்கை இழந்தோம். நம் கடிதம் வழக்கம்போல் குப்பைத் தொட்டிக்கு போயிருக்கும். எழுத்தாளன் என்றால் தன்னைச் சுற்றிலும் கசக்கி எறிந்த காகித குப்பைகளுக்கு மத்தியில் அமர்ந்து எழுதுபவன் என்ற ஒரு பிம்பம் நம் திரைப்படங்கள் வழியாக கட்டமைக்கப் பட்டிருந்தது. அதை நாங்கள் நம்பினோம். நாமும் அடக்க ஒடுக்கமாக எழுதாமல் கோபமாக எழுதியது அவர் கோபத்தை தூண்டியிருக்கலாம். அதனால் அவர் அதை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிருப்பார் என்று நினைத்துக் கொண்டோம்.

இதற்கிடையில் மதுரை சர்வோதய இலக்கிய பண்ணை புத்தகக் கடையில் அவரது ரப்பர் நாவல் வந்திருந்தது. வாங்கி வந்து படித்தோம். முதலில் அந்த வட்டார வழக்கு சற்று புரியாவிட்டாலும் போகப் போக நாவல் எங்களை உள்ளிழுத்துக் கொண்டது.

ஜனவரி இரண்டாம் வாரத்தில் எங்களுக்கு ஒரு பெரிய கடிதம் வந்தது. முகவரியில் என் பெயரும், கலையின் பெயரும் இருந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தோம். ஜெயமோகன், தொலைபேசி நிலையம், பாலக்கோடு, தருமபுரி மாவட்டம். இருவரும் பரபரப்புடன் படித்தோம். கிட்டத்தட்ட இருபது பக்கங்கள். அன்புள்ள அருண்மொழி, கலைச்செல்வியையும், கடைசி வரியையும் எடுத்து விட்டால் அப்படியே தினமணி தமிழ்மணியில் பிரசுரிக்கத் தகுந்த கட்டுரை அது. கல்கி தொடங்கி தமிழில் உள்ள கேளிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட வணிக எழுத்துக்கும் புதுமைப் பித்தன் தொடங்கி இன்று வரை தொடரும் சீரிய இலக்கிய எழுத்துக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டி விரிவான தரவுகளுடன் எழுதப்பட்டிருந்தது. எங்களுக்கு ஒருவாறு விளங்கியது.

கடைசி வரியில் ’டிசம்பர் இரண்டு வாரங்களாக ரப்பர் வெளியீடும், கூட்டமும் நடந்தது. அதற்கு சென்னை, கோவை சென்றிருந்ததால் பதில் எழுதத் தாமதம். உங்கள் இருவருக்கும் தூய அழகிய தமிழ்ப் பெயர்கள். என் பெயரின் அந்நியத்தன்மை குறித்து எனக்கு எப்போதுமே மனக்குறைதான்’, என்று எழுதியிருந்தார்.

நாங்கள் இதற்கு பதிலாக நன்றிசொல்லி எழுதிவிட்டு ரப்பர் பற்றிய எங்கள் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்திருந்தோம். அதற்கு ’நாவலின் சாரத்தை நெருங்கிவிட்டீர்கள். மொழி கொஞ்சம் முதிர்ச்சியற்று இருக்கிறது. எழுத எழுத சரியாகும்’ என்று பதில் வந்தது. இப்படியாக கடிதங்கள் எழுதிக்கொண்டோம். எல்லாமே ஒரு ஆசிரியரிடம் நாம் கேட்கும் சந்தேகங்கள், வினாக்கள், விளக்கங்கள்.

’ஃபிப்ரவரி இரண்டாம் வாரம் எனக்கு மதுரையில் ஒரு கூட்டம் நடக்கிறது. அதற்கு வருவேன். நீங்கள் இருவரும் வர இயலுமா?’ என்று எழுதியிருந்தார். நாங்கள் ’வார இடைப்பட்ட நாட்களில் எங்களுக்கு வெளியே செல்ல அனுமதியில்லை. மாதத்தில் இரு வியாழன் மட்டுமே அதுவும் மாலைகளில் அனுமதிப்பார்கள்’ என்று எழுதினோம். ’சரி, முடிந்தால் நான் வந்து உங்களைப் பார்க்கிறேன்’ என்று எழுதினார்.

நாங்கள் ஃபிப்ரவரி இரண்டாம் வாரம் அவர் குறிப்பிட்ட தேதியை ஆவலுடன் பார்த்திருந்தோம். அன்று எங்களுக்கு மிட்டெர்ம் எனப்படும் இடைத்தேர்வு மதியம் 2 மணி முதல் 4 மணி வரை. அதில் அக்ரிகல்ச்சுரல் எகனாமிக்ஸ் அன்றைய தேர்வு. அந்தப் பாடத்தில் தியரி அதிகம் படிக்க இருக்காது. கணக்குகள் போல பாலன்ஸ் ஷீட் டாலி செய்வதுதான் இருக்கும். எனக்கு அது மிக எளிதான பாடம். ஆகவே புத்தகத்தை ஒப்புக்கு வைத்துக் கொண்டு காதைத் தீட்டிக்கொண்டு அறையில் இருந்தேன். கலைச்செல்வி வேறு அறை.

எங்கள் விடுதியின் பெயர் மரியக்குழந்தை இல்லம். மூன்றாம் வருட, நான்காம் வருட மாணவிகள் அதில் இருந்தோம். ஐம்பது அறைகள் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடம். ஒரு அறையில் மூவர். வசதியான அறை . அனைவருக்கும் தனித் தனி கட்டில், மேஜை, நாற்காலி, அலமாரிகள் உண்டு. வார்டன் எப்போதும் இங்கு இருக்கமாட்டார். இரண்டு, மூன்று ஹாஸ்டலுக்கு அவர் மட்டுமே என்பதால் அவ்வப்போது வருவார். மீதி நேரங்களில் எங்களை கவனித்துக் கொள்ள ஒரு வயதான அம்மாள் உண்டு. அவரை நாங்கள் எல்லோரும்’ மாமி’ என்று அழைப்போம். அவர் ஒரு பிராமண விதவை.

காலை பதினொரு மணி இருக்கும். மாமி என் அறை வாசலில் வந்து நின்று “ அருண்மொழி, ஒன்னப் பாக்க ஒத்தர் வந்துருக்கார். யாரோ ஜெயமோகனாம்” என்று சொன்னாள். நான் புத்தகத்தை வைத்து விட்டு வாசலை நோக்கி விரைந்தேன். மாமி காரிடாரில் என் வேகத்துக்கு இணையாக நடந்துகொண்டே ”அவர் பாட்டுக்கு நேரே உள்ள வர்ரார். நான் இது லேடிஸ் ஹாஸ்டல். இப்டி வரப்படாதுன்னு தடுத்து நிறுத்தி வெளிய நிக்க சொன்னேன். நீ சொல்ல வேண்டாமோ” என்றாள்.
நான் சமாளிக்கும் புன்னகையுடன் ”அவர் புதுசு, மாமி. இதெல்லாம் தெரியாது. நான் சொல்லிடறேன்” என்று கிட்டத்தட்ட ஓடினேன். பார்த்தால் வாசலில் கருப்பு கூலிங்கிளாஸ் அணிந்து ஸ்டைலாக நின்று கொண்டிருந்தார். லைட் வயலட் நிற உயர்தர சட்டை, பிஸ்கட் நிற பேண்ட் அணிந்து அழகாக இன் செய்து, உயர்தர காலணிகளுடன், செக்கச்சிவந்த நிறத்தில் ஏதோ மலையாள நடிகர் சாயலில் இருந்தார். கலைந்த தலையும், ஜோல்னாப் பையும், ஒருவாரத் தாடியுமாய் இருப்பார் என்று எண்ணிய எனக்கு அதிர்ச்சி. நான் ஏதோ சுமாரான புடவையுடன் இருந்தேன்.

படிகளில் இறங்கியபடியே “ வாங்க… ஹாஸ்டல் கண்டுபிடிக்க கஷ்டமாயிருந்துச்சா?’’ என்று முகமன் கூறினேன். அவர் என்னைப் பார்த்துக் கொண்டே ”நீங்க…அருண்மொழி?” என்றார்.

”ம்ம்… கலை வருவா. மாமி, கலையை வரச் சொல்லுங்க” என்றேன்.

மாமி கலையை கூப்பிடச் சென்றாள். நான் வாசலுக்கு நேராக நிற்காமல் கொஞ்சம் தள்ளிவரச் செய்தேன். என்ன பேசுவது என்று தெரியாமல் வழக்கமான சொற்றொடர்களே மனதில் வந்தன. அவர் பேசாமல் நின்றிருந்தார். நான் ”நேத்து மீட்டிங் நல்லா நடந்துச்சா?’’ என்றதற்கு” ம்ம்..” என்றார்.

கலை வந்தவுடன் அவளையும் அறிமுகம் செய்து பக்கத்தில் இருந்த விசிட்டர்ஸ் ஹாலில் அமரலாம் என்று அங்கு அவரை கூட்டிச் சென்றோம். மூவரும் நாற்காலிகளில் அமர்ந்ததும் இயல்பானார். கூலிங்கிளாசை கழட்டினார். அப்பாடா என்றிருந்தது. அதுவரை தோன்றிய அந்நியத் தன்மை மறைந்து ஒரு அணுக்கம் உண்டானது.

அவர் கையில் வைத்திருந்த பத்திரிகையை சுட்டி ’என்ன’ என்று கேட்டேன். அவர் ’சுபமங்களா என்று ஒரு நடுவாந்தர இலக்கிய பத்திரிகை. கோமல் சுவாமிநாதன் ஆரம்பித்திருக்கிறார். என் சிறுகதை ஒன்று இதில் பிரசுரமாயிருக்கிறது” என்றார்.

அதைப் பார்க்க விழையும் என் ஆவல் அவருக்கு புரிந்திருக்கவேண்டும். என்னிடம் நீட்டினார். நான் வாங்கி உள்ளே பொருளடக்கத்தை புரட்டினேன். அதில் ஜெயமோகன் சிறுகதை’ ஜகன்மித்யை’ என்று இருந்தது. படபடவென்று பக்கத்தை புரட்டி கொஞ்சம் படிக்க ஆரம்பித்தபின் தான் எனக்கு உறைத்தது. மூடிவிட்டு நிமிர்ந்தேன். முதல்முறையாக புன்னகைத்தார். நாங்களும் சிரித்தோம். ’’நான் வேற காப்பி வாங்கிக்கிறேன்” என்றார்.

பின் தயக்கம் குறைந்து நன்றாக பேசினோம். வழக்கம்போல் எவ்வாறு ஆர்வம் வந்தது என்றும் புத்தக வேட்டை நிகழ்த்திய கதைகளையும் பகிர்ந்து கொண்டோம். அவரும் அவரது சிறுவயது வாசிப்பனுபவம் குறித்தெல்லாம் பகிர்ந்து கொண்டார். அவருடைய உச்சரிப்பு மலையாள உச்சரிப்பு கலந்து இருந்தது. மதியம் ஒன்றரை மணிக்கு நாங்கள் உண்டுவிட்டு தேர்வுக்கு செல்ல வேண்டியிருப்பதை சொன்னோம். அவரும் கிளம்பினார். மாலை நான்கு மணிக்கு தேர்வு முடிந்துவிடும் என்றோம். மாலை ’முடிந்தால் வருகிறேன்’ என்றார். மாலையும் வந்தார்.

மாலையில் எங்களிடம் உள்ள புத்தக சேகரிப்புகள் அனைத்தையும் காட்டி உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் விடுதிக்கு பக்கவாட்டில் உள்ள மிகப் பெரிய வாகைமரத்தடியில் நாற்காலியிட்டு அமர்ந்து கொண்டோம். அவருடைய விரிந்து பரந்த அறிவும், புத்திகூர்மையும், சரளமான உரையாடலும் எங்களுக்கு வியப்பையும், மதிப்பையும் ஏற்படுத்தின. தேனீர் நேரம் நெருங்கியது. தேனீர் எடுத்துவர கலை விடுதிக்குள் சென்றாள். உரையாடல் நின்று அமைதி நிலவியது. என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் எதையாவது சொல்லி அந்த மௌனத்தை கடக்க யோசித்தேன். ஒன்றும் தோன்றவில்லை.

நான் மரத்தின் உச்சியைக் காட்டினேன். அது மிகுதியாக பறவைகள் கூடடையும் மரம். ”அப்பா, எவ்வளவு சத்தம்” என்றார். நான் உடனே ”அதுங்களோட லேடீஸ் ஹாஸ்டல்” என்றேன். ரசித்து சிரித்தார். நானும் ’அப்பாடா, ஜோக் சொல்லி சிரிக்கவைத்து விட்டோம்’ என்று மகிழ்ந்தேன்.

பிறகு நேரமானதும் கிளம்பினார். நாங்கள் பிரதான நுழைவாயில் வரை போய் பஸ் ஏற்றிவிடச் சென்றோம். விடுதியிலிருந்து ஒரு சாலை, விரிவுரையாளர்கள் குவார்ட்டர்ஸிருந்து வரும் ஒரு சாலை , பிரதான நுழைவாயிலை நோக்கி செல்லும் ஒரு சாலை மூன்றும் இணையும் இடத்தில்தான் எங்கள் கல்லூரியின் முக்கிய கட்டிடம் இருந்தது. சாலைகளின் இருபுறமும் மஞ்சள் கொன்றை மரங்களும், வாகை, தூங்குமூஞ்சி மரங்களும் நிழல் பரப்பி நின்றுகொண்டிருக்கும். நான் பார்த்த கல்லூரிகளிலேயே மிக அழகானது எங்கள் கல்லூரி.

விடுதிச் சாலையிலிருந்து மஞ்சள் பூக்கள் நிறைந்த கொன்றை மரங்கள் இருபுறமும் அணிவகுத்த சாலை வழியே வரும்போது, சங்கப் பாடலில் ’பூ உதிரும் ஒலியைக் கேட்டவாறு தலைவனை நினைத்துக் கொண்டே துயிலாமல் இருந்ததாக’ தலைவி கூறியதை சொல்லிக் கொண்டே வந்தார். நான் அப்போதுதான் எம்பி ஒரு கிளையை புத்தகத்தால் தட்டினேன். பூக்கள் உதிர்ந்தன. பிற்பாடு இந்த தருணத்தை பல இடங்களில் ஜெயன் சொல்லியும், எழுதியும் உள்ளார்.

பஸ் ஏற்றிவிட்டு திரும்பும்போது நிறைவாக உணர்ந்தோம். ”பந்தாவா டிரெஸ் பண்ணாலும் பந்தா காட்டல, இல்லடி?. நல்லா பேசினார் இல்ல, எவ்வளவு விஷயங்கள் ” என்று பேசியபடியே திரும்பினோம்.

நாலைந்து நாட்கள் கழித்து ஒரு சிறிய கடிதம். ’நான் மதுரையிலிருந்து கிளம்பி சு.ரா வைப் பார்த்துவிட்டு, அப்படியே திருவனந்தபுரம் போய் பி.கெ. பாலகிருஷ்ணனை சந்தித்து விட்டு பாலக்கோடு வந்து சேர்ந்தேன். உங்களை சந்தித்ததும், உரையாடியதும் நல்ல அனுபவங்கள்.’ என்று எழுதியிருந்தார்.

ஒருவாரம் கழித்து ஒரு மதிய உணவு இடைவேளையின் போது கலையின் சைக்கிள் ஏதோ பஞ்சர் என்று அவள் அதை சரிசெய்யப் போனாள். எங்கள் கல்லூரி வளாகம் முந்நூறு ஏக்கர்கள் கொண்ட விரிந்த பரப்பு. ப்ராக்டிகல்ஸ் எனப்படும் நடைமுறை வகுப்புகள் பெரும்பாலும் காலை வேளைகளில் இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ப்ளாக்கில்[block] இருக்கும். ஒவ்வொன்றுக்கும் இடையே மூன்று, நான்கு கிலோமீட்டர் தொலைவு. ஏ, பி,சி, டி, ஈ பிளாக் என்று ஒவ்வொரு ஏரியா. அனைவருக்கும் சைக்கிள் கட்டாயம். நான் மட்டும் மதிய உணவுக்காக விடுதி வந்தேன். 12.45 முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை. மீண்டும் இரண்டு மணிக்கு தியரி வகுப்புகள் பிரதான கட்டடத்தில் இருக்கும்.

பன்னிரெண்டரை மணிக்கு மாமி கடிதங்களைக் கொண்டு வந்து விடுதியின் முகப்பறையில் உள்ள மேஜையில் வைப்பாள். நாங்கள் அவரவருடையதை எடுத்துக் கொள்வோம். அன்றைக்கு சைக்கிளை வெளியில் நிறுத்திவிட்டு விரைந்து படிகளில் ஏறி அவசரமாக கடிதங்களை ஒரு பார்வை பார்த்தேன். பெரும்பாலும் எல்லோருக்கும் அதிகமாக வருவது இன்லேண்ட் கடிதங்கள் தான். சிலருக்கு போஸ்டல் என்வலப் வரும். என் அப்பா, அம்மா இருவரும் இன்லேண்டில் தான் எழுதுவார்கள். அம்மாவின் கடிதம் வந்திருந்தது. தடித்த பழுப்பு உறையைப் பார்த்ததும் ஜெயமோகன் கடிதம் என்று ஆவலுடன் எடுத்தேன். இரண்டு கடிதங்கள் போட்டிருந்தார். ஒன்றில் வழக்கம்போல் என் பெயரும், கலை பெயரும். மற்றொன்றில் அருண்மொழி நங்கை[ personal ] என்று முகவரி எழுதப்பட்டிருந்தது.

அதை கையில் எடுத்ததும் ஒருகணம் எனக்கு கண் இருண்டு, கை வியர்த்தது. வேகமாக எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தேன். அறையில் அமுதா இருந்தாள். அங்கு வைத்துப் படித்தால் சிக்கல். எப்படியும் கலை அவள் அறைக்குப் போகும் முன் சாப்பிட அழைக்க என் அறைக்கு தான் வருவாள். அமுதாவிடம் ”கலை வந்தால் சாப்பிட மெஸ்ஸுக்கு போகச் சொல்.நான் பிறகு வருவேன் என்று சொல்”. என்று சொல்லிவிட்டு குளியலறை நோக்கி சென்றேன். அதில் ஒன்றில் நுழைந்து தாழிட்டு நடுங்கும் கைகளுடன் பிரித்தேன்.

அன்புள்ள அருண்மொழி, அதற்குப் பிறகு வரிகளில் என் கண் போகிறது. மனதிற்குள் ஒன்றும் அர்த்தமாகவில்லை. படபடப்பு, நிற்க முடியாமல் என் கால்கள் துவள்கின்றன. அங்கிருந்த அலுமினிய வாளியை கவிழ்த்துப் போட்டு அமர்ந்து கொண்டேன்.

’உன்னைச் சந்தித்துவிட்டு வந்தபின் எனக்கு வந்த உணர்வுகளை திரும்பிப் பார்க்கிறேன். அவற்றை நான் எவ்வளவு தர்க்கம் கொண்டு விளங்கிக் கொள்ள முயன்றாலும் அதற்குள் சிக்க மறுக்கின்றன. என் உணர்வுகளின்மேல் எனக்கு இருந்த கட்டுப்பாடு முற்றிலும் அறுந்துவிட்டது. ஆம், என் மனதை பூரணமாக நீ எடுத்துக் கொண்டுவிட்டாய். உன் நினைவுகளே என்னை முழுதும் ஆள்கின்றன. என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. இதை எழுதி உனக்கு தெரிவிக்காவிடில் என் தலை சுக்குநூறாகி விடும் போல் தெறிக்கிறது. நான் இதை தபாலில் சேர்ப்பேனா என்று கூடத் தெரியவில்லை. நான் என்னை மிகுந்த தர்க்க பூர்வமான அறிவுஜீவி, இந்த உணர்வுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

உன்னை சந்தித்துவிட்டு மதுரையிலிருந்து நாகர்கோவில் சு.ரா. வீடு போகும் வரை ஒரு கணம் கூட இடைவெளியின்றி நீ பேசிய தருணங்களை மீட்டி மீட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். விலக்க விலக்க ஆவேசமாக வந்து மூடும் குளத்துப்பாசி போல் உன் நினைவுகள் என்னை சூழ்ந்து மூடிக்கொள்கின்றன. உன் கண்கள், உன் முகம், உன் அசைவுகள், உன் சிரிப்பு, உன் மாநிறம், உன் துள்ளல் நிறைந்த பேச்சு… இவையேதான் திரும்பத் திரும்ப. நான் உன்னைக் காதலிக்கிறேன் அருணா. உன்னை மணம் செய்துகொள்ள விரும்புகிறேன். ஒரு பெண்ணும், ஆணும் இணைந்து வாழ, திருமணம் தவிர வேறு எந்த வகையான உறவையும் நம் சமூகம் அனுமதிப்பதில்லை.

இக்கடிதம் உன்னைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். நிதானமாக யோசி. யோசித்து விட்டு சொல். நான் இப்போது ஒரு மத்திய அரசு கிளரிக்கல் வேலையில்தான் இருக்கிறேன். மேலும் பரிட்சைகள் எழுதி பிரமோஷனில் செல்லமாட்டேன். சிறு பத்திரிகைகளில் மட்டும் தான் எழுதுவேன். இதில் பெரும்புகழோ, வருமானமோ கிடைக்காது. இதையும் நீ கணக்கில் எடுத்துக் கொள். உன் பதிலுக்கு காத்திருக்கும் ஜெயமோகன்.’’

படித்து முடித்து வெளியில் வந்தபோது என் கால்கள் துணியாலானவை போல் இருந்தன. கீழே ஊன்ற முடியவில்லை. வியர்வை ஊறிப் பெருகியது. என் இதயத் துடிப்பு எனக்கே பெரும்சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தது. பயம், படபடப்பு, குழப்பம், இவற்றையெல்லாம் மீறி அது சந்தோஷமா, துக்கமா? இல்லை இரண்டும் ஒன்றுதானா? எனக்கு எதையும் இனம் பிரிக்க இயலவில்லை.

போய் கட்டிலில் கண்மூடி படுத்துக்கொண்டேன். படுக்கவும் தோன்றவில்லை. உடனே எழுந்தேன். தொண்டை வறண்டு, ஒரு ஜாடி தண்ணீர் முழுவதையும் பருகினேன். கை நடுங்கி உடையை நனைத்துக் கொண்டேன். திடீரென்று நினைத்துக் கொண்டு மெஸ்ஸுக்கு போனேன். இல்லையென்றால் கலை கேள்விகளால் துளைப்பாள். சாப்பிடத் தோன்றவில்லை. கையால் அளைந்து கொண்டிருந்தேன். என் முகத்தைப் பார்த்து ”ஏண்டி, என்னமோ மாரி இருக்க?” என்றாள். ”ஒண்ணுல்ல, தலவலி.” என்றேன்.

மதியம் வகுப்புக்கு சென்றேன். விரிவுரையாளர் எடுக்கும் பாடத்தை கவனிக்கவோ, அதை எழுதி எடுக்கவோ என்னால் முடியவில்லை. கையிலும் அதே படபடப்பு, நடுக்கம். பின்வரிசையில் அமர்ந்திருந்தேன். ஒரு கையால் தலையைத் தாங்கியபடி நோட்டுப் புத்தகத்தில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்.

ஒருகணம் ஜெயமோகனின் முகம் என் நினைவில் புன்னகையுடன் மின்னி மறைந்தது. உடனே உடலெங்கும் ஒரு பரவசமும், கூச்சமும், நடுக்கமும் ஒருங்கே எழுந்தது. ஒரு இனிமை உடல், மனம் முழுவதையும் தழுவிச் செல்வதை உணர்ந்தேன். ஆம், அது எப்படி என்றால் விரல்நுனி வரை பரவும் இனிமை. நிரம்பி வழிந்து என்னால் தாள முடியாமல் ஆகியது. அய்யோ, எத்தனை பெரிய பரவசத்தை நான் வைத்திருக்கிறேன். ஒரு மாபெரும் பொக்கிஷப் புதையல் போல. இவர்கள் யாரும் இதை அறியமாட்டார்கள். என் உடல் அதைத் தாளாமல் நடுங்கியது.

இரவு அமுதா உறங்கியதும் கடிதம் எழுதத் தொடங்கினேன். என் பதிலுக்காக ஒரு இதயம் அங்கே துடித்து காத்திருக்கிறது. ‘’அன்புள்ள ஜெயமோகன், எனக்கு என் உணர்வை முதலில் அனுமானிக்க இயலவில்லை. நான் உங்களை ஒரு குருவின் பீடத்தில் வைத்திருக்கிறேன். என் அறிவும், அகங்காரமும் முற்றிலும் பணிந்தது உங்களிடத்தில் தான். இதுவரை நான் யாரிடமும் தாழ்வாக உணர்ந்ததேயில்லை. உங்கள் கடிதம் படித்ததும் எனக்கு வந்த முதல் எண்ணம் நான் உங்களுக்கு பொருத்தமானவள்தானா? என்று. நான் முதிர்ச்சியற்ற ஒரு வாசகி மட்டும்தான் .உங்கள் அறிவுத் தளத்தில் நீங்கள் புழங்கும் எல்லோரும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் இல்லையா? நான் எப்படி அச்சூழலில் பொருந்துவேன்? நிறைய சந்தேகம், பயம் வந்தது எனக்கு. என்னை மிகையாகக் காட்டிகொண்டு விட்டேனா?.

ஆனால் ஆயிரம் திரையிட்டு மறைத்தாலும் என் உள்ளே உங்கள் மேல் தீராத விருப்பம் இருந்திருக்கிறது. அதை நான் எந்தத் தயக்கமும், வெட்கமுமின்றி ஒப்புக்கொள்கிறேன். மனம் முழுவதும் இனித்து நிறைந்து வழிகிறது .நானும் உங்களை மனப்பூர்வமாக விரும்புகிறேன். திருமணம், அப்பா, அம்மா, கலை எனக்கு இதெல்லாம் எப்படி நிகழும் என்று சஞ்சலமாயிருக்கிறது. அதை உங்கள் கைகளில் விட்டுவிடுகிறேன். இதை நாளை சனியன்று தபாலில் சேர்ப்பேன். உங்கள் கைகளில் திங்கள்தான் கிடைக்கும். உங்கள் அருணா.

மறுநாள் அக்கடிதத்தை தபாலில் சேர்த்தேன். என் மனம் அடங்கவில்லை. அய்யோ, அவர் வியாழன் போட்ட கடிதம். என் பதிலுக்கு அவர் மூன்று நாட்கள் தவித்துக் கொண்டிருப்பாரே என்று மனம் பதறியது. என்ன செய்யலாம் என்று யோசித்ததில் ஒரு யோசனை உதித்தது. எங்கள் வளாகத்திலேயே ஒரு சிறிய அஞ்சலகம் உண்டு. அங்கு போய் ஒரு தந்தி கொடுக்கலாம் என மதிய இடைவேளையில் சென்றேன். படிவத்தை வாங்கி நிரப்பினேன். ’ஆம். எனக்கும் அதே உணர்வுநிலை தான். உங்கள் அருண்மொழி.’ படிவத்தை வாங்கிப் பார்த்த அந்த அலுவலர் என்னை குழப்பத்தோடு பார்த்தார். ”தெளிவா இல்லயேம்மா” என அவர் சொல்ல நான் ”புரிஞ்சுப்பாங்க, எப்போ போகும்?’’ “ சாயந்தரம் நாலு மணிக்குள்ள கிடச்சிடும்”.என்றார்.
இப்போது மணி ஒன்றரை. எனக்கு ஆசுவாசமாக இருந்தது. மறுநாள் ஞாயிறு முழுவதும் கனவில் மிதந்து கொண்டிருந்தேன். திங்கள் காலை அவருக்கு என் கடிதமும் கிடைத்திருக்கும். என்ன பதில் எழுதுவார்? திங்கள் காலை எங்களுக்கு ’ப்ளாண்ட் பேத்தாலஜி’ ப்ராக்டிகல் வகுப்பு. லேபில் இருந்தோம். ஏதோ ஒரு ஃபங்கஸின் குறுக்குவெட்டுத் தோற்றம் எடுத்து ஒவ்வொருவரும் நுண்ணோக்கியின் கீழ்வைத்து பேராசிரியரை அழைத்து காண்பிக்க வேண்டும். எனக்கு அன்று மிக எளிதாக அழகிய குறுக்குவெட்டுத் தோற்றம் வந்துவிட்டது. நான் பேராசிரியரை அழைத்து காண்பித்து விட்டு விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனம் தெரிந்ததுபோல் மகிழ்ச்சியில் இருந்தேன்.

சும்மா பக்கவாட்டு ஜன்னல் வழியாக கொன்றைமரத்தின் உச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். பொன்னிறப் பூக்கள் அடர்ந்திருந்தன. சட்டென்று ஜெயமோகன் நினைவும் அவர் சொன்ன சங்கக் கவிதையின் நினைவும் வந்து யாருக்கும் தெரியாமல் புன்னகைத்துக் கொண்டேன். அட்டெண்டர் ஒருவர் வந்து எங்கள் பேராசிரியரிடம் ஏதோ சொல்ல அவர் ”அருண்மொழி, யூ ஹாவ் எனி ரிலேட்டிவ்ஸ் இன் தர்மபுரி? யூ ஹாவ் அ ட்ரங்க் கால் ஃப்ரம் தேர்.” என்றார்.

எனக்கு திக்கென்றது, ‘’யெஸ் சார்” என்றேன் பலகீனமாக. என் கண்கள் சட்டென்று கலையை தொட்டு மீண்டன. அவள் என்னை குழப்பத்துடனும், புதிருடனும் பார்த்தாள். பொதுவாக யாருக்குமே கல்லூரிக்கு ஃபோன் வருவதில்லை. ஹாஸ்டலுக்கு தான் வரும். அதுவும் பெரும்பாலும் லோக்கல் கால். ட்ரங்க் கால் செலவு மிக்கது. நான் விரைந்து மாடிப்படிகளில் இறங்கி வந்து முகப்பின் விரிந்த வராண்டாவில் இருந்த அந்த ஃபோன் கேபினுக்குள் புகுந்து கொண்டேன்.

”ஹலோ, யார் பேசுறது?’’

”அருணா, நாந்தான் ஜெயமோகன். ஒன் லெட்டர் கெடச்சுது. இப்பதான் உயிர் வந்துச்சு எனக்கு. சனிக்கெழம தந்தி வேற கொடுத்திருக்க. எப்டி ஐடியா வந்துச்சு?

அதுவந்து… நீங்க மூணுநாள் தவிச்சு போய்டுவீங்கன்னு நெனச்சேன்.

ஆமா… நான் ரெண்டு வாரமா தவிச்சுட்டுதான் இருந்தேன். இங்க ஆஃபிஸ்ல ஒரே கலாட்டா, தெரியுமா? டிரீட் கேக்குறாங்க”.

எதுக்கு?

லவ் சக்ஸஸ் ஆனதுக்கு. ஆஃபீஸ்ல எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.

அய்யோ… எப்டி? நீங்கதான கையெழுத்து போட்டு வாங்கிருப்பீங்க.

ஆமா, நம்ம ஊர்ல தந்தின்னாலே கெட்ட சேதிதான. என் ஃப்ரெண்ட் ரமேஷ் ஓடிவந்து வாங்கி படிச்சான். ’லவ் பண்றேன்னு தந்தி கொடுத்த ஒரே ஆள் ஒன் ஆள்தாண்டான்னு நக்கல் வேற. எவ்ளோ நாசுக்கா சொல்லியிருக்கா பாரு ‘ன்னான்.

ப்ச்.. தப்பாயிடுச்சு. நான் அவசரபட்டுருக்கக் கூடாது.

ஏய்…அருணா. இதெல்லாம் எனக்கு ஜாலியா இருக்கு. பெருமயா இருக்கு. அப்றம் ஒரு விஷயம்…

நான் சீக்கிரம் போகணும்.

ஏன்?

ட்ரங்க் கால் இவ்ளோ நேரம் யாரும் பேச மாட்டாங்க.

அது இருக்கட்டும். எங்களுக்கு ஒரு நாளைக்கு ரெண்டு ஃப்ரீ கால் உண்டு. இத பார். லெட்டர்ல என்ன பூசி மெழுகி விரும்புறேன்னு எழுதுறே. லவ் யூ ந்னு எழுதுனா கொறஞ்சு போய்டுவியா?

அதில்ல… வெக்கமா இருந்துச்சு.

இப்ப சொல்லு. என் காதுல சொல்ற மாதிரிதான்.

நா மாட்டேன். நேர்ல சொல்றன்.

சொல்லுடி… ப்ளீஸ்.

ஒங்க காதுக்கு வரதுக்கு முன்னாடி இங்க குறுக்கால ஒருத்தர் இருக்கார். அவர் காதுல தான் விழும்.

யார் அவர்?

எல்லா டிபார்ட்மெண்ட் ஃபோனுக்கும் இந்த ஃபோனுக்கும் கனெக்‌ஷன் கொடுப்பார். இங்க ஒரு கண்ணாடி ரூம்ல ஒக்காந்துட்டு ஒரு ஆள். இப்ப கூட அவர் என்ன மொறச்சு பாக்குறமாதிரி இருக்கு.

ஓ, அப்பசரி. வர ஞாயித்துக்கெழம வருவேன். சொல்லணும்.

இந்த சண்டேயா?

ஏன்? எனக்கு இப்பவே வரணும் போல இருக்கு.

சரி, போதும். வைக்கிறேன்.

ஏய்… வைக்காத. இத எதிர்பார்த்திருந்தியா அருணா. நான் இப்டி எழுதுவேன்னு.

’’ஆச்சரியமா இருந்துச்சி. ஆனா ரொம்ப ஆச்சரியமா இல்ல. சரி, போதும். நான் வைக்கிறேன்.’’ வைத்துவிட்டேன். துள்ளிக் குதித்து கும்மாளமிட்டது மனம்.

மதியம் சாப்பிடப் போகும்போது கலை முறைத்துக் கொண்டே இருந்தாள். முடித்து வந்தபின் “கால் பண்ணது யாரு, ஜெயமோகனா”? என்றாள்.

ஆமா, கலை. அதுவந்து…

நீ ஒண்ணும் சமாளிக்க வேண்டாம். எனக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு.

சொல்றத முழுசா கேளுடி, அவர் என்ன மனப்பூர்வமா விரும்புறார். நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.

கல்யாணமே வேண்டாம்னு சத்தியம் பண்ணியிருந்தோமே ரெண்டுபேரும். அதெல்லாம் காத்துல பறக்க விட்டுட்டியா?

அது அப்ப… இப்ப எனக்கு ஆச வந்துருச்சி. எனக்கு அவர ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு கலை.

சரி, என்ன கூத்தோ அடிங்க. ஆனா இந்த ரெண்டு பேருக்கும் பொதுவா லெட்டர் போடறத நிறுத்த சொல்லு அவர. எனக்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.

அவர் ஒனக்கும் ஃப்ரெண்டு இல்லையா?

எனக்கு புடிக்கல. அவர்ட்ட சொல்லிடு. நாம ரெண்டுபேரும் எப்பவும் போல ஃப்ரெண்ட்ஸ். அவரப் பத்தி எந்த சேதியையோ, ஒங்க லவ்வையோ என் காதுல போடாத.

கறாராக சொல்லிவிட்டு சென்றாள். அவள் உறுதியை மாற்ற முடியாது. நானும் விட்டுவிட்டேன். வருத்தமாக இருந்தது எனக்கு. நான் செய்தது ஒருவகையில் திருட்டுத்தனம்தான். அவளிடம் எதையுமே தெரிவிக்காமல் அவருக்கு சம்மதம் சொல்லி பதில் போட்டது, தந்தி கொடுத்தது எல்லாமே அவளை புண்படுத்தியிருக்கும். இனிமேல் அவளுக்கு என் மனதில் ஜெயனுக்கு அடுத்த ஸ்தானம்தான் என்பதும் அவளை எரிச்சலூட்டும். மனதிற்குள் ’என்னை மன்னித்துவிடு, கலை’ என்றேன்.

சிறிது நாட்களுக்கு முன் கலையின் அப்பா பிரமோஷன் ட்ரான்ஸ்ஃபெரில் அருப்புக்கோட்டையிலிருந்து மேலூர் வந்துவிட்டார். அதனால் கலை எல்லா வார இறுதிகளிலும் அவள் வீட்டிற்கு போய்விடுவாள். நான் சனியன்று உட்கார்ந்து ஜெயமோகனுடைய ஜகன்மித்யை, படுகை, போதி சிறுகதைகளை படித்தேன். மறுநாள் அவர் வரும்போது சொன்னால் சந்தோஷப்படுவார் என்று நினைத்தேன்.

ஞாயிறு காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துக் கிளம்பினேன். இப்போதெல்லாம் அதிகாலை நான்கு மணிக்கு ஒரு விழிப்பு வருகிறது. முதல் நினைவே ஜெயனின் நினைவுதான். வேறு எந்த சிந்தனைகளுமற்று மனம் தேரும் ஒரு முகம். நிர்மலமான மனதில் எழுந்துவரும் முதல் எண்ணம். காதல் எப்படிப்பட்ட ஒரு உணர்வு. மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரங்களில் முதன்மையானது . மனிதனுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட தேன். அதைப் பருகாதவர்கள் துரதிருஷ்டசாலிகள். தூங்கும் நேரம் தவிர மற்றெல்லா நேரமும் ஒருவரை நினைத்துக் கொண்டிருக்க முடியும் என்று யாராவது முன்பு சொன்னால் நான் நம்பியிருக்க மாட்டேன்.

இருப்பதிலேயே நல்ல புடவையை உடுத்திக் கொண்டேன். அந்த நிகழ் பத்திரிகையை எடுத்துக் கொண்டேன். அதில் போதி கதையில் ஒன்றைக் கேட்கவேண்டும் அவரிடம். ஒன்பது மணிக்கு வருகிறேன் என்று எழுதியிருந்தார். எட்டரைக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு எங்கள் கல்லூரியின் முகப்பை நோக்கி செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் ஒரு கல்வெர்ட்டின் மேல் அமர்ந்துகொண்டேன்.

தூரத்தில் ஒரு அசைவு. சட்டென்று மனம் பொங்கியது. அவர்தான். அவரை நோக்கி பரபரப்புடன் நடந்தேன். கிட்டேபோனதும் கையைப்பற்றி கோர்த்துக் கொண்டார். இருவரும் சிரித்துக் கொண்டே நடந்தோம்.

அருணா, எங்க போறோம்?

எங்கன்னா? ஒண்ணு பண்ணுவமா? மீனாட்சி கோவிலுக்கு போவமா?

இல்ல, ஒரே சந்தடி அங்க. நிம்மதியா பேசமுடியாது. இங்க ஏதாவது தனிமையான இடம் இருக்கா?

இருக்கே. சிட்டன்குளம்னு ஒரு அழகான குளம் ’டி’ பிளாக்ல இருக்கு. சுத்திவர நல்ல மரநிழல். கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் வயல்வெளி. லோன்லியான இடம்தான்.

அப்ப அங்க போலாம்.

மெதுவாக கையை விடுவித்துக் கொண்டேன்.

இந்த ரோட்ல முழுசும் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸ். சண்டே எல்லாரும் வீட்ல இருப்பாங்க. கைகோத்துட்டு போனா தப்பா நெனப்பாங்க.

ம்ம்…. இப்ப சொல்லு.

என்னது?

லவ் யூ.

சொல்றேன். அதுக்குமுன்னாடி இதுக்கு பதில் சொல்லுங்க.

என்னது? புக்கெல்லாம் தூக்கிட்டு வந்துருக்க?

நிகழைப் பிரித்து அவருடைய ’போதி’ கதையில் நான் சிகப்பு மையினால் அடிக்கோடிட்ட வரிகளைக் காட்டினேன். அதில் ’அறிவு ஜீவிகளால் யார்மீதும் அன்பு செலுத்த முடியாது. அன்பே ஒருவகை பேதமையிலிருந்து வருவது. என்னால் எந்த உயிரையும் என்னைவிட மேலாக நேசிக்க முடியாது’.. என்று கதைசொல்லி சொல்வதுபோல எழுதியிருந்தார்.

இதுக்கு என்ன அர்த்தம்? அதுவும் இந்த கதையில நான்னு நீங்களே சொல்றமாதிரி கத போகுது.

அருணா, ஒனக்கு இதுகூட புரியலயா? நான்னு தன்மை ஒருமையில கத எழுதுறது ஒரு டெக்னிக். ஈசியா உணர்வுகள சொல்லமுடியும். அந்த ’நான்’ ஜெயமோகன் கிடயாது. எவனோ ஒருத்தன்.

சரி, நீங்க அறிவுஜீவி தானே. அப்போ இந்த ஃபாக்ட் ஒங்களுக்கும் பொருந்தும்தானே?

அது அந்த காரக்டரோட லாஜிக், அருணா. நான் எழுதுற, எழுதப் போற எல்லா காரக்டரையும் என்னோட இணச்சு நீ பாக்க ஆரம்பிச்சா அதுக்கு முடிவே இல்ல. வாழ்நாள் முழுசும் இதான் ஒடீட்டுருக்கும் நமக்கிடயில. என் லெட்டர்ஸ்ல எப்டி உருகி உருகி எழுதுறேன். அப்பகூட ஒனக்கு புரியலயா. என் உயிரே நீதாண்டி.

கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இலேசாக புன்னகைத்தேன்.

அப்டி பாத்தா நீ ரப்பர்ல என்ன ஃப்ரான்சிஸ்ஸோட கனக்ட் பண்ணிப் பாத்துருப்பியே.

ஆமா, நீங்க குடிப்பீங்கன்னு நெனச்சேன். எப்டி தத்ரூபமா காது மடல் சூடாகுது, உள்ள ஒரு ஆவி எழுது, மூளை நரம்புகள் பட்பட்னு வலுவிழக்குதுன்னு எழுதியிருக்கீங்க.

மனப்பாடமே பண்ணிட்டியா?. நான் இருமலுக்கு கிளைக்கோடின் காஃப் சிரப் குடிச்சாலே மறுநாள் மப்படிச்சுட்டு கெடப்பேன். என்னப் போய் லிக்கர் குடிப்பேன்னு நெனச்சியா நீ? எல்லா அனுபவத்தையும் எழுத்தாளன் அனுபவிச்சு பாத்து தான் எழுதனும்னா அவனுக்கு ஒரு வாழ்நாள் போதாது, அருணா. மத்தவங்க சொல்லிக்கேட்டது, அப்றம் கற்பனையில அவன் ரொம்பதூரம் போக முடியும். நான் பாக்காத சைபீரியப் பனியையும், சஹாராவையும் கூட எழுத முடிஞ்சாதான் நான் எழுத்தாளன். சரி, ஃப்ரான்சிஸ் ப்ராஸ்டிடியூட் கிட்ட போவானே, அப்ப என்ன நெனச்சே?

சே சே, அப்டி நெனக்கல.

சரி, இப்ப புரிஞ்சுதா. இனிமே இப்டி சில்லி கற்பனயெல்லாம் பண்ணாத. அடிக்கோடு போட்டதுல அந்த பேஜ் ஓட்ட விழுந்துருக்கு. அவ்ளோ ஆத்திரமா?

ம்ம்… எனக்கு பயங்கர கோவம் வரும்.

அருணா, நாம புருஷன் பொண்டாட்டி மாதிரி ஆயிட்டோம்.

எப்டி சொல்றீங்க?

சண்ட போட ஆரம்பிச்சுட்டோம்.

சிரித்து பேசிக்கொண்டே வந்துவிட்டோம். குளக்கரை அமைதியாக நிச்சலனமாக இருந்தது. அவருக்கு அச்சூழல் பிடித்திருந்தது. மிகவும் ரசித்தார். இருவரும் பேச ஆரம்பித்தோம். பேசி புரிந்துகொள்ளவோ, அறிந்துகொள்ளவோ முயலாமல் தோன்றியதையெல்லாம் பேசினோம். அதில் பரவசமும், உணர்ச்சியும்தான் மேலோங்கியிருந்தன. நீ என்னை முதன்முதலில் பார்த்தபோது என்ன நினைத்தாய்? அந்தக் காதலின் தளிர் எப்போது முளைவிட்டது என்று அறிந்துகொள்ளும் பரவசத்தில் இருவருமே இருந்தோம்.

பையிலிருந்து டைரி ஒன்றை எடுத்தார். ” ஒன்ன வந்து மொதமொதல்ல பாத்துட்டு போனதுக்கப்பறம் எழுதுன கவிதைகள் இதுல இருக்கு’’.

எங்க காட்டுங்க? பப்ளிஷ் பண்ணக் குடுக்கலயா?

சீ, இது மோர் பர்சனல்டி. படிச்சு பாரு.

லெட்டரே கவித்துவமா எழுதுறீங்க. டெய்லி ஒண்ணு. எத்தன பேஜஸ். எப்டி இவ்ளோ எழுதுறீங்க? நான் ஒங்களுக்கு எழுத எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? நிறய நேரம் மோட்டுவளய பாப்பேன். ஒண்ணும் வர மாட்டேங்குது.

நீ தோண்றத எழுது, அருணா. ஆனா இன்லேண்டில மட்டும் எழுதாத. கடுப்பாயிடுவேன்.

ஆனா பரீட்சை சமயம், அசைன்மெண்ட் இருந்தா கம்மியாதான் எழுதுவேன்.

லெட்டெர் எப்ப படிப்ப?

மதியம் வந்ததும் படிப்பேன். அப்றம் சாயந்தரம் வந்தோன்ன. அப்றம் நைட் படுக்கப் போறதுக்கு முந்தி.

கவிதை காட்டினார். அதில் சில வரிகள்…

’மழையீரம் கொண்டுவந்து என் வீட்டில் குடிவைப்பேன்

தளிரில்லா என் வீட்டில் விதையெல்லாம் முளையாகும்.’

இது எத சொல்லவருது?

யோசி.

புரியல.

அன்பில்லாத ஒரு வீடு, உன் அன்பு என்னும் மழையீரம் வந்தபிறகு எல்லாம் தளிர்த்துவிட்டது. புரிஞ்சுதா?

இப்ப புரியுது. அடுத்த கவிதை.?

படித்துக்காட்ட வாகாக மிக அருகே வந்து அமர்ந்து கொண்டார். எனக்கு படபடவென்று இருந்தது. ஆனால் உள்ளே குதூகலம், ஒரு கிளர்ச்சி.

’அமர்ந்திருக்கும் அவளைப் பார்த்தபடியிருக்கிறேன்.

வெகு நளினமான ஒரு கழுத்துச்சொடுக்கலுடன், சரிந்த இமைகளுடன்

சூழல் பற்றிய இயல்பான எச்சரிக்கையுடன்

ஒரு சிறு குருவி போல் அமர்ந்திருக்கிறாள்.

தான் வெறும் ஒரு பெண் மட்டுமல்ல என்பதுபோல…’

நான் மௌனமாக இருந்தேன்.

புடிச்சிருக்கா அருணா?

‘எனக்கு புடிக்கல’, டைரியைத் தள்ளிவிட்டேன்.

ஏன் அருணா?

அமைதி காத்தேன். ’என் சக்கரக்குட்டில்ல, செல்லக் கண்ணம்மால்ல. ப்ளீஸ் சொல்லுடி’. கையைப் பற்றிக் கொண்டார்.

’’கவித இப்டியா எழுதுவாங்க. நிலா, தாமரப்பூன்னு எப்டியெல்லாம் வர்ணிச்சு எழுதுவாங்க.’’

’அது பழய பாணி அருணா. அதெல்லாம் யூஸ் பண்ணி தேஞ்சு போன உவமைகள். மாடர்ன் பொயட்ரில புது இமேஜஸ் தான் வச்சு எழுதணும். . ஒனக்கு குருவி புடிக்கும்ல. அத நீ கூர்ந்து கவனிச்சிருக்கியா? அது ஒரு சூழல்ல அவ்ளோ இயல்பா, தன்னிச்சையா, இயற்கையான அசைவுகளோட இருக்குற அதே சமயம் ஒரு வெளித் தெரியாத சின்ன எச்சரிக்கை உணர்வோடயும் இருக்கும். எந்த எஸ்ஸென்சதான் நான் ஒன்னோட பொருத்திப் பாக்குறேன். இப்ப கோவம் போச்சா?

’’ம்ம்ம்… குருவின்னு எழுதுனதால தப்பிச்சீங்க, கருங்குருவின்னு எழுதியிருந்தா அப்டியே திரும்பிப்பாக்காம போயிருப்பேன்.’’

’’ராட்சசி…. ஆத்தா… நீ போனாலும் போவ…’’

இடையில் பசியில்லை. தாகமில்லை. பேச்சு… பேச்சு…பேச்சு… அவர் அப்பா, அம்மா, என் அப்பா, அம்மா பற்றி பேசினோம். அவர்களைப்போல் மட்டும் வாழக்கூடாது என்று பிரதிக்ஞை எடுத்துக் கொண்டோம். பிறகு சுந்தர ராமசாமி, ஆற்றூர் பற்றி சொல்லி அவர்கள் இருவரிடமும் எங்கள் காதலை தெரிவித்து விட்டதை சொன்னார். அவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ந்ததையும் தெரிவித்தார்.

என்ன அவசரம், ஏன் இப்பவே சொன்னீங்க?

ஏன்? அவங்ககிட்ட நான் எதையுமே மறச்சதில்ல. அதுவும் ஆற்றூர என் அப்பா ஸ்தானத்துல வச்சுருக்கேன் அருணா. அப்பதான் ஆற்றூர் வொய்ஃப் எனக்கு பொண்ணு பாக்கறத நிறுத்துவாங்க.

அதான் போய் பாத்தீங்களே. என்ன பாக்கவரதுக்கு முந்தி. ஒரு நம்பூதிரிப் பொண்ணு, டீச்சரா இருக்குறவ. நல்ல கலரா, அழகா இருந்தான்னு வேற சொன்னீங்க. அவளயே கட்டிக்க வேண்டிதுதானே?

என்ன பண்றது? ஆண்டவன் எனக்குன்னு ஒரு தஞ்சாவூர் முண்டக்கண்ணிய தானெ வச்சிருக்கான். கட்டிப் போட்டுட்டாளே.

சமாளிக்காதீங்க. நான் அவ்வளவு கலர் இல்லல்ல. எப்டி புடிச்சுது ஒங்களுக்கு? எல்லா மலையாளிஸும் நல்லா செவப்பா இருப்பாங்க தானே. எங்க காலேஜ்ல கூட மலையாளி ஒருத்தி இருக்கா, பிந்து பணிக்கர்னு. அப்டி இருப்பா செவ செவன்னு.

எல்லாரும் அப்டி இல்ல, அருணா. பாதி பேர் அப்டி இருப்பாங்க. அங்கயும் மாநிறம், கறுப்பு எல்லாம் உண்டு.

சரி, எப்டி பிடிச்சுது?

இது என்ன கேள்வி? வெவரம் தெரிஞ்சப்பலேர்ந்தே எனக்கு செவப்பு அவ்வளவா புடிக்காது. கண்ல அடிக்குற மாதிரி தோணும். மாநிறம்தான் அழகோட நெறம். அதுலதான் ஸ்கின்னோட மென்மை தெரியும்.அதுல எவ்ளோ ஷேட்ஸ் இருக்கு, மண்ணின் நெறம் அது, தேக்கு மர கலர், செப்பு சிற்பம், வெண்கலம், தாமிரம், தேன் யோசிச்சு பாரு. மாந்தளிரின் நிறம். மாமை நிறம்னு கபிலனும், கம்பனும் மாஞ்சு, மாஞ்சு எழுதியிருக்காங்க. பெயிண்டிங்ல கூட பழுப்பு நெறத்த அதிகமா வரையுற க்ளாட் மோனே தான் எனக்குப் பிடிக்கும். கறுப்பும் பிடிக்கும்.

நல்லா பேசி பேசி என்ன கவுத்துட்டீங்க.

நீ மட்டும் என்னவாம். மொதநாள் வந்து பாத்த அன்னிக்கு தலய தலய ஆட்டி, பேசி, கண்ண சொழட்டி என்ன கவுத்துட்ட. அன்னிக்கு ஒன்னோட
மொகத்தையும் கழுத்தையும்தான் நான் பாத்துட்டே இருந்தேன். நீ பேசுனது எதுவுமே என் மண்டைக்குள்ள போகல.

அய்யே, சீ…

அவர் இரண்டு மேங்கோ ஃப்ரூட்டி வாங்கி வந்திருந்தார். இடையில் அதை மட்டும் குடித்தோம்.

சரி, கெளம்பலாம். அஞ்சு மணியாச்சு. இருட்டுனப்றம் போனா மாமி கேப்பா.

இருவரும் எழுந்து கிளம்பினோம். காலையில் நடையில் இருந்த வேகம் இப்போது இல்லை இருவருக்கும். ஒரு பெரிய மரத்தடியருகே வரும்போது எங்களுக்கு முன்னால் இரு அணில்கள் பொத் பொத்தென்று விழுந்து பரபரப்பாக ஓடின. இருவரும் திடுக்கிட்டு நின்றோம். சட்டென்று என்னை இழுத்து அணைத்துக் கொண்டார். முத்தமிட்டார்.

கொஞ்சநேரம் சூழல் மறந்தது. சுயநினைவே இல்லை. ஏதோ அணிலின் அரவம் கேட்டு விடுவித்துக் கொண்டோம். பிறகு அதிகம் பேசாமல் புன்சிரிப்புடன் நடந்துவந்தோம். நான் விடைபெற்றுக் கொண்டேன்.

கடிதங்கள் தினமும் வரும். சிலசமயம் ஒரே நாளில் இரண்டு கடிதங்களும் வந்ததுண்டு. எல்லாவற்றிலும் உச்சகட்ட உணர்ச்சிநிலைகள். அப்போது ஜெயன் படைப்பாக்கத்தின் உச்சத்தில் இருந்தார். ஒருபுறம் ஷெல்லி, பைரன், கீட்ஸ் எல்லாம் தோற்கும் அளவு ரொமாண்டிக் கற்பனைகள், இன்னொரு புறம் அறிவார்ந்த விவாதங்கள் , பகிர்தல்கள் என கடிதங்கள் எனக்கு மிகுந்த பரவசத்தை தந்துகொண்டிருந்தன. அப்போது அவர் அண்டோனியோ கிராம்ஷி என்ற இத்தாலிய மார்க்ஸிய அறிஞரையும், எரிக் ஃப்ராமையும் ஒரே சமயம் வாசித்துக் கொண்டிருந்தார்.

கிராம்ஷி முசோலினியால் சிறையில் இடப்பட்டு அவர் அங்கே எழுதிய சிறைக் குறிப்புகள்[ Prison notebooks] பிறகு புத்தகமாக வெளிவந்தது. அதை அப்போது ஜெயன் படித்துக்கொண்டிருந்தார். அதில்தான் ஆதிக்க கருத்தாண்மை [Hegemony] என்ற கருதுகோளை முன்வைக்கிறார் கிராம்ஷி. கலாச்சார, சித்தாந்த, மதம் சார்ந்த கருத்துகள் ஒரு பெரிய அதிகாரமாகத் திரண்டு மக்களை அடிமைப் படுத்த முடியும். காலனியாதிக்கம், மதம் சார்ந்த அரசுகள், சர்வாதிகாரம் என்று பல உதாரணங்கள் தந்து அதை நிறுவுகிறார் கிராம்ஷி.

எரிக் ஃப்ராமின் ‘ஆர்ட் ஆஃப் லவிங்’[Art of loving] என்ற புத்தகமும் அப்போது ஜெயனை மிகவும் வசீகரித்திருந்தது. அதில் இருவர் காதலில் விழும்போது ஏற்படும் அந்த உணர்ச்சிகரமான உச்சகட்ட காதலை எப்படி தொடர்ந்து வரும் காலங்களிலும் நீட்டித்து கொண்டு செல்லமுடியும் என்பதை ஃப்ராம் விரிவாக ஆராய்கிறார். இருமனங்கள் இணைய விழையும் உணர்வென்பதே மனிதனில் வரும் ஆதி உணர்வுகளில் ஒன்று என்கிறார் ஃப்ராம். மனிதனின் இருத்தலியல் பிரச்னையின் முக்கிய அம்சமான வெறுமை, தனிமையுணர்வுகளை வெல்லும் ஒரே தர்க்கரீதியான தீர்வு அன்பிலும் காதலிலுமே உள்ளது. தன் துணைமேல் கொள்ளும் அக்கறை, மரியாதை, பொறுப்பு, அறிவு இவற்றினாலேயே காதலை நீண்டகாலம் தக்கவைக்கமுடியும் என்கிறார். அது ஒரு இடைவிடாத பயிற்சி. One should culture or cultivate love என்று குறிப்பிடுகிறார்.

அதில் பற்றியெரியும் உணர்ச்சிகரத்துக்கு இடமில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அது நேர் எதிர்நிலைக்கும் செல்லும். காதலிக்கும் ஆரம்ப நாட்களில் அது உணர்ச்சிகரமானதுதான். முதன்முதலாக இன்னொரு மனதை, ஆளுமையை நுணுகி அறிவதன் பரவசம். நாள் போகப் போக அது சமனப்படவேண்டும். சுயநலவாதிகளால் ஒருபோதும் காதலிக்க முடியாது. தன்னைப் பற்றியே சிந்திப்பவர்களுக்கும் அது வாய்க்காது. காதல் ஒருவித சமர்ப்பணமும் கூட. உன் அகந்தையை, அறிவை, தன்னிலையை ஒருவரிடமாவது கழற்றி வைக்க வேண்டும் என்கிறார் ஃப்ராம். ஒருவரிடம் காதல்கொள்ள நீ ஒட்டுமொத்த மனிதகுலத்தையே நேசிக்க வேண்டும். இரண்டும் வேறு, வேறல்ல.

ஜெயன் அந்த புத்தகத்தையே மனனம் செய்திருந்தார். அதில் உள்ள நிறைய வரிகளை எனக்கு எழுதுவார். மேற்கையே இருத்தலியல் சிந்தனைகளும், தனிமனித வாதமும், உறவுகள் பற்றிய அவநம்பிக்கைவாதமும் ஆண்டு கொண்டிருந்த போது எரிக் ஃப்ராம் இப்படியொரு புத்தகத்தை எழுதினார். எனக்கு படிக்க படிக்க பரவசமாக இருந்தது. இது என்ன? இப்படியொரு புத்தகம்? காதலின் பைபிள் போல.

மறுவாரம் நான் ஊர்செல்ல வேண்டியிருந்தது. ஜெயனுக்கு எழுதி தெரிவித்துவிட்டு சென்றேன். வீட்டின் நிலைமை மனதில் தீயை வாரி இறைக்கும்படி இருந்தது. வழக்கமான அப்பா, அம்மா சண்டை ஒருபுறம். தம்பிக்கு பனிரெண்டாம் வகுப்பு அரசுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் இரு வருடங்களுமே ஒழுங்காக படிக்கவில்லை. டியூஷன் ஒழுங்காக செல்லாமல், பள்ளியில் நடைமுறை பாடத்தேர்வுகள் , திருப்புதல் தேர்வுகள் எதற்கும் செல்லாமல் நண்பர்களுடன் திரிந்துகொண்டிருந்தான். பட்டுக்கோட்டையில் ஒளிந்து திரிய அவனுக்கு ஏகப்பட்ட மறைவிடங்கள். அப்பா உச்சகட்ட கோபத்திலும் அவனைப் பற்றிய கவலையிலும் இருந்தார். நான் அவனுக்கு அறிவுரை கூறினேன். அவன் அதை பொருட்படுத்தவே இல்லை. இம்முறை அரசுத் தேர்வு எழுதப்போவதில்லை என்று என்னிடம் தெரிவித்தான். நான் அவனுக்கு மீண்டும் நம்பிக்கை அளித்தேன். பத்தாம் வகுப்பில் பள்ளியில் இரண்டாம் ராங்க் எடுத்தவன் எப்படி இப்படி அதல பாதாளத்துக்கு போனான் என்று எனக்கு புரியவில்லை.

அவனிடம் வேறு விஷயங்கள் பேசும்போது எதேச்சையாக ஜெயனைப் பற்றி தெரிவித்தேன். சும்மா போகிறபோக்கில் ஜெயமோகன் என்று ஒரு எழுத்தாளர் ,எங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். கடிதங்கள் எழுதுவோம் என்று மட்டும் சொன்னேன். எங்கு இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டான். முதலில் பாலக்கோட்டில் இருந்தார், இப்போது தருமபுரிக்கு மாறுதல் கிடைத்து அந்த தொலைபேசி நிலையத்தில் வேலை பார்ப்பதாகக் கூறினேன். ஏன் அதைச் சொன்னேன் என்று இப்போது யோசித்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த திரில்லை நான் அப்போது விரும்பியிருக்கலாம்.

வீட்டிலிருந்து நான் மதுரை திரும்பி இருவாரங்கள் ஓடிவிட்டன. ஜெயனிடமிருந்து கடிதங்கள் தினம் ஒன்றுவீதம் வந்துகொண்டிருந்தன. நான் சிலசமயம் சிறிய கடிதம் எழுதினால் அங்கிருந்து விஷம் தோய்த்த அம்பாக ஒரு கடிதம் வரும். உனக்கு என்மேல் காதலே இல்லை என்று. மறுநாளே மனமுருகி மன்றாடி ஒரு கடிதம் எழுதுவார். எனக்கு இந்த உணர்ச்சி உச்சநிலைகளும் கொந்தளிப்புகளுமான ஒரு மனிதனை எப்படி கையாள்வது என்று தோன்றும். மலைத்து விடுவேன் சிலசமயம். இடையில் ஜெயன் ஒருமுறை விடுதி தொலைபேசி இணைப்புக்கு அழைத்தார். பேசிவிட்டு இனிமேல் இதில் கூப்பிட வேண்டாம் என்றேன். அதிக நேரம் பேசுவதால் வீணாக யாருக்காவது சந்தேகம் வரும். அதனால் வேண்டாம் என்றேன். ஏதோ பரீட்சை வேறு நடந்து கொண்டிருந்தது.

பரீட்சை என்ற ஒரு ஆயுதம் போதும். ஜெயன் சரணடைந்து விடுவார். நான் இந்த நான்கு வருடத்தில் பாடங்களில் அதிகமும் A கிரேட் தான் [90%] வாங்கியிருந்தேன் . சிலபாடங்களில் B. [80%] . C கிரேட் மதிப்பு குறைவு. F எடுத்தால் திரும்ப மறுபடி கோர்ஸ் படிக்கவேண்டும் என்று புளுகி வைத்திருந்தேன். அது திருமணத்தை தாமதப்படுத்தும் என்பதால் சொல்பேச்சு கேட்பார்.

திடீரென்று ஒருநாள் அப்பாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. பதறிப் போனேன். அப்பா திருச்சியில் படிக்கும்போது இருமுறை மட்டுமே தொலைபேசியில் அழைத்திருக்கிறார். மிக அவசரமான விஷயத்திற்கு. மதுரை கல்லூரி வந்தபிறகு அதுவும் இல்லை. ஆகவே பயத்துடன் எடுத்தேன்.

’’பாப்பா, தம்பியக் காணல. வீட்டவிட்டு போயிட்டான். நாள மறுநாள் கெமிஸ்ட்ரி பரீட்ச. சரியா அவன் படிக்கலன்னு அந்த டுயூஷன் சார் கம்ப்ளயிண்ட் பண்ணியிருந்தார். இப்ப எங்கன்னு தெரியல. பீரோல இருந்த கொஞ்ச ரூபாய எடுத்துகிட்டு போயிட்டான். அம்மா அழுது பொலம்பிகிட்டு இருக்கா. எனக்கு ஒண்ணும் புரியலப்பா’’ என்றார் அப்பா.

எனக்கு திக்கென்றது. எனக்கும் என்ன சொல்வதென்று புரியவில்லை. ’’கவலப் படாதீங்க, அப்பா. அவன் எக்ஸாம் எழுதாம இருக்க தான் எங்காவது போயிருப்பான். மாமாகிட்ட சொல்லி ரெண்டுபேருமா தேடிப் பாருங்க. அம்மாவ கறம்பக்குடில அத்தைகிட்ட விட்டுட்டு போங்க’’ என்றேன்.

ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக இருந்தது. குழப்பத்துடன் தான் மறுநாள் கல்லூரி சென்றேன். காலையில் சீட் டெக்னாலஜி [seed technology] ப்ராக்டிகல்ஸ். அந்த பேராசிரியர் நிரம்ப கண்டிப்பானவர். சிடுமூஞ்சி என்று பேர் வைத்திருந்தோம். பதினொரு மணி இருக்கும். எனக்கு தருமபுரியிலிருந்து ட்ரங்க் கால் என்று தகவல் சொன்னார் ஒரு அட்டெண்டர். என்னை சிறிய முறைப்புடனே போக அனுமதித்தார் அந்த ஆசிரியர்.

நான் சிறிது கோபத்துடனும், குழப்பத்துடனும் ஃபோனை எடுத்தேன்.

ஹலோ, அருணா. நாந்தான் ஜெயமோகன்.

ஒங்களுக்கு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன்? காலேஜுக்கு ஃபோன் பண்ணாதீங்கன்னு.

புத்திகெட்டவளே, பேசிட்டே போகாத. சொல்றதக் கேளு. ஒந்தம்பி என்னத் தேடி தருமபுரி வந்துருக்கான். காணலன்னு நீ பதட்டமா இருப்பன்னுதான் கூப்பிட்டேன், அருணா.

சாரி, ஜெயன். நிஜமாவே மனசே சரியில்ல நேத்திலேர்ந்து. கடவுளே, எப்டி கண்டுபிடிச்சு வந்தான்?

நீ தர்மபுரி டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் ந்னு அவண்ட்ட சொல்லியிருந்தியாம். ஊர்ல யாரக் கேட்டாலும் காமிச்சு குடுப்பாங்க.

இப்ப எங்க இருக்கான்?

என் ரூமில தான். நான் ஆஃபீஸ் வந்துட்டேன்.

அய்யோ, நான் போட்ட லெட்டர்ஸ் லாம் ஒழுங்கா பூட்டிட்டு வந்தீங்களா? ஆராய்ச்சி பண்ணுவான். ஈசியா கண்டுபிடிச்சுடுவான்.

பெட்டில வச்சு பூட்டி சாவிய எடுத்துட்டு தான் வந்துருக்கேன். போதுமா? ஆனா நாம லவ் பண்றத அவன் கெஸ் பண்ணிட்டாண்டி.

அய்யோ, எப்டி?

ஒன்னப் பத்தி பேசும்போது என் மூஞ்சப் பாத்து கண்டுபிடிக்கிறதா கஷ்டம்.

மாட்டிக்க போறோம். அவன நம்ப முடியாது,ஜெயன்.

சரி, இன்னக்கி நைட் கிளம்பி காலைல அவன மதுர கூட்டிட்டு வரேன். அவண்ட்ட பேசிட்டேன். ஒத்துக்கிட்டான்.

சரி, வாங்க. வக்கட்டுமா?

இரு. நீ ரயில்வே ஸ்டேஷன் வாசல்ல வந்து நில்லு. ஒந்தம்பிய பட்டுக்கோட்ட பஸ்ல ஏத்தி விட்டுட்டு நாம ரெண்டுபேரும் மீனாட்சி கோவில் போவோம். வேற திருப்பரங்குன்றம் எங்காவது போலாம்.

ஒண்ணும் புரியலயா? அவன் அப்டியே வேற எங்காவது போய்டுவான். நானே கொண்டுபோய் வீட்ல ஒப்படைக்கணும் அவன.

என் கண்ணுக்குட்டிய பாத்து ரொம்ப நேரம் பேசலாம்னு நெனச்சேனே.

அப்றம், அடுத்தவாரம். சரியா, இப்ப வைக்கிறேன்.

வைத்து விட்டேன். அந்த ஃபோன் இணைப்பு கொடுப்பவரிடமே ஒரு கால் புக் செய்யச் சொன்னேன். பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு. ஹெச். எம். லைனில் வந்தார். நான் இன்னாரின் பெண் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தம்பி லெனின் கண்ணன் தருமபுரியில் இருக்கிறான் என்றும் நாளை நான் அவனை அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டை வருவதாகவும் இந்த தகவலை அப்பாவிடம் மறக்காமல் தெரிவிக்குமாறும் சொன்னேன். அவருக்கும் அவன் காணாமல் போன விஷயம் தெரிந்திருந்தது. மறக்காமல் தெரிவிக்கிறேன் என்றார்.

– தொடரும்…

***


3 thoughts on “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 1

  1. இந்த தலைப்பை கூகுளில் தேடினேன். குறுந்தொகை மூன்றில் இந்த பாட்டு அதன் பொருளோடு கொடுத்து இருந்தார்கள். ரசனையுடன் எத்தனை அழகாக இந்த பாடலை இயற்றிய கவியை நினைத்து பார்க்கிறேன். மனதில் நிரம்பி வழியும் படைப்புத்தன்மையில் இருந்து இயற்றப்பட்ட பாட்டு! எத்துணை அழகான வாழ்க்கை அந்த கவியுடையது!

    பெரும்பாலான காதல்கள் தோற்கின்றன அல்லது சலித்து போகின்றன. காலம் எதையும் துருப்பிடிக்க செய்யும் வலிமை கொண்டது.  காதலின் கடலில் மூழ்கி மிதந்தவர்கள் இன்று பணியிட சொற்ப சந்தோஷங்களிலும், பலவித பொறுப்புகளை தாங்கி சுமந்து கொண்டும் சுயநலத்தோடும் எந்நேரமும் பதட்டமும் கொண்டு மேலும் தீவிரமாக தங்கள் செயல்களில் பணியாற்றி கொண்டும் வாழ்வதை பார்க்கும் போது இவர்களா அவர்கள் என்று அதிர்வை பலமுறை உணர்ந்து இருக்கிறேன். எல்லாம் ஒரு 10, 12 ஆண்டுகளுக்குள் இத்தனை மாற்றங்கள். வாழ்க்கை என்பதே இளமையுடன் முடிந்து விடும் ஒன்றுதான் போல. மேலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் வேலைக்கு செல்வதற்கு முன், பின் என்று பிரித்தாலே தெரிந்து விடும் இழந்தது என்ன என்பதை.. உங்களிடம் இருந்து மற்றுமொரு அழகான பதிவு. இது போன்ற பெண்கள் எங்கே போனார்கள் இன்று என்றுதான் தோன்றுகிறது உங்களின் பதிவை படித்தவுடன்!

    Like

  2. வணக்கம் நான் ஈழத்து தமிழச்சி….. புலம்பெயர்ந்து கனடா நாட்டில் இருந்து எழுதுகிறேன். ஒரு இணையத்தளத்தில் உங்கள் கதைப்படித்தேன். மி கவும் சுவாரசியமாக நல்ல தமிழ் நிறைந்த சுய சரிதம் போல இருந்தது எனக்கு
    மி கவும் பிடித்திருந்தது. ( ஒரு வேளை என் வாழ்க்கை கதை போலவும் இருந்ததாலோ தெரியாது ) வாசிக்கும் போது அடுத்து என்ன …அடுத்து என்ன என்பதுபோலவும் தொடர்ச்சி குறையாத நீரோடடம் போலவும் சில பெண்மனத்தை தாக்கும் பய உணர்வுகளும் கலந்தது கதை. அருமையோ அருமை. இதை வாசிக்க கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி . இருவரும் வாழ்க வளமோடும் நலமோடும். நட்புடன் நிலாமதி

    Like

Leave a comment